Friday, September 24, 2010

அரவிந்தன் சிறுகதைகள்

சில மாதங்களுக்கு முன்பு என்னுடைய அக்கா (ஜெயா) கொட்டிவாக்கத்தில் குடியிருந்தாள். அவளுடைய மகள் நான்கு மாதக் குழந்தை(அனைன்யா). நண்பகலில் கூட இருள் கவிழ்திருக்கும் வீடு என்பதால் கொசுத் தொல்லையைக் கேட்கவே வேண்டாம். வியாதிகள் சென்னையை உலுக்கிய காலம் என்பதால் ஹாரிபோட்டேரில் வரும் மாஜிக்கல் ஸ்டிக் மாதிரி mosquito bat-ஐ கையில் வைத்துக் கொண்டு கொசுக்களை நோக்கிப் பறந்து கொண்டிருந்தாள் (அவளுடைய மகளுக்காக). கொசுக்கள் 'ழீங்' என்ற ஒலியுடன் அவளுக்கு முன்னே மிதந்துகொண்டிருந்தன. Bat - ல் கொசுக்கள் பட்டவுடன் 'பட்' என்ற சத்தத்துடன் கீழே விழுந்தன. வேட்டையாடிய களைப்பில் மூச்சு வாங்க அக்கா பக்கத்தில் அமர்ந்தாள். குழந்தை அவளைப் பார்த்து சிரித்தது.

மூச்சை இழுத்துவிட்டபடி 'உனக்கு ஒன்னு தெரியுமாடா?' என்று கேட்டாள்.

'தெரியாது' என்று சொன்னால் என்னுடைய அக்கா திட்டமாட்டாள். 'தெரிஞ்சிக்கோடா தடிப்பயலே' என்று அன்புடன் சொல்லித் தருவாள். ஆகையால் 'தெரியாது' என்று சொன்னேன்.

'உலகத்தில் கொசு மாதிரி பூச்சிகள் பறக்கரதாலதான், அதெல்லாம் ஏற்படுத்தக் கூடிய சப்தத்தில் தான் உலகமே ஒரு சமநிலையில் இருக்குதாம்' என்றாள்.

எனக்கான ஆச்சர்யத்துடன் அவளைப் பார்த்தேன்.

தொடர்ந்து 'ஆசிய கண்டத்தில் சைனாவில் என்று நினைக்கிறேன், பட்டாம்பூச்சிகள் ஒன்று சேர்ந்து கூட்டமாக பறக்குமாம். அதன் பலனாக அமெரிக்கக் கண்டத்தில் ஏதோ ஓர் இடத்தில் மழை பொழிகிறதாம். விஞ்ஞானிகள் கூட ஒத்துக் கொண்டிருக்கிறார்கள்' என்றாள்.

நான் மெளனமாக அவள் சொல்லியதையே யோசித்துக் கொண்டிருந்தேன். அக்கா அவளுடைய வேலையைப் பார்க்கச் சென்றுவிட்டாள். பூச்சிகளின் ஒலிகள் என்னுள் எதிரொலித்துக் கொண்டிருந்தன.

என் அக்கா சொல்லியது உண்மையோ? பொய்யோ? எனக்குத் தெரியாது. உலகையே சமநிலைப் படுத்தும் ஒலிகள் என்னை அலைக்கழித்துக் கொண்டிருந்தன. யோசனைகள் இரைச்சலாகி கற்பனைகளின் இழைகளுக்கு இட்டுச் சென்றன. அரவிந்தனின் சிறுகதைகளும் இதுபோன்ற மௌனங்களாலும், உணர்வுகளாலும் ஒலிகளாலும் உருப்பெற்றவைதான்.

மனம் தனது பெருவெளியில் விந்தைகளை சுரந்தபடியே இருக்கிறது. மௌனம் தனது மாய விரல்களால் உணர்ச்சியின் நரம்புகளை மீட்டியபடியே இம்சை செய்கிறது. உடம்பிலுள்ள நுண்ணிய துளைகள் யாவும் காதுகளாகி அவற்றின் அதிர்வுகளை வாங்கியபடியே இருக்கின்றன. ஒரு மாயச்சுழியில் அதிர்வுகள் சிக்கி பேரிரைச்சலை உண்டு பண்ணும் சூழ்நிலைகளை தான் அரவிந்தன் சிறுகதைகளாக்கி இருக்கிறார்.

நாகதோஷம், வலி, சலனங்கள், மழை தீர்ந்த மரம், குளியலறைக்கு வெளியே சத்தம் கேட்டுக்கொண்டிருக்கிறது ஆகிய கதைகள் அவருடைய எழுத்தில் நன்றாக வந்திருக்கிறது. மௌனத்தின் குரல் இதயத்திலும், இதயத்தின் தாளம் மௌனத்திலும் சங்கமிக்கும் வித்யாசமான கதைகள்.

எழுத்தாளர் அரவிந்தன் காலச்சுவடு இதழின் ஆலோசனைக் குழுவில் ஒருவராக இருக்கிறார். 'இந்தியா டுடே' போன்ற இதழ்களில் பத்தாண்டுகளுக்கும் மேலாக நிருபராக வேலை பார்த்தவர். இவருடைய கட்டுரைத்தொகுப்பு கூட காலச்சுவடில் வெளிவந்துள்ளது. தொகுப்பிலுள்ள கதைகள் கூட காலச்சுவடு, இந்தியா டுடே, புதிய வார்த்தை, பன்முகம் போன்ற பல இதழ்களில் வெளிவந்தவைகள் தான்.

