Thursday, April 23, 2009

Kadigaaram amaithiyaaga enikondu irukirathu...

கடிகாரம் அமைதியாக எண்ணிக் கொண்டிருக்கிறது: அ. முத்துலிங்கம் (Rs.85), வெளியீடு: உயிர்மை பதிப்பகம்

23-04-2009: உலக புத்தக தினம். ஆகவே ஏதாவது புத்தகம் வாங்க வேண்டுமென்று நினைத்திருந்தேன். தி மு க அரசு இலங்கைத் தமிழர்களுக்காக ஆதரவு தெரிவித்து பந்த் அறிவித்திருந்தார்கள். ஆகவே எங்கும் வெளியில் செல்ல இயலவில்லை. சித்திரை மாத வெப்பம் வெளியில் தலை காட்ட விடவில்லை.

சரி, ஏதாவது புத்தகம் படிக்கலாம் என்றால் ஒரே குழப்பம். படிக்க வேண்டிய புத்தகங்கள் என்னுடைய அலமாரியில் 109 இருந்தது. கதையோ, கட்டுரையோ படிப்பதைக் காட்டிலும் பல ஆளுமைகளைப் பற்றிய புத்தகமாக படிக்கலாமென்று முடிவு செய்து அலமாரியைத் துழாவினேன்.

அது போன்ற புத்தகங்கள் என்னிடம் ஐந்து இருக்கின்றன. (ஜெயமோகன் எழுதிய இலக்கிய விமரிசன நூல்களைத் தவிர்த்து)

1). கதாவிலாசம் - எஸ். ராமகிருஷ்ணன் (விகடன் பிரசுரம்)
2). பின் கதைச் சுருக்கம் - பா. ராகவன் (கிழக்கு பதிப்பகம்)
3). கடிகாரம் அமைதியாக எண்ணிக் கொண்டிருக்கிறது - அ. முத்துலிங்கம் (உயிர்மை பதிப்பகம்)
4). ஆழத்தை அறியும் பயணம் - பாவண்ணன் (காலச்சுவடு பதிப்பகம்)
5). எழுத்துலக ப்ரம்மாக்கள் - இரா. மணிகண்டன் (குமுதம்)

இதில் முதலிரண்டும் ஏற்கனவே படித்த புத்தகங்கள். கடைசி இரண்டும் ஒரே ஆசிரியருடைய கதை, சிறுகதைகள் மற்றும் ஆளுமைகள் மீதான விருப்பங்களும், பார்வைகளும் கொண்டது.

அ. முத்துலிங்கம் தொகுத்த "கடிகாரம் அமைதியாக எண்ணிக் கொண்டிருக்கிறது" புத்தகம் தமிழின் முன்னணி எழுத்தாளர்கள் 20 பேர் தமக்குப் பிடித்த புத்தகங்கள் பற்றியும், புத்தகத்தை எழுதிய ஆசிரியரைப் பற்றியும் தங்களுடைய ஆழமான பார்வையை முன் வைக்கிறார்கள். இதை விட வேறென்ன வேண்டும். ஆகவே அந்தப் புத்தகத்தையே தேர்ந்தெடுத்தேன்.

கீழ்கண்ட எழுத்தாளர்கள் தான் இந்தப் புத்தகத்தில் தங்களை பாதித்த புத்தகங்களைப் பற்றி எழுதியுள்ளார்கள்.

1). அம்பை, 2). அசோகாமித்திரன், 3). சாரு நிவேதிதா, 4). இந்திரா பார்த்தசாரதி, 5). இரா. முருகன், 6). ஜெயமோகன், 7). காஞ்சனா தாமோதரன், 8). பொ. கருணாகர மூர்த்தி, 9). பி. ஏ. கிருஷ்ணன், 10). மாலன், 11). மனுஷ்ய புத்திரன், 12). அ. முத்துலிங்கம், 13). நாஞ்சில் நாடன், 14). பாவண்ணன், 15). எஸ். ராம கிருஷ்ணன், 16). ஷோபா சக்தி, 17). சுஜாதா, 18). சுகுமாரன், 19). வாஸந்தி, 20). வெங்கட் சாமிநாதன்.

ஒவ்வொருவரும் அவர்களுக்கே உரிய பார்வையில் முக்கியமான படைப்புகளை முன் வைக்கிறார்கள்.

அவற்றில் சில:

சாரு நிவேதிதா: www.charuonline.com

மேற்கத்திய கலாச்சாரத்திற்கும், அவர்களுடைய படைப்புகளுக்கும் (ஹாலிவுட் சினிமா உட்பட) கொடுக்கும் முக்கியத்துவத்தை பிற படைப்புகளுக்குக் கொடுப்பதில்லை. இவர் சம கால அரபு இலக்கியம் பற்றி நீண்ட கட்டுரையை எழுதியுள்ளார். இவர் பரிந்துரைக்கும் நூல்கள் கவனிக்கப்பட வேண்டியதும் கூட.

ஜெயமோகன்: www.jeyamohan.in

இயல்பான முறையில் எழுதப்படும் படைப்புகளையும் வாசகர்கள் படிக்க வேண்டுமென "மணல் கடிகை" எனும் நாவலைப் பரிந்துரைக்கிறார்.

பி. ஏ. கிருஷ்ணன்:

வடிவியலின் கதை என்னும் கணித புத்தகத்தை இவர் பரிந்துரைக்கிறார். புத்தகத்தின் பெயர் "யூக்லிட் விண்டோ" (Eucild's Window: The story of geometry from parallel line to hyperspace). இதை இவர் மொழி பெயர்த்துக் கொண்டிருக்கிறார் என்று நினைக்கிறேன்.

பாவண்ணன்:

புதுமுக எழுத்தாளரான கால பைரவன் எழுதி வெளிவந்த "புலிப்பாணி சோதிடர்" என்ற சிறு கதைத் தொகுப்பை இவர் பரிந்துரைக்கிறார். விமரிசனத்தைப் படிக்கும் போது அவசியம் வாங்கி படிக்க வேண்டிய எழுத்தாளர் தான் என்று தோன்றியது.

எஸ். ராம கிருஷ்ணன்: www.sramakrishnan.com

மதுரையை சுற்றியுள்ள சமணக் குகைகளைப் பற்றிய ஆய்வுக் கட்டுரையான "எண்பெருங்குன்றம்" என்ற நூலை எஸ்.ரா பரிந்துரைக்கிறார். இவருடைய பல புத்தகத்தில் வரலாற்று சிறப்பு மிக்க இடங்களுக்கும், பொருட்களுக்கும் நாம் போதிய முக்கியத்துவத்தை தருவதில்லை என சுட்டிக் காட்டுகிறார். மேற்கத்திய நாடுகளிலிருந்து கற்க வேண்டிய பாடங்களில் இதுவும் ஒன்று. ஆய்வுக் கட்டுரைகளுக்கு தமிழுலகம் தர வேண்டிய முக்கியத்துவத்தை தனது கட்டுரையில் சுட்டிக் காட்டுகிறார்.

எஸ்.ரா எழுதிய சமணக் குகை பற்றிய கட்டுரை: கல்லில் ஊரும் காலம்

சுஜாதா:

"வாழ்நாள் முழுவதும் தொடர்ந்து பாதித்ததாக ஒரே ஒரு புத்தகத்தை சொல்ல முடியவில்லை" என ஆரம்பிக்கும் இவர் சிறு வயது முதல் தன்னை பாதித்த எழுத்தாளர்கள், சிற்றிதழ்கள், மேற்கத்திய எழுத்தாளர்கள், புத்தகங்கள் என நிறையவே அறிமுகப்படுத்துகிறார்.

