Monday, March 21, 2011

அன்பின் வழி - க நா சு

"டேய் பசங்களா, இன்னைக்கு இராமாயணத்தில் வரும் வாலிப்படலம் எடுக்கலாம்னு இருக்கேண்டா" என்று தமிழ் ஐயா வகுப்பறையின் உள்ளே நுழைந்தார். பொதுத் தேர்வில் மதிப்பெண்கள் எடுப்பதற்காக மட்டுமே பாடம் நடத்துபவர் அல்ல அவர். வாலியை மறைந்து நின்று தாக்கும் காட்சியை அவர்போல் வேறொருவர் சொல்லக் கேட்டதில்லை. ராமனுக்கும் வாலிக்கும் நடக்கும் சண்டையின் நடுவில் மகாபாரதக் கர்ணன் வருவான். அவனிடம் யாசகம் கேட்க வந்தவர்கள் பற்றியெல்லாம் சொல்லுவார். யுத்தக் களத்தில் உயிருக்குப் போராடி வாடிவதங்கும் அவனிடம், செய்த புண்ணியங்களின் பலன்களை யாசகம் கேட்கும் கிருஷ்ணனை அறிமுகப்படுத்தும் பொழுது ஐயாவின் குரல் நடுங்கும். வாலியும் கர்ணனும் புண்ணியம் செய்தவர்கள் என்பதை விளக்கும்பொழுது அவருடைய கண்களில் கண்ணாடிபோல நீர்த்துளிகள் பளபளக்கும்.

"ஓடியோடி சம்பாதிக்கறத கோயில்ல கொண்டுட்டு போயி கொட்டுறோம். முனிவர்கள் எல்லாம் வாயக்கட்டி வயித்தக்கட்டி தவமா தவம் இருக்காங்க. இதெல்லாம் என்னத்துக்காக? இந்த ஒரு பிறவி போதும்டா ஆண்டவா. எங்களோட உயிரை எமன்கிட்டயிருந்து நீ வாங்கிக்கோ... உன்பாதத்துல சேர்த்துக்கோன்னு செக்குமாடு மாதிரி கோயிலையும், கொளத்தையும், மரத்தையும், மலையையும் சுத்தி சுத்தி வரோம். சீண்டறாரா நம்மள. ஆனால் கடவுளே விருப்பப்பட்டு உசுர வாங்கினது வாலிக்கிட்டையும், கர்ணன்கிட்டயும் தான். அவர்களைத் தவிர வேற யார் அதிர்ஷ்டசாலிகள்." என்பார். ஐயாவின் கருத்துடன் பள்ளி வயதில் நான் முரன்பட்டதில்லை. புண்ணிய ஆத்மா, துர் ஆத்மா என்ற இரண்டும், இல்லாத மையத்தின் இரண்டு துருவங்களாகத் தான் இன்றைய நிலையில் எனக்குத் தோன்றுகிறது. இல்லாத மாயவெளியை உருவாக்கி அதில் இரண்டறக் கலக்க வைத்ததுதான் நம்முடைய முன்னோர்களின் ஆகச்சிறந்த வெற்றியே.

தர்மத்தை நிலைநாட்ட வந்தவர்களான இராமனும் கிருஷ்ணனும் குற்ற உணர்ச்சியே இல்லாமல் எதிரிகளைக் கொன்று குவிக்கிறார்கள். இதில் நயவஞ்சகம் வேறு பிரதானம். சிவபெருமான் உலகப் பிறவி எடுக்காதவர் என்பார்கள், ஒரு பெண்ணின் வயிற்றில் பிறவி எடுக்காதவர் என்பார்கள், தேவையேற்பட்டால் மாயமாக வந்து அழிக்கும் தொழிலை தவறாமல் செய்துவிட்டுப் போவார். துதிபாடுபவர்களைத் தவிர தூற்றுபவர்களுக்கு இதுதான் நிலைமை. முகபது நபிகள் கூட வலியப்போய் சண்டை போட்டதில்லையே தவிர, எதிர்த்து வந்தவர்களுடன் மல்லுக்கட்டி கற்களை வீசி சண்டையிட்டதாகப் படித்த ஞாபகம். இதிலிருந்து முற்றிலும் வேறுபட்டவர் ஏசு கிறிஸ்து. "உன் எதிரி ஒரு கன்னத்தில் அடித்தால், அவனுக்கு உன்னுடைய மறுகன்னத்தையும் காட்டு" என்று போதித்தவர். உலக மக்களைக் காக்கும் பொருட்டு துன்பத்தை ஏற்று சிறுவயதிலேயே இறந்தவர். அவரின் கதையைத் தழுவிய புனைவுதான் 'அன்பின் வழி'.

ரோமப் பேரரசின் பஸோவர் விருந்து சமயத்தில் யாரேனும் ஓர் அடிமைக் கைதியை விடுதலை செய்வது வழக்கம். மொத்த அடிமைகளில் ஒருவனை அரசாங்கம் தான் முடிவுசெய்யும். பாரபாஸ் என்பவன் கரடுமுரடான குற்றவாளி. கொலை, கொள்ளை, திருட்டு போன்ற குற்றச் செயல்களில் ஈடுபடுபவன். ரோம அரசின் அளவுகோலின்படி சிலுவையில் அறையப்பட முற்றிலும் தகுதியானவன். அதிர்ஷ்ட்ட வசமாக விருந்து நாளில் விடுதலையாகிறான். அவனுக்கு பதில் வேறொருவனை சிலுவையில் அறைய ஏற்பாடாகிறது. அப்படிக் கொண்டுவரப்படும் அடிமைக் கைதி வேறுயாருமல்ல 'ஏசு கிறிஸ்து'. சிலுவையில் அறையப்படும் கிறிஸ்துவை கொல்கோதா மலையின் சரிவில் நின்று இமைகொட்டாமல் பார்க்கிறான் பாரபாஸ். சுதந்திரத்தை அனுபவிக்க வேண்டியவனுள் மெல்லத் துளிர்க்கிறது குற்ற உணர்ச்சி. சந்தித்துப் பேசும் மனிதர்கள் எல்லாம் கிறிஸ்துவை புகழ்கிறார்கள். அவனுக்காக துக்கிக்கிறார்கள். கொஞ்சம் கொஞ்சமாக உளவியல் ரீதியாக மனதளவில் சிறைபட ஆரம்பிக்கிறான். மனக் கிலேசங்கள் அலைமோதுகின்றன. அதிலிருந்து விடுபட உதடுகள் பிளந்த அழகு குறைந்த பெண்ணை அரவணைத்துக் கொண்டு சல்லாபிக்க ஆரம்பிக்கிறான். காம இச்சைகளும், சிற்றின்பங்களும் அவனுடைய உறுத்தலைக் குறைக்கவில்லை. நாட்கள் செல்கின்றன.

எலியாஹூவின் கூட்டத்திலிருந்த நாட்களை நினைத்துக் கொள்கிறான். அது கொலை, கொள்ளை, திருட்டு, வழிப்பறி என்று பிழைக்கக் கூடிய கூட்டம். எலியாஹூ தந்தையின் முறையிலிருந்து பாரபாஸை வளர்க்கிறான். என்றாலும் அவன் மீது உள்ளூர வெறுப்பு. ஏனெனில் இந்தக் கூட்டத்திடம் சிக்கிக்கொண்ட மோவபைட் ஸ்திரீக்கு பிறந்தவன் தான் பாரபாஸ். அந்தக் கூட்டத்திலுள்ள எல்லா ஆண்களுக்கும் வைப்பாட்டியாக இருந்தவள் அவள். பாரபாஸ் யாருக்குப் பிறந்தான் என்பது அவளுக்கே தெரியாத விஷயம். இருந்தாலும் எலியாஹூ தந்தையாக இருந்து வளர்த்தான். ஒருமுறை நடந்த சண்டையில் பாறையின் இடுக்கில் தள்ளி எலியாஹூவைக் கொன்ற நாட்களை நினைத்துக் கொள்கிறான். வளர்த்த தந்தையைக் கொலை செய்தபோது கூட அவன் வருந்தவில்லை. ஆனால் கிறிஸ்துவின் மரணத்திற்குக் காரணமாக அமைய நேர்ந்தது அவன் மனதை இம்சித்தது.

