Saturday, February 25, 2012

போதையூட்டும் புத்தக வாசனை

“இந்த ஆண்டு புத்தகக் கண் காட்சி நடைபெறுவது சந்தேகமே” என்ற தவறான தகவல் இணையத்தில் பரவி விவாதத்திற்கு உள்ளானது. என்றாலும் சங்க உறுப்பினர்கள் ஒன்றுகூடி ஏற்கனவே முடிவெடுத்தபடி ஜனவரி 5ஆம் தேதி ஆரம்பித்து 17ஆம் தேதிவரை புத்தகங்களின் கண்காட்சி சிறப்பாக நடைபெற்றது. தொடர்ந்து 35 ஆண்டு களாக இத்திருவிழா சென்னையில் நடை பெற்றுவருகிறது.

70களின் இறுதியில் 22 கடைகளுடன் ஆரம்பித்து, இத்தனை ஆண்டுகளில் 500க்கும் மேற்பட்ட கடைகள் அமைக்கும் அளவிற்கு வளர்ச்சி கண்டுள்ளது பப்பாசி என்று அழைக்கப்படும் தென்னிந்தியப் புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் (BAPASI). கடந்த சில ஆண்டுகளாக பச்சையப்பன் கல்லூரியின் எதிரிலுள்ள செயின்ட் ஜார்ஜ் ஆங்கிலோ இந்திய உயர்நிலைப் பள்ளி மைதானத்தில் இவ்விழாவை ஏற்பாடு செய்துவருகிறார்கள்.

இந்த ஆண்டில் 383 புத்தக உரிமையாளர்கள் தேர்வு செய்யப்பட்டு, 500க்கும் அதிக மான கடைகளில் பொதுப் புத்தகங்களும், சிற்றிதழ்களும், பாடப் புத்தகங்களும், ஒலிப் புத்தகங்களும், குழந்தைகளுக்கான விளையாட்டு நூல்களும் கிடைக்கும்படி காட்சிக்கு வைத்திருந்தார்கள். ஒன்பது பெரிய நுழைவாயில்களுடன் பிரம்மாண்ட அரங்கம் உருவாக்கப் பட்டிருந்தது.

தமிழ் மற்றும் ஆங்கிலப் புத்தகங்களே கடைகளை பெரிதும் ஆக்கிரமித்திருந்தன. ஹிந்தி, தெலுங்கு, மலையாளம், உருது போன்ற மொழிகளில் குறைந்த புத்தகங்களே காணக் கிடைத்தன. சுயசரிதம், தொழில்நுட்பம், சுற்றுச்சூழல், தத்துவம், பொருளாதாரம், சமையல், ஜோசியம், மருத்துவம், மொழிபெயர்ப்பு என பல்வேறு துறை சார்ந்த புத்தகங்கள் வாங்கக் கிடைத்தாலும் கல்வி, இலக்கியம், அரசியல், ஆன்மீகம் மற்றும் வரலாறு சம்மந்தப்பட்ட புத்தகங்களையே மக்கள் பெரிதும் விரும்பி வாங்கிச் செல்வதைப் பார்க்க முடிந்தது.

இந்த ஆண்டு எங்கு திரும்பினாலும் கண்ணில் பட்டது கல்கியின் வரலாற்றுப் புதினமான பொன்னியின் செல்வன். இது பல்வேறு பதிப்பகங் களால் வெளியிடப்பட்டிருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் இந்தப் புதினத்திற்குக் கிடைக்கும் வரவேற்பு மலைப்பை ஏற்படுத்துகிறது. படங்களுடன் வெளிவந்த விகடனின் பொன்னியின் செல்வன் நாவலை அதிக வாசகர்கள் விரும்பி வாங்குவதைப் பார்க்க முடிந்தது.

