Saturday, January 30, 2010

காடு - ஜெயமோகன்

வெளியீடு : தமிழினி பதிப்பகம்
ஆசிரியர் : ஜெயமோகன்
விலை : 260/- ரூபாய்
பக்கங்கள் : 474


காடு என்ற பச்சை போர்த்திய இருள் சூழ்ந்த நிலப்பரப்பு கதைகளின் மூலமாகத்தான் சிறுவயதில் அறிமுகமானது. நாகரிக சமுதாய வாழ்க்கையை போலவே கற்பனையாக காட்டிற்குள் வாழும் வாழ்க்கையும் தனித்துவம் நிறைந்ததே.

"ஏழு மலை தாண்டி, ஏழு கடல் தாண்டி, ஒரு பெரிய காடு..." என்று சொல்லும் பொழுதே காடுகளின் பிரம்மாண்டம் கற்பனையில் கண்முன் விரிந்துவிடுகிறது. காடு தன்னுள் புதைத்து வைத்திருக்கும் அதிசயத்தை கண்கள் தேட ஆரம்பித்துவிடுகிறது.
காலங்கள் கடந்தும், யுகங்கள் கடந்தும் அந்தக் கற்பனை உலகம் என்னை பல நபர்களுடன் ஒன்று சேர்த்து வைத்துள்ளது.

ராமன் வனவாசம் சென்றிருந்த பொழுது நானும் சக பயணியாக சென்றிருக்கிறேன், பாண்டவர்கள் தாகமெடுத்து காட்டில் அலைந்து திரிந்த நாட்களில் நானும் அலைந்திருக்கிறேன். முனிவர்கள் தவம் செய்த பொழுது அருகில் நின்று அவர்களின் ஓங்காரத்தைக் கேட்டிருக்கிறேன். காட்டின் சிறிய பகுதிதான் தோட்டம் என்றால் ஆதாமும், ஏவாளும் நிர்வாணமாகத் திரிந்ததை அவர்களுக்குத் தெரியாமல் பார்த்திருக்கிறேன். ஆப்பிளைத் தின்றுவிட்டு அவர்கள் அடைந்த வெட்கத்தைக் கண்டு சிரித்திருக்கிறேன். செக்கோவின் வேட்டைகாரனை படித்த பொழுது யேகோர் விலாஸிச்சை ஏக்கத்துடன் பார்த்த பெலகேயாவுடன் நானும் நின்றிருக்கிறேன். கீயிங்கே வனத்தில் கிறிஸ்மஸிற்கு முன்னிரவில் காடு பூத்து ஒளிர்வதை ஹான்ஸ் துறவியுடன் கண்கள் கூசக் கண்டிருக்கிறேன். அந்த வரிசையில் இந்த நாவலில் வரும் கிரிதரன் மூலம் காம வேட்கையில் சுழலும் ஒருவனது மனதை அவனுக்கு அன்னியமாக நின்று பார்த்துக் கொண்டிருந்தேன். காட்டை படிமாமாக வைத்துக்கொண்டு காமத்தையும் காதலையும் விவரித்து நகரும் ஜெய மோகனின் இந்த நாவல் வித்யாசமான படைப்பு.

சிற்றாறு பட்டணங்கால் கால்வாய் (காண்டிராக்ட் வேலை) உருவாக்கத்தில் பங்கு பெற்ற கிரிதரன் என்ற வயோதிகன் நீண்ட நாட்கள் கழித்து தான் வேலை செய்த இடத்திற்குத் திரும்புகிறான். நெடுமங்காடு வனச்சாலை கேரளாவிற்குப் பிரியும் இந்த இடத்தில் தன்னுடைய பதின் பருவத்தில் நடந்த மனவோட்டங்களை நினைத்துப் பார்க்கும் கதை. தமிழ்நாடு கேரள எல்லையில் உள்ள வனப்பகுதியில் நடக்கும் கதை என்பதால் மலையாளம் கலந்த மருவிய மொழி நிறைய இடங்களில் வருகிறது. மலையாளமும் தமிழும் கலந்த மொழிதான் கதையின் ஆதார மொழி. கால வரிசை கூட ஒழுங்கில் இல்லாமல் வாழ்வின் முன்னுக்குப் பின் களைந்து சென்று, காட்டு வாழ்வு, இளமைக்காலம், தற்போதைய யதார்த்த வாழ்வு என்று பின்னிப் பிணைந்திருக்கிறது.

ஜெய மோகனின் வார்த்தைகளில் சொல்ல வேண்டுமெனில்... "காடு என்பது, ஒவ்வொரு கணமும் புதியதாக மாறியபடியே இருக்கக்கூடிய ஓர் இடம்." காலையில், மாலையில், பகலில், இரவில், பனிப் பொழிவில், கன மழையில் என காடு அடையும் உருமாற்றம் விசித்ரம் நிறைந்தது. அதுபோலவே மனிதனின் காமமும், பெண் குறித்தான வேட்கையும் மாறிக் கொண்டே இருக்கக் கூடியது. காண்ட்ராக்ட் வேலைக்கு வரும் கிரிக்கு காட்டின் தனிமை ஏற்படுத்தும் காமவிழிப்பும், அதன் மூலம் அவனுக்கு ஏற்படும் மாற்றங்களும் தான் முழு நாவலாக விரிகிறது.

நாவலின் முன்னுரையில் தேவசகாயகுமார் எழுதிய முன்னுரை:

கனவும் குரூர யதார்த்தமும்

விமர்சனங்களைப் படிக்க:

1.
கரிசல் வலைப்பூவில்: காடு
2. அனாதையின் வலைப்பதிவுகள் :
காடு (4 வது பத்தியிலிருந்து படிக்க... )

Wednesday, January 27, 2010

மோகமுள் - தி. ஜானகிராமன்

வெளியீடு : ஐந்திணை பதிப்பகம்
ஆசிரியர் : தி. ஜானகிராமன்
விலை : 300/- ரூபாய்
பக்கங்கள் : 686


மோகமுள் - பல வருடங்களுக்கு முன்பே திரைப்படமாகப் பார்த்துவிட்டதால் புத்தகத்தை வாங்கியிருந்தும் வாசிக்காமலே வைத்திருந்தேன். சென்ற மாதத்தின் ஒருநாள் வேறெதோ புத்தகத்தைத் தேடிக்கொண்டிருக்கும் பொழுது வீணையை மீட்டும் விரல்களுடனான புத்தக அட்டையுடன் மோகமுள் கைகளில் அகப்பட்டது. இனிமேலும் நாட்களை கடத்துவது அழகில்லையென படிக்க ஆரம்பித்தேன். செம்மண் புழுதி பறக்கும் கும்பகோணம் சாலையிலிருந்து கதை ஆரம்பமாகிறது.

நாவலின் கதாநாயகன் பாபு கும்பகோணம் கல்லூரியில் BA படிக்கின்றான். கல்லூரியில் படிப்பதற்காக பாபனாசத்திலிருந்து கும்பகோணம் வந்து தனியாக அறை எடுத்துத் தங்குகிறான். அவனுடைய அப்பா வைத்தி கோவிலில் கதா காலட்சேபம் செய்கிறவர். அவருக்கு பாபுவை இசைக் கலைஞனாக்க வேண்டுமென்ற தீராத ஆசை. அப்பாவின் ஆசைக்காகவாவது இசைபயில வேண்டுமென நினைக்கிறான். கல்லூரித்தோழன் ராஜம் மூலமாக ரங்கன்னாவிடம் சேர்கிறான். ரங்கண்ணா இசையை தவமாக நினைத்து வாழ்பவர். ரங்கண்ணா வரும் இடங்களில் புத்தகத்தின் நடுவிலிருந்து நெடுமுடி வேணு எட்டிப் பார்ப்பது போல இருந்தது.