பிறிதொரு நாளில் அவன் மீண்டும் சிறைபடுத்தப்பட்டு அடிமையாகிறான். சிறைக்கூட்டத்தில் உள்ள கூட்டாளிகளில் ஒருவனுடன் இவனை சங்கிலியால் பிணைக்கிறார்கள். பிணைக்கப்பட்ட கூட்டாளியின் பெயர் ஸஹாக். அவனோ கிறிஸ்துவின் மீது நம்பிக்கை உள்ளவன். அடிமை ஒட்டிகளுக்குத் தெரியாமல் ஏசுவை நினைத்து ஜெபம் செய்பவன். தனக்குப் பதிலாகத்தான் ஏசுவை சிலுவையில் அறைந்தார்கள் என்ற உண்மையை வெளிப்படுத்தாமல் பழகுகிறான் பாரபாஸ். ஸஹாக்கின் தன்மையான நடத்தை அவனைக் கவர்கிறது. ஊமைக்காயம் போல கிறிஸ்துவின் மரணம் அவனை வதைக்கிறது. ஸஹாக்கின் ஜப வழிபாடு அரசாங்க அதிகாரிகளுக்குத் தெரியவருகிறது. இருவரும் குற்றவாளிகளாக விசாரணைக்கு நிறுத்தப்படுகிறார்கள்.

"ஏசு கிறிஸ்து - யார் அது?" என்று கேட்கிறார் ரோமாபுரியின் கவர்னர்.

"அவர் எங்களின் கடவுள். அவருடைய அடிமைகள் நாங்கள்" என்கிறான் ஸஹாக்.

"நீங்கள் ரோமாபுரிச் சக்ரவர்த்தி சீசரின் அடிமைகள் இல்லையா?" என்று கவர்னர் கேட்கிறார்.

"இல்லை... என் பிரபுவின் அடிமை. அவர் தான் எங்களின் கடவுள்" என்கிறான் ஸஹாக்.

"இதன் பலனை நீ அனுபவிக்க வேண்டியிருக்கும்" என்கிறார் கவர்னர். மௌனித்து தலை கவிழ்க்கிறான் ஸஹாக். "உன் கடவுளும் அவர்தானா?" என்று பாரபாஸைப் பார்க்கிறார்.

"இல்லை..." என்று தலையாட்டுகிறான். ஸஹாக் அதிர்ச்சியுடன் பாரபாஸைப் பார்க்கிறான். தன்னுடைய நண்பனுக்கு தீர்ப்பு வழங்கப்பட்டு சிலுவையில் அறைகிறார்கள். சித்ரவதை மூலம் ஸஹாக் கொல்லப்படுவதை தூரத்தில் இருந்து பார்க்கிறான். யாருக்காகவும் கலங்காதவனின் கண்களில் ஈரம் கசிகிறது. துரோகம் செய்துவிட்டோமோ என்று யோசிக்கிறான். நாட்கள் உருண்டோடி கவர்னரின் பனிக்காலம் முடிகிறது. மாளிகை வாங்கிக்கொண்டு தலை நகரமான ரோமாபுரி செல்லும்போது பிடித்த அடிமைகளில் ஒருவனாக பரபாஸையும் அழைத்துச் செல்கிறார். தலைநகரில் மீண்டும் குற்றம் செய்து கைதியாகிறான். விசாரணைக்குப் பின் சிலுவையில் ஏற்றப்படுகிறான். ஏசு சிலுவையில் ஏற்றப்பட்டு விடுதலை ஆனது முதல், குற்றம் சுமத்தப்பட்டு சிலுவையில் அறையப்படுவது வரை பாரபாஸின் மனப்போராட்டத்தை உணர்ச்சியைத் தூண்டும் வகையில் சொல்கிறார் பேர் லாகர் குவிஸ்ட். 1951-ஆம் ஆண்டு நோபல் பரிசு பெற்ற ஸ்வீடிஷ் நாவலான இதை மொழி பெயர்த்தவர் க நா சு. மொழிபெயர்க்கப்பட்ட நாளிலிருந்து இன்றுவரை தீவிர வாசகர்களால் கொண்டாடக் கூடிய படைப்பு.

பூங்குழல் பதிப்பகத்தில் 'அன்பின் வழி' என்ற பெயரிலும், மருதா பபதிப்பகத்தில் 'பாரபாஸ்' என்ற பெயரிலும் வெளியிட்டிருக்கிறார்கள். 'அன்பின் வழி'யில் ஏகப்பட்ட பிழைகள் மற்றும் குளறுபடிகள் இருக்கிறது. பதிப்பிற்கு முன் செம்மைபடுத்தி இருக்கலாம். அவன், அவள், அவர்கள் போன்ற வார்த்தைகளை வாரியிறைத்து வாசக அனுபவத்தை சோதிக்கிறார்கள். மருதாவில் நான் வாசித்ததில்லை. எனவே அதைப் பற்றிய கருத்தை சொல்வதற்கில்லை.

தொடர்புடைய பதிவுகள்:

1. அன்பின் வழி - கார்த்திக் சரண்
2. பாரபாஸ் - புத்தகம் கிடைக்கிறது

பேர் லாகர் குவிஸ்ட் 1891 - 1974

ஸ்வீடன் நாட்டுக்குப் பெருமை சேர்த்த நாடகாசிரியருள் "Par Lagerkvist" முக்கியமானவர். இவர் 1891-ஆம் ஆண்டு ஸ்வீடனைச் சேர்ந்த "வாக்ஸ் ஜோ" என்னுமிடத்தில் பிறந்தார். இவர் புரட்சி மனப்பான்மையுடன் கவிதைகள், நாடகங்கள், பாடல்கள், சிறுகதைகள் இயற்றித் தமது இலக்கியப் பணியைத் தொடங்கினார். கடுமையான நேரம் (1918), சொர்கத்தின் ரகசியம் (1919), மீண்டும் வாழ்ந்தவன் (1928), தூக்குக்க்கரன் (1934), ஆன்மா அற்ற மனிதன் (1938) போன்றவை இவருடைய முக்கியமான படைப்புகள். நாடக ஆசிரியராக மட்டுமல்லாமல் சிறந்த நாடகாசிரியராகவும், பெரும் கவிஞராகவும் விளங்கினார். 'அன்பு வழி' என்ற நாவல் அவருக்கான உலகப் புகழையும் பெற்றுத் தந்தது.


Saturday, March 5, 2011

அவன்-அது=அவள் - பாலபாரதி

"நான் யார்?" - இந்தக் கேள்விக்கான பதில் அவிழ்க்க முடியாத சிக்கல் நிறைந்தது. ஒரே இடத்தில் உண்டு கழித்து ஊரை ஏமாற்றும் போலிகளுக்கோ, உச்சத்தைத் தொட்டு உலகப்புகழ் பெற்று தனிமை தேடும் வேஷதாரிகளுக்கோ மட்டும் இந்தப் புதிர்கேள்வி நிம்மதியைக் கெடுக்கவில்லை. தன்னை ஆணாகவும் சொல்லிக்கொள்ள முடியாமல், பெண்ணாகவும் சொல்லிக் கொள்ள முடியாமல் அல்லல்படும் அர்த்தநாரிகளைத் தான் பெரிதும் அலைக்கழிக்கிறது.

ஆணின் உடலில் பெண்ணின் உணர்வுகளை சுமப்பவர்கள் பூவுலகின் துருதுஷ்டசாலிகள். அவர்களின் உளவியல் சார்ந்த அகவலி சொல்லில் கடக்க முடியாத ஒன்று. இதிகாசத்திலிருந்தே அரவாணிகளின் இருப்பு அங்கொன்றும் இங்கொன்றுமாக பதிவு செய்யப்பட்டுள்ளது. பீஷ்மரை பழிவாங்கும் பொருட்டு பேடியாக சிகண்டி அவதரிக்கிறான், தேவ கன்னிகையின் காம உணர்வை நிராகரித்த காரணத்தினால் ஆண்மை நிரம்பிய அர்ஜுனன் ஒரு வருட காலம் நபும்சகனாக வாழ்கிறான், பஞ்சபாண்டவர்களைக் காக்கும்பொருட்டு மோகினியாக கிருஷ்ணன் மாறுகிறான், ஆயிரத்தொரு இரவுகளிலும் திருநங்கைகள் வருகிறார்கள், இந்தியாவை ஆண்ட இஸ்லாமிய மன்னர்களை பொம்மைகளாக ஆட்டி வைத்த அலிகளைப் பற்றியும், மாலிக் கபூர் என்ற அலி அரசாண்டதைப் பற்றியும் வரலாற்றில் பதியப்பட்டுள்ளது. என்றாலும் அவர்களுடைய வலி, சமூகச் சிக்கல், உளவியல் ரீதியான போராட்டத்தைத் தொட்ட படைப்பாக சொல்லிக்கொள்ளும் படி எதுவும் இல்லை.