கண்காட்சியின் ஒவ்வொரு நாளும் பல படைப்பாளிகளின் கவிதை, சிறுகதை, நாவல் மற்றும் கட்டுரைகளின் புத்தக வெளியீடுகள் தொடர்ந்து நடைபெற்றவாறே இருந்தன. மூத்த எழுத்தாளரான திலீப்குமாரின் ‘ரமாவும் உமாவும்’ துவங்கி, இளம் தலைமுறை படைப்பாளியான ச. முத்துவேலின் முதல் கவிதைத் தொகுப்பான ‘மரங்கொத்திச் சிரிப்பு’வரை பல நூல்கள் இதில் அடக்கம்.

மலையாளம், வங்கம், ஆங்கிலம், சீனம், வெல்ஷ், ரஷ்ய மொழி முதலான பல மொழிகளின் முக்கியமான படைப்புகள் அனுபவம்மிக்க மொழி பெயர்ப்பாளர்களின் தமிழாக்கங்களாக வந்திருக்கின்றன. சொந்த மொழிப் படைப்புகளைக் காட்டிலும் மொழி மாற்றப் படைப்புகள் வாசகர்களின் விருப்பத் தேர்வாக இருப்பதைக் காண முடிந்தது. கரமசோவ் சகோதரர்கள், போரும் வாழ்வும், நொறுங்கிய குடியரசு, பஷீரின் படைப்புகள், சோஃபியின் உலகம் போன்ற நூல்களை இதற்கு உதாரணமாகக் கூறலாம்.

குழந்தைகள், மாணவர்கள், குறுந்தட்டுக்கள்

பள்ளி மாணவர்களுக்கான பாடத் திட்டங்களை உள்ளடக்கிய குறுந்தட்டுக்கள் நிறையக் கடைகளில் கிடைத்தன. ஆரம்பப் பள்ளி மாணவர்களுக்கு அறிவியல், சமூக அறிவியல், கணக்குப் பாடங்களும்,

நடுநிலை மற்றும் பிளஸ் 2 மாணவர் களுக்கு ஆங்கிலம், கணிதம், இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல், கம்ப்யூட்டர் சயின்ஸ் உட்பட எல்லா பாடங்களும் குறுந்தட்டுக்களாக உள்ளன. சி.பி.எஸ்.சி. பாடத் திட்டத்தில் பயிலும் மாணவர்களுக்கு முதல் வகுப்பு துவங்கி 12ஆம் வகுப்பு வரையுள்ள அனைத்து பாடங்களுக்குமான குறுந்தட்டுகளும் கிடைக்கின்றன. அரசுத் தேர்வு வினா விடைகளும் குறுந்தட்டுக்களில் கிடைக்கின்றன.

குழந்தைகளுக்கான அனிமேஷன் படங்கள், இலக்கணக் குறுந்தட்டுக்கள் மற்றும் இதர பயிற்சி வீடியோ சி.டி.க்கள் கிடைத்தாலும் தமிழ் மொழியின் உயிர் எழுத்துக்களின் துவக்க வார்த்தைகள் மற்றும் 1 முதல் 9 வரையான எண்களைப் படங்களுடன் உள்ளடக்கிய மரத் தால் செய்யப்பட்ட கன சதுர விளையாட்டுப் (கீஷீஷீபீமீஸீ சிuதீமீs) பொருள் பலரையும் கவர்ந்தது. புலம் பெயர்ந்து வெளிநாடுகளில் வாழும் தமிழர்கள் தமது மொழியிலுள்ள வார்த்தைகளை விளையாட்டின் மூலம் குழந்தைகளுக்குச் சொல்லிக் கொடுக்க இது உதவும். ஆங்கிலத்தில் இதுபோல நிறையவே இருக்கின்றன என்றாலும் தமிழுக்குப் புதிய வரவு. விலை ரூபாய் 400ஆக இருந்தாலும் பலரும் வாங்கிச் செல்வதைப் பார்க்க முடிந்தது.

