Wednesday, April 11, 2012

யுகத்தின் கண்ணாடி யதார்த்தத்தைப் பிரதிபலிக்கிறது

எழுத்தாளர் அரவிந்தனுடன் உரையாடும் சந்தர்ப்பம் சமீபத்தில் வாய்த்தது. அவருடைய “குளியலறைக்கு வெளியே சத்தம் கேட்டுக்கொண்டிருக்கிறது”” என்ற காலச்சுவடில் வெளிவந்த சிறுகதைத் தொகுப்பை சில வருடங்களுக்கு முன் வாசித்திருக்கிறேன். பல்வேறு இதழ்களில் வெளிவந்த முக்கியமான கதைகள் அடங்கிய தொகுப்பு. எம்.வி. வெங்கட்ராம் எழுதி சாகித்ய அகாடமி விருது பெற்ற நாவலான “காதுகள்”” பற்றிய விமர்சனம் படித்ததுண்டு. அதில், முழு நாவலும் வாசித்து முடிக்கும் வரை காதுக்குள் ஓர் உரையாடல் கேட்டுக்கொண்டே இருக்கும் என்றிருந்தது. அதுபோலவே அரவிந்தனின் ஒவ்வொரு சிறுகதையிலும் ஏதோ ஒரு சப்தம் கேட்டுக் கொண்டே இருக்கும். மனக்குழப்பத்தின் மௌன எண்ணங்கள் கூட ஒழுங்கற்ற ஒலியுடன் கதைகளில் வெளிப்படும் நுட்பத்தை அழகாகக் கையாண்டிருப்பார். கதைகளை வாசித்து முடித்ததும் அவரைச் சென்று பார்க்க வேண்டுமென நினைத்திருந்தேன். அதற்கான சந்தர்ப்பம் வாய்க்காமலே இருந்தது. கேணியில் ஒரு முறை சந்தித்தும் அதிகம் பேச முடியாமல் போனது. சமீபத்தின் ஒருநாள் “நம்ம சென்னை” இதழின் அலுவலகத்தில் அவரைப் பார்க்க நேர்ந்தது. கால ஓட்டத்தில், படித்த கதைகளின் கருப்பொருள் திட்டுக்களாக பதிந்திருந்தாலும், கோர்வையாக அதைப் பற்றி எதையும் பேச இயலவில்லை. எனவே, பொதுவான விஷயங்களைப் பற்றி பேசிக்கொண்டிருந்தோம்.

ஆனந்த விகடன் வெளியீட்டில் அவர் எழுதிய “சுட்டி மகாபாரதம்”” வந்திருக்கிறது. அதைப் பற்றிய பேச்சு சுழன்று குர்சரண் தாஸ் எழுதிய “The Difficulty Of Being Good” என்ற புத்தகத்தில் வந்து நின்றது. அதனைத் தமிழில் “மகாபாரத மனிதர்கள் காட்டும் மகத்தான வாழ்க்கை” என விகடனுக்காக சாருகேசி மொழி பெயர்த்திருப்பதைத் தெரியப்படுத்தினார். உடனே சென்று வாங்கிக்கொண்டேன்.

மகாபாரதத்தின் எத்தனையோ பதிப்புகள் உலகின் பல மொழிகளில் இதுவரை வெளியாகியுள்ளன. மீள் புனைவின் அடிப்படையிலும் குறிப்பிடத்தகுந்த படைப்புகள் கால இடைவெளியில் சமைக்கப்படுகின்றன. பாரதக் கதையை “நன்மைக்கும் தீமைக்குமான தர்ம யுத்தமாகக் கருதுவது” ஒருவகை. குடும்பச் சண்டையின் நீட்சியாகவும், பங்காளிகளுக்கான குடுமிப்பிடிச் சண்டையின் “பழிக்குப் பழி” காப்பியமாகவும் பார்ப்பது இரண்டாவது வகை. இந்த இரண்டு வித நோக்கிலிருந்தும் சற்றே வித்தியாசப்பட்டு, கதாபாத்திரங்களின் இயல்பான குணாம்சத்தையும் உளவியல் கூறுகளையும் விமர்சனக் கண்ணோட்டத்துடன் ஆழமாக அலசி, தற்கால மனிதர்களின் வாழ்வியல் அம்சங்களுடன் மிகுந்த நிதானத்துடன் ஒப்பிட்டு, தனக்குக் கிடைத்த சொந்த அனுபங்களையும் இடையிடையே பகிர்ந்துகொண்டு மனிதக் கூறுகளின் சமூக விழுமியத்தை பொதுப்படைத் தன்மையில் இந்நூலில் ஆய்வு செய்கிறார்.