ஆண்மிகில் ஆணாகும் பெண்மிகில் பெண்ணாகும்
பூணிரன் டொத்துப் பொருந்தில் அலியாகும் - திருமூலர். (மேலும் படிக்க...)

வலியார் பிறர் மனைமேல் சென்றாரே - இம்மை
அலியாகி ஆடியுண்பார் - நாலடியார்.

"அரிதரிது மானிடலாதலரிது மானிடராயினும்
கூன் குருடு செவிடு பேடு நீங்கிப் பிறத்தலரிது" என்றாள் ஓளவை.

திருநங்கைகள் வாழ்ந்து அல்லல் பட்டதற்கு இதுபோன்ற சங்க வரிகளே சாட்சி. திருமூலர் சொல்லவரும் விஷயத்தில் எதிர்மறை கருத்துக்கள் தோன்ற வழி இருந்தாலும், நாலடியாரின் வரிகள் ஆதிகாலத்திலிருந்தே அலிகள் வாழ நேர்ந்த அவல வாழ்க்கையை உணர்த்தும்படி உள்ளது. அதனைப் பளிங்குக் கண்ணாடிபோல தெளிவுபடுத்துகிறது ஓளவையின் வரிகள்.

கல்லூரி முதலாமாண்டு என்று நினைக்கிறேன். நா.காமராசன் அவர்களின் "காகிதப் பூக்கள்" பாடத் திட்டத்தில் இருந்தது. அலிகளின் அவல நிலையை எடுத்துரைத்த உருவகக் கவிதையின் சில வரிகள்...

மூங்கையொரு பாட்டிசைக்க
முடவனதை எழுதிவைக்க
முடவன் கை எழுதியதை
முழுக்குருடர் படித்ததுண்டோ?

மூங்கையின் பாட்டானோம்
முடவன்கை எழுத்தானோம்
முழுக்குருடர் படிக்கின்றார்

ஊமை ஒரு பாடல் பாட, கையில்லாத ஒருவன் அதை எழுதிவைக்க, முழுக்குருடர் வாசிக்க நீங்கள் கேட்டதுண்டா. நாங்கள் ஊமையின் பாட்டானோம். முடவர்களால் எழுதப்பட்டு முழு குருடர்கள் வாசிக்கின்றனர் என்று செல்லக் கூடிய கவிதையின் இறுதிப் பகுதி கொடுக்கக்கூடிய படிமமும், அர்த்தமும் யதார்த்தத்தைப் பிரதிபலிக்கக் கூடியது.

தலைமீது பூவைப்போம்
தரணியோர் கல்லறையில்
பூவைத்தல் முறைதானே?
பூத்தஉயிர்க் கல்லறைகள் நாங்கள்

தாய்ப்பெண்ணோ முல்லைப்பூ
தனிமலடி தாழம்பூ
வாய்ப்பந்தல் போடுகின்ற நாங்கள்
காகிதப் பூக்கள்.

நாற்றம் மிகுந்த பூக்களை தலையில் சூடினாலும் உயிரற்ற பிணத்திற்கு சமமானவர்கள் நாங்கள். கல்லறைக்கு மலர் தூவி வணங்குவதும் முறைதானே? நாங்களெல்லாம் உயிர் சுமக்கும் கல்லறைகள். தாய்மை மனம் வீசுவதால் முலைப் பால் கொடுப்பவர்கள் முல்லைப்பூ போன்றவர்கள். குழந்தையில்லா ஏக்கத்தில் வாழும் பெண்கள் கூட தாழம்பூ போன்றவர்கள். அவர்களுக்கும் ஒரு மனம் இருக்கும். வார்த்தை ஜாலம் செய்யக் கூடிய நாங்களோ வாசனையில்லாத காகிதப் பூக்களைப் போன்றவர்கள் என்று கவிதை முடியும்.

பள்ளியில் படிக்கும்பொழுது சுதந்திர மற்றும் குடியரசு தினங்களின் போது கொடியுடன் சேர்த்து "மஞ்சள், வெள்ளை, ரோஸ்" என்று பல நிறங்களில் காகிதப் பூக்களை சேர்த்துக் கட்டி கொடியேற்றிய ஞாபகம் இருக்கிறது. சேர்த்துக் கட்டிய கொடியானது உச்சத்தைத் தொட்டு, சுருக்கம் தளர்ந்து பறக்கும் பொழுது, காகித மலர்களும் காற்றின் திசையில் பறக்கும். விழாக்கால வண்ண மலர்கள் போல இந்தியத் திருநங்கைகளும் குடும்ப அமைப்பில் கட்டுண்டு தான் கிடக்கிறார்கள். நீரின் அடியில் அழுத்தி பிடிக்கப்பட்ட ரப்பர் பந்து போல எவ்வளவு நாட்கள் தான் இறுக்கத்துடன் வாழ்வது. பிடி தளர்ந்து மேல்பரப்பை அடைவது போல சிலரால் மட்டுமே சுதந்திரமாக வெளிவர முடிகிறது.

வீட்டை விட்டு வெளியேறி, ஆண் என்பதற்கு அடையாளமாக உள்ள உறுப்பை அறுத்தெறிந்துவிட்டு முழுப்பெண்ணாக மாறுகிறார்கள். சுதந்திரப் பறவைகளாக வாழ நினைக்கும் திருநங்கைகள் வாழும் இடம் எப்படிப்பட்டது? அவர்களுடைய உறவுமுறையாக யாரெல்லாம் அமைகிறார்கள்? அபாயகரமான அறுவைச் சிகிச்சையின் வழிமுறை என்ன? அவர்களுடைய கலாச்சாரம் என்ன? என்பது போன்ற நுண்ணிய சித்தரிப்புகளைக் கொண்டு தமிழில் வெளிவந்த நாவல்கள் இரண்டு. ஆனந்த விகடனில் சு சமுத்திரம் எழுதி தொடராக வெளிவந்த வாடாமல்லி மற்றும் நண்பர் பாலபாரதி எழுதி வெளிவந்த அவன்-அது=அவள். திருநங்கைகளின் யதார்த்த சிக்கல்களை அவர்களுடைய துயரங்களை ஆவணமாக்கிய விதத்தில் இரண்டுமே முக்கியமான நாவல்கள். லிவிங் ஸ்மைல் வித்யாவின் சுயவரலாறும் இந்த வகையில் சேர்க்க வேண்டிய முக்கியமான புனைவல்லாத முயற்சி.

வாடாமல்லியின் 'சுயம்பு' மேகலையாக மாறும்வரை பிரம்மிப்பு அகலாது. இரண்டாம் பகுதியானது தமிழ் சினிமாவின் ரஜினியிசத்தில் மாட்டிக் கொண்டதுபோல இருக்கும். திடீர் பணக்காரி, இரண்டு போலீஸ் சண்டை, ஒரு புரட்சி, அரவாணிகள் எழுச்சி, அதைத் தொடர்ந்த போராட்டம் என்று மேகலையை தலைவியாக்கி முடித்திருப்பார். "யதார்த்தத்தில் இது நடக்கக் கூடியதா?" என்று யோசிக்கும்படி இருக்கும். அவன்-அது=அவள் - கோபி, கோமதியாக மாறி எந்த புரட்சியும் செய்யவில்லை. அதே நேரத்தில் அரவாணிகளின் யதார்த்தக் குறியீடாக நாவல் முழுவதும் வளர்ந்து வருவாள். கூவாகத்தில் வன்கலவி செய்யப்பட்டு மயங்கிய நிலையில் இருக்கும் கோபியை தனம் தத்தெடுப்பது முதல், மும்பைக்கு சென்று பிச்சை கேட்டு வாழ்வது, சேலாவாக தத்தெடுக்கப்பட்டு நிர்வாணம்(உறுப்பு நீக்கம்) செய்வது, பத்திரிகையாளரின் மீது காதல் ஏற்பட்டு வாழ்க்கையை சீரழித்துக் கொள்வதுவரை இலகுவான மொழியியில் நாவல் கட்டமைக்கப்பட்டுள்ளது. பெண் தன்மை வெளிப்படுவதால் குடும்ப வட்டத்திலிருந்து வெளியில் வந்தவர்கள், குடும்பமாக வாழ ஆசைப்படுவதும், ஆண் துணைக்காக ஏங்குவதும், உண்மையான கணவன் அமைவது திருநங்கைகளுக்கு சாத்தியமில்லை என்பதையும் நுட்பமாக சொல்லியிருக்கிறார்.

