Saturday, January 30, 2010

காடு - ஜெயமோகன்

வெளியீடு : தமிழினி பதிப்பகம்
ஆசிரியர் : ஜெயமோகன்
விலை : 260/- ரூபாய்
பக்கங்கள் : 474


காடு என்ற பச்சை போர்த்திய இருள் சூழ்ந்த நிலப்பரப்பு கதைகளின் மூலமாகத்தான் சிறுவயதில் அறிமுகமானது. நாகரிக சமுதாய வாழ்க்கையை போலவே கற்பனையாக காட்டிற்குள் வாழும் வாழ்க்கையும் தனித்துவம் நிறைந்ததே.

"ஏழு மலை தாண்டி, ஏழு கடல் தாண்டி, ஒரு பெரிய காடு..." என்று சொல்லும் பொழுதே காடுகளின் பிரம்மாண்டம் கற்பனையில் கண்முன் விரிந்துவிடுகிறது. காடு தன்னுள் புதைத்து வைத்திருக்கும் அதிசயத்தை கண்கள் தேட ஆரம்பித்துவிடுகிறது.
காலங்கள் கடந்தும், யுகங்கள் கடந்தும் அந்தக் கற்பனை உலகம் என்னை பல நபர்களுடன் ஒன்று சேர்த்து வைத்துள்ளது.

ராமன் வனவாசம் சென்றிருந்த பொழுது நானும் சக பயணியாக சென்றிருக்கிறேன், பாண்டவர்கள் தாகமெடுத்து காட்டில் அலைந்து திரிந்த நாட்களில் நானும் அலைந்திருக்கிறேன். முனிவர்கள் தவம் செய்த பொழுது அருகில் நின்று அவர்களின் ஓங்காரத்தைக் கேட்டிருக்கிறேன். காட்டின் சிறிய பகுதிதான் தோட்டம் என்றால் ஆதாமும், ஏவாளும் நிர்வாணமாகத் திரிந்ததை அவர்களுக்குத் தெரியாமல் பார்த்திருக்கிறேன். ஆப்பிளைத் தின்றுவிட்டு அவர்கள் அடைந்த வெட்கத்தைக் கண்டு சிரித்திருக்கிறேன். செக்கோவின் வேட்டைகாரனை படித்த பொழுது யேகோர் விலாஸிச்சை ஏக்கத்துடன் பார்த்த பெலகேயாவுடன் நானும் நின்றிருக்கிறேன். கீயிங்கே வனத்தில் கிறிஸ்மஸிற்கு முன்னிரவில் காடு பூத்து ஒளிர்வதை ஹான்ஸ் துறவியுடன் கண்கள் கூசக் கண்டிருக்கிறேன். அந்த வரிசையில் இந்த நாவலில் வரும் கிரிதரன் மூலம் காம வேட்கையில் சுழலும் ஒருவனது மனதை அவனுக்கு அன்னியமாக நின்று பார்த்துக் கொண்டிருந்தேன். காட்டை படிமாமாக வைத்துக்கொண்டு காமத்தையும் காதலையும் விவரித்து நகரும் ஜெய மோகனின் இந்த நாவல் வித்யாசமான படைப்பு.

சிற்றாறு பட்டணங்கால் கால்வாய் (காண்டிராக்ட் வேலை) உருவாக்கத்தில் பங்கு பெற்ற கிரிதரன் என்ற வயோதிகன் நீண்ட நாட்கள் கழித்து தான் வேலை செய்த இடத்திற்குத் திரும்புகிறான். நெடுமங்காடு வனச்சாலை கேரளாவிற்குப் பிரியும் இந்த இடத்தில் தன்னுடைய பதின் பருவத்தில் நடந்த மனவோட்டங்களை நினைத்துப் பார்க்கும் கதை. தமிழ்நாடு கேரள எல்லையில் உள்ள வனப்பகுதியில் நடக்கும் கதை என்பதால் மலையாளம் கலந்த மருவிய மொழி நிறைய இடங்களில் வருகிறது. மலையாளமும் தமிழும் கலந்த மொழிதான் கதையின் ஆதார மொழி. கால வரிசை கூட ஒழுங்கில் இல்லாமல் வாழ்வின் முன்னுக்குப் பின் களைந்து சென்று, காட்டு வாழ்வு, இளமைக்காலம், தற்போதைய யதார்த்த வாழ்வு என்று பின்னிப் பிணைந்திருக்கிறது.

