Friday, April 3, 2009

Unmai kalantha naat kurippu - A. Muthulingam

அ. முத்துலிங்கம் அடிப்படையில் கணக்கர்[Chartered Accountant], இருபது ஆண்டுகளுக்கும் மேல் உலக வங்கி, ஐக்கிய நாடுகள் சபை என பல இடங்களில், பல நாடுகளில் முக்கியமான பதவிகளில் கடமையாற்றியுள்ளார். அதன் பொருட்டு பல நாடுகளிலும் வாசம் செய்து தற்போது கனடாவில் வசிக்கிறார்.

இவர் ஈழத்து எழுத்தாளர்களிலிருந்து சற்றே வித்யாசப்படுபவர். இவரின் எழுத்து படிப்பவரை கட்டிப் போடக்கூடியது. "அங்கே இப்போ என்ன நேரம்?, வியத்தலும் இலமே, கடிகாரங்கள் அமைதியாக எண்ணிக்கொண்டிருக்கின்றன" போன்ற கட்டுரைத் தொகுப்புகளும், "மகாராஜாவின் ரயில் வண்டி, அக்கா" போன்ற பரிசு பெற்ற புத்தகங்களையும் எழுதியுள்ளார்.

உண்மை கலந்த நாட்குறிப்பு: அ. முத்துலிங்கம் (Rs.170)
வெளியீடு: உயிர்மை பதிப்பகம்

சென்ற ஆண்டு இறுதியில் வெளிவந்த "உண்மை கலந்த நாட்குறிப்பு" நாவல் இவருடைய வாழ்வில் நடந்த சம்பவங்களை நினைவு கூர்ந்து, அதனூடே சில சில கற்பனைகளையும் சேர்ந்து எழுதியது. கடைசியாக படித்த மௌனப்புயலில் வரும் உருதுக் கவிதையைப் போல...

[இதற்குத்தான் விதி எங்களைச்
சுள்ளி பொறுக்க வைத்ததோ?
நாங்கள் கூடுகட்டி முடித்த பிறகு
யாரோ அதற்குத் தீ வைக்க!]

இழப்புகளை, காயங்களை, தவிப்புகளை மட்டுமே கருவாக வைத்து வரும் ஈழத்து எழுத்தாளர்களின் படைப்புகளுக்கு மத்தியில் இவரது படைப்புகள் நகைச்சுவையை இழையோட வைத்து தான் ஒரு புன்னகை ததும்பி வழியும் கதைசொல்லி என்பதை நிரூபிக்கிறார்.

"இந்நாவ‌லில் இருப்ப‌து அத்த‌னையும் என் மூளையில்
உதித்த‌ க‌ற்ப‌னையே அதிலே நீங்க‌ள் ஏதாவ‌து உண்மையைக்
க‌ண்டுபிடித்தால் அது த‌ற்செய‌லான‌து.
அத‌ற்கு நான் பொறுப்பாக‌ மாட்டேன்'
"


- புத்தகத்தின் முகப்பிலேயே பின்வருமாறு ஒரு குறிப்பை எழுதி விகடத்தனத்துடனே தனது நாட்களை நினைவுகூற்கிறார்.

இந்த நாவலைப் படிப்பவர்களுக்கு ஒரு சுதந்திரம் உண்டு, அது என்னவெனில் புத்தகத்தை ஆரம்பத்திலிருந்தும் படித்துக்கொண்டு போகலாம், கடைசியிலிருந்தும் வரலாம், நடுவிலிருந்தும் படிக்கலாம்.

அதிலே எனக்கு பிடித்த அத்தியாயங்கள் "ஆப்ரிக்கப் பஞ்சாயத்து", "முகம் கழுவாத அழகி" மற்றும் "சைக்கிளும் நானும்" இப்படி சொல்லிக் கொண்டே போகலாம்.

