Wednesday, January 27, 2010

மோகமுள் - தி. ஜானகிராமன்

வெளியீடு : ஐந்திணை பதிப்பகம்
ஆசிரியர் : தி. ஜானகிராமன்
விலை : 300/- ரூபாய்
பக்கங்கள் : 686


மோகமுள் - பல வருடங்களுக்கு முன்பே திரைப்படமாகப் பார்த்துவிட்டதால் புத்தகத்தை வாங்கியிருந்தும் வாசிக்காமலே வைத்திருந்தேன். சென்ற மாதத்தின் ஒருநாள் வேறெதோ புத்தகத்தைத் தேடிக்கொண்டிருக்கும் பொழுது வீணையை மீட்டும் விரல்களுடனான புத்தக அட்டையுடன் மோகமுள் கைகளில் அகப்பட்டது. இனிமேலும் நாட்களை கடத்துவது அழகில்லையென படிக்க ஆரம்பித்தேன். செம்மண் புழுதி பறக்கும் கும்பகோணம் சாலையிலிருந்து கதை ஆரம்பமாகிறது.

நாவலின் கதாநாயகன் பாபு கும்பகோணம் கல்லூரியில் BA படிக்கின்றான். கல்லூரியில் படிப்பதற்காக பாபனாசத்திலிருந்து கும்பகோணம் வந்து தனியாக அறை எடுத்துத் தங்குகிறான். அவனுடைய அப்பா வைத்தி கோவிலில் கதா காலட்சேபம் செய்கிறவர். அவருக்கு பாபுவை இசைக் கலைஞனாக்க வேண்டுமென்ற தீராத ஆசை. அப்பாவின் ஆசைக்காகவாவது இசைபயில வேண்டுமென நினைக்கிறான். கல்லூரித்தோழன் ராஜம் மூலமாக ரங்கன்னாவிடம் சேர்கிறான். ரங்கண்ணா இசையை தவமாக நினைத்து வாழ்பவர். ரங்கண்ணா வரும் இடங்களில் புத்தகத்தின் நடுவிலிருந்து நெடுமுடி வேணு எட்டிப் பார்ப்பது போல இருந்தது.

வைத்தியின் குடும்ப நண்பர் சுப்ரமணியின் இரண்டாம் மனைவி பார்வதி கும்பகோணத்தில் இருக்கிறார். அந்தப் பழக்கத்தில் பாபுவும் அவர்களுடைய வீட்டிற்கு நேரம் கிடைக்கும்போது சென்று வருகிறான். பார்வதியின் மகளான முதிர்கன்னி யமுனாவை அவனுக்கே தெரியாமல் விரும்ப ஆரம்பிக்கிறான். சுப்பிரமணி இறந்து போகவும் பார்வதியின் குடும்பம் வறுமையில் உழல்கிறது. ஒரு பக்கம் இசையையும் மறுபக்கம் யமுனாவையும் தீவிரமாகக் காதலிக்கிறான்.

யமுனா அவனுடைய காதலை ஏதேதோ காரணம் காட்டி மறுத்துவிடுகிறாள். அவளின் மீதான பெருங்காமம் கொஞ்சம் கொஞ்சமாக அவனுடைய கழுத்தை இருக்குகிறது. ராஜம் கூட மேல் படிப்பிற்காக டெல்லி சென்றுவிடுகிறான். இடையில் ரங்கண்ணாவும் இறந்துவிடுகிறார். யமுனாவின் மறுப்பையும், ரங்கண்ணாவின் மரணத்தையும், ராஜத்தின் பிரிவையும் வாழ்க்கையின் பெரிய இழப்புகளாகக் கருதுகிறான். மாறுதல் வேண்டி வேலை தேடி சென்னைக்குச் செல்கிறான்.