ஜெய மோகனின் வார்த்தைகளில் சொல்ல வேண்டுமெனில்... "காடு என்பது, ஒவ்வொரு கணமும் புதியதாக மாறியபடியே இருக்கக்கூடிய ஓர் இடம்." காலையில், மாலையில், பகலில், இரவில், பனிப் பொழிவில், கன மழையில் என காடு அடையும் உருமாற்றம் விசித்ரம் நிறைந்தது. அதுபோலவே மனிதனின் காமமும், பெண் குறித்தான வேட்கையும் மாறிக் கொண்டே இருக்கக் கூடியது. காண்ட்ராக்ட் வேலைக்கு வரும் கிரிக்கு காட்டின் தனிமை ஏற்படுத்தும் காமவிழிப்பும், அதன் மூலம் அவனுக்கு ஏற்படும் மாற்றங்களும் தான் முழு நாவலாக விரிகிறது.

நாவலின் முன்னுரையில் தேவசகாயகுமார் எழுதிய முன்னுரை:

கனவும் குரூர யதார்த்தமும்

விமர்சனங்களைப் படிக்க:

1.
கரிசல் வலைப்பூவில்: காடு
2. அனாதையின் வலைப்பதிவுகள் :
காடு (4 வது பத்தியிலிருந்து படிக்க... )

12 comments:

மோகன் குமார் said...

இவரது சிறு கதை தான் வாசித்துள்ளேன் நாவல் வாசித்தது இல்லை; வாசிக்க வேண்டும். பகிர்வுக்கு நன்றி

Harish Ragunathan said...

I have read Jayamohan's Ezhaam Ulagam', 'Vishnupuram', 'Pin Thodarum Nizhalin Kural'. Yet to read this one. Good review.

கிருஷ்ண பிரபு said...

470 பக்கங்களுள்ள நாவல். வட்டார மொழி அதிகம் வருவதால் படிப்பதற்கு கொஞ்சம் சிரமமாக இருந்தது. ஆனால் அருமையான புனைவு.

பின்னூட்டத்திற்கு நன்றி மோகன் & ஹரிஸ் ரகுநாதன்.

padmanabhan said...

i m awaiting your reviews on next book please

விக்னேஷ்வரி said...

ம், வித்தியாசமான நாவலாகத் தெரிகிறது. உங்கள் விமர்சனம் வழக்கம் போல் அருமை.

பிரியமுடன் பிரபு said...

பகிர்வுக்கு நன்றி

கிருஷ்ண பிரபு said...

பின்னூட்டம் அளித்த நண்பர்களுக்கு நன்றி...

Bogy.in said...

புத்தம் புதிய தமிழ் திரட்டி bogy.in,
உங்கள் வலைப்பூவை இதிலும் இணைத்து கொள்ளுங்கள்.
ஓட்டுபட்டை வசதியும் உள்ளது.

தமிழ் சமூகத்திற்கு தேவையான பயனுள்ள தகவல்களையும், செய்திகளையும் திரட்டி அவற்றை தமிழ் சமூகத்திற்கு சென்றடைய எங்களின் முயற்ச்சிக்கு உங்கள் ஆதரவை தருமாறு வேண்டுகிறோம்….

இவன்
http://www.bogy.in

Bogy.in said...

புத்தம் புதிய தமிழ் திரட்டி bogy.in,
உங்கள் வலைப்பூவை இதிலும் இணைத்து கொள்ளுங்கள்.
ஓட்டுபட்டை வசதியும் உள்ளது.

தமிழ் சமூகத்திற்கு தேவையான பயனுள்ள தகவல்களையும், செய்திகளையும் திரட்டி அவற்றை தமிழ் சமூகத்திற்கு சென்றடைய எங்களின் முயற்ச்சிக்கு உங்கள் ஆதரவை தருமாறு வேண்டுகிறோம்….

இவன்
http://www.bogy.in

ஜீவி said...

வாசிக்க ஆவலாக இருக்கிறது..
இந்த நாவல் அரசு நூலகங்களில் படிக்கக் கிடைக்குமா, கிருஷ்ண பிரபு?

கிருஷ்ண பிரபு said...

அரசு நூலகங்களில் கிடைப்பது அரிதுதான் என்று நினைக்கிறேன். சென்னை கன்னிமரா நூலகத்தில் ஒருவர் இந்த புத்தகத்தை படித்துக் கொண்டிருந்தார். ஆகவே அங்கு கிடைக்கும் என்று நினைக்கிறேன். இருந்தாலும் உறுதியுடன் சொல்ல முடியவில்லை.

நீங்கள் சென்னைவாசி என்றல் தெரியப்படுத்துங்கள். என்னுடைய புத்தகத்தை படிக்கக் கொடுக்கிறேன்.

ஜீவி said...

தங்கள் மனமுவந்த பதிலுக்கு மிக்க நன்றி, கிருஷ்ண பிரபு. பிறகு உங்களுக்குத் தெரியப்படுத்துகிறேன்.
மிக்க நன்றி.