ப்ரெய்லி முறையிலான நூல்கள்

இந்திய மொழிகளில் முதன் முறையாகப் ‘ப்ரெய்லி’ முறையில் படிக்கும் தமிழ்ப் புத்தகங்களைக் க்ரியா பதிப்பகம் தயாரித்திருக்கிறது. ஆயிரம் பக்கங்கள் கொண்ட தற்கால க்ரியா தமிழ் அகராதியை 57 தொகுதிகளாகப் பார்வையற்ற மாணவர்கள் பயன்பெறும் வகையில் ஏற்கனவே வெளியிட்டிருக்கிறது. மக்களிடையே விழிப்புணர்ச்சியை ஏற்படுத்த ஒவ்வொரு ஆண்டும்

இதனை கண்காட்சியில் வைக்கிறார் கள். ப்ரெய்லி அகராதியைப் பலரும் ஆச்சரியத்துடன் பார்த்துச் செல் கின்றனர். மேலும் பாரதியார் கவிதைகள், திருக்குறள், அக்னிச் சிறகுகள் போன்ற புத்தகங்களையும் தொடர்ந்து பிரெய்லி முறையில் கொண்டு வருகிறார்கள். இந்தியப் பார்வையற்றோர் சங்கத்துடன் இணைந்து செய்யும் இந்தப் பணிக்குக் காக்னிசென்ட் நிறுவனம் 11 லட்சம் நிதி கொடுத்து உதவி செய்திருக்கிறது. இப்புத்தகம் தயாரிப்பதற்காக க்ரியா நிறுவனமும் நான்கு லட்சம் ரூபாயைச் செலவிட்டிருக்கிறது என்று க்ரியாவில் பணிபுரியும் கவிஞர் ஆசைத்தம்பி கூறினார்.

எழுத்தாளர்கள் - வாசகர்கள் சந்திப்பு

புத்தகத் திருவிழாவின் ஆகச் சிறந்த விஷயமாக எழுத்தாளர் - வாசகர்கள் பங்குபெற்ற ‘நேருக்கு நேர்’ சந்திப்பைக் குறிப்பிடலாம். முதன்முறையாக பப்பாஸி இதனை ஏற்பாடு செய்திருந்தார்கள். சுற்றியெழும் இரைச்சல்களுக்கு மத்தியில், திறந்த வெளி அரங்கில் நடந்த இந்நிகழ்ச்சிக்கு வாசகர்களிடம் பெரும் வரவேற்பு இருந்தது. சந்திப்பில் அசோகமித்திரன், சா. கந்தசாமி, பிரபஞ்சன்,பெருமாள் முருகன், கவிஞர் சுகுமாரன், எஸ். ராமகிருஷ்ணன், கண்மணி குணசேகரன், பாஸ்கர் சக்தி, சு.வெங்கடேசன், இரா. நடராஜன், அழகிய பெரியவன், மனுஷ்யபுத்திரன், பாமா, சாரு நிவேதிதா, இந்திரா பார்த்தசாரதி, தமிழ்ச்செல்வன்போன்ற எழுத்தாளர்கள் கலந்துகொண்டு சிறப்பித்தார்கள்.

பெரிய பொருட்செலவில் கண் காட்சிக்கு சம்மந்தமே இல்லாமல் நடத்தப்படும் பட்டிமன்றம், இசை நிகழ்ச்சி, பாராட்டுரை போன்றவற்றிலிருந்து முழுவதும் வித்தியாசப்பட்டிருந்தது இந்த நிகழ்ச்சி. பத்திரிகையாளர் ஞாநி மற்றும் பாரதி புத்தகாலயம் நாகராஜன் ஆகியோர் முன்னின்று இந் நிகழ்வை நடத்திக்கொடுத்தார்கள். வரும் ஆண்டுகளில் இன்னும் சிறப் பான வசதிகளுடன் நடைபெறும் என்று எதிர்பார்க்கலாம்.