சென்னையில் இன்ஸ்யூரன்ஸ் கம்பெனியில் பாபுவுக்கு விளம்பர பிரிவில் வேலை கிடைக்கிறது. யமுனாவும் வறுமையின் காரணமாக தாயுடன் முரண்பட்டு பாபுவைத் தேடி சென்னைக்கு வந்துவிடுகிறாள். சந்தர்ப்ப சூழ்நிலையால் பாபுவும், யமுனாவும் நெருங்கிப் பழகுகிறார்கள். ரங்கண்ணாவின் மற்றொரு சீடரான பாலூர் ராமு பாபுவைத் தேடிவந்து நட்பு பாராட்டுகிறார். அவனுக்கு இருக்கும் இசை ஞானத்திற்கு கச்சேரி செய்தால் நல்ல பெயர் கிடைக்கும் என்கிறார். முழு நேர இசையை தேர்ந்தெடுப்பதற்கு முன் குரல் பயிற்சி செய்ய ஆசைப்படுகிறான். இசைதான் இனி வாழ்க்கையென கடைசிக் கட்டமாக குரலை மேம்படுத்துவதற்காக மகாராஷ்டிரம் சென்றுவிடுகிறான்.

நாவலின் முக்கால் பாகம் தஞ்சாவூரையும், கும்பகோணத்தையும் சுற்றியே நகர்வதால் காவேரிக் கரையும் ஒரு கதாப்பாத்திரம் போல முக்கியப்பங்கு வகிக்கிறது. எழுத்தாளர் வெங்கட்ராமன் கூட ஒரு கதாப்பாத்திரமாக வந்து செல்கிறார்.

ஒரு முதிர் கன்னியை, அவளைவிட பத்து வயது இளையவன் ஒருவன் காதலிப்பதை மையமாக வைத்து தி. ஜாவால் எழுதப்பட்ட அருமையான நாவல். வெளிவந்த காலத்தில் அதனை வாசிப்பதற்கு வீட்டிலுள்ள பெரியவர்கள் அனுமதித்ததில்லை என்று சில வயோதிக நண்பர்கள் சொல்லக் கேள்விப்பட்டிருக்கிறேன். எனினும் காலம் கடந்தும் தீவிர வாசகர்களின் விருப்பப் பட்டியலில் கண்டிப்பாக இடம் பெரும் நாவல். நீங்கள் வாசித்தால் உங்களின் விருப்பப் பட்டியலிலும் சேர்த்துக்கொள்வீர்கள்.

1. கதாவிலாசத்தில் எஸ் ரா எழுதிய கட்டுரை: தி ஜானகிராமன்
2. கீற்று பக்கங்களில் தாஜ் எழுதிய கட்டுரை: அழிய நினைவுகள்
3. புத்தகம் வலைப்பூவில் ஞானசேகரின் பதிவு: மோகமுள்

இயக்குனர் ஞான ராஜசேகரால் இந்நாவல் திரைப்படமாக எடுக்கப்பட்டு விருதுகள் பல பெற்றிருந்தாலும் படமாக்கப்பட்ட விதத்தில் எழுந்த விமர்சனங்களைத் தவிர்க்க முடியவில்லை. இளையராஜாவின் இசை இந்தப் படத்திற்கு பெரிய பலம் என்றே சொல்ல வேண்டும். அந்தத் திரைப்படத்தினை கூகிள் வீடியோவில் காண கீழே சொடுக்கவும்.

மோகமுள் - திரைப்படத்தின் சில கட்சிகள்

29 comments:

பிரியமுடன் பிரபு said...

பகிர்வுக்கு நன்றி

நான் படித்ததில்லை
முயற்ச்சிக்கிறேன்

பிரியமுடன் பிரபு said...

எதோ நானும் முயர்சி பன்னியிருக்கேன்
வந்து பாருங்க

http://priyamudan-prabu.blogspot.com/2010/01/blog-post_20.html

கிருஷ்ணமூர்த்தி said...

இன்னும் கொஞ்சம் ஆழமான விமரிசனத்தை எதிர்பார்த்தேன்!

மோக முள்ளின் மையக் கருத்து "இதுக்குத் தானா? எல்லாம் இதுக்குத் தானா?" வில் இல்லை.அதே மாதிரி அம்மா வந்தால் அப்புவைப் பற்றி, ஈடிபஸ் காம்ப்ளெக்ஸ் என்று மேலோட்டமாகத் தள்ளி விடுகிற நுனிப்புல் மேய்கிற எழுத்தாளர்களுடைய விமரிசன ஆதங்கத்தையும் பார்த்திருக்கிறேன்!

தி.ஜாவின் பாத்திரங்கள் ஒவ்வொன்றும் உயிரோட்டமானவை!

