Monday, August 24, 2009

அசோகமித்திரன் சிறுகதைகள்

முத்துக்கள் பத்து: அசோக மித்திரன்
விலை: 40-/ ரூபாய்
தொகுப்பு: திலகவதி
வெளியீடு: அம்ருதா பதிப்பகம்

"நீ யார்" என்ற சு.ரா-வின் ஆவணப்படத்தை நண்பர் மற்றும் பதிவர் விஷ்ணு குமாருடன் (முதல் சுவடு) சென்ற வாரம் அண்ணா சாலையிலுள்ள ஃபிலிம் சேம்பரில் பார்க்க நேர்ந்தது. எழுத்தாளர் அசோகமித்திரனின் பேட்டி அதில் வருமென்று கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. இறந்தவர்களுக்கான காரியங்கள் செய்வதைப் பற்றிய பேச்சு அது. அவர் பேசிய ஒவ்வொரு வார்த்தையையும், முகபாவங்களையும் கவனமாகக் கேட்டுக் கொண்டு இருந்தேன். பல இடங்களில் அவருடைய பேச்சு மனம்விட்டு சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்தது. எவ்வளவு பெரிய மேதை. ஆனாலும் எவ்வளவு எளிமையான மனிதராக இருக்கிறார் என்று பிரம்மிப்பாக இருந்தது. ஆனந்தவிகடன் பத்திரிகையின் பொறுப்பாசிரியர் திரு: ரவி பிரகாஷ் அவர்களின் (அசோக)மித்திரனின் மித்திரன் நான்! பதிவினைப் படித்தால் அவருடைய எளிமை நமக்கு பூரணமாகத் தெரியவரும்.

அசோகமித்திரன் கேணி இலக்கிய சந்திப்புக்கு வருகிறார் என்பது தெரிந்தவுடன் அவருடைய நல்ல படைப்புகளை மீள்வாசிப்பு செய்தால் அலாதியாக இருக்குமென்றும் கேள்வி நேரத்தின்போது உரையாட வசதியாக இருக்குமென்றும் நினைத்தேன். அதன்படி கடந்த வாரத்தில் "அசோகமித்ரனின்-முத்துக்கள் பத்து" சிறுகதைத் தொகுப்பைப் படிக்க நேர்ந்தது. அதிலுள்ள கதைகள் யாவும் நிஜ முத்துக்களே.

ஃபோட்டோ: நண்பனின் திருமணத்திற்குச் செல்லும் தோழர்கள் எல்லோரும் சேர்ந்து புகைப்படம் எடுத்துக்கொள்ள விரும்புகிறார்கள். இந்தச் சம்பவத்தை மையமாக வைத்து எழுதப்பட்ட சிறுகதை.

சங்கமம்: அடுக்குமாடி குடியிருப்பில் மேலுள்ள வீட்டிலிருந்து நீர்க்கசிவு ஏற்படுவதால் கீழுள்ளவர்களுக்கு ஏற்படும் சிரமத்தைப் பற்றிய கதை.

எலி: ஓர் எலியைக் கொல்வதற்காக நடுத்தர குடும்பத் தலைவர்படும் அவஸ்தையை அருமையாகக் கையாண்டிருக்கிறார். எலிப்பொறியில் வைக்க வீட்டில் எதுவும் இல்லாததால் கடைக்குச்சென்று மசால் வடையை வாங்கி வருகிறான். இரண்டு வடை வாங்கி ஒன்றைப் பொறியில் வைத்துவிட்டு மற்றொன்றைத் தின்று விடுகிறான். மறுநாள் காலை பொறியில் எலி அகப்படிருக்கும் . ஆனால் வடை துளியும் தின்னப்படாமல் அப்படியே முழுசாக இருப்பது கண்டு அவன் மனம் கலங்கும். அதே மனக்கலக்கத்தை நமக்கும் உண்டாக்கிவிடுவார்.

பவள மாலை: பணி நிமித்தமாக வெளியூர் செல்லும் கணவன் தனது மனைவிக்கு பவள மாலையை வாங்குகிறான். தான் ஏமாந்துவிட்டோமோ, மனைவி கண்டுபிடித்து அசிங்கப் படுத்திவிடுவாலோ என்று நினைக்கும் கணவனின் பார்வையிலமைந்த கதை.

