Showing posts with label கட்டுரைகள். Show all posts
Showing posts with label கட்டுரைகள். Show all posts

Wednesday, June 18, 2014

அல்குல் – அடல்ட்ஸ் ஒன்லீ

“ஒரு அல்குல்லுக்காக அலஞ்ச இல்ல... உன்னோட ஒடம்பு பூரவும் ஆயிரம் அல்குல் முளைக்கட்டும்” என்று இந்திரனைச் சபிக்கிறார் ரிஷி கவுதமர். ஆனாலும் திருந்துகிறார்களா இந்தக் கடவுளர்கள்? 

அந்தப் பாலியல் தொழிலாளி முந்திய நாள் இரவில் தேவையின் பொருட்டு சரக்கடித்திருக்க வேண்டும். எத்தனை கஸ்டமர்களைப் பார்த்திருப்பாளோ என்னவோ!. போதையும் அசதியும் சேர்த்து அவளை ஆழ்ந்த தூக்கத்திற்கு இட்டுச் சென்றிருக்க வேண்டும். மதியப்பொழுதில் தான் போதை தெளிந்து, தள்ளாடியவாறு துயில் கலைகிறாள். ஒருவேளை முழிப்பு நேரமே மதியமாகக் கூட இருக்கலாம். அவளது வாழ்க்கை நமக்குப் பரிச்சியமா என்ன?

மதியப் பொழுதிலிருந்து அந்நாள் அவளுக்குத் துவங்கிவிடுகிறது. நிமிடங்களும் ஓடுகிறது. சூரியன் சாயும் நேரம் குளிக்கத் துவங்குகிறாள். மஞ்சள் தேய்த்துக் குளித்து, பவுடர் பூசிக்கொண்டு சாலையில் இறங்கி ஒயிலாக நடக்கிறாள். எதிர்படும் மனிதர்களை தமக்கே உரித்தான முறையில் குசலம் விசாரிக்கிறாள். இருள் கவிழத் துவங்குகிறது. தொழில் செய்யும் மறைவான இடம் நோக்கிச் செல்கிறாள். இந்தப் பாலியல் தொழிலாளி - நண்பர் லஷ்மி சரவணகுமாரின் “கடவுளும், மூத்திரச் சந்தும், பட்டுக் கௌபீகணமும்” என்ற சிறுகதையில் வரும் பாத்திரம்.

இவளிடம் உடலுறவு கொள்ள பூமிக்கு திடீர் விசிட் அடித்த கடவுள் ஆசைப்படுகிறான். கடவுள் அந்தப் பெண்ணிடம் துணிந்து சென்று ஆசையை வெளிப்படுத்துகிறான்: “உன்ன எனக்குப் புடிச்சிருக்குது...!”

வந்திருப்பது கஸ்டமர் என்ற அளவிலேயே அந்தப் பாலியல் தொழிலாளி பார்க்கிறாள்: “அதுக்கு இன்னா இப்போ?”

“வரியா?” என்பது போல கடவுள் கேட்க, “துட்டு இருக்குதா?” என்பது போல பவுடர் பூசிய வாசனைப் பெண் கேட்கிறாள்.

“நான் கடவுள்... எங்கிட்டயே காசு கேக்குறியே?” என்கிறார் கடவுள்.

“யாரா இருந்தா எனக்கென்ன? துட்ட எடு... அப்புறம் மேட்டர் பத்திப் பேசு” என்கிறாள் கட் ஆண்டு ரைட்டாக அவள்.

“அவசரத்துல வந்ததுனால காச எடுக்க மறந்துட்டேன்!” என்கிறார் கடவுள்.

“இந்தக் கதையே எனக்கு வேண்டாம்...!” என்கிறாள் அவள்.

அந்தப் பெண்ணுடன் காமத்தை அனுபவிக்க வேண்டும் என்ற ஆவலில் கடவுள் தனக்கே உண்டான சித்து வேலையைக் காண்பிக்கிறார். “இங்க பாரு... நெசமாத் தான் சொல்றேன். நான் தான் கடவுள்” என தனது நான்கு கைகளையும் அவளுக்குக் காண்பிக்கிறார்.

“ஐயைய்ய... உனக்கு அதுவாச்சும் ஒண்ணா தான் இருக்குதா?. இல்ல, ரெண்டு மூணு இருக்குதா?” என்று கேட்கிறாள்.

கடவுளும் சாத்தானும் கஸ்டமர்களாக வந்துசெல்லும் சிறுகதையின் இந்தச் சிறு பகுதி கவனத்துடன் அணுகவேண்டிய ஒன்று. ஏனெனில் புராணக் கதைகளில் ஒருவன் இருக்கிறான். அவனது சிக்கல் இதுவரைத் தீராத ஒன்று. ஒன்றல்ல ரெண்டல்ல ஆயிரக்கணக்கில் இருக்கிறது. கேள்விப்பட்டதில்லையா?

“இந்திரனுக்கு ஆயிரம் கண்கள்” என்று நம்மவர்கள் சொல்லக் கேட்டதில்லையா? உண்மையில் அவையாவும் அல்குல் என்ற அபூர்வ வஸ்து. மேற்கொண்டு படியுங்கள் உங்களுக்கே புரியும்.

புதுமைப்பித்தன் கொண்டாடப் படக்கூடிய தமிழ் சிறுகதை எழுத்தாளர். ராமாயணத்தில் வரும் “அகல்யை – கௌதம” முனியின் உபகதையை வைத்து ஊழியனில் (ஆகஸ்ட் 1934) வெளிவந்த “அகல்யை” மற்றும் கலைமகள் இதழில் வெளிவந்த (1943) “சாப விமோசனம்” ஆகிய இரண்டு சிறுகதைகள் எழுதியிருக்கிறார்.

அகல்யை சிறுகதையை சிந்து நதியின் கரையோரத்தில் நடப்பதாக புதுமைப்பித்தன் சித்தரிக்கிறார். முனி பத்தினியும், முனிவனும் ஒன்றாகத் தான் குளிக்கச் செல்வார்கள் போல. குடிசைக்கு வெளியில் முனிவன் ஏதோ தபஸ் செய்கிறான். நதிக்குச் செல்ல குடத்துடன் நிற்கிறாள் ‘அகல்யை’.

“எனக்கு வேலை இருக்கிறது நீ போ” என்கிறார் கவுதமர். குடத்தைத் தரையில் வைத்துவிட்டு முனிவனை அனைத்து விடைபெறுகிராளாம் அகல்யை. அப்போது அவளது அதரங்கள் முனியின் முகத்தில் அழுந்துகிறதாம். புதுமைப்பித்தன் சொல்கிறான். முனி பத்தினியின் மீது மோகம் கொண்டு சித்து விளையாடுகிறான் இந்திரன். அதனைக் கண்டுபிடித்து விடுகிறான் கவுதமன்.

“பூமியில இருக்குற பொண்ணுங்கக்கிட்டக் கொஞ்சம் பார்த்து நடந்துக்கக் கூடாதா?” என்று இந்திரனிடம் சொல்லிவிட்டு, “நீ மட்டும் என்ன பண்ணுவ அகல்யை” என்பதுபோல சொல்லிவிட்டு ஒரு சாதுவாகவே கடந்து செல்கிறார் இந்தச் சிறுகதையில் கௌதமர். இது புதுமைப்பித்தனின் கற்பனை. கவுதமர் சாபம் கொடுப்பதாக இக்கதையில் புதுமைப்பித்தன் எழுதவில்லை. “இதுவும் கடந்து போகும்...” என்பது போல கதையை முடித்திருப்பார்.

“சாப விமோசனம்” – “சூரியன் காய்கிறது. பனி பெய்கிறது. மழை கொழிக்கிறது. தூசும் தும்பும் குருவியும் கோட்டானும் குந்துகின்றன; பறக்கின்றன. தன் நினைவற்ற தபஸ்வியாக – கல்லாக – கிடக்கிறாள்.” என்று சொல்லிச்செல்லும் புதுமைப்பித்தன், “சற்று தூரத்திலேயே ஒரு கறையான் புற்று. நிஷ்டையில் ஆழ்ந்து தன் நினைவகற்றித் தன் சோகத்தை மறந்து தவம் கிடக்கிறான் கோதமன். இயற்கை அவனையும் அபேதமாகத் தான் போஷிக்கிறது.” என்று சொல்லிச் செல்கிறார்.

உண்மையில் அகல்யை பாவம். அவள் ஒழுக்கமானவள் தான். இந்திரனும் ஒரு பெண்ணை ஆசைப்படுகிறான். அதற்காக எந்த விளிம்பிற்கும் செல்ல அவன் தயங்கவில்லை. எனினும் அகல்யை கல்லாக கவுதமன் சபிக்கிறான். இந்திரனுடைய உடல் பூராவும் ஆயிரம் அல்குல் முளைக்கச் சபிக்கிறான். அல்குல் என்பது தூய தமிழ்ச்சொல். பெண்களுடைய பிறப்புறுப்பின் தூய தமிழ்ச்சொல் அல்குல். சங்க இலக்கியத்தில் பெண்களின் பிறப்புறுப்பை இந்த வார்த்தையால் தான் குறிப்பிடுகிறார்கள்.

ராமரின் கால்பட்டு சாபத்தின் காரணமாகப் பாறையாக இருந்த அகலியை விமோசனம் அடைகிறாள். அதன் பின்னர் ராமன் – கைகேயியின் குறுக்கு புத்தியால் காடு செல்கிறான். உடன் சீதையும் செல்கிறாள். ராமன் காடு சென்று பதினான்கு ஆண்டுகள் ஆகிறது. ராம-சீதையைப் பார்க்கும் ஆவல் அகல்யைக்கு எழுகிறது. கங்கைக்கரையில் வசிக்கும் “அகல்யை” சரயு நதிக்கரைக்கும், பின்னர் அங்கிருந்து மிதிலைக்கும் செல்ல ஆசைப்படுகிறாள். ராமன் அங்குதானே வரப்போகிறான்.

சாபத்தில் பீடிக்கப்பட்ட போது குழந்தையாக இருந்த அவளது மகன் “சதாநந்தன்” வாலிபப் பருவத்தில் வளர்ந்து நிற்கிறான். குறித்த நாளுக்குள் ராமன் வரவில்லை எனில் தீவளர்த்து அதில் விழுந்து சாவேன் என்கிறான் பரதன். விதவையான கைகேயி இதைப் பற்றி அகல்யையிடம் முறையிடுகிறாள்.

ஒரு வழியாக அனுமன் பறந்து வந்து பரதனைக் காப்பாற்றுகிறான். ஆரவாரத்துடன் ராமனும், சீதையும் பரிவாரத்துடன் தனது குடிசைக்கு வருவார்கள் என்று எதிர்பார்க்கிறாள் அகல்யை. வரவேற்பு ஆரவாரம் ஓய்ந்ததும் அவர்கள் இருவரும் பரிவாரம் இன்றி கவுதமரைப் பார்க்க வருகிறார்கள்.

ராமனை அழைத்துக்கொண்டு கவுதமர் வெளியே உலாவதற்குச் செல்கிறார். அகல்யையும் சீதையும் தனியாகப் பேச வாய்ப்பு கிடைகிறது. “ராவணன் தூக்கிக்கொண்டு சென்றது, பிறகு இலங்கைக்கு அனுமனுடன் வந்து மீட்டது, அதன் பின் தீக்குளித்தது” என எல்லாவற்றையும் பகிர்ந்துகொள்கிறாள் சீதை. அகல்யை சீதை தீக்குளித்ததைக் கேட்டுத் துடிக்கிறாள்.

“உலகுக்கு நிரூபிக்க வேண்டாமா?” என்று கூறி, மெதுவாகச் சிரிக்கிறாள் சீதை.

“உள்ளத்துக்குத் தெரிந்தால் போதாதா? உண்மையை உலகுக்கு நிரூபிக்க முடியுமா?” என்கிறாள் அகலியை. வார்த்தை உருண்டது.

ராமன் வந்து சேர சீதை அவனுடன் புறப்பட்டுச் செல்கிறாள். சப விமோசனம் அடைந்ததிலிருந்தே அகல்யை மனத் தடுமாற்றத்துடன் தான் இருக்கிறாள். “குடிலுக்கு யார் வந்தாலும் கவுதம முனிவர் தவறான கண்ணோட்டத்துடன் பார்கிறாரோ?” என்ற சங்கடம் அவளுக்கு எழுகிறது. “தவறு செய்யாத தன்னுடைய துணைவிக்குத் தேவையில்லாமல் சாபம் கொடுத்து தண்டித்துவிட்டோமோ?” என்ற யோசனையால் கவுதமருக்கும் நிம்மதி இல்லை. பல கோணங்களிலிருந்து முனிவரும் சிந்தித்துப் பார்கிறார். ஒரு குழந்தை பிறந்தால் இந்தப் பிரச்சனை தீர்ந்துவிடும் என்று எதிர்பார்க்கிறார். குடிலின் உள்ளே நுழைகிறார் கௌதமர்.

அகலிகைக்கு பிரக்ஞை மருண்ட நிலை. மறுபடியும் இந்திர நாடகம், மறக்க வேண்டிய இந்திர நாடகம், மனத்திரையில் நடந்து கொண்டிருந்தது.

உள்ளே சென்ற கௌதமன் அவளைத் தழுவினான்.

கௌதனம் வடிவில் வந்த இந்திரனாகப் பட்டது அவளுக்கு. குழம்புகிறாள் அகல்யை. அவள் நெஞ்சு கல்லாய் இறுகியது. கௌதமன் கைகளுக்குள் சிக்கிக் கிடந்தது ஒரு கற்சிலை.

அகலிகை மீண்டும் கல்லானாள்.

மனச்சுமை மடிந்தது.

கைலயங்கிரியை நாடிச் சென்கிறான் கவுதமன். அவன் குதிகால்களில் விரக்தி வைரம் பாய்ந்து கிடந்தது. அவன் துறவியானான். – என்று முடிகிறது கதை.

(ஒரு நாள் கழிந்தது – காலச்சுவடு – பக்கம் 135)

சந்தேகப்படும் காவியத் தலைவனின் மனச் சிக்கலையும், சந்தேகத்திற்கு உள்ளான மனைவியின் ஆழமான உளைச்சலையும் இக்கதையில் வடித்திருப்பார் புதுமைப்பித்தன். அகல்யை மீண்டும் கல்லானாள். முனியாகிய தபஸ்வியின் விரக்திப் பயணம் மீண்டும் தொடர்கிறது. அவரது பயணத்தில் கண்டடையும் விக்கிரங்கள் ஒருவேளை உயிர்பெறும், மீண்டும் அவை கல்லாக மாறும். இந்த உருமாற்றம் காலம்தோறும் தொடரும் என்பதாகத் தான் புரிந்துகொள்ள முடிகிறது.

