Wednesday, May 27, 2009

Mathilgal - Vaikom Muhammad Basheer

மதில்கள்: வைக்கம் முகம்மது பஷீர்
விலை: 50 ரூபாய்
வெளியீடு: காலச்சுவடு பதிப்பகம்

எனது வாழ்க்கையில் மிகவும் சிறந்த காலம் எதுவென்றால் எனது பாட்டியின் வீட்டில் வளந்ததுதான்.

அங்கு இருக்கும் போதுதான் புத்தக வாசிப்பும், வேற்று மொழி படங்களைப் பார்க்கும் பழக்கமும் ஏற்பட்டது. முக்கியமாக தரமான மலையாள படங்களைப் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது.

அப்படி நான் பார்த்து வியந்த திரைப்படங்கள் ஏராளம். 'சர்கம், ஹிசைனஸ் அப்துல்லா, மணிச்சித்திரத்தாள்' என்று சொல்லிக்கொண்டே போகலாம். அந்த அனுபவமே குறிப்பிட்ட சில மலையாள திரைப்படங்களின் விமர்சனங்களை படிக்கத் தூண்டியது. அவற்றில் 'மதில்களும்' ஒன்று.

'மதில்கள்' திரை விமரிசனத்தைப் படித்ததிலிருந்தே அதன் மொழிபெயர்ப்பு புத்தகமாக கிடைக்குமா என்று தேடிக்கொண்டு இருந்தேன். அதன்படி சென்ற வாரம் காலச்சுவடு பதிப்பகத்திலிருந்து அந்தப் புத்தகத்தை வாங்கினேன். சுகுமாரன் மொழிபெயர்த்துள்ளார்.

1964 -ஆம் ஆண்டு 'கௌமுதி' வாரப் பத்திரிகையின் ஓணச்சிறப்பிதழில் தான் மதில்கள் முதன் முறையாக வெளிவந்துள்ளது. வார இதழின் ஆசிரியர் பஷீரின் கதையைத் தழுவி எடுக்கப்பட்ட 'பார்கவி நிலையம்' திரைப்படத்தின் வசனத்தைத்தான் வெளியிடுவதாக இருந்தாராம். அதை இதழிலும் வெளியிட்டிருக்கிறார்.

பஷீரின் கதை என்பதால் வாசகர்கள் ஆவலுடன் இருந்துள்ளனர். அந்த திரைப்பட வசனத்தை வெளியிடுவதில் பஷீருக்கு சில சிக்கல்கள். எனவே வேறு கதை எழுத வேண்டிய சூழ்நிலை. அப்படிப்பட்ட அவசர நிலையில் எழுதியதுதான் மதில்கள் கதை. அந்த அவசர சூழ்நிலையில் பஷீருடன் இருந்த 'பழவிள ரமேசன்' மதில்கள் கதை உருவாகிய விதத்தை 'மதில்கள் பணிமனை' என எழுதிய கட்டுரை புத்தகத்தில் இணைக்கப்பட்டுள்ளது.

ஆடூர் கோபாலகிருஷ்ணன் இயக்கிய 'மதில்கள்' திரைப்படம் தேசிய அளவில் விருது பெற்ற முக்கியமான படைப்பு. இதை திரைப்படமாக நான் பார்த்ததில்லை. விமர்சனமாக மட்டுமே படித்திருக்கிறேன். மதிலுகள் கதையை திரைப்படமாக எடுப்பதிலுள்ள சிக்கல்கலை அடூரார் தனது கட்டுரையில் விளக்கியுள்ளார். அந்தக் கட்டுரையும் இப்புத்தகத்தில் இணைக்கப்பட்டுள்ளது.

புரச்சிகரமாக பத்திரிகையில் எழுதியதால் சிறை செல்லும் ஒருவன் மதில்களுக்கு அப்பாலுள்ள பெண் கைதியின் மீது காதல் கொள்கிறான். அவளும் இவனைப் பார்க்காமலே காதல் கொள்கிறாள். இருவருக்கும் இடையிலிருக்கும் மதில் அவர்களுடைய காதலுக்கு சாட்சியாக இருக்கிறது. ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ள மதிலே தடையாகவும் இருக்கிறது.

காதல் வளர்ந்து இருவரும் ஒருவரை ஒருவர் பார்க்க ஆவலுடன் இருக்கிறார்கள். குறிப்பிட்ட நாளில் சிறை மருத்துவமனையில் இருவரும் சந்திப்பதாக பேசிக்கொள்கிறார்கள். அந்த நாளுக்கு முன்பே காதலன் விடுதலை பெற்று கனத்த இதயத்துடன் சிறையை விட்டு வெளியில் செல்கிறான்.

ஒரே நேர்கோட்டில் செல்லும் கதையாக இருந்தாலும் பஷீரின் தேர்ந்த படைப்பாற்றலால் சுவாரஸ்யம் கூடுகிறது.

