Friday, October 30, 2009

ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்

ஆசிரியர்: ஜெயகாந்தன்
வெளியீடு: காலச்சுவடு
விலை: ரூபாய் 250

காலச்சுவடின் 'கிளாசிக் வரிசை'யில் வெளிவந்துள்ள புத்தகங்கள் அனைத்தையும் படித்துவிட வேண்டும் என்ற ஆசையின் உந்துதலில் முதலில் படிக்க ஆரம்பித்தது 'ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்'.

"தனது நாவல்களில் தனக்கு மிகவும் பிடித்தமானது என்று ​ஜெயகாந்தனாலும் அவரது நாவல்களில் ஆகச் சிறப்பானது என்று இலக்கிய விமர்சகர்களாலும் குறிப்பிடப்படுவது ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்" -என்ற புத்தகத்தின் பின்னட்டை வாசகம் ஆர்வத்தை மேலும் தூண்டியது.

நீண்ட நாட்களாக நான் படிக்க நினைத்தப் புத்தகம். ஆனால் தலைப்பில் 'ஓர் உலகம்' என்று தானே இருந்திருக்க வேண்டும். 'ஒரு உலகம்' எழுத்துப் பிழையாக இருக்குமோ என்று குழம்பியதுண்டு. ஜெயகாந்தன் முன்னுரையில் அதற்கு விளக்கம் கொடுத்திருக்கிறார். இருந்தாலும் கொஞ்சம் உறுத்தலாகவே இருக்கிறது.

மலையடிவாரத்தின் இயற்கை சூழலில், ஒரு கிராமத்துப் பாதையில் பயணிக்கும் லாரியில் இருந்து கதை ஆரம்பிக்கிறது. ஓட்டுநர் துரைக்கண்ணு, க்ளீனர் பாண்டு, ஆசிரியர் தேவராஜன் ஆகியோர் லாரியின் இயக்கத்தோடு நமக்கு அறிமுகமாகின்றனர்.

பட்டினத்து ஆசாமியான ஹென்றி அருகிலுள்ள சிற்றூரைத் தேடிக்கொண்டு செல்கிறான். இயற்கையின் அழகை அணு அணுவாக ரசித்தவாறே நடந்து செல்கிறான். லாரி வருவதைப் பார்த்து வண்டிக்கு வழிவிட்டு சாலையோரமாக விலகி நிற்கிறான். ஆனால் 'க்ளீனர் பாண்டு' வண்டியை நிறுத்தச் சொல்லி ஹென்றியை ஏற்றிக்கொள்கிறான். பேச்சினூடே ஹென்றி செல்ல வேண்டிய கிராமம் தேவராஜனின் ஊர் என்பது தெரியவருகிறது. அதிலிருந்தே தேவராஜனுக்கும், ஹென்றிக்கும் நட்பு மலர்கிறது.

ஹென்றியை அழைத்துச்சென்று தன்னுடைய கிராம வீட்டில் தங்க வைக்கிறான் தேவராஜன். பின்னர் ஹென்றியின் வளர்ப்புத் தந்தையும், தாயும் பற்றிய இறந்த காலத்தில் பயணித்து எதற்காக இந்த ஊருக்கு வருகிறான், அவன் வந்ததன் நோக்கம் நிறைவேறியதா என்பதாக நாவல் நிறைவு பெறுகிறது.

திண்ணைக்கென்று ஜெயகாந்தன் பிரத்தியேகமாக அளித்த பேட்டியில் இந்த நாவலைப் பற்றிய அவருடைய பார்வையை பின்வருமாறு தெரிவிக்கிறார்.