புத்தகத்தைப் பற்றி பின்னட்டையிலுள்ள வாசகம்:

*********************************************************
அரவிந்தனின் படைப்பு வெளி இறுக்கத்தைத் தூண்டும் மௌனங்களாலும் கலவரமூட்டும் சப்தங்களாலும் நிரப்பப்பட்டது. மௌனத்திலிருந்து சப்தங்களை உருவாக்கும் கதைமொழி வாழ்வின் மர்மமான அடுக்குகளுக்குள் மேற்கொள்ளும் முடிவற்ற பயணமாக வாசிப்பனுபவத்தை உணர வைக்கும் இச்சிறுகதைகளில் தென்படும் எளிமையின் தீவிரம் உக்கிரமானது. வீடு என்னும் வெளி தரும் பாதுகாப்பு பற்றிய கற்பனைகளைக் குழந்தையின் கரங்களைக் கொண்டு அழிக்க முற்படும் அரவிந்தனின் கதைகள் வாசகரின் பள்ளியறைக்குள் பாம்புகளை நடமாடவிடுகின்றன. கொடுங்கனவுகளால் சூழப்பட்ட யதார்த்தத்தை எதிர்கொள்ளவியலாத திணறலாக வாசிப்பனுபவத்தை மாற்றும் நுட்பமே அரவிந்தனைத் தனித்துவம் மிக்க ஒரு சிறுகதைக் கலைஞராக முன்னிறுத்துகிறது. - தேவிபாரதி
*********************************************************
http://www.ensorkal.blogspot.com - அரவிந்தன் வலைப்பூவைத் தொடங்கி நேரமின்மையால் தொடர்ந்து பதிவிடாமலே இருக்கிறார். அவ்வப்பொழுது உங்களுடைய கதைகளையும், கட்டுரைகளையும் பதிவேற்றலாமே என்று கேட்டு மின்னஞ்சல் செய்திருந்தேன். அவருக்கும் அந்த எண்ணம் இருப்பதாகச் சொல்லி இருந்தார். இந்த சிறுகதைத் தொகுப்பைப் பற்றி அவர் எழுதியுள்ள முன்னுரை மட்டும் அவருடைய வலைப் பக்கத்தில் வாசிக்கக் கிடைக்கிறது.

புத்தகத்தைப் பற்றிய தகவல்கள்:
குளியலறைக்கு வெளியே சத்தம் கேட்டுக்கொண்டிருக்கிறது.
வெளியீடு: காலச்சுவடு பதிப்பகம்
ஆசிரியர்: அரவிந்தன்.
விலை: 60 ரூபாய் /-

Thursday, September 9, 2010

அலகிலா விளையாட்டு - பா ராகவன்

யுகம் யுகமாகத் தொடரும் கேள்வி ஒன்று இருக்கிறது. வாழ்வில் சிறந்தது சிற்றின்பமா? பேரின்பமா?. இரண்டையுமே கண்ணெதிரில் வைத்துவிட்டு எது என்று கேட்டால் பதில் சொல்லலாம். தேர்ந்தெடுப்பதிலும் பிரச்சனை இருக்காது. பரமாத்மாவுடன், மனித ஆத்மாவை சேர்ப்பதுதான் மேலான வாழ்க்கை என்கிறார்கள். ஆத்மாவையே உணர முடியவில்லை. பிறகு பரமாத்மாவை எங்கிருந்து கண்டடைவது.

ஆத்மாவைப் பற்றியும், தத்துவங்கள் பற்றியும் சிந்திப்பது திசைகாட்டியும் மாலுமியும் இல்லாமல் நடுக்கடலில் பயணம் செய்வதைப் போன்றது. பெரும்பாலும் இலக்கில்லா பயணங்கலாகவே அமையக்கூடும். தெளிவற்ற இலக்குகளாகவே அவைகள் இருக்கும். எதிரில் தென்படும் கலங்கரை விளக்கங்களே நம் பயணத்தின் முடிவைத் தீர்மானிக்கும். கரைகொண்டு சேர்ப்பது கூட மாலுமிகளின் சாமர்த்தியம் தான். உண்மை என்னவெனில் கலங்கரை விளக்கங்கள் போன்ற மார்கங்கள் நிறையவே இருக்கின்றன. சரியான வழிகாட்டிகள் தான் நமக்குக் கிடைப்பதில்லை. பலரும் மோசம் செய்பவர்களாகவே இருக்கிறார்கள்.

ஆன்மீகத்தையும், தத்துவத்தையும் அணுகுவது கண்ணுக்குத் தெரியாத கண்ணிகளைக் கொண்ட மாய வட்டத்தில் நுழைவதைப் போன்ற சிக்கலான செயல். அதன் மாயக் கரங்கள் தலையை வருடுமா? கழுத்தை நெறிக்குமா? கால்களை இடறி குப்புறக் கவிழ்க்குமா? என்பது அதில் நாம் எந்த அளவிற்கு சஞ்சரிக்கிறோம் என்பதைப் பொறுத்தது அமைகிறது.

பற்றில்லாத வாழ்க்கையின் சிக்கல்களே கதையின் முக்கியப் பிடிமானம். மாணவர்களுக்கு வேதம் சொல்லிக் கொடுப்பதையையே பிரதானமாக நினைக்கும் வேங்கட சாஸ்த்ரி, பொருலீட்டுவதையே வாழ்க்கையின் குறிக்கோளாக நினைக்கும் கதைநாயகனின் குடும்பம், அகிம்சை மார்கத்தை உறுதியாக பிடித்துக் கொண்டிருக்கும் மகாத்மா காந்தி, இலவச கல்வி நிறுவனத்தை நிறுவுவதற்கு சுழன்று கொண்டிருக்கும் கோபாலகிருஷ்ண ஹெக்டே, கடைசி மூச்சு உத்ரகாசியில் தான் போக வேண்டும் என்று ஆசைப்படும் கதைநாயகனின்
அறைத் தோழர்கள், மனிதர்கள் மேலான நிலையை அடைய வழிகாட்டும் மடாலயத் துறவிகள் என்று எல்லோருமே ஒரு விஷயத்தைத் தீவிரமாக பற்றிக் கொள்கிறார்கள். இவர்களின் மத்தியில் சுழன்ற 73 வயது பிரமச்சாரி தனது சிக்கலான வாழ்வின் தருணங்களைத் திரும்பிப் பார்ப்பதுதான் கதை.