பிரவீன்குமார் எழுதிய மதில்கள் கட்டுரையைப் படிக்க கீழே அழுத்தவும்.
மதிலுகள் - வைக்கம் முகமது பஷீர்

இந்தக் கதையை சிறு கதையிலும் சேர்க்க முடியாமல், குறுநாவலிலும் சேர்க்க முடியாமல் திரிசங்கு சொர்க்கம் போல் தொங்கிக்கொண்டு இருந்தாலும், மலையாள இலக்கியத்தில் முக்கியமான படைப்பாக வைத்து இன்று வரை கொண்டாடப்படுகிறது.

Tuesday, May 26, 2009

Kuthiraigalin kathai - Pa. Ragavan

குதிரைகளின் கதை: பா ராகவன்
விலை:
35 ருபாய்
வெளியீடு:
கிழக்கு பதிப்பகம்

சில நாட்களுக்கு முன்பு என் மனதிற்கு நெருக்கமான தோழர்களிடமிருந்து ஒரே மாதிரியான SMS message கைபேசியில் வந்திருந்தது.

"மகாத்மா காந்திக்கும், நடிகர் ஷாருக்கானுக்கும் ஒரு ஒற்றுமை இருக்கிறது அது என்ன?". எனக்கு ஆச்சர்யம் அளித்த கேள்விகளில் இதுவும் ஒன்று. அதெப்படி காலம் கடந்து வாழும் தேசத்தலைவர் நடிகர் ஒருவருடன் ஒத்துப்போக முடியும். இல்லை நடிகர் தான் தேசத் தலைவர் அளவிற்கு உயர்ந்து விட்டாரா? அவர்கள் என்னை அதிகம் யோசிக்க விடவில்லை.

"இரண்டு பேருமே தென் ஆப்ரிக்காவிலிருந்து அவமானப்பட்டு திரும்பினார்கள்" என அவர்களே பதிலும் கொடுத்திருந்தார்கள்.

என்னுடைய பதின் வயதிலிருந்து நான் கிரிக்கெட் பார்ப்பதில்லை ஆதலால் எனக்கு ஒன்றும் புரியவில்லை.

கடந்த ஞாயிறன்று போன்னேரிக்குச் சென்றேன். நண்பன் ராஜேஷ் தான் என்னை தெளிவுபடுத்தினான். தென்னாப்ரிக்காவில் 20-20 IPL கிரிக்கெட் Match-ல் விளையாடிய நடிகர் ஷாருக்கானின் "கொல்கத்தா நைட் ரைடர்ஸ் டீம்" (kolkata knight riders) தோற்று வெளியேறியதால் இந்த naughty SMS message -ஐ பரிமாறிக் கொள்கிறார்களாம்.

சிறு வயது முதலே காந்தியை அவமானகரமான விஷயங்களுடன் தொடர்புபடுத்தியே பார்த்துப் பழகிவிட்டோம். காந்தி கணக்கு, காந்தி கண்ணாடி இன்னும் பல... அந்த வகையில் இதுவும் ஒன்று என நினைத்துக் கொண்டேன்.

இந்தியர்களைத் தவிர வேறு நாட்டினர் இது போன்ற குறும்புகளைச் செய்வார்களா என்று தெரியவில்லை.

வீட்டிற்கு வந்தவுடன் ஏதாவது கதைகள் படிக்கலாம் என்று யோசித்தபோது பா. ராகவன் குமுதம் ஜங்கஷனில் எழுதி இரண்டு வாரங்களுக்கு ஒரு முறை வெளிவந்த 'காந்தி சிலைக் கதைகள்' அகப்பட்டது. புத்தக வடிவாக "குதிரைகளின் கதைகள்" என்ற பெயரில் கிழக்கு பதிப்பகம் வெளியிட்டுள்ளார்கள்.

மகளின் வீட்டிலிருக்கும் ஓய்வு பெற்ற ஆசிரியர், வீட்டிற்கு சொல்லாமல் துறவு மேற்கொள்ளும் நபர், படிப்பில் கவனம் செலுத்த முடியாமல் தற்கொலைக்கு முயற்சி செய்யும் மாணவன், வேறுபட்ட (இந்து & கிறித்துவ) மதத்தினரின் காதல் பிரச்சனை, கடற்கரையில் குதிரை சவாரி செய்து பிழைப்பு நடத்துபவன், விடுதைலைப் போரில் பங்கேற்க முடியாமல் போன ஓய்வு பெற்ற நீதிபதி, ஜெயிலுக்கு சென்று வரும் தமிழ் ஆசிரியர் என வெவ்வேறு நபர்களைப் பற்றிய எட்டு கதைகள் இருக்கின்றன.

அனைத்து கதைகளும் ஏதோ ஒரு வகையில் காந்தி சிலையருகே நடப்பது போல் கதையைக் கொண்டு சென்றுள்ளார். வாழ்க்கைப் பந்தையத்தில் லாடமடிக்கப்பட்ட குதிரைகள் போல் தங்களுக்கு வகுக்கப்பட்ட இலக்கை நோக்கி ஓடும் மனிதர்களைப் பற்றிய கதையில் காந்தியை அங்கமாக எதோ ஒரு விதத்தில் சேர்க்கிறார். காந்தியத் தத்துவத்தை ஊன்று கோலாக அவர்களுடைய வாழ்க்கையில் முன்னிறுத்துகிறார்.