அழுத்தமான சமூகப் பிரச்சனையின் துவக்க முயற்சி எனும் வகையில் நாவலில் சில குறைகள் இல்லாமல் இல்லை. பாலபாரதி முன்னுரையில் சொல்லியது போல, இந்தப் படைப்புகள் அரவாணிகள் குறித்த மரியாதையை இலக்கியச் சூழலிலும், சினிமா சூழலிலும், சமூகத்திலும் ஏற்படுத்தினால் அதைவிட பெரிய சந்தோசம் படைப்பாளிகளான இவர்களுக்கு இருக்கப்போவதில்லை. மாறாக இலக்கியத்தின் உச்சப் படைப்பாக இவைகள் கொண்டாடப்படுவதால் பாலபாரதி போன்ற படைப்பாளிகள் உச்சிக் குளிரப் போவதில்லை. திருநங்கைகள் குறித்த சரியான அர்த்தத்தை தெரிந்தவர்களாக நாம் எப்போதும் இருந்ததில்லை. கூவாகத் திருவிழாவைக் கூட செக்ஸ் திருவிழாவாகத்தானே பார்க்கிறோம். மையத்தை உடைக்கும் விதமாக சந்தோஷ் சிவன் இயக்கி தேசிய விருது பெற்ற 'நவரசா' போன்ற திரைப்படம் அரவாணிகள் குறித்த யதார்த்தக் கருத்தை முன்வைக்கின்றன. என்றாலும் தேடித் பார்ப்பவர்கள் இருந்தால் தானே?

திருநங்கைகளான சக்தி பாஸ்கர், நர்த்தகி நடராஜன் ஆகியோரை ஸ்வீகாரம் எடுத்துள்ள நடிகை, பேச்சாளர், எழுத்தாளர் ரேவதி சங்கர் நமக்கெல்லாம் நல்ல முன்னுதாரணம். பிரம்மச்சரியத்தை பேசுபவர் கலவியில் ஈடுபடுவதையோ, யாராவது சாமியார் மாதிரி இமயமலை செல்வதையோ, அவர் எதில் பல் துலக்குகிறார்? அதை எங்கு கொப்பளிக்கிறார்? சாப்பிடுவது என்ன? கக்காவை எங்கே கழிக்கிறார்? எந்த பாறையின் இடுக்கில் தவம் செய்கிறார்? என்பதையும், அரைகுறை ஆடையுடன் பொது நிகழ்ச்சியில் பங்கெடுக்கும் சீமாட்டி பற்றியோ, விளையாட்டு வீரனின் சாகசத்தைப் பற்றியோ, செய்தியாக வெளியிட்டு முன்பக்கத்தை அலங்கரிக்கும் நாளேடுகளும், இதழ்களும், மீடியாக்களும் ரேவதி சங்கரனின் இது போன்ற விஷயங்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும்.

"ஒம்போது, பொட்டை, 50-50, உஸ்ஸு, அலி, கொக்கரக்கோ" - போன்ற வார்த்தைகளை பயன்படுத்த வேண்டாம் என்று சொல்லவில்லை. அடுத்தவர் மனதினைக் காயப்படுத்தும் எனில் அவற்றின் பயன்பாடு தேவையா? என்பதையும் யோசிக்கலாமே.

தொடர்புடைய பதிவுகள்:

1. பாலபாரதியைப் பற்றிய விவரங்கள்...
2. பாலபாரதியின் இணையத்தளம்...
3. அவன் – அது = அவள் :: பாஸ்டன் பாலா பக்கம்

வெளியீடு: தோழமை பதிப்பகம்,
முகவரி: 5D, பொன்னம்பலம் சாலை, கே கே நகர், சென்னை 600078,
செல்பேசி: 94443 02967,
விலை: ரூ. 120.

Wednesday, February 23, 2011

திருநங்கையின் வலி - வித்யா

சொந்த நாட்டில் வாழ வழியின்றி, அடைக்கலம் கொடுக்கும் நாட்டிற்கு சென்று வாழ்பவர்களைத் தான் அகதிகள் என்று சொல்வார்கள். உண்மையில் அவர்களுக்கும் தலையாய அகதிகள் போல வாழ்பவர்கள் திருநங்கைகளே. "வாக்குரிமை, குடும்ப அட்டை, பெயர்மாற்றம்" என்று எதுவாக இருந்தாலும் போராட்டம் தான் அவர்களுக்குப் பெற்றுத் தருகிறது. இது போதாதென்று சொந்த குடும்பத்தாலும், உறவுகளாலும், நண்பர்களாலும் ஒதுக்கி வைக்கப்படுபவர்கள். ரயில் பயணங்களிலோ, காய்கறி சந்தையிலோ யாசகம் கேட்கும் திருநங்கையை கவனிக்காதது போல பலமுறை சென்றிருக்கிறேன். அவர்களுடன் என்னை தொடர்பு படுத்திப் பேசிவிடுவார்களோ என்ற பயம். அவர்களின் யாசக நிலைமைக்கான காரணத்தை என்றுமே யோசித்ததில்லை. பயம் விட்டுப்போய் பல வருடங்கள் ஆகிறது. இப்போதெல்லாம் எனக்கு எதிரில் யார் இருந்தாலும் தயங்காமல் பேசப் பழகிவிட்டேன். "quality of life is nothing but a quality of communication" என்ற மேற்கோளை நினைத்துக் கொள்வேன்.

அரவாணிகளுடனான என்னுடைய தொடர்பு மிகச் சொற்பமே. பாட்டி வீட்டில் தங்கி படித்த பொழுது கோவிந்தன் என்பவர் வீட்டு வேலை செய்துகொண்டிருந்தார். கருத்த உருவம். சண்டை என்று வந்தால் நான்கு நபர்களை ஒரே சமயத்தில் அடிக்கக் கூடிய ஆஜானுபாகான தோற்றம். அதற்கு நேர்மாறான சாயம் போன புடவையும், கண்ணாடி வளையல்களும் அவருடைய இருப்பை பரிகசிப்பது போல இருக்கும். ஆனால் அவரோ மகிழ்ச்சியுடன் வளைய வருவார். வேலையில் படு சுட்டி. "ஒரு மரக்கா அரிசிய ஊற வச்சாலும் ஒரே ஆளா இடிச்சி மாவாக்கிடுவாண்டா" என்று பாட்டி கூட பெருமை பாடுவாள். வயோதிகம் வியாதியில் தள்ளவும் கோவிந்தன் ஒரு நாள் மரணமடைந்தார். பாடையை சுமப்பவர்களும், கொள்ளி வைப்பவரும் மட்டுமே சென்று கொண்டிருந்தனர். நானும் பாட்டியும் முற்றத்தில் நின்றுகொண்டு கோவிந்தன் செல்வதைப் பார்த்துக் கொண்டிருந்தோம்.

"அவனுக்குன்னு நாதி இருக்கானு பாருடா... பாவம்..." என்றாள் பாட்டி.

கோவிந்தனுக்கு நண்பர்கள் என்று யாருமே இல்லை. தினமும் மதிய சாப்பாட்டை பாட்டியின் வீட்டில் முடித்துக் கொள்வார். தனிமை மட்டுமே அவருடைய சக பயணியாக மரணம் வரை பின்தொடர்ந்தது.

காஞ்சிபுரத்தில் பட்டயப் படிப்பு படித்த பொழுது வடிவேலு என்றொரு நண்பன். அவனுடன் இரண்டொரு சந்தர்ப்பம் தவிர்த்து அதிகம் பேசியதில்லை. வடிவேலின் உடல் மொழியே வித்யாசமாக இருக்கும். "நாளை இந்த வேளை பார்த்து ஓடி வா நிலா...", "பொன்வானம் பன்னீர் தூவுது இந்நேரம்" போன்ற ஏகாந்தப் பாடல்களை மட்டுமே முணுமுணுத்துக் கொண்டிருப்பான். சமயத்தில் எரிச்சலாக இருக்கும். ஒரு நாள் என்னுடைய அறைத் தோழர்களுடன் விடுதிக்குத் திரும்பியபோது அவனையும் அழைத்துக் கொண்டேன்.

உன்கிட்ட ஒன்னு சொல்லலாமா வடிவேலு?
"உங்களுக்கு இல்லாத உரிமையா கி.பி..."

நான் பேசப் போறது உன்னோட Character சமந்தமா. கோவப்படக் கூடாது...
"கோவமெல்லாம் ஸ்கூல் லைஃபோட காணாமப் போச்சு..."