தனக்கு வேதம் சொல்லிக் கொடுத்த வேங்கட சாஸ்திரி கடைசி வரை கஷ்டங்களைத் தானே அனுபவித்தார், "கற்றுக் கொடுக்கும் வேதம் அவரைக் காப்பாற்றும் என்றாரே!" கடைசி வரை நெருக்கடியான வாழ்க்கையைத் தானே வாழ்ந்து முடித்தார் என்கிற எண்ணம் வயோதிகரை வாட்டி எடுக்கிறது. வயது அதிகமாக அதிகமாக குருவின் கடைசி மகள் பூரணியின் மேல் கொண்ட காதலும் வளர்ந்து கொண்டே இருக்கிறது. இந்த நிலையில் தான் அவர் படுத்த படுக்கையாகிறார். கூட்டிலிருந்த பறவை இலகுவாகப் பறந்து ஆகாசத்தை அடைவதைப் போல வயோதிகரின் உயிரும் பிரியப் போகும் கனத்தை எதிர்பார்த்தபடி சுற்றி நின்று மந்திரம் ஓதுகிறார்கள் அவருடைய தோழர்கள். அந்த நேரம் பார்த்து பூரணி வந்து சேர்கிறாள். நங்கூரத்தின் பிடியில் சிக்கிய கப்பலைப் போல அவன் கட்டுண்டிருக்கிறான். அவனுடைய மனம் செல்லும் வேகத்திற்கு உடல் ஒத்துழைக்கவில்லை. மனம் கடந்த காலத்தின் தொடுவானத்தை நோக்கிப் பயணிக்கிறது.

சிறுவயதில் திருவையாறில் வேதம் படித்தது, ஆசிரியரின் இன்னல்களுக்கு சாட்சியாக நின்றது, அவரிடமிருந்து பிரிந்து சென்றது, படித்து முடித்து போஸ்ட் மாஸ்டர் வேலைக்காக திருவையாறுக்கே சென்றது, பூரணியிடம் காதலைச் சொல்லி தோல்விகண்டது, காந்தி சென்னைக்கு வந்தபோது அவரை சந்திக்க நினைத்தது, கோபாலகிருஷ்ண ஹெக்டேவிடம் வேலைக்குச் சேர்ந்தது, கல்கத்தாவில் நூலகராக பணியாற்றியது, புத்தமடாலயத்தில் தத்துவ ஆராய்ச்சி செய்தது, முதன்முதலாக கைலாயம் சென்றது, மரணப் படுக்கையில் விழுந்தது என்று எங்கெங்கோ சென்று திரும்புகிறது மனம்.
பூரணியின் வரவு உற்சாகத்தை ஏற்படுத்த உடல்நலம் தேறுகிறார். ஒரு குழுவாக கைலாயம் செல்கிறார்கள். அதன் பின் நடந்தது என்ன என்பதுதான் முடிவு.

பாராவின் எழுத்து நதி, பனிமலை, குளிர், வேதப்பள்ளி என ஒவ்வொன்றையும் கண்முன் கொண்டுவரும். கதையில் வரும் கங்காதரன் நாயர், பூரணி, வெங்கடராமன், கல்லிடைக்குறிச்சி பாட்டி, வேங்கடராம சாஸ்த்ரி, ராயலசீமா சூரிக் கிழவர், ஜான் ஸ்மித், அவனுடைய காதலி, விடுதி ஒனர் சிந்தி, கோபால கிருஷ்ண ஹெக்டே, மடாலய பிக்குகள், துறவிகள், வாத்தியாரின் அத்தை, மனைவி மற்றும் குழந்தைகள், ஆங்காங்கு வந்து செல்லும் சில நபர்கள் என எல்லோரும் மனத்தைக் கொள்ளை கொள்வார்கள்.


ரங்கநாயகி அம்மாள் நினைவு நாவல் போட்டியின் முதல் பரிசு (அதைப் பற்றி - பத்ரி) பெற்றதால் 2004-ஆம் ஆண்டு இலக்கிய பீடத்தில் இந்த நாவல் தொடராக வந்தது. அந்த வருட ஒவ்வொரு மாதத்தின் முதல் வாரமும் பொன்னேரி நூலகத்திற்கு நடையாய் நடந்தது நினைவிற்கு வருகிறது. இந்த நாவலின் பக்கங்களை இதழிலிருந்து திருடியது நேற்றுதான் செய்தது போல இருக்கிறது. கடந்த பிப்ரவரியில் திருடிய இதழினை புத்தகமாக பைண்டிங் செய்து பா ராகவனை நேரில் சந்தித்த பொழுது கையெழுத்து வாங்கினேன்.

"வெறிபிடித்த வாசகன் கிருஷ்ணபிரபுவுக்கு - நேசமுடன் பாரா" என்று கையொப்பமிட்டார். எப்படி கண்டுபிடித்தாரோ தெரியவில்லை. அலகிலா விளையாட்டைப் பொறுத்தவரை நான் வெறிபிடித்த வாசகனாகத் தான் இருந்தேன். அதனை மீள் வாசிப்பிலும் என்னால் உணர முடிந்தது.

கடந்த ஆண்டு இலக்கிய பீடத்திற்கு சென்று பல பிரதிகளை வாங்கி நண்பர்களுக்குப் பரிசளித்தேன். திருடிய இடத்தை சும்மா விடமுடியுமா? பொன்னேரி நூலகத்திற்கும் சென்றிருந்தேன். நூலகர் பேநிக்கிடம் என்னுடைய திருட்டு விஷயத்தைப் போட்டு உடைத்துவிட்டு கையில் எடுத்து சென்ற புத்தகத்தை பரிசாகக் கொடுத்தேன். நக்கலான சிரிப்புடன் வாங்கிக் கொண்டார்.

நாவலின் சில வரிகள் இணையத்தில் படிக்கக் கிடைக்கிறது:

பாஸ்டன் பாலாவின் பதிவில்...
சிங்கப்பூர் பதிவர் சுரேஷின் வலைப்பூவில்...

பாரா எழுதிய புனைவுகளிலேயே இந்தப் புதினம் மிகச் சிறந்த ஒன்று. என்னுடைய தனிப்பட்ட விருப்பத்தின் அடிப்படையில் இவருடைய மற்ற படைப்புகளை கூட இதன் பின்னால் தான் வைப்பேன். ஏனென்று தெரியவில்லை அவரின் தீவிர வாசகர்கள் கூட இந்த புதினத்தைப் பற்றி அறியாமலே இருக்கிறார்கள் என்பதுதான் வினோதமான உண்மை. வேத தத்துவத்தில் விருப்பமுள்ள நண்பர்கள் தவறவிடாமல் படிக்க வேண்டிய சுவாரஸ்யமான தமிழ் நாவல். இந்த நூல் பாராவின் வேறொரு முகத்தை உங்களுக்கு அறிமுகப்படுத்தும்.