'கூறாமல் சந்நியாசம்' என்ற கதையைப் படிக்கும் போது பா.ராகவனின் "அலகிலா விளையாட்டு" குறுநாவல் தவிர்க்க முடியாமல் ஞாபகத்திற்கு வந்தது. அந்த நாவலின் சாயல் இல்லையென்றாலும் ஏனோ என்னால் அதைத் தவிர்க்க முடியவில்லை.

பா.ராவின் வித்தியாசமான சிறுகதை முயற்சி. பாராட்டப்படவேண்டிய முயற்சியும் கூட. அரசியல் சார்ந்த கட்டுரைகளிலும், ஆராய்ச்சிகளிலும் தனது முழு கவனத்தையும் செலுத்துவதால் கதை மற்றும் நாவல் சார்ந்த முயற்சிகளை வெகுவாகக் குறைத்துக் கொண்டுள்ளார். ஒரு வகையில் நமக்கு அது பெரிய இழப்புதான்.

Tuesday, May 19, 2009

Ulaga pugazh pettra mooku - vaikkam bashir

உலகப் புகழ் பெற்ற மூக்கு: வைக்கம் முஹம்மது பஷீர் விலை: 240 ரூபாய்
வெளியீடு: காலச்சுவடு பதிப்பகம்

நூற்றாண்டுகால பழமை வாய்ந்த சென்னை-மத்திய சிறைச் சாலையை சென்னை மாநகராட்சி இடிக்க இருப்பதால் பொதுமக்கள் பார்வைக்காக இலவசமாக திறந்துவிட்டார்கள்.

மார்ச் 01-2009 அன்று நண்பர் முத்துவை அங்குவந்து சந்திப்பதாகச் சொல்லியிருந்தேன். முத்து அவனுடைய அறைத் தோழர்கள் இரண்டுபேரை உடன் அழைத்து வந்திருந்தான். அதில் வினோத் நிஸ்துல்யா என்றொரு மலையாளி இருந்தான். சிறிது நேரம் பேசியதில் அவனுக்கு பஷீரின் படைப்புகள் மீது தீராத பற்று இருப்பது தெரியவந்தது.

நீங்கள் பஷீரின் கதைகளை படித்திருக்கிறீர்களா என்று என்னிடம் கேட்டான். அவருடைய படைப்புகளின் மொழியாக்கத்தை பல வருடங்களாக தேடிக்கொண்டு இருக்கிறேன் ஆனால் கிடைக்கவில்லை என்று சொன்னேன். "கிடைத்தால் வாங்கிப் படிங்க மாமா அவருடைய எழுத்து நல்லா இருக்கும், தேர்ந்த கதை சொல்லி" என்று பரிந்துரை செய்தான்.

பின்நாளில் அவன் பஷீரின் மொத்த படைப்புகளையும் வாங்கப் போவதாகச் சொன்னான்.

பல வருடங்களுக்கு முன்பு "மதிலுகள்" திரைப்படத்தின் குறிப்புகளைப் படிக்க நேர்ந்தது. அது பஷீரின் சிறுகதைகளில் ஒன்று. அடூராரால் படமாக்கப்பட்டது. (நடிகர் மம்முட்டிக்கு முதல் தேசியவிருது வாங்கித்தந்த படம் இதுதான் என்று நினைக்கிறேன்). அதில் கதாசிரியரான பஷீரை சிலாகித்து எழுதியிருந்தார்கள். அதிலிருந்தே பஷீரின் படைப்புகள் தமிழில் கிடைக்காதா என்று தேடிக் கொண்டிருந்தேன். என்ன தேடியும் பஷீருடைய படைப்புகளின் தமிழாக்கம் கிடைக்கவில்லை.

நீண்ட தேடலுக்குப் பிறகு கிழக்கின் "காலம் முழுதும் கலை - வைக்கம் முகமது பஷீர்" என்ற புத்தகம் கிடைத்தது. அதுகூட அவருடைய வாழ்க்கை மற்றும் படைப்புலகம் பற்றி தெரிந்துகொள்ளத்தான் உதவியது. இருப்பினும் அவருடைய படைப்பின் மீதான வாசிப்பனுபவம் சூன்யமாகவே இருந்தது. பஷீரின் வாழ்க்கையனுபவம் அவருடைய படைப்புகளின் மீதான ஆர்வத்தை மேலும் தூண்டிவிட்டது.

சமீபத்தில் வேறொரு புத்தகத்தைத் தேடிக்கொண்டிருக்கும் போது "உலகப் புகழ்பெற்ற மூக்கு" புத்தகம் கிடைத்தது. காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்டுள்ளார்கள். 1940-களின் மத்தியிலிருந்து 1977 வரைலான காலகட்டங்களில் வெளிவந்த பஷீரின் சிறந்த படைப்புகளைத் தொகுத்து மொழி பெயர்த்திருக்கிறார்கள்.

புத்தகத்தின் முன்னுரையாக "M.T. வாசுதேவன் நாயர்" எழுதிய முன்னுரையே அழகான சிறுகதை போல் உள்ளது.