வைத்தியின் குடும்ப நண்பர் சுப்ரமணியின் இரண்டாம் மனைவி பார்வதி கும்பகோணத்தில் இருக்கிறார். அந்தப் பழக்கத்தில் பாபுவும் அவர்களுடைய வீட்டிற்கு நேரம் கிடைக்கும்போது சென்று வருகிறான். பார்வதியின் மகளான முதிர்கன்னி யமுனாவை அவனுக்கே தெரியாமல் விரும்ப ஆரம்பிக்கிறான். சுப்பிரமணி இறந்து போகவும் பார்வதியின் குடும்பம் வறுமையில் உழல்கிறது. ஒரு பக்கம் இசையையும் மறுபக்கம் யமுனாவையும் தீவிரமாகக் காதலிக்கிறான்.

யமுனா அவனுடைய காதலை ஏதேதோ காரணம் காட்டி மறுத்துவிடுகிறாள். அவளின் மீதான பெருங்காமம் கொஞ்சம் கொஞ்சமாக அவனுடைய கழுத்தை இருக்குகிறது. ராஜம் கூட மேல் படிப்பிற்காக டெல்லி சென்றுவிடுகிறான். இடையில் ரங்கண்ணாவும் இறந்துவிடுகிறார். யமுனாவின் மறுப்பையும், ரங்கண்ணாவின் மரணத்தையும், ராஜத்தின் பிரிவையும் வாழ்க்கையின் பெரிய இழப்புகளாகக் கருதுகிறான். மாறுதல் வேண்டி வேலை தேடி சென்னைக்குச் செல்கிறான்.

சென்னையில் இன்ஸ்யூரன்ஸ் கம்பெனியில் பாபுவுக்கு விளம்பர பிரிவில் வேலை கிடைக்கிறது. யமுனாவும் வறுமையின் காரணமாக தாயுடன் முரண்பட்டு பாபுவைத் தேடி சென்னைக்கு வந்துவிடுகிறாள். சந்தர்ப்ப சூழ்நிலையால் பாபுவும், யமுனாவும் நெருங்கிப் பழகுகிறார்கள். ரங்கண்ணாவின் மற்றொரு சீடரான பாலூர் ராமு பாபுவைத் தேடிவந்து நட்பு பாராட்டுகிறார். அவனுக்கு இருக்கும் இசை ஞானத்திற்கு கச்சேரி செய்தால் நல்ல பெயர் கிடைக்கும் என்கிறார். முழு நேர இசையை தேர்ந்தெடுப்பதற்கு முன் குரல் பயிற்சி செய்ய ஆசைப்படுகிறான். இசைதான் இனி வாழ்க்கையென கடைசிக் கட்டமாக குரலை மேம்படுத்துவதற்காக மகாராஷ்டிரம் சென்றுவிடுகிறான்.

நாவலின் முக்கால் பாகம் தஞ்சாவூரையும், கும்பகோணத்தையும் சுற்றியே நகர்வதால் காவேரிக் கரையும் ஒரு கதாப்பாத்திரம் போல முக்கியப்பங்கு வகிக்கிறது. எழுத்தாளர் வெங்கட்ராமன் கூட ஒரு கதாப்பாத்திரமாக வந்து செல்கிறார்.

ஒரு முதிர் கன்னியை, அவளைவிட பத்து வயது இளையவன் ஒருவன் காதலிப்பதை மையமாக வைத்து தி. ஜாவால் எழுதப்பட்ட அருமையான நாவல். வெளிவந்த காலத்தில் அதனை வாசிப்பதற்கு வீட்டிலுள்ள பெரியவர்கள் அனுமதித்ததில்லை என்று சில வயோதிக நண்பர்கள் சொல்லக் கேள்விப்பட்டிருக்கிறேன். எனினும் காலம் கடந்தும் தீவிர வாசகர்களின் விருப்பப் பட்டியலில் கண்டிப்பாக இடம் பெரும் நாவல். நீங்கள் வாசித்தால் உங்களின் விருப்பப் பட்டியலிலும் சேர்த்துக்கொள்வீர்கள்.

1. கதாவிலாசத்தில் எஸ் ரா எழுதிய கட்டுரை: தி ஜானகிராமன்
2. கீற்று பக்கங்களில் தாஜ் எழுதிய கட்டுரை: அழிய நினைவுகள்
3. புத்தகம் வலைப்பூவில் ஞானசேகரின் பதிவு: மோகமுள்

இயக்குனர் ஞான ராஜசேகரால் இந்நாவல் திரைப்படமாக எடுக்கப்பட்டு விருதுகள் பல பெற்றிருந்தாலும் படமாக்கப்பட்ட விதத்தில் எழுந்த விமர்சனங்களைத் தவிர்க்க முடியவில்லை. இளையராஜாவின் இசை இந்தப் படத்திற்கு பெரிய பலம் என்றே சொல்ல வேண்டும். அந்தத் திரைப்படத்தினை கூகிள் வீடியோவில் காண கீழே சொடுக்கவும்.

மோகமுள் - திரைப்படத்தின் சில கட்சிகள்

Wednesday, January 20, 2010

எங்க உப்பப்பாவுக்கொரு ஆனையிருந்தது

ஆசிரியர்: வைக்கம் முகமது பஷீர்
தமிழில்: குளச்சல் மு. யூசுப்
வெளியீடு: காலச்சுவடு
விலை: 80/-
ரூபாய்

'ன்றுப்புப்பாக்கொரானே யுண்டார்னு' என்ற குறுநாவல் 58 ஆண்டுகளுக்கு முன்பு பாஷீரால் எழுதப்பட்டது. வாழ்ந்து கெட்ட முஸ்லீம் குடும்பத்தின் பின்னணியில் ஒரு காதல் கதையைச் சொல்லி இருக்கிறார். மூதாதையர்கள் யானை வளர்த்த பெருமையில் வாழும் தாய், கௌரவத்திற்காக வழக்காடி நிலபுலன்களை இழக்கும் தந்தை, மணமகன் யானையில் வருவானென்ற கனவில் வாழும் மகள் என முஸ்லீம் குடும்பப் பின்னணியில் அமைந்தக்கதை. பஷீரின் மொழியில் சொல்ல வேண்டுமெனில், "குஞ்ஞுபாத்தும்மா ஆனைக்கார மவனுக்க பொண்ணு மவ". அந்தப் பெருமையில் வளரும் அவளை மையமாகக் கொண்டே கதை நகர்கிறது.

பாத்தும்மா செல்வச் செழிப்பில் வாழ்ந்தாலும் பாரம்பரிய முஸ்லீம் குடும்பங்களுக்கே உண்டான ஏராளமான கட்டுப்பாடுகளுடன் வளர்க்கப்படுகிறாள். ஆடவர்களின் கண்களில் படக்கூடாது, வகுடெடுத்து தலை பின்னக்கூடாது, பூ வைக்கக் கூடாது, குட்டிக் குப்பாயம் (பாடீசு, உள்ளாடைகள்) அணியக் கூடாது என்று ஏராளமான கட்டுப்பாடுகள். மீறினால் இப்ரீத்தும், ஜின்னும், சைத்தானும், மலக்குகளும் தலையில் உட்கார்ந்து கொண்டு வாழ்வை சீரழிக்கும் என்று பயமுறுத்துகிறார்கள். அவளும் இறைவனுக்கு எதிரான செயல்கள் செய்யாமல் கட்டுப்பாடுகளுடன் நடந்து கொள்கிறாள்.

அவளுடைய குடும்பம் எதிர்பாராத விதமாக வழக்கில் சொத்துக்களை இழந்து குடிசை வீட்டிற்கு இடம் பெயர்கிறார்கள். அங்குதான் சந்தோஷத்தையும், சுதந்திரத்தையும் முழுமையாக அனுபவிக்கிறாள். அல்லிக் குளத்தில் குளிக்கப் போகும்போது அடிபட்ட பறவையைக் காப்பாற்ற விழைந்து குழியில் விழுகிறாள். இக்கட்டான சூழ்நிலையில் 'நிஸார் அகமது' அவளுக்கு உதவி செய்ய வருகிறான். இருவருக்குமிடையில் அன்பு ஊற்றெடுக்கிறது.