‘கல்லாக சமைந்து கிடக்க அகல்யை சாபம் வாங்கினாள்’ எனில் ‘ஆயிரம் அல்குல்களை (பெண் உறுப்பு) உடல் பூராவும் முளைக்கும்படி இந்திரன் சாபம் வாங்குகிறான்’. அகல்யயைப் பற்றி நிறையவே பேசுகிறோம். இந்திரனைப் பற்றிப் பேசுகிறோமா? - இந்த சூசகமான கேள்வியைக் “கெட்ட வார்த்தை பேசலாம்” என்ற கட்டுரையில் எழுப்புகிறார் பெருமாள்முருகன்.

“கெட்ட வார்த்தை பேசலாம்” தொகுப்பிலுள்ள பல கட்டுரைகள் செவ்விலக்கியங்களில் “அல்குல்” வார்த்தையின் பயன்பாடு குறித்தும், தொகுப்பாசிரியர்கள் இவ்வார்த்தையைக் கொச்சை வார்த்தையென பல இடங்களில் இருட்டடிப்பு செய்திருப்பதையும் குறித்து எழுதியிருக்கிறார் பெருமாள்முருகன். “அல்குல்” போன்றே பல வார்த்தைகளையும் எடுத்துக்கொண்டு ஒவ்வொரு கட்டுரையிலும் அலசியிருக்கிறார். இந்தக் கட்டுரைத் தொகுப்பைப் படித்ததும் மேற்கூறிய சிறுகதைகள் ஞாபகம் வந்தன.

“இந்திரனுக்கு ஆயிரம் கண்கள்” என்று சிறுவயது முதல் கேள்விப்பட்டதுண்டு. உண்மையில் அதன் உள்ளர்த்தம் என்ன என்பதை “கெட்ட வார்த்தை பேசலாம்” தொகுப்பைப் படித்துத் தான் புரிந்துகொண்டேன். நண்பர்களும் மேற்கூறிய படைப்புகளைப் படித்துவிட்டு தங்களது கருத்துக்களை முன்வைத்தால் மகிழ்வேன்.

Friday, March 21, 2014

நீறுபூத்த நெருப்பு - சாதியும் நானும்

ஒருமுறை என்னுடைய பெரிய அக்காவுடன் பேசிக்கொண்டிருந்தேன். அவரவர் நட்பு வட்டத்தைப் பற்றிய பேச்சு வந்தது. “இங்க பாரு ஹேமா... எனக்கு தலித் பிரெண்ட்ஸ் தான் அதிகம்” என்றேன். “உன்ன எல்லாம் சுட்டுக் கொல்லனும்டா...” என்றவாறு ஹேமா கோவத்தை வெளிப்படுத்தினாள்.

“ஏன் அப்படி சொல்ற ஹேமா? எதுக்குக் கோவப்படுற...?” என்றேன்.

“எனக்கு ஃப்ரண்ட்ஸ் அதிகம்னு சொல்லு... ஃப்ரண்ட்ஸ் பத்தி பேசும் பொழுது அதென்ன தலித் பிரண்ட்ஸ்...” என்றாள்.

அப்பொழுது தான் எனக்கு உரைத்தது. சாதியை பல இடங்களில் விமர்சித்தாலும், நீர்பூத்த நெருப்பாக சாதியானது உள்ளுக்குள் இருந்திருக்கிறது. இந்த மனோபாவத்திற்கு நான் வளர்ந்த சூழலும் ஒரு காரணம் என்பதுதான் உண்மை.

சென்னையிலிருந்து கல்கத்தா செல்லும் தேசிய நெடுஞ்சாலையில், பஞ்ச பாண்டவர்களுக்காக அகதீஸ்வர முனிவர் யாகம் நடத்தியதாக வாய்மொழிக் கதையில் கூறப்படும் பஞ்ஜேஷ்டி தான் எனது பூர்வீகம். பாட்டனுக்கு முப்பாட்டனிலிருந்து இந்த ஊர் தான் எங்களது பூர்வீகம். பஞ்ஜெட்டி என்ற பெயரில் தற்போது அழைக்கப்படுகிறது. ஆனந்தவள்ளியும், அகதீஸ்வரனும் தம்பதியார்களாகக் காட்சியளிக்கும் சிவ தளம் அமைந்த ஊர். இப்போதும் கூட மொத்தத்தில் இரண்டு தெருக்கள் தான் உள்ளது. தலித்துகள் வசிக்கும் காலனி கொஞ்சம் பெரியது. அப்பொழுதெல்லாம் ஒரு தெருவில் மேல்சாதியினரும், மற்றொரு தெருவில் நாயுடுகளும், ரெட்டியார்களும், நாயக்கர்களும் வசிப்பார்கள். தலித்துகள் வசிக்கும் காலனி ஊரிலிருந்து சற்றே விலகி அமைந்திருக்கும். கோவிலின் பக்கத்தில் ஒரேயொரு ஐயர் வீடு. 

சிறுவனாக இருந்தபோது மேல்சாதியினர் வசித்தத் தெருவில் 20 வீடுகள் இருந்தால் அதிகம். பெரும்பாலும் கூரை வீடுகளும், ஒட்டு வீடுகளும் (நாட்டு ஓடு & சீமை ஓடு) தான் இருக்கும். வீட்டைச் சுற்றிலும் மரங்களும் புதர்களும் கூட இருக்கும். இரண்டு வீடுகள் மட்டுமே “மெத்தை வீடு” என்றழைக்கப்பட்ட மாடியுடன் கூடிய வீடுகள். ஒருவீடு அப்பாவின் முன்னோர்களுடையது. இன்னொன்று அம்மாவின் முன்னோர்களுடையது. இரண்டுமே எட்டுக்கட்டு வீடுகள். நான் வளர்ந்துகொண்டே வர, இரண்டு வீடுகளும் சிதிலமடைந்து தரைமட்டமாகின. பின்னர் குடிசை வீட்டில் வாழத் துவங்கினோம். எனினும் வீட்டு வேலைகளைச் செய்ய பக்கத்துத் தெருவிலிருந்து பெண்கள் வருவார்கள். தோட்ட வேலைகளைச் செய்ய காலனியிலிருந்து தலித் ஆண்கள் வருவார்கள். பெரும்பாலும் இவர்களை வீட்டிற்குள் விடமாட்டார்கள். தண்ணீரும், நீர்மோரும் வீட்டார் புழங்கும் டம்பளர்களில் கொடுத்தாலும், சாப்பாட்டினைப் பின்புறத் திண்ணையில் உட்கார வைத்து இலையில் தான் பெரும்பாலும் பரிமாறுவார்கள்.

“நான் வாழ வந்த போது பற பசங்க ஊருக்குள்ள வந்தா துண்ட எடுத்து மடியில கட்டிப்பாங்க. அப்பல்லாம் ஏது செருப்பு?. பின்னாடி செருப்பு வந்தது. ஊருக்குள்ள வரும்போது செருப்பைக் கையில எடுத்துக்குனு நடந்தது கூட நேத்து நடந்த மாதிரி தான் இருக்குது. இப்ப என்னடான்னா பறப் பசங்க கால்ல போட்டுட்டு இருக்குற செருப்ப எடுத்து மொகத்துக்கு நேரா காமிப்பாங்க போல. நம்மளையே கேள்வி கேக்குறாங்க. எல்லாம் கலி காலம்...” என்று காலஞ்சென்ற சின்னப் பாட்டி ஞானாம்பாள் எப்பொழுதாவது சொல்லுவதுண்டு.

ஒருமுறை பள்ளியிலிருந்து வந்ததும் முகம் கழுவுவதற்காகத் தொட்டிக்குச் சென்றேன். சூரப்பேட்டா கிழவி குடிசையின் பின் வாசலில் உட்கார்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தாள். நாங்கள் சமையலுக்குப் பயன்படுத்தும் சில்வர் கிண்ணத்திலேயே கிழவிக்குச் சாதம் கொடுத்திருந்தாள் அம்மா. எதோ பொறியலைக் கிண்ணத்தில் வைக்க வந்த சமயம் “ஏம்மா கொழம்பு வெக்கிற கிண்ணதுளையே அதுக்கும் சாப்பாடு போட்டுக் கொடுக்கற. வேற எதாச்சும் எலயில போட்டுக் கொடுக்க வேண்டியது தானே...” என்றேன்.

“இந்தக் கதைக்கெல்லாம் நீ வராத... எட்டி இடுப்பு மேலயே ஒதைப்பேன். ஒருத்தருக்கு எதிர்ல எப்படி பேசுறதுன்னு தெரிய வேணாம்... புத்தி கெட்ட நாய...” என்று அம்மா கோபமாகத் திட்டியது பசுமை மாறாமல் நினைவில் இருக்கிறது. அம்மாவிற்குச் சாதிப் பெருமை இல்லையென்றெல்லாம் சொல்ல முடியாது. ஆனால் இன்று வரையிலும் சாப்பாடு பரிமாறுவதில் மட்டும் யாருக்குமே குறை வைக்கமாட்டாள். வீட்டிற்குள் தான் விட மாட்டார்களே ஒழிய, நாங்கள் சாப்பிடும் அதே தட்டில்தான், அதே கிண்ணத்தில் தான் அவர்களுக்கும் உணவளிப்பாள். கிராம வீட்டில் வசித்தபோது, சில நாட்களில் மீன் விற்பனை செய்ய வரும் பெண்களும் அம்மாவிடம் சாப்பிட்டுவிட்டுச் சென்றதுண்டு. பொன்னேரிக்குக் குடி பெயர்ந்ததிலிருந்து வீட்டிற்கு யார் வந்தாலும், “உள்ள வாங்க... உட்காருங்க... எதாச்சும் சாப்பிடுங்க...” என்கிறாள். அன்றைய தினம், “மோலியார திட்டாதம்மா பாவம்...” என்று சூரப்பேட்டா கிழவி தான் அம்மாவைச் சமாதானப் படுத்தினாள்.

சாதிய நுட்பத்துடனும், தீண்டாமை நோக்குடனும் பிரித்தறிந்து சிறுவயதில் நடந்துகொண்டதில்லை என்றாலும், வழக்கத்தில் சாதியின் பெயரே “முதலியார்” என்பதால், “நம்ம மொதலாளிங்க, அவங்க வேலை செய்யிறவங்க” என்ற லாஜிக் தான் அப்படிப் பேசியதற்குக் காரணம். எனினும், சாதியத்தின் வீரியம் ஒரு கிரகணத்தின் நிழல் போல பள்ளிச் சிறுவனின் மனதில், அவனது வாழ்வியல் சூழல் நஞ்சினைப் போல ஏற்றியதாகத் தான் மேற்கூறிய சம்பவத்தை நினைவுகூர்கிறேன். இத்தனைக்கும் என்னுடைய சிறுவயது வாழ்க்கை மகாமகா தரித்திரத்தில் கழிந்தது. எனினும் சாதியாது பழமொழி வடிவில் தான் முதன் முதலில் எனக்கு அறிமுகமானது.

கிரிகெட் விளையாட நண்பர் ஒருவரின் வீட்டிற்குச் சிறுவயதில் செல்வதுண்டு. அவரது குடும்பத்தார் ரெட்டியார் (MBC) சமூகத்தைச் சேர்ந்தவர்கள். அவரது தாயார் கூட, சமையல் பணியாளராக பால்வாடியில் வேலை செய்து கொண்டிருந்தார். பள்ளி நாட்களோ அல்லது விடுமுறை நாட்களோ - விடிந்ததும் நண்பரது வீட்டு வாசலில் தான் சிறுவர் பட்டாளம் நிற்கும். எப்பொழுதாவது நண்பரின் தாயார் சாப்பிடுவதற்குச் சத்துணவு மாவு கொடுப்பார்கள். சில நேரங்களில் நீரில் கரைத்து தோசையாகவும் வார்த்துக் கொடுப்பார்கள். பிடிக்காத திண்பண்டமாக இருந்து சாப்பிடுவதற்கு மறுத்தால் “மோலியார் ஜம்பம் வெளக்கெண்ணெய்குக் கேடு...” என்று நக்கலடிப்பார்கள். இதெல்லாம் பன்னிரண்டு, பதிமூன்று வயதில் நடந்த கதை. தொடக்கப் பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளி முழுவதும் - பிறந்து வளர்ந்த கிராமத்திலேயே இருந்த அரசுப் பள்ளியில் படித்ததால் சாதியானது சான்றிதழ் வடிவில் அறிமுகமாகி இருக்கவில்லை. அரசுப் பள்ளியில் இதர சமூகத்தைச் சேர்ந்த பிள்ளைகளும் பெருவாரியாக படித்த காலமது.

“தலித்துகள், பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், உயர் சாதியைச் சேர்ந்த பிள்ளைகள்” என எல்லா வகுப்பைச் சேர்ந்தவர்களும் கலந்திருப்பார்கள். வாழ்ந்து கெட்ட ஜமீந்தாரி குடும்பத்தைச் சேர்ந்தவன் என்பதால், உடன் படித்த நண்பர்களின் பெற்றோர்கள் பெரும்பாலும் எங்களது முன்னோர்கள் விற்றுத் தீர்த்த நிலத்தில் வேலை செய்தவர்களாகத் தான் இருப்பார்கள். போலவே என்னுடைய பெற்றோர்களும், அவர்களது பெற்றோர்களும் கூட உடன் படித்த நண்பர்களாகத் தான் இருப்பார்கள். சிறியவர்களோ அல்லது பெரியவர்களோ நண்பர்களாகிய எங்களுக்குள் ஒரு பெரிய இடைவெளி இருக்கும். வீட்டிலிருந்து கல்லெறியும் தூரத்தில் தான் சிறுவயதில் படித்த பள்ளி இருந்தது. உடன் படித்த நண்பர்கள் ஒருநாளும் வீட்டிற்கு வந்ததில்லை. நானும் அழைத்ததில்லை. பள்ளிவிட்டு, வீட்டிற்குத் திரும்புகையிலும் தலித் மாணவர்கள் ஒருவரும் எங்கள் தெரு வழியாகக் கடந்து சென்றதில்லை.