தனது கல்லூரி நாட்களில் அவருக்கு பிடித்த நாவலை வகுப்பிற்கு செல்லாமல் ஒரு வாரம் முழுவதும் தொடர்ந்து படித்து முடித்ததாக கூறுகிறார். மேலும் தன்னுடைய மோதிரத்தை விற்று சில புத்தகங்களை வாங்கியதையும் நினைவு கூர்கிறார். ஆனால் எந்த குறிப்பிட்ட படைப்பையும் முன்னிறுத்தவில்லை.

இதர ஆசிரியர்களும் தங்களுக்குப் பிடித்த கவிதை, திரைக்கதை, நாடகம், நாவல் என பல புத்தகங்களையும் ஆளுமைகளையும் பற்றி பேசுகிறார்கள்.

பி.கு: உலக புத்தக தினத்தன்று, மாலையில் பத்ரியின் NHM புத்தகங்கள் - விமர்சனத்துக்கு ரெடி (3) பதிவின் மூலம் திரு.மாலன் எழுதிய எண் ஜன்னலுக்கு வெளியே... புத்தகம் இலவசமாக வீடு தேடி வந்திருந்தது. சொல்ல முடியாத சந்தோஷத்துடன் தபாலில் வந்த புத்தகத்திற்கு என்னுடைய கையொப்பமிட்டு வாங்கிக் கொண்டேன். எப்படியோ புத்தக தினத்தன்று ஒரு புத்தகத்திற்கு சொந்தக்காரனாகிவிட்டேன்.

Wednesday, April 22, 2009

Paravaiyai poola - Mrs.Sudha Murthy

பறவையைப் போல...: சுதா மூர்த்தி (Rs.60)
வெளியீடு: வானதி பதிப்பகம்

சுதா மூர்த்தியின் பயணக் கட்டுரையான "ஹக்கிய தேராலி" தமிழில் பறவையைப் போல... என மொழி பெயர்கப் பட்டுள்ளது.

அமெரிக்க பல்கலைக் கழகத்தில் சிறப்பு ஆசிரியராக மாணவர்களுக்குப் பாடம் எடுக்கும் இவரா "பாட்டி சொன்ன கதைகளின்" ஆசிரியர் என ஆச்சர்யமாக இருக்கும். சுற்றுலா முழுவதும் நமது பாரம்பரிய உடையான சேலையில் வளம் வந்திருக்கிறார். உண்மையிலேயே பாராட்டப் பட வேண்டிய பெண்மணிதான். அதே நேரத்தில் தனது சகோதரியை "பழைய சடங்குகளுக்கு உட்படாதே, தகன மேடை வரை சென்று தந்தைக்கு மரியாதை செலுத்து" என்று சொல்லும் இடத்தில் மேலும் மரியாதை ஏற்படுகிறது.

ஆசியாவிலேயே சிறந்த மென்பொருள் சேவை செய்யும் கம்பெனியின் (இன்போசிஸ்) நிர்வாக இயக்குனரின் மனைவியா இவர் என ஆச்சர்யமாக இருக்கும். அவ்வளவு எளிமை. வரலாற்றின் மீது தீராத ஆர்வம். அந்த ஆர்வமே இவரை வரலாற்றுச் சிறப்பு மிக்க உலகின் பல இடங்களுக்கு அழைத்துச் சென்றுள்ளது.

உலகின் முக்கிய சுற்றுலா இடமான எகிப்திற்கு பயணம் செய்ய சுதா மூர்த்தி புறப்பட்டிருக்கிறார். இவருடைய தந்தை தள்ளாத வயதிலும் விமான நிலையம் வரை உடன் வந்து வழியனுப்பி இருக்கிறார். இவருடைய தந்தைக்கும் பல இடங்களையும் பார்க்கும் ஆர்வம் இருந்திருக்கிறது. ஆனால் மூப்பின் காரணமாக இவருடன் செல்ல இயலவில்லை.

"சுற்றுலா முடித்து வந்து உன்னுடைய அனுபவங்களை என்னுடன் பகிர்ந்துகொள்" என்று சுதாவின் தந்தை சொல்லி இருக்கிறார். துருதுஷ்ட வசமாக எகிப்து பயணத்தில் இருக்கும் போது அவருடைய தந்தை இருதயக் கோளாறால் உயிரிழந்திருக்கிறார். இனி இவருடைய அனுபவங்களை எப்படி அவருக்குச் சொல்ல இயலும். எனவே பயணக் கட்டுரையாக எழுதி நம்முடன் பகிர்ந்து கொள்கிறார்.

"காலம் முன்னேற முன்னேற இளைய தலை முறையினர் பழைய தலை முறையினரின் வாழ்கைப் போக்கை தெரிந்து கொள்ளாமல் இருந்து விடுகின்றனர்" என சுதா மூர்த்தி குறைபட்டுக் கொள்கிறார்.

ஆம், ஹிட்லர் சொல்வது போல ஒருவனுக்கு நாட்டுப் பற்று வேண்டுமெனில் அவன் உலக சரித்திரத்தைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும். இல்லையேல் அவனுக்குள் ஒரு கனல் இருக்காது.

இவருடைய பயணக் குறிப்புகளை மூன்று அத்தியாயங்களாக 1).எகிப்து, 2).சீனா மற்றும் 3).ஸ்கெண்டிநேவியன் நாடுகளைப் பற்றி எழுதியுள்ளார். பிறவி சைவமான இவர் சீனாவில் பத்து நாட்களுக்கும் மேல் வெறும் பருப்பு சாதமும், வாழைப் பழமும் சாப்பிட்டு சுற்றி வந்திருக்கிறார்.

எகிப்தின் பிரமிடுகளைத் தவிர்த்து பழங்கால அரண்மனைகளையும் கொய்ரோவை சுற்றியுள்ள பார்க்க வேண்டிய இடங்கக்ளையும் பட்டியலிடுகிறார். அரபுக் கதைகளில் கொய்ரோவை படித்த ஞாபகம் வருகிறது.

சீனாவில் பெருஞ்சுவரைத் தவிர அரண்மனைகளையும், முக்கியமான நகரங்களையும் பார்க்க வேண்டிய இதர சில இடங்களையும் பட்டியலிடுகிறார். சீனாவின் கடைசி மன்னனைப் பற்றி "தி லாஸ்ட் எம்பரர்" என எடுக்கப்பட்ட படம் இங்கு நினைவு கூறத்தக்கது.

கடைசியாக ஐரோப்பிய நாடுகளான டென்மார்க், நார்வே மற்றும் ஸ்வீடன் ஆகிய இடங்களுக்கு அழைத்துச்செல்கிறார். உலகின் சிறந்த பரிசான நோபல் பரிசினை அளிக்கும் அரங்குகளுக்கு சென்று அவற்றை அழகுடன் இந்தக் கட்டுரைகளுள் நம்முடன் பகிர்ந்து கொள்கிறார்.

இவர் 1990 -களின் இறுதிகளில் மேற்கொண்ட பயணத்தை பல வருடங்கள் கழித்துதான் கட்டுரையாக எழுதியிருக்கிறார். மேலும் இந்த மொழி பெயர்ப்பு 2004 -ல் செய்யப்பட்டுள்ளது.

ஆகவே இடைப்பட்ட காலங்களில் இந்த இடங்கள் பெரிய முன்னேற்றத்தைக் கண்டிருக்கலாம். இருந்தாலும் சுதாவின் அனுபவங்கள் கவனிக்கப்பட வேண்டிய ஒன்று.

கன்னட மூலமான இதனை திரு. தி.சு. சதாசிவன் நல்ல முறையில் மொழி பெயர்த்துள்ளார்.