திண்ணை : இந்தப் பேட்டியின் அமைப்பு கேள்வி பதிலாக இருப்பினும், கேள்விக்குப் பதிலாக மட்டுமல்லாமல், நீங்கள் தொடர்ந்து அபிப்பிராயம் சொல்ல வேண்டுமென்றாலும் சொல்லலாம். முதன் முதலில் நான் கேட்கப் போகும் கேள்வி 'ஒரு மனிதன் ஒரு வீடு உலகம் ' பற்றியது. நான் எங்கள் நண்பர்களுடன் பேசிக் கொண்டிருக்கும் பொழுது, கிளாஸிக்குகள் பொதுவாகவே துன்பியல் வடிவில் தான் நிறைய எழுதப் பட்டிருக்கின்றன என்பது பற்றி விவாதித்திருக்கிறோம். உதாரணமாக மாக்பெத், போரும் அமைதியும், அன்னா கரீனினா, குற்றமும் தண்டனையும், கரமஸோவ் சகோதரர்கள் - இப்படி. மகிழ்ச்சியை, சந்தோஷத்தை அடிப்படையாய் வைத்து ஒரு கிளாஸிக் வர முடியுமா என்று எங்களுக்குள் விவாதங்கள் நடந்த படி யிருந்தன. அந்தச் சமயத்தில் 'ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் ' தொடராக வர ஆரம்பித்தது. மகிழ்ச்சி ததும்புவதாகவும், சந்தோஷத்தையும் மிகவும் கொண்டு, சாதாரண மக்களிடம் உள்ள சிறப்பையும் , தாம் சாதாரண மனிதர்களாக இருந்து கொண்டே அவர்கள் உன்னதத்தை அடைய முடியும் என்பதை நிரூபிக்கும் விதமாகவும் ஒரு மிகச் சிறந்த கிளாஸிக்-ஆக இந்தப் படைப்பு வெளிவந்தது. அதை எழுதும் போதும், வெளிவந்த போதும் உங்கள் மன நிலை என்ன ? நீங்கள் அதை எப்படி அணுகினீர்கள் ?

ஜெயகாந்தன் : நீங்கள் சொன்னது போல கிளாசிக்குகள் துன்பியலாய்த் தான் இருக்கும் என்பது முழு உண்மை அல்ல. இந்திய மொழியில் இது அவசியம் இல்லை. இன்னும் சொல்லப் போனால் இந்திய மரபுப்படி எந்த ஒரு கதையும் சோகத்திலே முடிவது கூடாது. தமிழ் மரபிலும், ராமாயணத்திலே கூட இறுதிக் காண்டத்தைத் தவிர்த்து பட்டாபிஷேகத்துடன் நிறுத்தி விடுவார்கள். முதலில் நான் எழுத ஆரம்பித்த போது, ஒரு நல்லவன் எப்படி மூடர்களிடம் சிக்கி அவதியுறுகிறான் என்று எழுதத் தோன்றியது.. ஆனால் , எழுதத் தொடங்கியவுடன், அதைவிடவும் அவன் நல்லவனாக இருப்பதால் எல்லாவற்றையும் எப்படி எல்லாவற்றையும் நல்லவனாகவே பார்க்கிறான், என்பதையும் எழுத எண்ணினேன். Negative aspect- சிறிதும் இல்லாமல் எழுத மனதில் தீர்மானித்துக் கொண்டேன். அவன் ஒரு யுனிவர்சல் மேன். கிராமத்திலே வாழ்கிறான். பரந்து பட்ட உலகத் தன்மை எப்படி ஒவ்வொரு கிராமத்திலும் குடி கொண்டிருக்கிறது என்பதை அவன் வழியாகச் சொல்வது தான் என் நோக்கம். அது ஒரு முடிந்த நாவல் அல்ல. அதன் முடிவு எப்படி இருக்கும் என்று தெரியாமலே அதை எழுதத் தொடங்கினேன். எனக்கு மனதில் மேன்மையான ரொம்ப மேன்மையான உணர்ச்சியும், அந்த உணர்ச்சியினால் நான் தான் ஹென்றி என்று உணர்வுஇ கொண்டேன். என் நண்பர்களிடம் இதைச் சொல்லி , எப்படி எழுதுவது என்று முடிவாக வில்லை என்றேன். நண்பர் குப்புசாமி நான் சொன்ன விதமாகவே எழுதலாமே என்றார். அப்பொழுது நாங்கள் ஒரு லாரியில் பிரயாணம் செய்து கொண்டிருந்தோம். மொத்தம் அந்த லாரியில் ஏழு பேர் இருந்தார்கள் என்ற வரியோடு அந்த நாவல் தொடங்கியது .முடிவற்ற நாவலாக எழுதிக்கொண்டே போவது தான் என் விருப்பம். ஆனால் பத்திரிகைக் காரர்களுக்கு இதை முடிக்க வேண்டும் என்று தோன்றி விட்டது. இது இன்னும் எத்தனை வாரம் வரும் என்று கேட்டார்கள். அடுத்த வாரமே முடித்து விட்டேன். அது முடித்த பிறகு நான் நிறைய எழுத வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருக்கிற விஷயங்கள் கூட மனதின் அடியாழத்துக்குப் போய் விட்டன. நீங்கள் கேட்டது : இந்த நாவல் எழுதும்போது என் மனநிலை பற்றி - மனிதர்களையும், கிராமத்தையும், இயற்கையையும் நேசிக்கிற ஒரு பறவை மாதிரி நான் அந்த காலத்தில் இருந்தேன் இந்தக் கதை என் உடம்பையே லேசாக்கி ,பறவை போல இருந்தது என் மனநிலை. ஆனால் பறந்து கொண்டே இருக்க முடியாதல்லவா ? காலூன்றி ஒரு இடத்தில் நிற்கத்தான் வேண்டியிருக்கிறது. ஆனால் இன்னும் கூட அதை மறுபடியும் தொடங்கணும். எழுத வேண்டும் என்று ஆர்வம் உண்டு. ஒரு காரியம் நிறைவேறுவதற்கு ஆர்வம் மட்டும் போதாது. வேறு சில புறச் சூழ்நிலைகளும் தேவையல்லவா ? அது வரலாம் வராமலும் போகலாம்.