மற்றொரு சந்தர்ப்பத்தில் தலைமுடியை வகுடெடுத் குட்டிக் குப்பாயம் அணிந்த ஆயிஷா அறிமுகமாகிறாள். அவளைக் கண்டு காபிரிச்சி (இறைவனுக்கு எதிரான செயல்களை செய்பவள்) என்று ஒதுங்குகிறாள். பழகிய பிறகுதான் தெரிகிறது அவள் நிஸாரின் சகோதரி என்று. ஆயிஷாவின் வீட்டிற்கு சென்றுவரும் அளவிற்கு நட்பு வளர்கிறது. அவர்களுடைய முற்போக்குத்தனம் இவளுக்கு பிடித்திருக்கிறது. நிஸாரையும் சேர்த்துத்தான். அவனை எப்படி அடைகிறாள் என்பதுதான் மீதிக் கதை. எளிமையான மொழியில் அலாதியான வாசிப்பனுபவம் தந்தப் படைப்பு. நல்ல மொழிபெயர்ப்பை வழங்கிய குளச்சல் மு. யூசுப்பை எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

நீண்ட நாட்களுக்கு முன்பு மருமகன் வினோத்திடன் இந்தக் கதையில் ஆயிஷா பாடும் பாடலைப் பற்றி பேசிக் கொண்டிருந்தேன். அப்பொழுது இந்த நாவலை நான் படிக்கவில்லை.

ஹோ... ஹோ... ஹோ...
குத்தினி ஹாளிட்ட லித்தாப்போ
சந்ஜினி பாலிக்க லுட்டாப்பி
ஹாலித்த மாணிக்க லுட்டாப்பி
சங்கர பஷ்ண தூலீபீ
ஷிஞ்சினி ஷீலாத்த ஷித்தாலோ
ஃபானத்த லாக்கிடி ஜிம்பாலோ
ஹா... ஹா... ஹா...
ஹோ... ஹோ... ஹோ...

இது ஒரு ஹாஸ்யப் பாடல் மாமா. அர்த்தம் சொல்ல முடியாது, நீங்க மொழிபெயர்ப்பில் படிக்கிறது எல்லாம் ஒண்ணுமே இல்லை... அவரோட மலையாள மொழி நடை சங்கீதம் மாதிரி இருக்கும். நீங்க கேக்கக் கொடுத்து வைக்கலியே! என்றான்.

அதென்னமோ உண்மைதான். "கேட்காத சங்கீதம் கேட்ட சங்கீதத்தை விட இனிமையாக இருக்கும்" என்று மோகமுள் நாவலில் ராஜம் கதாப்பாத்திரம் பாபுவிடம் சொல்லுவான். அந்த வகையில் பஷீரின் மொழிபெயர்ப்பு ஒவ்வொன்றையும் வாசித்து முடித்ததும் கேட்க முடியாத சங்கீதத்தின் இனிமையை என்னால் அனுபவிக்க முடிகிறது. அந்தப் பரவசமே அவருடைய அடுத்தடுத்த நாவல்களை படிக்கத் தூண்டுகிறது.

Tuesday, January 12, 2010

புத்தகக் கண்காட்சி 10-ஆம் நாள்.

வெள்ளிக்கிழமை இரவு அடர்த்தியான தூறல் விழுந்துகொண்டிருந்தது. நாளை மதியம் புத்தகக் கண்காட்சிக்குச் செல்வதால் எனக்கும், முரளி பத்மநாபனுக்கும், கார்த்திகை பாண்டியனுக்கும் சில புத்தகங்கள் வாங்க வேண்டியிருந்தது. மறந்துவிடாமல் இருக்க குறிப்பெடுத்துக் கொண்டேன். சிறப்பு என்னவெனில் என்னுடைய மருமகனும் புத்தகம் வாங்க வரப் போவதாகக் கூறியிருந்தான். அதனால் தான் தூறல் பொழிகிறதோ என்னவோ!

மதியம் 1 மணிக்கு உள்ளே சென்றேன். நேராக NCBH சென்றேன். 2008-ஆம் ஆண்டில் வெளிவந்த சிறந்த புத்தகத்திற்கான தமிழக அரசின் விருது எழுத்தாளர் தமிழ் மகனின் சிறுகதைத் தொகுப்பான 'எட்டாயிரம் தலைமுறை' நூலுக்கு வழங்கியிருக்கிறார்கள். அந்தப் புத்தகம் NCBH வெளியீடு என்பது எனக்குத் தெரியும். அங்கிருந்தவர்கள் நான் விசாரித்த நூலைப் பற்றிய எந்தத் தகவலும் தெரியாது என்றார்கள். பெருத்த ஏமாற்றமாக இருந்தது. தமிழ் மகனுக்கே ஃபோன் செய்து குறைபட்டுக் கொண்டேன்.

"சிரித்துக் கொண்டே உங்களுடைய முகவரியைக் கொடுங்கள் தபாலில் அனுப்பிவிடுகிறேன்" என்றார்.

"ஒரு புத்தகத்தை தேடி வாங்குவதுதான் எழுத்தாளருக்கு செய்யும் நல்ல மரியாதை என்பது என்னுடைய எண்ணம். ஆகவே அதைப் படித்துவிட்டு உங்களிடம் வருகிறேன்" என்றேன்.

அங்கிருந்து வம்சிக்கு சென்று வலைப் பூக்களின் தொகுப்பாக வந்த புத்தகங்களை நண்பர்களுக்காக வாங்கச் சென்றேன். புத்தகங்களுக்கான பணத்தைக் கொடுத்துவிட்டுப் புறப்பட்டுக் கொண்டிருந்த பொழுது என்னைத் தள்ளிக் கொண்டு தாடி வைத்த ஒரு பையன் ஓடினான். அங்கு கவிஞர் முத்துக்குமார் உட்கார்ந்து கொண்டிருந்தார். பாடப் புத்தகத்தின் எழுதாத பக்கத்தைக் கொடுத்து அவரிடம் கையெழுத்து வாங்கிக் கொண்டான். என்னைக் கடந்து செல்லும் போது அவனை குரோதத்துடன் பார்த்தேன். ஆதர்ஷ கவியைச் சந்தித்த மகிழ்ச்சியில் அவன் பறந்து கொண்டிருந்தான். பாரதி சொல்லியது போல இன்னும் நன்றாக குரோதம் பழக வேண்டும் என்று நினைத்துக் கொண்டேன். :-)

காலச்சுவடிற்கு சென்று புத்தகங்களை கவனமாக பார்த்துக் கொண்டிருந்தேன். பின்னால் நின்று பூச்சி காண்பித்தான் மருமகன். அவனுடையறைத் தோழனும் உடன் நின்று கொண்டிருந்தான்.

"வந்துட்டயா... உனக்கு பிடிச்சப் புத்தகங்கள் எல்லாம் எடுத்துக்கோ!" என்ற சலுகையை வழங்கினேன். முதன் முறையா பெண் பார்க்கச் செல்லும் பொழுது வரும் சந்தோஷக் கூச்சத்தோடு புத்தகத்தை பார்த்துக் கொண்டிருந்தான். அவனுடைய விருப்பத்திற்கே புத்தகங்கள் வாங்கிக் கொள்ளட்டும் என்று சுதந்திரமாக விட்டுவிட்டேன்.

'துணையெழுத்து' படித்ததிலிருந்து எஸ் ரா அவனுக்கு ஆதர்ஷம். 'பிஞ்சுகள்' படித்ததிலிருந்து கி ரா. 'ஒரு வீடு ஒரு மனிதன் ஒரு உலகம்' படித்ததிலிருந்து ஜெயாகந்தன். காலச்சுவடில் அவனுடைய ஆதர்ஷனங்கள் இல்லாததால் திணறிக் கொண்டிருந்தான்.

என்னருகில் நெருங்கிய ஒருவர் "உங்களை எங்கோ பார்த்தது போல இருக்கிறதே?" என்றார். அப்படியெல்லாம் இருக்காது நல்லா யோசிச்சிப் பாருங்க என்று பதில் கூறினேன். அவர் உயிரோசையில் கட்டுரைகள் எழுதுவதாகக் கூறினார். என்னுடைய மின்னஞ்சலைக் கொடுத்து எனக்கு அனுப்புங்கள் படிக்கிறேன் என்றேன். ஜி நாகராஜன், கிருஷ்ணன் நம்பி, என் பெயர் சிவப்பு போன்ற முக்கியமான 10 புத்தகங்களை எடுத்துக் கொண்டு உயிர்மைக்கு சென்றோம்.

