Sunday, June 22, 2014

சினிமா சிறுகதைகள்

1. ஸ்டுடியோ கதை – கு. ப. ரா
2. நடிகை மகள் – பிரமிள்
3. டூப் – விட்டால் ராவ்
4. பாக்ஸ் ஆபீஸ் – பாலு சத்யா
5. கதாநாயகி குளித்த கதை – பிரபஞ்சன்
6. குணச்சித்திர நடிகர் – வண்ணநிலவன்
7. நடிகன் – ஜி. நாகராஜன்
8. ஸோல்டன் ஃபேப்ரியும் தங்கச்சூரியும் – பாஸ்கர் சக்தி
9. அத்துவானக்காட்டு எருமைகளும் அசிஸ்டென்ட் டைரக்டரும் – சந்திரா
10. கதை – செழியன்
11. நீலப்படமும் சுசித்திராவும் – சுப்ரபாரதி மணியன்
12. ஒரு நட்சத்திரத்தின் தோல்வி – நா. பார்த்தசாரதி
13. ஊமைக்காயம் – நா. பார்த்தசாரதி
14. உள்ளூர் ஹீரோ – வல்லிக்கண்ணன்

அசோகமித்ரனின் புலிக்கலைஞன் எல்லோராலும் சிலாகிக்கப்படும் படைப்பு. ஆகவே அந்தச் சிறுகதையை இந்தப் பட்டியலில் சேர்க்கவில்லை. பொது நூலகதிலும், என்னுடைய புத்தக சேகரிப்பிலுமுள்ள சிறுகதைத் தொகுப்புகளின் தலைப்புகளை ஒரு யூகத்தின் அடிப்படையில் மேலோட்டமாக நோட்டம்விட்டு, அவற்றிலிருந்து இந்தக் கதைகளைக் கண்டெடுக்க நேர்ந்தது. இன்னும்கூட மெனக்கெட்டால், கைநிறைய சினிமாச் சிறுகதைகள் கிடைக்குமென்றே தோண்றுகிறது.

நா. பார்த்தசாரதியின் கதைகளுடன் ஒப்பிடுகையில் பிரமிளின் கதை தரமானது. பட்டியலில் இருக்கும் பெரும்பாலான கதைகள் உதவி இயக்குனர்களின் வாழ்வியலைச் சித்தரித்தாலும் – விட்டல்ராவின் “டூப்” ஸ்டான்ட் நடிகன் ஒருவனைப் பற்றிய கதை. துணை நடிகையின் ஒருநாள் நெருக்குதல் வாழ்வைச் சித்தரிப்பது பாலுசத்யாவின் “பாக்ஸ் ஆபீஸ்”. ஆபாச நடிகை, தனது மகளை பள்ளியொன்றில் சேர்க்கச் செல்லும் தருணத்தை அடிப்படையாகக் கொண்டது பிரமிளின் “நடிகையின் மகள்”. குணச்சித்திர நடிகன் இறந்த பிறகு, அந்த நடிகனிடம் உதவியாளராக இருந்த ஒருவனின் சிக்கல்கலைச் சித்தரிக்கிறது வண்ணநிலவனின் சிறுகதை. கு.ப.ரா, பிரபஞ்சன் போன்றோரது கதைகள் சினிமா ஷூட்டிங்கை அடிப்படையாகக் கொண்டவை. தொழில்நுட்பம் சார்ந்து திரைத்துறையில் பெண்களுக்கான இடம் மிகச் சிறியது. சந்திரா பெண் இயக்குனராக அமீரிடம் வேலை செய்தவர். ஆகவே, பெண் உதவி இயக்குனரின் சிக்கலை, ஷூட்டிங் சார்ந்து அவரது சிறுகதையில் பதிவு செய்திருப்பார். முன்னால் முதல்வரும், திமுக பெருந்தலைவருமான, மூதறிஞர் கருணாநிதியின் சிறுகதைகளில் ஒன்று சினிமா பற்றியது. முற்போக்கு திரைப்படத்தையும் சென்சார் போர்டு உறுப்பினர்கள் படத்தின் ரீலை வெட்டி எரிவதையும் பற்றிய நகைச்சுவைக் கதை. சிறுகதையின் தலைப்பு “புரட்சிக் படம்”

நவீன படைப்பிலக்கியத்தில் சினிமா சார்ந்த பதிவுகளைப் பற்றிக் கொஞ்சம் அலசலாமே என்று தோன்றியது. அசோகமித்ரனின் “கரைந்த நிழல்கள்” பலராலும் கொண்டாடப்படக் கூடிய படைப்பு. “மானசரோவர், தண்ணீர், புலிக்கலைஞன்” போன்ற அவரது பிற படைப்புகளிலும் சினிமா உலகம் பதிவாகியிருக்கிறது.

மானசரோவர் – முழுக்க முழுக்க ஒரு உச்ச நடிகனையும், அவனுடைய திரையுலக வீழ்ச்சியையும் ஒட்டியதொரு வாழ்க்கைச் சித்திரம். சுஜாதாவின் “கனவுத் தொழிற்சாலை”, ஜெயமோகனின் “கன்னியாகுமரி”, ஜெயகாந்தனின் “சினிமாவுக்குப் போன சித்தாளு”, தமிழ்மகனின் “ஏவிஎம் ஸ்டுடியோ – ஏழாவது தளம்” போன்ற படைப்புகளும் முழுக்க முழுக்க சினிமா சார்ந்த வாழ்வைத் தான் முன்வைக்கின்றன. அரந்தை நாராயணன் கூட இரண்டு குறுநாவல்கள் எழுதியிருக்கிறாராம். பத்திரிகையாளர் ஞாநி, அந்தக் குறுநாவல்களை தொலைக்காட்சிக்காகத் தொடராக எடுத்திருப்பதாக கேணி வாசகர் சந்திப்பில் பகிர்ந்துகொண்டார்.

தமிழ்மகனின் ‘வெட்டுப்புலி’ நாவலில் சினிமா எடுக்க ஆசைப்பட்டு, பொருளாதார ரீதியாக வீழ்ச்சியைச் சந்திக்கும் ஒரு சினிமா தயாரிப்பாளரின் வாழ்க்கை பதிவாகியிருக்கும். சமீபத்தில் வெளியீடு கண்ட வெல்லிங்டன் நாவலின் பிற்பகுதியில் சினிமா கம்பெனியில் ஆர்ட் டைரக்ஷன் (கலை இயக்கம்) துறையில் வேலை செய்யும் ஒருவன் - சினிமா தயாரிப்புக் கம்பெனியை இழுத்து மூடப்படுவதால் – வேறு வேலைக்குச் சென்று பிழைக்கும் ஒரு சிறுபகுதி பதிவாகியிருக்கும். குடைந்துகொண்டே சென்றால் இன்னும் கூட சில நாவல்களை இதுபோலக் கண்டடையலாம். மேல்தட்டு மக்களின் காஸ்மோபோலிடன் வாழ்வைச் சித்தரிக்கும் “என் பெயர் ராமசேஷன்” நாவலிலும் ஒரு நடிகையைப் பற்றிய பதிவுகள் கொஞ்சம் போல பதிவாகியிருக்கும். இப்படிச் சொல்லிக் கொண்டே போகலாம். “ரணம் சுகம்” என்ற மியூசிக்கல் நாவலை இலக்கிய அளவீடுகளில் கறாராக ஒப்பிட்டுப் பேச இயலாது. இந்நாவலில் சினிமா ஒலிச்சேர்ப்பு தொழில்நுட்பக் கலைஞன் ஒருவனது வாழ்க்கை டயரிக் குறிப்பு போலப் பதிவாகியிருக்கும்.

நாவலில் சினிமா சார்ந்த பதிவுகள் எனில் இத்தனை படைப்பாக்க முயற்சிகளைப் பற்றி நம்மால் பேச முடிகிறது. சிறுகதையில் சினிமா சார்ந்த பதிவுகள் என்று வரும்பொழுது அசோகமித்ரனின் “புலிக் கலைஞன்” மட்டுமே சிலாகித்துப் பேசப்படுகிறது. நடிகர், இயக்குனர் ரோகினி – “அசோகமித்ரனின் சினிமா சார்ந்த படைப்புகளில் - நடிகைகள் பற்றிய சித்தரிப்புகளைப் பற்றிக் குறைபட்டுக் கொண்டார். “சினிமா துறையில் நல்ல நடிகைகளே இல்லையா?” என்ற நுட்பமான கேள்வியை ரோஹிணி முன் வைத்தார். எல்லாத் துறைகளிலும் “நல்ல X கெட்ட” என்ற பாகுபாடு இருக்கும்பொழுது, “சினிமா நடிகைகளில் – பல சிக்கல்களுக்கு இடையிலும் வாழ்க்கையை நேர்மறையாக எதிர்கொள்ளும் நடிகைகள் இல்லையா?” என்ற ஆதங்கத்தைப் பதிவு செய்தார்.