தொடர்ந்து படிக்க இங்கு செல்லவும்: ஜெயகாந்தனின் நேர்முகம்...

அக்கம்மா, கிளியாம்பாள், மணியக்காரர், முதலியார், போஸ்ட் ஐயர், மண்ணாங்கட்டி, துரைக்கண்ணுவின் குழந்தைகள், மாமியார் மற்றும் மனைவி நவநீதம், டீக்கடை ஆசாமி, பைத்தியக்காரி என்று அனைவரின் கதாப்பாத்திரமும் கிராமிய மாந்தர்களைக் கண்முன் நிறுத்துகிறது.

இந்தப் புத்தகமெங்கும் வியாபித்திருப்பது வெகுளியான கிராமத்து மனிதர்களின் எளிமையான வாழ்க்கை. கிராமத்து வாழ்க்கையில் நாட்டமுள்ளவர்கள் அனுபவித்து ரசிக்கக் கூடிய கதை. புத்தகம் எல்லாக் கடைகளிலும் கிடைக்கிறது.

Book Details:
Oru manithan oru veedu oru ulagam,
jayaganthan published by Kalachuvadu Pathipagam.

Wednesday, October 14, 2009

கணிதத்தின் கதை

ஆசிரியர்: இரா.நடராசன்
வெளியீடு: பாரதி புத்தகாலயம்
விலை: 50/- ரூபாய்

சில புத்தங்கங்களைப் படிக்கும் போது நம்மையறியாமலே சில நபர்களின் முகங்கள் நம் கண்முன் வந்து போகும். 'கணிதத்தின் கதை' புத்தகத்தை வாங்கும்போதே 'சம்பத் சாரின்' முகம்தான் என் கண்களில் நிழலாடியது. பத்தாவது படிக்கும் போது என்னுடைய கணித ஆசிரியர் அவர். எனக்கு கணிதத்தின் மீது ஈர்ப்பு வந்ததே சம்பத் சாரின் மூலமாகத்தான். பின்நாளில் கல்லூரி வாழ்க்கையில் கணிதத்தை நான் முதற் பாடமாக எடுத்து மூக்கை உடைத்துக் கொண்டது வேறு விஷயம்.