இந்த புத்தகத்தைப் பற்றிய என்னுடைய முதல் பதிவு. நாவலைப் படித்த பல வருடங்கள் கழித்து எழுதியதால் விவரங்கள் தெளிவில்லாமல் இருக்கும்.

அலகிலா விளையாட்டு - பா ராகவன் -1

வெளியீடு: இலக்கிய பீடம்
ஆசிரியர்: பா ராகவன்
விலை: 70 ரூபாய்
******************************************************************
கிடைக்குமிடம்:
முகவரி:
3,3, ஜயசங்கர் தெரு
மேற்கு மாம்பலம்
சென்னை - 600033
இந்தியா
ஆசிரியர் : விக்ரமன்
தொலைபேசி :914423712485

Tuesday, September 7, 2010

மௌனத்தின் குரல் - வாஸந்தி

சாப்பிட அடம்பிடிக்கும் குழந்தைக்கு அன்னையானவள் உணவைத் திணிப்பது போல வாழ்க்கை நமக்கான அனுபவங்களை வலுக்கட்டாயமாக திணித்துவிட்டு மின்னலென மறைகிறது. ஊட்டிவிடும் எல்லா உணவுகளையும் குழந்தை உண்டு ஜீரணிப்பதில்லை. அழுது ஆர்பாட்டம் செய்கிறது, பிஞ்சுக் கைகளால் தட்டி விடுகிறது, வாயிலிருந்து துப்புகிறது, இன்னும் பல வகையில் சிதறச் செய்கிறது. சாப்பிட மறுக்கும் அதே குழந்தை எறும்புகளைக் காட்டிலும் சிறிய துரும்பினை எப்படித்தான் அடையாளம் காணுமோ தெரியவில்லை. இறைந்து கிடக்கும் துணுக்குகளில் ஒன்றை எடுத்து ஏமாந்தால் வாயில் வைத்துக் கொண்டு கவனம் தவறினால் விழுங்கிவிடும்.

இயந்திர கதியில் ஓடும் நாமும் அதுபோலவே வாழ்க்கையின் அனுபவங்களைச் சிதறச் செய்கிறோம். யாருமற்ற தனிமையில் இருக்கும் பொழுது சிதறிக் கிடக்கும் அனுபவக் குப்பைகளைக் கிளறிப் பார்த்தால், காலமாற்றத்தால் தூக்கிப் போட்ட கனவுகளும், இழந்துவிட்ட உண்மையான நம்முடைய முகங்களும், இழந்துவிட்ட வாய்ப்புகளும், வலிகளும், வேதனைகளும், காதலும், தோல்வியும், சந்தோஷங்களும் இருக்கும்.

நேர்கோட்டில் செல்லும் வாழ்க்கை யாருக்குமே சாத்தியமில்லை. கல்யாணத்திற்கு முன், கல்யாணத்திற்குப் பின் என்று உலகத்திலுள்ள 97 சதவிகித மனிதர்களுக்கு இரட்டை வாழ்க்கைதான் நிரந்தரம். அதிலும் கல்யாணத்திற்குப் பிறகான வாழ்க்கையில் ஆண்களை விட பெண்களுக்கே யதார்த்த சங்கடங்கள் அதிகம். பிறந்த வீட்டில் பூ மாதிரி வளர்க்கப்பட்டு புகுந்த வீட்டிற்கு அனுப்பப்படும் பொழுது, உறவின் முறை பெரியவர்களால் மணப் பெண்ணிற்குக் கொடுக்கப்படும் ஆலோசனைகளில் முக்கியமான ஒன்று இருக்கிறது. "போற இடத்துல எல்லோரையும் அனுசரிச்சி பக்குவமா நடந்துக்கோ" என்பதுதான் அது. எந்த ஓர் ஆணுக்கும் இதுபோல சொல்லப்படுவதில்லை. போலவே பெண்களுக்கு மட்டுமே சொல்லப்படுகிறது. அவர்களும் மெளனமாக ஏற்றுக் கொள்கிறார்கள்.விதைக்கப்பட்டு, செழிப்பாக வளர்க்கப்பட்ட இடத்தின் வேரறுத்துக் கொண்டு ஒரு புதிய இடத்தில் தன்னை பதியம் செய்துகொள்ளும் பெண்களின் மனநிலை ஓர் ஆணாக என்னால் புரிந்து கொள்ள முடியாத ஒன்று.