மேலும் ஜென்மதினம், ஐசுக்குட்டி, அம்மா, புனித ரோமம், நீல வெளிச்சம், சிரித்த மரப்பாச்சி, தங்கம், உலகப் புகழ் பெற்ற மூக்கு, பூமியின் வாரிசுதாரர்கள் போன்ற முக்கியமான சிறுகதைகளின் மொழிபெயர்ப்பை புத்தகத்தில் இணைத்திருக்கிறார்கள்.

பசி, இயலாமை, மூட நம்பிக்கை, ஹாஸ்யம், பயம் என பல தளங்களையும் தொட்டுச் சென்றுள்ளார்.

கல்லூரியில் "world renowned nose"என்ற சிறுகதையைப் படித்ததாக ஞாபகம். அதையே புத்தகத்தின் தலைப்பாகவும் வைத்திருக்கிறார்கள்.

பஷீரின் படைப்புகளில் சில (மொழிபெயர்ப்பு):

1. மதிலுகள்
2. இதயதேவி
3. உலகப் பிரசித்தி பெற்ற மூக்கு (புத்தகத்தில் உள்ளது)
4. தங்கம் (புத்தகத்தில் உள்ளது)
5. தம்பி

பஷீரின் கதைகள் யாவும் அவருடைய வாழ்க்கை அனுபவத்தை அடிப்படையாக வைத்து எழுதியாதால் மிக நெருக்கமாக உணர முடிகிறது. இவருடைய கடிதங்கள், கேள்விபதில்கள் மற்றும் நாவல்கள் தொடர்ந்து மொழியாக்கம் செய்யப்பட்டு வெளிவர இருப்பதாக நூலின் ஆசிரியர் குளிச்சல் மு.யூசப் கூறியுள்ளார்.

குறிப்பு: பஷீரின் மதிலுகள் காலச்சுவடில் கிடைக்கிறது. விலை:50 ரூபாய்

Saturday, May 9, 2009

Ilaigalai viyakum maram - s ramakrishnan

இலைகளை வியக்கும் மரம்: எஸ். ராமகிருஷ்ணன் விலை: 70 ருபாய்
வெளியீடு: உயிர்மைப் பதிப்பகம்

எஸ். ராம கிருஷ்ணனின் படைப்புலகம் பெரும்பாலும் பயணங்களையும், மனிதர்களுடனான நேசத்தையும் முன்னிறுத்துபவை. "இலைகளை வியக்கும் மரம்" எஸ். ராவால் எழுதப்பட்டு பல்வேறு காலகட்டங்களில் தமிழில் வெளிவந்த முக்கியமான கட்டுரைகளின் தொகுப்பாகும். இவையாவும் காலச்சுவடு, தீராநதி, உயிர்மை மற்றும் தினமணி போன்ற இதழ்களில் வெளிவந்தவை.

படைப்பார்வத்தால் ஆரம்ப நாட்களில் மேற்கொண்ட பயணங்கள், சென்னையில் தங்குமிடமில்லாமல் தவித்தது, வட்டார இலக்கியத்தின் மீதான ஈடுபாடு, படைப்பாளிகளைச் சென்று சந்தித்தது, தீவிரமான புத்தக வாசிப்பு, கிராமியக் கலையான கொட்டு வாத்தியம், பாவைக் கூத்து போன்றவற்றின் அழிவு, இயற்க்கை விவசாயம், மொழிபெயர்ப்பு, தினசரி வாழ்வின் சம்பவங்கள் என அவர் அவதானித்த முக்கியமான விஷயங்களை பதிவு செய்திருக்கிறார். மேலும் அவர் சந்தித்த இடர்களையும், உதவிய மனிதர்களுக்கு சொல்ல வேண்டிய நன்றியையும் தவறாமல் கூறி மெய் சிலிர்க்கிறார்.

தமிழில் ஆகச் சிறந்த குழந்தைகள் இலக்கியம் இல்லாததைக் கூறி வருத்தப்படுகிறார். பள்ளிகளிலேயே மூத்த படைப்பாளிகளின் சிறார் சிறுகதைகளை அறிமுகப்படுத்த வேண்டும் என்கிறார். பரீட்சை நேரத்தில் மேற்கொள்ளும் சாலைப் பராமரிப்பு பணிகள் எவ்வளவு தடங்கல்களை மாணவர்களுக்கு ஏற்படுத்துகிறது என்று அவருடைய இணையத்தளத்தில் ஏற்கனவே பதிவிட்டிருக்கிறார் (பதில் இல்லாத பரிட்சை).

உலக சினிமா, நாடகம் என தனது கட்டுரைகளில் மேலும் பல அரிய தகவல்களைப் பகிர்ந்து கொள்கிறார்.

நகுலனைப் பற்றி இதற்கு முன்பே இவர் எழுதி படித்திருந்தாலும் மீண்டும் ஒரு முறை இங்கு வாசிப்பது சுவாரஸ்யமாக இருக்கிறது. மற்றபடி சில கட்டுரைகள் துணையெழுத்து மற்றும் காலச்சுவடை நினைவுபடுத்தும் போது சற்றே சோர்வடைய வைக்கிறது.