ரோஹினியின் இந்த வருத்தத்தை நம்முடைய மரபுடன் இணைத்துப் பார்க்க வேண்டிய அவசியம் இருக்கிறது. ஆடல் பாடல் போன்ற விஷயங்களில் தாசிகள் தான் துவக்கத்தில் ஈடுபட்டார்கள். குடும்பத்துப் பெண்கள் நடனம், இசை போன்ற துறைகளிலிருந்து சற்று விலகியே இருந்தனர். கோவில் திருவிழாக்களே ஆதிகாலத்தில் கொண்டாட்டங்களின் களமாக இருந்தது. அங்கெல்லாம் தாசிகள் தான் பங்கெடுத்தனர். நடனத்தில் வரும் காம அசைவுகளைச் “சிருங்காரம்” என்று தானே குறிப்பிடுகிறார்கள். இந்த மரபின் கண்கொண்டு நவயுக டிஜிட்டல் சினிமா நடிகைகளைப் பார்ப்பதால் தான் பிரச்சனை எழுகிறது. அதனால்தான் நடிகரையோ! நடிகையையோ! – ஊருக்கு நேந்து விட்டவர்களைப் போல நாம் பார்க்கிறோம். தாசிகள் பட்ட அவலம் சொல்லி மாளாதது. தாசிகள் முறையை ஒழிக்க, முதல் சட்டசபை பெண் உறுப்பினர் முத்துலக்ஷ்மி ரெட்டி கடுமையாகப் போராடியாது இன்றுவரையிலும் – நன்றியுடன் நினைவில் கொள்ள வேண்டிய ஒன்று. பாடகிகளையும், நடனக் கலைஞர்களையும் – தேவதாசிகளைப் போலப் பார்க்கும் பார்வையிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக வெளியில் வந்துவிட்டோம். ஆனால், நடிகைகளைச் சமூகம் பார்க்கக் கூடிய கண்ணோட்டம் மிகக் கேவலமான ஒன்று. ஜனரஞ்சக இதழ்களும், புலனாய்வு வாரப் பத்திரிகைகளும் “நடிகையின் கதை”, “சினிமாக் கூத்து” போன்ற தலைப்புகளில் நிறையவே எழுதுகிறார்கள். கிசுகிசு பாணியில், ஆழ்மான இச்சைகளைச் சுரண்டி விடும் போலியான எழுத்துகள் இவையாவும்.

எழுத்தாளர் பிரபஞ்சன் ஒரு புத்தக வெளியீட்டில் பேசும்பொழுது “நடிகை” என்ற சிறுகதையைப் பற்றிப் பகிர்ந்துகொண்டார். ஒருவனது இரண்டு மனைவியர்களின் குணநலன்களைப் பற்றிய கதை. அதில், இரண்டாவது மனைவி திரைப்பட நடிகை. மறுபடியும் படத்தில் வரும் ரோஹினியின் அடாவடித் தனமான குணாம்சங்களை முதல் மனைவிக்கும், ரேவதியின் பெருந்தன்மையான குணாம்சங்களை நடிகையின் பாத்திரத்திற்கும் பொருத்தியது போன்ற கதை.

நடிகையை ஒருவன் அணைத்துக்கொண்டு வாழ்கிறான். அவனுடைய முதல் மனைவிக்கு இது தெரிந்து சண்டை போடுகிறாள். “சம்பாறிக்கறது எல்லாத்தையும் கொண்டுட்டு போயி அந்த நடிகை கிட்ட கொட்டுறையே? உங்கிட்ட வாழ்ந்து நான் என்னத்த கண்டேன். ஒரு சொத்து உண்டா? சொகம் உண்டா?” என்று கட்டிய கணவனை டார்ச்சர் செய்கிறாள். அவன் அப்படியொன்றும் பிரம்மாதமாக சம்பாதித்து விடவில்லை என்பது முதல் மனைவிக்கு நன்றாகவே தெரியும். நடிகையின் வீட்டிற்கு நேரில் சென்று சண்டையிடுகிறாள். “என் புருஷன மயக்கிட்டையே! நீ நல்லா இருப்பியா? நாசமாப் போக” என்பது போல தரக்குறைவான வார்த்தைகளைப் பேசுகிறாள். எல்லாவற்றையும் அமைதியாகக் கேட்டுக்கொண்டு அழுகிறாள் அந்த நடிகை.

“இதுவும் கூட ஆக்டிங்” என்பதாகத் தான் நாம் நினைப்போம். ஏனெனில் அவள் நடிகையாயிற்றே. இப்படியே சண்டையிட்டு, முடிந்தமட்டும் பணத்தைப் பிடுங்குகிறாள் முதல் மனைவி. தனது கணவனால் தம்பிடிக்கு லாபல் இல்லை. நடிகையால் தான் எல்லாம் கிடைக்கிறது என்பதைத் தெரிந்தே இதையெல்லாம் செய்கிறாள் முதல் மனைவி.

சிறுகதையின் தலைப்பு “நடிகை”. வாசகர்கள் தான் அனுமானிக்க வேண்டும் இரண்டு பேரில் யார் “நடிகை” என்று? தனது கணவனை முன்னிறுத்தி, இன்னொருத்தியை ஏமாற்றுபவள் நடிகையா? அல்லது திரையில் தோன்றி ஆக்டிங் கொடுப்பவள் நடிகையா?

திரைத்துறையைச் சார்ந்த, அல்லது நட்சத்திரங்களுடன் தொடர்புடைய மாந்தர்களைப் பற்றிய உளபூர்வமான நிகழ்வுகளை அணுகும் சில நல்ல கதைகளும் தமிழில் இருக்கத்தான் செய்கின்றன. அதற்கு, மேலுள்ள பட்டியலிலிருந்தே சில உதாரணக் கதைகளை நம்மால் காட்ட இயலும்.

‘ஸ்டுடியோ கதை’ - கு. ப. ரா: கதையின் மையப்பாத்திரமான ஸீதா - எம்.ஏ பாஸ் செய்தவள். படித்தவர்களும் பண்பானவர்களும் திரைத்துரைக்கு வந்தால் தான், அதிலுள்ள புரையோடிப்போயுள்ள பெண் அடக்குமுறைகள் ஒழியும் என்பதில் நம்பிக்கை கொண்டவள். அப்படி நடந்தால் பிற நடிகைகளுக்கும் மதிப்பு கிடைக்கும் என்று நினைக்கிறாள். டைரக்டர் கிருஷ்ணன் – பெயருக்கு ஏற்றார்போல லீலை செய்பவன். போலவே, “பார்வதி பரிணயம்” என்ற படத்தை உஷா தியேட்டர்ஸ் தயாரிக்க, கிருஷ்ணன் இயக்குகிறான். படத்திற்கான புதுமுக நடிகையைத் தேடும் பொழுது ஸீதா அகப்படுகிறாள். ஆதிகாலத்தில் ரவிக்கை ஏது? ஆகவே, “பார்வதி பரிணயம்” என்ற படத்தில் ஜாக்கட் இல்லாமல் மேலாக்கில் புடவையைச் சுற்றி ஒட்டியாணம் போட்ட மேக்கப் அவளுக்கு.

“பொடவைய மாராக்குல ரொம்ப டைட்டா சுத்திட்டு இருக்க நீ! அதக் கொஞ்சம் லூஸ் பண்ணிக்கோ!” என்று அங்கேஇங்கே கையை வைக்க முயல்கிறான் டைரக்டர்.

“எதுன்னாலும் எங்கிட்டே சொல்லுங்க. நான் கரெக்ட் பண்ணிக்கிறேன். டச் பண்ணாதிங்க. மேலும், இது பார்வதி கதாப்பாத்திரம். அதுக்கு இந்த மாதிரி இருக்கறது தான் சரியாக இருக்கும்.” என்பதுபோல சீறுகிறாள் நடிகை ஸீதா.

“எனக்கு நீ டைரக்ஷன் சொல்லிக் கொடுக்குறியா?” என்று சொல்லி, ஒட்டியானத்தை லூஸ் செய்து மாராக்கைத் தளரவிடச் சொல்கிறான் டைரக்டர். ஓரளவிற்கு மேல் பொருக்க முடியாமல், ஒட்டியானத்தை முழுவதுமாகக் கழட்டி கையில் வைத்துக் கொண்டிருக்கிறாள் நடிகை. டைரக்டர் அவளிடம் சென்று பேச முயல்கிறான். அப்பொழுது ஒட்டியானத்தை டைரக்டரின் முகத்தில் வீசி எறிகிறாள் புதுமுக நடிகை. டைரக்டர் கிருஷ்ணனின் முகத்தில் காயம் ஏற்படுகிறது. அங்கிருந்து திரும்பிப் பார்க்காமல் சென்றுவிடுகிறாள் அவள். ஸ்டுடியோவின் வாசலை நோக்கி அவள் செல்கையில்:

“ஸ்டுடியோவிற்கு எதற்கு வருகிறாள் இந்தப் பதிவிரதை? கூழுக்கும் ஆசை, மீசைக்கும் ஆசை” என்று டைரக்டரின் முகத்தைத் தடவிக்கொண்டு உதவி இயக்குனர் கேள்வி எழுப்புவதாகக் கதை முடியும்.

