Sunday, June 27, 2010

அறிந்தும் அறியாமலும் - ஞாநி

வெளியீடு: ஞானபானு பதிப்பகம்
விநியோகம்: கிழக்கு பதிப்பகம்
ஆசிரியர்: ஞாநி
விலை: 99/- ரூபாய்

இது பாலியல் கல்வி சமந்தப்பட்ட புத்தகம். எனவே புத்தகத்தைப் பற்றி எழுத வேண்டாம் என்றுதான் நினைத்திருந்தேன். 'தமிழகப் பள்ளியில் ஒரு மாணவி தனக்குத் தானே பிரசவம் பார்த்து குழந்தை பெற்றிருக்கிறாள்' என்ற செய்தியை நாளேடுகளில் படித்த பிறகே இந்தப் பதிவை எழுதுகிறேன்.

'ஆசிரியர் அடித்ததால் தற்கொலை செய்து கொண்ட சிறுவன்'. 'மது அருந்தாதே என்று சொன்ன அத்தையை கொலை செய்து எரித்த மருத்துவக் கல்லூரி மாணவன்'. 'கல்லூரியில் டார்ச்சர் கொடுத்ததால் தற்கொலை செய்து கொண்ட மாணவன்' - இது போன்ற செய்திகளை தினம் தவறாமல் படிக்க நேரும்பொழுது தொண்டையை அடைக்கிறது.

நான் சுட்டிக்காட்ட விரும்புவது தவறு செய்பவர்களின் மீதான குறையை அல்ல. குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுப்பதில் பெரியவர்களாகிய நாம் எங்கு குறை வைக்கிறோம் என்பதைத்தான். ஒரு வேலைக்குச் சேர 15 வருடங்கள் படிக்கிறோம். குறைந்தது ஆறு மாத பயிற்சி (Training) எடுத்துக் கொள்கிறோம். வேலை உயர்வு பெற தொலைதூரக் கல்வியில் சேர்ந்து படிக்கிறோம். ஆனால் குழந்தை வளர்ப்பு மற்றும் மனோவியல் பற்றி துணுக்குச் செய்திகளைப் படிப்பதோடு சரி. அதைத் தவிர்த்து எந்த முயற்சியும் எடுப்பதில்லை. மூன்று வயதில் Play School. அதற்கு மேல் உலகம் புகழும் ஏதாவது ஒரு பள்ளியில் குழந்தையை சேர்த்துவிட்டால் எல்லாவற்றையும் அவர்களே பார்த்துக் கொள்வார்கள் என்பதோடு பெற்றவர்களின் கடமை முடிந்துவிடுகிறது. உண்மையில் அங்குதான் வினையே ஆரம்பிக்கிறது.

சமீபத்தில் Outlook ஆங்கில இதழில் 'Teacher, leave our kids alone' - என்ற கட்டுரையை வாசிக்க நேர்ந்தது. தற்போதைய குழந்தைகளின் நிலையைக் கற்பனை கூட செய்ய முடியவில்லை. குழந்தையின் அறிவு வளரவேண்டும் என்பதற்காக அதிக கவனம் எடுத்துக் கொண்டு ஆயிரம் ஆயிரமாக செலவு செய்யும் பெற்றோர்கள், Abacus class, computer class, music class etc... என்று குழந்தைகளைப் பம்பரம் போல சுழற்றும் பெற்றோர்கள், அவர்களின் Emotional management & mind control - குறித்து யோசிப்பதே இல்லை (இந்த வரியைப் படித்துவிட்டு ஆன்மிகம், பூஜை, தியானம் அல்லது யோகா போன்ற வகுப்புகளில் குழந்தைகளைத் தள்ளாதீர்கள்).

Outlook இதழை படித்து முடித்ததும் Thinkrite Educations Pvt Ltd நிறுவனத்தின் - founder & chief trainer கீர்தன்யாவுடன் உரையாடினேன். அவரிடம் ஆலோசனைக்காக வரும் படிப்பில் சோபிக்காத குழந்தைகளின் முக்கியக் காரணம் அவர்களுடைய பெற்றோர்கள் தான் என்று கூறினார். காலையில் படுக்கையை விட்டு கொஞ்சம் தாமதமாக எழுந்துகொள்ளும் குழந்தையை 'சோம்பேறி...' என்பதில் ஆரம்பித்து, 'பக்கத்து வீட்டு பையனைப் பாரு என்னமா படிக்கிறான்! நீயும் தான் இருக்கியே' என்று குழந்தை படுக்கைக்குச் செல்லும் வரை அவர்களுடைய குறைகளை மட்டுமே பெற்றோர்கள் அதிகமாக பட்டியலிடுகிறார்கள். "குழந்தைகளை வளர்க்கக் கூடாது, அவர்களுடன் சேர்ந்து பெற்றவர்களும் வளர வேண்டும். குழந்தைகளின் உணர்வுகளுக்கு மதிப்புக் கொடுத்தால்தான் அவர்கள் மகிழ்ச்சியாக இருப்பார்கள். நாம் நினைத்ததைவிட அதிகம் பிரகாசிப்பார்கள்" என்றார்.

'கோவம், படிப்பில் கவனமின்மை, பகல் கனவு, தாழ்வு மனப்பான்மை' - இவையெல்லாவற்றையும் தவிர்த்த முக்கியப் பிரச்சனை 'செக்ஸ்'.

செக்ஸ் என்பது 'பெரியவர்களாக இருந்தால் சிறியவர்களுக்கு எங்கே தெரியப்போகிறது என்று நினைக்கும் விஷயம், சிறியவர்களாக இருந்தால் பெரியவர்களிடமிருந்து மறைக்கும் விஷயம்' என்று எங்கோ படித்த ஞாபகம். சினிமா, டிவி, இன்டர்நெட் போன்ற ஊடகங்கள் குழந்தைகளுக்குக் கற்றுக் கொடுப்பதற்கு முன்பே, நமக்குத் தெரியாதவர்களின் மூலம் அவர்களுக்குத் தெரிய வரும் முன்பே, சில அடிப்படை விஷயங்களை (Good touch, Bad touch) நாசூக்காக பெற்றோர்களே சொல்லிக் கொடுக்கலாம் என்று தோன்றுகிறது.

புத்தகத்தை வாங்க இங்கு செல்லவும்: அறிந்தும் அறியாமலும்

'அறிந்தும் அறியாமலும்' தொடரை ஞாநியின் இணையப் பக்கத்தில் படிக்கக் கிடைக்கிறது.

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22

பின் குறிப்பு:
1. கருவுற்ற பெண்கள் மற்றும் குழந்தை வளர்ப்பு பற்றி தினமலர் இதழில் கீர்தன்யா வாரவாரம் எழுதிக் கொண்டிருக்கிறார்.
3. கருவுற்ற பெண்களுக்கான 'Prenatal Parenting' என்ற முக்கியமான ஆலோசனையை இவர் வழங்குகிறார்.
2. 'படிக்காம சுற்றிக் கொண்டு இருக்கான், புருஷன் பொண்டாட்டி ஓத பட்டுக்குறாங்க...' என்று உங்களுக்குத் தெரிந்தவர்கள் யாராவது இருந்தால் இவரிடம் அழைத்துச்செல்லுங்கள்.