கொஞ்சம் ஆழ்ந்து படிக்கும்போது, ஏற்படுகிற சுகானுபவத்தைத் தர வல்லவர்கள்!

ஜெயக்குமார் said...

//பெரிய இழப்புகலாகக்//

please change the spelling..

Not to publish..

சுரேஷ் கண்ணன் said...

அன்புள்ள கிருஷ்ணபிரபு,

நாவல் வரிசையில் 'மோகமுள்' ஒரு முக்கியமான படைப்பு. பதிவிற்கு நன்றி. ஆனால் இப்படி கதைச் சுருக்கத்தைச் சொல்லாமல் அந்த நாவல் உங்களுக்குள் எழுப்பிய பாதிப்பு, அதிர்வு, அனுபவம் ஆகியவற்றை விவரித்தால் இன்னும் நன்றாகயிருக்கும்.

செ.சரவணக்குமார் said...

மோகமுள் தி.ஜாவின் மாஸ்டர் பீஸ் என்று சொல்லுவேன். எத்தனை முறை வாசித்தாலும் அலுக்காத நடை. நல்ல பகிர்வுக்கு நன்றி நண்பா.

நட்புடன் ஜமால் said...

நான் வாசித்தவற்றில் மிகவும் பிடித்தவை லிஸ்ட்டில் இதுவும் உண்டு.

படம் பார்க்கலை.

அ.மு.செய்யது said...

அருமையான விளக்கவுரை கிருஷ்ணா..பகிர்வுக்கு நன்றி..

தி.ஜாவின் சிறுகதைகளை மட்டுமே வாசித்திருக்கிறேன்.மோகமுள்..???

கிருஷ்ண பிரபு said...

@ ஜெயக்குமார்

எழுத்துப் பிழையை சரி செய்துவிட்டேன் ஜெய்... தவறை சுட்டியதற்கு மிக்க மகிழ்ச்சி

கிருஷ்ண பிரபு said...

@ கிருஷ்ணமூர்த்தி

கும்பகோணம், தஞ்சாவூர், பழைய மனிதர்கள், தி ஜாவின் பாத்திரப் படைப்பு.... நல்ல வாசிப்பனுபவம் கிடைத்தது கிருஷ்ணா...

கிருஷ்ண பிரபு said...

@ சுரேஷ் கண்ணன்
/--அந்த நாவல் உங்களுக்குள் எழுப்பிய பாதிப்பு, அதிர்வு, அனுபவம் ஆகியவற்றை விவரித்தால் இன்னும் நன்றாகயிருக்கும்.--/

கண்டிப்பாக முயற்சி செய்கிறேன்...

கிருஷ்ண பிரபு said...

@ பிரியமுடன் பிரபு, செ.சரவணக்குமார், நட்புடன் ஜமால், அ.மு.செய்யது

பின்னூட்டத்திற்கு நன்றி...

கிருஷ்ணமூர்த்தி said...

இன்னொன்றும் சொல்ல வேண்டும் கிருஷ்ணா! ஒரு புதினமாய்ப் படிக்கும்போது பார்க்கிற தளமே வேறு, அதையே திரைக்கதைக்குள் சுருக்கிப் படமாகவோ, நாடகமாகவோ பார்க்கும் போது சுருங்கிப் போய்விடுகிற தளமே வேறு!

மோகமுள் திரைப்படமாய் வந்தபோது, கதையின் ஜீவனைத் தொட்டுச் சொல்லத் தவறிவிட்டது என்றே சொல்ல வேண்டும்!

தஞ்சை மண்ணுக்கே உரித்தான அந்த நாளைய குணம், சங்கீத ஈடுபாடு தான் கதையின் அடிநாதமே! கதாநாயகன் பாபுவின் தந்தை, வைத்திக்குத் தன் மகன் ரங்கண்ணா மாதிரி, ஆத்மார்த்தமாக சங்கீதத்தில் ஊறிய ஒருவரிடம் கற்றுக்கொள்ள வேண்டும் என்பது. ஜமுனா பாபுவை சிறுவயதிலிருந்தே அறிந்த குடும்ப சிநேகிதம். இன்னதென்று சொல்ல முடியாமல் அவளிடம் ஏற்படும் ஈர்ப்பு, வெறும் காமம் என்று மட்டும் அதை சொல்லி முடித்துவிட முடிவதில்லை. ஒரு கட்டத்தில் அதுவும் வந்து போகிறது அவ்வளவு தான். கதை முழுவதுமே, இசையைக் கற்றுக் கொள்ளும் ஒருவனின் வாழ்க்கையில் எதிர்கொள்ளும் சம்பவங்கள் தான். ஒவ்வொரு கதாபாத்திரமும், அந்த முக்கியமான சேதிக்கு எப்படி உதவுகிறார்கள், அல்லது கவனத்தை மாற்ற முயல்கிறார்கள் என்பது தான்!