இந்தப் புத்தகத்தில் சில பிழைகள் இருக்கிறது என புத்தக வெளியீட்டில் சிறப்புரையாற்றிய திரு: சுகுமாரன் அவர்கள் சுட்டிக் காட்டுகிறார். அவற்றைப் படிக்க கீழேயுள்ள திண்ணை இணையத் தளத்திற்குச் செல்லவும்.

சுகுமாரின் விமர்சனம்

Wednesday, May 6, 2009

En peyar ramaseshan - Aadhavan

என் பெயர் ராமசேஷன்: ஆதவன்
விலை: 120 ரூபாய்
வெளியீடு: உயிர்மைப் பதிப்ககம்

கதாவிலாசத்தில் எஸ். ராமகிருஷ்ணன் அறிமுகப்படுத்திய மூத்த படைப்பாளிகளில் ஆதவனும் ஒருவர். அப்படியே "என் பெயர் ராமசேஷன்" மற்றும் "காகித மலர்கள்" என்ற ஆசிரியரின் இரு புகழ் பெற்ற நாவல்களையும் அறிமுகப்படுத்தியிருப்பார். அதிலிருந்தே ஆதவனின் படைப்புகளை தேடிக்கொண்டிருந்தேன். கடைசியில் உயிமைப் பதிப்பகத்தின் வெளியீடாக நிரந்தரப் புத்தகக் கண்காட்சியில் வாங்க நேர்ந்தது.

நாவலின் கருவினை மேலோட்டமாக சொல்லுவதென்றால் பாரம்பரியமான இந்தியக் குடும்பங்களில் மேற்கத்திய கலாச்சாரம் ஏற்படுத்திய தாக்கத்தினைப் பற்றியது எனலாம். மேலும் கலாச்சார மாற்றத்தினால் அணியும் முகமூடி ஏற்படுத்தும் உறவின் சிதறல்களை எதிர் நோக்கும் பொய்யான அணுகுமுறைகளைப் பற்றிய நுட்பமான படைப்பு எனலாம்.

ராமசேஷன் கட்டுக்கோப்பான பிராமணக் குடும்பத்திலிருந்து வந்தவன். குடும்பத்தில் புரட்சி ஏற்படுத்தி கலப்புத் திருமணம் செய்து கொண்ட பெரியப்பாவையே முன் மாதிரியாக எடுத்துக் கொள்கிறான். நூறு ரூபாய்க்கு ஆசைப்பட்டு அவனுடைய அம்மாவின் விருப்பப்படி பொறியியல் கல்லூரியில் சேர்கிறான். அங்கு புதிய நண்பனான ராவுடன் அறையைப்பகிர்ந்து கொள்கிறான். விடுதி வாழ்க்கை அவனுக்கு மேலும் சில நண்பர்களையும், சுதந்திரத்தையும் அளிக்கிறது.

ராவ், மூர்த்தி இருவரும் உடன் படிக்கும் கல்லூரி தோழர்கள். ராவுடனான நெருக்கம் அவனது வீட்டிற்குச் சென்று குடும்ப உறவினர்களை சந்திக்கும் வரை வளர்கிறது. அங்கு இளமையின் வாசல்களில் ஊஞ்சலாடும் ராவின் தங்கை மாலா அறிமுகமாகிறாள். Infatuation, love, Lust இவற்றில் எது என்று தெரியாதவொன்று ராமிற்கு மாலாவின் மீது ஏற்படுகிறது.

ஆவலுடன் சினிமா, பார்க், ஹோட்டல் என பல இடங்களில் தோல் மீது கை போட்டு சுற்றுகிறான். இவர்களின் வாழ்க்கையில் கவனம் செலுத்துபவர்கள் மீது குரோதம் ஏற்படுகிறது.

மாலா மேற்கத்திய
க் கலாச்சாரத்தில் வளர்ந்தவள் என்பதால் அவனுடைய உருப்பெறாத உணர்வுக்கு வடிகாலாக மாறுகிறாள். மாலாவின் அம்மாவிற்கு இவர்களது உறவு பிடிக்கவில்லை. ராவை எச்சரிக்கிறாள். மாலாவிற்கு இது எரிச்சலை ஏற்படுத்துகிறது. அவளது அம்மாவை மீறி நடக்கவேணும் ராமிடம் நெருங்கிப் பழகுகிறாள். அது அவர்களுடனான உடலுறவு வரை செல்கிறது.

ராமிற்கு இந்த
க் கள்ளத்தனம் நாளடைவில் எரிச்சலை ஏற்படுத்துகிறது. மாலாவிடமிருந்து விலகிவிடுகிறான். இடையில் ராமசேஷனுக்கு பிரேமாவின் நட்பு கிடைக்கிறது. இங்கும் அவளிடம் முழுமையான காதல் என்று சொல்வதற்கில்லை. இந்த உறவும் நாளடைவில் களைந்து விடுகிறது.

தன்னுடைய மனைவியாக இருக்க தகுதியானவள் பங்கஜம் மாமி தான் என்று முடிவு செய்கிறான். அவளுக்கு இவன் வயதிற்கு ஈடான மகள் உண்டு. கணவன் வீட்டைவிட்டு ஓடிவிட்டதால் மாமிக்கும் ராமின் மீது ஒரு பற்றுதல். சமூக யதார்த்தம் இருவரையும் பிரிக்கிறது. மாமி ஜாம்செட்பூரிலுள்ள தனது மகனுடைய வீட்டிற்கு நிரந்தரமாகச் சென்றுவிடுகிறாள்.

