Friday, December 31, 2010

சென்னை புத்தகக் கண்காட்சி - 2011

ஓரூரில் ஓர் அரசன் இருந்தானாம். அவனுக்கு ஒரு வினோதமான எண்ணம் தோன்றியதாம். அரசர்களிலேயே அறிவாளி என்று பெயர் எடுக்க வேண்டும். எல்லாவற்றையும் தெரிந்தவனாக இருக்க வேண்டும் என்று நினைத்தானாம். தனது ஆசையை அமைச்சரவை கூட்டி அதனைத் தெரியப்படுத்தினானாம்.

புத்திசாலி அமைச்சர்கள் ஒன்று சேர்ந்து, கூடிப்பேசி அரசனிடம் சென்றார்கள். "அரசே, நமது நூலகத்தில் உலக காவியங்களும், தர்க்க ரீதியிலான தத்துவ நூல்களும் சொல்லிக் கொள்ளும்படி சேமிப்பில் இல்லை. மேலும் அறிவியல் மற்றும் விஞ்ஞானத்தில் அயல் நாட்டவர் தானே சிறந்து விளங்குகிறார்கள். எல்லாவற்றையும் சேகரிக்க தனிக் குழுவை அமைக்க வேண்டும். அதற்கு பல ஆண்டுகள் ஆகும்" என்று கூறினார்கள்.

"அதனால் என்ன? நூல்களை சேகரிக்க உடனே ஆட்களை அனுப்புங்கள். தாமதம் வேண்டாம். காரியம் முடிந்ததும் என்னை தொடர்பு கொள்ளுங்கள்." என்று சொல்லிவிட்டு அந்தப்புறத்திற்கு விரைந்தானாம் அரசன்.

நாட்கள் உருண்டோடின. பொசுக்கும் கோடை, கொட்டும் மழை, வாட்டும் குளிர், துளிர்க்கும் வசந்தம் என காலம் ஓடியது... பருவ சுழற்சியை பலமுறை கண்டது நாடு. புத்தகம் சேகரிக்க சென்றிருந்தவர்கள் நாடு திரும்பினார்கள். இந்த சேதி அரசனுக்குத் தெரிவிக்கப்பட்டது. நழுவும் ஆடையை சரிசெய்தபடி அந்தப்புறத்திலிருந்து ஓடோடி வந்த அரசன் குவியலைப் பார்த்து மலைத்து நின்றானாம்.

"இதென்ன சோதனை மங்குனி அமைச்சர்களே! இமாலயக் குவியலாக இருக்கிறதே? இவையனைத்தையும் படிக்க ஓர் ஆயுள் போதாதே!. அறிவார்த்த விஷயங்களைத் தெரிந்து கொள்வதில் ஆவல் இருந்ததே தவிர அதற்காக உழைக்கவில்லை. என்னுடைய இளமையெல்லாம் சிற்றின்பத்தில் கழிந்துவிட்டதே. இயற்கை என்னை அழைக்க வரும் நாட்களும் வெகு தூரத்தில் இல்லையே!" என்று வருந்தினானாம்.

மன்னர் மன்னா! நீங்கள் பால்யத்தில் தொடங்கி இருப்பினும், உங்களுடைய எண்ணம் இதுவாகவே இருக்கும். ஏனெனில் கற்றது கையளவு கல்லாதது உலகளவு என்பது ஆன்றோர்கள் வாக்கு.

"நீர் சொல்வதும் உண்மைதான் அமைச்சரே!" என்று ஆற்றாமையை பகிர்ந்துகொள்ள அந்தப்புறத்திற்கு விரைந்தானாம் அரசன்.

ஆங்கில வருடம் துவங்கும் ஒவ்வொரு முறையும் எனக்கு மங்குனி அரசனின் ஞாபகம் தான் வரும். ஏனெனில் புத்தகக் கண்காட்சியும் ஆண்டின் தொடக்கத்தில் தானே வருகிறது. நூற்றுக் கணக்கான பதிப்பகங்களின், ஆயிரக் கணக்கான புத்தகங்கள் ஒவ்வொரு முறையும் மலைப்பையே ஏற்படுத்துகின்றன.

சிற்றின்பங்களும் சோம்பேறித் தனமும் அதிகமானதால் இதுவரை வாங்கிய புத்தகங்களைக் கூட பக்கங்கள் புரட்டப்படாமலே வைத்திருக்கிறேன். அப்படியிருந்தும் 34வது சென்னை புத்தகக் கண்காட்சி 2011-ல் சில புத்தகங்களை வாங்க திட்டமிட்டு இருக்கிறேன். அவற்றின் பட்டியல்...

