ஏழாம் உலகம்: ஜெய மோகன் (Rs: 170)
வெளியீடு: தமிழினி
ஆசிரியரின் இணையத் தளம்: Tamil Writer Jeya Mohan
உடல் ஊனமுற்றவர்களைக் கொண்டு நடக்கும் வர்த்தக வியாபாரங்களை முழு மூர்கத்துடன் கொண்டு தமிழில் வெளிவந்த ஆகச்சிறந்த படைப்பு ஜெய மோகனின் ஏழாம் உலகம். அருவருப்பு என்று எல்லோரும் ஒதுக்கி வைக்கும் விளிம்புநிலை மனிதர்களின் அவல வாழ்க்கையை தைரியமாக எடுத்துக்கொண்டு இந்நூலில் அடிக்கோடிட்டு காட்டுகிறார் ஜெயமோகன்.
"நான் கடவுள்" படத்தில் பாலா இந்த நாவலிலுள்ள கதாப் பாத்திரங்களின் தழுவல்களைத் தான் பயன்படுத்தியுள்ளார். நாவலின் தழுவல் படத்தில் இருந்தாலும் முழுக் கதாப் பாத்திரங்களையும் எடுத்துக் கொண்டு கையாளவில்லை. இதிலுள்ள 40% கதையைத்தான் எடுத்துக் கொண்டுள்ளார் என்று தோன்றுகிறது.
போத்திவேலு பண்டாரம் தான் நாவலின் முக்கியப் பாத்திரம். நல்ல முருக பக்தர். மூன்று பெண்களுக்குத் தந்தையான இவர் கோவிலில் பூ தொடுக்கும் வேலை செய்தாலும் உருப்படிகளின் மூலம் வருவாயை ஈட்டுகிறார்.
இப்படி சம்பாதிப்பதை சுட்டிக்காட்டும் கோவில் அர்ச்சகரிடம் பின் வருமாறு கூறுகிறார்.
பக்தர்கள் படியேறி ஆண்டியான முருகனிடம் வாங்குகிறார்கள். அவர்களிடம் நீங்கள் தட்டில் தட்சணையாக வாங்குகிறீர்கள். உருப்படிகள் வெளியில் வாங்குகிறார்கள். இதிலென்ன தப்பு.
ஆடுமாடுகளைக் கட்டி வைத்து நாம் வருமானம் ஈட்டவில்லையா?. அது போல் தான் இதுவும். அங்க ஹீனத்துடன் பிறப்பவர்களை பராமரித்து அவர்களுக்கு வருமானம் வர வழிசெய்கிறோம். அவர்களுடைய வாழ்வாதாரத்திற்கு வழி வகை செய்கிறோம் என்று அதற்கு ஞாயமும் கற்பிக்கிறார்.
உடலுறுப்புகளை இழந்தவர்கள் தான் இவர்களின் மூலதனம். ஊனமுற்றவர்களை உறவுகொள்ள வைத்து அவர்களுக்குப் பிறக்கும் குழந்தைகளையும் உருப்படிகளாக பயன்படுத்துவது போல் வருவது அதிரச்செய்கிறது.
ஏழாம் உலகம் என்ற புத்தகத்தின் பெயரே சற்று வித்தியாசமாக இருக்கிறது. நாவலிலேயே அதற்கான விளக்கமும் ஒரு இடத்தில் வருகிறது.
"புராணப் பிரகாரம் நாம நிக்குத மண்ணுக்கு கீழ ஏழு லோகம் உண்டு. அதலம், விதலம், நிதலம், கபஸ்திமல், மகாதலம், சுதலம், பாதாளம். அதலத்தில் பாம்புகள் இருக்கு. விதலத்தில் மீன்கள். நிதலத்தில் நண்டுகள். கபஸ்திமலில் புழுக்கள். மகாதலத்தில் கிருமிகள். சுதலித்திலே பேய்கள். எழாமத்த லோகம் பாதாளம். அங்கே இருக்குத தெல்லாம் வேதாளங்கள். சும்மா ஒரு கோபுரத்த நிமுந்து பாரு தெரியும். எல்லா பயங்கர வடிவத்தையும் செதுக்கி வச்சிருக்காள். பழனிக்கு படியேறி போறவன் ஏழு லோகத்தையும் பாத்துட்டுதான் பழனியாண்டியப் பாக்கான். என்ன சொல்லுத?"
"இந்த ஏழு லோகத்துக்கும் மீதியாக்கும் நாம நின்னுக்கிட்டிருக்கோம்."
