Monday, August 17, 2009

ஒற்றன் - அசோகமித்திரன்

ஆசிரியர்: அசோகமித்திரன்
வெளியீடு: காலச்சுவடு பதிப்பகம்
விலை: 100 ரூபாய்

1973 - ஆம் ஆண்டு அமெரிக்காவின் அயோவா சிடியிலுள்ள பல்கலைக் கழகம் உலகிலுள்ள சில மிக்கியமான எழுத்தாளர்களை அழைத்து ஒரு ஏழு மாத கால சந்திப்புடன் கூடிய மாநாடு நடத்தினார்கள். அதற்கு ஜப்பான், ஐரோப்பா, அமேரிக்கா, தென் கொரியா, வாட கொரியா, தைவான், இந்தியா, சிலி, பெரு, ஆப்பிரிக்கா போன்ற பல கண்டம் மற்றும் தேசங்களில் இருந்து எழுத்தாளர்கள் கலந்து கொண்டார்கள். இந்தியாவிலிருந்து அந்த மாநாட்டிற்கு எழுத்தாளர் அசோகமித்திரன் கலந்து கொண்டார்.

டான் இதழில் வெளிவரும் அசோகமித்ரனின் மொழி பெயர்ப்பை படித்து அமெரிக்கத் தூதரகம் மூலமாக அந்த அழைப்பு அவருக்கு வந்திருந்தது.

நாவலின் ஒவ்வொரு அத்யாயமும் வேறுவேறு நபர்களால் சிறுகதை வடிவில் அமைந்துள்ளது. ஒரு அத்யாயமானது மற்றொரு அத்யாயத்தை சார்ந்துள்ளது என்று கூற முடியாது. இது படிப்பவர்களுக்கு ஒரு சுதந்திரம் என்றே நினைக்கிறேன். இதே வடிவில் தான் அ. முத்துலிங்கத்தின் 'உண்மை கலந்த நாட்குறிப்பு'ம் அமைந்திருக்கும். ஆனால் அவர் சிறு வயது முதல் தனக்கு நேர்ந்த பல விஷயங்களை அந்த நாவலில் சொல்லி இருப்பார். ஒற்றனில் அசோகமித்திரன் எழுத்தாளர்களுடனான தனது 7 மாத கால அனுபவத்தை ஒரே கதைக்களத்தை வைத்துக் கொண்டு சொல்லி இருக்கிறார்.

தாங்க முடியாத குளிரில் அவதிப்படுவது, கே-மார்ட் பல சரக்குக் கடையில் சலுகை விலையில் செருப்பு வாங்கி காலை புண்படுத்திக் கொள்வது, புதிதாக வாங்கிய கடிகாரத்தைத் தொலைத்தது, நீண்ட நேரம் பேருந்திற்காகக் காத்திருந்து லாரியில் ஏறிப் போக வேண்டிய இடத்திற்குச் சென்றது, இலக்கியம் படிக்க வந்து காதலில் விழுந்த இலாரியா, அபே குபேக்னா, பிராவோ, கஜூகோ என்ற ஜப்பானிய எழுத்தாளர் என பலருடன் தனக்கு ஏற்பட்ட அனுபவத்தை நகைச்சுவை இழையோட இந்த நாவலில் பதிவு செய்து இருக்கிறார்.

அயோவா சிடி மாநாட்டிற்கு கலந்துகொள்ள இந்தியாவிலிருந்து விமானத்தில் ஏறியது முதல் திரும்பி வரும் வரையுள்ள பல மனிதர்களுடனான அனுபவங்களை வித்யாசமான முறையில் நாவலாக்கியுள்ளார். படித்துக் கொண்டே இருக்கும் போது பல இடங்களில் குலுங்கக் குலுங்க சிரிக்க வைக்கிறார்.