முனீரின் ஸ்பானர்கள்: Secunderabad -லுள்ள ஒருவன் தனது தந்தையின் இழப்பு காரணமாக சென்னைக்குக் குடிபெயர நேர்கிறது. வீட்டிலுள்ள பொருட்களை எடுத்துச் சென்று ரயிலில் ஏற்ற தனது நண்பனின் உதவியை நாடுகிறான். நண்பனும் அவனுடைய முதலாளியும் உதவி செய்ய வருகிறார்கள். அனுப்பப்படும் பொருட்களுடன் முதலாளியின் இரண்டு ஸ்பானர்கள் தவறுதலாக கலந்துவிடுகின்றன. சென்னைக்குச் சென்றதும் தான் அவனுக்கு இந்த விஷயம் தெரியவருகிறது. அதற்கு முன்பே முதலாளியின் சந்தேகம் காரணமாக நண்பனின் வேலை பறிபோகிறது.

மீரா - தான்சேன் சந்திப்பு: பக்தை மீராவும், அக்பரின் ஆஸ்தான பாடகர் தான்சேனும் சந்தித்ததாகக் கூறப்படும் வாய்வழிச் செய்தியை மையமாக வைத்து எழுதப்பட்டக் கதை.

"ராஜாவுக்கு ஆபத்து, பாலா மணி குழந்தை மண்ணைத் தின்கிறது, பங்கஜ் மல்லிக், இன்று நிம்மதியாகத் தூங்க வேண்டும்" ஆகிய கதைகளும் படிக்க ஸ்வாரஸ்யமாக இருக்கிறது.

எனது கதைகளில் 'உத்தி' என்று எதுவும் இல்லை. உத்தியில்லாத உத்தியைத்தான் பயன்படுத்துகிறேன் என்று சொல்லும் இவருடைய கதைகளின் எளிமையும், வாசிப்பனுபவமும் படித்து ஆனந்தப் படவேண்டிய ஒன்று. கன்னிமரா நிரந்தர புத்தகக் கண்காட்சியில் இந்தப் புத்தகம் வாங்கக் கிடைக்கிறது.

Book Details: Muththukkal Pathu (Rs. 40), ashokamitran short stories

Thursday, August 20, 2009

கேள்விக்குறி

ஆசிரியர்: எஸ். ராமகிருஷ்ணன்
வெளியீடு: விகடன் பிரசுரம்
விலை: 45 ரூபாய்

சூரியன், சந்திரன், கடல் என ஒவ்வொன்றாக உலகத்தைப் படைத்த இறைவன் ஆறாம் நாள் ஆணைப் படைக்கிறான். ஆண் தனியாளாக தோட்டத்தில் சுற்றி அலைகிறான். "இவனுக்கு ஒரு துணையை ஏன் படைக்கக் கூடாது?" என்று கடவுள் யோசிக்கிறார். ஆணின் விலா எலும்பை எடுத்து அதிலிருந்து பெண்ணை படைக்கிறான். நிர்வாணிகளான ஆணும் பெண்ணும் கபடமில்லாமல் சந்தோஷமாகச் சுற்றித் திரிகிறார்கள்.

கடவுள் அவர்களிடம் "இந்தத் தோட்டத்திலிருந்து நீங்கள் எதை வேண்டுமானாலும் எடுத்து அனுபவியுங்கள். ஆனால் தோட்டத்தின் நடுவில் ஒரு ஆப்பிள் இருக்கிறது அதை மட்டும் எடுக்காதீர்கள்... புசிக்காதீர்கள்..." என்று கூறுகிறார். அவர்களும் சம்மதிக்கிறார்கள்.

சாத்தான் பாம்பின் வடிவில் அவர்களுக்கு ஆசை கட்டுகிறது. "ஆப்பிளை சாப்பிட்டால் நீங்களும் கடவுள் ஆகலாம். நல்லது கெட்டது எதுவென்று நீங்கள் தெரிந்து கொள்ளலாம்" என்று உபதேசம் செய்கிறது. சாத்தானின் பேச்சுக்கு மயங்கிய பெண் ஆப்பிளை சாப்பிடுகிறாள். ஆணுக்கும் கொடுத்து சாப்பிடச் சொல்கிறாள். அதன் பிறகு சுகமான நிர்வாணம் அவர்களுக்குக் கூச்சத்தை அளிக்கிறது. கூச்சத்தைப் போக்க ஓடி ஒளிந்துகொள்கிறார்கள். மென்மையான இறைவனின் வருகையைக் கண்டு பயப்படுகிறார்கள்.

