Saturday, July 31, 2010

நண்பர்கள் தினம்

புத்தகம் தான் ஒருவனுடைய மிகச் சிறந்த தோழன் என்பார்கள். அது மட்டும் தான் நீ கையில் எடுக்கும் பொழுது குழந்தை போல ஓடிவரும். நான் ஒவ்வொரு முறை புத்தகத்தை கையில் எடுக்கும் பொழுதும் அதனை உணர்ந்திருக்கிறேன்.

எல்லோருக்குமே நண்பர்கள் கொஞ்சம் சிறப்பான உறவு தான் (Special relationship). அதனால் தான் "எங்க அப்பா எனக்கு ஃபிரண்டு மாதிரிடா" , "எங்க அம்மா எனக்கு ஃபிரண்டு மாதிரிடா", "என்னோட வாத்தியார் எனக்கு ஃபிரண்டு மாதிரிடா", "என்னோட முதலாளி எனக்கு ஃபிரண்டு மாதிரிடா" என்று சில உறவுகளை நண்பர்களை உதாரணமாக வைத்துச் சொல்கிறோம். ஓர் எல்லை வரை நம்முடைய வயது அதிகமாக அதிகமாக நண்பர்கள் வட்டமும் அதிகமாகிக் கொண்டே போகிறது.

என்னுடைய பள்ளிப் படிப்பை முடிக்க மூன்று பள்ளிகளையும், இளங்கலை மற்றும் முதுநிலை படிப்பிற்காக இரண்டு வெவ்வேறு கல்லூரிகளையும், கூட்டுறவு பட்டயப் படிப்பிற்காக ஒரு நிறுவனத்தையும், இசைக்காக இரண்டு பள்ளிகளையும், மொழிக்காக ஒரு வகுப்பையும், நான் வேலை செய்துள்ள மூன்று அலுவலகங்களையும், ஏராளமான பயணங்களையும், பதிவுலகையும், இதர சந்திப்புகளையும் கணக்கில் எடுத்துக் கொண்டால் எவ்வளவு அறிமுகங்கள்! எவ்வளவு நலம் விசாரிப்புகள்! எத்தனை புன்னகைகள் எனக்காகப் பூத்திருக்கின்றன. கண்களை மூடிப் பார்த்தால் என்னால் அடையாளப் படுத்தக்கூடிய முகங்கள் மிகவும் சொற்பமே. என்னுடைய தன்மையிலான குறுக்கீடு அவர்களுடைய வாழ்க்கையில் இருந்துகொண்டே தான் இருக்கிறது. (I mean special day wishes & Congrats)

எஞ்சியவர்கள் என்ன ஆனார்கள்!? என்னிலிருந்து எப்படி அன்யோன்யப் பட்டார்கள்.? அவர்களை என்னிடமிருந்து பிரித்தது எது? -என்று ஆராய்ந்து பார்க்கும் பொழுது அவர்களுடைய புன்னகையும், நல விசாரிப்பும் என்னை பாடாய் படுத்துகிறது.

எந்த தினமாக இருந்தாலும் சிறப்பு தின வாழ்த்துக்கள் சொல்வதில் எனக்கு கொஞ்சமும் உடன்பாடில்லை. வியாபார யுத்தியாகத்தான் அதனைப் பார்க்கிறேன். ஆனால் என்னுடைய நண்பன் "Bathu" இறந்ததும் தான் ஒரு விஷயத்தைப் புரிந்து கொண்டேன். அவனுடைய இறப்பு எனக்கான பல விஷயங்களைப் புரிய வைத்தது. ஒரு வயது வரை குருவி சேர்ப்பதைப் போல நண்பர்களை சேர்க்கிறோம். காலம் இடைவெளி விட்டு அவர்களை அழித்துக் கொண்டு வருகிறது. சில நேரங்களில் பிரித்து வைத்து வேடிக்கை பார்க்கிறது. நம்மால் அடையாள படுத்தக்கூடிய முகங்கள் கூட மங்கலாகத் தெரிய ஆரம்பிக்கலாம். ஆகவே சாதாரண தினத்தைக் கூட ஏதாவது ஒன்றை அடிப்படையாக வைத்து சிறப்பாகக் கொண்டாடலாம். வாழ்க்கையே கொண்டாட்டம் தானே!

அதே கொண்டாட்டத்துடன் அனைவருக்கும் நண்பர்கள் தின வாழ்த்துக்கள்.