எப்பொழுதாவது பெப்சி உங்கள் ச்சாயிஸ், நீங்கள் கேட்டவை, மற்றும் சில ரியாலிட்டி நிகழ்ச்சிகளை பார்க்கும் பொழுது மனைவியாக வரும் சிலரிடம் "நீங்கள் என்ன செய்கிறீர்கள்?" என்று கேள்வி கேட்பார்கள். அவளைச் சுற்றித் தான் அந்தக் குடும்பமே இருக்கிறது என்ற பெருமிதமாகக் கூட இருக்கலாம். நான் 'house wife'-ஆக இருக்கிறேன் என்று துடிப்புடன் பதில் வரும். அந்தப் பெருமிதம் அவளுக்கு எதுவரை துணை நிற்கும் என்று தெரியவில்லை. என்றாவது ஒருநாள் தன்னுடைய வாழ்க்கையை அவள் திரும்பிப் பார்க்கக் கூடும். தான் யார் என்ற கேள்வியை மனசாட்சி எழுப்பக் கூடும். 'நல்ல மனைவியாக, மருமகளாக, குழந்தைகளுக்குத் தாயாக' என்று குடும்பத்திற்காக அணிந்துகொண்ட முகமூடியை அவள் கழட்டித் தானே ஆகவேண்டும். இந்தக் கதையில் வரும் ஜெயா-வும் அப்படிப்பட்டவள் தான். அவளை மையமாக வைத்து நகரும் நாவலில், அவளே நம் விரல் பிடித்து பெண்களின் அக உலகிற்கு அழைத்துச் செல்கிறாள்.
சாகித்ய அகாடமி விருது பெற்ற 'That long silence' என்ற சசி தேஷ்பாண்டே எழுதிய ஆங்கில நாவலின் தமிழாக்கம். மொழி பெயர்ப்பு என்றே சொல்ல முடியாத அளவிற்கு நேர்த்தியாக தமிழாக்கம் செய்திருக்கிறார் எழுத்தாளர் வாஸந்தி. நடுத்தர பிராமண குடும்பத்தில் நடக்கக் கூடிய கதைக்களம். எல்லா தந்தைப் போலவே ஜெயாவை பாசமுடன் வளர்க்கிறார் அவளுடைய தந்தை. எதிர்பாராத விதமாக அவர் சிவலோகப் பதவியை அடையவும் ஜெயாவின் குடும்பம் உறவினர்களின் வீட்டில் வாழ வேண்டிய சூழல் ஏற்படுகிறது. கூட்டுக் குடும்பத்தில் வளர்ந்து மோகன் என்பவனுக்கு வாழ்க்கைத் துணையாகிறாள். ராகுல், ரதி என்று இரண்டு குழந்தைகள் பிறக்கிறது. கணவனுக்காகவும், குழந்தைகளுக்காகவும் மட்டுமே வாழ்கிறாள். நேரம் கிடைக்கும் பொழுது பத்திரிகைகளுக்கு எழுதுகிறாள். ஒரு நிகழ்விற்குப் பிறகு எழுதுவதையும் நிறுத்தி விடுகிறாள். மகிழ்ச்சியுடன் சென்று கொண்டிருந்த அவர்களுடைய வாழ்க்கையில் ஒரு சிக்கல் ஏற்படுகிறது. மோகன் அவனுடைய வேலையில் தவறு செய்துவிடுகிறான். பிரச்னையை சரி செய்யவில்லை என்றால் சிறைக்குச் செல்ல வேண்டிய சூழல். குழந்தைகளை சுற்றுலாவிற்கு அனுப்பிவிட்டு, குழப்பத்துடன் அவர்களுக்கு சொந்தமான வேறொரு இடத்தில் தனிமையாக வசிக்கிறார்கள். மோகனின் அருகாமை அவளுடைய அகம் சார்ந்த சிக்கல்களையும், சிடுக்குகளையும் ஏற்படுத்துகிறது.

"ஒரு குடும்பத் தலைவனாக உங்களுக்காகத்தான் நான் எல்லாம் செய்தேன்" என்பது மோகனின் வாதம். இந்த இடத்தில் ஜெயா வாயடைத்து நிற்கிறாள். மோகனிடம் நடத்த முடியாத வாதத்தை அவள் அகம் சார்ந்தும், தனது இழந்து விட்ட உறவுகள் சார்ந்தும், வாழ்க்கை சார்ந்தும் எழுப்புகிறாள்.
பாதுகாப்பில்லாத வாழ்க்கையை உணர்கிறாள்.வாழ்வின் யதார்த்தம் நம்மை அசைத்துப் பார்க்கும் பொழுதும், நிர்மூலமாக்கும் பொழுதும் மனம் பின்னோக்கிச் சென்று இறந்த காலத்தின் சுழியில் சிக்கிக் கொள்கிறது. புதையுண்ட நினைவுகளின் வேர்களை வெறுமையுடன் மனம் தேடிச் செல்கிறது. தற்போதைய நிலைக்குக் காரணமானவர்களின் ஆவியை விரட்டிச் சென்று கேள்வி கேட்கிறது. நம்முடைய சிறுவயது மனசாட்சியும் அந்த ஆவிகளில் ஒன்றே. இறந்தவர்களுடன் இவள் நடத்தக் கூடிய உரையாடலும் அப்படிப்பட்டதே. ஜெயாவின் நோக்கம் அனாவசியமான கேள்விகளோ, உரையாடல்களோ, புலம்பல்களோ அல்ல. அவள் தொலைத்துவிட்ட முகத்தைத் தேடுகிறாள். ஒரு நதியோ அல்லது ஆறோ எங்கு வேண்டுமானாலும் உற்பத்தியாகலாம். கடலுடன் சேர்ந்த பிறகு அந்த நீர் தன்னுடைய முகத்தை இழக்கிறது. சுவையையும் தன்மையையும் மாற்றிக் கொள்கிறது. ஓடும் நீரின் 'சல சல' ஒலிகளை கடற்கரையில் நின்று ஒருபோதும் கேட்கமுடிவதில்லை. அலைகளின் ஓசை அவற்றை விழுங்கி மௌனமே அவற்றின் குறியீடாகிறது. பெண்களின் வாழ்க்கையும் அப்படித்தானோ என்னவோ!.

நீரின்றி, ஆகாரமின்றி பெரிய பாறைகளுக்கு இடையில் வாழும் தேரையைப் போல தன்னுடைய ஆளுமையையும், விருப்பங்களையும் துறந்துவிட்டு கணவனுக்காகவும், குழந்தைகளுக்காகவும் வாழும் பெண்ணின் உளவியல் சமந்தமான அற்புதமான நாவல். நடுத்தர குடும்பத்தில் அடைபட்ட தலைவிகளின் குறியீடாக இருக்கிறது 'மௌனத்தின் குரல்'.

முதிர்ச்சி பெறாத வயதில், பொன்னேரி நூலகத்திலிருந்து பத்து வருடங்களுக்கு முன்பு இந்த புத்தகத்தைப் படித்த பொழுது நான் கேட்ட ஜெயாவின் குரல் வேறு மாதிரியாக இருந்தது. அப்பொழுது ஜெயாவை எனக்கு யாரென்றே தெரியாது. அவள் சொல்ல வந்த விஷயம் எனக்கு அன்னியமாக இருந்தது. பல ஆண்டுகள் கழித்து சமீபத்தில் மீள் வாசிப்பு செய்த பொழுது ஜெயா எனது தோழியாகிவிட்டாள். அவளின் குரல் என்னை ஏதோ செய்தது. அடுத்த பத்து வருடத்தில் அவள் எனக்கு சொந்தமாகி குற்ற உணர்வையும் ஏற்படுத்தலாம். அப்பொழுது அவளின் குரலை நான் எப்படி எடுத்துக் கொள்ளப் போகிறோனோ தெரியவில்லை.