‘டூப்’ - விட்டல்ராவ் – கிருஷ்ணராஜ் என்ற உச்ச நடிகனுடைய சண்டைக் காட்சிகளில் டூப் போடுகிறான் காசி. ஓர் அபாயகரமான காட்சியில் நடித்தபோது காசிக்கு விபத்து நேர்கிறது. மயங்கிய நிலையில் அவனை ஆஸ்பிட்டலில் சேர்ப்பிக்கிறார்கள். அவனது இடதுகால் நீக்கப்படுகிறது. மருத்துவச் செலவு முழுவதையும் உச்ச நடிகன் கிருஷ்ணராஜே ஏற்கிறான்.

கிருஷ்ணராஜ் தெலுங்கு நடிகை திவ்யாவை திருமணம் செய்து கொண்டவன். நீண்டகாலம் கழித்துதான் இந்த விஷயமே காசிக்குத் தெரியும். திருமணத்திற்குப் பிறகு அவள் நடிப்புக்கு முழுக்குப் போட்டுவிட்டுக் குடும்பத்தைப் பார்த்துக் கொள்கிறாள். கிருஷ்ணராஜூக்கு வேறொரு குடும்பமும் இருக்கிறது. ஷூட்டிங் இல்லாத நாட்களில் காசி, கிருஷ்ணராஜின் வீட்டிலேயே தங்கிவிடுகிறான். டூப் போடவேண்டிய அவசியமில்லாத, வெளியூர் ஷூட்டிங்கிற்கு கிருஷ்ணராஜ் செல்லும்பொழுதும் நடிகையின் வீட்டிலேயே காசி இருக்கிறான். நடிகைக்கும் காசிக்கும் நட்பு ஏற்படுகிறது. இந்த விஷயம் கிருஷ்ணராஜூக்குத் தெரிந்து சந்தேகப்படுகிறான். அதன் பிறகுதான் டூப் போடும் காசிக்கு ஷூட்டிங்கின் போது விபத்து நேர்கிறது.

திவ்யாவின் தனிமைக்குக் காசி வடிகாலாக இருப்பதும், ஷூட்டிங்கில் காசிக்கு விபத்து நேர்வதையும் இழையாகக் கொண்ட ஐந்து பக்கச் சிறுகதை. கொஞ்சம் அசந்திருந்தாலும் கிளுகிளுபுக் கதையாக மாறியிருக்கக் கூடிய வாய்ப்பிருக்கும் கதை. ஆனால், விட்டல்ராவ் மனித மனங்களின் முரண்களை அருமையாக இந்தக் கதையில் வெளிப்படுத்தி இருப்பார்.

பாக்ஸ் ஆபீஸ் - பாலு சத்யா: நல்லதொரு மழைநாளில் துணை நடிகை மீனா ஷூட்டிங்கில் பங்கேற்கப் பழவந்தாங்கல் ரயில் நிலையத்திலிருந்து கோடம்பாக்கம் சென்று, அங்கிருந்து போரூருக்குச் செல்லப் பேருந்தைப் பிடித்து, ஷூட்டிங் நடக்கும் வீட்டிற்குக் கொஞ்சம் தாமதமாகப் போய்ச் சேருகிறாள். (கிண்டியில் இறங்கி போரூருக்குச் சென்றிருக்கலாமே! எதற்காகக் கோடம்பாக்கம் செல்லவேண்டும் என்ற சந்தேகம் சிறுகதையை வாசித்தபோது எழுந்தது. எனினும் நல்ல சிறுகதை.)

“வாம்மா மகாராணி... ஆச்சர்யமா இருக்குதே! ஹீரோயின் வரதுக்கு முன்னாடியே நீ வந்துட்ட போல இருக்குதே?” என்று தாமதமாக வந்த அவளை நோக்கி ஏளனக் கேள்விகள் பறக்கிறது. சிலர் அவளை உரசப் பார்கிறார்கள். தெரிந்த பெண்மணி உடல்நலம் விசாரிக்கிறாள். அன்றைய தினம் ஒரு பிணத்தைச் சுற்றி உட்கார்ந்து அழக் கூடியவர்களில் இந்தத் துணை நடிகையும் ஒருத்தி. ஹீரோயின் கதறியழ வேண்டிய சூட்டுக்குப் பல டேக்குகள் வாங்குகிறாள். மறுபடியும், மறுபடியும் காட்சியைப் படமாக்குகிறார்கள். இடையில் மீனாவுக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வருகிறது. ஓடிச் சென்று தொலைபேசியில் அழைத்தவர்களிடம் பேசுகிறாள். நைட் ஷிப்டிற்குச் சென்றிருந்த அவளுடைய புருஷன் ஐயப்பனுக்கு ஆக்சிடென்ட் ஆகியிருக்கிறது.

“உன் புருஷனுக்கு ஆக்ஸிடன்ட் ஆயிடுச்சி. ரொம்ப சீரியஸ். உடனே வா...” என்கிறார்கள்.

“இங்க பாதியில விட்டுட்டு வர முடியாது. சாயந்திரம் வந்திறேன்” என்று தொலைபேசியைத் துண்டிக்கிறாள் என்பதாகக் கதை முடியும். துணை நடிகையின் சிக்கல் மிகுந்த பணிச்சூழலை, தன்மையான முறையில் முன்வைக்கும் கதை. ரசிக்கும் படியாக பாலுசத்யா எழுதியிருப்பார்.

நடிகை மகள் – பிரமிள்: “ஏ” படங்களில் நடிக்கக் கூடிய புகழ்பெற்ற நடிகை, தனது மகளை நான்காம் வகுப்பில் சேர்க்க ஒரு பள்ளிக்கு அழைத்து வருகிறாள். போஸ்டர்களில் மட்டுமே இதுவரை அந்த நடிகையைப் பார்த்த ஆசிரியையின் மனவோட்டத்தைப் பிரமிள் இக்கதையில் சொல்லியிருப்பார். பிரமிளின் மொத்தத் தொகுப்பில் ஜனரஞ்சகக் கதையாகத் தன் “நடிகையின் மகள்” சிறுகதையை வைத்திருக்கிறார்கள். ஆபாச நடிகையை மோசமாகவெல்லாம் இக்கதையில் சித்தரிக்கவில்லை. எல்லோரைப் போலவும் ஆபாச நடிகையும் சமூகத்தில் ஓர் உறுப்பினர்தான். அவளது மகளை – குழந்தையின் விருப்பப்படி நல்ல பள்ளியில் படிக்க வைக்கும் உரிமை அந்த நடிகைக்கு இருக்கிறது. நடிகையோ, ஆபாச நடிகையோ – திரைத்துறையைச் சார்ந்தவர்களைப் பற்றிய சமூகத்தின் பார்வைக்கு இக்கதையும் ஓர் உதாரணம்.

ஒவ்வொரு கதையைப் பற்றியும் இப்படி நிறையவே சொல்லிக்கொண்டு போகலாம். எனினும் அவரவர் வாசகத் தளத்தில், அவரவர் தன்மையில் இக்கதைகளை அணுகி, அது சார்ந்த கருத்துக்களை முன்னெடுத்தால் இன்னும் சிறப்பாக இருக்கும். ஏனெனில் அசோகமித்ரனின் “புலிக்கலைஞன்” போலவே நம்மிடம் நிறைய ஆக்கங்கள் இருக்கின்றன. அக்கதைகளைப் பற்றிப் பேசவும் நாம் முன் வர வேண்டும். உதிரிக் கதைகளாக இருக்கும் வரை அதற்கான சாத்தியங்கள் பற்றிய சந்தேகமும் உடனே எழுகிறது.

“சினிமா சார்ந்த தரமான சிறுகதைகளைத் தொகுத்துப் புத்தகமாக வெளிக்கொண்டு வந்தால் என்ன?” என்ற யோசனையும் அடிமனதில் எழுகிறது. (வேறு யாரேனும் செய்வதற்கு முன் வந்தாலும் மகிழ்ச்சிதான்.) அடிப்படையில் நானொரு சோம்பேறி. அதனையும் மீறி இந்த யோசனை சாத்தியமானால் நன்றாகத் தான் இருக்கும். பார்க்கலாம் நடக்கிறதா என்று!.

“சினிமா நடிகைகளைப் பற்றி, நல்ல விதமாகச் சித்தரித்த ஒன்றிரண்டு படைப்புகளை இன்றைய கேணி சந்திப்பில் யாரேனும் பகிர்ந்துகொண்டால் மகிழ்ச்சியுடன் வீட்டிற்குச் செல்வேன்...” என்று ரோஹிணி ஆதங்கத்துடன் பேச்சினை நிறைவு செய்தபோது, “அரந்தை நாராயணன்” எழுதிய குறுநாவல்களை உடனே ஞாநி பகிர்ந்துகொண்டார்.

குங்குமம் தோழி இதழுக்காக நண்பரும், எழுத்தாளருமான பாலுசத்யா – நடிகை ரோஹினியின் பேச்சைப் பதிவு செய்ய - எனக்குப் பின்னிருக்கையில் அமர்ந்து நிகழ்வினை கவனித்துக் கொண்டிருந்தார். பாலுசத்யாவின் எல்லா சிறுகதைத் தொகுப்பையும் படித்துவிட்டு அதிலுள்ள ஒருசில கதைகளைப் பற்றி பாலுவுடன் நிறையவே பேசியதுண்டு. எனினும், எனினும் அன்றைய தினம் பாலுவின் “பாக்ஸ் ஆபீஸ்” எனக்கு ஞாபகம் வராமல் போனதேன்?