கட்டுரை ஆசிரியரின் விசாரணை கதாபாத்திரங்களின் உளவியல் ஒப்பீட்டையும் தாண்டி “தர்மம்” குறித்த ஆராய்ச்சியில் சில குறிக்கோள்களை முன்வைத்து நகர்கிறது. அவருடைய முதல் குறிக்கோள் “ஆசையை எப்படிக் கையாள்வது?”. வாழ்க்கையில் மகிழ்ச்சிக்கு ஓர் உரிய இடம் இருக்கிறது. இரண்டாவது குறிக்கோள் ‘பொருளாதார வசதி’. “வறுமையான சூழலில் வாழ்ந்தால் எப்படி மகிழ்ச்சியோடு இருப்பது?””. மூன்றாவது குறிக்கோள் “தர்மம்” சார்ந்த வாழ்க்கை”. கடைசி குறிக்கோளாக நம்முடைய சிக்கலான வாழ்விலிருந்து விடுதலை.

எதையும் புறக்கணிக்காமல், எந்த ஒன்றையும் ஏற்ற இடத்தில் வைத்துப் பார்ப்பதே நம் தத்துவங்கள் உபதேசிக்கும் உட்பொருள். இதனையே “நிஷ்காம கர்மம்”” என்று கீதையின் சாரங்கள் சொல்கின்றது. “தர்மமும், நேர்மையும் தற்போதைய சூழலில் ஏற்ற இடத்தில் வைத்துப் பார்க்கப்படுகிறதா?”” என்பதை யதார்த்த வாழ்வின் உட்சிக்கல்களில் பயணித்துக் கொண்டே, இதிகாச மனிதர்களின் மதிப்பீடுகளை அலசுவதோடு தற்கால மனிதர்களின் குண இயல்புகளுடன் ஒப்பீடும் செய்கிறார் குர்சரண் தாஸ். உதாரணமாக...

அதிகாரத்தைத் தக்க வைத்துக்கொள்ளப் போராடும் துரியோதனன் – பொறாமை, பேராசை, கோவம், வெறுப்பு, சூழ்ச்சி, சிறுபிள்ளைத் தனம் போன்ற எதிர்மறை மனித உணர்வுகளின் ஒட்டுமொத்த உருவமாக துரியோதனனின் ஆளுமை பாரதக் கதையில் கட்டியெழுப்பப்படுகிறது. இதனால் உண்டாகும் வாழ்வின் மீதான நிச்சயமற்ற தன்மையே அவனைக் குற்றம் செய்யத் தூண்டுகிறது. குறுக்கு வழியில், அதிகாரத்தைக் கையிலெடுக்கத் துணியும் ஒவ்வொருவரும் துரியோதனனைப் போலவே எண்ணத் துவங்குகிறார்கள். சமீப காலத்திற்கும் இது மிகவும் பொருந்துகிறது. அதிகார அரசியலே தற்கால சமூகக் கட்டமைப்பை நிர்ணயித்துக் கொண்டிருக்கிறது என்பதையும் மறுப்பதற்கில்லை.

சபையினர் முன்னிலையில் அவமானப்படுத்தப்படும் திரௌபதி – ஆண்கள் வீற்றிருக்கும் சபையில் திரௌபதியின் முந்தானையைப் பற்றி இழுக்கிறார்கள். அதுவே உக்கிரப் போரின் துவக்கமும் கூட. கட்டிய கணவன்மார் உட்பட ஒட்டுமொத்த ஆண்வர்க்கத்தையும், அவர்களுடைய அதிகாரத்தையும், ஒடுக்குமுறையையும் எதிர்த்துக் குரல் கொடுக்கிறாள் திரௌபதி. கௌரவ சபையில் அவளுக்காகப் பரிந்து பேச யாரும் முன்வரவில்லை. துரியோதனனின் இளைய சகோதரன் விகர்ணன் மட்டுமே கடிந்து கொள்கிறான். அந்த வகையில் பெண்கள் மீதான ஒடுக்கு முறையை எதிர்த்துக் குரல் கொடுத்த முதல் பெண்ணாக திரௌபதியைக் கருதலாம். தற்காலச் சூழலிலும் பெண்கள் துகிலுரியப்படுகிறார்கள். அவர்கள் மீதான வன்முறை பிரயோகிக்கப்படுகிறது. அதை எதிர்த்துப் பெண்கள் அமைப்பும் குரல் கொடுக்கிறார்கள்.