இந்திய ஆங்கில நாவல் இலக்கியத்தில் இந்த படைப்பு தனி அடையாளத்துடன் பார்க்கப்படுகிறது. தீவிர இலக்கிய வாசகர்கள் தவறவிடாமல் படிக்க வேண்டிய
அரிய படைப்பு. எழுத்தில் ஆர்வமுள்ள பெண்களுக்கு நான் தனிப்பட்ட முறையில் பரிந்துரைக்கும் புத்தகம். அவசியம் படித்துப் பாருங்கள்.

வெளியீடு: சாகித்ய அகாடமி பதிப்பகம்
ஆசிரியர்: சசி தேஷ்பாண்டே
தமிழில்: வாஸந்தி
விலை: 85 ரூபாய்

Sunday, September 5, 2010

ஆசிரியர் தினம்

எனக்கான முக்கிய பொழுதுபோக்கு புத்தகம் வாசிப்பது. இதை வைத்துக் கொண்டு படிப்பில் நான் படுசுட்டி என்று நினைத்துக் கொள்ளாதீர்கள். சராசரி மாணவர்களிலேயே கடைந்தெடுத்த சராசரி மாணவன் நான். பல நேரங்களில் யோசித்ததுண்டு. எழுத்தை அடையாளப் படுத்திக்கொண்டு வாசிக்க முடியாமல் இருக்குமெனில் என் கதி என்னவாகும்!?. நல்ல வேலை அப்படி எதுவும் நடக்கவில்லை. பள்ளி செல்வதற்க்கான சூழ்நிலையை ஏற்படுத்திக் கொடுத்த குடும்பத்தாருக்கும், எந்த விதத்தில் சொல்லிக் கொடுத்தால் என் மூளைக்கு எட்டுமோ அந்த விதத்தில் சொல்லிக் கொடுத்த ஆசிரியர்களுக்கும் என்னுடைய நன்றியை சொல்லி மாளாது.

நான் முதன் முதலில் சென்றது அரசாங்க மழலையர் பள்ளிக்கு (பால்வாடி). காலையில் இரண்டு மணி நேரம் இருக்கும். மரத்தடியில் சந்தோஷமாக விளையாட விடுவார்கள். ஒன்றிரண்டு குழந்தைப் பாடல்களையும் சொல்லிக் கொடுப்பார்கள். பாடல்களை பாடிக்கொண்டே மரங்களை
சுற்றிச் சுற்றி ஓடிக் கொண்டிருப்போம். சோர்வானவுடன் பால்வாடி டீச்சரிடம் செல்வோம். எங்களுக்காக தயார்படுத்தி வைத்திருந்த சத்துணவு உருண்டையை கொடுப்பார்கள். அதை வாங்கி சாப்பிட்ட படியே வீடு நோக்கி ஓடுவோம். ஒரு வருடம் கழித்துதான் ஆரம்பப் பள்ளிக்குச் சென்றோம்.

எனக்கு நன்றாக ஞாபகம் இருக்கிறது 8-வது வரை உள்ள பள்ளியில் நான்கு வகுப்பறைகள் மட்டுமே இருந்தது.
தலைமை ஆசிரியருக்கு மட்டும் ஒரு தனியறை இருக்கும். மற்றபடி ஆசிரியர்களுக்கான ஓய்வறை, கழிவறைகள் கூட இல்லை. ஆசிரியைகள் ஓய்வெடுக்க எங்கள் வீட்டிற்குத்தான் வருவார்கள். எங்கள் வீட்டில் பசுமாடு இருந்தது. காலையும் மாலையும் அவர்களுக்கு பால் கொடுத்து அம்மா உபசரிப்பாள். அந்த வகுப்பறைகளுக்கு முன்பு இரண்டு பெரிய வேப்பமரம் கம்பீரமாக நின்று கொண்டிருக்கும். முதல் நான்கு வகுப்புகளுக்கு அந்த இரண்டு மரம் தான் நிழல் தந்து உதவியது. சில நேரங்களில் வெயில் சுளீரென்று மண்டையில் அடிக்கும். காகம் தன்னுடைய பங்கிற்கு அசிங்கம் செய்துவிட்டுப் போகும். கல்கத்தா நெடுஞ்சாலையில் மாட்டு வண்டிகளும், சைக்கிள்களும், லாரிகளும் எப்பொழுதாவது பேருந்துகளும் செல்லும். தூரத்தில் வேகமாக நகர்ந்து செல்லும் வாகனங்கள் எங்களுக்கு விளையாட்டு காட்டுவது போல இருக்கும். இதற்கிடையில் 'அ... ஆ... இ... ஈ...' என்று ஆசிரியர் சொல்லச் சொல்ல நாங்கள் அனைவரும் அதைக் கேட்டு பிரதிபலிப்போம். பிறகு ஓரெழுத்து வார்த்தைகள், ஈரெழுத்து வார்த்தைகள், மூன்றெழுத்து வார்த்தைகள், வாக்கியங்கள் என்று தமிழை படித்தோம். மற்ற பாடங்களையும் தமிழிலேயே படித்தோம். மரத்தடியில் இருந்து கூரை வேய்ந்த கட்டிடத்திற்குள் சென்றது செயற்கையாக இருந்தது. ஆறாம் வகுப்பில் தான் 'A B C D...' என்று ஆங்கிலம் படிக்க ஆரம்பித்தோம். ஏழாம் வகுப்பு வரை எங்களுக்கு வீட்டுப் பாடமே கிடையாது. தமிழ் ஐயா, பிரேமா டீச்சர், சத்யா டீச்சர், தையல் டீச்சர், ரெஜினா டீச்சர், பவானி டீச்சர், சரவணன் சார், செல்லப்பன் சார்... எல்லோரும் எங்களை அவர்களுடைய பிள்ளைகளைப் போல பார்த்துக் கொள்வார்கள். நெடுஞ்சாலை விரிவாக்கத்தில் இரண்டு பெரிய மரங்களையும் வெட்டிவிட்டார்கள். பள்ளியை கூட இடம் மாற்றி வேறு இடத்தில் அமைத்துவிட்டார்கள். நான் படித்த இடத்தின் சுவடே இன்று இல்லை. ஆசிரியர்களில் கூட ஒரு சிலரைத் தவிர எல்லோரும் மாற்றலாகி சென்றுவிட்டார்கள். சென்ற வாரம் பவானி டீச்சர் ஷேர் ஆட்டோவின் பயணத்தில் எனக்கு கையசைத்தார். அவருக்கு எதிர் திசையில் என்னுடைய வண்டி சென்று கொண்டிருந்தது. நான் இரண்டு கைகளையும் கூப்பி வணக்கம் செலுத்தினேன். "நல்லா இருக்கியான்னு?" சைகையிலேயே கேட்டார்கள். மண்டையை வாகாக ஆட்டினேன். "நல்லா இருன்னு" தூரத்திலிருந்து ஆசிர்வாதம் செய்தார்கள். சில நொடி சம்பாஷனை முடிவுக்கு வந்தது.