Monday, April 20, 2009

anu aayutha opantham

இந்திய-அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் : CPI(M) மத்தியக் குழு (Rs. 10) வெளியீடு: பாரதி புத்தகாலயம்

இந்திய-அமெரிக்க அணுசக்தி ஒப்பந்தம் (இடது சாரிகளின் நிலைப்பாடு வினாக்களும் விடைகளும்)

தமிழில்: சுப்பாராவ், வீ.பா. கணேசன்

வளரும் நாடுகள் அமெரிக்காவுடனான அணு ஆயுத ஒப்பந்தம் செய்துகொள்ள வேண்டுமெனில் முக்கியமான சட்ட வரைமுறைகளுக்கு உட்பட்டாக வேண்டும். அவைகளாவன ஹைடு சட்டம், 123 ஒப்பந்த சட்டம் மற்றும் சர்வதேச அணு சக்தி முகமை பாதுகாப்புச்சட்டம் ஆகியனவாகும். இந்த சட்டங்கள் அனைத்தும் அமெரிக்காவின் ராணுவ, பொருளாதார மற்றும் வெளியுறவுக் கொள்கைக்கு ஏற்றபடி தான் இருக்கும். அதுமட்டும் இல்லாமல் அமெரிக்க ராணுவத்திற்கு பகிரங்க ஒத்துழைப்பை அளிக்க வேண்டும். இல்லையெனில் எந்த நேரத்திலும் ஒப்பந்தம் ரத்து செய்யப்படும்.

அவசர அணு சக்தி ஒப்பந்தத்திற்கு முக்கிய காரணம் மின்சாரக் குறைபாடுதான் என மத்திய அரசு கூறுகிறது. தற்போது 1). நீர் மின்சாரம், 2). அனல் மின்சாரம், 3). சூரிய மின்சாரம் மற்றும் 4). காற்றிலிருந்து தயாரிக்கும் மின்சாரம் என பல முறைகளில் மின்சாரம் எடுக்கப் படுகிறது. அதுவும் நூறு ஆண்டுகளுக்கு அனல் மின்சாரம் தயாரிப்பதற்கு தேவையான நிலக்கரி இன்னும் நம்மிடம் இருக்கிறது. அப்படி இருக்கும் போது வெறும் 3% தேவையைப் பூர்த்தி செய்யும் அணு சக்தி மின்சாரம் நம் நாட்டிற்கு தேவையா?

அது மட்டுமில்லாமல் இதர முறைகளில் தயாரிக்கும் மின்சாரத்திற்கு ஒரு யூனிட்டிற்கு 2 முதல் 2.50 காசு வரை ஆகுமெனில் அணு சக்க்தி மின்சாரத்திற்கு 5 ரூபாய் வரை ஆகும். இது எந்த மாதிரியான விலைவாசி உயர்வை ஏற்படுத்தும். அதை எப்படி சமாளிப்பீர்கள்?

40 ஆண்டுகளுக்கு இந்தியாவைக் கட்டுப்படுத்தும் இந்தச்சட்டம் ஞாயமாக தீவிர அலசலுக்கு உட்படுத்தப்பட்டிருக்க வேண்டும். அப்படி இல்லாமல் குறுகிய காலத்தில் ஒப்பந்தத்திற்கு அனுமதி கொடுத்தது ஏன்?

45 நாடுகளை உறுப்பினர்களாகக் கொண்ட அணு சக்தி எரிபொருள் விநியோகிப்போர் சங்கம் அனுமதி அளித்தாலும் அமெரிக்க காங்கரஸ் ஒப்புதல் அளிக்க வேண்டும். அது மட்டும் இல்லாமல் ஒவ்வொரு வருடமும் அமெரிக்க அதிபர் இந்திய அரசாங்கத்திற்கு நற்சான்றிதழ் வழங்க வேண்டும். இல்லையெனில் ஒப்பந்தம் ரத்து செய்யப் படும்.

முக்கியமாக பல கோடி ரூபாய் மதிப்புள்ள இந்திய நாட்டிற்கு சொந்தமான அணு உலைகள் இந்த ஒப்பந்தத்தால் அணு சக்தி முகமையின் கட்டுப் பாட்டின் கீழ் வந்துவிடும். ஒப்பந்தம் ரத்து செய்யப் பட்டால் மறுபடியும் எப்படி அதை மீட்பீர்கள். அதற்கான எந்த சரத்தையும் ஒப்பந்தத்தில் சேர்க்காதது ஏன்?

அமெரிக்காவுடனான இந்த ஒப்பந்தம் மூலம் இந்திய நாட்டிற்கு காங்கிரஸ் தலைமையிலான அரசு துரோகம் இழைத்ததுவிட்டது என்று சொல்லி மக்ஸிஸ்ட் கம்யுனிஸ்ட் கட்சி வெளியிலிருந்து அளித்து வந்த ஆதரவை விளக்கிக் கொண்டது.

ஒருவேலை ஒப்பந்தம் ரத்து செய்யப் பட்டால் எந்த மாதிரியான சிக்கல்களை இந்தியா சந்திக்க வேண்டியிருக்கும் என்பன போன்ற கேள்விகளுக்கான பதிலாக இந்த 40 பக்க புத்தகம் உள்ளது. CPI(M) -ன் மத்திய திட்ட அறிக்கையை தமிழில் மொழி பெயர்த்துள்ளார்கள்.

பி.கு: இந்த ஒப்பந்தம் மூலம் அமெரிக்காவில் 2500-லிருந்து 5000 புதிய வேலை வாய்ப்புகள் உருவாகுமென அமெரிக்க வெளியுறவு அமைச்சர் காண்டலினா ரைஸ் தனது நிரூபர்கள் சந்திப்பில் கூறியுள்ளாராம்.

Saturday, April 18, 2009

Ezhaam Ulagam - Jeyamogan

ஏழாம் உலகம்: ஜெய மோகன் (Rs: 170)
வெளியீடு: தமிழினி

ஆசிரியரின் இணையத் தளம்: Tamil Writer Jeya Mohan

உடல் ஊனமுற்றவர்களைக் கொண்டு நடக்கும் வர்த்தக வியாபாரங்களை முழு மூர்கத்துடன் கொண்டு தமிழில் வெளிவந்த ஆகச்சிறந்த படைப்பு ஜெய மோகனின் ஏழாம் உலகம். அருவருப்பு என்று எல்லோரும் ஒதுக்கி வைக்கும் விளிம்புநிலை மனிதர்களின் அவல வாழ்க்கையை தைரியமாக எடுத்துக்கொண்டு இந்நூலில் அடிக்கோடிட்டு காட்டுகிறார் ஜெயமோகன்.

"நான் கடவுள்" படத்தில் பாலா இந்த நாவலிலுள்ள கதாப் பாத்திரங்களின் தழுவல்களைத் தான் பயன்படுத்தியுள்ளார். நாவலின் தழுவல் படத்தில் இருந்தாலும் முழுக் கதாப் பாத்திரங்களையும் எடுத்துக் கொண்டு கையாளவில்லை. இதிலுள்ள 40% கதையைத்தான் எடுத்துக் கொண்டுள்ளார் என்று தோன்றுகிறது.

போத்திவேலு பண்டாரம் தான் நாவலின் முக்கியப் பாத்திரம். நல்ல முருக பக்தர். மூன்று பெண்களுக்குத் தந்தையான இவர் கோவிலில் பூ தொடுக்கும் வேலை செய்தாலும் உருப்படிகளின் மூலம் வருவாயை ஈட்டுகிறார்.

இப்படி சம்பாதிப்பதை சுட்டிக்காட்டும் கோவில் அர்ச்சகரிடம் பின் வருமாறு கூறுகிறார்.

பக்தர்கள் படியேறி ஆண்டியான முருகனிடம் வாங்குகிறார்கள். அவர்களிடம் நீங்கள் தட்டில் தட்சணையாக வாங்குகிறீர்கள். உருப்படிகள் வெளியில் வாங்குகிறார்கள். இதிலென்ன தப்பு.