1. கடவு - திலிப் குமார் (க்ரியா)
2. ராமகிருஷ்ண பரமஹம்சர் முழுக்கதைகள்
3. வள்ளலார் வாழ்க்கை மற்றும் கதைகள்
4. காலச்சுமை - ராஜ்கௌதமன் (தமிழினி)
5. குளச்சல் மு யூசுப் - மொழிபெயர்ப்பு - காலச்சுவடு
6. காஷ்மீர் - பா ராகவன் (கிழக்கு)
7. கிளாசிக் வரிசை - புதிய வெளியீடு (காலச்சுவடு)
8. ஸ்பெக்ட்ரம் சர்ச்சை - பத்ரி (கிழக்கு)
9. திருக்குறள் - மு.வ உரையுடன்
10. எஸ்.சங்கர்நாராயன் கதைகள் - இருவாச்சி பதிப்பகம்
11. ஜெயமோகன் புத்தகங்கள்
12. சாமியாட்டம் - எஸ் பாலபாரதி
12. விமலாதித்த மாமல்லன் கதைகள் - உயிர்மை பதிப்பகம்

கவிதைகள்: உயிர்மை பதிப்பகம்
1. தீக்கடல் - நரசிம்
2. வெயில் தின்ற மழை - நிலாரசிகன்
3. ஞாயிற்றுக்கிழமை மதியப்பூனை - அகநாழிகை பொன்.வாசு

பரிந்துரைக்கும் புத்தகங்கள் - வரலாறு:

1. இந்திய சீன எல்லை தகராறு - மறு ஆய்வும் தீர்வும்
2. காஷ்மீர்: சந்திரன்
3. டிராகன் - புதிய வல்லரசு சீனா

நாட்டு நடப்பு:

1. தண்ணீர் விட்டோ வளர்த்தோம் - அல்லயன்ஸ் பதிப்பகம்
2. ராஜீவ் காந்தி கொலை வழக்கு - கிழக்கு பதிப்பகம்
3. கிரிமினல்கள் ஜாக்கிரதை - கிழக்கு பதிப்பகம்
4. மாலன் கட்டுரைகள் - கிழக்கு பதிப்பகம்

கதை மற்றும் நாவல்கள்:

1. பஷீர் படைப்புகள் - காலச்சுவடு பதிப்பகம்
2. தோழர் - பாரதி புத்தகாலயம்
3. வெட்டுப்புலி - உயிர்மை பதிப்பகம்
4. மௌனத்தின் குரல் - சாகித்ய அகாடமி பதிப்பகம்
5. ஒற்றன் - காலச்சுவடு பதிப்பகம்
6. தரையில் இறங்கும் விமானங்கள் - தாகம் பதிப்பகம்
7. அலகிலா விளையாட்டு - பா ராகவன்
9. ராஜ் கௌதமன் படைப்புகள் - தமிழினி பதிப்பகம்
10. கிளாசிக் வரிசை - காலச்சுவடு பதிப்பகம்
11. அ முத்துலிங்கம் முழுத்தொகுப்பு - தமிழினி பதிப்பகம்
12. காளி நாடகம் - உயிர்மை பதிப்பகம்
13. கனக துர்கா - வம்சி பதிப்பகம்

கட்டுரைகள்:

1. அங்கே இப்போ என்ன நேரம்? - தமிழினி பதிப்பகம்
2. துணையெழுத்து - விகடன் பிரசுரம்
3. பல நேரங்களில் பல மனிதர்கள் - உயிர்மை பதிப்பகம்
4. தமிழ்ச் சிறுகதை பிறக்கிறது - காலச்சுவடு பதிப்பகம்

கவிதைகள்:

1. பரத்தை கூற்று - அகநாழிகை பதிப்பகம்
2. மயிரு - அகநாழிகை பதிப்பகம்

இவையனைத்தும் என்னுடைய தனிப்பட்ட விருப்பத்தின் அடிப்படையில் பரிந்துரைக்கும் புத்தகங்கள். வாங்கும் பொழுது ஒரு சில பக்கங்களை படித்துவிட்டு வாங்கிக் கொள்ளவும்.

நன்றி...

Thursday, December 30, 2010

மயிரு - யாத்ரா

தலையின் இழிந்த மயிரனையர் மாந்தர்
நிலையின் இழிந்தக் கடை

உயர் நிலையிலிருந்து தாழ்ந்த நிலையை அடையும் மக்கள், தலையிலிருந்து விழுந்த மயிரின் நிலையைப் போல கருதப்படுவர் என்பது வள்ளுவன் வாக்கு.

குளிர்ச்சியான எண்ணெய், வேதிக்களிம்பு என பராமரிக்கும் தலைமுடி வாருகோலின் இழுப்பில் உதிரும்போது சுருட்டி எறிந்துவிடுகிறோம். திருப்பதி, பழனி, திருத்தணி போன்ற கோவில்களில் நேர்த்திக் கடனுக்காக கொடுக்கப்படும் முடி மாதத்திற்கு டன் கணக்கில் சேர்க்கிறது. ஆண்களின் முடி பெரும்பாலும் சாக்லேட் (chocolate) தயாரிக்க உப பொருளாகப் பயன்படுகிறது. பெண்களின் கேசம் அதனுடைய நிறம், நீளம், தன்மை போன்றவற்றைக் கருதி நல்ல விலைக்குப் போகிறது. இந்திய கூந்தலுக்கு வெளிநாடுகளில் நல்ல சந்தை இருப்பதால் பெரும்பாலும் ஏற்றுமதியாகிறது.

லட்சக் கணக்கான சிகை அலங்காரக் கலைஞர்கள் சிறுதொழிலாக முடி வெட்டுவதைத் தானே செய்கிறார்கள். மயிர் வியாபாரம் என்பது ஆண்டுக்கு பல கோடி ரூபாய் வருவாயை ஈட்டக் கூடிய தொழில். 'மயிர்' என்பது குபேர சம்பத்து. என்றாலும் பொது இடத்தில் இந்த வார்த்தையைப் பயன்படுத்துவது அவ்வளவு சரியாக இருக்காது.