பிச்சைஎடுப்பவர்களை சரியான ஏழாம் லோகத்து ஜென்மமாக்கும் என்று அர்ச்சகர் சொல்கிறார். ஆம் நாம் நின்றுகொண்டிருக்கும் இடங்களைச் சுற்றியுள்ள எங்கும் இதைக் காண முடியும்.
புழு பூச்சிகளைப் போல் வாழ்வை ஒவ்வொரு நாளும் ஊர்ந்து கடக்கும் இவர்களுடைய வாழ்க்கையிலும் உறவுகள் இருக்கிறது. அவர்களுடைய வாழ்க்கையிலும் மகிழ்ச்சி, துக்கம், ஏமாற்றம், நட்பு என அனைத்தும் இருக்கிறது. இந்த நாவலில் அதை நாம் உணர முடியும்.
ஏழாம் உலகம் நாவலைப் படித்ததிலிருந்து "அம்மா தாயீ" "அய்யா சாமீ" என்ற புலம்பல்களைக் கேட்டால் என்னையும் அறியாமல் சுற்றி சுற்றி பார்க்கிறேன். போத்திவேலு, பெருமாள் அல்லது வண்டிமலை போல் யாராவது தெரிகிறார்களா என்று.
கன்னியாகுமரியில் பேசும் வட்டார வழக்கு மொழியை ஜெய மோகன் இந்த நாவல் முழுவதும் சரளமாக கையாண்டிருக்கிறார். புத்தகத்தின் பிற்பகுதியில் என்பதுக்கும் மேற்பட்ட மலையாள வார்த்தைகள் கொடுக்கப்பட்டுள்ளது. அதை ஒரு முறை பார்க்காமல் கதையை புரிந்து கொள்ளுவது சிரமம் தான்.
சிறந்த தமிழ் நாவல் இலக்கியங்களை வரிசைப் படுத்தினால் அந்த வரிசையில் இந்தப் புத்தகத்திற்கு நிச்சயமான ஒரு இடம் உண்டு.
ஜெய மோகனின் இணைய தளத்தை அடிக்கடி எட்டிப் பார்ப்பது வழக்கம் தான். இருந்தாலும் அவருடைய படைப்பின் மீதான என்னுடைய முதல் வாசிப்பனுபவம் இதுதான். இவருடைய பிற புத்தகங்களும் வாசகர்களிடையே பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது. அவற்றையும் வாங்க வேண்டுமென்றுதான் இருக்கிறேன். வாங்கிப் படித்தால் பதிவிடுகிறேன்.
8 comments:
நானும் ஜெயமோகனின் இணையத்தை அவ்வப்பொழுது பார்பதோடு சரி அவரின் படைப்பை இது வரை முழுமையாக படித்தது இல்லை.
இந்த புத்தகத்தை படிக்க வேண்டும் என்ற ஆவல் உள்ளது நண்பா.
அவசியம் வாங்கி படியுங்கள் வினோத். நம்மிடம் சிறந்த எழுத்து ஆளுமைகள் இருக்கிறார்கள். நாம் தான் தவற விடுகிறோம். நாம் தான் கவனிப்பதில்லை.
உங்களை பற்றி வலைச்சரத்தில் எழுதியுள்ளேன் வந்து பார்க்கவும்
http://blogintamil.blogspot.com/
தொடர்ந்து வருகை தந்து, பின்னூட்டமிட்டு ஆதரவு தருவதற்கு மிக்க நன்றி. மேலும் என்னை குறித்து வலைச்சரத்தில் எழுதியதற்கு மகிழ்ச்சி.
உங்கள் வலை சரத்திற்கு வந்து பார்த்தேன் .நானும் கன்யாகுமரிதான்.நன்றி
வாங்கி வந்தாச்சு படிச்சுட்டு சொல்கிறேன்
ஏழாம் உலகம் என்னை மிகவும் பாதித்த ஒரு புத்தகம். ஜெயமோகனின் வீச்சு அபாரம். இதைப் பற்றிய சில பதிவுகள் இங்கே.
ஏழாம் உலகம் பற்றி பக்ஸ், ஏழாம் உலகம் பற்றி வெங்கட் சாமிநாதன், வெங்கட் சாமிநாதனின் விமர்சனம் பற்றி ஆர்வி, ஏழாம் உலகம்-ஸ்லம்டாக் மில்லியனர்-நான் கடவுள்
படித்துவிட்டேன்
வியப்பாக இருக்கு இவ்வளவு ஆழமா எழுத முடியுமா என்று
http://priyamudan-prabu.blogspot.com/2010/03/blog-post_20.html
என் பதிவை பார்க்கவும்
நன்றி
Post a Comment