உயிர்மையில் மருமகனுக்கு பிரச்சனையே இல்லை. அவனுக்குத் தெரிந்த எழுத்தாளர்களின் புத்தகங்கள் நிறையவே இருந்தன. 'காளி நாடகம்' என்ற புத்தகத்தை அவனுக்காகத் தேடிக் கொண்டிருந்தேன். ஓரமாக நின்றிருந்த "ஒருவர் என்ன புத்தகம் வேண்டும்? நான் உதவி செய்யட்டுமா?" என்றார். அவர் பங்குக்கு தேடிவிட்டு மற்றொருவரை உதவிக்குக் கூப்பிட்டார். வந்தவரும் ஏமாற்றத்தை அளிக்கும் நேரத்தில் தனசேகர் வந்தார். உயிர்மையின் புத்தகங்கள் அவருக்கு அத்துப்படி என்பதால் உடனே எடுத்துக் கொடுத்தார். ஆரம்பத்தில் உதவி செய்ய வந்தவருக்கு நன்றி தெரிவிக்க நெருங்கிச் சென்றேன்.

"எனக்குப் புத்தகங்களைப் பற்றித் தெரியாதுங்க... சும்மா நின்று கொண்டிருக்கிறேன். என்னுடைய கவிதை புத்தகம் உயிர்மையில் வெளிவந்துள்ளது. வாசகர்கள் எந்தப் புத்தகங்களை அதிகம் வாங்குகிறார்கள் என்று பார்ப்பதற்காக நின்று கொண்டிருக்கிறேன்" என்றார்.

என்னை அறிமுகம் செய்துகொண்டு "உங்கள் பெயர் என்ன?" என்றேன்.

வா மணிகண்டன். கவிதை எழுதுவதில் விருப்பம் என்று பாரதி, பசுவய்யா, ஆத்மாநாம், ஞானக்கூத்தன், விக்ரமாதித்யன், சுகுமாரன், வைத்திலிங்கம், நகுலன், தேவதச்சன், மு. மேத்தா, அப்துல் ரகுமான், வைரமுத்து, மனுஷ்யபுத்திரன், கலாப்ரியா என்று பல கவிஞர்களின் பெயர்களைக் குறிப்பிட்டுப் பேசினார். அதற்காகவே அவருடைய புத்தகத்தை வாங்கினேன். இதுதான் நான் வாங்கிய முதல் கவிதைப் புத்தகம்.

உலக சினிமா, பதினெட்டாம் நூற்றாண்டின் மழை, மறைவாய் சொன்ன கதை, ஒன்பது ரூபாய் நோட்டு ஆகியவற்றுடன் இன்னும் சில புத்தகங்களை மருமகன் எடுத்துக் கொண்டான். "மறைவாய் சொன்ன கதைகளையும் எடுத்துக்கிட்ட போல" என்று கேட்டேன். வெட்கப்பட்டு சிரித்தான். எனக்காக வாங்கிய சில புத்தகங்களுக்கும் அவனே பணம் செலுத்தினான். புறப்படும் போது சாரு நிவேதிதா யாருடனோ பேசிக் கொண்டிருந்தார். அவரைக் கடந்து சென்ற பிறகு திரும்பிப் பார்த்தேன். கழுதை பொதி சுமப்பது போல மருமகனும், அவனுடைய நண்பனும் வந்து கொண்டிருந்தார்கள்.

அடலேறு வருவதற்கு நேரம் ஆனதால் மருமகனைக் கிளம்பச் சொன்னேன். அவன் புறப்பட்டதும் பா ராகவன் தென்பட்டார். ஓடிச்சென்று அவரின் முதுகின் பின்னால் ஒளிந்து கொண்டு, "பா ரா அவர்களே! பா ரா அவர்களே!" என்று கூப்பிட்டேன். 'கிருஷ்ணப் பிரபு' என்று அழுத்தமாகச் சொல்லிவிட்டு அவர் முன்பு வரச்சொன்னார்.

அவர் பேசுவதற்கு முன்பு, "உங்களுடைய வகுப்பிற்கு என்னை அழைத்ததற்கு மிக்க நன்றி... உங்களுடைய மின்னஞ்சல் வார்த்தைகள் என்றும் என்னுடைய ஞாபகத்தில் பொக்கிஷமாக இருக்கும்" என்றேன்.

"ஞாயிற்றுக் கிழமை வந்துடு... பாத்துக்கலாம்" என்றார். புத்தகக் கண்காட்சியின் இறுதி நாட்கள் என்பதால் அவரிடம் சொல்லிவிட்டுக் கிளம்பினேன். எனக்கென்னவோ கே.பி.சுந்தராம்பாள் அடிவயிற்றிலிருந்து குரலெடுத்துப் பாடிய "சென்று வா மகனே... வென்று வா...." பாடல் அசரீரி போல் கேட்டுக் கொண்டேஇருந்தது. அடலேறு ஃபோன் செய்து கேட்டுக் கொண்டிருந்த பாடலைக் கெடுத்தான்.

அவனைப் பார்ப்பதற்காகச் சென்றிருந்தேன். நிலா ரசிகனும் உடன் இருந்தார். அவர்களுடன் சிறிதுநேரம் பேசிக் கொண்டிருந்துவிட்டு மேலும் சில புத்தகங்களை வாங்கிக் கொண்டு கிளம்பினேன். அப்பொழுதுதான் எழுத்தாளர் எஸ் ரா காலையில் அனுப்பிருந்த மின்னஞ்சல் ஞாபகம் வந்தது. அவரிடம் நீண்ட நாட்களுக்கு முன்பு 'ஆண்டான் சேகவ்' மொழிபெயர்ப்புப் புத்தகம் தற்பொழுது எங்கு கிடைக்கும் என்று விசாரித்திருந்தேன். அவர் குறிப்பிட்டிருந்த இடங்களில் புத்தகம் கிடைக்கவில்லை. அதை அவருக்குத் தெரியப்படுத்தியிருந்தேன். அதற்கான பதிலில் 'மகாபுல்வெளி' நெடுங்கதை இருவாட்சி பதிப்பகத்தில் கிடைப்பதாகக் கூறியிருந்தார். சென்று பார்த்த பொழுது வாங்கக் கிடைத்தது. மருமகனுக்கும் சேர்த்து இரண்டு பிரதிகளாக வாங்கிக் கொண்டு புறப்பட்டேன்.

அரங்கின் வெளியே ஏகப்பட்ட கூட்டம்.... வாகன நெரிசல். இனிமேல் இறுதி நாட்களில் கண்காட்சிக்கு வரக்கூடாது என்று நினைத்துக் கொண்டேன். கூட்ட நெரிசலில் கிடைத்த சின்னச்சின்ன வெற்றிடங்களில் நுழைந்து முன்னேறிக் கொண்டிருந்தேன். மறுபடியும் அந்தப் பாடல் எனக்குக் கேட்டது " சென்று வா மகனே... வென்று வா...."

Tuesday, January 5, 2010

புத்தகக் கண்காட்சி - 5 ஆம் நாள்

ஞாயிறு காலை கொஞ்சம் வேலை இருந்ததால் மதியம் 2 மணிக்கு கண்காட்சியில் நுழைந்தேன். ஏகப்பட்ட கூட்டம் நிரம்பி வழிந்தது. திரும்பிவிடலாமா..! என்று கூட நினைத்தேன். சரி வந்துவிட்டோம்... வேடிக்கையாவது பார்த்துவிட்டுத் திரும்பிவிடலாம் என்று உள்ளே சென்றேன். எனது திருப்பாதங்களை உள்ளே வைத்ததும் கரண்ட் கட். எலக்ட்ரிஷன் என்னைக் கடந்து வேகமாக ஓடினார். அவரை நோக்கி என்னுடைய தலை திரும்பிய போது 'உன்னதம்' பதிப்பகம் கண்ணில் பட்டது.