சரியாக ராமசேஷனின் கல்லூரி வாழ்க்கை முடியும் தருணத்தில் அவனுடைய அப்பா கடிதம் எழுதி வைத்துவிட்டு வீட்டை விட்டு ஓடி விடுகிறார். இது அவனுடைய உறவுகள் மீதான கணிப்புகளை மேலும் எரிச்சலடையச் செய்கிறது. திருமணத்தில் விருப்பமில்லாமல் அவனுடைய அம்மாவின் மீது எரிந்து விழுகிறான்.

ஒரு நாள் வேலைக்குச் செல்லாமல் சினிமா பார்க்கச் செல்கிறான். அங்கு இவனுடைய தங்கையை ஒரு வாலிபனுடன் பார்க்கிறான். தங்கை வீட்டிற்கு வந்ததும் எப்படியெல்லாம் வசைபாட வேண்டுமென்று சிந்தித்தவாறே அங்கிருந்து நகர்கிறான்.

மேற்கத்திய பாணியிலான போலித்தனங்கள் ராமசேஷனை தோற்கடிக்க நினைத்தாலும் கடைசியில் வரையறுக்கப்பட்ட சம்பிரதாய போலித்தனகளையே வாழ்க்கையின் ஆதாரமாக அவன் எடுத்துக் கொள்கிறான்.

Sunday, May 3, 2009

En Jannalukku Veliye... - Maalan

என் ஜன்னலுக்கு வெளியே... : மாலன் (Rs.200) வெளியீடு: கிழக்கு பதிப்பகம்

பத்திரிகையாளர் மாலன் எழுதி கிழக்கு பதிப்பகத்தால் வெளியிடப்பட்டுள்ள "என் ஜன்னலுக்கு வெளியே...", 2005 முதல் 2008 வரையிலான தமிழக அரசியல், தமிழ்ச் சமூகம், தமிழ் இலக்கியம் மற்றும் தமிழக ஆளுமைகளின் இழப்பு என பல்வேறு தளங்களை உள்ளடக்கிய அவரது பார்வையில் அமைந்த கட்டுரைகளின் தொகுப்பு. இவையனைத்தும் தினமணி, புதிய பார்வை, சிங்கப்பூர் தமிழ் முரசு, உயிர்மை, இந்தியா டுடே, அவரது வலைப்பதிவு போன்ற இணைய இதழ்களில் எழுதிய பல்வேறு கால கட்டங்களில் வெளிவந்த தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பு.

நூலின் ஐந்து பெரும் பிரிவாக அரசியல், சமூகம், தமிழ், இலக்கியம் மற்றும் இரங்கல் என பிரிக்கப் பட்டுள்ளது. எனவே கால வரிசை சீராக இல்லாமல் மாறி மாறி வருகிறது. ஆனால் அதை குறை என்றும் சொல்லுவதற்கில்லை.

1). அரசியல்:

ஆரம்ப காலங்களில் சித்தாந்த அரசியல் கொள்கைகளைக் கொண்ட கட்சிகள் தற்போது நீர்த்து; சுயத்தை இழந்து முரண்பட்ட கட்சிகளுடன் கூட்டணி வைத்துக்கொண்டு; தேர்தலின் வெற்றியை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு செயல்படுவதை தனது நீண்ட கால பத்திரிகை துறை அனுபவம் மூலம் விமர்சித்து கவனம் செலுத்தப் பட வேண்டிய பல விஷயங்களை நம்முடன் பகிர்ந்து கொள்கிறார்.

தமிழகத்தின் அரசியல் சூழலில் வாரிசு அரசியல் ஏற்படுத்திய தாக்கத்தை, கருணாநிதி மற்றும் மாறனின் உறவிலிருந்து ஸ்டாலின், தயாநிதி மாறன், அழகிரி, கனி மொழி ஆகியோரின் அரசியல் பிரவேசம் வரை ஆராய்ந்து எழுதியுள்ளார். அதற்கான போதிய நேரமும் எடுத்துக்கொள்கிறார். ஆரம்பத்தில் வாரிசு அரசியலை எதிர்த்தவர்களே இன்று தனது வாரிசுகளை சட்ட மன்றத்திற்கும், பாராளுமன்றத்திற்கும், நாடாளுமன்றத்திற்கும் அனுப்பும் கேலிக் கூத்தை, முரணான செயலை நயமாக எடுத்துச்சொல்கிறார்.

இதைத் தவிர தமிழகத்தின் முக்கியப் பிரச்சனைகளான நதி நீர்ப் பிரச்சனை, ராமர் பால பிரச்சனை, தமிழீழப் பிரச்சனை என முக்கியமான பிரச்சனைகளை உணர்ச்சி வசப்படாமல் அலசியுள்ளார்.

முக்கியமாக தமிழீழ பிரச்சனையில் (தமிழர்களுக்கான அநீதி என) உணர்ச்சி வசப்படாமல் அண்டை நாட்டின் பிரச்சனையாக, நிதானமாக தன்னுடைய கருத்தைச் சொல்லிச் செல்கிறார்.