சாத்தான் அவர்களை ஏமாற்றிவிட்டான். அதன் மூலம் ஆதமும், ஏவாளும் கடவுளுக்கு கொடுத்த வாக்குறுதியை மீறி ஏமாற்றிவிட்டார்கள்.

ஏமாற்றுவது தவறு என்று சாத்தானுக்கும், ஆதாமிற்கும், ஏவாளுக்கும் ஏன் தெரியவில்லை? இப்பொழுது என் எதிரில் வந்தால் இந்தக் கேள்விகளுக்கு அவர்களால் பதில் சொல்ல முடியுமா?... நிற்க.

நல்லது கெட்டதை யோசித்து அவர்களை நான் கேள்வி கேட்கிறேன் என்றால் அவர்கள் சாப்பிட்ட ஆப்பிளின் எச்சம் என்னிலும் உள்ளதா?

நான் மட்டுமா நீங்கள் கூட ஏதோ ஒரு விதத்தில் எத்தனை கேள்விகளைக் கேட்டு சக மனிதர்களைக் காயப்படுத்துகிறீர்கள். கீழுள்ள கேள்விகளில் ஏதேனும் ஒரு கேள்வியையேனும் நீங்கள் உபயோகப்படுத்தவில்லை என்று சொல்லுங்கள் பார்க்கலாம்.

1. ஏமாத்தறது தப்புன்னு ஏன் யாருக்குமே தோணமாட்டேங்குது?
2. உதவின்னு கேட்டா யாரு செய்யறா?
3. இவ்வளவு செய்யறேன்...ஆனாலும் என்னை யாரு மதிக்கிறா?
4. என்னை எதுக்கு படிக்க வச்சீங்க?
5. நெனச்சி நெனச்சி பேசினா எப்படி?
6. என்ன ஊரு இது... மனுஷன் வாழுவானா?
7. எதுக்கெடுத்தாலும் பொய்யா?
8. வாய்விட்டு எப்படி கேக்குறது?
9. உன்னால ஒரு வேலை சாப்பாடு போட முடியுமா?
10. வீட்டுல சும்மாவே இருந்தா எப்படி?
11. நான் அழகா இருக்கேனா?
12. எனக்குன்னு யாரு இருக்கா?
13. ஏன் இப்படி இருக்கீங்க?
14. எதுக்காக இவ்வளவு அவசரம்?
15. ஒரு ஆலாலே என்ன செய்ய முடியும்?

மேலுள்ள கேள்விகளில் ஏதேனும் ஒன்றை யாரேனும் உங்கள் மீதோ அல்லது நீங்கள் சக மனிதர்கள் மீதோ வீசி இருப்பீர்கள். ஆகவே ஒரு சில கேள்விகளை நாம் வாழ்கையில் சந்தித்துதான் ஆகவேண்டும். தவறுகளிலிருந்தோ அல்லது இயலாமையிலிருந்தோ சில கேள்விகள் எழுவது தவிர்க்க முடியாததே.

தவிர்க்க முடியாத அந்தக் கேள்விகளை உள்வாங்கி, தனது சொந்த அனுபவத்துடன் தொடர்புபடுத்தி ஆனந்த விகடனில் S. Ra தொடராக எழுதியது புத்தகமாகக் கிடைக்கிறது. ஒவ்வொரு கட்டுரையின் இறுதியிலும் ஒரு குட்டிக் கதையையும் சொல்லி நம்மை அசர வைக்கிறார் எஸ். ராம கிருஷ்ணன். கட்டுரைக்கு ஏற்றாற்போல் நடிகர் மற்றும் இயக்குனர் பொன்வண்ணன் தேர்வுசெய்த ஓவியங்கள் பாராட்டும்படியாக உள்ளது. அழகான குட்டிக் கதைகளைக் கொண்ட அற்புதமான கட்டுரைகள். கண்டிப்பாக வங்கிப் படிக்கலாம்.