உயர்நிலை வகுப்பிற்காக சோழவரம் சென்றபோதும் இதே நிலைதான். எனினும் வெளியூர் என்பதால் தலித்துகள், இதர சாதியினர் என்ற பேதமின்றி எல்லோருடனும் சமமாகப் பழக முடிந்தது. மதிய உணவைக் கூட பரிமாறிக் கொண்டதுண்டு. ஓரளவிற்கு பெற்றோர்களின் மறைமுகமான திரைமறைவு பொம்மலாட்ட சாதியக் கட்டுமானதிலிருந்தும், அதன் இருக்கதிலிருந்தும் வெளியில் வரமுடிந்தது. பின்னர் இளநிலை மற்றும் முதுநிலைக் கல்லூரி படித்தபோதும் நண்பர்களுக்குள் ஒரு பேதமும் இருக்காது. காஞ்சிபுரத்தில் கூட்டுறவு பட்டயப் பயிற்சி பயின்றபோது என்னுடைய அரைத் தோழனாக இருந்த பாக்கியராஜ் கிருத்துவ தலித். மற்றொருவர் வன்னார். இன்னொருவர் நத்தம் முதலியார். குடும்பத்தின் கட்டுப்பாடுகள் இன்றி மகிழ்வுடன் சுற்றித் திறந்த காலமது. போலவே, பள்ளி முதல் கல்லூரி வரையிலும் அரசு நிறுவனங்களில் தமிழ் வழியில் பயின்றதால் பெரும்பாலும் என்னுடைய நெருக்கமான நண்பர்கள் பலரும் ஒடுக்கப்பட சமூகத்தைச் சேர்ந்தவர்களாகத் தான் இருக்கிறார்கள். குடும்பத்துப் பெரியவர்களுடன் ஏதேனும் விதண்டாவாதம் செய்ய நேர்ந்தால் “பாட சுத்தன பறையா... உனக்கு பற சகவாசம் தானே அதிகம்...” என்று குறிப்பிட்டுத் திட்டுவார்கள். “ஜாதி கெட்ட நாய மூட்றா வாய...!” என்ற வசைச் சொற்களையும் சில நேரங்களில் கேட்டதுண்டு.

அக்கா ஜெயாவிற்கு அனைன்யா பிறந்திருந்த சமயமது. வீட்டு வாசலில் “அக்கா... அக்கா...” என்று யாரோ குரலெழுப்பி அழைக்கும் சப்தம். அம்மா ஏதோ வேலையாக இருந்ததால் வெளியில் சென்று பார்த்தேன். சிறுவயதில் உடன் படித்த செந்தில் நின்று கொண்டிருந்தான். எனது கிராமத்து காலனியைச் சேர்ந்த தலித் நண்பன்.

“எங்கடா இவ்வளவு தொலைவு... வா வா... உள்ள வந்து உட்காரு...” என்றேன்.

“உங்க அம்மா இல்லையா கிருஷ்ணா...?” என்று வினவினான். அதற்குள் அம்மாவே வாசலில் வந்து நின்றுகொண்டார்கள். “காசு வாங்கிட்டுப் போகலாம்னு வந்தேங்கா...” என்றான். அம்மாவும் உள்ளே சென்று கொஞ்சம் பணத்தை எடுத்து வந்துக்கொடுக்க, செந்தில் வாங்கிக்கொண்டு அவசர அவசரமாகக் கிளம்பிச் சென்றான். அனைன்யா பாப்பாவிற்குத் தொட்டில் செய்து கொடுத்ததற்கான பணத்தை வாங்கிக் கொண்டு செல்வதாக பிறகு அம்மா கூறினாள்.

“உள்ள வாடா... காஃபி சாப்பிட்றா...” என்று கூறியதை அவன் காதில் வாங்கிக்கொள்ளவே இல்லை. பணத்தைப் பெற்றுக்கொண்டு கிளம்பும் வரை அசௌகரியமாகவே உணர்ந்தான். அடடா, வந்தவனை சங்கடப் படுத்திவிட்டோமோ என்று கூடத் தோன்றியது.

சிறுவயதில் புதிய மனிதர்களைச் சந்திப்பதும், அவர்களுடன் பேசுவதும் சிரமமான விஷயமாக எனக்கிருந்தது. மிகவும் கூச்சப்படுவேன். இப்பொழுதெல்லாம் வாயைத் திறந்தாள் மூடுவதில்லை. நண்பர்களைச் சந்தித்து உரையாடும் போது சில புதிய நண்பர்கள் நாசூக்காக என்னிடம் கேட்பதுண்டு: “நீங்க பிராமின் தானே...!”

“ஏங்க... நாய்பீ கணக்கா கன்னங்கறேல்னு இருக்கேன்... என்னப் போயி பிராமினான்னு கேக்குறீங்களே...!” என்பேன். “இலிங்க... நீங்க ஆந்திரா பார்டர்ல இருக்கிங்களா... தெலுங்கு பிராமின்ஸ் நெறைய பேரு கருப்பா தான் இருப்பாங்க...!” என்பார்கள். “அதென்னமோங்க... எனக்குத் தெரியல... ஆனா, நான் தர லோக்கல்...” என்பேன்.

“என்னமோங்க பிரபு... உங்க பேச்சு, நடை, பாவனை”-ன்னு எல்லாம் பிராமின்ஸ் மாதிரி தான் இருக்குது என்பார்கள். சில ஆண்டுகளுக்கு முன்பு ஓய்வு பெற்ற அரசாங்க ஊழியர்களுடன் வட இந்திய, நேபாளச் சுற்றுளா சென்றிருந்தேன். சுற்றுலாவின் முடிவில் பல வயோதிக நண்பர்களும் “நீங்க ப்ராமினா?” என்று தான் வினவினார்கள். இந்தக் கேள்வியை எதிர்கொள்ளும் சமயங்களில் என்னுடைய பதில் எப்பொழுதுமே “அதெல்லாம் இல்லைங்க... நான் தர லோக்கல்...” என்பதாகத் தான் இருக்கும்.

“சாதி இல்லை, சாதி இல்லை” என்கிறோம். எல்லா இடங்களிலும் சாதி இருக்கிறது என்பதுதான் அழுத்தமான உண்மை. சென்னையிலிருந்து 50 கிலோ மீட்டர் தொலைவில் தான் பஞ்செட்டி கிராமம் இருக்கிறது. சென்னையுடன் போதிய தொடர்புகளும், இளம் தலைமுறை மக்களுக்கான தெளிவும் உள்ள முன்னேறிய கிராமம். எனினும் ஜாதிக்கு ஒரு சுடுகாடு இருக்கிறது. மேல்சாதியினருக்கும், தலித்துகளுக்குமான தொடர்பும் கூட நுட்பமான ஒடுக்குமுறைக்கு உட்பட்டதாகத் தான் இருக்கிறது. தனக்குக் கீழ் நிலையிலுள்ள சாதியை இழிவாகப் பார்க்கும் மனோபாவம் தான் எல்லோரது மனதிலும் இருக்கின்றது.

சமீபத்தில் ஒருநாள் மடிக் கணினியில் எதையோ எழுதிக் கொண்டிருந்தேன். வீட்டிற்கு வந்திருந்த ஒருவருடன் பேசியவாறு அம்மா பாத்திரங்களைச் சுத்தப் படுத்திக் கொண்டிருந்தாள். “ச்சே... காலனியில இருக்கறவங்க வீடு கூட கொஞ்சம் சுத்தமா இருக்கும் போல... இந்த வீடு ஏன் இப்பிடி காலனியார் வீடு மாதிரி கப்படிக்குதுன்னு தெரியல...” என்பதை உரையாடிக் கொண்டிருந்தவரிடம் மறுபடியும் மறுபடியும் கூறிக் கொண்டிருந்தாள்.

“அம்மா... நீ பேசுறது சரியில்ல... அதென்ன காலனி ஆளுங்கன்னு கம்பேர் பண்றது? தம்பிங்க யாராச்சும் வீட்டுக்கு வரும்போது இப்பிடி பேசுன உன் வாய ஒடச்சி கையில கொடுத்துடுவேன்...” என்றேன்.

“இப்ப இன்னா பேசிட்டேன்... உனக்கு அனுபவம் அதிகமா? எனக்கு அனுபவம் அதிகமா? உனக்கு இன்னா தெரியும் மொதல்ல... அதுவரைக்கும் வாய மூடு...” என்றார்கள் கோவத்துடன்.

“அப்படி பேசாதன்னா... பேசாத... அவ்வளோதான்...” என்றேன் நானும் உக்கிரத்துடன்.

“சரிடாப்பா... நான் எதுவும் பேசல நீயும் பேசாத...!” என்று வாதத்தை முடித்து வைத்தார்கள். அம்மா ஒன்றும் மோசமில்லை. தான் மேல்சாதியில் பிறந்தவள் என்று பெருமைபட்டுக் கொண்டாலும், சில நேரங்களில் இதுபோல ஒப்பிட்டுப் பேசினாலும் – சக மனிதர்களை வேண்டுமென்றே சங்கடப்படுத்தக் கூடியவள் அல்ல. ஒருவகையில் என்னுடைய தாயாரும் குடும்பத்து ஆண்களின் ஒடுக்குமுறைக்கும், சட்ட திட்டங்களுக்கும் கட்டுப்பட்டு வாழ்ந்தவள் தான். ஆகவே அம்மாவும் ஒடுக்கப்பட்டவள் தான். எனினும் சாதிப் பெருமிதம் அவளது மனதில் ஆழப் பதிந்துள்ளது. என்னுடைய அம்மா சென்ற தலைமுறையைச் சேர்ந்தவள். அவளது காலம் முடிந்துவிட்டது. அம்மாவை உருட்டி மிரட்டி என்ன ஆகப்போகிறது?

நீறுபூத்த நெருப்பாக நம் போன்ற படித்த, முற்போக்கான சமூகத்திடமே சாதியத்தின் கனல் கனன்று கொண்டிருக்கும்போது, சென்ற தலைமுறையின் பிற்போக்கானவர்களை குற்றம் சொல்லி என்ன ஆகிவிடப் போகிறது? 

Saturday, August 7, 2010

சொல்லில் அடங்காத வாழ்க்கை - ஷாஜி

வெளியீடு : உயிர்மை
ஆசிரியர்: ஷாஜி
தமிழில்: ஜெயமோகன்
விலை: 120 ரூபாய்

இசை, கேட்பவர்களின் உணர்வுகளுடன் நேரடியாகவோ, மறைமுகமாகவோ தொடர்பு கொள்ளக் கூடிய விஷம். உணர்ச்சிகளின் வடிகாலாகவும், காயங்களின் ஆறுதலாகவும் உயிரினங்களை அற்றுப்படுத்தக் கூடிய விஷயம். எனவே ஆத்மாவுடன் இணைந்து ஒரு படைப்பைக் கொடுக்கும் பொழுதுதான் கலைஞர்கள் பிரகாசிக்கிறார்கள். ஆகவேதான் ரசிகர்களும் அவர்களின் பின்னால் ஓடுகிறார்கள். இசை பல பரிமாணங்களில் உலகமெல்லாம் ரசிக்கப்படுகிறது. 'கிளாசிக், செமி கிளாசிக், லைட் மியூசிக், பாப்,ராக்' என்று தனித் தனியாக இசையைக் கொண்டாடும் ரசிகர்கள் எங்கும் இருக்கிறார்கள். ரசிகர்களின் இசை மீதான மயக்கத்தை ஏற்படுத்தக் கூடிய கலைஞர்கள் கால இடைவெளியில் தோன்றி கொண்டே இருக்கிறார்கள். சில உன்னதமான கலைஞர்கள் காலத்தால் மறக்கடிக்கப் பட்டிருக்கிறார்கள் என்பதும் மறுக்கமுடியாத உண்மை.

மகுடி ஊதும் பாம்பாட்டிகளும், நாதஸ்வரம் இசைக்கும் பூம்பூம் மாட்டுக்காரர்களும் தான் எனக்கான சிறுவயது ஆதர்சனங்கள். ஒரு கைப்பிடி அரிசிக்காக மகுடி இசையும், நாதஸ்வர இசையும் எங்கள் தெருக்களில் வழிந்தோடி இருக்கிறது. அவர்கள் ஒவ்வொருமுறை எங்கள் கிராமத்திற்கு வரும் பொழுதும் எங்களுக்கான பிரம்மிப்புகளை சுமந்துகொண்டே வந்திருக்கிறார்கள். அவர்களின் வருகைக்குப் பின்னாலுள்ள வலியினை, வறுமையினை, வாழ்க்கைப் பின்புலங்களை ஒருநாளும் அறிந்ததில்லை.

அடைகாக்கப்பட்ட முட்டையின் ஓட்டினை உடைத்துக் கொண்டு குஞ்சு வெளிவருவதைப் போல குழந்தைப் பருவத்திலிருந்து வெளிவந்ததும் என்னை பெரிதும் ஆக்ரமித்த விஷயம் திரையிசைதான். 'இசையமைப்பாளர்கள், பாடக பாடகிகள், பாடலாசிரியர், கருவிக் கலைஞர்கள்' என்று பிரித்தறியத் தெரியாமல் எல்லாவற்றையும் ஒன்றாக உள்வாங்கி சந்தோஷித்த ஆரம்ப நாட்கள் வானொலி முன்பும், தொலைக் காட்சி முன்புமே கழிந்திருக்கின்றன. கல்லூரி வாழ்க்கையில் தான் திரைப்படத்தின் பல்வேறு கூறுகளையும், திரையிசையின் பல்வேறு கூறுகளையும் அலசி ஆராய்ந்து பார்க்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. அதன் மூலம் பல பரிமாணங்களும், பங்களிப்பாளிகளின் திறமைகளும் தெரியவந்தது. மகுடி இசையின் மயக்கத்தைக் காட்டிலும் போதையான நாட்கள் அவை. குறிப்பாக பாடகர்கள் மீதும், கருவி இசைக் கலைஞர்கள் மீதும் எனக்கு இருந்த போதை அளவிட முடியாத ஒன்று. அவர்களில் ஒருவரையாவது நேரில் பார்க்க வேண்டும் என்று பல பெயர்களைக் குறித்து வைத்திருந்தேன். இறுதியில் நான் பார்த்த ஒரே பாடகி ஜானகி அம்மா மட்டுமே.

எனக்கு ஒருமுறை வாய்த்த அனுபவம் பன்னாட்டு இசை நிறுவனங்களில் வேலை செய்ததால் ஷாஜிக்கு பலமுறை கிடைத்திருக்கிறது. அந்த அனுபவங்களையும், அவருடைய சிறுவயதில் ரசித்த கலைஞர்களின் வாழ்க்கையையும் கட்டுரைகளாக்கி இருக்கிறார். சலில் சௌத்ரி, மெஹ்தி ஹசன், பாப் மார்லி, ஏ எம் ராஜா, ராஜ்குமார், மன்னா டே, ஃபிரெடி மெர்குரி, MSV, கீதா தத், S ஜானகி, போனிஎம், RK சேகர் என்று பலரைப் பற்றியும் ஆங்கிலத்தில் எழுதிய கட்டுரையை ஜெயமோகன் உயிர்மைக்காக தமிழில் மொழி பெயர்த்திருக்கிறார்.