ஆட்சியில் நிரந்தரமாக இருக்க தேவையான வியூகங்களை மட்டும் வகுக்கும் ஆட்சியாளர்கள், தொலைநோக்கு பார்வையுடன் நீண்ட காலத்திற்கு பயன் தரக்கூடிய நீர் வளத்தைப் பெருக்குதல், நதிநீர் மீதான உரிமையை நிலை நாட்டுதல், சுற்றுச்சூழலைப் பாதுகாத்தல், கட்டுமானப் பணிகளை அதிகரித்தல், விலைவாசியை கட்டுக்குள் வைத்திருத்தல், சிற்றூர்களில் வேலை வாய்ப்புகளை உருவாக்குதல் போன்ற துறைகளில் கவனம் செலுத்தலாமென மாலன் பரிந்துரைக்கிறார்.

2). சமூகம்

வேட்டை சமூகம் - வேளாண் சமூகம் - நிலவுடமைச் சமூகம் என்ற பரிணாம வளர்ச்சி ஏற்பட்டு, சொத்து என்ற கருத்தாக்கம் வலுப்பட்ட போது அரசியல் தொடங்கியது" என முழங்கும் மாலன் அரசியல் சார்ந்த சமூகத்தின் பிரச்சனைகளை இந்தக் கட்டுரைகளின் மூலம் பகிர்ந்து கொள்கிறார்.

சமீப காலங்களில் இந்தியா எதிர் கொண்ட தீவிரவாதத் தாக்குதல், இயற்கை இடர் பாடுகளான நில நடுக்கம், சுனாமி, மழையின்மை, காலம் தவறிய மழை அதனால் மக்கள் படும் துயரங்கள், அரசு மீட்புப் பணிகளில் காட்டும் உடனடி நடவடிக்கை மற்றும் சுணக்கம் ஆகியவறை கண்டிக்க வேண்டிய இடத்தில் கண்டித்தும், பாராட்ட வேண்டிய இடத்தில் பாராட்டியும் எழுதியுள்ளார்.

சிறுபான்மையினர் மற்றும் தாழ்த்தப் பட்டவர்களுக்கான இட ஒதுக்கீட்டு முறையில் தற்போதுள்ள குறைகளையும் அதை நிவர்த்தி செய்வதற்கான அவருடைய கருத்துக்களையும் சொல்கிறார். அரசு மற்றும் தனியார் கல்லூரிகளுடனான இட ஒதுக்கீட்டு முறையிலுள்ள பிரச்சனைகளையும் மறக்காமல் அசை போடுகிறார்.

இந்தியா சுதந்திரம் பெற்றதிலிருந்து சந்தித்து வரும் முக்கியமான பிரச்சனை பெண் சிசுக் கொலை. கடந்த பத்தாண்டுகளில் ஒரு கோடி பெண் சிசுக்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள் என்று இவருடைய கட்டுரையைப் படித்து அதிர்ந்து போனேன். அதுவும் நடுத்தர மற்றும் பணம் படைத்த குடும்பங்களில் தான் இது போன்ற சம்பவங்கள் அதிகம் நடக்கிறது என்பது என்னை மேலும் அதிர வைத்தது.

வெளிநாட்டு வாழ் இந்திய வம்சாவளி யாராவது சாதனை படைத்தால், அதனை இந்தியாவின் சாதனையாக ஊடகங்கள் வர்ணிப்பதை கடுமையாக சாடுகிறார். ஜிண்டால், சுனிதா வில்லியம்ஸ், ஃபிஜியில் மகேந்திர சொளத்ரி, சிங்கப்பூரில் நாதன் ஆகியோர் பெற்ற முக்கியத்துவத்தைக் காரணம் காட்டி இந்தயா வல்லரசாகும் என்றும், இந்தியர்களின் சாதனை என்றும் முழங்குவதை ஊடகங்களின் தவறான பிரச்சாரம் என்று சாடுகிறார்.

கல்பனா சாவ்லா இந்தியர் என்பதால் பெருமை கொள்வதில் ஞாயம் இருக்கிறது. மற்றவர்களின் சாதனைகளும் பாராட்டப் பட வேண்டியவைதான். ஆனால் அவர்களை இந்தியர்கள் என்று சொல்லி குதூகலிப்பதைத் தவிர்க்க வேண்டும் என்கிறார்.

கிழக்கிந்தியக் கம்பெனியை நிர்வகிக்க வந்த பிரான்சிஸ் டே வணிக துறைமுகத்திற்கு உகந்த இடமாக பழவேர்காட்டைத்(Pulicat) தான் தேர்ந்தெடுத்தாராம். சாந்தோமிலிருந்த ஒரு பெண்ணின் சகவாசத்தினால் தனது முடிவை மாற்றி சாந்தோம் பக்கத்திலுள்ள சிறிய இடத்தைத் தேர்ந்தெடுத்தாராம். ஆகஸ்ட் 22 1639-ல் அவரது ஆலோசனைப் படி நகரம் தோற்றுவிக்கப் பட்டது. அது ஆரம்பத்தில் தண்ணியில்லாக்காடாக இருந்துள்ளது. அதனாலேயே அவர் வேலையிலிருந்து நீங்கப் பட்டாரம். அவர் அன்று தேர்ந்தெடுத்த இடம் தான் நாம் இன்று வசிக்கும் சென்னை மாநகரம்.

