Friday, April 23, 2010

உலக புத்தகம் மற்றும் காப்புரிமை

ஏப்ரல் 23 - ஐக்கிய நாட்டு சபையால் அறிவிக்கப்பட்ட “உலக புத்தகம் மற்றும் காப்புரிமை” தினம். புத்தகத்தின் மீதான தீராதக் காதலால் இந்த தினத்தின் மீதும், சரஸ்வதி பூஜையின் மீதும் எப்பொழுதுமே எனக்கு ஒரு மயக்கம் உண்டு.

யோசித்துப் பார்க்கையில், நான் (அரசுப்) பள்ளி வாழ்க்கையை முடித்து வெளியில் வரும் வரை பாட புத்தகத்தைத் தவிர்த்த வேறு எதையும் படித்ததில்லை. பாடப் புத்தகத்தைக் கூட முழுவதும் படித்ததில்லை என்று தான் சொல்ல வேண்டும். என்னுடைய குடும்பத்திலுள்ள பெரியவர்களோ, ஆசிரியர்களோ என்னை புத்தக வாசிப்பிற்கு ஊக்கப்படுத்தியதும் இல்லை. கல்லூரி வந்ததும் தான் ஒரு சில இதழ்களையும், புத்தகங்களையும் விரும்பிப் படிக்க ஆரம்பித்தேன். அதன் பிறகுதான் கைசெலவிற்காக என்னுடைய அண்ணன் தரும் பணத்தைப் பிடித்தம் செய்து சொந்தமாக புத்தகங்கள் வாங்க ஆரம்பித்தேன். நான் வேலைக்கு சேர்ந்து சம்பாதிக்க ஆரம்பித்த பிறகு நிறைய புத்தகங்களை வாங்கும் வாய்ப்பு கிடைத்தது. அதிலும் சென்னை கன்னிமரா நூலகத்திற்கு அருகில் வேலை கிடைத்தது என்னுடைய அதிர்ஷ்டம் என்று தான் சொல்ல வேண்டும்.

என்னுடைய சொந்த நூலகத்திலுள்ள பாதிக்கும் மேற்ப்பட்ட புத்தகங்கள் கன்னிமரா நிரந்தரப் புத்தகக் கண்காட்சியில் வாங்கியவைதான்.
புத்தகம் வாங்குவதைப் பழக்கமாகக் கொண்டுள்ளதால் நான் எதிர்கொண்ட சங்கடமான சில கேள்விகள் தான் புத்தக தினத்தில் எனக்கு ஞாபகம் வரும்.

நான் புத்தகத்தை வாங்கிக் கொண்டு வீட்டிற்குப் போகும் பொழுது "எதுக்குடா இப்படி வீண் செலவு செய்யற?... ரொம்ப படிக்காதடா, மெண்டல் ஆயிடம் போரடா?!... கத புக் படிக்கிறதால என்ன பிரயோஜனம்?... நீ இங்கிலீஷ் புக் படிச்சா அறிவாவது வளரும் இல்லயா!?... நீ எவ்வளோ கதை படிக்கிற எனக்கு ஒரு கதை சொல்லேன்?(இது என்னை விட இரண்டு மடங்கு வயதுள்ள ஒரு படித்தவர் கேட்டது. அப்பொழுது கூட புத்தகத்தை இரவலாகக் கேட்கவில்லை)." இது போன்ற கேள்விகளை சிலர் கேட்டிருக்கிறார்கள். அவர்களுக்கான என்னுடைய பதில் இதுவரை புன்னகையாகத் தான் இருக்கிறது.