ஆடுமாடுகளைக் கட்டி வைத்து நாம் வருமானம் ஈட்டவில்லையா?. அது போல் தான் இதுவும். அங்க ஹீனத்துடன் பிறப்பவர்களை பராமரித்து அவர்களுக்கு வருமானம் வர வழிசெய்கிறோம். அவர்களுடைய வாழ்வாதாரத்திற்கு வழி வகை செய்கிறோம் என்று அதற்கு ஞாயமும் கற்பிக்கிறார்.

உடலுறுப்புகளை இழந்தவர்கள் தான் இவர்களின் மூலதனம். ஊனமுற்றவர்களை உறவுகொள்ள வைத்து அவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகளையும் உருப்படிகளாக பயன்படுத்துவது போல் வருவது அதிரச்செய்கிறது.

ஏழாம் உலகம் என்ற புத்தகத்தின் பெயரே சற்று வித்தியாசமாக இருக்கிறது. நாவலிலேயே அதற்கான விளக்கமும் ஒரு இடத்தில் வருகிறது.

"புராணப் பிரகாரம் நாம நிக்குத மண்ணுக்கு கீழ ஏழு லோகம் உண்டு. அதலம், விதலம், நிதலம், கபஸ்திமல், மகாதலம், சுதலம், பாதாளம். அதலத்தில் பாம்புகள் இருக்கு. விதலத்தில் மீன்கள். நிதலத்தில் நண்டுகள். கபஸ்திமலில் புழுக்கள். மகாதலத்தில் கிருமிகள். சுதலித்திலே பேய்கள். எழாமத்த லோகம் பாதாளம். அங்கே இருக்குத தெல்லாம் வேதாளங்கள். சும்மா ஒரு கோபுரத்த நிமுந்து பாரு தெரியும். எல்லா பயங்கர வடிவத்தையும் செதுக்கி வச்சிருக்காள். பழனிக்கு படியேறி போறவன் ஏழு லோகத்தையும் பாத்துட்டுதான் பழனியாண்டியப் பாக்கான். என்ன சொல்லுத?"

"இந்த ஏழு லோகத்துக்கும் மீதியாக்கும் நாம நின்னுக்கிட்டிருக்கோம்."

பிச்சைஎடுப்பவர்களை சரியான ஏழாம் லோகத்து ஜென்மமாக்கும் என்று அர்ச்சகர் சொல்கிறார். ஆம் நாம் நின்றுகொண்டிருக்கும் இடங்களைச் சுற்றியுள்ள எங்கும் இதைக் காண முடியும்.

புழு பூச்சிகளைப் போல் வாழ்வை ஒவ்வொரு நாளும் ஊர்ந்து கடக்கும் இவர்களுடைய வாழ்க்கையிலும் உறவுகள் இருக்கிறது. அவர்களுடைய வாழ்க்கையிலும் மகிழ்ச்சி, துக்கம், ஏமாற்றம், நட்பு என அனைத்தும் இருக்கிறது. இந்த நாவலில் அதை நாம் உணர முடியும்.

ஏழாம் உலகம் நாவலைப் படித்ததிலிருந்து "அம்மா தாயீ" "அய்யா சாமீ" என்ற புலம்பல்களைக் கேட்டால் என்னையும் அறியாமல் சுற்றி சுற்றி பார்க்கிறேன். போத்திவேலு, பெருமாள் அல்லது வண்டிமலை போல் யாராவது தெரிகிறார்களா என்று.

கன்னியாகுமரியில் பேசும் வட்டார வழக்கு மொழியை ஜெய மோகன் இந்த நாவல் முழுவதும் சரளமாக கையாண்டிருக்கிறார். புத்தகத்தின் பிற்பகுதியில் என்பதுக்கும் மேற்பட்ட மலையாள வார்த்தைகள் கொடுக்கப்பட்டுள்ளது. அதை ஒரு முறை பார்க்காமல் கதையை புரிந்து கொள்ளுவது சிரமம் தான்.

சிறந்த தமிழ் நாவல் இலக்கியங்களை வரிசைப் படுத்தினால் அந்த வரிசையில் இந்தப் புத்தகத்திற்கு நிச்சயமான ஒரு இடம் உண்டு.

ஜெய மோகனின் இணைய தளத்தை அடிக்கடி எட்டிப் பார்ப்பது வழக்கம் தான். இருந்தாலும் அவருடைய படைப்பின் மீதான என்னுடைய முதல் வாசிப்பனுபவம் இதுதான். இவருடைய பிற புத்தகங்களும் வாசகர்களிடையே பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது. அவற்றையும் வாங்க வேண்டுமென்றுதான் இருக்கிறேன். வாங்கிப் படித்தால் பதிவிடுகிறேன்.

Monday, April 13, 2009

1001 nights - S.S. Mariswami

அரபுக் கதைகள்: எஸ்.எஸ். மாரிசாமி (Rs: 400)
வெளியீடு: முல்லை நிலையம் (தி. நகர்)

தன்னுடைய அண்ணனான அரசர் ஷாரியரின் அழைப்பை ஏற்று ஷாஜமான் அவருடைய நாட்டிற்குச் செல்ல ஆயத்தமாகிறான். செல்வதற்கு முன் ஒரு முறை அரசியை பார்த்துச் செல்ல ஆசைப்பட்டு அரண்மனைக்குச் செல்கிறான். அங்கு அரசி அடிமையுடன் சல்லாபத்தில் இருக்கிறாள். அதைக்கண்ட ஷாஜமான் ஆத்திரப் பட்டு இருவரையும் வெட்டிக் கொன்றுவிடுகிறான். மிகுந்த மன வேதனையுடன் அங்கிருந்து சென்றுவிடுகிறான்.

பின் பிரதானிகளுடன் சேர்ந்து அண்ணனுடைய நாட்டிற்கு பயணமாகிறான். போகும் வழியெல்லாம் தன்னுடைய அரசி தனக்கு செய்த துரோகத்தை நினைத்து நினைத்து கஷ்டப்படுகிறான் ஷாஜமான். அண்ணனான ஷாரியர் தம்பியான ஷாஜமானுக்கு நல்ல வரவேற்பு கொடுக்கிறான். எதுவுமே தம்பியை சந்தோஷப்படுத்தவில்லை. மன வருத்தத்திற்கான காரணத்தை எவ்வளவு கேட்டும் தம்பி சொல்லவே இல்லை. எப்படி சொல்லுவான் அரசி துரோகமிழைத்தாலென? தனது மனைவி கள்ள உறவு வைத்திருந்தாலென?

தம்பியின் மன வருத்தத்தை திசை திருப்ப வேட்டைக்கு செல்ல ஏற்பாடு செய்தான்.வேட்டைக்குச் செல்லுவதென்றால் தம்பி விரும்புவானென அதற்கு ஏற்ப்பாடு செய்தான். தம்பி தான் வரவில்லையென மறுத்துவிடுகிறான். எனவே அண்ணன் மட்டும் வேட்டைக்கு செல்கிறான்.

அன்றிரவு அண்ணனுடைய மனைவியும் மசூத் என்ற அடிமையுடன் சல்லாபிக்கிறாள். இதைக் கண்ட ஷாஜமான் பெண்களே இப்படித்தான் போலும் என மனதைத் தேற்றிக்கொள்கிறான். மறுநாள் தம்பி முழுவதுமாக மாறியிருப்பதைக் கண்டு அண்ணனுக்கு மிக்க மகிழ்ச்சி. இந்த திடீர் மாற்றத்திற்கான காரணத்தை அண்ணன் வற்புறுத்தி தம்பியிடம் கேட்கிறான்.