உன்னோட உடல் மொழியிலும், இயல்பிலும் பெண்மைத் தனம் அதிகமா வெளிப்படுது. யாரும் கவனிக்கலன்னு நெனைக்கிறையா?
"பெரிய கண்டுபுடிப்புதான்... ஹ ஹ ஹா.."

இந்த மாதிரி செய்கைகள் எரிச்சலா இருக்குடா.
"நான் என்ன செய்யறது. எல்லாம் என்னோட விதி..."

ஒரு நல்ல டாக்டர ஏன் பார்க்கக் கூடாது?
"காலம் கடந்து போச்சு கி.பி... அதெல்லாம் Waste."

Delay-ன்னு ஒன்னு இல்லவே இல்ல. வாழ்க்கைய எங்க இருந்து வேணும்னாலும் நமக்கு சாதகமா மாத்திக்கலாம். நீயும் எங்கள மாதிரி சந்தோஷமா வாழனும். முயற்சி செய்யேன்.
"கேக்குறதுக்கு நல்லாத்தான் இருக்கு. தலவிதின்னு ஒன்னு இருக்குதே."

அடுத்தவங்க பரிகாசமா பார்க்க இடம் கொடுத்துட்டா... வாழ்க்கை முழுவதும் நீ நரகத்துல தான் இருக்கணும். யோசிச்சிக்கோ...
"உடலாலையும் மனசாலையும் நான் படாத வேதனை இல்ல. பழகிடுச்சி கி.பி..."

அப்போ உன்னோட எதிர்காலம் பற்றி என்ன முடிவெடுத்து இருக்க?
"இப்படியே இருந்துட வேண்டியது தான்..."

அவனுடைய வழித்தட பேருந்து தூரத்தில் வந்ததும் இடுப்பை வளைத்து நெளிந்து ஓடினான். இடையில் முகத்தைத் திருப்பி எங்களைப் பார்த்து சிரித்தான். அவனுக்கான பரிவுதான் எங்களிடம் மிச்சமிருந்தது. அதன் பின் வடிவேலுடன் பேசுவது வெகுவாகக் குறைந்துவிட்டது. அவனுடைய நண்பர்களுடன் சுற்றிக் கொண்டும், சகிக்க முடியாத புதைகுழியில் விரும்பி இறங்கிக் கொண்டும் இருந்தான். பட்டயப் படிப்பின் கடைசி நாளன்று என்னிடம் வந்து கைகுலுக்கினான். அவனுடைய கண்களில் நீர் கோர்த்திருந்தது. உங்களுக்கு ஞாபகம் இருக்கா கி பி...

"எங்கள மாதிரி நீயும் சந்தோஷமா வாழணும்னு சொன்னிங்களே... Thanks"

அடடே நான் எப்பவோ பேசனத இன்னும் ஞாபகம் வச்சிருக்கயா?

"அன்பான வார்த்தைகளை என்னால மறக்கவே முடியாது கி.பி. கெடைக்கிற ஒன்னு ரெண்டு வார்த்தைகளையும் மறந்துட முடியுமா என்ன?"

அதன்பின் பச்சையப்பன் கல்லூரியில் மலை நேர வகுப்பில் சேர்ந்ததும் சென்னைக்கு ரயிலில் சென்றுவரத் துவங்கினேன். தினந்தோறும் 10 அரவாணிகள் திருவற்றியூரில் ஏறுவார்கள். ஆரம்பத்தில் அவர்களைக் கண்டாலே நடுக்கமாக இருக்கும். அவர்களுடைய சேட்டைகளையும், அரட்டைகளையும் பயணிகள் அனைவரும் விநோதமாகப் பார்ப்பார்கள். அதைத்தான் அவர்களும் விரும்பினார்கள். இது போன்று மாறியதில் அவர்களுடைய தவறு என்று எதுவுமே இல்லை. அறிவியலின் படி ஒரு உயிரை ஆணாகவோ பெண்ணாகவோ பகுத்தறிய "மரபணு (Gene), நாளமில்லா சுரப்பிகள் (Hormones), இனச்சேர்க்கை உறுப்புகள் (Sexual Organs), உடல் வளர்ச்சி சார்ந்த மாற்றங்கள் (Sexual Characters), உளவியல் (Psychological Sex)" ஆகிய 5 முக்கிய காரணிகள் இருக்கின்றன. அவற்றைப் பற்றிய விரிவான விளக்கங்களை கீழுள்ள பதிவில் காணலாம்.

திருநங்கை - பயணங்கள்

உளவியல் காரணமாக திருநங்கைகள் ஆனவர்களே சமூகத்தில் அதிகம். ஆரம்பத்திலேயே கவனித்தால் கூடுமான வரையில் சரிசெய்து விடலாம். சமூகத்தின் விழிப்புணர்வு திருநங்கைகள் சார்ந்து போதிய அளவில் இல்லை என்பது வேதனைக்குரியது. லிவிங் ஸ்மைல் வித்யாவின் இந்த சுய சரிதத்தை அதற்கான துவக்கமாக எடுத்துக் கொள்ளலாம்.

திருநங்கைகளின் வாழ்வியல் போராட்டம் வலிகள் நிரம்பியது. பொது இடத்தில் அவர்களின் இருப்பும் தர்ம சங்கடமான ஒன்று. எது எப்படியோ... ஒரு வகையில் திருநங்கைகளும் மாற்றுத் திறனாலிகளே (Sexually Challenged). அவர்களுக்குத் தேவையானது நம்முடைய பரிதாபப் பார்வை அல்ல. கேலிகள் அற்ற தன்மையான வார்த்தைகளும், அன்பான சுற்றமும், ஆறுதலான மனிதர்களும் தான் அவர்களுடைய நித்தியத் தேவைகள். அவற்றை அமைத்துத் தர வேண்டிய கடமை சக மனிதர்களான நமக்கிருக்கிறது.

பெண்ணின் உணர்வுகள் கொண்ட சரவணன் என்ற ஆணுடல், உடலாலும் மனதாலும் வித்யா என்ற முழுமையான பெண்ணாக மாறிய சம்பவமும் அதன் தொடர் நிகழ்வுகளும் நாவல் போலச் சொல்லப்பட்டிருக்கும் சுயவரலாரில் பல இடங்களில் எனக்கு மாற்றுக் கருத்து இருக்கிறது. அவற்றைக் கடந்து அகதிகள் போல வாழும் ஒரு சாராரின் அடையாளமாக இந்தத் தன்வரலாறை எடுத்துக் கொள்ளலாம்.

வித்யா தற்பொழுது உதவி இயக்குனராக பணியாற்றுகிறார். கணினி சார்ந்த இளங்கலையும், மொழியியலில் முதுகலை பட்டமும் பெற்றவர். நாடக கலைஞர் மற்றும் எழுத்தாளர். சமீபத்தில் வெளியான நந்தலாலா படத்தின் டைட்டில் கார்டில் அவருடைய பெயரை பார்த்த ஞாபகம். அவருடைய வலைப்பதிவு: லிவிங்ஸ்மைல் வித்யா.

தொடர்புடைய பதிவு:

நான் (சரவணன்) வித்யா - வெற்றிச்செல்வன்

‘நான் சரவணன் வித்யா’
ஆசிரியர்: லிவிங்ஸ்மைல் வித்யா
விலை: 100 ரூபாய்
வெளியீடு: கிழக்குப் பதிப்பகம்
New Horizon Media Private Limited,
33/15, Eldams Road,
Alwarpet, Chennai 600018.

ஆன்லைனில் வாங்க: http://nhm.in/shop/978-81-8368-578-8.html

Friday, February 4, 2011

சினிமா வியாபாரம் - கேபிள் சங்கர்

தஞ்சை வாழ் மக்களுக்கு கலையார்வம் அதிகம். கேபிள் சங்கர் மட்டும் விதிவிலக்கா என்ன? "சினிமாவின் மீதான ஆர்வம் உங்களுக்கு எப்படி வந்தது?" என்று அவரிடம் கேட்டிருந்தேன்.

"அதற்கு என் தந்தைதான் காரணம், மின்சார வாரியத்தில் வேலை செய்து கொண்டிருந்தாலும் அளவில்லா சினிமா காதல் உள்ளவர். நடிகர், நாடகாசிரியர், ஒரு திரைப்படம் இயக்கி அது பாதியில் நின்றிருக்கிறது. அவரின் ஆர்வம்தான் என்னையும் உள்ளிழுத்துக் கொண்டது" என்று சொல்லியிருந்தார்.