இந்தக் கட்டுரைகள் அனைத்தும் ஷாஜியின் தமிழ் வலைப்பூவில் வாசிக்கக் கிடைக்கிறது. (http://musicshaji.blogspot.com)

ஷாஜியின் இளையராஜா பற்றிய கருத்துக்களுடன் கொஞ்சமும் ஒத்துவராதவன் நான். நாளை மதியம் (Aug 8 2010) கேணி சந்திப்பிற்கு செல்ல இருப்பதால் அவரைப் பற்றிய புரிதலுக்கு உதவியாக இருக்குமென்று வாசிக்க ஆரம்பித்தேன். வாழ்ந்து மறைந்த மேதைகளைப் பற்றிய மேலோட்டமான வரலாற்றுக் குறிப்புபோல் அமைந்துள்ள புத்தகம் என்பதால் டிக்க சுவாரஸ்யமாக இருக்கிறது.

Thursday, December 17, 2009

பல நேரங்களில் பல மனிதர்கள்

ஆசிரியர்: பாரதி மணி
வெளியீடு: உயிர்மை பதிப்பகம்
விலை: ரூபாய் 100
/-

மேடை நடிகராகவும், திரைப்
படக் கலைஞராகவும் நமக்கு நன்கு அறிமுகமான பாரதி மணி, நட்சத்திரப் பிரமுகர்களுடனான தனது அனுபவங்களைக் கட்டுரைகளாக எழுதி உயிர்மை, அமுதசுரபி, தீராநதி போன்ற இதழ்களில் வெளிவந்து வாசகர்களிடையே பரவலான கவனத்தைப் பெற்றது இலக்கிய நண்பர்கள் அறிந்ததே.

பல இதழ்களிலும் வெளிவந்த கட்டுரைகள் யாவும் தொகுக்கப்பட்டு 'பல நேரங்களில் பல மனிதர்கள்' என்ற புத்தகமாக வெளிவந்துள்ளது. சில நாட்களுக்கு முன்பு அந்தப் புத்தகத்தை மணியிடமே பரிசாக வாங்கும் சந்தர்ப்பம் நேர்ந்தது. புத்தகத்தைக் கையில் எடுத்தால் வாசித்து முடிக்காமல் கீழே வைக்க முடியாது. அந்த அளவிற்கு சுவாரஸ்யமான விஷயங்கள் அவருடைய கட்டுரைகளில் இருக்கிறது.

எனக்கு மிகவும் பிடித்தக் கட்டுரை 'நிகம்போத் காட்' பற்றியது. நான் இதுவரை வாசித்த அனுபவக் கட்டுரைகளில் என்னை மிகவும் வசீகரித்தக் கட்டுரைகளில் இதுவும் ஒன்று.

'செம்மீனும் தேசீய விருதுகளும்!' - இந்திய அரசால் வழங்கப்படும் சினிமாவிற்கான தேசிய விருது மலையாளப் படமான செம்மீனுக்கு எப்படி வழங்கப்பட்டது என்பதை விளக்கும் கட்டுரை. நீண்ட நாட்களுக்கு முன்பு இரண்டுக்கும் மேற்பட்ட தேசிய விருதுகளை வாங்கிய மலையாள இயக்குனர் TV சந்திரனின் நேர்முகத்தை குமுதம் தீராநதியில் படிக்க நேர்ந்தது. அதில் "சினிமா என்றால் என்னவென்றே தெரியாத ஒரு நாட்டில், சினிமாவைப் பற்றி ஒன்றுமே தெரியாத நடுவர்களால், சிறந்த படத்திற்கான தேசிய விருது பெறுவது ஒன்றும் பெரிய விஷயமே அல்ல..." என்று குறிப்பிட்டிருப்பார். இந்தக் கட்டுரையைப் படித்த பின்பு அது எவ்வளவு நிஜம் என்று புரிந்தது. (கட்டுரையின் முடிவில் அதற்க்கான தொடுப்பை படிப்பதற்குக் கொடுத்திருக்கிறேன்.)

'சிரிப்புத்தான் வருகுதையா' என்ற கட்டுரையில் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலருடனான தொடர்புகளையும் அரசாங்கம் அவர்களுக்குக் கொடுக்கும் சலுகைகளை அவர்கள் தவறாக பயன்படுத்தும் விதத்தை ஒளிவு மறைவில்லாமல் கூறியிருப்பது நம்மை யோசிக்கவைக்கிறது.

'நாதஸ்வரம் - என்னை மயக்கும் மகுடி' - கட்டுரையில் நாதஸ்வர வித்வான்கள் திருவாவடுதுறை ராஜரத்தினம் பிள்ளை, காருகுறிச்சி அருணாசலம் பற்றி எழுதிய ரசமான தகவல்கள் எங்கும் படிக்கக் கிடைக்காதது.

'சுப்புடு சில நினைவுகள்' - இசைவிமர்சகராக மட்டுமே பரிச்சயமான சுப்புடுவை அரசாங்க குமாஸ்தாவாக, ஓய்வுபெற்ற பிறகு மணியின் சிபாரிசில் வேலைக்கு சேர்ந்து அலுவலுக்கே வராமல் சம்பளத்தை வாங்கிக் கொண்டு சங்கடத்தில் ஆழ்த்தியது, அவரது வேலைகளில் நாணயமற்று நடந்து கொண்டது என சுப்புடுவின் வேறுபட்ட முகங்களை நம்முடன் பகிர்ந்துகொள்கிறார். கர்னாடக சங்கீத கச்சேரிக்கு சென்னை வரும் போது சுப்புடுவுடன் ஒரே அறையை பகிர்ந்துகொண்ட சுவாரஸ்யமான தகவல்களையும் இந்தக் கட்டுரையில் பகிந்துகொள்கிறார்.

'நான் பார்த்த ரோஜாவின் ராஜா' என்ற கட்டுரையில் பிரதமர் நேருவுடனான நிகழ்வுகளையும், 'அன்னை தெரஸா' - கட்டுரையில் ஒரே விமானத்தில் பக்கத்து இருக்கையில் அன்னை தெரசாவுடன் பயணம் செய்ததையும் அவரிடமிருந்து பைபிள் புத்தகம் மற்றும் ஜெபமாலையை அன்புப் பரிசாகப் பெற்றதை இன்று வரை பொக்கிஷமாக வைத்துப் பாதுகாப்பதை எழுதியிருப்பார்.

()

நீல. பத்மநாபன், அசோகமித்திரன், இந்திரா பார்த்தசாரதி, அ. முத்துலிங்கம், எஸ். ராமகிருஷ்ணன், பாவண்ணன், வாஸந்தி, ஜெய மோகன், அம்ஷன் குமார், லால்குடி G ஜெயராமன், நடிகர் சத்யராஜ், எடிட்டர் லெனின், டெல்லி கணேஷ், தியோடார் பாஸ்கர், சுகா போன்ற அவரது நெருங்கிய நண்பர்கள் அவரைப் பற்றி எழுதியதும் புத்தகத்தில் இருக்கிறது.

அவருடன் நேரில் உரையாடியபோது நண்பர்கள் எல்லோரும் பொய் சொல்லியிருக்கிறார்கள் என்றும், தனக்கு வந்த இரங்கல் கடிதங்களை உயிருடன் இருக்கும் போதே படித்து மகிழ்வது போல இருப்பதாகவும் நகைச்சுவையாகக் கூறினார். நம்முடன் பகிர்ந்து கொள்ள இன்னும் நிறைய விஷயங்கள் அவரிடம் இருக்கிறது.

அவற்றையெல்லாம் சொன்னால் டெல்லியில் அவருக்குக் கொஞ்சமும் பிடிக்காத இடமான திகார் ஜெயிலில் நிரந்தர இடம் கிடைக்கும் என்று நகைச்சுவையாகக் கூறுகிறார். அதனால் நேரம் கிடைக்கும் போது எழுதுங்கள் என்று கேட்கும் அவருடைய வாசகர்களில் நானும் ஒருவன்.

மணியின் தில்லி வாழ்க்கை, அதில் கிடைத்த பரந்துபட்ட அனுபவங்கள் என கட்டுரைகள் யாவும் தனிப்பட்ட மனிதரின் அனுபவமாக இல்லாமல் வரலாறையும், நாம் இழந்துவிட்ட விஷயங்களையும ஞாபகப்படுத்துவதே நூலின் சிறப்பாகப்படுகிறது.

புத்தகத்தில் மொத்தம் 18 கட்டுரைகள் இருக்கின்றது. அவற்றில் சில உயிர்மையில் படிக்கக் கிடைக்கிறது.

1. பங்களாதேஷ் நினைவுகள்: டி.ஆர்.ராஜகுமாரி இப்போது நடிக்கிறாரா?
2. அம்மா பரதேவதே! சுஜாதா எங்கே இருக்கார்?
3. செம்மீனும் தேசீய விருதுகளும்!
4. காந்திபாய் தேசாய்: தலைவர்களும் தனயர்களும்
5. ஒரு நீண்ட பயணம்
6. சிங் இஸ் கிங்

எல்லாவற்றிற்கும் மேல் பழகுவதற்கு இனிமையான நண்பர். எந்த வித பந்தாவும் இல்லாமல் அனைவரிடமும் இயல்பாகப் பழகக்கூடியவர். அவருடைய கட்டுரைகள் பிடித்திருந்தால் 94440 03332- என்ற இலக்கங்களுக்கு தொடர்பு கொண்டால் மேலும் பல சுவாரஸ்யமான தகவல்களைக் கூறுவார். அவருடனான எனது நேரடி அனுபவத்தை திட்டிவாசலில் (மணியுடன் சில மணித்துளிகள்) எழுதியிருக்கிறேன்.

அவருடைய புத்தக வாசிப்பு எனக்கு நல்ல அனுபவத்தைத் தந்திருந்தாலும், அவருடனான உரையாடல் மேலும் பல ரசமான அனுபவங்களைத் தந்தது. நீங்கள் நெருங்கினால் உங்களுக்கும் அந்த அனுபவம் கிடைக்கும் என்று நம்புகிறேன்.

Wednesday, October 14, 2009

கணிதத்தின் கதை

ஆசிரியர்: இரா.நடராசன்
வெளியீடு: பாரதி புத்தகாலயம்
விலை: 50/- ரூபாய்

சில புத்தங்கங்களைப் படிக்கும் போது நம்மையறியாமலே சில நபர்களின் முகங்கள் நம் கண்முன் வந்து போகும். 'கணிதத்தின் கதை' புத்தகத்தை வாங்கும்போதே 'சம்பத் சாரின்' முகம்தான் என் கண்களில் நிழலாடியது. பத்தாவது படிக்கும் போது என்னுடைய கணித ஆசிரியர் அவர். எனக்கு கணிதத்தின் மீது ஈர்ப்பு வந்ததே சம்பத் சாரின் மூலமாகத்தான். பின்நாளில் கல்லூரி வாழ்க்கையில் கணிதத்தை நான் முதற் பாடமாக எடுத்து மூக்கை உடைத்துக் கொண்டது வேறு விஷயம்.

எல்லா வருட மாணவர்களுக்கும் "டேய், பசங்களா நீங்க எங்க போனாலும் ஏதாவது ஒரு வடிவத்தில் கணக்கு பாடம் உங்களை விடாம விரட்டிக் கொண்டே வரும். அதுகிட்ட இருந்து நீங்க தப்பவே முடியாது. அதனால கஷ்டம் பார்க்காம படிச்சுடுங்க. வாழ்க்கையில் நல்லா வந்துடலாம்." என்று கூறுவர். அவர் கூறிய வார்த்தைகளின் அர்த்தம் இந்தப் புத்தகத்தை வாசிக்கும் போதுதான் புரிய வந்தது.

பார்க்கப் போனால், சிறுவயது முதல் கணக்கு என்றாலே பலருக்கும் கசப்புதான். அதற்குக் காரணம் எண்கள் எப்படி தோன்றின, அதிலிருந்து படிப்படியாக கூட்டல், கழித்தல், பெருக்கல், வகுத்தல் என்பதெல்லாம் எதற்காக பழக்கத்தில் வந்தன, அதிலிருந்து 'கணக்கு' என்ற பிரம்மாண்ட துறையாக எப்படி அது வளர்ச்சி பெற்றது என்பதெல்லாம் நம்முடைய பள்ளி வாழ்க்கையில் கவனத்திற்குக் கொண்டு வரப்படுவதில்லை. கணிதத்திலுள்ள பல விஷயங்களையும் ஏன் படிக்கிறோம், எதற்கு படிக்கிறோம், எங்கெல்லாம் அது பயன்படும் என்ற அடிப்படை விஷயங்கள் கூட தெரிந்து கொள்ளாமல் கல்லூரி வரை படித்து முடிக்கிறோம்.

அந்தக் குறையை ஓரளவேனும் போக்கும்படி இருக்கிறது இந்தப் புத்தகம். கணிதத்தின் முழு வரலாற்றை கிரேக்கர், ஹிப்ரு, பாபிலோனியா முதல் ஜெர்மன், ஃபிரான்ஸ், இந்தியா வரை இன்றைய கணிதத் துறை வளர்ச்சியின் மொத்த வரலாற்றை சுவைபட தொகுத்திருக்கிறார் இரா.நடராசன்.

அல்ஜீப்ரா, டிபெரன்ஷியல் கால்குலஸ், ட்ரிக்நோமேத்ரி போன்றவைகளின் அன்றாடப் பயன்களையும் பட்டியலிட தவறவில்லை. இந்தப் புத்தகம் தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித்துறையின் முதற் பரிசை பெற்றுள்ளது குறிப்பிடப் படவேண்டிய ஒன்று.

கணித மாணவர்கள் மட்டுமின்றி கணிதத்தைப் பற்றிய ஆர்வமுள்ள அனைவருமே படிக்க வேண்டிய அருமையான நூல். இந்த நூலினைப் பற்றி எழுத்தாளர் தமிழ்மகனின் விமர்சனத்தைப் படிக்க இங்கு செல்லவும்: கணிதம் எனும் உண்மை உலகம்!

புத்தகம் கிடைக்குமிடத்தின் முகவரி:
பாரதி புத்தகாலயம்,
7, இளங்கோ சாலை
தேனாம்பேட்டை
சென்னை - 600018
இந்தியா

தொலைபேசி: (9144) 24332424, 24332924

நூலாசிரியரின் இன்னபிற படைப்புகளையும் பார்வையிட அவருடைய இணையத் தளத்திற்குச் செல்லவும்: www.eranatarasan.com

குறிப்பு: அட்டைப் படம் ஸ்னேகா பதிப்பகத்தின் வெளியீட்டில் உள்ளது. பாரதி புத்தகாலயம் முன் அட்டையை மாற்றியுள்ளார்கள்.