வேண்டாமண்ணா நீங்கள் கஷ்டப்படுவீர்கள் என எவ்வளவு சொல்லியும் ஷாரியர் கேட்கவில்லை. எனவே ஷாஜமான் ஆதி முதல் அந்தம் வரை அனைத்தையும் அண்ணனிடம் சொல்லுகிறான். இருவரும் வாழ்க்கையை வெறுத்து, நாட்டை விட்டுச் சென்றுவிடுகிறார்கள்.

நீண்ட தூரம் பயணம் செய்து ஒரு கடல் பிரதேசத்தை அடைகிறார்கள். திடீரென கடல் பொங்குவது போல் தோன்றவே பெரிய மரத்தின் மேல் ஏறி அமர்ந்துகொள்கிறார்கள்.

கடலிலிருந்து பூதம் பெட்டியுடன் வெளிப்படுகிறது. பெட்டியிலிருந்து அழகான ஒரு பெண்ணை வெளியில் எடுக்கிறது பூதம். பின் பெண்ணின் மடியில் தலை வைத்து தூங்குகிறது. இவர்களைப் பார்த்துவிட்ட பெண் மரத்தின் மேலுள்ள இருவரையும் தன்னுடன் உறவு கொள்ள அழைககிறாள்.

அவர்கள் மறுக்கவே, பூதத்தை விட்டு கொன்றுவிடுவேன் என்று மிரட்டுகிறாள். வேறு வழியில்லாத சகோதரர்கள் அவளுடன் உறவு கொள்கின்றனர். பின் பூதத்தை இது போல் பழி வாங்குவதற்கான காரணத்தை அவர்களுக்கு சொல்கிறாள். பூதம் எழுந்தவுடன் பெண்ணை மறுபடியும் பெட்டியில் வைத்து பூட்டி எடுத்துக்கொண்டு கடலுக்குள் சென்றுவிடுகிறது.

பின்னர்தான் சகோதரர்கள் உணர்கிறார்கள். நாம் நாட்டைவிட்டு வந்தது தவறு. அங்கேயே இருந்து அவர்களைப் பழுவாங்கி இருக்க வேண்டும் என நினைத்து மீண்டும் தங்களது சொந்த நாட்டிற்கு பயணமாகிறார்கள். பின் தனக்கு துரோகம் இழைத்த ராணியையும், அவளது அடிமைகள், தோழிகள் என அனைவருக்கும் மரண தண்டனை விதிக்கிறார்கள்.

அதிலிருந்து தினம் ஒரு பெண்ணை மணந்து, அவர்களுடைய ஒழுக்கத்தைக் காப்பாற்ற விடிகாலையில் மரண தண்டனை விதித்துவிடுகிறான் அண்ணன் ஷாரியர்.

பிரதானி தினம் ஒரு பெண்ணைத் தேடி அவருக்கு மணமுடிப்பான். மறுநாளே அவர்களுக்கு மரண தண்டனை. சில நாட்களில் அனைத்துக் கன்னிப் பெண்களும் இது போல் இறந்து விடவே மந்திரிக்கு பெண்ணே கிடைக்கவில்லை. மந்திரியின் கவலை தோய்ந்த முகத்தைப் பார்த்த அவருடைய மகள் ஷாஜரத் மன்னரை மணப்பதாகக் கூறுகிறாள். மந்திரி கதறி அழுகிறார். ஷாஜரத் பிடிவாதமாக தானே மணந்து கொள்வதாக கூறுகிறாள்.

பிரதானியும் வேறு வழியில்லாமல் தனது மகளை அரசருக்கு மணமுடிக்க சம்மதிக்கிறான்.அரசருக்கு மந்திரியின் இந்த செயல் மகிழ்ச்சியை அளிக்கிறது. ஷாஜரத்தும் மகிழ்ந்தாள், ஆனால் மறுநாள் அவளுக்கு மரண தண்டனை. அதைக் கண்ட அவளது தங்கை துன்யாவும், மந்திரியும் (தந்தை) அழுகிறார்கள். ஷாஜரத் துன்யாவைத் தேற்றி "நீ மனது வைத்தால் இதிலிருந்து என்னைக் காப்பாற்ற முடியும்" என்கிறாள். தங்கை துன்யாவும் அதற்கு ஒப்புக்கொண்டாள்.

"அதன்படி மறுநாள் காலையில் சாவதற்கு முன் உன்னைப் பார்க்கவேண்டும் என்று அழைக்கிறேன். உன்னைக் கூப்பிட அரசவைக் காவலர்கள் வருவார்கள். தயங்காமல் அவர்களுடன் வா. சிறிது நேரம் பேசிக்கொண்டு இருந்துவிட்டு கதை சொல்லுமாறு கேட்க வேண்டும். பிறகு நான் பார்த்துக் கொள்கிறேன். நீ தூங்காமல் விழித்துக்கொண்டு இருக்க வேண்டும். நீ தூங்கினாயோ நான் தொலைந்தேன் என்று சொல்லி முடித்தாள்" ஷாஜரத்.

அதன்படி துன்யாவை அழைத்துச்செல்ல ஆட்கள் வந்தார்கள். அக்கா சொல்லிய படியே துன்யாவும் நடந்துகொண்டாள். அன்றிரவு ஒரு கதை சொல்லி அரசருக்கும், தங்கைக்கும் ஆர்வத்தைத் தூண்டிவிட்டாள். இன்னொரு கதை அதைவிட நன்றாக இருக்கும் என்றாள். அதற்குள் பொழுது விடிந்து விட்டது. கதை கேட்கும் ஆர்வத்தில் மன்னரும் மரண தண்டனையைத் தள்ளிப்போட்டார். எனவே ஷாஜரத் தப்பித்தாள்.

ஒவ்வொரு நாளும் விடியும்போது ஒரு சஸ்பென்ஸோடு கதையை நிறுத்திவிடுகிறாள். “நாளைக்கு கதையின் முடிவைக் கேட்டுவிட்டு, இவளைக் கொல்வோம்” என்று நினைத்து அரசன் அவளைக் கொல்வதைத் தள்ளிப் போடுகிறான். ஆனால் அவள் அதே உத்தியைக் கையாண்டு தினமும் கதையை முடிக்காமல் இழுத்துக்கொண்டே ஆயிரத்தோரு இரவுகளைக் கடத்திவிடுகிறாள்.

அடுத்த கதை இதைவிட நன்றாக இருக்குமென சொல்லி ஒவ்வொரு கதையாக சொல்லி அரசன் பெண்களைப் பற்றி நினைத்துக்கொண்டு இருப்பது தவறு என ஆயிரத்தொரு இரவுகள் கதைகளை சொல்லி அவளது மரணத்தைத் தள்ளிப் போட்டு அரசனைத் திருத்துவாள். கடைசியில் மன்னர் திருந்தி அவளுடன் மகிழ்ச்சியுடன் வாழ்கிறான்.

சில உண்மையான பெயர்களையும், சில கற்பனை கதாப் பாத்திரங்களையும் கொண்ட புனைவுக் கதைகள் இது. பல கிளைக் கதைகளும் உள்ளது.

ஆயிரத்தொரு இரவுகள் அரேபியக் காவியங்களுள் மிகவும் முக்கியமானப் படைப்பு. பெரும்பாலும் மத்திய கிழக்கு நாடுகள், எகிப்து, பாரசீகம், இந்தியா போன்ற இடங்களைச் சுற்றியே கதைகள் சொல்லப்படுகிறது. "கொய்ரோ, டமாஸ்கஸ்" போன்ற இடங்கள் அப்பொழுதே முக்கிய வணிக இடங்களாக இருந்துள்ளதாகத் தெரிகிறது.