மேலுள்ளவற்றில் "ரொம்ப படிக்காதடா, மெண்டல் ஆயிடப் போரடா?!..." இந்தக் கேள்விதான் என்னை மிகவும் யோசிக்க வைத்தக் கேள்வி. என்மேல் இருக்கும் அக்கறையினால் தான் இந்தக் கேள்வி எழுந்தது என்றாலும் பொதுவான புத்தகம் படிப்பவர்களின் மீதான அவர்களுடைய பிம்பம் என்னை நிலைகுலைய வைத்தது. இந்த மாதிரியான மன பிம்பங்கள் கொண்ட குறுகிய மனப்பான்மை புத்தக வாசிப்பை மட்டுப்படுத்துவது குறைவுதான் என்றாலும் இன்றைக்கு இருக்கின்ற கல்வி முறை (பணம் சம்பாதிக்க மட்டுமே படிப்பது), கணினி, செல் ஃபோன் போன்ற அறிவியல் வளர்ச்சி, சேட்டிலைட் சானல்களின் ஆக்கிரமிப்பு இவைகள் தான் வாசிப்பு குறைந்ததற்கான பெரிய காரணங்களாக எனக்குப் படுகிறது. வாசிப்பு என்பது ஒரு சிலரால் கேலியாகவும், ஒரு சிலரால் பயங்கரமாகவும், ஒரு சிலரால் வீண் வேலையாகவும் பார்க்கப்படுவதை நான் பல இடங்களில் உணர்ந்திருக்கிறேன்.

என்னுடைய பிறப்பிடம் கிராமம் என்பதால், படிக்காத முந்தையத் தலைமுறையினர் வளரும் தலைமுறையினரைப் படிக்க வைக்க மிகவும் பிரயத்தனப் படுவதைப் பார்த்துக் கொண்டிருக்கிறேன். குழந்தைகளின் பாட சமந்தப்பட்ட புத்தகங்களுக்கு ஆயிரம் ஆயிரமாகச் செலவு செய்கின்றனர். கேபிள் இணைப்பிற்காக மாதம் தோறும் குறைந்தது 100 ரூபாய் செலவு செய்கின்றனர். ஆனால் குழந்தைகளின் பொது அறிவையோ, சுய அறிவையோ பெருக்கிக் கொள்வதற்காக ஒரு பைசாவைக் கூட அவர்கள் செலவு செய்வதில்லை என்பதுதான் உண்மை.

என் தெருவில் உள்ள ஒரு குழந்தையாவது
ராஜா-ராணி
க் கதைகள், தெனாலிராமன் கதைகள், பீர்பால் கதைகள், மரியாதை ராமன் கதைகள், ஈசாப் நீதிக்கதைகள், மாயாஜாலக் கதைகள், இராமாயண மகாபாரதத்திலுள்ள சிறுவர் கதைகளைக் கேட்டிருப்பார்களா என்பது சந்தேகம் தான். அவர்களின் கதை உலகம் காக்கா-நரிக் கதையோடும், பாட்டி வடை சுட்டக் கதையோடும் நின்று விடுகிறது. இன்றைய சூழ்நிலையில் பொருளாதாரச் சிக்கல்களினாலும், குடும்பச் சிதறல்களினாலும் தாத்தா பாட்டி கதைகளும் குழந்தைகளைச் சென்று சேர்வதில்லை. சிறுவர்களுக்கு கதைகள் சொல்வதினால் நிறைய நன்மைகள் இருக்கிறது. அவர்களுடைய கவன சக்தி பெருகும். அடுத்தவர்கள் சொல்வதை காது கொடுத்துக் கேட்கும் நல்ல பழக்கம் வரும். நிறைய சொற்கள் அவர்களுக்குத் தெரியவரும். அவர்களுக்கு சமமாக உட்கார்ந்து பேசுவதினால் நம் மீதான அன்பு வளரும். ஒரு வயதிற்கு மேல் இடைவெளி ஏற்படாமல் பார்த்துக் கொள்ள அது உதவியாக இருக்கும். இக்கட்டான சூழ்நிலைகளை எப்படி சமாளிப்பது போன்ற நிறைய விஷயங்கள் மறைமுகமாக அவர்களுக்குத் தெரியவரும். "புரிந்துணர்வு, நட்பு, பாசம், பொறுமை, கடமை, நம்பிக்கை, ஒழுக்கம், முன்னேற்றம், தன்னம்பிக்கை, பணிவு, சேமித்தல், நேரம் தவறாமை, உண்மை பேசுதல், கனவு, சமுதாயம் மீதான அக்கறை" போன்றவற்றை கதைகளின் மூலமாகத் தான் அவர்களுக்கு போதிக்கமுடியும். பிள்ளைகளின் அடுத்தகட்ட பருவத்திற்கு தயார் செய்யும் வேலையை பெரியவர்கள் தான் எடுத்துக் கொள்ள வேண்டும். அவர்களுக்குத் தேவையான பல விஷயங்களை நாம் தான் அறிமுகப்படுத்த வேண்டும். அவைகளில் முக்கியமான ஒன்று "புத்தகம்". எனவே அவர்களுக்கு புத்தகங்கள் வாங்கிக் கொடுத்து முடிந்த வரை வாசிக்க ஊக்கப் படுத்துங்கள். தமிழில் குழந்தைகளைக் கருத்தில் கொண்டு புத்தகங்கள் வெளிவருவது குறைவுதான். கிழக்கின் ப்ரோஜிடி குழு அதனை சிறப்பாகவும், தரமாகவும் செய்கிறார்கள்.