கீழ்குடியில் வளர்ந்து அடையாளச் சிக்கலால் அல்லல்படும் கர்ணன் – ஒருவனுடைய முக்கியத்துவம் பிறப்பை வைத்தா? அல்லது தான் சார்ந்த சமூகத்தை வைத்தா? என்ற நுட்பமான சமூக விவாதத்தை கர்ணனே துவக்கி வைக்கிறான். அவனுடைய திறமையால் கவரப்பட்டு அங்கதேசத்தின் அரசனாக்குகிறான் துரியோதனன். அதன் பிறகும், அவனுக்கான மரியாதையும் முக்கியத்துவமும் கிடைக்கவில்லை. “சூத புத்திரன்””- என்று இகழப்படுகிறான். வேலைக்காரிக்குப் பிறந்த விதுரனும் இதே சிக்கலை வேறு விதமாக எதிர்கொள்கிறான். நியாயம் பேசுவதற்காக அவனுடைய குரல் உயரும் போதெல்லாம் சத்ரிய அரசர்களால் இகழப்படுகிறான். காட்டில் வளரும் ஏகலைவனையும் இவர்களுடன் ஒப்பிட்டுப் பேசலாம். ஆரம்பத்திலிருந்தே இவர்களுடைய கல்வி மற்றும் திறமைக்கான மரியாதை மறுக்கப்படுகிறது. மூன்று பேருமே வெவ்வேறு சூழலில் சிக்கிக் கொண்ட தாழ்த்தப்பட்டவர்கள் அல்லது ஒடுக்கப்பட்டவர்கள். படித்து முன்னேறி நல்ல பதவிக்கு வந்து அதிகாரத்துடன் ஆளுமையாக வளம் வந்தாலும், சாதிய ஒடுக்கு முறையால் வஞ்சிக்கப்படும் ஒவ்வொரு தலித்தையும் கர்ணனுடன் ஒப்பிட்டுப் பார்க்க முடியும். பத்திரிகையாளர் சந்திப்பில் கதறியழும் உயர்நீதிமன்ற நீதிபதியையும் பார்த்துக் கொண்டுதானே இருக்கிறோம். கட்டைவிரலை இழந்த ஏகலைவனைப் போல பலரும் வெளியில் தெரியாமல் உளவியல் சிக்கலுக்கு உள்ளாக்கப் படுகிறார்கள் என்பதும் நிதர்சனமே.

குருவம்சத்தைக் காப்பாற்ற வழியின்றித் தவிக்கும் பீஷ்மர், தர்மத்தை நிழலெனத் தொடரும் யுதிஷ்ட்ரன், போர்க்களத்தில் துவண்டு நிற்கும் அர்ஜுனன், விஸ்வரூபம் எடுக்கும் சூழ்ச்சிக்கார கிருஷ்ணன், ஆந்தை போல இரவில் முழித்து துரோகம் இழைக்கும் அஸ்வத்தாமன் என இதிகாசப் பாத்திரங்கள் யுகங்கள் கடந்தும் வாழ்வியல் கோட்பாடுகளை முன்வைக்கின்றன.

வாழ்வு என்பதை ”நம்மைக் காலம் தான் சமைக்கிறது”” என்று யுதிஷ்டிரன் வர்ணிக்கிறான். கர்ணனுடைய வர்ணனை சற்றே வித்தியாசமானது. “நான் இப்போது பார்த்துக் கொண்டிருக்கிறேன். உலகம் வேகமாகக் கடந்து செல்கிறது” என்கிறான். அஸ்தினாபுர அரியணைதான் வாழ்வின் மீதான துரியோதனனின் ஒரே நம்பிக்கை. காற்றின் அசைவில் நாகமெனப் படமெடுக்கும் கற்றைக் கூந்தலை அள்ளி முடிக்க வேண்டும். எனவே “நீசர்களுடைய இரத்தத்தைத் தடவி, கூந்தலைக் கழுவி அள்ளி முடிப்பேன்” என்கிறாள் திரௌபதி. ஒட்டுமொத்த சத்ரியர்களின் வாழ்வே யுத்தத்தை முன்வைத்து நகர்வது. “வீர மரணம்” சொர்க்கத்தை வசப்படுத்தும்” என்ற நம்பிக்கை உடையவர்கள் மாவீரர்கள். (தற்காலத்தில் மத அடிப்படைவாதிகளின் தற்கொலை தாக்குதலை இதிகாச ‘வீர மரண’-த்துடன் ஓர் இடத்தில் நுட்பமாக ஒப்பிடுகிறார் ஆசிரியர்).