மயிரு என்ற தலைப்பு முடிவானதுமே சலசலப்புடன் கூடிய கவனத்தைப் பெற்றது யாத்ராவின் கவிதை நூல். இவருடைய "எப்டியிருக்கிங்க" என்ற கவிதையை மட்டுமே இதுநாள் வரை வாசித்திருக்கிறேன். ஏனெனில் கவிதை என்ற நிறுத்தத்தில் என்னுடைய பேருந்து நிற்காது. வாகனம் பழுதாகி நின்றால்தான் உண்டு. நண்பர்கள் கவிஞர்களாக இருக்கும் பொழுது சாதகமான தயக்கங்களுடன் நிற்க வேண்டி இருக்கிறது. அதுவே தற்செயலான சந்தோஷங்களுக்கும் வழிவகுக்கிறது.

தொகுப்பை வெளியிட்டு பேசிய திரு.ராஜசுந்தரராஜன் கவிதைகள் மீதான ஈர்ப்பையே ஏற்படுத்திவிட்டார். நான்கு வரியே கொண்ட கவிதை கூட எவ்வளவு அழகான, ஆழமான விஷயங்களை அடக்கியிருக்கிறது என்று கவித்துவமாக பேசினார். அடுத்து பேசிய திரு. ஜ்யோவ்ராம்சுந்தர் நிறைகுறைகளை குறிப்பிட்டுப் பேசினார்.

தொகுப்பு கைக்குக் கிடைத்தவுடன் ஒவ்வொன்றாக வாசிக்க ஆரம்பித்தேன். பல கவிதைகளும் பிடித்தமாக இருந்தது. குறிப்பாக,

எட்டிப்பிடிக்க முயல
ரொட்டித்துண்டை இன்னும் உயர்த்த
முயல
உயர்த்த
முயல
எவ்வளவு குரூரம்
வீட்டு நாயாயிருக்கவே
சும்மா விட்டது...

செல்லப் பிரணியுடனான விளையாட்டாகவும், வதைக்கும் செயலாகவும் புரிந்துகொள்ளும் அதே நேரத்தில் தேர்தல் கால சலுகைகளையும் அதன் பின்னர் ஏமாளியாகும் மக்களின் யதார்த்த குறியீடாகவும் இந்தக் கவிதையை எடுத்துக் கொள்ளலாம். இது போன்ற பல கவிதைகளைக் குறிப்பிட முடியும்.

கவிதைக்கு விவரிப்புகள் தேவையில்லை. அது நாவலுக்கு உரித்தானது. ஆனால் கவிதையிலும் கல்யாண்ஜி போன்ற சிலர் விவரிப்புகளை பயன்படுத்தியிருக்கிறார்கள். அந்த வரிசையில் யாத்ராவையும் சேர்க்கலாம். இவருடைய பல கவிதைகளில் விவரிப்புகள் அருமையாக இருக்கின்றன. கவிதைக்கு முடிவும் முக்கியம். அதுவும் இவருக்கு கைவந்திருக்கிறது என்று ராஜசுந்தரராஜன் கூறினார். அதற்கு "இருப்பு" என்ற கவிதையை உதாரணமாக சொல்லலாம். ஒரு சமாதியின் பக்கத்தில் முளைத்த காளன் பற்றிய அழகான கவிதை. தொகுப்பிலுள்ள மிகப்பிடித்த கவிதை இது.

"மயிர் என்னை ஏதோ செய்கிறது. எவ்வளவோ விஷயங்களை எனக்கு சொல்கிறது.தத்துவங்களை கூட சொல்வது போல சமயத்தில் தோன்றும். என்ன செய்வது என்று தெரியவில்லை. இந்தக் தொகுப்பில் கூட 20 முறை பயன்படுத்தப்பட்டு இருக்கும்" என்று தனது நன்றியுரையில் யாத்ரா கூறினார். எதுவுமே உறுத்தக் கூடிய இயல்பில் சேர்க்கப்படவில்லை. அதன் பொருள் கருதியே பயன்படுத்தப் பட்டிருக்கிறது.

"எப்டியிருக்கிங்க" கவிதை மனதை ஏதோ செய்யக்கூடிய ஒன்று. ஒவ்வொரு வார்த்தையும் அழுத்தி வைத்த குமுறலின் வெளிப்பாடு. இதில் கூட ஓர் இடத்தில் முடி இருக்கும்.

"விழுந்த புத்தகமெடுக்க குனிய
கட்டிலுக்கடியில் சுவரோரம்
சுருண்டிருக்கும் நீண்ட ஒற்றைமுடி"

இந்தக் கவிதையை வாசித்து முடித்ததும் "பொதுவாகவே கவிதைகள் எனக்கு அவ்வளவு எளிதில் புரிவதில்லை என்று வருந்துபவன். இந்தக் கவிதை புரிந்தது மட்டுமல்லாமல் ஒரு வலியை ஏற்படுத்திவிட்டது" என்று யாத்ராவிற்கு சொல்லியிருந்தேன்.

முதன் முதலில் யாத்ராவை நேரில் பார்த்தது பசுமையாக நினைவில் இருக்கிறது. சென்னை சிறுகதைப் பட்டறையில் கடைசி இருக்கையில் அமர்ந்திருந்தேன். அருகில் வந்தவன் ஒரு நோட்டை நீட்டி பேனாவைக் கையில் கொடுத்தான். உங்களோட "மின்னஞ்சல் முகவரியும், விவரங்களும் எழுதித் தாருங்கள்..." என்றார்.