என்னுடைய தோழிகளுக்கும், நண்பர்களின் தங்கைகளுக்கும், மனைவிகளுக்கும் "தயவு செய்து குழந்தைகளுக்கான கதைகளைப் படிங்க, உங்க குழந்தைகளுக்கு நிறைய கதை சொல்லுங்க" என்று எப்பொழுதுமே பரிந்துரை செய்வேன். "போங்கண்ணா இதுங்களைக் கட்டி மேய்க்கவே முடியலை. அதான் டிவியிலயும், ஸ்கூல்-லயும் கத்துக்கராங்களே, அது போதாதா?" என்று பலரும் பதில் சொல்லி இருக்கிறார்கள். அந்த நேரங்களில் எனக்குப் பெருத்த ஏமாற்றமாக இருக்கும்.
இன்று காலையில் கூட என்னுடைய நண்பர்களுக்கு "Today is the world book and copyright day. Buy anyone book written by your favorite author and discover the pleasure of reading. It’s my request. But don’t buy Vikatan, Kumudam, Kungumam, Rani magazines etc…. :-) Thanks & Love – Krishna Prabhu" என்று SMS அனுப்பியிருந்தேன். ஒரு சிலர் நல்ல SMS என்று பதில் அனுப்பியிருந்தார்கள். அதில் ஒளியவன் (சென்னை பல்கலையின் தமிழ் எழுத்துருவிற்கான ஆராய்ச்சி மாணவன்) அனுப்பியிருந்த பதில் சிரிப்பையும் வெறுமையையும் ஒருசேர வரவழைத்தது.

படித்தவன் பாடம் நடத்துவான்...
படிக்காதவன் பள்ளிக் கூடம் நடத்துவான்...!


இந்த நிலை மாற இளம் தலைமுறைக்கு நல்ல புத்தகங்களை அறிமுகம் செய்வோம். வாசிக்கும் பழக்கத்தை ஊக்குவிப்போம்.


Thursday, April 22, 2010

கவிதைப் பட்டறை - தஞ்சாவூர்



தென்னக பண்பாட்டு மையம், தஞ்சாவூர் மற்றும் தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றம் இணைந்து நடத்தும் கவிதைப் பட்டறை
(TAMIL POETRY WORKSHOP)



நீங்கள் ஓர் கவிஞரா? முதல் கவிதை நூலை வெளியிட்டுள்ள இளம் கவிஞரா? அல்லது கவிதை ஆர்வலரா? இல்லை கவிதை வாசகரா? எதாவது வலைத்தளத்தின் இலக்கிய பக்கங்களில் கவிதைகள் எழுதக் கூடியவரா? அப்படியென்றால் உங்களுக்கு இது ஓர் அரிய வாய்ப்பு. தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றமும் தென்னகக் கலை பண்பாட்டு மையமும் இணைந்து ஒரு கவிதை பட்டறையை தமிழ்நாடு இயல் இசை நாடக மன்ற வளாகத்தில் நடத்த இருக்கிறது. (முகவரி – 31 பொன்னி, குமாரசாமி ராஜா சாலை, அடையாறு, சென்னை – 600 028).