மனித குணம் தீய குணங்களால் வார்க்கப்பட்டது. எனவேதான் யுத்தம் ஆரம்பிக்கிறது. போர் தொடங்கும் முன் பாண்டவர்களுக்கு “நற்செயல்களை ஒருபுறம் ஒதுக்கி வைத்துவிட்டு, பாண்டுவின் புத்திரர்களே, வெற்றியைப் பெற ஏதாவது உபாயத்தை மேற்கொள்ளுங்கள்” என கிருஷ்ணர் உபதேசிக்கிறார். அதன் பிறகு குருக்ஷேத்ரப் போர் “தர்ம யுத்தம்” என்ற பெயரில் நடக்கிறது.

பகடையாட சம்மதித்து சத்ரிய தர்மத்திற்கு உட்படுவதுடன், யக்ஷனின் கேள்விகளுக்கும் தர்மத்துடனே பதில் சொல்கிறான் யுதிஷ்டிரன். என்றாலும் பல ஆண்டு வனவாசத்தை அவனால் தவிர்க்க முடியவில்லை. விராட தேசத்தில் தலைமறைவாக வாழ்ந்த போதும் தர்மத்திலிருந்து பிசகவில்லை. தன்னுடைய வாழ்நாளில் அவன் சொன்ன ஒரே பொய், உக்கிரமான போர் சூழலில் “என்னுடைய மகன் இறந்துவிட்டானா?” என்று துரோணர் கேட்கும் கேள்விக்கு மட்டும் தான். அதற்கு தருமபுத்திரர் “அஸ்வத்தாம அதங்குஞ்சித” என்கிறான். “போர் யானை” என்பதை மனதில் நினைத்துக் கொண்டு, “அஸ்வத்தாமன் இறந்துவிட்டான்” என்கிறான். இதனைக் கேட்ட துரோணர் தனது மகன் இறந்துவிட்டதாக நினைத்துக் கொள்கிறார். பாண்டவர்களின் வெற்றிக்கு இந்தப் பொய்யும் உதவி செய்கிறது. கிருஷ்ணனே அவரைப் பொய் சொல்லத் தூண்டுகிறார். இறுதியாக போரில் வென்று பாண்டவர்கள் அரியணை ஏறுகிறார்கள்.

“நான் இந்த உலகையே வென்றுவிட்டேன்... ஆனால் என் உறவினர்கள் எல்லோரையும் அழித்தபின். என்னுடைய பேராசை குறித்து, மனம் வலியால் துடிக்க, எண்ணிப் பார்க்கிறேன்: இந்த வெற்றி எனக்கென்னவோ தோல்விபோல் படுகிறது” என யுதிஷ்டிரன் புலம்புகிறான். மன சஞ்சலத்துடன் சில ஆண்டுகள் அரசாட்சி செய்துவிட்டு, அதன் பிறகு அபிமன்யுவின் மகன் பரீட்சித்திடம் ஆட்சியை ஒப்படைத்துவிட்டு கானகம் செல்லத் தீர்மானிக்கிறான். பின் உபவாசமிருந்து மனித உடலுடன் சொர்க்கத்திற்குச் செல்கிறான். அப்பொழுது, அவன் வளர்த்த நாயும் பிரிய மனமில்லாமல் உடன் செல்கிறது. நாயை சொர்க்கலோகத்தின் உள்ளே விட தேவலோகக் காவலர்கள் மறுக்கிறார்கள். மனித உணர்வுகள் அவனை ஆட்கொள்கிறது. எனவே “நாயுடன் மட்டுமே சுவர்க்க லோகம் செல்வேன். இல்லையேல் மேலான வாழ்க்கை கிடைப்பதாயினும் வேண்டாம்”” என்று மறுத்து விடுகிறான் யுதிஷ்டிரன். பாரதக் கதையின் இந்த இடத்தில் தான் தர்மத்தைக் கண்டுணர்ந்ததாக கட்டுரையாசிரியர் சொல்கிறார். விலங்குதானே என்று பாவிக்காமல், தன்னை நம்பி வந்ததால் அதனுடைய நலனையும் தர்மர் யோசிக்கிறார். தன்னைத் தவிர அர்ஜுன, பீமா மற்றும் உடன் வாழ்ந்த அனைவரும்” நரகத்தில் இருக்கிறார்கள் என்று கேள்விப்பட்டு மனத்துயர் அடைகிறான். உடனே சொர்க்கத்தைத் துறந்து நகரத்திற்குச் செல்லத் தீர்மானிக்கிறான். எல்லா ஜீவராசிகளுக்காகவும் இறக்கப்படும் யுதிஷ்ட்ரனின் இந்த செயல் மேன்மையானது. மகிழ்வோருடன் சேர்ந்து மகிழ்வதும், துயரத்தில் இருப்பின் எல்லா ஜீவராசிகளுடனும் சேர்ந்து அழுவதும் தான் உயர்ந்த மனிதப் பண்பு என்பதை நிரூபிக்கிறான். இதையே மகாபாரதமும் சுட்டிக் காட்டுகிறது.