இறுக்கமாக முகத்தை வைத்துக்கொண்டு "என்னோட விவரங்கள் உங்களுக்கு எதற்கு?" என்று கேட்டேன்.

"தொடர்பில் இருக்கத் தான்..." என்று சிரித்துக் கொண்டே மென்மையாகக் கூறினார்.

அன்று பார்க்க நேர்ந்த குறும்புச் சிரிப்பும், மகிழ்ச்சியும் அவருடைய முதல் புத்தக வெளியீட்டில் மீண்டும் பார்க்க நேர்ந்தது. அவருடைய மகிழ்ச்சியான பயணம் இன்னும் தொடர வேண்டும் என்று நண்பனாகப் பிரியப்படுகிறேன்.

மென்மையான நண்பனின் புத்தகத்தை வாங்கிப் படிக்குமாறு நண்பர்களுக்குப் பரிந்துரைக்கிறேன். யாத்ராவின் புத்தகம் அகநாழிகை பதிப்பகத்தில் கிடைக்கிறது. புத்தக கண்காட்சியில் அரங்கு எண் 274-ல் அகநாழிகை புத்தகங்கள் அனைத்தும் கிடைக்கும்.

யாத்ராவின் வலைப்பூ முகவரி: http://yathrigan-yathra.blogspot.com

Wednesday, December 22, 2010

வெக்கை - பூமணி

ஆசிரியர்: பூமணி
வெளியீடு: பொன்னி பதிப்பகம்
விலை: ரூபாய் 300/-

கரிசல் மக்களின் வாழ்க்கையை நுட்பமாக தனது படைப்புகளில் பதிவு செய்தவர் எழுத்தாளர் பூமணி. யதார்த்த வாழ்வின் நெருக்கடிகளை இயல்பான மொழியில் பேசுபவை இவருடைய எழுத்துக்கள். கரிசல் விவசாயிகளின் வாழ்க்கை - பருவநிலை, மண்ணின் வாகு, கடின உழைப்பு என்று எத்தனையோ காரணிகளை நம்பி இருக்கிறது. இவற்றையெல்லாம் மீறி கிராமத்து பண்ணையார்களின் தலையீட்டையும் ஆதிக்கத்தையும் பொறுத்துக் கொள்ள வேண்டிய சூழல் குறு விவசாயிகளுக்கு இருந்தது. இப்பொழுது கூட தரகர்களிடமும், பன்னாட்டு நிறுவனங்களிடமும் அவர்கள் சிக்கித் தவிப்பதை பார்த்துக் கொண்டுதானே இருக்கிறோம். இந்தக் கதையும் விவசாய நில பிரச்சனையில் நடந்த கொலையின் தொடர்ச்சிதான்.

எதிரியின் கையை வெட்ட நினைத்து, தவறுதலாக மார்பின் விலாவில் குத்தி சாகடித்துவிட்டு ஓடும் 15 வயது சிறுவனாகிய செலம்பரத்தின்(சிதம்பரம்) பிம்பத்துடன் நாவல் தொடங்குகிறது. ஒருவார கால இடைவெளியில் நீதிமன்றத்தில் சரணடைவதற்கு முன்பு தனது தந்தையுடன் தலைமறைவாக எங்கெல்லாம் சென்று பதுங்கி வாழுகிறான் என்பதுதான் கதை. இந்த சின்ன முடிச்சில் என்ன சொல்லிவிட முடியும் என்று நினைத்தால் அதுதான் தவறு. வாசித்து அனுபவிக்க எவ்வளவோ விஷயங்களை நுணுக்கமாக பூமணி இந்நாவலில் சொல்லி இருக்கிறார்.


செலம்பரத்தின் அப்பா ஜின்னிங் ஃபாக்டரியில் வேலை செய்கிறார். ஃபாக்டரி முதலாளியின் நண்பர் வடகூரான் அந்த கிராமத்திலுள்ள எல்லா நிலங்களையும் தன்னுடைய சந்ததிகளுக்கு வளைத்துப் போட பார்க்கிறார். அப்படியே செலம்பரத்தின் குடும்பத்திற்கு சொந்தமான நிலத்தையும் வளைத்துப் போட பார்க்கிறார். அங்குதான் வருகிறது வினையே!. நிலவிவகாரத்தால் உட்புகைச்சல் ஏற்பட்டு செலம்பரத்தின் அண்ணன் கொலையாகிறான். இந்த குடும்பப் பகையை மனதில் வைத்து, இருள் கவிழ்ந்த மாலை நேரத்தில் செலம்பரம் வடகூரானை வெட்டி வீழ்த்துகிறான். தன்னைப் பிடிக்க வருபவர்கள் மீது கையெறிகுண்டை வீசி தப்பிக்கிறான். இதனை அவனுடைய அப்பாவும், மாமாவும் தெரிந்துகொள்கிறார்கள். எனவே விரைவாக செயல்பட்டு செலம்பரத்தின் அம்மா, தங்கை இருவரையும் அவனுடைய சித்தியின் ஊருக்கு அனுப்பிவிடுகிறார்கள். ஆசையாக வளர்த்த நாயையும், ஆடுகளையும் அத்தையின் பராமரிப்பில் விட்டுவிட்டு தலைமறைவாக வாழப் புறப்படுகிறான்.