இதழின் பொருப்பாசிரியரை கேணி நிகழ்ச்சியில் ஓரிரு முறை தூரத்திலிருந்து பார்த்திருக்கிறேன். அந்த அரங்கில் என்னென்ன புத்தகங்கள் தான் இருக்கிறது? என்று பார்ப்பதற்காக உள்ளே நுழைந்தேன். சயாம் பர்மா மரண ரயில் பாதை (சீ.அருண்) மற்றும் அதைத் தழுவிய வரலாற்று நாவல் (ஆர்.சண்முகம்) 'உன்னதம்' பதிப்பகத்தில் வாங்கக் கிடைத்தது. மலேஷிய நண்பர்களிடம் சொல்லி இந்தப் புத்தகத்தை இந்தியாவிற்கு அனுப்பச் சொல்லியிருந்தேன். சென்னை வரை அஞ்சலில் வந்த இந்தப் புத்தகம் எனது கிராமத்திற்கு வராமல் மலேஷியாவிற்கே திரும்பச் சென்றுவிட்டடது. மிகுந்த வருத்தத்திலிருந்த எனக்கு ஏறக்குறைய 6 மாதங்களுக்குப் பிறகு தற்செயலாக இந்தப் புத்தகம் கிடைத்ததில் மிகுந்த மகிழ்ச்சியாக இருந்தது.

தடைபட்ட மின்சாரம் வராததால் ஆங்காங்கு இருள் திட்டு இருந்து கொண்டிருந்தது. அதை பொருட்படுத்தாமல் வாசக நண்பர்கள் வாங்க வேண்டிய புத்தகங்களை புரட்டிக் கொண்டிருந்தனர். அவர்களில் முத்து சாமியும், விஷ்ணு குமாரும் தென்பட்டார்கள். அவர்களுக்கு முதுகு சொரிந்துவிட்டு தமிழினி பதிப்பகத்திற்குச் சென்றேன். அங்கு பைத்தியக்காரன் (சிவராமன்) இருந்தார்.

"ஹாய் சிவராமன் (பைத்தியக்காரன்)... "என்று கத்தினேன். புத்தகத்தை தேர்வு செய்துட்டு வாங்க என்றார். நெறிக்கட்டு மற்றும் வெள்ளெருக்கு ஆகிய புத்தகங்களை மட்டும் எடுத்துக்கொண்டு மேலோட்டமாக சில புத்தகங்களையும் பார்த்தேன். அதில் நாஞ்சில் நாடனின் சிறுகதைத் தொகுப்பும், ஆழி சூழ் உலகும் அடக்கம். கடைசியாக முதலில் தேர்வுசெய்த இரண்டு புத்தகங்களுடன் "உங்களுக்கு நானே ஃபோன் செய்யனும்னு இருந்தேன்.... இந்தாங்க இந்த ரெண்டு புத்தகத்துக்கும் பில் போடுங்க சிவராம்..." என்று கூறிக்கொண்டே அவரின் அருகில் சென்றேன்.

அதற்கு மேல் என்னை ஒரு வார்த்தைக் கூட பேசவிடவில்லை. உள்ள போய் என்னென்ன புத்தகங்கள் வேணுமோ அதையெல்லாம் எடுத்துக்கோங்க. ஒன்னும் பிரச்னை இல்லை என்றார். நான் தயங்கி நிற்பதைப் பார்த்ததும் அவரே துரு துருவென:

1. நாஞ்சில் நாடன் கதைகள்
2. சூடிய பூ சூடற்க (
நாஞ்சில் நாடன்)
3. இராசேந்திர சோழன் கதைகள்
4. அங்கே இப்போ என்ன நேரம்? (முத்துலிங்கம்)
5. ஆழி சூழ் உலகு (ஜோ டி குரூஸ்)
6. வெள்ளெருக்கு (கண்மணி குணசேகரன்)
7. நெறிக்கட்டு (அழகிய பெரியவன்)
8. பேய்க்கருப்பு (பாதசாரி)
9. அன்பின் வழியது உயிர் நிழல்
(பாதசாரி)

இந்தப் புத்தகங்கள் அனைத்தையும் ஒரு துணிப்பையில் போட்டு என்னிடம் கொடுத்தார். அதற்கான பணம் ஏறக்குறைய 1400 ருபாய். இராசேந்திர சோழன் கதைகள் இருக்க சொல்லவே வாங்கிடுங்க பிறகு கிடைக்காது என்று நாஞ்சில் நாடன் அறிவுரை கூறினார். "எல்லாம் சரிங்க சார்... இவர பணம் வாங்கிக்க சொல்லுங்க" என்று கூறினேன்.

"நீங்க வேற நிறைய புத்தகம் வாங்க வேண்டியது இருக்கும் கிருஷ்ண பிரபு. பிறகு பார்க்க சொல்ல கொடுங்க" என்று சிவராமன் கூறினார்.

"இல்லைங்க சிவராம். நான் இன்னைக்கு வேடிக்கை பார்க்க மட்டும் தான் வந்திருக்கேன். அதுவுமில்லாம என்னிடம் 'ஸ்மார்ட் கார்டு' ருக்கு. அதனால பிரச்சனை இல்லை. நீங்க மொதல்ல இந்த பணத்தைஎடுத்துக்கோங்க" என்றேன்.

"எதுவும் பேசாதீங்க... எடுத்துகிட்டு கிளம்புங்க..."

"ஐயோ சிவராம், நான் படைப்பாளியா இருந்தாக்கூட பரவாயில்லை. ஆகக் குறைவா வாசிச்சி படிப்பதை சீக்கிரமே மறந்துவிடும் சராசரி வாசகன் மட்டுமே. அதுவுமில்லாம இவ்வளவு பெரிய தொகையா வேற இருக்கு. தயவு செய்து பணம் வாங்கிக்கோங்க" என்றேன்.

வத்தல் காயப்போட்ட பெண்கள் காக்காவை விரட்டுவது போல சிவராமன் என்னை விரட்டினார். அந்தக் குறையை முத்துவுக்கு ஃபோன் செய்து கொட்டிக் கொண்டிருந்தேன். "மாமா... அன்பாதான கொடுக்கறாரு. அடுத்த முறை பார்க்கச் சொல்ல கொடுத்துடலாம்" என்றான். இல்லடா இவரு எதுக்கு இந்த மாதிரி ரிஸ்க் எடுக்கணும் என்று சிவராமைப் பற்றி புறம் பேசிக்கொண்டே சென்று கொண்டிருந்தேன். சிவராமனுடன் நடந்த கலவரத்தில் தடைபட்டிருந்த மின்சாரம் எப்பொழுது வந்தது என்பது கூடத் தெரியவில்லை. பிரகாசமான புத்தக வீதியில் நடந்துகொண்டிருந்தேன்.

"கிருஷ்ண பிரபு" என்ற குரல் சன்னமாகக் கேட்டது. திரும்பிப் பார்த்தால் யாரையும் காணவில்லை. மறுபடியும் அதே குரல் கேட்டது. என்னை மையமாக வைத்து உலகத்தையே ஒரு சுற்றுச் சுற்றினேன். ஒரு மூலையில் ஞானியின் அரங்கு தென்பட்டது. அங்கிருந்து 'பிரபு' எட்டிப் பார்த்தார். ஒவ்வொரு மாதமும் கேணி சமந்தமான குறுஞ்செய்தியை எனது மொபைலுக்கு அனுப்புபவர். அரங்கினுள் சென்றுப் பார்த்தால் ஞானி எழுதிய ஒரு நாவலும் இல்லை. நாடகங்களும், ஒ பக்கங்களும் தான் இருந்தது. ஆகவே ஒரு புத்தகத்தையும் எடுக்க முடியாமல் வெளியில் வந்தேன்.

"இந்த முறை கேணிக்கு யார் வருகிறார்கள்... ஞானியின் இணையத் தளத்தில் அறிவிப்பு இன்னும் வரவில்லையே?" என்று கேட்டேன்.

இசைஞானி இளையராஜாவின் மனம் கவர்ந்த எழுத்தாளர் என்று ஜனரஞ்சகப் பத்திரிகைகள் வர்ணிக்கும் ஒருவரின் பெயரைச் சொல்லி பெரும்பாலும் அவர்தான் வருவதாக இருக்கிறது என்று கூறினார்.