Details: Kelvikuri (Rs.45) - S.Ramakrishnan, Vikatan publications, chennai.

Monday, August 17, 2009

ஒற்றன் - அசோகமித்திரன்

ஆசிரியர்: அசோகமித்திரன்
வெளியீடு: காலச்சுவடு பதிப்பகம்
விலை: 100 ரூபாய்

1973 - ஆம் ஆண்டு அமெரிக்காவின் அயோவா சிடியிலுள்ள பல்கலைக் கழகம் உலகிலுள்ள சில மிக்கியமான எழுத்தாளர்களை அழைத்து ஒரு ஏழு மாத கால சந்திப்புடன் கூடிய மாநாடு நடத்தினார்கள். அதற்கு ஜப்பான், ஐரோப்பா, அமேரிக்கா, தென் கொரியா, வாட கொரியா, தைவான், இந்தியா, சிலி, பெரு, ஆப்பிரிக்கா போன்ற பல கண்டம் மற்றும் தேசங்களில் இருந்து எழுத்தாளர்கள் கலந்து கொண்டார்கள். இந்தியாவிலிருந்து அந்த மாநாட்டிற்கு எழுத்தாளர் அசோகமித்திரன் கலந்து கொண்டார்.

டான் இதழில் வெளிவரும் அசோகமித்ரனின் மொழி பெயர்ப்பை படித்து அமெரிக்கத் தூதரகம் மூலமாக அந்த அழைப்பு அவருக்கு வந்திருந்தது.

நாவலின் ஒவ்வொரு அத்யாயமும் வேறுவேறு நபர்களால் சிறுகதை வடிவில் அமைந்துள்ளது. ஒரு அத்யாயமானது மற்றொரு அத்யாயத்தை சார்ந்துள்ளது என்று கூற முடியாது. இது படிப்பவர்களுக்கு ஒரு சுதந்திரம் என்றே நினைக்கிறேன். இதே வடிவில் தான் அ. முத்துலிங்கத்தின் 'உண்மை கலந்த நாட்குறிப்பு'ம் அமைந்திருக்கும். ஆனால் அவர் சிறு வயது முதல் தனக்கு நேர்ந்த பல விஷயங்களை அந்த நாவலில் சொல்லி இருப்பார். ஒற்றனில் அசோகமித்திரன் எழுத்தாளர்களுடனான தனது 7 மாத கால அனுபவத்தை ஒரே கதைக்களத்தை வைத்துக் கொண்டு சொல்லி இருக்கிறார்.

தாங்க முடியாத குளிரில் அவதிப்படுவது, கே-மார்ட் பல சரக்குக் கடையில் சலுகை விலையில் செருப்பு வாங்கி காலை புண்படுத்திக் கொள்வது, புதிதாக வாங்கிய கடிகாரத்தைத் தொலைத்தது, நீண்ட நேரம் பேருந்திற்காகக் காத்திருந்து லாரியில் ஏறிப் போக வேண்டிய இடத்திற்குச் சென்றது, இலக்கியம் படிக்க வந்து காதலில் விழுந்த இலாரியா, அபே குபேக்னா, பிராவோ, கஜூகோ என்ற ஜப்பானிய எழுத்தாளர் என பலருடன் தனக்கு ஏற்பட்ட அனுபவத்தை நகைச்சுவை இழையோட இந்த நாவலில் பதிவு செய்து இருக்கிறார்.

அயோவா சிடி மாநாட்டிற்கு கலந்துகொள்ள இந்தியாவிலிருந்து விமானத்தில் ஏறியது முதல் திரும்பி வரும் வரையுள்ள பல மனிதர்களுடனான அனுபவங்களை வித்யாசமான முறையில் நாவலாக்கியுள்ளார். படித்துக் கொண்டே இருக்கும் போது பல இடங்களில் குலுங்கக் குலுங்க சிரிக்க வைக்கிறார்.