கிணற்றடி, பனைக்கும்பல் இருக்கும் நீரோடை, நாணல் புதர், மலையடிவாரம், உச்சிமலை இடுக்குப் பாறை, கல்பொந்து, கோவில் மச்சு என்று எங்கெல்லாம் அப்பாவும் மகனும் செல்கிறார்களோ அங்கெல்லாம் நம்மையும் அழைத்துக் கொண்டு போகிறார்கள். ஒளிந்து வாழும் இடத்தில் கிடைத்ததை சமைத்து சாப்பிடுகிறார்கள். இருவரும் தனிமையில் பேசும் சின்னச் சின்ன உரையாடல்களிலும், அளவான வாக்கியத்தாலும் கதை அழகாக நகர்கிறது. "அப்பா, அம்மா, மாமா, அத்தை, அண்ணன், தங்கை, தம்பி, சித்தி, சித்தப்பா, நாய், ஆடு" என்று நாவலே அன்பால் பிணைக்கப்பட்டுள்ளது. மறைந்து வாழ்ந்தது போதும் என்று முடிவெடுத்து இருவரும் நீதிமன்றத்தில் சரணடைய செல்வதுடன் நாவல் முடிகிறது.

யதார்த்த நெருக்கடிகளுக்கு இடையில் வாழ்ந்த வாழ்க்கையை அசைபோட்டவாறே முழு நாவலும் நகர்கிறது. இந்த நாவல் ஹிந்தியில் மொழிமாற்றம் செய்யப்பட்டிருக்கிறது. "கருவேலம் பூக்கள்" என்ற திரைப்படத்தைத் தொடர்ந்து "வெக்கை" நாவலும் பூமணியால் திரைப்படமாக எடுக்கப்படுகிறது என்று நீண்ட நாட்களுக்கு முன்பு நாளேடுகளில் படித்திருக்கிறேன்.


ஜெயமோகன், எஸ்ரா போன்ற எழுத்தாளர்கள் தனக்குப் பிடித்த நாவல்களை பட்டியலிடும் பொழுது பூமணியின் வெக்கை நாவலையும் தவறாமல் குறிப்பிடுகிறார்கள். தீவிர வாசகர்கள் அவசியம் படிக்க வேண்டிய முக்கியமான நாவல். தற்போது பொன்னி பதிப்பகத்தில் பூமணியின் "பிறகு, வெக்கை, நைவேத்யம், வாய்க்கால்கள், வரப்புகள்" ஆகிய ஐந்து நாவல்களும் ஒரே தொகுப்பாகக் கிடைக்கிறது. பூமணியின் சிறுகதைகள் கூட மொத்த தொகுப்பாகக் கிடைக்கிறது. வாங்க நினைப்பவர்கள் வரும் புத்தக சந்தையில் பொன்னி பதிப்பக ஸ்டாலில் சென்று வாங்கிக் கொள்ளலாம்.

பின்குறிப்பு:
1. இந்த நாவலின் பாதிப்பில் கோணங்கி ஒரு சிறுகதை எழுதி இருப்பதாக ஜெயமோகன் எங்கோ எழுதி இருக்கிறார். அந்த சிறுகதையின் தலைப்பு எனக்கு ஞாபகம் இல்லை.
2. இலக்கிய சிந்தனை விருது, அக்னி விருது, தமிழ்ச் சங்க விருது போன்ற முக்கிய விருதுகளை பூமணி பெற்றிருக்கிறார்.
3. "சினிமாவில் விருப்பமே இல்லாதவர் பூமணி. அவர் ஒரு திரைப்படத்தை இயக்கி இருப்பது வினோதமான உண்மை" என்று ஞாநி பேச கேட்டிருக்கிறேன்.

Monday, December 6, 2010

ஒரு புளியமரத்தின் கதை - சுரா

வயோதிகப் பெண்மணியிடம் ஒரு முறை கிராமத்தில் பேசிக் கொண்டிருந்தேன். ஒரு காலை நீட்டியும், மறு காலால் அரிவாள்மனையை அழுத்தி பிடித்துக் கொண்டும் புளிக் கொட்டைகளை நீக்கியவாறு என்னிடம் பேசிக்கொண்டிருந்தாள். அறிந்து போட்ட புளியம்பழம் குன்று போலவும், கொட்டை நீக்கப்பட வேண்டிய புளி மலைபோலவும் அருகில் இருந்தன. புளியங்கொட்டையையும், காம்பையும் அறியும் பொழுதே தனித் தனியாக பிரித்து வைத்துக் கொண்டிருந்தாள் பாட்டி.

"எந்த காலத்தில் வாழ்கிறீர்கள்? காசு கொடுத்து தேவையான பொழுது கடையில் வாங்கிக் கொள்ளலாம் இல்லையா? இந்த வயதில் உங்களுக்கு இது தேவைதானா?" என்று கேட்டேன்.

"நீ ஏங்கண்ணு பேசமாட்ட... நாங்க அங்கபுடி இங்கபுடின்னு சேத்து வச்சதாலதான. ராசாவாட்டம் சுத்தி வரீங்க" என்றாள் பாட்டி.

"சும்மா படம் ஓட்டாதீங்க!" என்றேன்.