Saturday, October 3, 2009

தமிழ்ச் சிறுகதை பிறக்கிறது

ஆசிரியர்: சி.சு.செல்லப்பா
வெளியீடு: காலச்சுவடு பதிப்பகம்
விலை: 125 ரூபாய்

"செப்டம்பர் 13ம் தேதியன்று நடைபெற்ற 'சென்னைச் சிறுகதைப் பட்டறை'யில் கலந்து கொள்வதற்கு முன் சிறுகதைகள் பற்றிய தெளிவு ஏற்பட ஏதாவது புத்தகம் கிடைக்காதா என்று தேடிக் கொண்டிருந்தேன். அப்பொழுது பார்த்து காலச்சுவடு வெளியீட்டில் சி.சு.செல்லப்பா எழுதிய இந்தப் புத்தகம் கண்ணில்பட்டது.

1956-ல் சுதேசமித்திரன் தீபாவளி மலரில் சிறுகதை இலக்கியம் பற்றி சி.சு.செல்லப்பா ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார். அவருக்கு சாதகமாகவும், பாதகமாகவும் அந்தக் கட்டுரை சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. அதிலிருந்து சிறுகதை ஆசிரியர்களைப் பற்றியும், அவர்களுடைய படைப்புகளைப் பற்றியும் விமர்சனம் எழுதும் ஆவலை இந்த விவாதம் தூண்டிவிட்டிருக்கிறது.

அதன்படி, பின்னாளில் "எழுத்து" இலக்கிய இதழை சி.சு.செல்லப்பா சொந்தமாகத் தொடங்கிய போது - 1964 முதல் 1969 வரையிலான காலகட்டங்களில் போதிய இடைவெளியில் "தமிழ்ச் சிறுகதை" என்ற தலைப்பில் கட்டுரைகள் எழுதியிருக்கிறார். அதன் பிறகும் சிறுகதைகளைப் பற்றி எழுதிய பிரசுரமாகாத கட்டுரைகளையும் சேர்த்து ‘தமிழ்ச்சிறுகதை பிறக்கிறது’ என்ற புத்தகமாகக் கொண்டுவந்திருக்கிறார்.

"வ.வே.சு ஐயர், அ. மாதவையா, றாலி, பி. எஸ். ராமையா, கல்கி, எம்.எஸ். கல்யாணசுந்தரம், ந.பிச்சமூர்த்தி, கு.ப.ராஜகோபாலன், சி.சு.செல்லப்பா, சங்கு சுப்ரமண்யன், புதுமைப்பித்தன், பே.கோ. சுந்தரராஜன், ந.சிதம்பர சுப்ரமண்யன், தி.ஜ.ர, மௌனி, லா.ச.ரா" போன்ற தமிழின் முக்கியமான மூத்த படைப்பாளிகள் எழுதி 1920 முதல் 1939 வரையில் வெளிவந்த முத்திரைச் சிறுகதைகளை எடுத்துக் கொண்டு அவற்றின் உருவம், உள்ளடக்கம், கதை நுட்பம், வடிவ நேர்த்தி ஆகியவற்றை விவாதித்து, அவை பிற்கால சிறுகதை இலக்கியத்திற்கு அளித்த பங்களிப்பை இந்த விமர்சன நூலின் மூலம் முன் வைக்கிறார்.

இதன் முதற்பதிப்பு 1974-ல் வெளிவந்துள்ளது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு சில திருத்தங்களுடனும், பிற் சேர்க்கைகளுடனும் காலச்சுவடு பதிப்பகத்தார் 2007 ஆண்டு மீள் பிரசுரம் செய்துள்ளார்கள்.

சிறுகதை எழுத ஆசைப்படுபவர்களுக்கும், சிறுகதை இலக்கியத்தைப் புரிந்து கொள்ள நினைப்பவர்களுக்கும் இந்த விமர்சனப் புத்தகம் பயனுள்ள நூலாக இருக்கும். இந்நூல் காலச்சுவடு பதிப்பகத்தில் வங்கக் கிடைக்கிறது.

இந்த நூலினைப் பற்றி எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய கட்டுரை அவருடைய தளத்தில் படிக்கக் கிடைக்கிறது: முன்னோடியின் கண்கள்

Book Details: Tamil sirukathai pirakkirathu, C.S.Chellappa, Rs:125
Book Available @ Kalachuvadu pathipagam, Old no: 130, New no: 257, Triplicane high road, Chennai - 600 005. Ph:- 91-44-2844 1672, 4215 5972

Thursday, August 20, 2009

கேள்விக்குறி

ஆசிரியர்: எஸ். ராமகிருஷ்ணன்
வெளியீடு: விகடன் பிரசுரம்
விலை: 45 ரூபாய்

சூரியன், சந்திரன், கடல் என ஒவ்வொன்றாக உலகத்தைப் படைத்த இறைவன் ஆறாம் நாள் ஆணைப் படைக்கிறான். ஆண் தனியாளாக தோட்டத்தில் சுற்றி அலைகிறான். "இவனுக்கு ஒரு துணையை ஏன் படைக்கக் கூடாது?" என்று கடவுள் யோசிக்கிறார். ஆணின் விலா எலும்பை எடுத்து அதிலிருந்து பெண்ணை படைக்கிறான். நிர்வாணிகளான ஆணும் பெண்ணும் கபடமில்லாமல் சந்தோஷமாகச் சுற்றித் திரிகிறார்கள்.

கடவுள் அவர்களிடம் "இந்தத் தோட்டத்திலிருந்து நீங்கள் எதை வேண்டுமானாலும் எடுத்து அனுபவியுங்கள். ஆனால் தோட்டத்தின் நடுவில் ஒரு ஆப்பிள் இருக்கிறது அதை மட்டும் எடுக்காதீர்கள்... புசிக்காதீர்கள்..." என்று கூறுகிறார். அவர்களும் சம்மதிக்கிறார்கள்.

சாத்தான் பாம்பின் வடிவில் அவர்களுக்கு ஆசை கட்டுகிறது. "ஆப்பிளை சாப்பிட்டால் நீங்களும் கடவுள் ஆகலாம். நல்லது கெட்டது எதுவென்று நீங்கள் தெரிந்து கொள்ளலாம்" என்று உபதேசம் செய்கிறது. சாத்தானின் பேச்சுக்கு மயங்கிய பெண் ஆப்பிளை சாப்பிடுகிறாள். ஆணுக்கும் கொடுத்து சாப்பிடச் சொல்கிறாள். அதன் பிறகு சுகமான நிர்வாணம் அவர்களுக்குக் கூச்சத்தை அளிக்கிறது. கூச்சத்தைப் போக்க ஓடி ஒளிந்துகொள்கிறார்கள். மென்மையான இறைவனின் வருகையைக் கண்டு பயப்படுகிறார்கள்.

சாத்தான் அவர்களை ஏமாற்றிவிட்டான். அதன் மூலம் ஆதமும், ஏவாளும் கடவுளுக்கு கொடுத்த வாக்குறுதியை மீறி ஏமாற்றிவிட்டார்கள்.

ஏமாற்றுவது தவறு என்று சாத்தானுக்கும், ஆதாமிற்கும், ஏவாளுக்கும் ஏன் தெரியவில்லை? இப்பொழுது என் எதிரில் வந்தால் இந்தக் கேள்விகளுக்கு அவர்களால் பதில் சொல்ல முடியுமா?... நிற்க.

நல்லது கெட்டதை யோசித்து அவர்களை நான் கேள்வி கேட்கிறேன் என்றால் அவர்கள் சாப்பிட்ட ஆப்பிளின் எச்சம் என்னிலும் உள்ளதா?

நான் மட்டுமா நீங்கள் கூட ஏதோ ஒரு விதத்தில் எத்தனை கேள்விகளைக் கேட்டு சக மனிதர்களைக் காயப்படுத்துகிறீர்கள். கீழுள்ள கேள்விகளில் ஏதேனும் ஒரு கேள்வியையேனும் நீங்கள் உபயோகப்படுத்தவில்லை என்று சொல்லுங்கள் பார்க்கலாம்.

1. ஏமாத்தறது தப்புன்னு ஏன் யாருக்குமே தோணமாட்டேங்குது?
2. உதவின்னு கேட்டா யாரு செய்யறா?
3. இவ்வளவு செய்யறேன்...ஆனாலும் என்னை யாரு மதிக்கிறா?
4. என்னை எதுக்கு படிக்க வச்சீங்க?
5. நெனச்சி நெனச்சி பேசினா எப்படி?
6. என்ன ஊரு இது... மனுஷன் வாழுவானா?
7. எதுக்கெடுத்தாலும் பொய்யா?
8. வாய்விட்டு எப்படி கேக்குறது?
9. உன்னால ஒரு வேலை சாப்பாடு போட முடியுமா?
10. வீட்டுல சும்மாவே இருந்தா எப்படி?
11. நான் அழகா இருக்கேனா?
12. எனக்குன்னு யாரு இருக்கா?
13. ஏன் இப்படி இருக்கீங்க?
14. எதுக்காக இவ்வளவு அவசரம்?
15. ஒரு ஆலாலே என்ன செய்ய முடியும்?

மேலுள்ள கேள்விகளில் ஏதேனும் ஒன்றை யாரேனும் உங்கள் மீதோ அல்லது நீங்கள் சக மனிதர்கள் மீதோ வீசி இருப்பீர்கள். ஆகவே ஒரு சில கேள்விகளை நாம் வாழ்கையில் சந்தித்துதான் ஆகவேண்டும். தவறுகளிலிருந்தோ அல்லது இயலாமையிலிருந்தோ சில கேள்விகள் எழுவது தவிர்க்க முடியாததே.

தவிர்க்க முடியாத அந்தக் கேள்விகளை உள்வாங்கி, தனது சொந்த அனுபவத்துடன் தொடர்புபடுத்தி ஆனந்த விகடனில் S. Ra தொடராக எழுதியது புத்தகமாகக் கிடைக்கிறது. ஒவ்வொரு கட்டுரையின் இறுதியிலும் ஒரு குட்டிக் கதையையும் சொல்லி நம்மை அசர வைக்கிறார் எஸ். ராம கிருஷ்ணன். கட்டுரைக்கு ஏற்றாற்போல் நடிகர் மற்றும் இயக்குனர் பொன்வண்ணன் தேர்வுசெய்த ஓவியங்கள் பாராட்டும்படியாக உள்ளது. அழகான குட்டிக் கதைகளைக் கொண்ட அற்புதமான கட்டுரைகள். கண்டிப்பாக வங்கிப் படிக்கலாம்.

Details: Kelvikuri (Rs.45) - S.Ramakrishnan, Vikatan publications, chennai.

Tuesday, July 14, 2009

Sindhanathi - La sa ramamirtham

சிந்தா நதி: லா ச ராமாமிருதம்
விலை: 80-/ ரூபாய்
வெளியீடு: வானதி பதிப்பகம்

லா சா ரா (லால்குடி சப்தரிஷி ராமாம்ருதம்) தனது இறுதி மூச்சு வரை துடிப்புடன் செயல்பட்ட மகத்தான எழுத்தாளர். தனது படைப்புகளில் தனியொரு பாணியைப் பின்பற்றி அவருக்கென ஒரு நிரந்தரமான இடத்தைத் தமிழிலக்கியத்தில் ஏற்படுத்திக் கொண்டவர். சிறுகதைகள், நாவல்கள், கட்டுரைகள் என பல தளங்களிலும் சிறந்து விளங்கியவர். இவருடைய எழுத்து ஆழ்ந்த கருத்துக்களையும், அழகிய விவரிப்புகளையும் கொண்டவை. இவருடைய கதைகள் ஜெர்மனி, பிரெஞ்சு, ஆங்கிலம் உள்ளிட்ட பல முக்கிய உலக மொழிகளிலும் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளன.

தனது பதின்ம வயதின் இறுதிகளில் அவர் எழுதிய “தி எலிபென்ட்’ என்ற ஆங்கிலக் கதைதான் அவருடைய முதல் கதையாக பிரசுரம் ஆகியது. அதற்குப் பிறகு அவர் தமிழில் எழுதுவதையே விரும்பி ஏற்றுக்கொண்டார்.

என்னுடைய கல்லூரி வாழ்க்கையில் மாதமொருமுறை பிரசுரமாகும் 'தீராநதி'யின் தீவிர விசிறி நான். அந்த இதழில் லா ச ரா எழுதிய சொந்தர்ய லஹரியும், கி ரா எழுதிய கட்டுரைகளின் மீதும் மோகம் கொண்டு அலைந்திருக்கிறேன். அந்த ஈடுபாடே அவருடைய படைப்புகளைத் தேடி என்னை ஓடச்செய்தது.

லா ச ராவின் சிறுகதைகளில் சில திண்ணையில் படிக்கக் கிடைக்கிறது:
1. அம்முலு
2. கண்ணன்
3. நெற்றிக் கண்
4. வரிகள்

இவர் எழுதி 100-க்கும் மேற்பட்ட சிறுகதைகள், 6 புதினங்கள், 6 கட்டுரைத் தொகுப்புகள் வெளியாகியுள்ளன. ஆறு கட்டுரைத் தொகுப்புகளில் ஒன்றுதான் 'சிந்தா நதி'.

தினமணி கதிரில் தொடராக வந்த "சிந்தாநதி" கட்டுரைகளுக்கு 1989- ஆம் ஆண்டிற்கான சாகித்ய அகாதெமி விருது கிடைத்துள்ளது. மேலும் இலக்கிய சிந்தனை விருது, கலைமாமணி விருது உட்பட பல முக்கிய விருதுகளும் பெற்றிருக்கிறார்.

சிந்தாநதி கட்டுரைகள் யாவும் அவருடைய வாழ்வானுபவங்களை பிரதிபலிப்பதாக இருக்கிறது. மணிக்கொடி சகாக்களுடன் ஆரம்ப காலங்களில் கலந்துரையாடியது, தனது தந்தையிடம் பொய் சொல்லியது, அம்மாவின் அன்பு, வாசகர்களுடனான பிணைப்பு, ஆரம்ப காலங்களில் வேலையில்லாமல் அலைந்தது, சினிமா கம்பெனியில் வேலை செய்தது என அவருடைய வாழ்வின் முக்கிய நிகழ்வுகளைக் கட்டுரையாக்கியுள்ளார்.

இவருடைய எழுத்து சில இடங்களில் படிப்பதற்கு எனக்குக் கடினமாக இருந்ததுண்டு. முதல் பத்தியைப் படித்துவிட்டு அடுத்த பத்திக்குப் போகும் போது முதலில் படித்தது மறந்தது போல் ஒரு உணர்வு ஏற்படும். அய்யோ! இன்னும் வாசிப்பதில் முதிர்ச்சி அடையவில்லையே என்ற எண்ணம் தோன்றும். சிந்தா நதியிலும் சில இடங்களில் அதுபோல் உணர்ந்தேன்.