கதையின் ஆரம்பத்தில் இருந்து, முடிவு வரை, சங்கீதத்தை, மேம்போக்காகக் கற்றுக் கொள்வது என்பதாக இல்லாமல், ஆத்மார்த்தமாக, ஆழமாகக் கற்றுக் கொள்ள வேண்டும் என்பதே கதையின் போக்காக இருக்கிறது.

மோக முள் என்று மட்டும் இல்லை, எந்த ஒரு புதினத்தையும், அதில் வரும் பாத்திரங்கள், சம்பவங்கள்,நம் மீது என்ன விதமான தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பதை வைத்து மட்டுமே பேச முடிந்தால், அதுவே ஒரு தனி அனுபவமாக இருக்கும்.

இப்போது தானே முதல் தரம் வாசித்து முடித்திருக்கிறீர்கள்? இன்னும் சிறிது நாள் கழித்து, மறுபடி வாசித்துப் பாருங்கள். தி.ஜானகிராமன் எப்படி கதை சொல்வதில் தனித்துவமாக இன்றைக்கும் இருக்கிறார், ஏன் அவர் அளவுக்கு மற்றவர்களால் அவர் தொட்ட அளவுக்கு மனித உணர்வுகளைத் தொட்டுப் பேச முடியவில்லை என்பது தானே புரியும்!

Baski.. said...

எனக்கும் ரொம்ப பிடித்த நாவல் இது...

கிருஷ்ண பிரபு said...

@ பாஸ்கி

பின்னூட்டத்திற்கு நன்றி...

கிருஷ்ண பிரபு said...

கிருஷ்ணா,

நீங்கள் சொல்வது மிகவும் சரி. பாபு, ரங்கண்ணா, ராஜு, ராஜம், யமுனா, பார்வதி, யமுனாவின் பெரியம்மா, பாலூர் ராமு, மராட்டியப் பாடகர்கள் என்று எல்லோருமே மனதைத் தொட்ட மாந்தர்கள் தான். தி ஜாவின் மொழிநடை அலாதியான அனுபவம் தந்தது. நேரம் கிடைக்கும் போது நிச்சயம் மீள் வாசிப்பு செய்யவேண்டும். எவ்வளவு அனுபவித்துப் படித்திருக்கிறீர்கள் என்று உங்களுடைய பின்னூட்டத்தில் தெரிகிறது. பகிர்விற்கு நன்றி...

Karthik said...

ரொம்ப நன்றி கிருஷ்ணா. நான் அந்தப் படமாவது பார்க்க முயல்கிறேன்.

மோகன் குமார் said...

அற்புதமான நாவல். கல்லூரி காலத்தில் வாசித்து. இன்னும் வைத்திருக்கிறேன். தி. ஜா எழுத்தை சினிமாவில் கொண்டு வர முடிய வில்லை தான்.

தங்களின் ப்ளாக் இன்று தான் பார்த்தேன். மிக நல்ல முயற்சி. Follower ஆகி விட்டேன். இயலும் போது என் ப்ளாக் பக்கம் எட்டி பாருங்கள்

தியாகு said...

ஆ!!!! கிருஷ்ணா உங்களிடமிருந்து ஒரு பின்னூட்டத்தினை நான் எதிர்பார்க்கவேயில்லை. மிக்க நன்றி. தங்களுடைய "நான் வாசித்த தமிழ்ப் புத்தகங்கள்" மூலம்தான் "இரும்பு புத்தகங்கள்" பற்றி அறிந்து வாங்கினேன், மிகவும் பயனுள்ள வலைப்பூ தங்களுடையது.