நான் முருகன் டாக்கீசு ஒனருல்ல... அதன் படம் ஓட்டுறேன். நீ வேற ஏன்யா!... நல்ல மரமா பாத்து, ஏலத்த எடுக்கறதே கஷ்டமா போச்சு. சரி... சரி... கேட்டுட்ட இல்ல முழுசா தெரிஞ்சுக்கோ.

பழத்தை பிரிக்க சொல்ல கெடைக்கிற மேல் ஓட்டையும், மேல் காம்பையும் மாட்டு சாணத்துல கலந்து உருண்டையா புடிச்சி காய வைப்போம். தண்ணி காயவக்க உதவுமுள்ள. நரம்பு மாதிரி இருக்கற திப்பியையும், பாதி சொத்தையா போன பழத்தையும் பித்தல சாமான் தேக்க வச்சிக்குவோம். சைக்கிள்ள வரவன்கிட்ட புளியங்கொட்டையை போட்டு காசு பண்ணிடுவோம். நல்ல சதையா இருக்குற புளிய சமையலுக்கு வச்சிக்குவோம். அதுல கூட பழைய புளி, புது புளின்னு கொழம்புக்கு ஏத்த மாதிரி சேர்த்துக்குவோம்.

"ஓடு, காம்பு, திப்பி, பழம், கொட்டை" -ன்னு ஒவ்வொன்னையும் வீணாபோகாம பாத்துக்கிறோம். அந்த மாதிரி சேத்து வச்சித்தான் உங்களைக் காப்பாத்தனோம். இன்னும் ஒன்னை மறந்துட்டேனே. புளியந்துளிரை பருப்புக்கூட சேத்து சமச்சா நல்லா இருக்கும். உங்க வீட்டுல சமச்சா "நீ கூட வழிச்சி வழிச்சி சாப்பிடுவே" -ன்னு உங்க அம்மா சொல்லி இருக்கா!.

பாட்டி பேசி முடித்த இடத்தில் என்னுடைய ஆச்சர்யம் தொடங்கியது. அவள் சொல்லியிருந்த எல்லாம் எனக்கு முன்பே தெரிந்த விஷயங்கள் தான். கழிவு மேலாண்மையைக் (Wastage Management) குறைபட்டுக் கொள்ளும் இன்றைய சமூகம், முன்னோர்களின் வாழ்க்கை முறையிலிருந்து கற்க வேண்டியதின் அவசியத்தை இதுபோன்ற தருணங்கள் தான் உணர்த்துகிறது. இயற்கைக்கு பங்கம் விளைவிக்காத முன்னோர்களுடைய வாழ்க்கை முறைதான் எத்தனை அழகு நிறைந்தது.

ஒரு மரம் காற்றையும், சூரிய ஒளியையும், தண்ணீரையும், மண்-சத்தையும் உறிஞ்சி அதனுடைய தன்மைக்கு ஏற்றவாறு காய்கனிகளைத் தந்து ஆகாயத்தை நோக்கி உயர்கிறது. அவற்றைப் பயன்படுத்தித்தான் உயிர்கள் எல்லாம் ஜீவிக்கிறது. சில நேரங்களில் மரம் கடவுளாகவும், கிராமவாசிகள் சந்திக்கும் மைய இடமாகவும் மாறி விடுவதுண்டு. உலகுக்கே ஞானத்தை போதித்த சம்பா சம்புத்தனுக்கு ஞானம் கிடைத்தது போதி மரத்தின் அடியில் தானே!. அந்த வகையில் இந்த நாவலும் ஒரு மரத்தை சுற்றியே கட்டமைக்கப் பட்டுள்ளது.

ஒரு புளியமரத்தின் கதை - சுதந்திர இந்தியாவின் முன்னரும் பின்னரும் மரத்தைச் சுற்றி நகரும் கதை. மரத்தின் தொன்மம் தாமோதர ஆசானின் மூலம் கற்பனை கலந்து முதல் பாதியில் விவரிக்கப்படுகிறது. செல்லத்தாய் உச்சிக் கிளையில் சுருக்கிட்டு இறந்து போவதையும், மன்னரின் விஜயத்தைப் பொருட்டு மரத்தின் அருகிலிருந்த குளம் மூடப்பட்டு சமதளம் ஆவதையும், வெட்ட வரும் மரத்தை கெப்ளாநிடமிருந்து சாதூர்யமாக காப்பாற்றும் விதத்தையை ஆசான் விவரிப்பதும் மரத்தின் ஜோடனைகளை வெளிப்படுத்தும் ஆரம்ப அமர்க்களம். மரநிழல் எப்படி மக்கள் புழங்கும் இடமாக மாறுகிறது என்பதை சுரா அவருடைய நடையில் சொல்லிச் செல்கிறார்.

கதையின் பின்பாதி தாமு-காதர் ஆகியோரின் வியாபாரப் போட்டியாகவும் அரசியல் போட்டியாகவும் மாறி நகர்கிறது. ஒருவரின் வெற்றியைப் பறிக்க அடுத்தவர் மறைமுகமாக செயல்படுகின்றனர். அதற்காக மனிதத்தின் எல்லை வரை செல்கின்றனர். மரத்தின் நிழல்தான் தாமுவின் வியாபாரத்திற்கு ஆதாரம் என்பதால் 'திருவிதாங்கூர் நேசன்' பத்திரிக்கை நிருபர் இசக்கி, முனிசிபாலிட்டி மூலமாக மரத்தினை அடியோடு சாய்க்க ஆட்களை சேர்க்கிறான். அதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டு மரத்தை வெட்ட வரும் நேரத்தில், தாமு ஆட்களை சேர்த்துக் கொண்டு மரத்தினை தெய்வமாக்கி விடுகிறான். இந்த இடத்தில் ஒரு நெருடல் இருந்தது. வேப்ப மரத்தை முனீஸ்வரனாக, காட்டேரியாக வழிபடும் குடும்பம் எங்களுடையது. எனக்குத் தெரிந்து புளிய மரத்தை இது போல யாரும் பூஜை செய்து நான் கேட்டதில்லை.