ஒ அவரா... அப்போ களைகட்டும் என்றவாறு கிழக்கு நோக்கிச் சென்றேன். முத்துவிற்காக அசோகமித்ரனின் 'கரைந்த நிழல்களும்', எனக்காக மாலனின் 'ஜனகனமன' நாவலும் எடுத்துக்கொண்டு பில் போடச் சென்றேன். வசந்த் உட்கார்ந்து கொண்டிருந்தார். ஒரு முறை எல்டாம்ஸ் சாலையிலுள்ள கிழக்கின் அலுவலகத்திற்குச் சென்று கிட்டத்தட்ட 1500 ரூபாய்க்கு பா.ராகவனின் நாவல்களும், வேறு சில முக்கியமான எழுத்தாளர்களின் நாவல்களும் வாங்கினேன்.

"சார் பில் போட்டுடட்டுமா?" என்று திரும்பத் திரும்பக் கேட்டார்.

"நிச்சயமா கண்ணா...
வாங்கதான எடுத்திருக்கேன்..."

"இல்லைங்க சார்...
பைசா அதிகமா இருக்கு... போன வாரம் இதே மாதிரி ஒருத்தர் அதிகமான புத்தகம் வாங்கினாரு. பில் போட்ட பிறகு டிஸ்கவ்ன்ட் கேட்டு சத்தம் போட்டாரு..." என்று இழுத்தார்.

"இதுக்கு முன்னாடி இங்க வந்து புத்தகம் வாங்கியிருக்கேன். நீங்க சொல்ல வரும் விஷயம் எனக்கு நல்லாவே தெரியும். பில் போட்டுடுங்க" என்றேன்.

அந்த விஷயத்தை ஞாபகப்படுத்தி உங்க கையாலேயே 10% டிஸ்கவ்ன்ட் போடவச்சேன் பார்த்தீங்களா என்று கலாய்ந்துவிட்டு காலச்சுவடு நோக்கிச் சென்றேன்.

நீண்ட நாட்களாக முத்து என்னிடம் புதுமைப்பித்தன் சிறுகதைகள் மற்றும் மொழிபெயர்ப்பு வாங்கிக் கொடுக்கும்படி கேட்டுக் கொண்டிருந்தான். புதுமைப்பித்தனின் மொத்தத் தொகுப்பாக இரண்டு புத்தகங்கள் வாங்கியதால் சுந்தர ராமசாமி சிறுகதைகளின் மொத்தத் தொகுப்பு இலவசமாகக் கிடைத்தது. புதுமைப்பித்தன் மருமகனுக்கு சுரா எனக்கு.

திருவல்லிக்கேணி காலச்சுவடு அலுவலகத்திற்கு நேரில் சென்று பல முறை புத்தகங்கள் வாங்கியதால் அங்கிருக்கும் ஓர் அக்கா எனக்குப் பழக்கம். அவர்களிடம் ஒரு முறை "நிறைய புத்தகங்கள் வாங்கினால் எங்கம்மா திட்டுவாங்க, ஆனா நீங்க கொடுக்குற கனமான கட்டைப் பையைப் பார்த்தால் அவர்களுடைய கவனம் அதில் சென்றுவிடும். நான் தப்பித்து விடுவேன்" என்று கூறியிருக்கிறேன். ஆகவே இப்பொழுதெல்லாம் குறைவான புத்தகம் வாங்கினாலும் "இந்தாங்க உங்க அம்மாகிட்ட திட்டு வாங்காதீங்கன்னு" ஒரு கட்டைப் பையை இலவசமா கொடுத்துடுவாங்க.

சிவராமன் கொடுத்த புத்தகங்கள் துணிப்பையில் தொங்கிக் கொண்டிருக்க, மீதிப் புத்தகங்களை காலச்சுவடின் கட்டைப் பையில் போட்டுக் கொண்டு விஷ்ணுவைப் பார்க்கச்சென்றேன். எழுத்தாளர் பா ராகவன் ஒரு குட்டிப் பாப்பாவுடன் வந்துகொண்டிருந்தார். ஒதுங்கி ஓரமாக நின்றோம். அதே மானரிசம்... விக்கு வினாயக்ராம் கடம் வாசிப்பது மாதிரி அவருடைய தலையை ஒரு தட்டுதட்டி என்னைப் பார்த்து கையை நீட்டினார்.

"நீங்க கும்மிடிப்பூண்டி தானே?" என்ற வார்த்தையை உச்சரிக்கப் போகிறார் என்று நினைத்தேன்.

"நீங்க கிருஷ்ண பிரபு தானே?, உங்களைப் பற்றி யாரோ பதிவுல எழுதி இருக்காங்களே" என்றார்.

என்ன சொல்றீங்க ராகவன்? என்ன பத்தி யாரு எழுதப் போறாங்க என்றேன்.

ஹா... லக்கிலுக் (அவருடைய செல்லப் பெயரை கூறினார்...)

"ஒ கிரேட்... ஆனா ஒண்ணுங்க ராகவன்... உங்க கையாள என்னைப் பற்றி ஒரு நாள் எழுத வைப்பேன்" என்று சவால் விட்டேன். ஓவரா பேசிட்டோமோ என்று நினைக்கும் போது அவர் நட்புடன் சிரித்தார். அருகில் இவ்வளவு பேச்சையும் கேட்டுக் கொண்டு ஓர் அழகான குட்டிப் பெண் இருந்தாள். முத்துவும், விஷ்ணுவும் கூட அருகில் இருந்தார்கள். இந்த குழந்தை யாருங்க என்று கேட்டேன்.

"என் பொண்ணு தான்... அவள் பெயர் பாரதி..."

'பாரதி' என்ற பெயரைக் கேட்டவுடன் முத்துவும், விஷ்ணுவும் குழுவாக "ஓ" என்றார்கள். கவிஞர்களே இப்படிதான்.

"உங்களோட உரைநடை மாதிரியே குழந்தை ரொம்ப அழகா இருக்காளே!" என்று சொல்ல நினைத்தேன்.
தயக்கமாக இருந்ததால் சொல்லவில்லை. குழந்தைக்கு டாட்டா காட்டிவிட்டு வீட்டிற்குக் கிளம்பினேன். பாரதியும் பொறுப்பு மிக்க மகளாக பாராவின் விரல் பிடித்து அழைத்துக் கொண்டு சென்றாள்.

பேருந்தில் அடித்து பிடித்து புத்தகப் பைகளுடன் வீட்டிற்குச் சென்றேன்.

"டே இது என்னடா ஜோல்னா பை (சிவராமன் கொடுத்த துணிப்பை)... நல்லா இருக்குதே எனக்குக் கொடுத்துடேன்..." என்று என் அம்மா அவர்களுடைய காரியத்தில் கண்ணாக இருந்தார்கள். எங்க அம்மா எப்பவுமே இப்படிதான்.

Saturday, January 2, 2010

புத்தகக் கண்காட்சி - 2 மற்றும் 3 ஆம் நாள்

எழும்பூர் கன்னிமரா நூலகத்தின் அருகில் எனது அலுவலகம் இருப்பதால் வாரத்தில் நான்கு நாட்கள் நிரந்தர புத்தகக் கண்காட்சிக்கு செல்லுவது வழக்கம். இதனால் மாதத்திற்கு 10 முதல் 20 புத்தகங்கள் வாங்க நேர்ந்துவிடும். எனவே சென்னை புத்தகக் கண்காட்சிக்கு செல்லும் போது கூடுமான வரையில் குறைவாகவே புத்தகங்களை வாங்க வேண்டுமென்று நினைத்துக் கொண்டேன். "வீட்டில் புத்தகம் வைக்க இடமில்லையே ஒரு பீரோ வாங்க வேண்டியதுதான" என்ற அம்மாவின் புலம்பல் வேறு இன்னொரு காரணம்.

மகிழ்ச்சிமிக்க ஆங்கில வருடத்தின் கடைசி நாளும் வந்தது, அக்காவின் மகன் அகிலுடன் விளையாடிவிட்டு 'அன்டன் செகவ்' எழுதிய சிறுகதைகளின் தமிழ் மொழிபெயர்ப்பை தெரிந்த பதிவரிடமிருந்து வாங்க அவருடைய அலுவலகத்திற்குச் சென்றிருந்தேன். அவரிடமிருந்து புத்தகத்தை வாங்கிய பிறகு சென்னையில் நடக்கும் புத்தக கண்காட்சிக்குச் செல்வது தான் என்னுடைய திட்டம்.