இதிலுள்ள கிளைக் கதைகள் அங்கொன்றும் இங்கொன்றுமாக மொழிபெயர்ப்பு செய்யப்பட்டு அலாவுதீனும் அற்புத விளக்கும், அலிபாபாவும் நாற்பது திருடர்களும் போன்ற துணைக்கதைகள் திரைப்படமாகவும், சிந்திபாத் கதை நாளேடுகளில் வெளிவந்து சிறுவர் முதல் பெரியவர் வரை பெரிய வரவேற்பையும் பெற்றுள்ளது.

மொழிபெயர்ப்பு செய்யப்படும் போது மொழிக்கு ஏற்றாற்போலும், கலாச்சாரத்திற்கு ஏற்றாற்போலும் சில புதிய விஷயங்களை சேர்த்துள்ளதாகவும் ஒரு விவாதம் இருக்கிறது.

இக்கதைகள் பிரெஞ்சு மொழியில் "அந்தோனி காலண்ட்" என்பவரால் முதன் முதலில் மொழிபெயர்ப்பு செய்யப்பட்டு, பின்னர் ஆங்கிலத்திலும், தொடர்ந்து பிற ஐரோப்பிய மொழிகளிலும் மொழிபெயர்ப்புச் செய்யப்பட்டன.

இப்பொழுது தமிழில் பகுதி I & பகுதி II இரு பாகங்களாக (தி. நகர், பாரதி நகரிலுள்ள) முல்லை நிலையம் வெளியிட்டுள்ளார்கள். திரு. எஸ்.எஸ். மாரிசாமி மொழிபெயர்த்துள்ளார்.

புனைவுக் கதைகளை விரும்பிப் படிப்பவர்களுக்கு ஆயிரம் பக்கங்களுக்கு மேலுள்ள இந்த அரபுக் கதைகள் புத்தகம் ஒரு புத்தக வேட்டைதான்.

Thursday, April 9, 2009

Prachanai Poomigal - S.G.S

வங்கிப் பணியிலிருந்து விருப்ப ஒய்வு பெற்று முழு நேர எழுத்தாளராக விளங்கும் ஜி.எஸ்.எஸ் கதை, நாவல், கட்டுரை என பல்வேறு தளத்தில் செயல்படுபவர். மேலும் இவர் வானொலி, தொலைக்காட்சி போன்ற ஊடகங்களில் அறிவு சார்ந்த நிகழ்ச்சிகளை நடத்துபவர்.

இவர் ஆனந்த விகடனில் தொடராக எழுதி வெளிவந்த "பிரச்சனை பூமிகள்" வாசகர்களிடையே பெரிய வரவேற்பைப் பெற்றது. தொடரை தவறவிட்டவர்கள் படித்து மகிழ இப்பொழுது புத்தகமாகக் கிடைக்கிறது. இப்புத்தகம் மின்நூலாக www.vikatan.com-ல் கிடைக்கிறது.

பிரச்சனை பூமிகள்: ஜி.எஸ்.எஸ் (Rs. 90)
வெளியீடு: ஆனந்த விகடன்

நாம் பூமியில் வாழ்கிறோம். ஆனால் பிரச்சனைகளுக்கு நடுவில் தான் வாழ்கிறோம். மழைக்காலத்தில் நாம் வீட்டைச் சுற்றித் தேங்கும் தண்ணீர் பிரச்சனை, கோடை காலத்தில் குடி தண்ணீர் பிரச்சனை & மின்வெட்டுப் பிரச்சனை. மேலும் வீட்டுக்கு அருகில் டாஸ்மாக் கடை இருந்தால் குடி மகன்களால் பிரச்சனை. ஆக முழுக்க முழுக்க ஏற்றுக் கொள்ள முடியாத வகையில் இது போன்ற சில பிரச்சனைகள் இருக்கிறது.

இவையெல்லாம் நாளேடுகளில் நாம் அன்றாடும் படிக்கும் சின்னச் சின்ன பிரச்சனைகள். சிறிது முயற்சி எடுத்தால் நாமே தீர்த்துக் கொள்ள முடியும்.

ஆனால் விலை வாசிப்பிரச்சனை ஆண்டி முதல் அமைச்சர் வரை அனைவரையும் பாதிக்கக் கூடிய ஒன்று. இதன் முக்கியக் காரணம் உலக நாடுகளுக்கிடையேயான பிரச்சனைகள் தான். அது போன்ற பிரச்சனைகலுள்ள நாடுகளின் பட்டியல் கீழே

1). ஷாங்காய் 2). இந்தோனேசியா 3). போஸ்னியா
4). எத்தியோபியா 5). ஆப்கானிஸ்தான் 6). இஸ்ரேல்
7). வாடிகன் 8). பாகிஸ்தான் 9). தைவான் 10). இராக்
11). பிலிப்பைன்ஸ் 12). பங்களாதேஷ் 13). வட அயர்லாந்து
14). கம்போடியா 15). கியுபா 16). அல்பேனியா 17). மியான்மர்
18). ஜயர் 19). ஜப்பான் 20). செஷன் 21). வட கொரியா
22). தென் கொரியா 23). திபெத்

ஜப்பான், திபெத் மற்றும் ஆப்கானிஸ்தான் போன்ற சில நாடுகளின் பிரச்சனைகளும் அவற்றின் தாக்கங்களும் உலகமறிந்ததே. மற்ற நாடுகளைப் பற்றிய அடிப்படை பிரச்சனைகளை நாம் துணுக்குச் செய்தியாகப் படிப்பதோடு சரி. அவற்றைப் பற்றிய ஆழ்ந்த வாசிப்புக்கு ஆசிரியர் "ஜி.எஸ்.எஸ்" நம்மை அழைத்துச் செல்கிறார்.

ஜனவரி 2005 வரை நடந்த உலகின் மிக முக்கியப் பிரச்சனைகளை ஆசிரியர் இந்தப் புத்தகத்தில் எழுதியுள்ளார். உலக அரங்கில் முக்கியம் வாய்ந்த நாடுகளின் சில முக்கிய இடங்களை பற்றிய தெளிவு இந்தப் புத்தகத்தை வாசிப்பதன் மூலம் கிடைக்கிறது.

சில நாடுகள் பிரச்சனையைச் சமாளித்து பொருளாதார வல்லரசானாலும், சில நாடுகள் தான் கண்ட ஆட்சியாளர்களால் சீர்கெட்டு எப்படித் தவிக்கிறது என தெரிந்து கொள்ளலாம். ஆக உலக சரித்திரம் உள்ளங்கையில் இருக்கவேண்டுமென நினைப்பவர்கள் படிக்க வேண்டிய புத்தகம்.

Note: இணைய நண்பர் கலையகம் இது போன்ற உலக அரசியலை தனது வலைப்பூவில் தொடர்ந்து எழுதுவது வரவேற்கப்பட வேண்டியது. அவரது வார்த்தைகளில் சொல்லுவதென்றால் "வெகுஜன ஊடகங்களால் மக்களுக்கு சொல்லப்படாத, முக்கியத்துவம் கொடுக்கப்படாத, அல்லது மறைக்கப்பட்ட, செய்திகளை தேடித் தெரிந்தெடுத்து எழுதுவதன் மூலம், விழிப்புணர்வை ஏற்படுத்துவதே" அவரது நோக்கமெனச் செயல்படுகிறார்.

Sunday, April 5, 2009

Uravin Ellai - Thagazhi Sivasankaran Pillai

தகழி சிவசங்கரன் பிள்ளை மலையாள நாவல் இலக்கியத்தில் தனக்கென ஒரு தனிப் பாதையை வகுத்துக் கொண்டு 30-க்கும் பேற்பட்ட நாவல்கள், 20-க்கும் மேற்பட்ட சிறுகதைகள், கட்டுரைகள், சுயசரிதம் என தனது பங்களிப்பை அளித்தவர். இவர் கேரளா சாகித்ய அகாடமி விருது, ஞானபீட விருது, இலக்கிய விருது என பல விருதுகளைப் பெற்றிருக்கிறார். இவருடைய நாவல்கள் ஆங்கிலம் மற்றும் பல இந்திய மொழிகளில் மொழி பெயர்கப்பட்டுள்ளது. அப்படியொரு தகழியின் நாவலை தமிழில் சிவன் என்பவர் மொழிபெயர்த்துள்ளார். திநகர் வேங்கட நாராயணா சாலையிலுள்ள திருமகள் நிலையம் இந்தப் புத்தகத்தை வெளியிட்டுள்ளார்கள்.