இவருடைய கட்டுரைகளை படிப்பதற்கு முன்பு வரை இங்கிலாந்து, அமெரிக்க போன்ற மேற்கத்திய நாடுகள் தான் உலகின் மகிழ்ச்சியான நாடுகள் என்று நினைத்துக் கொண்டு இருந்தேன். ஆனால் மகிழ்ச்சி நிறைந்த தேசம் என்று vanuatu island -ஐ அறிமுகம் செய்கிறார். எனக்கு நினைவு தெரிந்து இது போல் ஒரு தேசத்தை நான் கேள்விபட்டதில்லை. vanuatu தீவினைப் பற்றி தெரிந்து கொள்ள www.vanuatutourism.com- இணைய தளத்திற்கு செல்லவும்.

3). இலக்கியம்

ஜீன் அரசநாயகம் (அடையாளங்களுக்கு அப்பால்...), அ. முத்துலிங்கம் (அங்கே இப்போ என்ன நேரம்?), கி.ரா வின் படைப்புகள்(கி.ரா 85 காலத்தை வென்ற கதை சொல்லி), முனைவர்.எம். எஸ். ஸ்ரீலக்ஷ்மி (சிங்கப்பூர் தமிழ் இலக்கியம் ஆழமும் அகலமும்), உ.வே.சா (காலச்சுவடிற்கு ஒரு கேள்வி), மணா(வரலாற்றின் வழித்தடங்கள்), நகைச்சுவை நடிகர் நாகேஷின் வாழ்க்கைப் புத்தகம்(வெற்றியின் முகம் அத்தனை அழகானதல்ல!) என அவருக்குப் பிடித்த முக்கியமான படைப்புகளையும், ஆளுமைகளையும் குறித்து எழுதியுள்ளார்.

குறிப்பு: அடைப்பிற்குள் இருக்கும் சுட்டிகளை அழுத்தி மாலனுடைய வலைப் பக்கத்தில் கட்டுரைகளைப் படிக்கவும்.

4). தமிழ்

தமிழ் மொழியின் அச்சுறு குறித்தும், அதனுடைய இணைய வளர்ச்சி குறித்தும் இங்கு அசை போடுகிறார். மேலும் வலைப்பூவின் மூலம் பெருகி வரும் தமிழ் பதிவர்களின் அதிகமான எண்ணிக்கையைக் கண்டு மகிழ்ச்சியடையும் இவர், அதனுடைய அடுத்த கட்ட வளர்ச்சியை அடைய மாணவர்களிடம் இது போன்ற தொழில் நுட்பத்தை எடுத்துச் செல்ல வேண்டும் என்று அறிவுறுத்துகிறார். அதற்கு அரசு ஆவன செய்ய வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை வைக்கிறார்.

5). இரங்கல்

சுந்தர ராமசாமி, பாரதி(மனிதனுக்கு மரணமில்லை), ஆண்டான் பாலசிங்கம், EROS இரத்தின சபாபதி, விமரிசகர் ஏ.ஜே என்று அழைக்கப்படும் அலோசியஸ் ஜெயராஜ் கனகரட்னா, கவிஞர் சு. வில்வரத்தினம், பல அரசியல் புத்தகங்கள் தமிழில் வெளிவர காரணமாக இருந்த மூத்த படைப்பாளி, மொழி பெயர்ப்பாளர் சாமி நாத சர்மா, கதாசிரியர் தி.ஜா.ரா, சுஜாதா, சதாம், ஆதிமூலம், சிங்கப்பூர் தமிழ் முரசின் ஆசிரியராகப் பணியாற்றிய திருநாவுக்கரசு, லா.சா.ராமாமிருதம் ஆகியோரின் மறைவிற்கு மரியாதை செலுத்தும் விதமாக அவர்களைப் பற்றிய குறிப்புகளை நம்முடன் பகிர்ந்து கொள்கிறார்.

புத்தகத்தில் பொதிந்துள்ள செறிவான கருத்துக்கள் ஏராளம். அவை முழுவதையும் இங்கு பதிவிட இயலாது என்பதால் முழு புத்தகத்தையும் பற்றிய சிறு குறிப்பை முன்வைக்கிறேன்.

மாலனின் எளிமையான நடையில் சமீப கால அரசியலின் முக்கிய நிகழ்வுகளின் குறிப்புகளை அன்றாட இதழ்களில் படிக்கத் தவறவிட்டவர்களுக்கு இந்தப் புத்தகம் நல்லதொரு வாய்ப்பை மறுபடியும் அளிக்கிறது.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13

இந்தப் புத்தகத்திலுள்ள சில கட்டுரைகளைப் படிக்க மேலே கொடுக்கப்பட்டுள்ள எண்களை அழுத்தி மாலனின் வலைப் பக்கத்திற்குச் செல்லவும்.