உடன் வருவதாக
ச் சொல்லியிருந்த "வானவில் வீதி" கார்த்திக் அடுத்த வாரம் இணைந்து கொள்வதாகக் கூறினான். அடலேருக்கு அழைப்பு விடுத்தால் 'சாரு'வுடன் வெளியூரில் இருப்பதாகக் கூறினான். சரியென்று துவந்த யுத்தத்திற்குத் தயாரானேன்.

பேருந்தில் முகம் தெரியாத வட இந்திய நண்பர் அறிமுகமானார். அவரும் புத்தக கண்காட்சிக்குச் சென்று கொண்டிருப்பதாகக் கூறினார். சென்னை பல்கலைக் கழகத்தில் ஆராய்ச்சி மாணவராம். அவரை அழைத்துக்கொண்டு அரங்கிற்கு அருகில் வந்ததும் நுழைவுச் சீட்டு வாங்குமிடத்தை காண்பித்துவிட்டு விடை பெறுவதாகக் கூறினேன். என்னுடைய மின்னஞ்சல் முகவரியை கேட்டு வாங்கிக் கொண்டார். கிழக்கு பதிப்பகத்தில் பல நல்ல ஆங்கிலப் புத்தகங்கள் கிடைக்கும் என்று கூறி அவரை அனுப்பி வைத்தேன்.

இரண்டாவது நாள் என்பதால் அதற்குத் தகுந்த மாதிரி மிதமான கூட்டம் தான் இருந்தது. நுழைவுச் சீட்டு வாங்கிக்கொண்டு நேராக 'சாகித்ய அகாடமி' அரங்கிற்குச் சென்று 5 மொழி பெயர்ப்புப் புத்தகங்களை (மலையாள, ஹிந்தி மற்றும் தெலுங்கு) வாங்கிக் கொண்டேன். பொன்-வாசுதேவன் எதிரில் தென்பட்டார். அவரிடம் 'அகநாழிகை' புத்தகங்கள் கிடைக்குமிடம் பற்றி விசாரித்துவிட்டு 'காலச்சுவடு' அரங்கை நோக்கிச் சென்றுகொண்டிருந்தேன். உள்ளிருந்து பா. ராகவன் - மருதனுடன் வந்து கொண்டிருந்தார். அருகில் சென்று 'வணக்கம் ராகவன்' என்றேன். கண்களைச் சுருக்கி என்னைப் பார்த்தார்.

உங்களுடைய வாசகன் நான். உங்களோட "அலகிலா விளையாட்டு"... எவ்வளோ நல்ல நாவல்...(யாரோ எழுதியது போல அப்பாவித்தனமா சிரிக்கிறாரு) நீங்க நேரம் எடுத்து சிறுகதை மற்றும் நாவல் எழுதணும் என்ற கோரிக்கையை வைத்தேன்.

"கதையா..." என்று அருகிலிருந்த மருதனைப் பார்த்து சிரித்தார். "நீங்க என்ன பண்றீங்க? எங்க இருக்கீங்க?" என்று கேட்டார்.

இணையம் தொடர்பான வேலை செய்கிறேன். கும்மிடிப் பூண்டி செல்லும் வழியிலுள்ள சிறிய கிராமத்தில் இருந்து தினமும் வேலைக்கு சென்னை வருகிறேன். உங்களை சிறுகதைப் பட்டறையில் ஒரு முறை சந்தித்திருக்கிறேன். என் பெயர் கிருஷ்ண பிரபு.

"ஓ... உங்களுடைய மின்னஞ்சல் மற்றும் பின்னூட்டம் பார்த்தேன்." என்று கூறிய பொழுது வேறொருவர் வந்து அவரிடம் கைகுலுக்கினார். கொஞ்ச நேரம் பேசிவிட்டு "இது என்னுடைய தினம்..." என்று எங்களிருவரையும் பார்த்து சிரித்துவிட்டுக் கிளம்பினார்.

காலச்சுவடு 15-வது ஆண்டு விழாவை முன்வைத்து இரண்டு புத்தகம் வாங்கினால் ஒரு புத்தகம் இலவசம், மூன்று புத்தகங்கள் வாங்கினால் ஒரு புத்தகம் இலவசம் என்ற சலுகையை வழங்கிக் கொண்டிருந்தார்கள். முத்துவிற்கும் எனக்கும் சேர்த்து கிளாசிக் வரிசை மற்றும் சிறுகதை புத்தகங்கள் (10) எடுத்துக் கொண்டேன். அங்கிருந்து உயிர்மைக்கு சென்று தமிழ்மகன், சாரு, எஸ் ரா, விஜய் மகேந்திரன் ஆகியோரது கதைகள் மற்றும் கட்டுரைகள் வாங்கிக் கொண்டேன். அங்கிருந்து கவிதா பதிப்பகத்திற்குச் சென்று அசோகமித்ரனின் 'ஒரு பார்வையில்-சென்னை நகரம்' வாங்கிக் கொண்டேன். நீண்ட நாட்களாகத் தேடிக்கொண்டிருந்த இந்தப் புத்தகம் கிடைத்ததில் மிகவும் சந்தோஷப்பட்டேன்.

முத்துவிற்காக அகிலனின் 'சித்திரப்பாவை' என்ற நூலினை வாங்குவதற்காக தமிழ் புத்தகாலயம் சென்றேன். உள்ளே நுழையும் போது ஒருவரைப் பார்க்க நேர்ந்தது. அவரை எங்கோ பார்த்த ஞாபகம்.

"நீங்கள் எழுத்தாளரா?" என்று கேட்டேன்.

சிரித்துவிட்டு நீங்கள் கேட்ட புத்தகம் அங்கே இருக்கிறது பாருங்கள் என்று கை காட்டினார்.
புத்தகத்திற்கான பணத்தைக் கொடுத்துவிட்டு திரும்பும் போது "நான் தான் எழுத்தாளர் அகிலனின் மகன்" என்றார். சில புத்தகங்களை வாங்குவதற்காக வள்ளுவர் கோட்டம் அருகிலுள்ள அவருடைய வீட்டிற்கு நீண்ட நாட்களுக்கு முன்பு சென்ற ஞாபகம் வந்தது. அவருடைய பரிந்துரையின்படி அகிலனின் வேறுசில புத்தகங்களையும் வாங்கிக்கொண்டு 'அகரம்' பதிப்பகத்திற்குச் சென்றேன். அரங்கு முழுவதும் கி ரா-வின் புத்தகங்கள் ஜொலித்துக் கொண்டிருந்தன. அங்கிருந்து 'அந்தமான் நாயக்கர், தங்கர் பச்சனின் சிறுகதைகள், பிஞ்சுகள்' ஆகிய புத்தகங்களை வாங்கிக் கொண்டு சுமையைத் தூக்க முடியாமல் வீட்டிற்குத் திரும்பினேன். நான் சென்றிருந்த போது வண்ணத்துப் பூச்சியார், அமித்துவின் அம்மா, துளசி ஆகியோரும் கண்காட்சிக்கு வந்திருக்கிறார்கள். ஒருவரையொருவர் பார்க்க முடியாமல் போனதில் வருத்தமே.

ஆங்கிலப் புத்தாண்டிற்கு அலுவலகம் விடுமுறை என்பதால் உறங்குவதற்கு முன் அடுத்தநாள் வாங்க வேண்டிய புத்தகங்களின் பட்டியலை தயார் செய்தேன். 'காதுகள்' என்ற எம்.வி வெங்கட் ராமன் எழுதிய நாவல் பற்றி பா. ராகவன் நீண்ட நாட்களுக்கு முன்பு கல்கியில் எழுதியிருக்கிறார். "அந்தப் புத்தகம் இப்பொழுது எந்தப் பதிப்பகத்தில் கிடைக்கிறது?" என்று அவருக்கு மின்னஞ்சல் அனுப்பிவிட்டு உறங்கச் சென்றேன்.