இரண்டாயிர வருட பாரம்பரியம் உள்ள தமிழ் கவிதையின் பல்வேறு போக்குகளையும் செயல்பாடுகளையும் விவாதிக்கும் பயிலரங்காக இது அமையும். இந்நிகழ்வில் தமிழின் மிக முக்கியமான கவி ஆளுமைகளான கலாப்ரியா, கல்யாண்ஜி, விக்ரமாதித்யன், சமயவேல், ஞானக்கூத்தன், அப்துல் ரகுமான் போன்ற பல்வேறு கவிதைப் போக்குகளை பிரதிநிதித்துவப்படுத்தும் இளம் கவிஞர்களும் பங்கேற்கும் நிகழ்வாக இது அமையும். கவிதை மொழிபெயர்பாளர் வெ.ஸ்ரீராம், விமர்சகர் ந.முருகேசபாண்டியன் போன்ற விமர்சகர்களும் பங்கேற்கக்கூடும். இந்த நிகழ்வில் பங்கேற்க விரும்பும் கவிஞர் பெருமக்களும், கவிதை ஆர்வலர்களும் www.tamilsangamamonline.com இணைய தளத்தில் தங்களின் பெயர்களை பதிவு செய்து கொள்ளலாம். மே மூன்றாவது வாரத்தில் நான்கு நாட்கள் இந்நிகழ்வு நடைபெறும். விரிவான நிகழ்ச்சி நிரல் பின்னர் அறிவிக்கப்படும். மேற்கண்ட தகவலை தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் உறுப்பினர் / செயலாளர் கவிஞர் இளையபாரதி தெரிவித்துள்ளார்.

மேலும் விபரங்களுக்கு திருமதி புவனேஸ்வரியை 2493 7471 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

நன்றி: உமா ஷக்தி (http://umashakthi.blogspot.com)

Wednesday, April 14, 2010

செல்லுலாயிட் சித்திரங்கள்

இரண்டு வாரங்களுக்கு முன்பு சீன வரலாறு மற்றும் சீனத் தலைவர்களைப் பற்றி தமிழில் புத்தகங்கள் கிடைக்கிறதா என்று தேடிக் கொண்டிருந்தேன். கிழக்கு, ஆழி மற்றும் NCBH பதிப்பகங்களில் சில புத்தகங்கள் கிடைத்தன. அப்படியே ஸ்பென்சர் பிளாசாவிலுள்ள லேண்ட்மார்க் கடைக்குச் சென்றிருந்தேன். புத்தகங்கள் வாங்குவதைத் தவிர்த்த வேறொரு முக்கிய காரணமும் இருக்கிறது.

லேண்ட்மார்க் (www.landmarkonthenet.com)- இணைய தளத்தின் ஆன்லைன் மார்க்கெட்டிங் குழுவில் நானும் ஒருவனாக இருப்பதால், அங்கு விற்கப்படும் பல வகையான புத்தகங்களில், எந்த இடத்தில் அதிக நபர்கள் கூடுகிறார்கள் என்று பார்ப்பதற்காக ஒரு மணி நேரம் செலவு செய்தேன். மதிய வேளையில் சென்றிருந்ததால் மிதமான கூட்டமே இருந்தது. குழந்தைகளுக்கான புத்தகம், பாட சமந்தப்பட்ட புத்தகம், புனைவு மற்றும் அபுனைவு என ஆங்கில புத்தகங்களைப் பார்த்துவிட்டு தமிழ் புத்தகங்கள் இருக்கும் இடத்திற்கு வந்தேன்.