“ரசிகர்களின் (பார்வையாளர்களின்) மறதி கலைஞர்களின் சாபம்” என்ற வாசகம் தான் நினைவிற்கு வருகிறது. அந்த வகையில் நம்மால் சபிக்கப்பட்ட ஏராளமான படைப்பாளிகள் நம்மிடையே உண்டு. எளிய மனிதர்களால் இலக்கிய சங்கம விழாவையா எடுக்க முடியும்.! மீள் வாசிப்பின் மூலம், கடலின் மடியில் கேட்பாரற்றுக் கிடக்கும் முத்துக்களை எடுப்பதுபோல – மீள் வாசிப்பில் கவனமற்றுக் கிடக்கும் இதுபோன்ற கதைகளுக்கு கவனம் கொடுப்போமே. முயற்சி செய்யுங்கள்...! உங்களால் நிச்சயம் முடியும்.

குறிப்பு: நண்பர்களுக்குத் தெரிந்து, வேறு ஏதேனும் சினிமா சார்ந்த சிறுகதை ஆக்கங்கள் இருப்பின் கமென்ட் செய்யுங்கள். அவற்றையும் பதிவின் பட்டியலில் இணைத்து விடுகிறேன். நாவல்களாக இருப்பினும் தெரியப்படுத்துங்கள்.

பட்டுக்கோட்டை பிரபாகரன் எழுதிய “சிவா – சினிமா – விசு – ஃபோட்டோ”, புரட்சிக் கலைஞர் மூதறிஞர் கருணாநிதியின் “புரட்சிப் படம்” போன்ற க்ளிஷியே கதைகளாக இருப்பினும் தெரியப்படுத்தலாம். அவற்றையெல்லாம் வாசித்துவிட்டுத் தனியாக ஒரு பதிவினைக் கூட எழுதலாம்.

நன்றி.

Friday, June 20, 2014

நான் வயதுக்கு வந்தபோது

“அரச்ச சந்தனம்
மணக்கும் குங்குமம்
அழகு நெத்தியிலே...” – எனச் சின்னத்தம்பி பிரபு போல முகத்தில் சந்தானம் பூசிக்கொண்டு, வெகுளித்தனமாகக் கல்லூரிகளில் இரட்டை அர்த்தத்தில் பேசிக்கொண்டு திரிந்தபோது போது அம்பையைப் பொதுநூலகத்தில் வாசித்தது. கல்லூரி வயதிற்கே உரிய ஆர்வத்தில் சிறுகதையின் சில பகுதிகளை ஆர்வத்துடன் மீண்டும் மீண்டும் வாசித்ததுண்டு. நாள்பட நாள்படத் தான் ஒருசில விஷயங்களின் உண்மைத் தன்மை புரிகிறது. காலயந்திரம் நம்மை அலாக்காகத் தூக்கிக்கொண்டு வந்து வேறொரு தளத்தில் நிருத்தி இருப்பதையும் உணர முடிகிறது.


எழுத்தாளர் அம்பையுடன் இணையத்தில் பேசிக் கொண்டிருக்கையில் அவரது மூன்று கதைகள் ஞாபகத்திற்கு வந்தது. “வீட்டின் மூலையில் ஒரு சமையலறை” என்ற கதையைத் தான் பெரும்பாலும் வாசகர்கள் குறிப்பிட்டுப் பேசுவார்கள். சிறுகதைத் தொகுப்பின் தலைப்பாக அமைந்ததாலோ என்னவோ அக்கதை பரவலாகப் பேசப்படுகிறது. அந்தக் கதையும் கூட முக்கியமானக் கதைதான். எனினும், என்னுடைய நினைவின் அடுக்குகளில் “வெளிப்பாடு, புனர், சில மரணங்கள்” ஆகிய மூன்று கதைகள் தான் மேகத்தின் பின் ஒளிரும் மின்னலென மின்னி மறைகிறது. நேற்றைய தினம், பெருமாள் முருகனும் சில புத்தகங்களைப் படிக்குமாறு மின்னஞ்சல் செய்திருந்தார். அந்தப் பட்டியலிலிருந்த முதல் பெயர் அம்பை தான்.

க்ரியா பதிப்பகம் வெளியிட்ட அம்பையின் 11 சிறுகதைகள் அடங்கிய புத்தகத்தின் பக்கங்களைப் புரட்டிக் கொண்டிருந்தேன். (காலச்சுவடு அம்பையின் முழுத் தொகுப்பையும் வெளியிட்டுள்ளார்கள்.)

“வெளிப்பாடு” – தாமிரவருணி கரையோரத்திலுள்ள ஊருக்குப் பெண்களைப் பற்றி ரிப்போர்ட் எடுப்பதற்காக ஒருத்தி வருகிறாள். அந்தப் பயணத்தில் சந்திக்கும் இரண்டு பெண்களுடனான உரையாடலால் நகரும் கதை. அம்பையின் சிறுகதைகளில் மிகப்பிடித்த கதைகளில் இதுவும் ஒன்று. பொதுவில் குளிப்பதும், உடைமாற்றிக் கொள்வதும் குளத்திலும், ஆற்றிலும் குளிப்பவர்களுக்கு இயல்பான ஒன்று. புதிதாக வருபவளுக்கு அந்தப் பழக்கம் இல்லையே!. ஆற்றில் குளிக்குமாறு உடன் அழைத்து வந்தவன் சொல்கிறான்.

“ஐயோ! எனக்கு அங்கெல்லாம் குளிக்க வராது.”

“அய்ய! ஒண்ணுமில்லிங்க எத்தன பேரு குளிக்கிறாங்க பாருங்க.”

மார்பில் பாதித்துணி. மீதி, கல்லில் பட் பட். நீர் தெறித்தது. மஞ்சள் கன்னங்களும், பாதங்களும் ஈரத் தொடைகளும். ஈர முடி முதுகில். தலைப்பை வாயில் கவ்வி நொடியில் ரவிக்கை ஏறியது. மின்னல் மாதிரி இடையும், பின்பகுதியும் பளீரிட்ட பின், மந்திரம் போட்டதுபோல் புடவை இடுப்பில்.

முடியாது. அவளுக்கு நிறைய விஷயங்கள் இருந்தன அணிந்துகொள்ள. எளிமையானவை அல்ல. திறந்தவெளியில் அவிழ்க்கவும் போடவும். (பக்கம்: 2)

“தலைப்பை வாயில் கவ்வி நொடியில் ரவிக்கை ஏறியது.” - அவளொரு தொடர்கதை திரைப்படத்தில் நடிகை சுஜாதா புடவையின் முந்தானையை வாயில் கவ்வியபடி உள்ளாடை மாற்றும் சிறு காட்சியை எப்பொழுதாவது தொலைக்காட்சியில் பார்க்க நேர்ந்தால், எனக்கு அம்பையின் இந்த வரிகள் தான் ஞாபகத்திற்கு வரும். ரிப்போர்ட் எடுக்க வந்தவள் பொதுவில் குளிக்க முடியாது என்று சொல்லவும், ஒரு வீட்டின் சமையலறை மூலையில் ரிப்போர்ட் எடுக்க வந்தவள் குளிக்க நேர்கிறது. குளித்து முடித்து உடைமாற்றிக்கொள்ள சங்கடப்படுகிறாள். இனி அந்தப் பெண்ணின் குரலில் அம்பை:

“உள்ளாடைகளை எப்படி அணிவது என்று யோசித்தாள்.”

தோசை வெச்சுட்டு வாரேன் அவுகளுக்கு... சாப்பிடச் சாப்பிட வெக்கணும். இல்லாட்டா மூக்கு மேல கோவம் புசுக்குன்னு. ஒரு அறை வெச்சார்னா.” சிரித்தள். வெளியே விரைந்தாள் வாழை இலையுடன்.

வேகமாக உடைகளை அணிந்தாள். சரியாகத் துடைக்காத உடம்பில் ரவிக்கை சுலபமாக ஏறவில்லை. முழங்கை அருகே பிடித்தது.

இதுபோன்ற சின்னச் சின்ன நுட்பங்கள் அம்பையின் இச்சிறுகதையில் வெளிப்பட்டிருக்கும். கிராமத்துப் பெண்களின் மீதான ஆணாதிக்க வெளிப்பாடு, கிராமத்துப் பெண்களுடைய உளப்பூர்வமான நேசத்தின் வெளிப்பாடு, நகரத்து நாகரீகப் பெண்ணின் கூச்ச வெளிப்பாடு, கிராமக் கலாச்சார விருந்தோம்பலின் நெகிழவைக்கும் வெளிப்பாடு என பலநிலைகளில் இக்கதையைப் பொருத்திப் பார்க்க முடியும். கதையின் ஓரிடத்தில “தீட்டானால் குளிக்கும் இருட்குகை ஸ்நான அறையைக் காட்டினாள்” என்ற ஒற்றை வரியில் அம்பை கடந்து சென்றிருப்பார்.