எல்லா வருட மாணவர்களுக்கும் "டேய், பசங்களா நீங்க எங்க போனாலும் ஏதாவது ஒரு வடிவத்தில் கணக்கு பாடம் உங்களை விடாம விரட்டிக் கொண்டே வரும். அதுகிட்ட இருந்து நீங்க தப்பவே முடியாது. அதனால கஷ்டம் பார்க்காம படிச்சுடுங்க. வாழ்க்கையில் நல்லா வந்துடலாம்." என்று கூறுவர். அவர் கூறிய வார்த்தைகளின் அர்த்தம் இந்தப் புத்தகத்தை வாசிக்கும் போதுதான் புரிய வந்தது.

பார்க்கப் போனால், சிறுவயது முதல் கணக்கு என்றாலே பலருக்கும் கசப்புதான். அதற்குக் காரணம் எண்கள் எப்படி தோன்றின, அதிலிருந்து படிப்படியாக கூட்டல், கழித்தல், பெருக்கல், வகுத்தல் என்பதெல்லாம் எதற்காக பழக்கத்தில் வந்தன, அதிலிருந்து 'கணக்கு' என்ற பிரம்மாண்ட துறையாக எப்படி அது வளர்ச்சி பெற்றது என்பதெல்லாம் நம்முடைய பள்ளி வாழ்க்கையில் கவனத்திற்குக் கொண்டு வரப்படுவதில்லை. கணிதத்திலுள்ள பல விஷயங்களையும் ஏன் படிக்கிறோம், எதற்கு படிக்கிறோம், எங்கெல்லாம் அது பயன்படும் என்ற அடிப்படை விஷயங்கள் கூட தெரிந்து கொள்ளாமல் கல்லூரி வரை படித்து முடிக்கிறோம்.

அந்தக் குறையை ஓரளவேனும் போக்கும்படி இருக்கிறது இந்தப் புத்தகம். கணிதத்தின் முழு வரலாற்றை கிரேக்கர், ஹிப்ரு, பாபிலோனியா முதல் ஜெர்மன், ஃபிரான்ஸ், இந்தியா வரை இன்றைய கணிதத் துறை வளர்ச்சியின் மொத்த வரலாற்றை சுவைபட தொகுத்திருக்கிறார் இரா.நடராசன்.

அல்ஜீப்ரா, டிபெரன்ஷியல் கால்குலஸ், ட்ரிக்நோமேத்ரி போன்றவைகளின் அன்றாடப் பயன்களையும் பட்டியலிட தவறவில்லை. இந்தப் புத்தகம் தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித்துறையின் முதற் பரிசை பெற்றுள்ளது குறிப்பிடப் படவேண்டிய ஒன்று.

கணித மாணவர்கள் மட்டுமின்றி கணிதத்தைப் பற்றிய ஆர்வமுள்ள அனைவருமே படிக்க வேண்டிய அருமையான நூல். இந்த நூலினைப் பற்றி எழுத்தாளர் தமிழ்மகனின் விமர்சனத்தைப் படிக்க இங்கு செல்லவும்: கணிதம் எனும் உண்மை உலகம்!

புத்தகம் கிடைக்குமிடத்தின் முகவரி:
பாரதி புத்தகாலயம்,
7, இளங்கோ சாலை
தேனாம்பேட்டை
சென்னை - 600018
இந்தியா

தொலைபேசி: (9144) 24332424, 24332924

நூலாசிரியரின் இன்னபிற படைப்புகளையும் பார்வையிட அவருடைய இணையத் தளத்திற்குச் செல்லவும்: www.eranatarasan.com

குறிப்பு: அட்டைப் படம் ஸ்னேகா பதிப்பகத்தின் வெளியீட்டில் உள்ளது. பாரதி புத்தகாலயம் முன் அட்டையை மாற்றியுள்ளார்கள்.

Saturday, October 3, 2009

தமிழ்ச் சிறுகதை பிறக்கிறது

ஆசிரியர்: சி.சு.செல்லப்பா
வெளியீடு: காலச்சுவடு பதிப்பகம்
விலை: 125 ரூபாய்

"செப்டம்பர் 13ம் தேதியன்று நடைபெற்ற 'சென்னைச் சிறுகதைப் பட்டறை'யில் கலந்து கொள்வதற்கு முன் சிறுகதைகள் பற்றிய தெளிவு ஏற்பட ஏதாவது புத்தகம் கிடைக்காதா என்று தேடிக் கொண்டிருந்தேன். அப்பொழுது பார்த்து காலச்சுவடு வெளியீட்டில் சி.சு.செல்லப்பா எழுதிய இந்தப் புத்தகம் கண்ணில்பட்டது.