மிக்க நன்றி.

-- தியாகு.

கிருஷ்ண பிரபு said...

@ மோகன் குமார்

வாங்க மோகன்... மோகமுள் கதை கூட தஞ்சாவூர் பக்கம் நடப்பது தானே. எனக்கும் நல்ல வாசிப்பனுபவமாக அமைந்தது. உங்களுடைய பதிவை கண்டிப்பாகப் படிக்கிறேன்.

@ தியாகு

இதில் ஆச்சர்யத்திற்கு என்ன இருக்கிறது தியாகு. நானும் உங்களைப் போல ஒரு வாசகன் தானே... பின்னூட்டத்திற்கு நன்றி...

Vidhoosh said...

நல்ல review. கதையில் இன்னும் பேசணும். Reading between lines என்பார்களே அது தி.ஜாவிற்கு கை வந்த கலை. இவரது அக்பர் சாஸ்திரி என்ற புத்தகத்தில் எலுமிச்சம் பழ மரத்தை பற்றி ஒரு கதை படிச்சிருக்கீங்களா.. அது மாதிரி. பிறகு வந்து விரிவாகப் பின்னூட்டம் இடுகிறேன்.

padmanabhan said...

nice review. i could recollect my reading experience of the book

விக்னேஷ்வரி said...

இருக்கும் புத்தகங்களை முடித்து விட்டு அவசியம் வாசிக்க நினைக்கும் புத்தகம் இது.

நேசமித்ரன் said...

பன்முகமுள்ள நூல் மோகமுள்
கவித்துவமான நடை கதை சொல்லுதலின் நுட்பம் காதலின் இருமுகங்கள் என நிறைய சொல்லிக் கொண்டே போகலாம் ரொமாண்டிச -அழகியல் சார்ந்த கதையாளர்கள் பலரின் ஆதர்ஸம் இந்த நூல்

சுரேஷ் கண்ணனின் பின்னூட்டம் முக்கியமானதாக படுகிறது மிக சரியான அணுகுதல்

Bee'morgan said...

நல்லதொரு பதிவு.
நீண்ட நாட்களாக நான் படிக்க நினைத்திருக்கும் புத்தகம் இது.. இன்னும் சரியான நேரம் அமையவில்லை..

பகிர்வுக்கு நன்றி கிருஷ்ணபிரபு :)

Gopi Ramamoorthy said...

நல்ல பகிர்வு

samy venkateswaran said...

படித்து ரொம்ப நாளாகி விட்டது.
காரடியும் டிகிரி காப்பியும் ஒரு சேர் இனிப்பும் மற்றும் பொது ரேடியோவும்
நினைவில் அலைபாய்கிற்து.
பாபு யமுனா கல்யாண தரகர் பக்கத்து வீட்டு பெரியவரின் இளம்மனைவி இரவு நேர சங்கீத கச்சேரிகள் இன்னமும் கண் முன்னே நிழலாடுகிறது.
மீண்டும் ஒரு முறை வாசிக்க வேண்டும்.

samy venkateswaran said...

படித்து ரொம்ப நாளாகி விட்டது.
காரடியும் டிகிரி காப்பியும் ஒரு சேர் இனிப்பும் மற்றும் பொது ரேடியோவும்
நினைவில் அலைபாய்கிற்து.
பாபு யமுனா கல்யாண தரகர் பக்கத்து வீட்டு பெரியவரின் இளம்மனைவி இரவு நேர சங்கீத கச்சேரிகள் இன்னமும் கண் முன்னே நிழலாடுகிறது.
மீண்டும் ஒரு முறை வாசிக்க வேண்டும்.

samy venkateswaran said...

படித்து ரொம்ப நாளாகி விட்டது.
காரடியும் டிகிரி காப்பியும் ஒரு சேர் இனிப்பும் மற்றும் பொது ரேடியோவும்
நினைவில் அலைபாய்கிற்து.
பாபு யமுனா கல்யாண தரகர் பக்கத்து வீட்டு பெரியவரின் இளம்மனைவி இரவு நேர சங்கீத கச்சேரிகள் இன்னமும் கண் முன்னே நிழலாடுகிறது.
மீண்டும் ஒரு முறை வாசிக்க வேண்டும்.