இவர் படித்தது Diplomo in Mechanical Engineering. சினிமாவின் மீதுள்ள ஆர்வத்தால் என்.வி.நடராஜன் என்பவரிடம் உதவியாளராக சேர்ந்து நுணுக்கங்களைக் கற்றுக் கொண்டு பின் சீரியல்களுக்கு திரைக்கதை வசனம் எழுதியதன் மூலம் கலைப் பயணத்தைத் தொடங்கி இருக்கிறார். இரண்டு படங்களுக்கு திரைக்கதை வசனமும், கடா எனும் படத்துக்கு வசனமும் எழுதியிருக்கிறார். இன்னும் ஒரு பெயரிடபடாத படத்திலும் இணை இயக்குனராக பணியாற்றி வருகிறார்.

ப்ரான்ஸில் உள்ள 'டான்' எனும் தமிழ் சேனலுக்காக 'நிதர்சனம்' எனும் குறும்படமும், மொபைல் கேமராவில் எடுக்கப்பட்ட 'மெளனமே...', அதற்கடுத்து எடுத்த ஆக்ஸிடெண்ட் எனும் குறும்படமும் இவருடைய குறிப்பிடத் தகுந்த படைப்புகள். நூற்றுக்கும் மேற்பட்ட சீரியல்களிலும், திரைப்படங்களிலும் சிறு வேடமேற்று நடித்தவர். 'உயிரே கலந்தது' - சென்னை ஏரியாவுக்கும், 'எங்கள் அண்ணா' - செங்கல்பட்டு ஏரியாவுக்கும் நண்பர்களுடன் சேர்ந்து விநியோகஸ்தராக செயல்பட்டவர்.

வசனகர்த்தாவாக, திரைக்கதை ஆசிரியராக, குறும்பட இயக்குனராக, நடிகராக ஏராளமான அனுபவங்கள் இருந்தாலும் விநியோகஸ்தரான அவருடைய அனுபவங்கள் சுவாரஸ்யமானது. அவையனைத்தையும் ஏற்கனவே பதிவில் எழுதி இருக்கிறார். வலைப்பூவில் படிக்கக் கிடைக்கிறது. பதிவுகளின் தொகுப்பு கிழக்கு வெளியீட்டின் மூலம் புத்தகமாகக் கிடைக்கிறது.

சினிமா வியாபாரம் - அறிமுகம், 1, 2, 3, 4, 5

தெருக்கூத்து, தப்பாட்டம், காவடிச் சிந்து, நாட்டியம், பொம்மலாட்டம், மேடை நாடகம் போன்ற கலை வடிவத்தை விடியவிடிய கண்விழித்துப் பார்க்கும் சமூகம் நம்முடையது. அப்படி இருக்கையில் விஞ்ஞானக் கண்டுபிடிப்புகளில் காட்சி ஊடகமான சினிமா முதலிடம் வகிப்பதில் ஆச்சர்யம் இல்லை. 200 கோடியில் தயாராகும் சினிமா முதல், 2 கோடியில் தயாராகும் சினிமா வரை 150-க்கும் மேற்பட்ட தமிழ் சினிமா ஒவ்வொரு வருடமும் வெளியாகிறது. இவற்றில் வந்த சுவடு தெரியாமல் பெட்டியில் பதுங்குபவை சில. வெள்ளி விழா, வைர விழா என்று பாராட்டைப் பெறுபவை ஒரு சில.

இளைய தளபதி என்று வர்ணிக்கப்படும் நடிகர் விஜய் நடித்த "காவலன்" திரைப்படம் சந்தித்த பிரச்சனைகள் யாவரும் அறிந்ததே. திரைப்படத்தை வெளியிட அரங்குகள் கிடைக்கவில்லை. கார்போரேட் நிறுவனங்கள் தியேட்டர்களை தொடர்ந்து தன்வசம் வைத்துள்ளது. லீனா மணிமேகலையின் "செங்கடல்" தணிக்கை குழுவினரால் திரையரங்குகளில் திரையிட தடை விதிக்கப்பட்டுள்ளது. சம்பள பாக்கி, கதை திருடுதல், பைனான்சியர் பிரச்சனை போன்ற பல சிக்கல்களையும் தாண்டி ஒரு படத்தின் வெற்றி , தோல்வி நல்ல கதையம்சத்தாலும், பார்வையாளனாலும் நிர்ணயிக்கப்படுவதாக நினைத்துக் கொண்டிருக்கிறோம். இல்லை... அது தவறு என்பதை விளக்க போதுமான ஆதாரங்கள் இந்தப் புத்தகத்தில் இருக்கிறது.

***************************************************************

பின்னட்டை வாசகம்:

பெரிய பட்ஜெட்டோ, பிரபலமான நடிகர்களோ, சிறந்த தொழில் நுட்ப வல்லுனர்களோ இல்லாமல் வெளிவந்த படங்கள் சூப்பர் ஹிட் ஆகின்றன. இத்தனை அம்சங்களையும் ஒன்றிணைத்து பல கோடி செலவு செய்து எடுக்கப்பட்ட படங்கள் திரைக்கு வந்த சில தினங்களில் டிவி-க்கு வந்துவிடுகின்றன. எனில், ஒரு படத்தின் வெற்றி, தோல்வியை தீர்மானிப்பவர் யார்?

விநியோகஸ்தர்கள் என்றால் நம்ப முடிகிறதா? ஒரு படம் பெட்டிக்குள் முடங்கிப் போகவேண்டுமா அல்லது பட்டி தொட்டியெங்கும் நன்றாக விற்பனையாகி கலெக்க்ஷனை குவிக்க வேண்டுமா என்பதை இவர்களே முடிவு செய்கிறார்கள்.

கோடி கோடியாப் பணம் புழங்கும் திரைத்துறையின் முதுகெலும்பு என்று விநியோகஸ்தர்களை வர்ணிக்கலாம். ஒரு திரைப்படத்தை உருவாக்குவதில் உள்ள அத்தனை சவால்களையும் விநியோகஸ்தர்கள் எதிர்கொள்கிறார்கள். படப்பெட்டியை வாங்குவது, வெளியிடுவது, அதற்கான ஒப்பந்தங்களை உருவாக்குவது என்று ஒரு திரைப்படத்தை மக்களிடம் கொண்டு சேர்ப்பவர்கள் இவர்கள்தாம். அப்படத்தின் வெற்றி, தோல்வியை இவர்களது மார்க்கெட்டிங் உத்திகளே நிர்ணயிக்கின்றன. திரைப்படத்தை ஒரு கலையாகவும் தொழிலாகவும் கருதும் அனைவரும் கட்டாயம் விநியோகஸ்தர்களின் தொழிலுலக சூட்சமன்களைப் புரிந்துகொள்ள வேண்டும். அதே போல, ஒரு திரைப்படம் எப்படி எல்லாம் வியாபாரமாகிறது, எந்தெந்த வழிகளில் எல்லாம் தயாரிப்பாளருக்குப் பணம் கொடுக்கத் தயாராக இருக்கிறது என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும்.

கோலிவுட் தொடங்கி ஹாலிவுட் வரைக்குமான சினிமா வியாபாரத்தின் நுணுக்கமான பக்கங்களை இந்தப் புத்தகம் அறிமுகம் செய்கிறது. அந்த வகையில், திரைப்பட விநியோகத்தில் அனுபவமுள்ள சங்கர் நாராயணனின் இந்தப் புத்தகம் திரைத் துறையில் பயிலும் ஆர்வலர்கள் அனைவரிடமும் இருக்க வேண்டிய ஓர் அத்யாவசியக் கையேடு.

முன்னட்டை வாசகம்:

தியேட்டரில் படத்தைத் திரையிடுவது, டிவி சேனலுக்கு விற்பது மட்டுமல்ல DVD/VCD உரிமை, ஆடியோ கேசட்/ CD உரிமை, இன்டர்நெட் ஒளிபரப்பு உரிமை, பிறமொழி மாற்று உரிமை, ரீமேக் உரிமை, பேருந்து / ரயில், விமான ஒளிபரப்பு உரிமை, மெர்சண்டைசிங் உரிமை, ரேடியோ ஒலிபரப்பு உரிமை என பல வழிகளிலும் தயாரிப்பாளர் பணம் சம்பாதிக்கலாம். நான் நன்கு அறிந்த சினிமாவின் அறியாத வியாபாரப் பக்கங்கள்.