ஆனால் ஒன்று, என் புத்திக்கு எட்டும் வரை அவருடைய படைப்புகளை வாசிப்பேன். மீள் வாசிப்பில் சிந்தா நதியில் என் பயணம் தொடரும்.

Sunday, June 14, 2009

Adoor Gopalakrishnan

ஆடூர் கோபாலகிருஷ்ணன் - அக்பர் கக்கட்டில் விலை: 90
தமிழில்:
குளச்சல் மு யூசப்
வெளியீடு: காலச்சுவடு பதிப்பகம்

ஹாலிவுட்டில் ஒரு சினிமா வெளிவந்தால் அதைப் பற்றி நிறையவே பேசுகிறோம். கதையிலிருந்து தொழில் நுட்பம் வரை ஒன்று விடாமல் அனைத்தையும் அலசி ஆராய்கிறோம். பல பதிவர்கள் பெருமையாகப் பதிவிடுகிறார்கள்.

'ஸ்லம் டாக் மில்லியனர்' - போன்ற வர்த்தக ரீதியான திரைப் படங்கள் கூட அதிகமாக பேசப்படும் போது நம்முடைய திரை சித்திர மேதைகளின் படங்கள் ஏன் பேசப் படுவதில்லை! ஆஸ்காரில் வெற்றி பெரும் திரைப்படங்களை உடனே பார்த்து மகிழ்ச்சியுறும் நாம் இந்தியக் கலைப் படங்களை ஏன் ரசிப்பதில்லை.

மற்றவர்களின் கலைப் படைப்பை ரசிப்பது தவறில்லை. ஆனால் நம்முடைய கலைவடிவத்தையும் ரசிக்க வேண்டும் தானே. அப்படி ரசிக்கப் பட வேண்டிய திரைசித்திர மேதைகளில் ஒருவர் தான் 'ஆடூர் கோபால கிருஷ்ணன்'. உலக அளவில் இந்திய சினிமாவிற்கு உரமிட்ட முக்கியமானவர்களில் ஒருவர்.

அவரைப் பற்றி அக்பர் கக்கட்டில் மலையாளத்தில் எழுதிய "வரூ, ஆடூரிலேக்கு போகாம்" என்ற மலையாள நூலின் மொழிபெயர்ப்புதான் இந்தப் புத்தகம். இந்த நூலினை குளச்சல் மு யூசப் நல்ல முறையில் மொழி பெயர்த்திருக்கிறார். இவர் மலையாளத்திலிருந்து குறிப்பிடத்தக்க பல நல்ல நூல்களை மொழி பெயர்த்துள்ளார். அவற்றுள் 'உலகப் புகழ் பெற்ற மூக்கு, மீசான் கற்கள்' போன்ற மொழியாக்கங்கள் குறிப்பிடத்தக்கன.

சிறந்த இயக்குனருக்கான தேசிய விருது 4 முறையும், சிறந்த திரைக்கதை ஆசிரியருக்கான தேசிய விருது 2 முறையும் பெற்ற ஆடூராரின் திரை சித்திர படைப்புகள் 'கான், வெனீஸ், பெர்லின்' போன்ற சர்வதேச திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்ட பெருமைக்குரியது.

திரைப்படத் துறையில் வாழ்நாள் பங்களிப்பு அளித்ததற்காக 2004 -ஆம் ஆண்டு தேசத்தின் மிக உயரிய சாதனை விருதான 'தாத்தா சாகேப் பால்கே' விருது கொடுத்து கௌரவிக்கப்பட்டுள்ளார். அதுமட்டுமில்லாமல் 'பத்மஸ்ரீ, பத்ம விபூஷன்' போன்ற தேசத்தின் உயர்ந்த விருதுகளும் அளித்து கௌரவிக்கப்பட்டுள்ளார். இவர் மட்டுமின்றி இவருடைய படங்களின் மூலம் தேசிய விருதுகளையும் புகழையும் அடைந்தவர்கள் ஏராளம்.

முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக திரைப்படத் துறையிலிருக்கும் ஆடூரார் இதுவரை 10 முழுநீளத் திரைப் படங்களையும், 23 குறும்படம் மற்றும் ஆவணப் படங்களையும் இயக்கியிருக்கிறார். அதுமட்டுமில்லாமல் இவருடைய 6 திரைக்கதை நூல்களும், 3 சினிமா பற்றிய மலையாள நூல்களும், 3 ஆங்கில நூல்களும் இது வரை வெளிவந்திருக்கின்றன.

இவருடைய முழுநீளப் படங்களின் பட்டியல் பின்வருமாறு:

1. சுயம்வரம் (1972)
2. கொடியேற்றம் (1977)
3. எலிபத்தாயம் (1981) 'Watch in youtube': 1
4. முகாமுகம் (1984) - நேர்முகம்
5. அனந்தரம் (1987) - அதன் பிறகு
6. மதிலுகள் (1989)
7. விதேயன் (1993) - அண்டி வாழ்பவன்: 1 2 3 4 5 6 7 8 9 10
8. கதா புருஷன் (1995) - கதாநாயகன்
9. நிழல் குத்து (2002)
10. நாலு பெண்ணுங்கள் (2004) 'Watch in youtube': 1 2 3 4 5 6 7 8 9

இந்த நூலானது ஆடூரின் படைப்புலகம், அந்தத் துறையில் சாதித்தது மற்றும் அவருடைய கலையுலக நண்பர்கள், அவருடைய சமூகப் பார்வை என பல விஷயங்களை வெளிக்கொண்டு வருகிறது. இது ஒரு நேர்முக வடிவில் இருப்பதால் அவருடைய ஆரம்ப கால சிக்கல்கள் பலவற்றையும் மனம் திறந்து பேசியிருக்கிறார்.

ஒரு முறை மதிலுகள் படம் எடுப்பதற்காக வைக்கம் முகமது பஷீரைக் காணச்சென்ற போது, திடீரென பஷீர் உள்ளே சென்று சிறிது பணம் எடுத்துக்கொண்டு வந்து அடூரிடம் கொடுத்தாராம். அதில் அவருடைய மனைவிக்கும் மகளுக்கும் என சிறிது பணமும் கொடுத்து அசீர்வதித்தாராம். மேலும் படம் நன்றாக வரும் கோபால் அதன் மூலம் நீங்கள் நிறைய பணமும், புகழும் அடைவீர்கள் என்று சொன்னாராம்.

அதுபோலவே மதிலுகள் நன்றாக ஓடி நிறைய லாபத்தைக் கொடுத்ததாம். அனைத்தும் பஷீரின் ஆசிர்வாதம் என்று அடூர் சொல்கிறார். இந்தப் புத்தகத்தின் மூலம் அடூரின் இளமைக் கால வாழ்க்கை முதல் தற்போதைய வளர்ச்சி வரை நிறைய விஷயங்களை சுவாரச்யங்களுடன் தெரிந்து கொள்ள முடிகிறது.

ஆடூரின் இணையத் தளம்: http://www.adoorgopalakrishnan.in

ஆடூரைப் பற்றி தெரிந்து கொள்ளும் நல்ல வாய்ப்பினை காலச்சுவடு பதிப்பகம் நமக்கு அளித்துள்ளார்கள். அவர்களுக்கு மிக்க நன்றி.

Saturday, May 9, 2009

Ilaigalai viyakum maram - s ramakrishnan

இலைகளை வியக்கும் மரம்: எஸ். ராமகிருஷ்ணன் விலை: 70 ருபாய்
வெளியீடு: உயிர்மைப் பதிப்பகம்

எஸ். ராம கிருஷ்ணனின் படைப்புலகம் பெரும்பாலும் பயணங்களையும், மனிதர்களுடனான நேசத்தையும் முன்னிறுத்துபவை. "இலைகளை வியக்கும் மரம்" எஸ். ராவால் எழுதப்பட்டு பல்வேறு காலகட்டங்களில் தமிழில் வெளிவந்த முக்கியமான கட்டுரைகளின் தொகுப்பாகும். இவையாவும் காலச்சுவடு, தீராநதி, உயிர்மை மற்றும் தினமணி போன்ற இதழ்களில் வெளிவந்தவை.

படைப்பார்வத்தால் ஆரம்ப நாட்களில் மேற்கொண்ட பயணங்கள், சென்னையில் தங்குமிடமில்லாமல் தவித்தது, வட்டார இலக்கியத்தின் மீதான ஈடுபாடு, படைப்பாளிகளைச் சென்று சந்தித்தது, தீவிரமான புத்தக வாசிப்பு, கிராமியக் கலையான கொட்டு வாத்தியம், பாவைக் கூத்து போன்றவற்றின் அழிவு, இயற்க்கை விவசாயம், மொழிபெயர்ப்பு, தினசரி வாழ்வின் சம்பவங்கள் என அவர் அவதானித்த முக்கியமான விஷயங்களை பதிவு செய்திருக்கிறார். மேலும் அவர் சந்தித்த இடர்களையும், உதவிய மனிதர்களுக்கு சொல்ல வேண்டிய நன்றியையும் தவறாமல் கூறி மெய் சிலிர்க்கிறார்.

தமிழில் ஆகச் சிறந்த குழந்தைகள் இலக்கியம் இல்லாததைக் கூறி வருத்தப்படுகிறார். பள்ளிகளிலேயே மூத்த படைப்பாளிகளின் சிறார் சிறுகதைகளை அறிமுகப்படுத்த வேண்டும் என்கிறார். பரீட்சை நேரத்தில் மேற்கொள்ளும் சாலைப் பராமரிப்பு பணிகள் எவ்வளவு தடங்கல்களை மாணவர்களுக்கு ஏற்படுத்துகிறது என்று அவருடைய இணையத்தளத்தில் ஏற்கனவே பதிவிட்டிருக்கிறார் (பதில் இல்லாத பரிட்சை).

உலக சினிமா, நாடகம் என தனது கட்டுரைகளில் மேலும் பல அரிய தகவல்களைப் பகிர்ந்து கொள்கிறார்.

நகுலனைப் பற்றி இதற்கு முன்பே இவர் எழுதி படித்திருந்தாலும் மீண்டும் ஒரு முறை இங்கு வாசிப்பது சுவாரஸ்யமாக இருக்கிறது. மற்றபடி சில கட்டுரைகள் துணையெழுத்து மற்றும் காலச்சுவடை நினைவுபடுத்தும் போது சற்றே சோர்வடைய வைக்கிறது.

இந்தப் புத்தகத்தில் சில பிழைகள் இருக்கிறது என புத்தக வெளியீட்டில் சிறப்புரையாற்றிய திரு: சுகுமாரன் அவர்கள் சுட்டிக் காட்டுகிறார். அவற்றைப் படிக்க கீழேயுள்ள திண்ணை இணையத் தளத்திற்குச் செல்லவும்.

சுகுமாரின் விமர்சனம்

Sunday, May 3, 2009

En Jannalukku Veliye... - Maalan

என் ஜன்னலுக்கு வெளியே... : மாலன் (Rs.200) வெளியீடு: கிழக்கு பதிப்பகம்

பத்திரிகையாளர் மாலன் எழுதி கிழக்கு பதிப்பகத்தால் வெளியிடப்பட்டுள்ள "என் ஜன்னலுக்கு வெளியே...", 2005 முதல் 2008 வரையிலான தமிழக அரசியல், தமிழ்ச் சமூகம், தமிழ் இலக்கியம் மற்றும் தமிழக ஆளுமைகளின் இழப்பு என பல்வேறு தளங்களை உள்ளடக்கிய அவரது பார்வையில் அமைந்த கட்டுரைகளின் தொகுப்பு. இவையனைத்தும் தினமணி, புதிய பார்வை, சிங்கப்பூர் தமிழ் முரசு, உயிர்மை, இந்தியா டுடே, அவரது வலைப்பதிவு போன்ற இணைய இதழ்களில் எழுதிய பல்வேறு கால கட்டங்களில் வெளிவந்த தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பு.

நூலின் ஐந்து பெரும் பிரிவாக அரசியல், சமூகம், தமிழ், இலக்கியம் மற்றும் இரங்கல் என பிரிக்கப் பட்டுள்ளது. எனவே கால வரிசை சீராக இல்லாமல் மாறி மாறி வருகிறது. ஆனால் அதை குறை என்றும் சொல்லுவதற்கில்லை.

1). அரசியல்:

ஆரம்ப காலங்களில் சித்தாந்த அரசியல் கொள்கைகளைக் கொண்ட கட்சிகள் தற்போது நீர்த்து; சுயத்தை இழந்து முரண்பட்ட கட்சிகளுடன் கூட்டணி வைத்துக்கொண்டு; தேர்தலின் வெற்றியை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு செயல்படுவதை தனது நீண்ட கால பத்திரிகை துறை அனுபவம் மூலம் விமர்சித்து கவனம் செலுத்தப் பட வேண்டிய பல விஷயங்களை நம்முடன் பகிர்ந்து கொள்கிறார்.

தமிழகத்தின் அரசியல் சூழலில் வாரிசு அரசியல் ஏற்படுத்திய தாக்கத்தை, கருணாநிதி மற்றும் மாறனின் உறவிலிருந்து ஸ்டாலின், தயாநிதி மாறன், அழகிரி, கனி மொழி ஆகியோரின் அரசியல் பிரவேசம் வரை ஆராய்ந்து எழுதியுள்ளார். அதற்கான போதிய நேரமும் எடுத்துக்கொள்கிறார். ஆரம்பத்தில் வாரிசு அரசியலை எதிர்த்தவர்களே இன்று தனது வாரிசுகளை சட்ட மன்றத்திற்கும், பாராளுமன்றத்திற்கும், நாடாளுமன்றத்திற்கும் அனுப்பும் கேலிக் கூத்தை, முரணான செயலை நயமாக எடுத்துச்சொல்கிறார்.

இதைத் தவிர தமிழகத்தின் முக்கியப் பிரச்சனைகளான நதி நீர்ப் பிரச்சனை, ராமர் பால பிரச்சனை, தமிழீழப் பிரச்சனை என முக்கியமான பிரச்சனைகளை உணர்ச்சி வசப்படாமல் அலசியுள்ளார்.

முக்கியமாக தமிழீழ பிரச்சனையில் (தமிழர்களுக்கான அநீதி என) உணர்ச்சி வசப்படாமல் அண்டை நாட்டின் பிரச்சனையாக, நிதானமாக தன்னுடைய கருத்தைச் சொல்லிச் செல்கிறார்.

