
வெளியீடு: கங்கை புத்தக நிலையம்
19 -ஆம் நூற்றாண்டின் புகழ் பெற்ற நாவலாசிரியர் சார்லஸ் டிக்கன்ஸின் ஆலிவர் ட்விஸ்ட் (Oliver Twist) ஆங்கில இலக்கியத்தில் ஒரு முக்கியமானப் படைப்பு. The Pickwick Papers, The Life and Adventures of Nicholas Nickleby, The Old Curiosity Shop, Barnaby Rudge போன்ற இதர சில புகழ் பெற்ற படைப்புக்களையும் இவர் இயற்றியுள்ளார். பெரும்பாலும் இவரது படைப்புக்கள் சமூகப் பார்வையை அடிப்படையாகக் கொண்டது.
எனது பள்ளி நாட்களிலும், கல்லூரி நாட்களிலும் பாடப் புத்தகத்தில் அரைகுறையாக ஆலிவர் ட்விஸ்டைப் படித்த ஞாபகம். கடந்த சில நாட்களுக்கு முன், மித்ரா என்ற பெயரில் ராஜம் கிருஷ்ணன் அவர்களின் மொழி பெயர்ப்பில் படிக்க நேர்ந்தது. மறுவாசிப்பின் மூலம் விட்டதை பிடித்தத் திருப்தி எனக்கு.
லண்டனிலிருந்து 130 மைல்களுக்கு அப்பாலுள்ள ஊரில் ஆலிவரை பெற்றெடுக்கிறாள் திருமணமாகாதப் பெண். அவள் சிசுவை ஈன்றவுடன் மருத்துவச்சியிடம் ஏதோ சொல்லிவிட்டு ஜன்னிகண்டு இறக்கிறாள். தனது மூதாதையர் யார் என்று தெரியாமல் அனாதையாக வளர்கிறான் ஆலிவர் ட்விஸ்ட். சரியான சாப்பாடும், உடைகளும் இல்லாமல் கஷ்டப்படுகிறான். பிறகு வயதின் காரணமாக அங்கிருந்து மற்றொரு இடத்திற்கு அவனை அழைத்துச் செல்கிறார்கள்.
ஒருநாள் அவனுடைய சகாக்களில் ஒருவன் ஜீவிக்கத் தரும் காஞ்சி தனக்கு போதவில்லை, எனவே நம்மில் ஒருவர் அதிகமாக காஞ்சி தரும்படி நிர்வாகியைக் கேட்போம் என சொல்லுகிறான். யார் சென்று கேட்பது என்ற வினா வந்தவுடன் ஆலிவரை தேர்வு செய்கிறார்கள். ஆலிவரும் சென்று கேட்க அவனையும், உடன் நின்ற சிலரையும் தனிச் சிறையில் அடைக்கிறார்கள். அவனுடைய அந்த போக்கை செய்யக் கூடாத குற்றமாகக் கருதி அவனை விற்றுவிட முடிவு செய்கிறார்கள். அதன் படி அவனை விற்பது குறித்த அறிவிப்பு செய்கிறார்கள்.
அறிவிப்பைப் பார்த்து சவப்பெட்டி செய்யும் ஒருவன் ஆலிவரை அழைத்துச் செல்கிறான். அங்கு அவனுடைய மனைவியும், அவளுக்கு உதவி செய்பவளும் கொடுமைப் படுத்த வீட்டை விட்டு வெளியேறுகிறான். லண்டனுக்கு சென்றால் சுகமாக வாழலாமென்று பல மைல்கள் பயணம் செய்கிறான்.
எதிர்பாராத விதமாக பிக் பாக்கட் ஆசாமிகளிடம் மாட்டிக்கொண்டு அவர்களுடன் இருக்கவேண்டிய நிர்பந்தத்திற்கு ஆளாகிறான். திருட்டுக் கும்பலிடம் மாட்டிக்கொண்டு திண்டாடும் அவனுக்கு அங்கு சில நல்ல உறவுகள் கிடைக்கிறது. அதன் மூலம் அவன் தனது தாய் தந்தையரைப் பற்றி தெரிந்து கொள்கிறான். கடைசியில் அவன் தந்தையின் நண்பனே அவனை தத்துப் பிள்ளையாக எடுத்துக்கொள்கிறான்.
ஆலிவர் ட்விஸ்ட், சார்லஸ் டிக்கன்ஸின் சாகா வரம் பெற்ற படைப்புகளில் ஒன்று. இந்தப் புத்தகம் தி.நகர், சாரங்கபாணி தெருவிலுள்ள(வள்ளுவர் கோட்டம் அருகில்) திருமகள் புத்தக நிலையத்தில்(தாகம்) கிடைக்கிறது.
பி.கு: உறவுகளால் ஏமாற்றப்பட்டு ராஜம் கிருஷ்ணன் சென்னையை அடுத்துள்ள முதியோர் இல்லத்தில் பராமரிப்பின்றி தவிக்கிறார் என்று சமீபத்தில் கேள்விப்பட்டது துயரமாக இருக்கிறது.