***************************************************************

"சினிமா என்பது மற்ற வியா​பா​ரம் மாதிரி கிடை​யாது.​ வித்​தி​யா​ச​மான வியா​பா​ரம்.​ வீடு கட்டி விற்​பது மாதிரி இல்லை.​ கோடி கோடி​யாய் சம்​பா​தித்து விட​லாம் என யாரும் இந்த துறைக்கு வந்து விடா​தீர்​கள்.​ கன​வு​க​ளு​டன் ​ வாருங்​கள்.​ இது கலை சார்ந்த வியா​பா​ரம்.​ சில வியா​பா​ரங்​க​ளில் மட்​டும்​தான் சந்​தோ​ஷம் கிடைக்​கும்" - இந்த வார்த்தைகளை உதிர்த்தவர் தயாரிப்பாளர், நடிகர், விநியோகஸ்தர் கமல்ஹாசன். இங்கு ஒரு சூஃபிக் கவிதையை பகிர்வது பொருத்தமாக இருக்கும் என்று நினைக்கிறேன்.

"பாதுகாப்பு வேண்டுமென்றால், கரையில் நில்
பொக்கிஷம் வேண்டுமென்றால் கடலுள் செல்."
-சூஃபி கவிஞர் சா' அதி

சினிமா என்பது ஒவ்வொரு இந்தியனின் ரத்தத்திலும் கலந்திருக்கும் விஷயம். சினிமாவின் ஏதேனும் ஒரு கூறு நம்மை நொடிக்கு நொடி சலனப்படுத்திக் கொண்டே இருக்கிறது. எனினும் அவற்றை வியாபாரம் செய்வது அச்சுறுத்தல் நிறைந்தது. அதனைத் தெரிந்து கொள்ள உதவும் கையேடு தான் இந்தப் புத்தகம்.

தொடர்புடைய பதிவுகள்:
1. திரைப்படத் தொழில் - தினேஷ்
2. சினிமா வியாபாரம் - பரிசல்காரன்
3. சினிமா வியாபாரம் - அகநாழிகை


சினிமா வியாபாரம்
ஆசிரியர்: சங்கர் நாராயண்
வெளியீடு: கிழக்கு பதிப்பகம்
பக்கங்கள்: 144
விலை: ரூ. 90/-

Friday, January 28, 2011

பாலு சத்யா சிறுகதைகள்

கே.பாலசுப்ரமணியன் தேனி மாவட்டக்காரர். எழுத்துலகில் பாலுசத்யா என்று அறியப்படுபவர். போடி நாயக்கனூர் சி.பி.ஏ. கல்லூரியில் படித்தபொழுது பாஸ்கர் சக்திக்கு சீனியர். கல்கியில் எழுதத் தொடங்கி 10 ஆண்டுகளுக்கும் மேலாக பத்திரிகையாளராக பணியாற்றியவர். ஜூலி கணபதி போன்ற படங்களில் இயக்குனர் பாலுமகேந்திராவிடம் உதவி இயக்குனராக இருந்தவர். தற்போது கிழக்கு பதிப்பகத்தில் இணை ஆசிரியராகப் பணியாற்றுகிறார்.

பாலுசத்யா: http://balusathya.blogspot.com

அ-புனைவு சார்ந்த பாராவின் பயிலரங்கத்தில் தான் பாலு சத்யாவை முதன் முதலில் சந்திக்க நேர்ந்தது. எனக்கு பின் இருக்கையில் ஒரு குழந்தையுடன் அமர்ந்திருந்தார். நெற்றியின் குறுக்கில் ஓடிய திருநீர் சாந்தமான முகத்தை இன்னும் நெருக்கமாக்கியது. அன்று பேசியதென்னவோ ஒரு சில வார்த்தைகள் தான். அதன் பிறகு கடந்த புத்தகக் கண்காட்சியில் தான் அவரை மீண்டும் சந்திக்க நேர்ந்தது. வேறெதோ புத்தகம் தேடச்சென்று "கண்பூக்கும் தெரு" என்ற பாலு சத்யாவின் புத்தகம் வம்சி பதிப்பகத்தில் அகப்பட்டது. தொகுப்பிலுள்ள முதல் இரண்டு கதைகளை படித்துப் பார்த்தேன். சூழ்நிலைகளின் உடும்புப் பிடியில் சிக்கிக்கொண்டு இயல்பான தளர்வை எதிர்நோக்கும் எளிய மனிதர்களையும், அவர்களுடைய அன்றாட வாழ்வியல் நெருக்கடிகளையும் தனது படைப்பில் பதிவு செய்திருந்தார். கண்காட்சியின் அடுத்தடுத்த நாட்களில் பாலு சத்யாவை மீண்டும் சந்திக்க நேர்ந்தது. அப்பொழுது கதா மாந்தர்களின் உரையாடலையும், சம்பவத்தைக் காட்சிப் படுத்துதலையும் சிறப்பாகச் செய்திருந்ததைப் பற்றி பேசிக் கொண்டிருந்தேன். அவருடைய மேலும் இரண்டு சிறுகதைத் தொகுப்புகள் அம்ருதாவில் கிடைக்கும் என்று தெரிவித்தார். உடன் வருமாறு அழைத்துச் சென்று அவற்றையும் வாங்கினேன்.


கண்பூக்கும் தெரு (வம்சி பதிப்பகம் - 50 ரூபாய்.)
காலம் வரைந்த முகம் (அம்ருதா பதிப்பகம் - 65 ருபாய்)
பழைய காலண்டரில் இரு தினங்கள் (அட்சரா பதிப்பகம் - 80 ரூபாய்)

பிழைக்க வழியில்லாமல் விபசாரத்தைத் தேர்ந்தெடுக்கும் பெண்கள், தரகுப் பெண்களாக பிழைப்பவர்கள் (சந்தை, யாவரும் கேளிர்), மரபான ஆண்களின் ஒடுக்கு முறையிலிருந்து புது உலகைத் தேர்ந்தெடுக்கும் பெண்கள் (புது மனுஷி, பாம்புகள்), தாயின் முகம் பதிந்த குழந்தை மனதின் தவிப்பு (நிழல் படிந்த மனம்), குழந்தைத் தொழிலாளியாக சிறுவன் அனுபவிக்கும் பாலியல் வேதனை (குருவிகளும் வலைகளும்), பதின் பருவத்தின் பாலியல் வேட்கையைத் தீர்ந்த்துக் கொள்ளத் துடிக்கும் இளைஞர்கள் (விமோசனம்), கனவுத் தொழிற்சாலையில் சாதிக்கத் துடித்து நிறம் மங்கிய வாழ்க்கையை வாழும் திரைக் கலைஞர்கள் (சர்க்கஸ், தினசரி நகரம், காலம் வரைந்த முகம்), பொருளீட்டுவதற்காக பெரு நகரம் சென்று அல்லல்படும் வெள்ளந்தி மனிதர்கள் (உங்கள் நண்பன், சீவன்) என்று பல்வேறு கலங்கிய மனம் சார்ந்த எளிய மாந்தர்களின் வாழ்வியல் சிக்கல்களை சித்தரிக்கும் கதைகள் இவருடையது.

இந்தத் தொகுப்பிலுள்ள சிறுகதைகள் யாவும் "கல்கி, குங்குமம், த சண்டே இந்தியன், ஆனந்த விகடன், தீக்கதிர் - வண்ணக்கதிர், புதிய பார்வை, குமுதம் டாட் காம், தினமணி கதிர், குமுதம் ஜங்க்ஷன், க்ருஹ ஷோபா, காலம், தமிழ் டைம்ஸ், தீம் தரிகிட, தீபாவளி மலர்" போன்ற இதழ்களில் வெளியானவை. சிறுகதைகளுக்கான முக்கிய பரிசுகள் பெற்ற படைப்புகள் 'காலம் வரைந்த முகம்' என்ற தொகுப்பில் இருக்கிறது.

"விமோசனம்" - விபச்சார விடுதியில் உல்லாசமாக இருக்க ஆசைப்பட்டு கணேசன் தனது நண்பனான செல்வத்துடன் தேனிக்கு செல்கிறான். முதல் முறையாக பெண்களிடம் உறவு கொள்ளச் செல்லும் கணேசனின் உளவியலையும், பாதுகாப்பில்லாமல் பலமுறை பெண்களிடம் பாலியல் உறவு கொண்ட செல்வத்தின் அஜாக்ரதையான போக்கையும் மையப்படுத்தி எயிட்ஸ் விழிப்புணர்வு சார்பாக எழுதப்பட்ட சிறுகதை. இது தினமணி கதிர் மற்றும் தமிழ்நாடு எய்ட்ஸ் தடுப்பு & கட்டுப்பாட்டுத் திட்டம் (APAC-UHS-USAID) இணைந்து நடத்திய சிறுகதைப் போட்டியில் முதல் பரிசு பெற்றது.