ஆட்சியில் நிரந்தரமாக இருக்க தேவையான வியூகங்களை மட்டும் வகுக்கும் ஆட்சியாளர்கள், தொலைநோக்கு பார்வையுடன் நீண்ட காலத்திற்கு பயன் தரக்கூடிய நீர் வளத்தைப் பெருக்குதல், நதிநீர் மீதான உரிமையை நிலை நாட்டுதல், சுற்றுச்சூழலைப் பாதுகாத்தல், கட்டுமானப் பணிகளை அதிகரித்தல், விலைவாசியை கட்டுக்குள் வைத்திருத்தல், சிற்றூர்களில் வேலை வாய்ப்புகளை உருவாக்குதல் போன்ற துறைகளில் கவனம் செலுத்தலாமென மாலன் பரிந்துரைக்கிறார்.

2). சமூகம்

வேட்டை சமூகம் - வேளாண் சமூகம் - நிலவுடமைச் சமூகம் என்ற பரிணாம வளர்ச்சி ஏற்பட்டு, சொத்து என்ற கருத்தாக்கம் வலுப்பட்ட போது அரசியல் தொடங்கியது" என முழங்கும் மாலன் அரசியல் சார்ந்த சமூகத்தின் பிரச்சனைகளை இந்தக் கட்டுரைகளின் மூலம் பகிர்ந்து கொள்கிறார்.

சமீப காலங்களில் இந்தியா எதிர் கொண்ட தீவிரவாதத் தாக்குதல், இயற்கை இடர் பாடுகளான நில நடுக்கம், சுனாமி, மழையின்மை, காலம் தவறிய மழை அதனால் மக்கள் படும் துயரங்கள், அரசு மீட்புப் பணிகளில் காட்டும் உடனடி நடவடிக்கை மற்றும் சுணக்கம் ஆகியவறை கண்டிக்க வேண்டிய இடத்தில் கண்டித்தும், பாராட்ட வேண்டிய இடத்தில் பாராட்டியும் எழுதியுள்ளார்.

சிறுபான்மையினர் மற்றும் தாழ்த்தப் பட்டவர்களுக்கான இட ஒதுக்கீட்டு முறையில் தற்போதுள்ள குறைகளையும் அதை நிவர்த்தி செய்வதற்கான அவருடைய கருத்துக்களையும் சொல்கிறார். அரசு மற்றும் தனியார் கல்லூரிகளுடனான இட ஒதுக்கீட்டு முறையிலுள்ள பிரச்சனைகளையும் மறக்காமல் அசை போடுகிறார்.

இந்தியா சுதந்திரம் பெற்றதிலிருந்து சந்தித்து வரும் முக்கியமான பிரச்சனை பெண் சிசுக் கொலை. கடந்த பத்தாண்டுகளில் ஒரு கோடி பெண் சிசுக்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள் என்று இவருடைய கட்டுரையைப் படித்து அதிர்ந்து போனேன். அதுவும் நடுத்தர மற்றும் பணம் படைத்த குடும்பங்களில் தான் இது போன்ற சம்பவங்கள் அதிகம் நடக்கிறது என்பது என்னை மேலும் அதிர வைத்தது.

வெளிநாட்டு வாழ் இந்திய வம்சாவளி யாராவது சாதனை படைத்தால், அதனை இந்தியாவின் சாதனையாக ஊடகங்கள் வர்ணிப்பதை கடுமையாக சாடுகிறார். ஜிண்டால், சுனிதா வில்லியம்ஸ், ஃபிஜியில் மகேந்திர சொளத்ரி, சிங்கப்பூரில் நாதன் ஆகியோர் பெற்ற முக்கியத்துவத்தைக் காரணம் காட்டி இந்தயா வல்லரசாகும் என்றும், இந்தியர்களின் சாதனை என்றும் முழங்குவதை ஊடகங்களின் தவறான பிரச்சாரம் என்று சாடுகிறார்.

கல்பனா சாவ்லா இந்தியர் என்பதால் பெருமை கொள்வதில் ஞாயம் இருக்கிறது. மற்றவர்களின் சாதனைகளும் பாராட்டப் பட வேண்டியவைதான். ஆனால் அவர்களை இந்தியர்கள் என்று சொல்லி குதூகலிப்பதைத் தவிர்க்க வேண்டும் என்கிறார்.

கிழக்கிந்தியக் கம்பெனியை நிர்வகிக்க வந்த பிரான்சிஸ் டே வணிக துறைமுகத்திற்கு உகந்த இடமாக பழவேர்காட்டைத்(Pulicat) தான் தேர்ந்தெடுத்தாராம். சாந்தோமிலிருந்த ஒரு பெண்ணின் சகவாசத்தினால் தனது முடிவை மாற்றி சாந்தோம் பக்கத்திலுள்ள சிறிய இடத்தைத் தேர்ந்தெடுத்தாராம். ஆகஸ்ட் 22 1639-ல் அவரது ஆலோசனைப் படி நகரம் தோற்றுவிக்கப் பட்டது. அது ஆரம்பத்தில் தண்ணியில்லாக்காடாக இருந்துள்ளது. அதனாலேயே அவர் வேலையிலிருந்து நீங்கப் பட்டாரம். அவர் அன்று தேர்ந்தெடுத்த இடம் தான் நாம் இன்று வசிக்கும் சென்னை மாநகரம்.

இவருடைய கட்டுரைகளை படிப்பதற்கு முன்பு வரை இங்கிலாந்து, அமெரிக்க போன்ற மேற்கத்திய நாடுகள் தான் உலகின் மகிழ்ச்சியான நாடுகள் என்று நினைத்துக் கொண்டு இருந்தேன். ஆனால் மகிழ்ச்சி நிறைந்த தேசம் என்று vanuatu island -ஐ அறிமுகம் செய்கிறார். எனக்கு நினைவு தெரிந்து இது போல் ஒரு தேசத்தை நான் கேள்விபட்டதில்லை. vanuatu தீவினைப் பற்றி தெரிந்து கொள்ள www.vanuatutourism.com- இணைய தளத்திற்கு செல்லவும்.

3). இலக்கியம்

ஜீன் அரசநாயகம் (அடையாளங்களுக்கு அப்பால்...), அ. முத்துலிங்கம் (அங்கே இப்போ என்ன நேரம்?), கி.ரா வின் படைப்புகள்(கி.ரா 85 காலத்தை வென்ற கதை சொல்லி), முனைவர்.எம். எஸ். ஸ்ரீலக்ஷ்மி (சிங்கப்பூர் தமிழ் இலக்கியம் ஆழமும் அகலமும்), உ.வே.சா (காலச்சுவடிற்கு ஒரு கேள்வி), மணா(வரலாற்றின் வழித்தடங்கள்), நகைச்சுவை நடிகர் நாகேஷின் வாழ்க்கைப் புத்தகம்(வெற்றியின் முகம் அத்தனை அழகானதல்ல!) என அவருக்குப் பிடித்த முக்கியமான படைப்புகளையும், ஆளுமைகளையும் குறித்து எழுதியுள்ளார்.

குறிப்பு: அடைப்பிற்குள் இருக்கும் சுட்டிகளை அழுத்தி மாலனுடைய வலைப் பக்கத்தில் கட்டுரைகளைப் படிக்கவும்.

4). தமிழ்

தமிழ் மொழியின் அச்சுறு குறித்தும், அதனுடைய இணைய வளர்ச்சி குறித்தும் இங்கு அசை போடுகிறார். மேலும் வலைப்பூவின் மூலம் பெருகி வரும் தமிழ் பதிவர்களின் அதிகமான எண்ணிக்கையைக் கண்டு மகிழ்ச்சியடையும் இவர், அதனுடைய அடுத்த கட்ட வளர்ச்சியை அடைய மாணவர்களிடம் இது போன்ற தொழில் நுட்பத்தை எடுத்துச் செல்ல வேண்டும் என்று அறிவுறுத்துகிறார். அதற்கு அரசு ஆவன செய்ய வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை வைக்கிறார்.

5). இரங்கல்

சுந்தர ராமசாமி, பாரதி(மனிதனுக்கு மரணமில்லை), ஆண்டான் பாலசிங்கம், EROS இரத்தின சபாபதி, விமரிசகர் ஏ.ஜே என்று அழைக்கப்படும் அலோசியஸ் ஜெயராஜ் கனகரட்னா, கவிஞர் சு. வில்வரத்தினம், பல அரசியல் புத்தகங்கள் தமிழில் வெளிவர காரணமாக இருந்த மூத்த படைப்பாளி, மொழி பெயர்ப்பாளர் சாமி நாத சர்மா, கதாசிரியர் தி.ஜா.ரா, சுஜாதா, சதாம், ஆதிமூலம், சிங்கப்பூர் தமிழ் முரசின் ஆசிரியராகப் பணியாற்றிய திருநாவுக்கரசு, லா.சா.ராமாமிருதம் ஆகியோரின் மறைவிற்கு மரியாதை செலுத்தும் விதமாக அவர்களைப் பற்றிய குறிப்புகளை நம்முடன் பகிர்ந்து கொள்கிறார்.

புத்தகத்தில் பொதிந்துள்ள செறிவான கருத்துக்கள் ஏராளம். அவை முழுவதையும் இங்கு பதிவிட இயலாது என்பதால் முழு புத்தகத்தையும் பற்றிய சிறு குறிப்பை முன்வைக்கிறேன்.

மாலனின் எளிமையான நடையில் சமீப கால அரசியலின் முக்கிய நிகழ்வுகளின் குறிப்புகளை அன்றாட இதழ்களில் படிக்கத் தவறவிட்டவர்களுக்கு இந்தப் புத்தகம் நல்லதொரு வாய்ப்பை மறுபடியும் அளிக்கிறது.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13

இந்தப் புத்தகத்திலுள்ள சில கட்டுரைகளைப் படிக்க மேலே கொடுக்கப்பட்டுள்ள எண்களை அழுத்தி மாலனின் வலைப் பக்கத்திற்குச் செல்லவும்.

Thursday, April 23, 2009

Kadigaaram amaithiyaaga enikondu irukirathu...

கடிகாரம் அமைதியாக எண்ணிக் கொண்டிருக்கிறது: அ. முத்துலிங்கம் (Rs.85), வெளியீடு: உயிர்மை பதிப்பகம்

23-04-2009: உலக புத்தக தினம். ஆகவே ஏதாவது புத்தகம் வாங்க வேண்டுமென்று நினைத்திருந்தேன். தி மு க அரசு இலங்கைத் தமிழர்களுக்காக ஆதரவு தெரிவித்து பந்த் அறிவித்திருந்தார்கள். ஆகவே எங்கும் வெளியில் செல்ல இயலவில்லை. சித்திரை மாத வெப்பம் வெளியில் தலை காட்ட விடவில்லை.

சரி, ஏதாவது புத்தகம் படிக்கலாம் என்றால் ஒரே குழப்பம். படிக்க வேண்டிய புத்தகங்கள் என்னுடைய அலமாரியில் 109 இருந்தது. கதையோ, கட்டுரையோ படிப்பதைக் காட்டிலும் பல ஆளுமைகளைப் பற்றிய புத்தகமாக படிக்கலாமென்று முடிவு செய்து அலமாரியைத் துழாவினேன்.

அது போன்ற புத்தகங்கள் என்னிடம் ஐந்து இருக்கின்றன. (ஜெயமோகன் எழுதிய இலக்கிய விமரிசன நூல்களைத் தவிர்த்து)

1). கதாவிலாசம் - எஸ். ராமகிருஷ்ணன் (விகடன் பிரசுரம்)
2). பின் கதைச் சுருக்கம் - பா. ராகவன் (கிழக்கு பதிப்பகம்)
3). கடிகாரம் அமைதியாக எண்ணிக் கொண்டிருக்கிறது - அ. முத்துலிங்கம் (உயிர்மை பதிப்பகம்)
4). ஆழத்தை அறியும் பயணம் - பாவண்ணன் (காலச்சுவடு பதிப்பகம்)
5). எழுத்துலக ப்ரம்மாக்கள் - இரா. மணிகண்டன் (குமுதம்)

இதில் முதலிரண்டும் ஏற்கனவே படித்த புத்தகங்கள். கடைசி இரண்டும் ஒரே ஆசிரியருடைய கதை, சிறுகதைகள் மற்றும் ஆளுமைகள் மீதான விருப்பங்களும், பார்வைகளும் கொண்டது.

அ. முத்துலிங்கம் தொகுத்த "கடிகாரம் அமைதியாக எண்ணிக் கொண்டிருக்கிறது" புத்தகம் தமிழின் முன்னணி எழுத்தாளர்கள் 20 பேர் தமக்குப் பிடித்த புத்தகங்கள் பற்றியும், புத்தகத்தை எழுதிய ஆசிரியரைப் பற்றியும் தங்களுடைய ஆழமான பார்வையை முன் வைக்கிறார்கள். இதை விட வேறென்ன வேண்டும். ஆகவே அந்தப் புத்தகத்தையே தேர்ந்தெடுத்தேன்.

கீழ்கண்ட எழுத்தாளர்கள் தான் இந்தப் புத்தகத்தில் தங்களை பாதித்த புத்தகங்களைப் பற்றி எழுதியுள்ளார்கள்.

1). அம்பை, 2). அசோகாமித்திரன், 3). சாரு நிவேதிதா, 4). இந்திரா பார்த்தசாரதி, 5). இரா. முருகன், 6). ஜெயமோகன், 7). காஞ்சனா தாமோதரன், 8). பொ. கருணாகர மூர்த்தி, 9). பி. ஏ. கிருஷ்ணன், 10). மாலன், 11). மனுஷ்ய புத்திரன், 12). அ. முத்துலிங்கம், 13). நாஞ்சில் நாடன், 14). பாவண்ணன், 15). எஸ். ராம கிருஷ்ணன், 16). ஷோபா சக்தி, 17). சுஜாதா, 18). சுகுமாரன், 19). வாஸந்தி, 20). வெங்கட் சாமிநாதன்.

ஒவ்வொருவரும் அவர்களுக்கே உரிய பார்வையில் முக்கியமான படைப்புகளை முன் வைக்கிறார்கள்.

அவற்றில் சில:

சாரு நிவேதிதா: www.charuonline.com

மேற்கத்திய கலாச்சாரத்திற்கும், அவர்களுடைய படைப்புகளுக்கும் (ஹாலிவுட் சினிமா உட்பட) கொடுக்கும் முக்கியத்துவத்தை பிற படைப்புகளுக்குக் கொடுப்பதில்லை. இவர் சம கால அரபு இலக்கியம் பற்றி நீண்ட கட்டுரையை எழுதியுள்ளார். இவர் பரிந்துரைக்கும் நூல்கள் கவனிக்கப்பட வேண்டியதும் கூட.

ஜெயமோகன்: www.jeyamohan.in

இயல்பான முறையில் எழுதப்படும் படைப்புகளையும் வாசகர்கள் படிக்க வேண்டுமென "மணல் கடிகை" எனும் நாவலைப் பரிந்துரைக்கிறார்.