என்னுடைய கிராமத்தில் எட்டாவது முடித்து அருகிலுள்ள ஊரில் ஒன்பதாவது சேர்ந்தேன். ஒரே பள்ளியில் ஆயிரத்திற்கும் அதிகமான மாணவர்களைப் பார்த்தது
உள்ளுக்குள் நடுக்கத்தை ஏற்படுத்தியது. ஆரம்பத்தில் விருப்பமே இல்லாமல் பள்ளிக்கு சென்று கொண்டிருந்தேன். சம்பத் சாரின் கணித வகுப்பு எனக்கான புது வாசலைத் திறந்தது. அவரிடமே மாலை நேர டியூஷன் சேர்ந்தேன். எல்லா பாடங்களையும் அருமையாக எடுக்கும் அவர் பள்ளியில் கணிதத்திற்கான ஆசிரியர் மட்டுமே. மற்ற ஆசிரியர்கள் அவருக்கு முன் முட்டாள்களாகவே தெரிந்தார்கள். தமிழ் ஐயா மட்டும் விதிவிலக்கு. ஒரு நாள் கூட வீட்டில் படித்ததில்லை, இருந்தும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் கௌரவமான மதிப்பெண்கள் எடுத்து தேறினேன் என்றால் அதற்குக் காரணம் அவர் மட்டுமே. ஒரு வருடத்திற்கு முன்பு பேருந்தின் ஜன்னல் ஓரத்தில் அவரைப் பார்க்க நேர்ந்தது. அவரும் என்னைப் பார்த்தார். பேருந்து நகர்ந்து செல்கிறது. தேசிய கீதம் கேட்டது போல நான் உடம்பை விரைப்பாக்கி, நேராக நின்று கண்களில் பதட்டத்துடன் அவரைப் பார்க்கிறேன். அவர் சிறு குழந்தைக்கு விடை கொடுப்பது போல எனக்குக் கையசைத்தார். என்றாவது ஒருநாள் அவருடைய வீட்டிற்க்குச் சென்று பார்க்க வேண்டும் என்று பத்தாவது முடித்ததிலிருந்தே நினைத்துக் கொண்டிருக்கிறேன். நேரில் பார்த்தாலும் வார்த்தைகள் வெளியில் வருமா என்று தெரியவில்லை.

உயர்நிலைப் படிப்பிற்காக பென்னேரி சென்றேன். என்னுடைய பாட்டி வீட்டில் தங்கிப் படித்த காலம். விளையாட்டு, படிப்பைத் தவிர வாழ்க்கையில் வேறு விஷயங்கள் இருக்கிறது என்பதை அங்குதான் தெரிந்து கொண்டேன். படைப்பிலக்கியத்தின் மீது ஆர்வம் சென்றது. உயர்நிலைப் பள்ளி ஆசிரியர்கள் இயந்திரத் தனமாகத் தெரிந்தார்கள். மதிப்பெண்களை மட்டுமே அவர்களுக்கான இலக்குகளாக வகுத்துக் கொண்டு பாடம் நடத்தினார்கள். படிப்பில் எனது ஆர்வம் சராசரிக்கும் குறைவாக அமைந்தது. இயற்பியல், வேதியியல், உயிரியல் எல்லாம் என்னைப் பாடாய் படுத்தியது. ஆசிரியர்கள் என்னிடம் மல்லுக்கு நிற்காத குறை. மலர் அக்காவிடம் காலை நேரத்தில் மேத்ஸ் டியூஷன் சென்றேன். கல்லூரி முடிக்கும் வரை அவர்தான் கணிதத்திற்கான வழிகாட்டியாக அமைந்தார். ஒரு வழியாக இறுதியாண்டில் தேறி பொன்னேரி அரசு கல்லூரியில் சேர்ந்தேன். முதலில் வரலாற்றுப் பிரிவில் சேர்ந்து, பிறகு கணிதத்திற்கு மாறினேன். முதலாமாண்டு படிக்கும் பொழுது தவறாமல் வகுப்புகளுக்கு சென்றிருக்கிறேன். அடுத்தடுத்த இரண்டாண்டுகளில் வகுப்பிற்குச் செல்வது வெகுவாகக் குறைந்தது. என்னுடைய துறை ஆசிரியர்களுக்குக் கூட என்னைச் சரியாக அடையாளம் தெரியாது. முட்டி மோதி இளங்கலை கணித பட்டயத்தைப் பெற்றேன்.