உறவின் எல்லை: சிவன் (Rs:85)
வெளியீடு: திருமகள் நிலையம்

சித்தாள் வேலை செய்யும் செல்லப்பன் யூனியன், தொழிற் சங்கமென தனது வருமானத்தைச் செலவு செய்து வீட்டிற்கு பணம் கொடுக்காமலும், நண்பர்களுடன் மதுபானம் குடித்து ஊதாரியாகவும் திரிகிறான். மேலும் தனது மனைவி பவானிக்கு அவனுடைய நண்பனான கோபாலுடன் கள்ளத் தொடர்பு இருப்பதாக சந்தேகப் படுகிறான். சந்தேகத்தால் பவானியை வேலைக்குப் போகக்கூடாது என அடிக்கிறான்.

இந்த ஊதாரித்தனமும் சந்தேகமுமே பவானி கோபாலுடன் தவறான உறவு கொள்ளக் காரணமாகிறது. யூனியன் விஷயமாக இவன் வேறு ஊருக்குச் சென்று தலை மறைவாக இருக்கும்போது பவானியின் கள்ள உறவு ஆரம்பமாகி தொடர்கிறது.

செல்லப்பா தலை மறைவாக பிரபாகரன் என்ற பெயரில் வாழும் போது பார்வதி என்ற பெண்ணிடமும், அவளுடைய குடும்பத்தாரிடமும் சிநேகம் உண்டாகிறது. தான் திருமணமானவன் என்ற உண்மையைக் கூறாததால் பார்வதிக்கு செல்லப்பாவின் மீது காதல் உண்டாகிறது.

பவானியின் கள்ளத்தொடர்பு உண்மையெனத் தெரிய வரும் போது மனமுடைந்து, தலை மறைவாக இருந்த பார்வதியின் வீட்டைவிட்டு வெளியேறி நடந்தே வேறு ஊருக்குச் சென்றுவிடுகிறான். அங்கு ஒரு கம்பெனியின் முன்பு ஆர்பாட்டம் நடப்பதால் நான்கு நாட்கள் ஆர்பாட்டத்தில் கலந்து கொள்ளாமல் வேடிக்கைப் பார்க்கிறான். அப்பொழுது ஹம்சா என்பவனது நட்பு கிடைக்கிறது. ஒளரோஸ் என்பவன் தான் முதலாளி என்பதும் அவனுடைய ரௌடித்தனமும் செல்லப்பாவிற்கு தெரியவருகிறது.

ஐந்தாவது நாள் சில குண்டர்களின் அடாத செயலால் செல்லப்பா சண்டைக்குப் போகவே போலீசால் கைது செய்யப் பட்டு சிறையிலடைக்கப் படுகிறான். சிறையில் தனது மனைவியின் கள்ளக் காதலன் கோபாலினை சந்திக்கிறான். கோபால் செல்லப்பாவிடம் மன்னிப்பு கேட்கிறான். செல்லப்பன் எதுவும் பேசாமல் இருந்துவிடுகிறான். அவர்களது வாழ்க்கையிலிருந்து செல்லப்பா விலகி விடுகிறான்.

ஜெயிலிலிருந்து வெளிவந்ததும் நேராக ஹம்சாவின் கடைக்குப் போகிறான். அங்கு கடை நாசமாகி இருக்கிறது. விசாரித்ததில் செல்லப்பாவிடம் கொண்ட சிநேகத்தால் ஹம்சா-கம்பெனி முதலாளி ஒளரோசால் வஞ்சிக்கப்பட்டது தெரிய வருகிறது.

தலைவருக்கான தேர்தலில் ஒளரோசை எதிர்த்து செல்லப்பாவின் நண்பன் கோபி போட்டியிடுகிறான். தேர்தலன்று ஓளரோசின் ஆட்கள் செய்த சதியால் கோபி தோற்கிறான்.

இதற்கு மேலும் பொறுக்க முடியாமல் செல்லப்பா ஒளரோசை கொலை செய்துவிட்டு ஜெயிலுக்கு போகிறான்.

நீதிபதி அவனுக்கு தூக்குதண்டனை விதித்து தீர்ப்பளிக்கிறார். தீர்ப்பு நாளன்று அவனுடைய பிரேதத்தை வாங்க மனைவி என்ற முறையில் பவானியும்,கோபாலும் புறப்படுகிறார்கள். ஆனால் அதற்கு முன்பே, விடிய விடிய மத்திய சிறைச்சாலையின் வெளியில் ஹம்சா காத்திருப்பதாக கதை முடிகிறது.

வாழ்க்கையின் விளிம்பு நிலையிலுள்ள மக்களின் உறவு முறைகளையும், வாழ்க்கையின் பிடிப்பிற்காக உருவாகும் கள்ள உறவுகளையும் அழகாக நாவலாக்கியுள்ளார். ஆனால் தகழியின் ஆகச்சிறந்த படைப்பு என்றெல்லாம் கூற முடியாது. சிக்கலில்லாத கதை, படிப்பதற்கு பொறுமை வேண்டும்.

Friday, April 3, 2009

Unmai kalantha naat kurippu - A. Muthulingam

அ. முத்துலிங்கம் அடிப்படையில் கணக்கர்[Chartered Accountant], இருபது ஆண்டுகளுக்கும் மேல் உலக வங்கி, ஐக்கிய நாடுகள் சபை என பல இடங்களில், பல நாடுகளில் முக்கியமான பதவிகளில் கடமையாற்றியுள்ளார். அதன் பொருட்டு பல நாடுகளிலும் வாசம் செய்து தற்போது கனடாவில் வசிக்கிறார்.

இவர் ஈழத்து எழுத்தாளர்களிலிருந்து சற்றே வித்யாசப்படுபவர். இவரின் எழுத்து படிப்பவரை கட்டிப் போடக்கூடியது. "அங்கே இப்போ என்ன நேரம்?, வியத்தலும் இலமே, கடிகாரங்கள் அமைதியாக எண்ணிக்கொண்டிருக்கின்றன" போன்ற கட்டுரைத் தொகுப்புகளும், "மகாராஜாவின் ரயில் வண்டி, அக்கா" போன்ற பரிசு பெற்ற புத்தகங்களையும் எழுதியுள்ளார்.

உண்மை கலந்த நாட்குறிப்பு: அ. முத்துலிங்கம் (Rs.170)
வெளியீடு: உயிர்மை பதிப்பகம்

சென்ற ஆண்டு இறுதியில் வெளிவந்த "உண்மை கலந்த நாட்குறிப்பு" நாவல் இவருடைய வாழ்வில் நடந்த சம்பவங்களை நினைவு கூர்ந்து, அதனூடே சில சில கற்பனைகளையும் சேர்ந்து எழுதியது. கடைசியாக படித்த மௌனப்புயலில் வரும் உருதுக் கவிதையைப் போல...

[இதற்குத்தான் விதி எங்களைச்
சுள்ளி பொறுக்க வைத்ததோ?
நாங்கள் கூடுகட்டி முடித்த பிறகு
யாரோ அதற்குத் தீ வைக்க!]