பி. ஏ. கிருஷ்ணன்:

வடிவியலின் கதை என்னும் கணித புத்தகத்தை இவர் பரிந்துரைக்கிறார். புத்தகத்தின் பெயர் "யூக்லிட் விண்டோ" (Eucild's Window: The story of geometry from parallel line to hyperspace). இதை இவர் மொழி பெயர்த்துக் கொண்டிருக்கிறார் என்று நினைக்கிறேன்.

பாவண்ணன்:

புதுமுக எழுத்தாளரான கால பைரவன் எழுதி வெளிவந்த "புலிப்பாணி சோதிடர்" என்ற சிறு கதைத் தொகுப்பை இவர் பரிந்துரைக்கிறார். விமரிசனத்தைப் படிக்கும் போது அவசியம் வாங்கி படிக்க வேண்டிய எழுத்தாளர் தான் என்று தோன்றியது.

எஸ். ராம கிருஷ்ணன்: www.sramakrishnan.com

மதுரையை சுற்றியுள்ள சமணக் குகைகளைப் பற்றிய ஆய்வுக் கட்டுரையான "எண்பெருங்குன்றம்" என்ற நூலை எஸ்.ரா பரிந்துரைக்கிறார். இவருடைய பல புத்தகத்தில் வரலாற்று சிறப்பு மிக்க இடங்களுக்கும், பொருட்களுக்கும் நாம் போதிய முக்கியத்துவத்தை தருவதில்லை என சுட்டிக் காட்டுகிறார். மேற்கத்திய நாடுகளிலிருந்து கற்க வேண்டிய பாடங்களில் இதுவும் ஒன்று. ஆய்வுக் கட்டுரைகளுக்கு தமிழுலகம் தர வேண்டிய முக்கியத்துவத்தை தனது கட்டுரையில் சுட்டிக் காட்டுகிறார்.

எஸ்.ரா எழுதிய சமணக் குகை பற்றிய கட்டுரை: கல்லில் ஊரும் காலம்

சுஜாதா:

"வாழ்நாள் முழுவதும் தொடர்ந்து பாதித்ததாக ஒரே ஒரு புத்தகத்தை சொல்ல முடியவில்லை" என ஆரம்பிக்கும் இவர் சிறு வயது முதல் தன்னை பாதித்த எழுத்தாளர்கள், சிற்றிதழ்கள், மேற்கத்திய எழுத்தாளர்கள், புத்தகங்கள் என நிறையவே அறிமுகப்படுத்துகிறார்.

தனது கல்லூரி நாட்களில் அவருக்கு பிடித்த நாவலை வகுப்பிற்கு செல்லாமல் ஒரு வாரம் முழுவதும் தொடர்ந்து படித்து முடித்ததாக கூறுகிறார். மேலும் தன்னுடைய மோதிரத்தை விற்று சில புத்தகங்களை வாங்கியதையும் நினைவு கூர்கிறார். ஆனால் எந்த குறிப்பிட்ட படைப்பையும் முன்னிறுத்தவில்லை.

இதர ஆசிரியர்களும் தங்களுக்குப் பிடித்த கவிதை, திரைக்கதை, நாடகம், நாவல் என பல புத்தகங்களையும் ஆளுமைகளையும் பற்றி பேசுகிறார்கள்.

பி.கு: உலக புத்தக தினத்தன்று, மாலையில் பத்ரியின் NHM புத்தகங்கள் - விமர்சனத்துக்கு ரெடி (3) பதிவின் மூலம் திரு.மாலன் எழுதிய எண் ஜன்னலுக்கு வெளியே... புத்தகம் இலவசமாக வீடு தேடி வந்திருந்தது. சொல்ல முடியாத சந்தோஷத்துடன் தபாலில் வந்த புத்தகத்திற்கு என்னுடைய கையொப்பமிட்டு வாங்கிக் கொண்டேன். எப்படியோ புத்தக தினத்தன்று ஒரு புத்தகத்திற்கு சொந்தக்காரனாகிவிட்டேன்.

Monday, March 23, 2009

Thunai Ezhuthu - S. Rama Krishnan

துணையெழுத்து: எஸ். ராம கிருஷ்ணன் (Rs. 110)
வெளியீடு: விகடன் பிரசுரம்

துணையெழுத்து கட்டுரைகளை வாசித்ததின் மூலமாகத்தான் எனக்கு எழுத்தாளர் எஸ். ராம கிருஷ்ணன் அறிமுகமானார். அதன் பிறகுதான் அவருடைய பிற நூல்களின் வாசிப்பனுபவம் கிடைத்தது. எத்தனையோ வித்தியாசமான மனிதர்கள், பண்டைய காலத்து கல்வெட்டுகள், நீருக்கு அடியில் ஈரமேரியிருக்கும் கூழாங்கற்கள், பால்ய கால குறும்புகள், சக மனிதனின் புறக்கணிப்பு, இமைய மலை பனிச்சாரல் என்று இவருடைய எழுத்துக்கள் நமக்கு அறிமுகப்படுத்தும் விஷயங்கள் ஏராளம்.

பயணங்களிலும் இதர பல இடங்களிலும் தான் சந்திக்க நேர்ந்த பலவிதமான மனிதர்களைப் பற்றியும், அவர்களுடனான மறக்க முடியாத நிகழ்வுகளைப் பற்றியும் அவரே அசைபோடுவதாக இந்த புத்தகத்திலுள்ள கட்டுரைகள் அமைந்துள்ளன.

வாழ்வின் சில சொற்ப நேரங்களைத் தவிர மற்ற எல்லா நேரங்களிலும் சிறு சிறு கனவுகளும், ஆதங்கங்களுமே மனிதனை ஆட்கொள்கின்றது. நம்மையும் அறியாமல் நம் மீது படரும் அதுபோன்ற சம்பவங்களையும், உணர்வுகளையுமே எஸ். ரா தனது கட்டுரைகளில் அவருக்கே உரிய கூர்ந்த பார்வையுடன் முதன்மைப்படுத்தியுள்ளார்.

உடல் பருத்த யானை ஒரு துருவத்திலிருந்து மற்றொரு துருவத்திற்கு செல்வதுதான் பயணமா என்ன! சிறிய கால்களைக்கொண்டு இயங்கும் நத்தை மேற்கொள்வதும் பயணம் தானே என உணரவைத்துள்ளார். பிரம்மாண்டமான விஷயங்கள் நம் கண்ணை மறைத்து விடுகிறது. அதுவே நாம் சின்ன சின்ன அழகிய விஷயங்களை இழப்பதற்கு காரணமாகிறது.

நாம் கணினி யுகத்தில், தொழில் மற்றும் இதர துறைகளில் முன்னோக்கிச் சென்றாலும் வாழ்வானுபவத்தில் பின்னோக்கித்தான் சென்று கொண்டிருக்கிறோம்.

பால்ய வயதில் மரங்களைச் சுற்றியும், வைக்கோல் புதரில் ஒளிந்தும் தாவிக்குதித்து விளையாடியதும் ஒரு கனவைப்போலவே வந்து கலைகிறது. இன்றைய குழந்தைகள் விளையாட்டிற்குக் கூட கணினியைத்தான் பெரும்பாலும் பயன்படுத்துகின்றனர். அவர்களின் உலகம் வீடியோ கேம்ஸ், கம்ப்யூட்டர் கேம்ஸ் என்றானவுடன் கிராமிய விளையாட்டுக்களும், கிராமிய வாழ்வும் அர்த்தமற்றுப் போனது உண்மையே.

அனைத்திற்கும் மேலாக அறுவடை செய்த பிறகு நிலத்திலுள்ள வைக்கோலுக்கு தீவைத்து பொசுக்குவதைப் பார்க்கும் போது பால்யத்தின் நினைவுகளையும் சுடுவதுபோல் உள்ளது.

கடற்கரையில் ஒதுங்கிக்கிடக்கும் கிளிஞ்சல்கலைப் போல, அவசர வாழ்வில் நாம் ஒதுக்கி வைக்கும் விஷயங்களும் ஏராளம். தேசாந்திரியில் எஸ்.ரா குறிப்பிட்ட கவிதையைப் போல்

சமுத்திரக் கரையில்
ஒதுங்கும் கிளிஞ்சல்கள்
குழந்தைக்கு வைரங்கள்
காட்சி தானே நிஜ வைரம்
காண்பவன் குழந்தையானால்
கிளிஞ்சல்கள் போதுமே.... (நா. விச்வநாதன்)

வாழ்க்கை என்பது அன்பு, குரோதம், அரவணைப்பு, புறக்கணிப்பு என ஆயிரம் உணர்வுகள் பிண்ணிப் பிணைந்த இடியாப்ப சிக்கல் போன்றது. சிக்கல்கள் சந்தித்துக் கொள்ளும் ஏதோ ஒரு புள்ளியில்தான் வாழ்வின் உண்மையான அர்த்தங்கள் வெளிப்படுகின்றது. அந்த அர்த்தங்களும், உணர்வுகளும் கடற்கரையில் ஒதுங்கிக்கிடக்கும் கிளிஞ்சல்களைப் போல சீண்டுவாரில்லாமல் சிதறிக்கிடக்கிறது.

சிதறிய முத்துக்களை இதிகாசத் தோழனைப்போல் "எடுக்கவோ? தொடுக்கவோ?" என கேட்பதுபோல் கேட்டு, கையிலெடுத்துக் கொடுத்து விளையாடும் குழந்தையாக நம்மை மாற்றிவிடுகிறார்.

ஒவ்வொரு கட்டுரையும் வித்தியாசமான வாழ்வனுபவத்தை படிப்பவர்களுக்குத் தருவதுடன், நெஞ்சத்தை தொட்டுச்செல்வதால் நான் நேசிக்கும் நண்பர்களுக்கு காதலுடன் வாங்கித்தரும் புத்தகங்களுள் இதுவும் ஒன்று.

Friday, March 20, 2009

Katha Vilasam - S. Rama Krishnan

கதாவிலாசம்: எஸ். ராம கிருஷ்ணன் (Rs. 150)
பதிப்பகம்: விகடன் பிரசுரம்

நவீன தமிழ் இலக்கிய எழுத்தாளர்களில் எஸ். ராமகிருஷ்ணனின் பங்களிப்பு பாராட்டுக்குரியது. இவர் ஆனந்த விகடனில் தொடராக எழுதி வெளிவந்த துணை எழுத்து, தேசாந்திரி, கதாவிலாசம் ஆகிய படைப்புகள் வாசகர்களிடையே பெரிய வரவேற்பைப் பெற்றது அனைவரும் அறிந்ததே. அவற்றுள் கதாவிலாசம் சிறிது வித்யாசமான கட்டுரைகள் அடங்கிய புத்தக வடிவம்.

தனது வாழ்வில் நடந்த சுவைமிக்க சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு, தனக்குப் பிடித்த சிறந்த தமிழ் எழுத்தாளர்களையும், அவர்களது படைப்புகளையும் இந்தப் புத்தகத்தில் வரிசைப்படுத்தியுள்ளார்.

பாரதி, புதுமைப் பித்தன், கி. ரா, சுரா தொடங்கி சம கால எழுத்தாளர்களான கோணங்கி, ஜெய மோகன் வரை அனைவரது எழுத்துக்களிலும் தனக்கு பிடித்த படைப்புகளை சிலாகித்து வாசகர்களுடன் பகிர்ந்து கொள்கிறார்.

இந்தப் புத்தகத்திலுள்ள கட்டுரைகளை வாசிப்பதன் மூலம் தமிழ் இலக்கியத்தின் ஆகச்சிறந்த ஐம்பது எழுத்தாளர்களைப்பற்றி தெரிந்துகொள்ளலாம்.

Saturday, January 31, 2009

Thaneer Vitto Valarthom - part 1, 2, 3, Thuklaq

என்னுடைய சித்தப்பா வாரம் தவறாமல் துக்ளக் வார இதழை வாங்கி படிக்கும் பழக்கம் உடையவர். அது முழுக்க முழுக்க அரசியல் பத்திரிக்கை என்று நினைத்து நீண்ட காலம் ஒதுக்கி இருக்கிறேன்.

ஒரு நாள் Writer S. Guru Murthy அவர்களின் இந்திய பட்ஜெட் பற்றிய கட்டுரையை படிக்க நேர்ந்தது. அது முதல் அவரது எழுத்துக்களை தவறாமல் படித்துக் கொண்டு இருக்கிறேன். இவர் துக்ளக்கில் எழுதி வெளிவந்த அனைத்துக் கட்டுரைகளையும் தண்ணீர் விட்டோ வளர்த்தோம் என்ற பெயரில் 3 பாகங்களாக Alliance Book Company (Mylapore) வெளியிட்டுள்ளார்கள். மூன்று பாகங்களும் சேர்த்து இதன் விலை ரூபாய் 525.

தண்ணீர் விட்டோ வளர்த்தோம்: எஸ். குரு மூர்த்தி (Rs. 525)
பதிப்பகம்: அல்லயன்ஸ் புக் கம்பெனி

கடந்த 5 வருடங்களாக துக்ளக்கில் வரும் S. Guru Murthy அவர்களின் அரசியல் கட்டுரைகளைப் படித்து வருகிறேன். இவர் தீவிர இந்துத்துவவாதி, BJP ஆதரவாளி, RSS மற்றும் VHP -ல் தன்னை தீவிரமாக இணைத்துக் கொண்டவர் என்று அறியப்பட்டாலும் சுதேசி இயக்கத்தின் மூலம் இந்தியாவிற்கு சேவை செய்து வருபவர். தேர்ந்த படிப்பாளி மற்றும் பொருளாதார மேதை.

இவர் அடிப்படையில் charted accountant. இவர் indian budget, world market, small scale industry மற்றும் இதர விஷயங்களைப் பற்றி எழுதிய பொருளாதாரக் கட்டுரைகளைப் படித்துவிட்டு அசந்திருக்கிறேன்.

சிக்கலான பொருளாதார விஷயங்களைக் கூட எந்த டாம்பீகமும் இல்லாமல் எளிய முறையில் புரியும்படி எழுதி விளக்கி விடுவார்.

நம்மவர்கள் மேற்க்கத்திய கலாச்சாரத்தில் திளைக்கும் போது இவர் மட்டும் Indian culture, Family structure and its specialty, Indian politics என எழுதுபவர்.

சில கட்டுரைகளைப் படிப்பதற்கு சிரமமாக இருந்தாலும், படித்து முடித்தவுடன் தெரியாத சில விஷயங்களைத் தெரிந்து கொண்ட நிம்மதியை உணரலாம்.

இவருடைய மற்ற படைப்புகளையும், வலைத்தளத்தையும் காண இங்கு செல்லவும் : http://www.gurumurthy.net