தாமிரபரணி கிராமத்துப் பெண்கள் பொதுவன நீர்நிலையில் குளிப்பவர்கள். அவர்கள், மாதவிடாய் சமயத்தில் இயல்பு வாழ்க்கையின் மைய நீரோட்டத்திலிருந்து ஒதுக்கி வைக்கப்படுகிறார்கள். அவற்றையே இந்த ஒற்றை வரியில் கடந்து செல்கிறார் அம்பை. மாதவிடாய் சார்ந்த பதிவுகளை சமீபத்தில் மூன்று நாவல்களிலும், ஒரு மொழிபெயர்ப்புக் கவிதையிலும் படிக்க நேர்ந்தது. அவற்றைக் கிளறி விட்டன அம்பையின் வரிகள்.


முதலில் “மாதொருபாகன்” பற்றிப் பேச வேண்டும். குழந்தையில்லாத் தம்பதிகளான ‘காளி – பொன்னா’ ஆகியோரின் மன உளைச்சலையும், திருச்செங்கோடு அர்த்தநாரீஸ்வரர் கோவிலின் ‘அஜால்குஜால்’ திருவிழாவைப் பற்றியும் ஒருசேர முன்வைக்கும் பதிவு இந்நாவல். கூவாகம் திருவிழாவானது திருநங்கைகள் மற்றும் திருநம்பிகள் சார்ந்தது எனில், ‘மாதொருபாகன்’ இரவுநேரத் திருவிழா – திருமணமாகிப் பல ஆண்டுகள் தாய்மை அடையாத பெண்ணையும், மலைமேல் வீற்றிருக்கும் சாமியாக வேஷம் போட்டு, முகமெல்லாம் சந்தானம் பூசி மறைத்துக்கொண்டு, பரிச்சயமில்லாதப் பெண்களுடன் உடலுறவு கொள்ள வரும் ஆண்களையும் பற்றியது. சின்னத்தம்பி படத்தில் வரும் பிரபு கன்னத்தில் சந்தனம் பூசிக்கொண்டு ஆடுவதற்கும், ஊரிலுள்ள ஆண்களெல்லாம் இந்தத் திருவிவைச் சாக்கிட்டு முகம்முழுக்க சந்தம் பூசிக்கொண்டு விடியவிடிய காமக் களியாட்டம் ஆடுவதற்கும் நிறைய விதயாசங்கள் இருக்கிறது. இத்திருவிழாவின் சிறப்பே அதுதான். பதினான்கு நாள் திருவிழாவின் ஒருநாள் இரவு மட்டுமே இந்தச் சலுகை. இந்தக் கலாச்சாரச் சடங்கையும், குழந்தையில்லா தம்பதிகளின் மன உளைச்சலையும் ஒருசேர முன்வைக்கும் பதிவாகவும் கொள்ளலாம்.


“இந்த மாசமாவது தூரம் தள்ளிப் போகாதா? ஒரு புழு பூச்சி என் வயித்துல தங்காதா?” என்று பொன்னா இந்நாவலின் சில இடங்களில் ஏங்குவாள். பொன்னாவின் புலம்பலைக் கேட்கையில் பாவமாகத் தான் இருக்கும். ‘பாவாத்தா’ கண்ணைத் திறந்தாள் தானே!

’மாதொருபாகனின் முன்னட்டை வடிவமைப்பைப் பற்றி இங்கு பேசியே ஆகவேண்டும். டிசைனர் சந்தோஷ் – இந்தப் பாவியை என்ன செய்யலாம்? பளாரென கன்னத்தில் அறையலாமா?. அந்த அளவிற்கு மகிழ்வை உண்டாக்கக் கூடியவர். ஒரு தேர்ந்த வாசகன் டிசைனராக வரும்பொழுது, புத்தக முன்னட்டையை எவ்வளவு சிறப்பாக அர்த்தத்துடன் வடிவமைக்க முடியும் என்பதற்கு – சிஸ்டர் ஜெஸ்மி எழுதிய ‘ஆமென்’ சுயசரிதையின் தமிழ் மொழிபெயர்ப்பு, ஜே.பி. சாணக்யாவின் ‘முதல் தனிமை’, பெருமாள்முருகனின் ‘மாதொருபாகன்’ போன்ற புத்தகங்களின் முன்னட்டைகளை உதாரணமாகச் சொல்லலாம்.

ரத்தச் சிவப்பை ஆக்ரமித்த முன்னட்டையில் அர்த்தனாரியின் முண்டத்தை மாதொருபாகன் முகப்பட்டையில் வைத்திருப்பார் சந்தோஷ். அர்த்தனாரியின் முழு உருவத்தையும் வைத்திருக்கலாமே! எதற்குக் கழுத்தறுத்து வைக்கவேண்டும்? சடங்கு என்ற பெயரில் கடவுளின் கழுத்தை இம்மக்கள் அறுக்கிறார்கள் என்பதாலா?. “வறடன் – வறடி’, ‘மலடன் – மலடி’ என சக மனிதர்களின் ரத்தத்தைக் குடிக்கக் குழந்தையில்லாத் தம்பதிகளைக் கூறு போடுகிறார்களே அதனாலா?. புத்தக முன்னட்டையில் ஓடுவது யாருடைய ரத்தம்? கற்பம் தங்காத பெண்களின் மாதவிடாய் ரத்தமாகத் தான் எடுத்துக்கொள்ளத் தோன்றுகிறது. பொன்னாவும் அவர்களில் ஒருத்தி தானே!.

ஹிந்தி எழுத்தாளர் நிர்மல் வர்மாவின் ‘சிவப்புத் தகரக் கூரை’ – ஒரு சிறுமியின் வாழ்வை அவளது பயணத்தினூடே முன்வைப்பது. இந்நாவலின் கதை பின்வருமாறு முடிகிறது:

ரயில்வண்டி என் கண்களில் பட்டது. ஒரு பயங்கரமான வேதனை அலை என் உடலை உடைத்துக்கொண்டு வெளியேறியது. என்னுடைய கை தொடைகளுக்கு நடுவில் அந்த வலியைத் தேடத் தொடங்கியது. பிசுபிசுப்பான வெதுவெதுப்பான ரத்தம் தோய்ந்த ஒன்று பொங்கி வந்தது. என்னுடைய தொடைகளுக்கு நடுவிலிருந்து பெருகிய அது புழுதி படிந்த என் முழங்கால்களில் மாதுளைச் சாறு போலப் படியத் தொடங்கியது. புதர்களுக்குப் பின்னாலிருந்து யாரோ குசுகுசுத்தபடி சிரிப்பது போலிருந்தது. திடுக்கிட்டுப்போய் நான் என்னுடைய சிவந்த பிசுபிசுப்பான கைகளைப் புல்லில் துடைக்கத் தொடங்கினேன். அப்போதுதான் எனக்கு இந்தப் புற்களுக்கும் புதர்களுக்கும் நடுவில்தான் கின்னியின் ரத்தமும் சிந்தியிருக்கும் என்று எண்ணம் வந்தது. உடனே நான் சுரங்கத்திலிருந்து விலகி மேலே ஏறத் தொடங்கினேன். புற்களாலும் கற்களாலும் மூடப்பட்ட ஒற்றையடிப்பாதையில் தடுமாறி விழுந்து ஓடத் தொடங்கினேன்.

பிறகு எனக்கு அந்தப் பாறை கண்ணில் பட்டது. நான் நின்றேன். சட்டென்று நான் பாரமற்று இருப்பதுபோலவும் அனைத்திலிருந்தும் விடுபட்டவளாய்த் தூய்மையானவாளாய் உணர்ந்தேன். இதுவரையிலான எனது உலகம் எப்போதைக்குமாக மறைந்துபோய்விட்டது. அதன்மீது முளைத்தெழுந்திருக்கும் வசந்தத்தின் புற்களாலும் சகதியில் அழுக்குடன் உருகிக் கிடக்கும் பனியிலும் என்னுடைய ரத்தத்தை நான் கழுவிக்கொண்டேன். புல்லின் மீது நான் புரண்டுகொண்டிருந்தேன். அப்போது நான் நானாகி இருந்தேன். கடவுளை அடைந்து நான் அவனையும் கடந்துபோயிருந்தேன்.

(சிவப்புத் தகரக் கூரை – நிர்மல் வர்மா – பக்கம்: 268, காலச்சுவடு பதிப்பகம்)

கடந்த ஆண்டு வெளிவந்த ஸர்மிளா செய்யித்தின் “உம்மத்” நாவலிலும் ஒரு சிறு பகுதி வருகிறது. “பெண்குறியில் இருந்து திடீரென வெளிப்பட்ட இரத்தப் பெருக்கு கால்களுக்கிடையே வடியத் தொடங்கியது. இரண்டு தினங்களாக நிம்மதியிழந்து போயிருந்தாள். ஏதோ தீர்க்கவொண்ணாத நோயின் அறிகுறி என்கிற ஊர்ஜிதத்தில் நொய்ந்துபோனாள்”. (பக்கம்: 48)

யுவ புரஸ்கார் விருதுபெற்ற மலர்வதியின் ‘தூப்புக்காரி’ நாவலிலும் தூமைத்துணி அலசும் சில பகுதிகள் வரும். நாவலின் மொழிநடை சிறப்பாக இல்லாததால் தொடர்ந்து படிக்க முடியாமல் போனது. அவகாசம் எடுத்து, கடினப்பட்டாவது ஒரு மேய்ச்சல் பார்வையில் படித்து முடிக்க வேண்டும்.