கதை என்றோ - கதையின் நாயகன் என்றோ குறிப்பிட்டுச்சொல்லும் படி யாரும் நாவலில் இல்லை.தனது பயணத்தில் சந்திக்க நேர்ந்த பல நாட்டு மனிதர்களையும், அவர்களுடனான தனது அனுபவங்களையும் கொண்ட நகைச்சுவைத் தொகுப்பு போல் இந்த நாவலை நமக்கு அளித்துள்ளார்.

Details: Otran / Ashoka Mitran - Rs:100

8 comments:

பிரசன்னா இராசன் said...

ஒற்றன் - மிக மிக அருமையான நாவல். புனைவோடு கலந்து நிசத்தில் நடந்த சம்பவங்களை சேர்த்து எழுதியிருப்பார். அதில் ஒரு ஆப்பிரிக்க எழுத்தாளர் ஒரு ஃபுல் சூட்டை வாங்கிக் கொண்டு, அதேயே பல மாதங்களுக்கு போட்டு அலைந்ததையும், ஆட்டோமேட்டிக் கேஸ் ஸ்டவ்விற்கு நெருப்பு பற்ற வைக்க லைட்டரை தேடிய கதையையும் நகைச்சுவையாக சொல்லியிருப்பார். நல்ல பதிவு கிருஷ்ண ப்ரபு. தொடர்ந்து எழுதுங்கள்...

சேரல் said...

Hmmmm.....Padikkanum niraiya... :)

-priyamudan
sEral

அமிர்தவர்ஷினி அம்மா said...

உங்களின் ஒரு பதிவை படித்து இன்னொரு பதிவை படிக்க வரும் கேப்பில் நீங்க ஒரு புத்தகத்தையே படிச்சு விமர்சனம் எழுதிடறீங்க.

பொறாமையா இருக்கு உங்க ப்லாக் பக்கத்தைப் பார்த்தா.

படிக்க எவ்வளவு இருக்குன்னு நினைக்க நினைக்க ப்ரமிப்பாவும் இருக்கு க்ருஷ்ணா.

வாழ்த்துக்கள்

பிரியமுடன் பிரபு said...

அப்பாடா இப்பத்தான் நான் ஏற்க்கனவே படித்த புத்தகத்துக்கு விமர்சனம் எழுதியுள்ளீர்கள்

நல்ல புத்தகம் , வித்தியாசமான அனுபவமாக இருந்தது

ஷிஜூசிதம்பரம் said...

பகிர்தலுக்கு நன்றி நண்பரே

Krishna Prabhu said...

@ பிரசன்னா இராசன்

பின்நூட்டத்த்டிற்கு நன்றி...

@ சேரல்

கண்டிப்பாக சேரல். நிச்சயம் நீ ரசிப்பாய்.

@ அமிர்தவர்ஷினி அம்மா

வாங்க சாரதா... ஒற்றன் கிடைத்தால் படியுங்கள். நன்றாக இருக்கிறது.

@ பிரியமுடன் பிரபு

ரொம்ப நாளா அலையே காணோம். எப்படி இருக்கீங்க.

@ ஷிஜூசிதம்பரம்

பின்னூட்டத்திற்கு நன்றி ஷிஜூ

Anonymous said...

எனக்கு பிடித்த அசோகமித்திரன் புத்தகங்களில் ஒன்று. இது பற்றி என் பதிவுகள் இங்கே.

அசோகமித்ரனின் ஒற்றன் பகுதி 1, பகுதி 2

Anonymous said...

எனக்கு பொதுவாக இ.பா. அவ்வளவு ரசிக்க முடிவதில்லை. ஆனால் இந்த புத்தகத்தை எங்கள் லோக்கல் நூலகத்திற்கு (ஃப்ரீமான்ட், கலிபோர்னியா) வாங்கிக் கொடுத்திருக்கிறேன். இதைப் பற்றிய என் பதிவு இங்கே.

இந்திரா பார்த்தசாரதியின் ஏசுவின் தோழர்கள்