காட்டை நம்பி வாழும் வனவாசிகள், ஒரு மரத்தை வெட்டுவதற்கு முன், அந்த மரத்தின் காதில் "என்னுடைய வாழ்க்கையைக் காப்பாற்றிக்கொள்ள உன்னை அழிக்கிறேன். மன்னித்துக்கொள்" என்று முறையிட்டு வேண்டிக் கொண்டுதான் மரத்தை வெட்டுவானாம். எவ்வளவோ முன்னேறி இருக்கிறோம். வீடு கட்டுவதற்காகவும் நெடுஞ்சாலை விரிவாக்கத்திற்காகவும் எவ்வளவு மரங்களை வெட்டுகிறோம். ஒரு நிமிடம் யோசிக்கிறோமா? அதற்கும் உயிர் இருக்கிறது. ஒரு கதை இருக்கிறதென்று?. "அசோகர் சாலை ஓரங்களில் மரம் வளர்த்தார்" என்று சிறுவயதில் வரலாறு பாடத்தில் படித்திருக்கிறேன். அடுத்தடுத்த தலை முறையினருக்கு இந்த வரி ஒரு பகடியாகத்தான் இருக்கும் போல. ரோட்டோரங்களில் மரம் இருந்ததற்கான ஆதாரத்தை ஆவணங்களில் தான் தேடவேண்டி இருக்கும் போல.

முனிசிபாலிட்டி செய்வதறியாது முழிக்கிறது. தாமுவின் முன் தோற்கக் கூடாது என்ற கோணத்தில் காதர் யோசிக்கிறான். அந்த நேரத்தில் கூலி ஐயப்பன் காதருக்கு உதவ முன்வருகிறான். விஷம் கலந்த மருந்தை மரத்தில் பள்ளம் தோண்டி வைத்து சாணியிட்டு நிரப்பிவிட்டு கீழிறங்கும் பொழுது தாமுவின் ஆட்கள் பார்த்து விடுகிறார்கள். அங்கு நடந்த கைகலப்பில் கூலி ஐயப்பன் கொல்லப்படுகிறான். அதற்கடுத்த ஒரு வாரத்தில் மரம் செத்துவிடுகிறது. கடலை தாத்தாவின் அமோக வெற்றியால் தேர்தலில் தோற்ற தாமுவும், காதரும் வேறு ஊர்களுக்கு சென்று விடுகிறார்கள். மரம் முழுவதம் அகற்றப்பட்ட பின்னும் அந்த இடம் 'புளியமர ஜங்க்ஷன்' என்றே அழைக்கப்படுகிறது. அதன்பின்னும் சந்தை தனது இயல்பில் செயல்படுகிறது.

இந்த நாவல் இஸ்ரேலியர்கள் பேசும் புராதன ஹீப்ரூ மொழியில் Sipuro shel Ets Hatamarhindi என்று Dr. Ronit Ricci என்பவரால் நேரடியாக மொழிமாற்றம் செய்யப்பட்டு இருக்கிறது. வேறு எந்த தமிழ் நாவலுக்கும் இல்லாத சிறப்பாக இதனை சுஜாதா கூட தனது கற்றதும் பெற்றதும் தொடரில் குறிப்பிட்டு இருக்கிறார். பல்வேறு இந்திய மொழிகளிலும், உலக மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்ட முக்கியமான நாவல் இது. வெளியான நாளிலிருந்து இதுவரை 12 பதிப்புகள் கண்டுள்ளது. காலச்சுவடு கிளாசிக் வரிசையில் தரமான அச்சில் கிடைக்கிறது

தொடர்புடைய இதர பதிவுகள்:

1. ஒரு புளிய மரத்தின் கதை - ஒரு காலங்கடந்த பார்வை
2. இலக்கிய மேட்டிமைத்தனத்தினுள் உறையும் அற்பவாத இதயம்

ஒரு புளியமரத்தின் கதை
ஆசிரியர்: சுந்தர ராமசாமி
வெளியீடு: காலச்சுவடு பதிப்பகம்
விலை: 150/- ரூபாய்

Saturday, December 4, 2010

எனது மதுரை நினைவுகள்

கேணி ஓவியர் சந்திப்பு - மனோகர் தேவதாஸ்

ஒவ்வொரு நாளும் நம்மைச் சுற்றியுள்ள இடமும் மனிதர்களும் மாறிக்கொண்டே இருக்கிறார்கள். சூழ்நிலையை சமாளித்தவாறே நம்முடைய வாழ்க்கையை முன்னெடுத்துச் செல்கிறோம். கலைந்த பாதச்சுவடுகள் பாதைகளெங்கும் ஏராளமாக விரவிக் கிடக்கிறது. ஏற்படுத்திய பாதங்களை நாம் யோசிப்பதே இல்லை. விரையும் பயணத்தில், பதிந்த சுவடுகளை சிதைத்து விட்டுச் செல்கிறோம். காற்றின் கைகள் வருடும் முன் நம்முடைய தடயங்களை அடுத்தடுத்த ஜோடிக்கால்கள் வேகமாகச் சிதைக்கிறது. இதில் நம் பயணத்தின் அடையாளம் தான் என்ன!?,