சென்னையை விட்டு வெளியில் வசிக்கும் எழுத்தாள நண்பரொருவர் “இருபதாம் நூற்றாண்டின் தெலுங்குப் பெண் எழுத்தாளர்கள்” புத்தகத்தை வாங்கி அனுப்புமாறு கேட்டிருந்தார். சாகித்திய அகாதெமி வெளியிட்ட புத்தகம். நண்பருக்குக் கொரியர் செய்வதற்கு முன்பு ஓர் ஓட்டு ஓட்டிவிடலாம் என்று புரட்டத் துவங்கினேன். ஏராளமான எழுத்துப் பிழைகள் கண்ணில் பட்டன. போலவே, பக்கம்: 85-ல் ஒரு கவிதையும் காணக்கிடைத்தது.

நான் வயதுக்கு வந்தபோது – கே. கீதா

உடம்பு முழுவதும் ஓரிடத்தில்
உருண்டை கட்டியபோது
ஒரு அந்தரங்கமலை நிசப்தமாய்
வெடித்துச் சிதறும் போது
வலியை உள்ளங்கையில் தாங்கிக்கொள்ள
முயற்சிகள் மேற்கொண்டபடி...
திடீரென ஓர் அதிர்வு பீறிட்டது
என்னுள் நானே
திடமெனும் நான் திரவமாகி
மீண்டும் இறுகி
துண்டுகளானேன்
மாதத்திற்கொருமுறை வேறு வழியற்று
என்னை நான் வலியாய்
மாற்றிக்கொள்ள வேண்டி வந்து...
செத்து...
மேலே மிதக்காத காயத்திற்கு
‘பிளாஸ்டர்’ போடவியலாது
பக்க எலும்புகளை நொறுக்கி மாவாக்கவியலாது
முடங்கிக் கிடந்து மூழ்கிப்போக
முடிவெடுத்துள்ளேன்
முப்பத்தியாறு மணிநேரச் சோர்வை
அப்படியே அழுத்திக் கொண்டு
தவிர்க்கவியலாத் தீண்டாமையாய்
இருக்கவியலாது
நாகரிகத்துள் நான்கடி முன் நடந்து
தளர்ந்துபோனேன்... நீர்த்துப் போனேன்
ஓட்டமும் நடையுமாய்
பாதிவேலைகளை முடிக்கவியலாது
முதுகெலும்பை சம்மட்டியாலாவது
நீட்டித்துக் கொள்ள
இரும்புச் சங்கிலிகளாலாவது இம்சையை
கட்டிப் போடவேண்டுமென்றிருகிறது
மீண்டும் மீண்டும்
முப்பது நாட்களுக்கொருமுறை
மறுபிறவி எடுத்தபடி...
குடலை முறுக்கிப் பிழியும்
வலிமிகும் பொழுது
இப்பொழுது
- (நீலமேகாலு) ‘நீலமேகங்கள்’ 1993

துரியோதனிடமும், சகுனியிடமும் விளையாட்டில் தோற்று பஞ்சபாண்டவர்கள் சூதர்களாக மறைந்து வாழ்கிறார்கள். விராடநாட்டு அரசனுக்குப் பணியாளாக வேலைக்குச் சேர்கிறான் யுதிர்ஷ்டன். விராட தேசத்துப் பட்டமகிஷியின் பணிப்பெண்ணாக திரௌபதி இருக்கிறாள். விராட அரசனும், யுதிர்ஷ்டிரனும் தாயம் விளையாடிக் கொண்டிருக்கையில், ஏனென்று தெரியாமல் கையில் கிடைத்தப் பொருளை எடுத்து யுதிர்ஷ்டிரனின் முகத்தில் மீது வீசி எறிகிறான் அரசன். அது தர்மனின் நெற்றியில் பட்டு ரத்தம் பீறிடுகிறது. பணிப்பெண்ணாக அரண்மனையில் வேலை செய்யும் திரௌபதி, அருகிலிருக்கும் கோப்பையை எடுத்துக்கொண்டு தர்மனிடம் ஓடுகிறாள். துளித்துளியாகச் சிந்தும் ரத்தத்தை அந்தக் கோப்பையில் ஏந்துகிறாள்.

விராட அரசன் கேட்கிறான்: “என்ன செய்கிறாய் பெண்ணே...!”

“இவரது ரத்தம் சிந்தும் பூமி புல்பூண்டு முளைக்காமல் நாசமாய்ப் போகும்...!” என்கிறாள் தர்மனைப் பார்த்து. விராடனுக்கு ஒன்றுமே புரியவில்லை. மறைந்து வாழும் தாங்கள் யாரென்று தெரிந்து கொள்ளாமல் இருக்க தர்மன் ஏதேதோ சொல்லிச் சமாளிக்கிறான்.

மாதவிலக்காகி ஒற்றையாடையில் கிடக்கிறாள் திரௌபதி. சூதில் அவளை வைத்து விளையாடி பாண்டவப் புத்திரன் இழந்தான் என்பது அதுவரையில் திரௌபதிக்குத் தெரியாது. தலைமுழுகி கூந்தலில் விரல்நுழைத்து ஈரத்தை உலர்த்திக் கொண்டிருக்கிறாள் அவள். வேறொரு கை கூந்தலைப் பற்றவும் யாரென்று கருங்கூந்தலை விளக்கிப் பார்க்கிறாள். துச்சாதனன் இதழில் புன்னகை தழுவ நின்றுகொண்டிருக்கிறான்...!

“நீசனே...! விலக்கான பெண்ணைத் தொடுவது பாவமில்லையா? என்னுடைய கணவர்களுக்குத் தெரிந்தாள் உன் சிரசு உடம்பில் இருக்காது...!” என்கிறாள்.

“ஆங்.. கிழிச்சானுங்க... அந்த அடிமை நாய்கள் மண்டியிட்டுக் கிடக்கிறார்கள். நீயும் அடிமையானாய். மகாராணி என்ற நினைப்பில் பேசாதே” என்றவாறு கூந்தலைப் பற்றித் தரதரவென சபைக்கு நடுவில் ஒற்றையாடையுடன் இழுத்துக்கொண்டு செல்கிறான் துச்சாதனன். திரௌபதியின் தூமை உதிரம் வழியெல்லாம் சிந்தியிருக்க நிறையவே வாய்ப்புகள் உண்டு. ஒற்றையாடையில் அவள் சிந்திய ரத்தமே இதிகாசத்தில், இலக்கியத்தில், படைப்பில் பதிவான முதல் மாதவிடாய்ப் பதிவாக இருக்க வேண்டும். அதன் தொடர்ச்சியாகத் தான் மேலுள்ள பதிவுகளைப் பார்கிறேன். இதில் நிர்மல் வர்மாவும், பெருமாள் முருகனும் ஆண்கள் என்பது குறிப்பிடத்தக்கது. பெண்களின் பிரச்னையை ஆண்கள் பேசக்கூடாதா என்ன?

இந்த காலத்துச் சிறுமிகள், சிறுவயதிலேயே பெரிய மனுஷி ஆகிவிடுகிறார்கள். சிக்கலான விஷயம் தான். எனக்குத் தெரிந்த “ஆறாவது, ஏழாவது” படிக்கும் இரண்டு சிறுமிகள் சென்ற மாதத்தில் பூப்படைந்ததாகக் கூறினார்கள். பாவம் என்று நினைத்துக் கொண்டேன். உறவினர்களோ, “தனக்குத் தந்தன... தனக்குத் தந்தன... தனக்குத் தந்தனன...!” என்று ரெக்கார்ட் போட்டு விழாவையே சிறப்பாக முன்னெடுகிறார்கள். யாருக்கு...? பன்னிரண்டு வயது சிறுமிகளுக்கு...! ஆறுமாதங்களுக்கு முன்பு பெரம்பூரிலிருந்து பாரிமுனை நோக்கிச் சென்றுகொண்டிருந்தேன். காதணி விழாவுக்குக் கவர்னர் ராசைய்யா சிறப்பு விருந்தினராக வருகைத் தருவதாகத் தட்டி வைத்திருந்தார்கள். இதெல்லாம் நம்முடைய கலாச்சாரத்தின் ஒரு பகுதி. மஞ்சள் நீராடு விழாவும் அப்படித் தானே!

கடந்த புத்தகக் கண்காட்சியில் ‘திரு’ – அவனுடைய ஒன்பதாவது படிக்கும் தங்கையை அழைத்துக்கொண்டு வந்திருந்தான். காலச்சுவடு அரங்கிற்கு வந்தவன், “அண்ணா... இவளுக்கு ஏதாச்சும் புக்ஸ் எடுத்துக்கொடுங்க? உங்களைக் காமிக்கத் தான் அவளக் கூட்டிட்டு வந்தேன்...!” என்றான். சிறுவர்களுக்காகக் காலச்சுவடு வெளியிட்டிருந்த சில புத்தகங்களை எடுத்து அவளிடம் கொடுத்தேன். மறுபடியும் அரங்கிற்குள் சென்றவள் ஒரு புத்தகத்தை எடுத்துக்கொண்டு வந்து என்னிடம் நீட்டினாள். அது “வற்றும் ஏரியில் மீன்கள்” என்ற அம்பையின் சிறுகதைத் தொகுப்பு.