கதை என்றோ - கதையின் நாயகன் என்றோ குறிப்பிட்டுச்சொல்லும் படி யாரும் நாவலில் இல்லை.தனது பயணத்தில் சந்திக்க நேர்ந்த பல நாட்டு மனிதர்களையும், அவர்களுடனான தனது அனுபவங்களையும் கொண்ட நகைச்சுவைத் தொகுப்பு போல் இந்த நாவலை நமக்கு அளித்துள்ளார்.

Details: Otran / Ashoka Mitran - Rs:100

Thursday, August 13, 2009

தக்கையின் மீது நான்கு கண்கள்

மூலக்கதை: சா.கந்தசாமி
திரைக்கதை: இயக்குநர் வஸந்த்
வெளியீடு: கிழக்கு பதிப்பகம்
விலை: Rs.30.00

சா. கந்தசாமி சாகித்ய அகாடமி விருது பெற்ற தமிழின் மிகச் சிறந்த எழுத்தாளர். "சாயாவனம், விசாரணைக் கமிஷன்" போன்ற பல சிறந்த நாவல்களை எழுதியுள்ளார். நூற்றுக்கும் மேற்பட்ட சிறுகதைகளை எழுதி இருக்கிறார். அவற்றுள் "தக்கையின் மீது நான்கு கண்கள்" சிறந்த படைப்புகளில் ஒன்று.

என்னுடைய மருமகங்களுக்கு [நிஸ்து & முத்து] சினிமா ஆசை அதிகம். அவர்களுக்கு ஒரு நல்ல கதையையும், அதனுடைய குறும்படத்தையும் கொடுப்பதற்காக வேண்டி அலசிப்பார்த்ததில் இயக்குநர் வஸந்த் - தூர்தர்ஷனுக்காக இயக்கிய சா.கந்தசாமியின் பிரசித்தி பெற்ற சிறுகதையான "தக்கையின் மீது நான்கு கண்கள்" திரைக்கதைப் புத்தகம் மற்றும் குறும்படத்தைக் கொடுக்கலாம் என்று முடிவு செய்திருந்தேன்.

அதன்படி தேடு...தேடு... என்று தேடுபொறியில் தேடி கிழக்கு பதிப்பகம் வெளியிட்டிருந்த திரைக்கதைப் புத்தகத்தை வாங்கிவிட்டேன். அவர்களிடம் இருந்த கடைசி புத்தகம் அதுதான் என்று சொன்னார்கள். ஆனால் குறும்படத்தை எங்கு தேடியும் கிடைக்கவில்லை. கடைசியாக பதிவர் வண்ணத்துப் பூச்சியாரிடம் [சூர்யா] தொடர்புகொண்டு கேட்டதில் Thamizhstudio.com -ல் கேட்டுப்பாருங்கள் என்று கூறினார்.

Thamizhstudio.com [அருண் & குணா] - இருவரும் கணினித் துறையில் இருந்தாலும் குறும்படத்துறை, தமிழ் இலக்கியம், வரலாறு போன்ற துறைகளுக்கு முன்னுரிமை கொடுத்து செயல்படுகிறார்கள். அவர்கள் நேரடியாக இயக்குனர் வஸந்திடம் பேசி குறும்படத்தை வாங்கித் தருவதாகச் சொல்லி இருந்தார்கள். அதன்படியே வாங்கியும் கொடுத்தார்கள். அவர்களுடைய 11 வது குறும்பட ஆர்வலர்கள் சந்திப்பில் அதை ஒளிபரப்பபும் செய்தார்கள். எஸ் ரா அவருடைய இணையத் தளத்தில் குறிப்பிட்டிருந்த 2008 விருப்பப் பட்டியலில் [S. Ra] இவர்களும் அடங்குவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை:

இந்தக் கதை மீன் பிடிப்பவரான தாத்தாவுக்கும் [மாணிக்கம்] அவரது தாயில்லாப் பிள்ளையான பேரனுக்குமான [ராமு] உறவை சித்தரிப்பது. கழிமுகங்களிலுள்ள நீர்பரப்புகளில் மீன் பிடிப்பதில் கிழவர் மேதை. அவருக்கு வெற்றிலை இடித்துத் தருவதிலிருந்து மீன்பிடிக்க உதவி செய்வது வரையுள்ள எல்லா வேலைகளுக்கும் பேரன் உற்ற துணையாக இருக்கிறான்.