'அர்த்தமுள்ள இந்துமதம்' கனமான ஒரே புத்தகமாக கண்ணதாசன் பதிப்பகம் வெளியிட்டிருந்தார்கள். பதிப்பகத்திற்கே
நேரில் சென்று வாங்கிக் கொள்ளலாம் என்று வைத்துவிட்டு, மேலும் சில புத்தகங்களை பார்த்துக் கொண்டிருந்தேன். என்னைக் கடந்து ஓர் இளம் காதல் ஜோடி சென்றார்கள். அவர்களுக்குத் தெரியாமல் எங்கு செல்கிறார்கள் என்று பார்த்தேன். டிஸ்கௌண்டில் சில புத்தகங்களை அடுக்கியிருந்த இடத்திற்குச் சென்றார்கள். அதன் அருகிலேயே காமசூத்ரா புத்தகங்கள் சிறியதும் பெரியதுமாக அடுக்கியிருந்தார்கள். அவற்றிலிருந்து ஒரு சிறிய புத்தகத்தை எடுத்த காதலன் அந்தப் பெண்ணிடம் காட்டிச் சிரித்தான். அவள் மிரட்சியுடன் அக்கம் பக்கம் பார்த்தாள். அப்படியே நான் அவர்களை கவனிப்பதையும் பார்த்துவிட்டாள். நான் கூச்சத்துடன் ஒரு புத்தகத்தைக் கையில் எடுத்துக் கொண்டேன். 'செல்லுலாயிட் சித்திரங்கள் ஆசிரியர் - தமிழ்மகன்' என்றிருந்தது. அடடே... நம்மாளோட புத்தகமான்னு எடுத்துக் கொண்டு cash counter-க்குச் சென்றேன். எனக்கு முன்னாள் அந்தப் பையன் ஆசையாக எடுத்த சிறிய புத்தகத்துடன் நின்று கொண்டிருந்தான்.

))(())(())(())(( ))(())(())(())(( ))(())(())(())(( ))(())(())(())((

தளபதிக்கு ஆண் குழந்தை, தலைக்கு பெண் குழந்தை, சூப்பர் ஸ்டார் இமயமலை செல்கிறார், அவருக்கு இவருடன் காதல், இளம்புயல் ஹாலிவுட்டில் நுழைகிறது - இந்த விஷயங்கள் தலைப்புச் செய்திகளாக வராத நாளிதழோ, வார இதழோ, சாட்டிலைட் சேனல்களோ இன்று இல்லை என்று சொல்லலாம். அந்த அளவிற்கு மக்கள் நட்சத்திரங்களின் தனிப்பட்ட விஷயங்களைத் தெரிந்து கொள்ள ஆவலுடன் இருக்கிறார்கள். அதனால் தான் எறும்பு இனிப்புக் கட்டியைச் சுமந்து கொண்டு இங்குமங்கும் அலைவது போல ரசிகனும் அதீத ஆசையினால் நட்சத்திரங்களின் முகவரியைத் தேடிக் கொண்டு அங்குமிங்கும் அலைகிறான். அவர்களை உயர்ந்த இடத்தில் வைத்துப் பார்க்க ஆசைப்படுகிறான்.

"ஒருத்தனை மொட்டை மாடியில நிக்க வச்சி சினிமா வெளிச்சம் போட்டு காட்டிடும் மாமா" என்று மருமகன் எப்பொழுதாவது சொல்லுவான்.
அந்த வெளிச்சத்தில் நனைந்தவர்களின் வாழ்க்கை விசித்திரம் நிறைந்தது. சினிமாவில் வாய்ப்புத் தேடி அலைந்த நாட்களில் சீண்டுவாரில்லாமல் இருந்தவர்கள், திறமையும் அதிர்ஷ்டமும் இருந்து தனது பங்களிப்பின் மூலம் உச்சத்தை அடைந்த பிறகு அவர்களுடைய வாழ்க்கைப் பாதையே மாரிவிடுகிறது. சுதந்திரத்தையும், நிம்மதியையும் இழந்து நட்சத்திரங்கள் என்ற டை மொழியை அடைந்த பிறகு அவர்களின் ஒவ்வொரு அசைவும் கவனிக்கப்படுகிறது. முக்கியமாக அவர்களின் அந்தரங்க விஷயங்களைத் தெரிந்து கொள்வதில் ரசிகர்களின் ஆவல் அளவிட முடியாதது. என்னதான் ஆவல் இருந்தாலும் ஒவ்வொருவரும் அவர்களிடம் நெருங்கிப் பழகும் வாய்ப்பு கிடைக்காது. நிருபர்களுக்கு மட்டுமே அந்த வாய்ப்பு அமையும். தமிழ்மகன் சினிமா நிருபராகவும், வண்ணத்திரை இதழின் எடிட்டராக நீண்ட காலம் பணியாற்றியுள்ளதால் சுவாரஸ்யமான அனுபவங்கள் அவருக்கு நிறையவே கிடைத்திருக்கிறது. அவற்றையெல்லாம் நினைவு கூர்ந்து உயிரோசையில் கட்டுரையாக எழுதி பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளார்.