“இந்த வயசுல அம்பையைப் படிப்பாளான்னு தெரியலையேடா...!” என்றேன் திருவைப் பார்த்து.

“இல்ல... நான் எடுத்துக்குறேன்...” என்று கிளம்பிச் சென்றாள் அந்தச் சிறுமி.

இந்த காலத்துல தான் சின்ன வயசுலயே பெரிய மனுஷி ஆயிட்றாளுங்களே...! நாமென்ன சொல்ல...! இவர்கள் எல்லோரும் அம்பையை அவசியம் படிக்க வேண்டும். வாய்ப்பிருந்தால் “வெளிப்பாடு” சிறுகதையை நீங்களும் படித்துப் பாருங்கள். உங்களுக்கு அந்தக் கதை நிச்சயம் பிடிக்கும்.

1. வீட்டின் மூலையில் ஒரு சமையலறை - க்ரியா பதிப்பகம்
2. அம்பையின் முழுத்தொகுப்பு - காலச்சுவடு பதிப்பகம்
3. வற்றும் ஏரியின மீன்கள் - காலச்சுவடு பதிப்பகம்
4. தெலுங்குப் பெண் எழுத்தாளர்கள் - சாகித்ய அகாதெமி
5. தூப்புக்காரி - அனல் வெளியீடு
6. மாதொருபாகன் - காலச்சுவடு பதிப்பகம்
7. உம்மத் - காலச்சுவடு பதிப்பகம்

Wednesday, June 18, 2014

அல்குல் – அடல்ட்ஸ் ஒன்லீ

“ஒரு அல்குல்லுக்காக அலஞ்ச இல்ல... உன்னோட ஒடம்பு பூரவும் ஆயிரம் அல்குல் முளைக்கட்டும்” என்று இந்திரனைச் சபிக்கிறார் ரிஷி கவுதமர். ஆனாலும் திருந்துகிறார்களா இந்தக் கடவுளர்கள்? 

அந்தப் பாலியல் தொழிலாளி முந்திய நாள் இரவில் தேவையின் பொருட்டு சரக்கடித்திருக்க வேண்டும். எத்தனை கஸ்டமர்களைப் பார்த்திருப்பாளோ என்னவோ!. போதையும் அசதியும் சேர்த்து அவளை ஆழ்ந்த தூக்கத்திற்கு இட்டுச் சென்றிருக்க வேண்டும். மதியப்பொழுதில் தான் போதை தெளிந்து, தள்ளாடியவாறு துயில் கலைகிறாள். ஒருவேளை முழிப்பு நேரமே மதியமாகக் கூட இருக்கலாம். அவளது வாழ்க்கை நமக்குப் பரிச்சியமா என்ன?

மதியப் பொழுதிலிருந்து அந்நாள் அவளுக்குத் துவங்கிவிடுகிறது. நிமிடங்களும் ஓடுகிறது. சூரியன் சாயும் நேரம் குளிக்கத் துவங்குகிறாள். மஞ்சள் தேய்த்துக் குளித்து, பவுடர் பூசிக்கொண்டு சாலையில் இறங்கி ஒயிலாக நடக்கிறாள். எதிர்படும் மனிதர்களை தமக்கே உரித்தான முறையில் குசலம் விசாரிக்கிறாள். இருள் கவிழத் துவங்குகிறது. தொழில் செய்யும் மறைவான இடம் நோக்கிச் செல்கிறாள். இந்தப் பாலியல் தொழிலாளி - நண்பர் லஷ்மி சரவணகுமாரின் “கடவுளும், மூத்திரச் சந்தும், பட்டுக் கௌபீகணமும்” என்ற சிறுகதையில் வரும் பாத்திரம்.

இவளிடம் உடலுறவு கொள்ள பூமிக்கு திடீர் விசிட் அடித்த கடவுள் ஆசைப்படுகிறான். கடவுள் அந்தப் பெண்ணிடம் துணிந்து சென்று ஆசையை வெளிப்படுத்துகிறான்: “உன்ன எனக்குப் புடிச்சிருக்குது...!”

வந்திருப்பது கஸ்டமர் என்ற அளவிலேயே அந்தப் பாலியல் தொழிலாளி பார்க்கிறாள்: “அதுக்கு இன்னா இப்போ?”

“வரியா?” என்பது போல கடவுள் கேட்க, “துட்டு இருக்குதா?” என்பது போல பவுடர் பூசிய வாசனைப் பெண் கேட்கிறாள்.

“நான் கடவுள்... எங்கிட்டயே காசு கேக்குறியே?” என்கிறார் கடவுள்.

“யாரா இருந்தா எனக்கென்ன? துட்ட எடு... அப்புறம் மேட்டர் பத்திப் பேசு” என்கிறாள் கட் ஆண்டு ரைட்டாக அவள்.

“அவசரத்துல வந்ததுனால காச எடுக்க மறந்துட்டேன்!” என்கிறார் கடவுள்.

“இந்தக் கதையே எனக்கு வேண்டாம்...!” என்கிறாள் அவள்.

அந்தப் பெண்ணுடன் காமத்தை அனுபவிக்க வேண்டும் என்ற ஆவலில் கடவுள் தனக்கே உண்டான சித்து வேலையைக் காண்பிக்கிறார். “இங்க பாரு... நெசமாத் தான் சொல்றேன். நான் தான் கடவுள்” என தனது நான்கு கைகளையும் அவளுக்குக் காண்பிக்கிறார்.

“ஐயைய்ய... உனக்கு அதுவாச்சும் ஒண்ணா தான் இருக்குதா?. இல்ல, ரெண்டு மூணு இருக்குதா?” என்று கேட்கிறாள்.

கடவுளும் சாத்தானும் கஸ்டமர்களாக வந்துசெல்லும் சிறுகதையின் இந்தச் சிறு பகுதி கவனத்துடன் அணுகவேண்டிய ஒன்று. ஏனெனில் புராணக் கதைகளில் ஒருவன் இருக்கிறான். அவனது சிக்கல் இதுவரைத் தீராத ஒன்று. ஒன்றல்ல ரெண்டல்ல ஆயிரக்கணக்கில் இருக்கிறது. கேள்விப்பட்டதில்லையா?

“இந்திரனுக்கு ஆயிரம் கண்கள்” என்று நம்மவர்கள் சொல்லக் கேட்டதில்லையா? உண்மையில் அவையாவும் அல்குல் என்ற அபூர்வ வஸ்து. மேற்கொண்டு படியுங்கள் உங்களுக்கே புரியும்.

புதுமைப்பித்தன் கொண்டாடப் படக்கூடிய தமிழ் சிறுகதை எழுத்தாளர். ராமாயணத்தில் வரும் “அகல்யை – கௌதம” முனியின் உபகதையை வைத்து ஊழியனில் (ஆகஸ்ட் 1934) வெளிவந்த “அகல்யை” மற்றும் கலைமகள் இதழில் வெளிவந்த (1943) “சாப விமோசனம்” ஆகிய இரண்டு சிறுகதைகள் எழுதியிருக்கிறார்.

அகல்யை சிறுகதையை சிந்து நதியின் கரையோரத்தில் நடப்பதாக புதுமைப்பித்தன் சித்தரிக்கிறார். முனி பத்தினியும், முனிவனும் ஒன்றாகத் தான் குளிக்கச் செல்வார்கள் போல. குடிசைக்கு வெளியில் முனிவன் ஏதோ தபஸ் செய்கிறான். நதிக்குச் செல்ல குடத்துடன் நிற்கிறாள் ‘அகல்யை’.

“எனக்கு வேலை இருக்கிறது நீ போ” என்கிறார் கவுதமர். குடத்தைத் தரையில் வைத்துவிட்டு முனிவனை அனைத்து விடைபெறுகிராளாம் அகல்யை. அப்போது அவளது அதரங்கள் முனியின் முகத்தில் அழுந்துகிறதாம். புதுமைப்பித்தன் சொல்கிறான். முனி பத்தினியின் மீது மோகம் கொண்டு சித்து விளையாடுகிறான் இந்திரன். அதனைக் கண்டுபிடித்து விடுகிறான் கவுதமன்.

“பூமியில இருக்குற பொண்ணுங்கக்கிட்டக் கொஞ்சம் பார்த்து நடந்துக்கக் கூடாதா?” என்று இந்திரனிடம் சொல்லிவிட்டு, “நீ மட்டும் என்ன பண்ணுவ அகல்யை” என்பதுபோல சொல்லிவிட்டு ஒரு சாதுவாகவே கடந்து செல்கிறார் இந்தச் சிறுகதையில் கௌதமர். இது புதுமைப்பித்தனின் கற்பனை. கவுதமர் சாபம் கொடுப்பதாக இக்கதையில் புதுமைப்பித்தன் எழுதவில்லை. “இதுவும் கடந்து போகும்...” என்பது போல கதையை முடித்திருப்பார்.

