Thursday, August 11, 2016

விடம்பனம் நாவல் வெளியீட்டு நிகழ்வு


மொழிபெயர்ப்புக் கருத்தரங்கம் ஒன்றில் பங்கேற்க ஜி.குப்புசமி வந்திருந்தார். உடன் வந்திருந்த நண்பர் ஒருவர் "நண்பா... உங்கள ஃபேஸ்புக்ல பார்த்திருக்கேன்" என்றார்.

"ஓ... சரி சரி..." என்று சிரித்துவிட்டு நகர்ந்தேன்.

மறுபடியும் அந்த மனிதரைச் சந்திப்பேன் என்று அப்பொழுது எனக்குத் தெரியாது.

தி. ஜனகிராமன் முழுத்தொகுப்பு கொண்டுவந்த போது ஆனந்த விகடன், கல்கி, ரோஜா முத்தையா நூகலம் என நண்பர் சுகுமாரன் சென்னையில் சுழன்று சுழன்று சுற்றிக் கொண்டிருந்தார். கணையாழியில் வந்த தி.ஜாவின் கதைகளைப் பிரதி எடுக்க வேண்டி கணையாழி அலுவலகத்துக்குச் சென்றோம். ஜிகேவுடன் சந்தித்த அதே மனிதர்.

அவர்தான் கணையாழி இதழின் இணையாசிரியர் என்று அப்பொழுதும் எனக்குத் தெரியாது.

இந்த மனிதர் பாரபட்சமின்றி பின்னாட்களில் என்னைக் கழுவிக் கழுவி ஊற்றப் போகிறார் என்பதும் அப்பொழுது எனக்குத் தெரியாது.

கணையாழி குழுவில் சேர்ந்து வேலை செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டபோது சீனிவாசனுடன் நெருங்கிப் பழகும் வாய்ப்புக் கிடைத்தது. ஒரு தீவிர வாசகர் என்று மட்டுமே நினைத்திருந்த சீனிவாசன் - பின்னிரவு நாளொன்றின் உரையாடலில் -  கீழத் தஞ்சை சார்ந்த நாவலொன்றை  எழுதிக் கொண்டிருப்பதாகக் கூறினார்.

"படித்துப் பார்க்கக் கிடைக்குமா?"

- இதுபோன்று ஆர்வக் கோலாரில் பேசி எச்சில் முழுங்கும் சம்பவங்களும் ஏற்பட்டதுண்டு. ஆகவே, சிறிது நேரம் மெளனித்திருந்தேன். ஊதிய சிகெரெட்டின் புகையை வானத்தைப் பார்த்து விட்டவாறு,

"நண்பா... கொஞ்சம் போல வாய்ஸ் ரெக்கார்ட் பண்ணி சில நண்பர்களுக்கு மெயில்ல அனுப்பி இருக்கேன். அத நான் ஃபார்வேட் பண்றேன். கையால எழுதுன பேப்பர்ஸ் கொஞ்சம் இருக்கு. அதையும் கொடுக்குறேன்."

- இப்படிச் சொல்லிவிட்டுக் கண்ணடித்துச் சிரித்தார். சொன்னது போலவே கொடுக்கவும் செய்தார். வாசித்துவிட்டுக் திருப்பிக் கொடுக்கும்போது,

"நூறு பக்கத்துல நாவல் பத்திய பிக்சர் எதுவும் எனக்குப் புடி படல. ஆனா, நாவலுக்கான புனைவு மொழி அருமையா வந்திருக்கு" என்றேன்.

அபொழுதும் ஊதிய சிகரெட்டின் புகையை இழுத்து விட்டவாறே சிரித்தார். சில மாதங்கள் சென்றிருக்கும் "நண்பா... சீக்கிரமா நாவல எழுதி முடிக்கலாம்னு இருக்கேன்." என்று சீனிவாசன் பகிர்ந்தபோது,

"நல்ல விஷயம். நாவல் வெளிவந்தா சொல்லுங்க. நான் அவசியம் படிக்கிறேன்." என்றேன்.

"நீதான் நண்பா டைப்பே பண்ணப் போற... ரெடியா இரு நான் கூப்பிடுறேன்."

"வாய்ஸ் ரெக்கார்ட் பண்ணிக் கொடுங்களேன். நான் டைப் பண்ணி அனுப்பிடறேன்" என்றேன்.

"கூடவே இருந்து டைப் பண்ணனும். அப்போதான் சரிவரும்..." என்றார்.