அதன் பிறகு சிறிது காலம் வேலை செய்து, அது பிடிக்காமல் போக காஞ்சிபுரத்திற்குச் சென்று ஒரு வருட கூட்டுறவு பட்டயப் படிப்பை முடித்தேன். தொழின் முறைப் படிப்பு என்பதால் அதற்கேற்ற கட்டுக் கோப்புடன் இருக்கும். கூட்டுறவு சட்டம், கூட்டுறவு வரலாறு, கூட்டுறவு கணக்கில் என்று எல்லா பாடங்களும் குமட்டிக் கொண்டு வரும். பிடிக்காத பாடம் என்பதால் ஆசிரியர்களிடம் இடைவெளி ஏற்பட்டுவிட்டது. குரங்கு மரத்திலிருந்து தாவுவது போல இலக்கில்லாமல் தாவிக்கொண்டிருந்தேன். அந்தத் தாவலில் நான் கடைசியாக அமர்ந்தது பச்சையப்பன் கல்லூரியில். மாலை நேர வகுப்பில் முதுநிலை கணிதம் படிக்க அங்கு சேர்ந்தேன்.
எதற்காகப் படிக்கிறோம்? ஏன் படிக்கிறோம்? என்ற எந்தவித முடிவிற்கும் வர இயலாத பாடமாக முதுநிலைக் கணிதம் எனக்குத் தண்ணி காட்டியது. எனக்கு மட்டும் அல்ல என்னுடன் படித்த எல்லோருக்கும் தான். ஒவ்வொரு நாளும் இழவு வீட்டிற்கு வருவது போல சோக முகத்துடனே நண்பர்கள் கல்லூரிக்கு வந்து கொண்டிருந்தார்கள். 35 பேர் படித்ததில் ஒருவர் கூட இறுதியாண்டில் தேறவில்லை. இன்று வரை மூன்று நபர்கள் மட்டுமே தேறியிருப்பதாக நண்பன் கூறினான்.

அதன் பிறகு என்னுடைய அக்கா ஜெயாவின் வழிகாட்டுதலில் நல்ல வேலை கிடைத்து கை நிறைய சம்பாதிக்கும் பொழுதுதான் எனக்குப் பிடித்த வகுப்புகளை நாடிப் போக ஆரம்பித்தேன்.
முதல் மாத சம்பளத்தை எடுத்துக் கொண்டு ஓடியது கிபோர்ட் வகுப்பிற்கு. கோவிந்த ராஜ் சாரை மறக்கவே முடியாது. வேறு கம்பனிக்கு மாறியதால் கீபோர்ட் வகுப்பை நிறுத்திவிட்டு, அருகில் இருந்த இசைப்பள்ளியில் 8 மாதம் கிடார் கற்றுக் கொண்டேன். கிடார் மாஸ்டர் அருண் மாதிரி ஓர் ஆளை பார்ப்பதே கடினம். "இளையராஜாவின் பாடல்களை வாசிக்கக் கற்றுக் கொடுங்கள்" என்று அவரிடம் கூறினேன். "இசையைக் கற்றுக் கொள். உனக்குப் பிடித்த பாடல்களை நீயே வாசிக்கலாம். என்னுடைய உதவி தேவை இருக்காது" என்று ஆரம்பம் முதல் கற்றுக் கொடுத்தார். எதிர்பாராத குடும்பச் சுமையால் வகுப்பு எடுப்பதை நிறுத்தி விட்டார். சிறிது காலம் கழித்துத் தொடரலாம் என்றார். கிடார் வகுப்பு அங்கேயே நின்றுவிட்டது. பல மாதங்கள் கழித்து அவரிடம் இருந்து அழைப்பு வந்தது. மீண்டும் தொடர்வதற்க்கான நேரம் அமையவில்லை. அதற்குள் நேரத்தை விரயமாக்குவானேன் என்று ஜப்பானிய மொழி வகுப்பில் சேர்ந்துவிட்டேன். இரண்டு வருடமாக முயற்சி செய்து கொண்டிருக்கிறேன் என்றாலும் தேறியபாடில்லை. வெற்றியா முக்கியம் அனுபவம் தானே. ஜப்பானிய மொழி ஆசிரியர்களான தகாஷி சென்சேய், தாய்ச்சி சென்சேய், ஹயகவா சென்சேய் என்று பலருடன் பழகும் வாய்ப்பு கிடைத்தது. இந்திய ஜப்பானிய மொழி ஆசிரியர்களான உமா சென்சேய், பாலா சென்சேய் போன்றவர்களின் வழிகாட்டுதல் மறக்க முடியாத ஒன்று. சிவராமன் ஏற்பாடு செய்துத் தந்த சிறுகதைப் பட்டறை, பா ராகவன் ஏற்பாடு செய்துத் தந்த கிழக்கு மாடிப் பட்டறைகளில் பங்குபெற்ற அனுபவமும், கிர்தன்யா கிருஷ்ண மூர்த்தியின் Mind Training Course அனுபவமும் எனக்கு சொல்ல முடியாத ஆனந்தத்தைத் தந்தது. இன்னும் எனக்குப் பிடித்த எவ்வளவோ விஷயங்கள் இருக்கிறது. அவற்றை எல்லாம் அனுபவங்களாக உணர ஆவலுடன் இருக்கிறேன்.

ஆரம்பப் பள்ளியைத் தவிர்த்து,
முதுநிலை கல்லூரிப் படிப்பை முடிக்கும் வரை சம்பத் சாரைத் தவிர வேறு யாரும் என்னை சொல்லிக் கொள்ளும்படியாகக் கவரவில்லை. மற்றவர்களையெல்லாம் நான் வெறுக்கவில்லை. ஏனோ தெரியவில்லை அவர்களுடைய உலகில் என்னால் இருக்க முடியவில்லை. நாலு சுவற்றுக்குள் அடைபடும் மனநிலையை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. என்றாலும் இதுவரை எந்த ஆசிரியரும் என்னை தண்டித்ததில்லை. தரக் குறைவாகத் திட்டியதில்லை. அப்படியெனில் என்னுடைய தன்மையிலான கற்றலை அவர்கள் ஆமோதித்து இருக்கிறார்கள் என்று தானே அர்த்தம். என்னுடைய வாழ்க்கைக்கு மதிப்பு கொடுத்திருக்கிறார்கள் என்று தானே அர்த்தம். என்னுடைய சுதந்திரத்தில் குறுக்கிடாமல் என்னை வழி நடத்திய எல்லா ஆசான்களையும் இந்த நாளில் நினைத்துக் கொள்கிறேன்.

'வாழ்க்கைக் கரையில் அதைக் கற்பவர் நாள் சில'. கற்றுக் கொடுப்பவர்களின் சிரமத்தை இதுநாள் வரை அறிந்ததில்லை.
என்னைப் போல ஆயிரமாயிரம் மாணவ மணிகளை அவர்கள் கடந்திருக்கலாம். ஆயிரத்தில் ஒருவனாக இந்த சிறப்பான தினத்தில் அவர்களை நினைத்துக் கொள்வதில் மகிழ்ச்சியே.