இதில் "சைக்கிளும் நானும்" வாசிப்பனுபவம் அனைவரையுமே பின்னோக்கிச்சென்று சைக்கிள் விடப் பழகிய நினைவுகளில் மூழ்கச்செய்யும்.

இந்த நாவலிலுள்ள ஒரு சில அத்தியாயங்களைப் படிக்க இங்கு செல்லவும்:

அத்யாயம் 15: யுவராசா பட்டம்
அத்யாயம் 20: ஆப்பிரிக்கப் பஞ்சாயத்து
அத்யாயம் 31: கழுதை வண்டிச் சிறுவன்

இவரின் இதர சில படைப்புகளை திண்ணையில் படிக்க கீழுள்ள எங்களைச்சுட்டவும்:

1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19

நன்றி: திண்ணை இணையக் குழுமம்.

3 comments:

priyamudanprabu said...

இவரின் கதைதொகுப்பு அடங்கீய ஆடியோ சீடி ஒன்று கேட்டேன்ன்
அதீல்
"மகாராஜாவின் ரயில் வண்டி, அக்கா"
"அங்கே இப்போ என்ன நேரம்?,
எல்லாம்கேட்டுள்ளேன் வித்தியாசமானா நடை நல்லாயிரூந்தது

Unknown said...

உண்மைதான் பிரபு. கதாவிலாசத்தில் எஸ். ரா வரிசைப் படுத்திய 50 சிறந்த எழுத்தாளர்களில் இவரும் ஒருவர். அவருடைய சிறப்பே அவருடைய மொழி நடையும், விகடத்தனமும் தன்.

ஹ ர ணி said...

அன்புள்ள முத்துலிங்கம் ஐயா அவர்களுக்கு...

வணக்கமுடன் உறரணி.

உங்களைத் தொடர்ந்து கடந்த நான்கைந்தாண்டுகளாக வாசித்து வருகிறேன்.

முதன் முதலில உங்கள் எழுத்துக்களை யுகமாயினி இதழில் வாசித்தேன். அதன்பின் உங்களுக்காகவே ஒவ்வொரு மாதமும தவித்திருந்து உங்கள் கட்டுரையை வாசிக்கவேண்டும் என்கிற நிலைக்குத் தள்ளப்பட்டேன்.

இலங்கைத் தொடர்பாகத் தங்களின் பல்வேறு அனுபவங்களை அதாவது சிங்களவர் ஒருவருக்குத் தமிழ் கற்றுக்கொடுக்க சென்ற அனுபவம்...ஒரு அதிபர் தேர்தலில தோற்றதும் சாதாரண மஞ்சள் பையுடன் பொதுமக்கள் புழங்கும் பேருந்தில் ஏறி சொந்த ஊர் சென்றது போன்ற கட்டுரைகளைத் தொடர்ச்சியாக வாசித்து பிரமிப்பு அடைந்தேன்.

வாசிக்கத்தொடங்கியதும் வாசிப்பவரைக் கட்டிப்போடும் எழுத்து உங்களுடையது. காரணம் அதன்பின் உள்ள சத்திய அனுபவங்கள். எளிமை. ஆழம். வசீகரம். செய்தியின் நுணுக்கம். எல்லாம் தரமான உயர்ந்தபட்ச இலக்கிய வாசிப்பாக உங்களின் எழுத்து அமைந்துவிட்டது. அதன்பின் தீராநதி.. அம்ருதா என உங்களைத் தொடர்ந்துகொண்டேயிருக்கிறேன்.

உங்கள் படைப்புக்களை ஒட்டுமொத்தமாக வாசித்துவிட்டு என்னுடைய அடுத்தமடலை உங்களுக்கு அனுப்புவேன்.

மனதைவிட்டு ஒருபோதும் நீங்காத வலிமையான எழுத்து உங்களுடையது. அதில் நான் ஆழ்ந்த காதலைக் கொண்டிருக்கிறேன்.

வணக்கம்.