நாளை மற்றொரு நாளே என்பது போல் 2010-ம் தொடங்கியது. நெருங்கிய நண்பர்களின் அழைப்புகளுக்கும், குறுஞ்செய்திகளுக்கும் பதிலளித்துவிட்டு சென்னையை நோக்கிக் கிளம்பினேன். அக்காவின் மகளுக்கு மரத்தினாலான தொட்டில் கிடைக்கிறதா என்று பார்த்துவிட்டு மதிய நேரத்தில் கண்காட்சிக்குச் சென்றேன். விடுமுறை தினம் என்பதால் நல்ல கூட்டம்.

தமிழினி பதிப்பகத்தில் ஜெய மோகனின் 'காடு' (நீண்ட நாட்களுக்கு முன்பு சிவராமன் பரிந்துரை செய்தது) வாங்கினேன். அருகில் சா. முத்துவேல் (அகநாழிகை ஆசிரியர் குழு உறுப்பினர்) ஜெயமோகனின் 'ஏழாம் உலகம்' புத்தகத்துடன் நின்று கொண்டிருந்தார். பரஸ்பர விசாரிப்புக்குப் பின் நாஞ்சில் நாடனின் சில புத்தகங்களை எடுத்துக் கொண்டு கவிதா பதிப்பகத்திற்குச் சென்று நேற்று வாங்கத் தவறிய சில புத்தகங்களை வாங்கிக் கொண்டேன். அங்கிருந்து கிழக்கு பதிப்பகத்தைக் கடந்து செல்லும் போது பா. ராகவன், சோம. வல்லியப்பனுடன் பேசிக்கொண்டிருந்தார். அருகில் யுவகிருஷ்ணா நின்றுகொண்டிருந்தார்.

Excuse me Ragavan... நீண்ட நாட்களுக்கு முன்பு 'காதுகள்' நாவல் பற்றி
கட்டுரை எழுதி இருக்கீங்க... இப்போ அந்தப் புத்தகம் எந்த பதிப்பகத்தில் கிடைக்கிறது என்று சொல்ல முடியுமா?

குமிடிப் பூண்டி இல்ல நீங்க... உங்களோட ஈமெயிலை இரவு 1 மணிக்குப் பார்த்தேன். அதனால தான் Reply பண்ண முடியலை. "இப்போ எங்க கிடைக்கும்...?" என்று
யோசித்துக் கொண்டே விக்கு விநாயகராம் மாதிரி அவரோட உச்சி மண்டைல ஒரு தட்டுத்தட்டி நெத்திய தடவிக்கிட்டாரு. ஒரு யோசனையும் வராததால பக்கத்தில் நின்ற யுவ கிருஷ்ணாவிடம் "நீ ஏன்யா சும்மா நிக்கிற ஏதாவது பதில் சொல்லேன்...!" என்று கூறினார். அவருக்கும் தெரியாததால் "என்னிடம் ஒரு Copy இருக்கு... எங்கயும் கிடைக்கலன்னா வந்து வாங்கிக்கோங்க..." என்ற சலுகையை வழங்கினார்.

"ஐயோ ராகவன் நீங்க தப்பு பண்றீங்க. உங்களோட பரிசு பெற்ற நாவல் (அலகிலா விளையாட்டு) இலக்கிய பீடத்தில் வெளிவந்த போது நூலகருக்குத் தெரியாமல் திருடியவன் நான். என்ன நம்பி உங்களோட புத்தகத்தைக் கொடுக்கறதா சொல்றீங்களேன்னு" மனதிற்குள் நினைத்துக் கொண்டேன். நிறைய பேர் 'பா. ரா' அவர்களை அரசியல் பற்றி மட்டுமே எழுதுபவர் என்று நினைத்துக் கொண்டிருக்கின்றனர். அவருடைய நாவலை வாசித்தால் உங்களுடைய எண்ணங்கள் சுக்கு நூறாக உடைந்துவிடும். கிழக்கில் அவருடைய "ரெண்டு, குதிரைகளின் கதை, மெல்லினம்" போன்ற புத்தகங்கள் கிடைக்கின்றன.

மேலதிக விவரங்களுக்கு விக்கிபீடியாவில் பார்க்கவும்: பா ராகவன்

அவருடைய எழுத்தில் அவருக்கு மிகவும் பிடித்த படைப்பு 'அலை உறங்கும் கடல்' என்று எங்கோ படித்ததாக ஞாபகம்.
தமிழினி பதிப்பகத்தில் அந்தப் புத்தகம் கிடைக்குமென்று நினைக்கிறேன்.

நானும் 'டாலர் தேசம், நிலமெல்லாம் ரத்தம்' போன்ற புத்தகங்களைப் படித்திருக்கிறேன். இருந்தாலும் ஒரு கதாசிரியராகத் தான் பா.ரா என்னை வெகுவாகக் கவர்கிறார். அதனாலேயே அவரைப் பார்க்கும் போதெல்லாம் "நீங்க நேரம் எடுத்து கதையோ, நாவலோ எழுதலாமே?" என்ற கோரிக்கையை வைத்துக்கொண்டிருக்கிறேன்.

எங்கு பார்த்தாலும்
இந்த நச்சரிப்பு தொடர்வதால் என்றாவது ஒரு நாள் அவரோட பீச்சாங்கையால ஓங்கி ஒரு போடு போடப் போறாரு. அதுவரைக்கும் நானும் அடங்கப் போறதில்லை. இதற்கு மேல் அவரிடம் அடிவாங்கிவிட்டு அதைப் பற்றி எழுதுகிறேன்.

பரிசல் பதிப்பகத்தில் பதிவர் நர்சிம் எழுதிய 'அய்யனார் கம்மா' வாங்குவதற்காகச் சென்றிருந்தேன். "எதற்காக எல்லோரும் அகநாழிகை பதிப்பகத்திலிருந்து இந்தப் புத்தகத்தையே கேட்கிறீர்கள்?" என்ற தொனியில் கேள்வி கேட்டார். "மற்றவர்களைப் பற்றி எனக்குத் தெரியாது, என்னுடைய அளவில் கவிதை வாசிப்பது சிரமம். ஆகவே சிறுகதைத் தொகுப்பை வாங்குகிறேன்" என்றவாறு பதில் கூறினேன். கேள்வி கேட்டவரைக் காட்டிலும் அவருக்குப் பக்கத்தில் இருந்தவருக்கு குரோதம் வந்துவிட்டது. கோவப்பட்டவர் கவிஞர் என்பது எனக்கு எப்படித் தெரியும். ஒருவழியாக வழிந்து சமாளித்துவிட்டு அங்கிருந்து கிளம்பினேன்.

வம்சி பதிப்பகத்திற்குச் சென்று எழுத்தாளர் மாதவராஜ் தொகுத்த பதிவர்களின் புத்தகங்களை காணச் சென்றேன். எனக்குத் தெரிந்த பதிவர்களான முரளி, சேரல், சாரதா, சையது, பாலமுருகன், கார்த்திகைப் பாண்டியன், நிலா ரசிகன், உழவன், ரிஷான், யாத்ரா, பொன்.வாசுதேவன்... இன்னும் பலரது பெயர்கள் அந்தப் புத்தகத்தில் இருப்பது கண்டு மகிழ்ச்சியாக இருந்தது. தெரிந்தவர்களின் வரிசை நீண்டுகொண்டே போகிறது. வம்சியிலிருந்து பாவா செல்லதுரையின் புத்தகமும், குழந்தைகள் சம்மந்தமான சினிமா புத்தகங்களையும் எனக்காக வாங்கிக்கொண்டு அன்றைய பொழுதை கழித்துவிட்டு வீடு திரும்பினேன்.

பின் குறிப்பு: பா.ராகவனின் இந்தப் (கலைஞர், கண்காட்சி, கிழக்கு – ஆரம்பம், அமர்க்களம்!) பதிவை படித்துவிட்டு மொழி தெரியாதவருக்கு தப்பான வழியைக் காட்டிவிட்டோமே என்று குற்ற உணர்வாகப் போய்விட்டது. தப்பான வழியைக் காட்டுகிறவர்களுக்கு கருடபுராணத்தில் என்ன தண்டனையோ தெரியலையே!