தகழி சிவசங்கரன் பிள்ளை மலையாள நாவல் இலக்கியத்தில் தனக்கென ஒரு தனிப் பாதையை வகுத்துக் கொண்டு 30-க்கும் பேற்பட்ட நாவல்கள், 20-க்கும் மேற்பட்ட சிறுகதைகள், கட்டுரைகள், சுயசரிதம் என தனது பங்களிப்பை அளித்தவர். இவர் கேரளா சாகித்ய அகாடமி விருது, ஞானபீட விருது, இலக்கிய விருது என பல விருதுகளைப் பெற்றிருக்கிறார். இவருடைய நாவல்கள் ஆங்கிலம் மற்றும் பல இந்திய மொழிகளில் மொழி பெயர்கப்பட்டுள்ளது. அப்படியொரு தகழியின் நாவலை தமிழில் சிவன் என்பவர் மொழிபெயர்த்துள்ளார். திநகர் வேங்கட நாராயணா சாலையிலுள்ள திருமகள் நிலையம் இந்தப் புத்தகத்தை வெளியிட்டுள்ளார்கள்.
உறவின் எல்லை: சிவன் (Rs:85)
வெளியீடு: திருமகள் நிலையம்
சித்தாள் வேலை செய்யும் செல்லப்பன் யூனியன், தொழிற் சங்கமென தனது வருமானத்தைச் செலவு செய்து வீட்டிற்கு பணம் கொடுக்காமலும், நண்பர்களுடன் மதுபானம் குடித்து ஊதாரியாகவும் திரிகிறான். மேலும் தனது மனைவி பவானிக்கு அவனுடைய நண்பனான கோபாலுடன் கள்ளத் தொடர்பு இருப்பதாக சந்தேகப் படுகிறான். சந்தேகத்தால் பவானியை வேலைக்குப் போகக்கூடாது என அடிக்கிறான்.
இந்த ஊதாரித்தனமும் சந்தேகமுமே பவானி கோபாலுடன் தவறான உறவு கொள்ளக் காரணமாகிறது. யூனியன் விஷயமாக இவன் வேறு ஊருக்குச் சென்று தலை மறைவாக இருக்கும்போது பவானியின் கள்ள உறவு ஆரம்பமாகி தொடர்கிறது.
செல்லப்பா தலை மறைவாக பிரபாகரன் என்ற பெயரில் வாழும் போது பார்வதி என்ற பெண்ணிடமும், அவளுடைய குடும்பத்தாரிடமும் சிநேகம் உண்டாகிறது. தான் திருமணமானவன் என்ற உண்மையைக் கூறாததால் பார்வதிக்கு செல்லப்பாவின் மீது காதல் உண்டாகிறது.
பவானியின் கள்ளத்தொடர்பு உண்மையெனத் தெரிய வரும் போது மனமுடைந்து, தலை மறைவாக இருந்த பார்வதியின் வீட்டைவிட்டு வெளியேறி நடந்தே வேறு ஊருக்குச் சென்றுவிடுகிறான். அங்கு ஒரு கம்பெனியின் முன்பு ஆர்பாட்டம் நடப்பதால் நான்கு நாட்கள் ஆர்பாட்டத்தில் கலந்து கொள்ளாமல் வேடிக்கைப் பார்க்கிறான். அப்பொழுது ஹம்சா என்பவனது நட்பு கிடைக்கிறது. ஒளரோஸ் என்பவன் தான் முதலாளி என்பதும் அவனுடைய ரௌடித்தனமும் செல்லப்பாவிற்கு தெரியவருகிறது.
ஐந்தாவது நாள் சில குண்டர்களின் அடாத செயலால் செல்லப்பா சண்டைக்குப் போகவே போலீசால் கைது செய்யப் பட்டு சிறையிலடைக்கப் படுகிறான். சிறையில் தனது மனைவியின் கள்ளக் காதலன் கோபாலினை சந்திக்கிறான். கோபால் செல்லப்பாவிடம் மன்னிப்பு கேட்கிறான். செல்லப்பன் எதுவும் பேசாமல் இருந்துவிடுகிறான். அவர்களது வாழ்க்கையிலிருந்து செல்லப்பா விலகி விடுகிறான்.
ஜெயிலிலிருந்து வெளிவந்ததும் நேராக ஹம்சாவின் கடைக்குப் போகிறான். அங்கு கடை நாசமாகி இருக்கிறது. விசாரித்ததில் செல்லப்பாவிடம் கொண்ட சிநேகத்தால் ஹம்சா-கம்பெனி முதலாளி ஒளரோசால் வஞ்சிக்கப்பட்டது தெரிய வருகிறது.
தலைவருக்கான தேர்தலில் ஒளரோசை எதிர்த்து செல்லப்பாவின் நண்பன் கோபி போட்டியிடுகிறான். தேர்தலன்று ஓளரோசின் ஆட்கள் செய்த சதியால் கோபி தோற்கிறான்.
இதற்கு மேலும் பொறுக்க முடியாமல் செல்லப்பா ஒளரோசை கொலை செய்துவிட்டு ஜெயிலுக்கு போகிறான்.
நீதிபதி அவனுக்கு தூக்குதண்டனை விதித்து தீர்ப்பளிக்கிறார். தீர்ப்பு நாளன்று அவனுடைய பிரேதத்தை வாங்க மனைவி என்ற முறையில் பவானியும்,கோபாலும் புறப்படுகிறார்கள். ஆனால் அதற்கு முன்பே, விடிய விடிய மத்திய சிறைச்சாலையின் வெளியில் ஹம்சா காத்திருப்பதாக கதை முடிகிறது.
வாழ்க்கையின் விளிம்பு நிலையிலுள்ள மக்களின் உறவு முறைகளையும், வாழ்க்கையின் பிடிப்பிற்காக உருவாகும் கள்ள உறவுகளையும் அழகாக நாவலாக்கியுள்ளார். ஆனால் தகழியின் ஆகச்சிறந்த படைப்பு என்றெல்லாம் கூற முடியாது. சிக்கலில்லாத கதை, படிப்பதற்கு பொறுமை வேண்டும்.
3 comments:
நல்லாயிருக்கு
ஒரு எழுத்தாளனுக்கு ஒரு வாசகன் இதை விட ஒரு பெரிய துரோகம் செய்துவிட முடியாது. நீங்கள் ஒரு புதினத்தை படித்து ரசித்தீர்கள் என்றால் அந்த புதினத்தை பற்றி மட்டுமே எழுதவேண்டும் இவ்வாறு கதையை சுருக்கி எழுதிவிட்டால் அந்த புத்தகத்த வாங்கி படிக்க எப்படி ஆர்வம் வரும். தயவு செய்து உங்கள் அனுபவத்தை எழுதுங்கள் கதையை எழுதாதீர்கள். நன்றி
நீங்கள் சொல்வது சரிதான். பெரும்பாலும் புத்தக அறிமுகம் மற்றும் கிடைக்கும் இடத்தை தெரியப்படுத்தவே இந்தப் பதிவை எழுதுகிறேன்.
கருத்துக்கு நன்றி...
Post a Comment