“சாப விமோசனம்” – “சூரியன் காய்கிறது. பனி பெய்கிறது. மழை கொழிக்கிறது. தூசும் தும்பும் குருவியும் கோட்டானும் குந்துகின்றன; பறக்கின்றன. தன் நினைவற்ற தபஸ்வியாக – கல்லாக – கிடக்கிறாள்.” என்று சொல்லிச்செல்லும் புதுமைப்பித்தன், “சற்று தூரத்திலேயே ஒரு கறையான் புற்று. நிஷ்டையில் ஆழ்ந்து தன் நினைவகற்றித் தன் சோகத்தை மறந்து தவம் கிடக்கிறான் கோதமன். இயற்கை அவனையும் அபேதமாகத் தான் போஷிக்கிறது.” என்று சொல்லிச் செல்கிறார்.

உண்மையில் அகல்யை பாவம். அவள் ஒழுக்கமானவள் தான். இந்திரனும் ஒரு பெண்ணை ஆசைப்படுகிறான். அதற்காக எந்த விளிம்பிற்கும் செல்ல அவன் தயங்கவில்லை. எனினும் அகல்யை கல்லாக கவுதமன் சபிக்கிறான். இந்திரனுடைய உடல் பூராவும் ஆயிரம் அல்குல் முளைக்கச் சபிக்கிறான். அல்குல் என்பது தூய தமிழ்ச்சொல். பெண்களுடைய பிறப்புறுப்பின் தூய தமிழ்ச்சொல் அல்குல். சங்க இலக்கியத்தில் பெண்களின் பிறப்புறுப்பை இந்த வார்த்தையால் தான் குறிப்பிடுகிறார்கள்.

ராமரின் கால்பட்டு சாபத்தின் காரணமாகப் பாறையாக இருந்த அகலியை விமோசனம் அடைகிறாள். அதன் பின்னர் ராமன் – கைகேயியின் குறுக்கு புத்தியால் காடு செல்கிறான். உடன் சீதையும் செல்கிறாள். ராமன் காடு சென்று பதினான்கு ஆண்டுகள் ஆகிறது. ராம-சீதையைப் பார்க்கும் ஆவல் அகல்யைக்கு எழுகிறது. கங்கைக்கரையில் வசிக்கும் “அகல்யை” சரயு நதிக்கரைக்கும், பின்னர் அங்கிருந்து மிதிலைக்கும் செல்ல ஆசைப்படுகிறாள். ராமன் அங்குதானே வரப்போகிறான்.

சாபத்தில் பீடிக்கப்பட்ட போது குழந்தையாக இருந்த அவளது மகன் “சதாநந்தன்” வாலிபப் பருவத்தில் வளர்ந்து நிற்கிறான். குறித்த நாளுக்குள் ராமன் வரவில்லை எனில் தீவளர்த்து அதில் விழுந்து சாவேன் என்கிறான் பரதன். விதவையான கைகேயி இதைப் பற்றி அகல்யையிடம் முறையிடுகிறாள்.

ஒரு வழியாக அனுமன் பறந்து வந்து பரதனைக் காப்பாற்றுகிறான். ஆரவாரத்துடன் ராமனும், சீதையும் பரிவாரத்துடன் தனது குடிசைக்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கிறாள் அகல்யை. வரவேற்பு ஆரவாரம் ஓய்ந்ததும் அவர்கள் இருவரும் பரிவாரம் இன்றி கவுதமரைப் பார்க்க வருகிறார்கள்.

ராமனை அழைத்துக்கொண்டு கவுதமர் வெளியே உலாவதற்குச் செல்கிறார். அகல்யையும் சீதையும் தனியாகப் பேச வாய்ப்பு கிடைகிறது. “ராவணன் தூக்கிக்கொண்டு சென்றது, பிறகு இலங்கைக்கு அனுமனுடன் வந்து மீட்டது, அதன் பின் தீக்குளித்தது” என எல்லாவற்றையும் பகிர்ந்துகொள்கிறாள் சீதை. அகல்யை சீதை தீக்குளித்ததைக் கேட்டுத் துடிக்கிறாள்.

“உலகுக்கு நிரூபிக்க வேண்டாமா?” என்று கூறி, மெதுவாகச் சிரிக்கிறாள் சீதை.

“உள்ளத்துக்குத் தெரிந்தால் போதாதா? உண்மையை உலகுக்கு நிரூபிக்க முடியுமா?” என்கிறாள் அகலியை. வார்த்தை உருண்டது.

ராமன் வந்து சேர சீதை அவனுடன் புறப்பட்டுச் செல்கிறாள். சப விமோசனம் அடைந்ததிலிருந்தே அகல்யை மனத் தடுமாற்றத்துடன் தான் இருக்கிறாள். “குடிலுக்கு யார் வந்தாலும் கவுதம முனிவர் தவறான கண்ணோட்டத்துடன் பார்கிறாரோ?” என்ற சங்கடம் அவளுக்கு எழுகிறது. “தவறு செய்யாத தன்னுடைய துணைவிக்குத் தேவையில்லாமல் சாபம் கொடுத்து தண்டித்துவிட்டோமோ?” என்ற யோசனையால் கவுதமருக்கும் நிம்மதி இல்லை. பல கோணங்களிலிருந்து முனிவரும் சிந்தித்துப் பார்கிறார். ஒரு குழந்தை பிறந்தால் இந்தப் பிரச்சனை தீர்ந்துவிடும் என்று எதிர்பார்க்கிறார். குடிலின் உள்ளே நுழைகிறார் கௌதமர்.

அகலிகைக்கு பிரக்ஞை மருண்ட நிலை. மறுபடியும் இந்திர நாடகம், மறக்க வேண்டிய இந்திர நாடகம், மனத்திரையில் நடந்து கொண்டிருந்தது.

உள்ளே சென்ற கௌதமன் அவளைத் தழுவினான்.

கௌதனம் வடிவில் வந்த இந்திரனாகப் பட்டது அவளுக்கு. குழம்புகிறாள் அகல்யை. அவள் நெஞ்சு கல்லாய் இறுகியது. கௌதமன் கைகளுக்குள் சிக்கிக் கிடந்தது ஒரு கற்சிலை.

அகலிகை மீண்டும் கல்லானாள்.

மனச்சுமை மடிந்தது.

கைலயங்கிரியை நாடிச் சென்கிறான் கவுதமன். அவன் குதிகால்களில் விரக்தி வைரம் பாய்ந்து கிடந்தது. அவன் துறவியானான். – என்று முடிகிறது கதை.

(ஒரு நாள் கழிந்தது – காலச்சுவடு – பக்கம் 135)

சந்தேகப்படும் காவியத் தலைவனின் மனச் சிக்கலையும், சந்தேகத்திற்கு உள்ளான மனைவியின் ஆழமான உளைச்சலையும் இக்கதையில் வடித்திருப்பார் புதுமைப்பித்தன். அகல்யை மீண்டும் கல்லானாள். முனியாகிய தபஸ்வியின் விரக்திப் பயணம் மீண்டும் தொடர்கிறது. அவரது பயணத்தில் கண்டடையும் விக்கிரங்கள் ஒருவேளை உயிர்பெறும், மீண்டும் அவை கல்லாக மாறும். இந்த உருமாற்றம் காலம்தோறும் தொடரும் என்பதாகத் தான் புரிந்துகொள்ள முடிகிறது.

‘கல்லாக சமைந்து கிடக்க அகல்யை சாபம் வாங்கினாள்’ எனில் ‘ஆயிரம் அல்குல்களை (பெண் உறுப்பு) உடல் பூராவும் முளைக்கும்படி இந்திரன் சாபம் வாங்குகிறான்’. அகல்யயைப் பற்றி நிறையவே பேசுகிறோம். இந்திரனைப் பற்றிப் பேசுகிறோமா? - இந்த சூசகமான கேள்வியைக் “கெட்ட வார்த்தை பேசலாம்” என்ற கட்டுரையில் எழுப்புகிறார் பெருமாள்முருகன்.

“கெட்ட வார்த்தை பேசலாம்” தொகுப்பிலுள்ள பல கட்டுரைகள் செவ்விலக்கியங்களில் “அல்குல்” வார்த்தையின் பயன்பாடு குறித்தும், தொகுப்பாசிரியர்கள் இவ்வார்த்தையைக் கொச்சை வார்த்தையென பல இடங்களில் இருட்டடிப்பு செய்திருப்பதையும் குறித்து எழுதியிருக்கிறார் பெருமாள்முருகன். “அல்குல்” போன்றே பல வார்த்தைகளையும் எடுத்துக்கொண்டு ஒவ்வொரு கட்டுரையிலும் அலசியிருக்கிறார். இந்தக் கட்டுரைத் தொகுப்பைப் படித்ததும் மேற்கூறிய சிறுகதைகள் ஞாபகம் வந்தன.

“இந்திரனுக்கு ஆயிரம் கண்கள்” என்று சிறுவயது முதல் கேள்விப்பட்டதுண்டு. உண்மையில் அதன் உள்ளர்த்தம் என்ன என்பதை “கெட்ட வார்த்தை பேசலாம்” தொகுப்பைப் படித்துத் தான் புரிந்துகொண்டேன். நண்பர்களும் மேற்கூறிய படைப்புகளைப் படித்துவிட்டு தங்களது கருத்துக்களை முன்வைத்தால் மகிழ்வேன்.