ஒன்றிற்கு இரண்டாக சம்பவங்களைத் திரிப்பதாலும், கிசுகிசு செய்திகளையும் பத்திரிகைகள் வெளியிடுவதால் நிருபர்களுக்கு எல்லா நேரங்களிலும் நல்ல அனுபவம் கிடைக்கும் என்று சொல்ல முடியாது. தமிழ் மகனுக்கும் ஒன்றிரண்டு அனுபவங்கள் அப்படி நடந்திருந்தாலும், மற்ற அனுபவங்கள் மென்மையானதாகவும், நகைச்சுவையாகவும் இருக்கிறது. குறிப்பாக நடிகர் சூர்யா, அஜித், அரவிந்சாமி, ரஜினி, செல்வா, சிவாஜி, மணிரத்னம், ஷங்கர், AR ரகுமான் மற்றும் நடிகை வினோதினி, கௌதமி, ரோஜா, தேவிகா, மனோரமா, ஷகிலா போன்றவர்களுடனான அனுபவங்கள் பிரபலங்களின் மற்றுமொரு மென்மையாக முகத்தினைக் காட்டுவதாக இருக்கிறது.

ஊடக வெளிச்சத்திற்கு அப்பால் இந்தக் கலைஞர்களின் நிஜமான முகங்களையும் சக மனிதர்களின் மீதான நேச உணர்வுகளையும் காட்டும் அனுபவக் குறிப்புகள் இவை. நட்சத்திரங்கள் தங்களின் சுயத்தை இழந்துதான் திரையில் ஒளிவீசிக் கொண்டிருக்கிறார்கள் என்பதை மிக எளிமையாக, எந்தவித அலங்கார பூச்சுக்களும் இன்றி இயல்பாக நம்முடன் பகிர்ந்து கொள்கிறார். பிரபலங்கள் என்ற மாயையைக் கடந்த, மறக்க முடியாத, நெகிழ்ச்சியூட்டும் தருணங்களை தமிழ்மகன் மிகச் சுவாரசியமான நடையில் எழுதிச் செல்கிறார். ஒரே மூச்சில் படித்து முடிக்கக் கூடிய அருமையான அனுபவக் குறிப்பு.

ஒரு சில கட்டுரைகளை அவருடைய வலைத் தளத்தில் படிக்கக் கிடைக்கிறது:


1.
அஜித், ஷங்கர், வினோதினி பற்றி
2.
சரத் குமார், சோனியா அகர்வால் பற்றி
3.
ரஜினி, மனோரமா, சிவசக்தி பாண்டியன் பற்றி
4.
எஸ் ஏ சந்திரசேகரன், சன் டி வி, ஆஸ்கார் ஃபிலிம்ஸ் ரவி பற்றி
5. எஸ்.எஸ்.ஆர், AR ரகுமான், சுஜாதா பற்றி
6. துள்ளுவதோ இளமை, இயக்குனர் சீமான் பற்றி
7. கஸ்தூரி, முரளி பற்றி

மேலும் படிக்க அவருடைய வலைத் தளத்தில் 'நினைவலைகள்' என்ற லேபுளுக்குச் செல்லவும்.
புத்தகம்: செல்லுலாயிட் சித்திரங்கள்
ஆசிரியர்: தமிழ்மகன்
பக்கங்கள்: 208
விலை: ரூ.100/-
வெளியீடு: உயிர்மை பதிப்பகம்