பறவையைப் போல...: சுதா மூர்த்தி (Rs.60)
வெளியீடு: வானதி பதிப்பகம்
சுதா மூர்த்தியின் பயணக் கட்டுரையான "ஹக்கிய தேராலி" தமிழில் பறவையைப் போல... என மொழி பெயர்கப் பட்டுள்ளது.
அமெரிக்க பல்கலைக் கழகத்தில் சிறப்பு ஆசிரியராக மாணவர்களுக்குப் பாடம் எடுக்கும் இவரா "பாட்டி சொன்ன கதைகளின்" ஆசிரியர் என ஆச்சர்யமாக இருக்கும். சுற்றுலா முழுவதும் நமது பாரம்பரிய உடையான சேலையில் வளம் வந்திருக்கிறார். உண்மையிலேயே பாராட்டப் பட வேண்டிய பெண்மணிதான். அதே நேரத்தில் தனது சகோதரியை "பழைய சடங்குகளுக்கு உட்படாதே, தகன மேடை வரை சென்று தந்தைக்கு மரியாதை செலுத்து" என்று சொல்லும் இடத்தில் மேலும் மரியாதை ஏற்படுகிறது.
ஆசியாவிலேயே சிறந்த மென்பொருள் சேவை செய்யும் கம்பெனியின் (இன்போசிஸ்) நிர்வாக இயக்குனரின் மனைவியா இவர் என ஆச்சர்யமாக இருக்கும். அவ்வளவு எளிமை. வரலாற்றின் மீது தீராத ஆர்வம். அந்த ஆர்வமே இவரை வரலாற்றுச் சிறப்பு மிக்க உலகின் பல இடங்களுக்கு அழைத்துச் சென்றுள்ளது.
உலகின் முக்கிய சுற்றுலா இடமான எகிப்திற்கு பயணம் செய்ய சுதா மூர்த்தி புறப்பட்டிருக்கிறார். இவருடைய தந்தை தள்ளாத வயதிலும் விமான நிலையம் வரை உடன் வந்து வழியனுப்பி இருக்கிறார். இவருடைய தந்தைக்கும் பல இடங்களையும் பார்க்கும் ஆர்வம் இருந்திருக்கிறது. ஆனால் மூப்பின் காரணமாக இவருடன் செல்ல இயலவில்லை.
"சுற்றுலா முடித்து வந்து உன்னுடைய அனுபவங்களை என்னுடன் பகிர்ந்துகொள்" என்று சுதாவின் தந்தை சொல்லி இருக்கிறார். துருதுஷ்ட வசமாக எகிப்து பயணத்தில் இருக்கும் போது அவருடைய தந்தை இருதயக் கோளாறால் உயிரிழந்திருக்கிறார். இனி இவருடைய அனுபவங்களை எப்படி அவருக்குச் சொல்ல இயலும். எனவே பயணக் கட்டுரையாக எழுதி நம்முடன் பகிர்ந்து கொள்கிறார்.
"காலம் முன்னேற முன்னேற இளைய தலை முறையினர் பழைய தலை முறையினரின் வாழ்கைப் போக்கை தெரிந்து கொள்ளாமல் இருந்து விடுகின்றனர்" என சுதா மூர்த்தி குறைபட்டுக் கொள்கிறார்.
ஆம், ஹிட்லர் சொல்வது போல ஒருவனுக்கு நாட்டுப் பற்று வேண்டுமெனில் அவன் உலக சரித்திரத்தைப் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும். இல்லையேல் அவனுக்குள் ஒரு கனல் இருக்காது.
இவருடைய பயணக் குறிப்புகளை மூன்று அத்தியாயங்களாக 1).எகிப்து, 2).சீனா மற்றும் 3).ஸ்கெண்டிநேவியன் நாடுகளைப் பற்றி எழுதியுள்ளார். பிறவி சைவமான இவர் சீனாவில் பத்து நாட்களுக்கும் மேல் வெறும் பருப்பு சாதமும், வாழைப் பழமும் சாப்பிட்டு சுற்றி வந்திருக்கிறார்.
எகிப்தின் பிரமிடுகளைத் தவிர்த்து பழங்கால அரண்மனைகளையும் கொய்ரோவை சுற்றியுள்ள பார்க்க வேண்டிய இடங்கக்ளையும் பட்டியலிடுகிறார். அரபுக் கதைகளில் கொய்ரோவை படித்த ஞாபகம் வருகிறது.
சீனாவில் பெருஞ்சுவரைத் தவிர அரண்மனைகளையும், முக்கியமான நகரங்களையும் பார்க்க வேண்டிய இதர சில இடங்களையும் பட்டியலிடுகிறார். சீனாவின் கடைசி மன்னனைப் பற்றி "தி லாஸ்ட் எம்பரர்" என எடுக்கப்பட்ட படம் இங்கு நினைவு கூறத்தக்கது.
கடைசியாக ஐரோப்பிய நாடுகளான டென்மார்க், நார்வே மற்றும் ஸ்வீடன் ஆகிய இடங்களுக்கு அழைத்துச்செல்கிறார். உலகின் சிறந்த பரிசான நோபல் பரிசினை அளிக்கும் அரங்குகளுக்கு சென்று அவற்றை அழகுடன் இந்தக் கட்டுரைகளுள் நம்முடன் பகிர்ந்து கொள்கிறார்.
இவர் 1990 -களின் இறுதிகளில் மேற்கொண்ட பயணத்தை பல வருடங்கள் கழித்துதான் கட்டுரையாக எழுதியிருக்கிறார். மேலும் இந்த மொழி பெயர்ப்பு 2004 -ல் செய்யப்பட்டுள்ளது.
ஆகவே இடைப்பட்ட காலங்களில் இந்த இடங்கள் பெரிய முன்னேற்றத்தைக் கண்டிருக்கலாம். இருந்தாலும் சுதாவின் அனுபவங்கள் கவனிக்கப்பட வேண்டிய ஒன்று.
கன்னட மூலமான இதனை திரு. தி.சு. சதாசிவன் நல்ல முறையில் மொழி பெயர்த்துள்ளார்.
No comments:
Post a Comment