இழப்புகளை, காயங்களை, தவிப்புகளை மட்டுமே கருவாக வைத்து வரும் ஈழத்து எழுத்தாளர்களின் படைப்புகளுக்கு மத்தியில் இவரது படைப்புகள் நகைச்சுவையை இழையோட வைத்து தான் ஒரு புன்னகை ததும்பி வழியும் கதைசொல்லி என்பதை நிரூபிக்கிறார்.

"இந்நாவ‌லில் இருப்ப‌து அத்த‌னையும் என் மூளையில்
உதித்த‌ க‌ற்ப‌னையே அதிலே நீங்க‌ள் ஏதாவ‌து உண்மையைக்
க‌ண்டுபிடித்தால் அது த‌ற்செய‌லான‌து.
அத‌ற்கு நான் பொறுப்பாக‌ மாட்டேன்'
"


- புத்தகத்தின் முகப்பிலேயே பின்வருமாறு ஒரு குறிப்பை எழுதி விகடத்தனத்துடனே தனது நாட்களை நினைவுகூற்கிறார்.

இந்த நாவலைப் படிப்பவர்களுக்கு ஒரு சுதந்திரம் உண்டு, அது என்னவெனில் புத்தகத்தை ஆரம்பத்திலிருந்தும் படித்துக்கொண்டு போகலாம், கடைசியிலிருந்தும் வரலாம், நடுவிலிருந்தும் படிக்கலாம்.

அதிலே எனக்கு பிடித்த அத்தியாயங்கள் "ஆப்ரிக்கப் பஞ்சாயத்து", "முகம் கழுவாத அழகி" மற்றும் "சைக்கிளும் நானும்" இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.

இதில் "சைக்கிளும் நானும்" வாசிப்பனுபவம் அனைவரையுமே பின்னோக்கிச்சென்று சைக்கிள் விடப் பழகிய நினைவுகளில் மூழ்கச்செய்யும்.

இந்த நாவலிலுள்ள ஒரு சில அத்தியாயங்களைப் படிக்க இங்கு செல்லவும்:

அத்யாயம் 15: யுவராசா பட்டம்
அத்யாயம் 20: ஆப்பிரிக்கப் பஞ்சாயத்து
அத்யாயம் 31: கழுதை வண்டிச் சிறுவன்

இவரின் இதர சில படைப்புகளை திண்ணையில் படிக்க கீழுள்ள எங்களைச்சுட்டவும்:

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19

நன்றி: திண்ணை இணையக் குழுமம்.

Wednesday, April 1, 2009

Mouna puyal - Vaasanthi

மௌனப் புயல்: வாஸந்தி (Rs.45)
வெளியீடு: கங்கை புத்தக நிலையம்

வாஸந்தி இந்திய அளவில் பன்முகத் தன்மை கொண்ட எழுத்தாளர்களில் ஒருவர். இந்தியா டுடேவில் ஆசிரியராக இருந்து ஒய்வு பெற்றவர். கதை, கட்டுரை, நாவல் என விரிந்த தளத்தில் செயல்படுபவர். அவர் எழுதிய மௌனப்புயல் பெரிய வரவேற்பைப் பெற்ற நாவல்களில் ஒன்று.

இந்திரா காந்தி ஆட்சியில் நடந்த ஆப்பரேஷன் ப்ளூ ஸ்டார் மற்றும் நவம்பர் புரச்சியை மையமாகக் கொண்ட நாவல் இது. நாவலின் முக்கியாம்சமே இந்து-சீக்கிய கலவரம் தான். இந்திய-பாகிஸ்தான் பிரிவினையின் போது நடந்த கலவரத்தை அடுத்து பஞ்சாபில் நடந்த முக்கியமான கலவரம் இது. எனவே பிரச்சனையின் வீரியம் புரிந்து கதாப்பாத்திரங்களையும், சூழ்நிலையையும் ஆசிரியர் அருமையாகக் கையாண்டுள்ளார்.

வன்முறை என்பது வாழ்க்கை முறை ஆயுதம், அதை யார் வேண்டுமானாலும் எப்பொழுது வேண்டுமானாலும் பயன்படுத்திக் கொள்ளலாம் என்ற கொள்கைக் கேற்ப பொற்கோவிலுக்குள் சிலர் ஆயுதத் துருப்புகளைப் பதுக்கி வைக்கின்றனர். இது தெரிந்து இந்திய அரசு பொற்கோவிலுக்குள் ராணுவத்தை அனுப்புகிறது. இதைப் பொறுக்க முடியாத சீக்கியர்கள் கிளர்ச்சியில் இறங்குகிறார்கள். இந்தக் கிளர்ச்சியை பத்திரிக்கைச் செய்தியாக்க விழைகிறாள் பகுதி நேர நிருபர் ரஞ்சனி.

ரஞ்சனி டெல்லியிலுள்ள ஒரு கல்லூரியின் மாணவி. அவளுடைய நெருங்கிய தோழி சீக்கியப் பெண் ரூபா. இந்து-சீக்கிய பிரச்சனை இவர்களுக்கிடையில் இடைவெளியை உருவாக்குகிறது. இடையில் கல்லூரி விரிவுரையாளர் மன்மோகன் சிங்கின் மீது காதலா? நட்பா? என்று சொல்ல முடியாத பதற்றமான உணர்வு வேறு ரஞ்சனிக்கு.

கலவரம் கரைந்து காணாமல் போகும் நேரத்தில் பிரதமரை, அவரது பாதுகாவலர்களில் ஒருவனான சீக்கியன் சுட்டுக் கொள்கிறான். அதன் பிரதிபலனாக மறுபடியும் கலவரம் வெடிக்கிறது. நிலைமை மிகவும் மோசமாகிறது. இந்தக்கலவரத்தில் ரூபாவின் காதலன் இறக்கிறான். ரூபாவின் காதலன் கலவரத்தில் பலியாவது அவர்களுடைய விரிசலை மேலும் பெரிதாக்குகிறது. மன்மோகனும் பஞ்சாபின் நிலைமையை நேரில் காண ரஞ்சனியிடம் கூட சொல்லிக்கொள்ளாமல் அமிர்தசரசுக்கு சென்றுவிடுகிறான்.

ரஞ்சனி அவளது காதலனைத் தேடி அமிர்தசரஸ் செல்கிறாள். அவனை சந்தித்து தனது காதலை எடுத்துச் சொல்கிறாள். ஆனால் அவன் தனது லட்சியத்தைக் காரணம் காட்டி நிராகரிக்கிறான். அவளும் வீம்புடன் அவனுக்காக காத்திருப்பேன் என்று சொல்லி விடைபெறுகிறாள்.

பொதுவாக அரசியலை மையமாகக் கொண்ட நாவல்கள், தரமான நாவல்கள் தமிழில் வருவது அரிது. அந்த வகையில் இந்த நாவல் ஒரு குறிஞ்சிப் பூ. தி.நகர், பனகல் பார்க் அருகிலுள்ள வானதி பதிப்பகத்தில் இந்தப் புத்தகம் கிடைக்கிறது.

குறிப்பு:

நமது புத்தகங்களுடனான உறவையும், அதைப் பற்றிய பதிவையும் பாராட்டி திரு.கவிதா அவர்களும், திரு. தீபா அவர்களும் பாராட்டு தெரிவித்தமைக்கு நன்றிகள் பல. மேலும் தீபா அவர்கள் எமக்கு அளித்த பட்டாம் பூச்சி விருது மகிழ்ச்சியளிக்கிறது. ஆங்காங்கு உள்ள எழுத்துப் பிழையையும், வாக்கிய தொடர்ச்சியின்மையையும் ஒரு பொருட்டாக நினைக்காமல், ஆரம்ப நிலையிலுள்ள என் போன்ற வலைப் பதிவர்களுக்கு இவர்கள் தரும் ஊக்கம் வரவேற்கத்தக்கது.

மீண்டும் நன்றிகளுடன்,
கிருஷ்ணப் பிரபு.