தாத்தா தனக்குப் பிடித்த ஒரே இடத்தில் உட்கார்ந்துகொண்டு தூண்டிலைப் போட்டு மீன் பிடிக்க வேண்டும் என்று நினைப்பவர். அந்த இடம்தான் தனக்கு அதிர்ஷ்டமான இடம் என்று நினைப்பவர். பேரனோ அவருக்கு நேர்மாறான முரணான குணம் கொண்டவன். மீன் பிடிக்கும் இடங்களை மாற்றிக் கொண்டே இருப்பான்.

இடமாற்றம் செய்யும் பழக்கம் பேரனுக்குச் சாதகமாக அமைகிறது. தாத்தாவை விட நல்ல மீன்கள் அவனுக்குக் கிடைக்கிறது. அவனுடைய பாட்டியும் பேரன் பிடிக்கும் மீனுக்குத் தனி ருசி இருக்கிறதென்று பாராட்டுகிறாள்.

அதுமட்டுமில்லாமல் குலத்திற்கு இனப்பெருக்கம் செய்ய வரும் பெரிய [புதிய] மீன் முதியவருக்குச் சவாலாக அமைகிறது. அதனை எப்படியும் பிடித்து விடுவேன் என்று சவால் விடுகிறார். மீன் பிடிப்பதில் வல்லவரான அவரால் அந்த மீனைப் பிடிக்க முடியவில்லை. இதற்கு மாறாக பேரன் அந்த மீனைப் பிடித்துவிடுகிறான். பேரன் வளர்ந்து தன்னை மிஞ்சுவதைக் கண்டு தாத்தா எரிச்சலைடைகிறார். தாத்தாவிற்கும் பேரனுக்குமான உறவில் நுண்ணிய விரிசல் ஏற்படுகிறது. அதைப் புரிந்துகொண்டு பேரனிடம் செல்லும் போது அவன் விலகிச்செல்கிறான்.

எழுத்தாளர் எஸ். ராமகிருஷ்ணன் கேணி சந்திப்பில் அவசியம் வாசிக்க வேண்டிய நூறு சிறந்த சிறுகதைகள் பட்டியலில் இந்தக் கதையையும் பரிந்துரை செய்துள்ளார்.

கதையில் இல்லாத ஒரு விஷயத்தைக் குறும்படத்தில் சேர்த்திருக்கிறார்கள் என்றால் அது தாயத்து Sentiment. நடிகர்களும் போட்டி போட்டுக்கொண்டு கொடுத்த வேலையை சரியாக செய்திருக்கிறார்கள். தாத்தாவாக முதல் மரியாதை வீராசாமியும் [அய்யா எனக்கு ஒரு உண்மை தெரிஞ்சாகனும்..!..], பேரனாக புதுமுக குழந்தை நட்சத்திரமும் நடித்திருக்கிறார்கள். இசைக் கோர்ப்பு, எடிட்டிங், கேமரா என அனைத்தும் அருமை. சிறுகதையைப் படமாக்கும் முயற்சியில் இயக்குனர் வசந்த் மற்றும் குழுவினர் மகத்தான வெற்றி பெற்றிருக்கிறார்கள் என்றே சொல்ல வேண்டும்.

2005-ம் ஆண்டின் மிகச் சிறந்த குறும்படமாக தேர்வுசெய்யப்பட்டு தேசிய விருதைப் பெற்றுள்ள இந்தக் குறும்படம் உலகத் திரைப்பட விழாக்களில் ஒளிபரப்பப்பட்டு பரவலான கவனத்தைப் பெற்றுள்ளது.

திரைக்கதைப் புத்தகம் சுலபமாகப் புரிந்துகொள்ளும் வகையில் எழுதப்பட்டிருக்கிறது. அதே புத்தகத்தில் மூலக்கதையுடன் - வெங்கட் சாமிநாதன், இயக்குனர் கே.பாலச்சந்தர் போன்ற ஜாம்பவான்களின் குறும்படத்தைப் பற்றிய குறிப்பையும் கொடுத்திருப்பது பாராட்டப்பட வேண்டிய விஷயம்.