“யாருடைய மனதில் பிறர் நலன் இருக்கிறதோ, பிறருக்கு நல்லது செய்வது என்பதே செயலிலும் சிந்தனையிலும், சொல்லிலும் இருக்கிறதோ, அவருக்கு மட்டுமே தர்மம்” என்றால் என்ன என்று தெரியும்.

நவீன இந்தியாவில் எவ்வளவோ முன்னேற்றங்கள் ஏற்பட்டுவிட்டது. தன்னலத்தோடு வாழ்வதே புத்திசாலித்தனமாகவும், அறிவாளித்தனமாகவும் கருதப்படும் தற்காலச் சூழலில் சமதர்மம் கேலிக் கூத்தாகக் கருதப்படுகிறது. கலைகளும் விஞ்ஞானமும் விண்ணைத்தொட்டு மேகப் பொதியில் சுற்றப்படுகின்றன. தனிமனித பொருளீட்டும் சக்தியும் உயர்ந்துவிட்டது. வாழ்க்கைத் தரம் உயர்ந்த அதே அளவிற்கு தீமையும் வளர்ந்து நிற்கிறது. முன்னேற்றமும், சமூகச் சீர்கேடும் ரயில் தண்டவாளம் போல் இணைந்தே வளர்கிறது. அவற்றில் பயணிக்கும் நம்முடைய மனசாட்சி மட்டும் ஏன் தர்மம் குறித்து சிந்திப்பதில்லை?. மனிதப் பண்புகளை இடக்காலால் புறந்தள்ளிவிட்டு ஒவ்வொருவரும் வெற்றியை நோக்கியே ஓடிக்கொண்டிருக்கிறோம். யுத்தத்திற்குச் செல்லும் மாவீரனைப் போல. யுகத்தின் கண்ணாடி ரசம் உதிராமல் இருக்கிறது. ஒருநிமிடம் நின்று பார்த்துவிட்டு மீண்டும் உடலாமே. நம்முடைய சிரிப்பும், அழுகையும் கண்ணாடி பிம்பமாகத் தெரிகிறதா என்று பார்த்துவிட்டு ஓடலாமே!

நன்றி: பண்புடன் இணைய இதழ் (www.panbudan.com)
@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@@

குர்சரண் தாஸ்

“இந்தியா அன்பௌன்ட்” என்ற பிரபலமான ஆங்கில புத்தகத்தின் நூலாசிரியர். பல மொழிகளில் மொழிமாற்றம் செய்யப்பட்ட புத்தகம். பிபிசி-யால் படமாகவும் தயாரிக்கப்பட்டது.

இந்தியாவின் முன்னணி செய்தி ஊடகங்களான “டைம்ஸ் ஆப் இந்தியா””, “நியூஸ் வீக்””, “நியூயார்க் டைம்ஸ்””, “வால் ஸ்ட்ரீட் ஜர்னல்””, “ஃபாரின் அஃபேரஸ்”” போன்றவற்றில் பல்வேறு விஷயங்கள் குறித்து கட்டுரைகள் எழுதி வருகிறார். “எ ஃபைன் ஃபேமிலி”” என்ற நாவலும், “தி எலிஃபென்ட் பாரடைம்”” என்ற கட்டுரை நூலும், “த்ரீ இங்கிலீஷ் ப்ளேஸ்”” என்ற நூலில் பலருடைய கவிதைகள் மற்றும் கதைகளையும் தொகுத்திருக்கிறார்.

ஹாவர்ட் பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றவர். அங்கே வேதாந்தமும், தத்துவமும், சமஸ்கிருதமும் பயின்றவர். “P & G” இந்திய நிறுவனத்தில் தலைமை நிர்வாக அதிகாரியாக வேலை பார்த்து, அதன் பின், ஆறு நாடுகளில் வேலை பார்த்து, 50 வயதில் விருப்ப ஓய்வு பெற்று முழுநேர எழுத்தாளர் ஆனவர். தற்போது டெல்லியில் வசிக்கிறார்.