1956-ல் சுதேசமித்திரன் தீபாவளி மலரில் சிறுகதை இலக்கியம் பற்றி சி.சு.செல்லப்பா ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார். அவருக்கு சாதகமாகவும், பாதகமாகவும் அந்தக் கட்டுரை சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. அதிலிருந்து சிறுகதை ஆசிரியர்களைப் பற்றியும், அவர்களுடைய படைப்புகளைப் பற்றியும் விமர்சனம் எழுதும் ஆவலை இந்த விவாதம் தூண்டிவிட்டிருக்கிறது.

அதன்படி, பின்னாளில் "எழுத்து" இலக்கிய இதழை சி.சு.செல்லப்பா சொந்தமாகத் தொடங்கிய போது - 1964 முதல் 1969 வரையிலான காலகட்டங்களில் போதிய இடைவெளியில் "தமிழ்ச் சிறுகதை" என்ற தலைப்பில் கட்டுரைகள் எழுதியிருக்கிறார். அதன் பிறகும் சிறுகதைகளைப் பற்றி எழுதிய பிரசுரமாகாத கட்டுரைகளையும் சேர்த்து ‘தமிழ்ச்சிறுகதை பிறக்கிறது’ என்ற புத்தகமாகக் கொண்டுவந்திருக்கிறார்.

"வ.வே.சு ஐயர், அ. மாதவையா, றாலி, பி. எஸ். ராமையா, கல்கி, எம்.எஸ். கல்யாணசுந்தரம், ந.பிச்சமூர்த்தி, கு.ப.ராஜகோபாலன், சி.சு.செல்லப்பா, சங்கு சுப்ரமண்யன், புதுமைப்பித்தன், பே.கோ. சுந்தரராஜன், ந.சிதம்பர சுப்ரமண்யன், தி.ஜ.ர, மௌனி, லா.ச.ரா" போன்ற தமிழின் முக்கியமான மூத்த படைப்பாளிகள் எழுதி 1920 முதல் 1939 வரையில் வெளிவந்த முத்திரைச் சிறுகதைகளை எடுத்துக் கொண்டு அவற்றின் உருவம், உள்ளடக்கம், கதை நுட்பம், வடிவ நேர்த்தி ஆகியவற்றை விவாதித்து, அவை பிற்கால சிறுகதை இலக்கியத்திற்கு அளித்த பங்களிப்பை இந்த விமர்சன நூலின் மூலம் முன் வைக்கிறார்.

இதன் முதற்பதிப்பு 1974-ல் வெளிவந்துள்ளது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு சில திருத்தங்களுடனும், பிற் சேர்க்கைகளுடனும் காலச்சுவடு பதிப்பகத்தார் 2007 ஆண்டு மீள் பிரசுரம் செய்துள்ளார்கள்.

சிறுகதை எழுத ஆசைப்படுபவர்களுக்கும், சிறுகதை இலக்கியத்தைப் புரிந்து கொள்ள நினைப்பவர்களுக்கும் இந்த விமர்சனப் புத்தகம் பயனுள்ள நூலாக இருக்கும். இந்நூல் காலச்சுவடு பதிப்பகத்தில் வங்கக் கிடைக்கிறது.

இந்த நூலினைப் பற்றி எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய கட்டுரை அவருடைய தளத்தில் படிக்கக் கிடைக்கிறது: முன்னோடியின் கண்கள்

Book Details: Tamil sirukathai pirakkirathu, C.S.Chellappa, Rs:125
Book Available @ Kalachuvadu pathipagam, Old no: 130, New no: 257, Triplicane high road, Chennai - 600 005. Ph:- 91-44-2844 1672, 4215 5972