குறும்படத்தைப் பார்க்க விரும்புவோர் தமிழ்ஸ்டூடியோ.காம் நிறுவனர்களான அருண் மற்றும் குணாவைத் தொடர்புகொண்டால் கிடைப்பது உறுதி. நன்றி...

Details: Thakaiyin Meethu Nangu Kangal - Screen Play & Tamil Short film (Documentary)

Friday, August 7, 2009

மகாராஜாவின் ரயில் வண்டி - அ.முத்துலிங்கம்

வெளியீடு: காலச்சுவடு பதிப்பகம்
விலை: 75 ரூபாய்

பொதுவாக தாயகத்தை விட்டு வேலை நிமித்தமாகவோ அகதியாகவோ வெளிநாடு சென்று வாழ்பவர்கள் வெளியில் சொல்ல முடியாத சோகத்தையே வாழ்க்கையாக வாழ்கின்றனர். அதுவும் அகதியாக செல்பர்களின் உளவியல் போராட்டங்கள் வார்த்தைகளால் விவரிக்க முடியாத ஒன்று. அ.முத்துலிங்கம் இந்த உளவியல் போராட்டங்களை ஜீரணித்து ஹாஷ்ய சிறுகதைகளாகவும், கட்டுரைகளாகவும் அளிப்பதில் வல்லவர்.

அவர் சுவைபட எழுதிய முக்கியமான 20 சிறுகதைகள் அடங்கியப் புத்தகம் 'மகாராஜாவின் ரயில் வண்டி' காலச்சுவடின் வெளியீடாக வந்துள்ளது. இந்தச் சிறுகதைகள் யாவும் காலச்சுவடு, உயிர்மை, இந்தியாடுடே, ஆனந்த விகடன், தீராநதி போன்ற முக்கியமான இலக்கிய இதழ்களில் வெளிவந்தவை. தனது சொந்த அனுபவங்களை கொஞ்சம் கற்பனை சேர்த்து புனைவுகளாக அளித்துள்ளார்.

மகாராஜாவின் ரயில் வண்டி:
பதின்ம வயதிலுள்ள விடலைப் பையன் யாழ்ப்பாண பள்ளியில் சேர்வதர்க்காக சந்தர்ப்பம் காரணமாக தெரிந்தவர் வீட்டில் தாங்கும் போது சந்திக்க நேர்ந்த பெண்ணின் நினைவுகளை அசை போடுவதாக இந்தக் கதை இருக்கிறது. அருமையான சித்தரிப்புகளுடன் கூடிய கதை. இந்தக்கதை அ. முத்துலிங்கத்தின் சிறந்த கதையாக முக்கியமான எழுத்தாளர்களால் கொண்டாடப் படுகிறது.

எஸ். ராவின் சிறந்த 100 தமிழ்ச் சிறுகதைகளில் காண்க:
http://www.sramakrishnan.com/deep_story.asp?id=276&page=

நாளை:
அகதி முகாம்களில் வழங்கப்படும் சூப்பில்(Soup) உள்ள இறைச்சித் துண்டிற்காகவும் அடுத்த வேலை உணவிற்காகவும் அகதி முகாம்களைத் தேடி அலையும் சகோதர சிறுவர்களின் கதை.

தொடக்கம்:
வானத்தைத் தொட்டு நிற்கும் பன்னாட்டு தொழிற் பூங்காவின் - மேகம் உரசும் மாடிக் கட்டிடத்தில் ஜன்னல் வழியாக ஒரு பறவை அலுவலகத்திற்குள் வருகிறது. தினமும் அந்த பாதை வழியாக வந்து வெளியில் செல்கிறது. ஒரு நாள் ஜன்னலை மூடி விடுகிறார்கள். மூடிய கண்ணாடி ஜன்னலில் அடிபட்டு பறவை இறந்துவிடுகிறது.

பறவையின் சுதந்திர வழி அடைக்கப்படுவதையும், அதனால் அதன் உயிர் பரிபோவதையும் பற்றிப் பேசும் கதை.