சங்கடங்கள், சிக்கல்கள்

பாதாள ரயில்பாதை அமைக்கும் பணி தொடங்கியிருப்பதால், பச்சையப்பன் கல்லூரிக்கு எதிரும் புதிருமாக வாகன நெருக்கடி ஏற்படுவதைத் தவிர்க்கக் கடந்த ஆறு மாத காலமாக ஊழியர்கள் படாதபாடு படுகிறார்கள். இந்த நிலையில் கண்காட்சிக்கு அப்துல் கலாம் அழைக்கப்பட்டபோது முக்கிய நுழைவாயில்கள் எல்லாவற் றையும் அடைத்துவிட்டார்கள். இதனால் சிறு குழந்தைகளும், வயதானவர்களும் ஒரு கிலோ மீட்டர் தூரம் நடந்து பின்புற வாசல் வழியாக நுழைய வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது. சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேலாகக் கண்காட்சிக்கு வந்தவர்கள் எல்லோரும் இதனால் நெருக்கடியைச் சந்தித்தனர். உச்சப் பாதுகாப்பு வளையத்தில் இருப் பவர்களைச் சம்பிரதாயத்திற்குக் கூப்பிட்டுப் பொதுமக்களை அவதிப் படுத்துவதைத் தவிர்க்கலாம்.

விழாவின் இரண்டு நாட்கள் திடீரென மழை பெய்தது. என்றாலும் புத்தகங்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை. வந்தவர்கள் எல்லோரும் குறைபட்டுக்கொண்ட ஒரே விஷயம் சிற்றுண்டி மற்றும் உணவு வகைகளின் விலையைப் பற்றித்தான். ஒரு கோப்பை காப்பியின் விலை ரூபாய் 20. எந்தவித உணவாக இருந்தாலும் குறைந்தது ரூபாய் 50 செலவு செய்ய வேண்டியிருந்தது. (நகைச்சுவை நடிகர் எஸ்.வி. சேகரின் ஆஸ்தான சமையல் குழுவினர் என்ற துண்டுக் காகிதத்தை விநியோகித்துக் கொண்டிருந்தார்கள். விழாவிற்கு வந்தவர்கள் அனைவரையும் எஸ்.வி. சேகரின் உறவினர்கள் என்று நினைத்துவிட்டார்களோ!). ஏன் ஒரே ஒரு உணவகத்துக்கு மட்டும் அனுமதி கொடுக்க வேண்டும்? இரண்டு அல்லது மூன்று உணவகங்கள் இருந்தால் வாசகர்களுக்குத் தேர்வுசெய்ய வழி இருக்கும். தான் வைத்ததே விலை என்று எந்த ஒரு தனி உணவகமும் நினைக்க முடியாது.

கண்காட்சியின் மிக மோச மான விஷயமாகக் கழிவறை ஏற்பாட்டைச் சொல்ல வேண்டும். கழிவறையை நெருங்கும்போதே மனத்தைத் திடப்படுத்திக்கொள்ள நம்மைத் தயார்ப்படுத்திவிடுகிறது கழிவறைக்குச் செல்லும் பாதை. மோசமான பாதையில் அதைவிட மோசமான நாற்றத்தைச் சகித்தபடி சென்றால் கிடைப்பது மிகக் கொடுமை யான அனுபவம். “கழிவறைக்குச் செல்ல வேண்டியிருக்குமே என்று பயந்துகொண்டு ஐந்து மணி நேரம் தண்ணீர் குடிக்காமல் இருந்தேன்” என்று சாரு நிவேதிதா தன் இணைய தளத்தில் எழுதியிருப்பது கழிவறைகளின் தரத்துக்குப் பொருத்தமான ‘சான்றிதழ்’.

இதுபோன்ற குறைகள் நிவர்த்தி செய்யப்பட்டு, அடுத்த வருடம் இன்னும் சிறப்பாக அமையும் என்ற நம்பிக்கையுடன் அடுத்த ஆண்டுக் கண்காட்சியை எதிர் நோக்குகிறார்கள் புத்தகங்களின் காதலர்கள்.

நன்றி: நம்மChennai இதழ்