எப்படியாவது சீனிவாசனைத் தவிர்க்க வேண்டும், இந்த வேலையில் சிக்கிக்கொள்ளக் கூடாது என்றுதான் ஆரம்பத்தில் நினைத்தேன். விதிவசத்தால் எப்படியோ சிக்கிக்கொண்டேன். இதோ இந்த மாதத்துடன் ஒரு வருடம் ஆகப்போகிறது. என்னுடைய தொல்லைகள், சோம்பேறித்தனம், பொறுப்பின்மை, முகநூலின் கலகக் குரல் என்று எதுவுமே சீனிவாசனுக்குப் பிடிக்காது. இதனாலெல்லாம் கூட அவருக்குத் தொல்லைகள் நேர்ந்ததுண்டு.

எது எப்படியோ! இதோ நாவல் எழுதி முடித்தாகிவிட்டது...

"விடம்பனம்" - ஆராய்ந்து அறிய வேண்டிய பெயர்தான்.

வாழ்த்துக்கள் சொல்லுவதும் சடங்காகத்தான் இருக்கும். சென்ற வாரம் சாலையில் எதிர்பட்ட ஒவியர் பாலு என்னுடைய கண்களை உற்றுப் பார்த்துவிட்டு,  மகிழ்ச்சியின் உந்துதலில் என்னைக் கட்டிப் பிடித்து ஆரத் தழுவிக்கொண்டார்.

"நானெல்லாம் கூட இருந்து நாவல் முடிச்சிக் கொடுத்து இருக்கனும்" என்றார் பாலு.

எனக்குத் தெரிந்தே பாப்பாக்கா, பாலு, கோபு என பலருடைய கையெழுத்துப் பிரதியைப் பார்த்து தட்டச்சு செய்திருக்கிறேன். (யாவரும்.காமில் வெளியான) பதடியில் வரும் கதாப்பாத்திரங்களில் யாரேனும் ஒருவரே அந்தந்தப் பகுதிகளைத் தட்டச்சு செய்திருக்கிறார்கள். நம்முடன் நேரிலும், முகநூலிலும் உரையாடும் பல நண்பர்கள் நாவலில் வந்துச் செல்கிறார்கள்.

பிரபு காளிதாஸ், அதிஷா, கிபி-யாகிய நான், ஷபி, கவிஞர் சுகுமாரன், அழகியசிங்கர், சிவா, விநோ, ரமேஷ் ரக்சன், ஜீவ கரிகாலன், வேல்கண்ணன்...

இவர்கள் எல்லோரும் நாவலில் இருப்பார்கள். ஆனால் இருக்க மாட்டார்கள்.

நாவல் எங்கோ ஆரம்பித்து, எங்கோ வந்து முடிந்திருக்கிறது. நாவல் வெளிவருவதில் பலருக்கும் சந்தோஷம் இருக்கும். அவர்களில் நானும் ஒருவன் என்பது மகிழ்ச்சி.

நிறைய எழுதுங்கள் சீனிவாசன்.காலச்சுவடு பதிப்பகம்
                         
இரு நூல்கள் வெளியீடு

நாள்: 20 ஆகஸ்ட் 2016    
நேரம்: காலை 10 மணி
இடம்:  ஆர்த்ரா ஹால், ஹுசூர் சாலை ( அண்ணாசிலை அருகில் ), கோவை

பாரதி பாடல்கள்  பாடுவோர்  – காந்திமாநகர் அரசுப் பள்ளிச் சிறார்கள்

தலைமை உரை :  க.வை. பழனிசாமி
அறிமுக உரை  :  சுகுமாரன்

                              நூல் வெளியீடு

விடம்பனம் ( நாவல் ) சீனிவாசன் நடராஜன்
வெளியிட்டு உரையாற்றுபவர்  : நாஞ்சில்நாடன்
பெற்றுக்கொண்டு உரையாற்றுபவர்  : அநிருத்தன் வாசுதேவன்

*
நகலிசைக் கலைஞன் ( அனுபவக் குறிப்புகள் ) ஜான் சுந்தர்
வெளியிட்டு உரையாற்றுபவர்  : ஆர். ரவீந்திரன்
பெற்றுக்கொண்டு உரையாற்றுபவர்  : வே. பாபு
*
ஏற்புரை

சீனிவாசன் நடராஜன், ஜான் சுந்தர்

நம்மோடு பேச சீனிவாசனுக்கு நிறையவே இருக்கிறது... அதில் ஒன்றுதான் கோவையில் வெளியாக இருக்கும் விடம்பனமும். கோவை நண்பர்களை சீனிவாசன் சார்பாகவும், காலச்சுவடு நிறுவனத்தின் சார்பாகவும் அன்புடன் அழைக்கிறேன்.

நேரில் சந்திப்போம்.

:-)