விருந்தாளி:
ஆப்ரிக்கக் கிராமம் ஒன்றில் நெடுஞ்சாலைப் பணிக்காக தனித்து விடப்பட்ட தமிழன் ஒருவனுக்கு எதிர்பாராத விதமாக மற்றொரு தமிழன் விருந்தாளியாக வருகிறான். அந்த ஆனந்தத்தில் விருந்தாளிக்கு கொடுக்கும் விருந்தின் மூலம் அகதிகளின் வாழ்வைப் பற்றி இந்தக் கதை பேசுகிறது.

அம்மாவின் பாவாடை:
இந்தத் தலைப்பே கதையைப் படிக்கும் சுவாரஸ்யத்தைக் கூட்டியது. இரண்டு பாவாடை வைத்திருப்பதை பெருமையாக நினைக்கும் அம்மாவின் ஒரு பாவாடையை மாடு மென்றுவிடுவதால் நிகழும் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு இலங்கை தமிழ்ப் பெண்களில் வாழ்வியலைப் பேசும் கதை.

செங்கல்:
வட்ட வடிவில் வீடு கட்டுவதற்கு அதற்கேற்ற வகையிலான வட்ட செங்கல்லைத் தேடும் நிகழ்வினை அடிப்படையாகக் கொண்ட புனைவு கதை.

கடன்:
முதுமையில் வெளி நாட்டில் இருக்கும் தனது மகனுடன் வாழும் முதியவரின் வாழ்வியல் சிக்கல்களைப் பற்றி பேசும் கதை. எப்படியாவது கிரீன் கார்டு வாங்கி மகனை விட்டுப் பிரிந்து நண்பருடன் இறுதி நாளை இஷ்டம் போல் கழிக்க எண்ணிய முதியவர் நேர தாமதத்தால் அந்த வாய்ப்பை இழக்க நேரிடும் கதை.

பட்டம்:
காவாளி ஒருவனை தைரியமாக எதிர்கொள்ளும் பெண் அதனால் தன்னுடைய கல்லூரிப் 'பட்டத்தை' வாங்க இயலாமல் போவது, பெண்ணின் தைரியமான அணுகு முறையால் ஊரைவிட்டு ஓடும் காவாளி ரவுடிப் 'பட்டத்தை' இழப்பதையும் பற்றிய கதை. நல்ல புனைவு.

ஐவேசு:
வழிகாட்டியின் தவறுதலால் செல்ல வேண்டிய பாதையைத் தவறவிட்டு இந்துகுஷ் மலையடிவாரத்தில் விளிம்புகள் உடைந்த குவளையில் ஆட்டுப் பால் அருந்தும் நிகழ்வை பற்றி பேசும் கதை.

ஐந்தாவது கதிரை:
கணவன் மனைவிக்குள் நடைபெரும் பொருளாதாரம் சார்ந்த பிரச்சினைகளைப் பேசுகிறது. தனது கணவனை குற்ற உணர்ச்சியில் நிறுத்த வேண்டி தனது மார்பகங்களுக்கு பச்சைக் குத்திக் கொள்ளும் பெண்ணையும், கலாச்சாரங்களுக்குள் வாழ்ந்து பழக்கப்பட்ட கணவனுக்கும் இடையில் நடக்கும் உணர்வுகளைப் பற்றிய கதை.

மேலும் ஆயுள், மாற்று, கருப்பு அணில், எதிரி, தில்லை அம்பலப் பிள்ளையார் கோவில், கல்லறை, கொம்புளானா, ராகு காலம், ஸ்ட்ராபெரி ஜாம் போத்தலும் அபீசியன் பூனையும் போன்ற கதைகளும் அருமை.

எழுத்தாளர் ஜெய மோகனால் இணையம் மூலம் எடுக்கப்பட்ட 'அ. முத்து லிங்கத்தின்' பேட்டி இந்த பக்கங்களில் படிக்கக் கிடைக்கிறது. கீழே அழுத்திச் செல்லவும்.

அவருடைய வாழ்வியல் அனுபவம் யாருக்கும் சுலபத்தில் கிடைக்காது. இந்த செவ்வியைப் படிப்பதன் மூலம் அவருடைய கதைகளுக்கான மூலம் எங்கிருந்து கிடைக்கிறது என்பது தெரியவரும்...

அ.முத்துலிங்கம் நேர்காணல் – ஜெயமோகன்

Book Details: Maharajavin rail vandi / kalachuvadu / A. Muthulingam