மனோகர் தேவதாஸின் வாழ்க்கைப் பயணம் - அலையின் கரங்கள் தீண்ட முடியாத, ஈரக்கால்கள் பதிந்த வசீகரத் தடயம் போன்றது. வாழ்க்கையின் இருப்பே கேள்விக்குறியாகும் பொழுது "அடுத்தது என்ன?" என்ற ஐயம் எழும். எதிர்மறையான தருணங்களை சாதகமாக மாற்றும் பொழுதுதான் வாழ்வின் சுவையான பகுதியினை அனுபவிக்க முடிகிறது. இவருடைய வாழ்க்கை ஊகிக்க முடியாத திருப்பங்களை உடையது. திருப்பங்கள் உறைய வைக்கக்கூடிய அதிர்ச்சியை அளித்தாலும் அதிலிருந்து மீண்டு சாதனை படைத்தவர். அந்த சாதனைகளில் இந்தப் புத்தகமும் ஒன்று.

1940-களின் தொடக்கத்திலிருந்து அவர் வாழ்ந்த மதுரையை சுற்றியே நாவல் நகர்கிறது. பச்சை கிணறு, ஸ்பென்சர்ஸ், ரீகல் டாக்கீஸ், ஆர்வி மில்ஸ், யானை மலை, வைகை ஆறு, அமெரிக்கன் கல்லூரி, மதுரை மீனாட்சி அம்மன் கோயில், திருமலை நாயக்கர் மஹால், தெப்பகுளம், ரயில்வே காலனி என்று நண்பர்களுடன் சுற்றிய பல இடங்களின் பசுமையான நினைவுகளை மீட்டெடுத்துள்ளார். ஆங்கிலேயர் ஆண்ட இந்தியாவில் மதுரை மக்களின் மனநிலை மற்றும் வாழ்வியல் நிலை, சுதந்திர இந்தியாவில் அவர்களுடைய மனநிலை மற்றும் வாழ்வியல் நிலையினை எளிய மக்கள் மற்றும் குழந்தைகளின் உரையாடல் மூலம் அழகாக சொல்லிச் செல்கிறார்.

இந்த புத்தகத்தை எழுத நேர்ந்ததின் கட்டாயத்தை கேணி சந்திப்பில் மனோகர் தேவதாஸ் கூறிய பொழுது நெகிழ்ச்சியாக இருந்தது. Green Well Years - என்று ஆங்கிலத்தில் தான் முதலில் எழுதி இருக்கிறார். அவருடைய நண்பர்கள் மற்றும் எழுத்தாளர் அசோகமித்ரனின் முயற்சியினால் தான் தமிழில் மொழி மாற்றம் செய்திருக்கிறார்.

தூங்கா நகரமான மதுரை வீதிகளில் உலாவ வேண்டுமென்பது நீண்ட நாள் விருப்பம். இதுநாள் வரை அந்த வாய்ப்பு கிடைத்ததில்லை. சபரி மலைக்கு சென்றபொழுது அதற்கான வாய்ப்பு கிடைத்தும் கடைசி நேரத்தில் முடியாமல் போனது. நேரில் சென்று பார்த்திருந்தால் கூட மனோகர் தேவதாஸ் காட்சிப்படுத்தும் புராதன மதுரையை என்னால் உள்வாங்கி இருக்க முடியாது என்றே தோன்றுகிறது. இன்று மதுரை எவ்வளவோ மாறி இருக்கலாம். மாற்றம் எல்லாவற்றிற்கும் பொதுவானதுதானே? அந்த விஷயத்தைக் கட்டுடைத்து காலத்தின் முன்னோக்கியோ அல்லது பின்னோக்கியோ எடுத்துச் செல்லும் பக்கும் படைப்பாளிக்கு மட்டும் தானே இருக்கிறது. அந்த வேலையை தான் ஓவியர் மனோகர் தேவதாஸ் இந்த நாவலில் செய்திருக்கிறார். மதுரைவாசிகள் அவசியம் படித்து அனுபவிக்க வேண்டிய புத்தகங்களில் இதுவும் ஒன்று.மற்றவர்களும் வாசித்து மகிழலாம்.


புத்தகம் தொடர்புடைய இதர பதிவுகள்:

1. எனது மதுரை நினைவுகள் - எழுத்தாளர் தமிழ்மகன்
2. எனது மதுரை நினைவுகள் - பதிவர் பிரேம்குமார்

எனது மதுரை நினைவுகள்
ஆசிரியர்: மனோகர் தேவதாஸ்
வெளியீடு: கண்ணதாசன் பதிப்பகம்
விலை: 150/- ரூபாய்

பின் குறிப்பு: மனோகரின் கலைப் படைப்பு எதை நீங்கள் வாங்கினாலும், அந்தப் பணம் ஏழை மக்களின் கண் மருத்துவ செலவிற்குப் பயன்படுகிறது. அவருடைய "வாழ்த்து அட்டைகள், ஓவியங்கள், புத்தகங்கள்" அனைத்தும் விலைக்குக் கிடைக்கிறது.