"காலி நாற்காலி" - யதார்த்தமான கதை. முடிதிருத்தம் செய்யும் ஒருவன் மூப்பினை எட்டியதால், முடி திருத்தம் செய்ய சலூனுக்கு வரும் நபர்களால் ஓரங்கட்டப்படுகிறான். தொழிலை கற்றுக்கொண்டு தலையெடுத்த மகன் கூட எடுபுடி வேலைக்காக தந்தையை பயன்படுத்துகிறான். அன்பும் மரியாதையும் கிடைக்காமல் உள்ளுக்குள் குமுறும் வயோதிக சிகை அலங்காரக் கலைஞரின் அகச் சிக்கல்களைச் சித்தரிக்கும் கதை. இது இலக்கிய வீதி அமைப்பால் சிறந்த சிறுகதையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டது.

"விளிம்பு" - மதுவினைக் குடித்துவிட்டு, கடன் தொல்லையால் விஷ விதையை அரைத்துக் குடித்து தற்கொலைக்கு முயற்சி செய்யும் ஒருவனைப் பற்றிய கதை. இந்தச் சிறுகதை கனடா தமிழ் இலக்கியத் தோட்டமும், காலம் இலக்கிய இதழும் இணைந்து நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்று பிரசுரத்திற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுகதை.

"உங்கள் நண்பன்" - தங்களுடைய சேமிப்பை லஞ்சமாகக் கொடுத்துவிட்டு, நகர வாழ்வின் போக்கில் பயணிக்கும் சாதாரண மனிதர்கள் பற்றியது. மாதக் கடைசியில் போலீஸ் ஸ்டேஷனில் மாட்டிக்கொள்ளும் அண்டை வீட்டாரை அங்கிருந்து மீட்டு வரும் நடுத்தர வர்கத்தின் கதை. இது அமரர் கல்கி சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்ற கதை.

பாலு சத்யா, அதிகம் கவனிக்கப்படாத நல்ல சிறுகதைப் படைப்பாளி. மூன்று தொகுப்புகளிலும் உள்ள 43 சிறுகதைகளில், ஒரு சில கதைகள் தொய்வாகத் தெரிந்தாலும் பெரும்பாலான கதைகள் அதன் போக்கில் நம்மை வசீகரிக்கின்றன. தற்போது இவர் புனைவல்லாத புத்தகங்களும் எழுதுகிறார். அவையனைத்தும் கிழக்கு பதிப்பகத்தில் கிடைக்கிறது.

இவருடைய ஒரு சில கதைகள் இணையத்தில் படிக்கக் கிடைக்கிறது...

பழைய காலண்டரில் இரு தினங்கள் - ஆனந்த விகடன்
கச்சேரி கேட்பவர்கள் கவனத்துக்கு - கல்கி தீபாவளி மலர்

Saturday, January 22, 2011

ஆமென் - சிஸ்டர் ஜெஸ்மி

தமிழில்: குளச்சல் மு யூசுப்
காலச்சுவடு: காலச்சுவடு பதிப்பகம்
விலை: ரூபாய் 150/-

கன்னியாஸ்திரிகளின் மீதான அடக்குமுறைகளை முன்வைத்த தமிழ் நாவல் பாமாவின் கருக்கு. நீண்ட நாட்களுக்கு முன்பே வாங்கியிருந்தும் இதுவரை வாசிக்காமலே வைத்திருக்கிறேன். தனது வாழ்க்கையில் நடந்ததைத் தழுவி எழுதியிருந்தாலும் அந்நாவல் புனைவில் சேர்க்கப்படுகிறது. அதைப் போன்றதொரு தன்வரலாறு தான் சிஸ்டர் ஜெஸ்மியின் ஆமென். இது முதலில் மலையாளத்திலும்,பிறகு ஆங்கிலத்திலும் ஜேஸ்மியால் எழுதப்பட்ட புனைவல்லாத புத்தகம் என்பது கவனிக்கப்பட வேண்டியது. காந்தத்தின் வட தென் துருவத்தைப் போல ஒரே விழுமியத்தின் இரண்டு விமர்சன நிலைப்பாடுகள் தான் இவ்விரண்டு புத்தகங்களும்.

விளக்கு விருது எழுத்தாளர் திலீப்குமாருக்கு கொடுத்து முடித்ததும், அதே கட்டிடத்தில் நடைபெற்ற காலச்சுவடு புத்தக வெளியீட்டிற்கு செல்ல நேர்ந்தது. என்னுடன் எழுத்தாள நண்பர் தமிழ்மகன் மற்றும் அழியாச்சுடர் ராம் வந்திருந்தனர். பால் சக்கரியா இந்தப் புத்தகத்தைப் பற்றி மேடையில் பேசிக்கொண்டிருந்தார். அவர் பேசியதை கவிஞர் சுகுமாரன் தமிழில் மொழி பெயர்த்தார். மேடையில் சிஸ்டர் ஜெஸ்மியும் இருந்தார்.

1956-ல் பிறந்த ஜெஸ்மி ஏசுவின் கட்டளையை இதயத்தில் உணர்ந்தது, 1974- ல் உலக வாழ்க்கையைத் துறந்து சி.எம்.சி மடத்தில் தன்னை இணைத்துக் கொண்டார். மத அமைப்பில் நடக்கும் ஆன்மீக மீறல்களும், ரகசியக் கொடுமைகளும், பாலியல் அத்து மீறல்களும் பிடிக்காததால் 2008-ஆம் ஆண்டு துறவர வாழ்க்கையிலிருந்து விடுதலை பெற்றார். 34 ஆண்டுகள் கன்னியாஸ்திரியாக தான் சந்திக்க நேர்ந்த நெருக்கடிகளை இந்தப் புத்தகத்தில் எழுதியுள்ளார்.

ஏசுவின் மீதுள்ள காதலால் தன் பெயரை ஜெஸ்மி (Jesus Me) என்று மாற்றி இருக்கிறார். சி.எம்.சி மடத்தின் உதவியுடனே படித்து 1980-ல் ஆசிரியராகவும், யு ஜி சி உதவியுடன் ஆங்கில இலக்கியத்தில் பிஎச்.டி பட்டமும் பெற்று விமலா கல்லூரியில் துணை முதல்வராகவும், செயின்ட் மேரீஸ் கல்லூரியில் மூன்றாண்டுகள் முதல்வராகவும் பணியாற்றியவர். ஏராளமான கனவுகளுடன் இறைபணி செய்ய மடத்தினுள்ளே நுழைந்தவருக்கு கிடைத்ததென்னவோ ஏமாற்றங்களும் அதிர்ச்சியும் தான்.

விடுதலைப் பத்திரத்தை மத அமைப்பில் சமர்ப்பித்துவிட்டு, டெல்லியிலிருந்து எர்ணாகுளம் செல்லும் மங்களா எக்ஸ்பிரஸில் பதட்டத்துடன் துவங்குகிறது ஜெஸ்மியின் தன்வரலாறு. ரயிலின் அதிர்வுடன் நமக்கும் பதற்றம் தொற்றிக் கொள்கிறது. ஆரம்பகால துறவு வாழ்க்கையிலிருந்து, மாதர் சுப்பீரியர்களின் உள் அரசியல், ரகசியக் கொடுமைகள், பாதிரியார்களின் செக்ஸ் தொல்லைகள், கன்னியாஸ்திரிளின் குழு மனப்பான்மை, பனிப்போர், சகோதரிகளுக்கிடையிலான ஓரினச்சேர்க்கை, வன்புணர்ச்சி என்று ஒவ்வொன்றாக அவிழ்த்துச் செல்கிறார்.


ஆடிட்டர் குருமூர்த்தியின் தண்ணீர்விட்டோ வளர்த்தோம் புத்தகத்திலிருந்து ஒரு சிறு தகவல்... ஜெஸ்மியைப் போல வெளிப்படாத ஊமைக் குரல்களைத் தெரிந்து கொள்ள இந்த புள்ளி விவரம் உதவும் என்பதால் இங்கு பகிர்கிறேன்.

"உலக கிருஸ்துவ சர்ச்களின் - அதாவது மத மாற்றும் படையின், வருடாந்திர பட்ஜெட் செலவு - மூச்சைப் பிடித்துக் கொள்ளுங்கள் - ரூபாய் 7, 50, 000 கோடி. இந்த சர்ச்களுக்குக் கிட்டத்தட்ட 40 லட்சம் முழு நேர ஊழியர்கள். இது அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நாடுகளின் ராணுவ எண்ணிக்கையை விட அதிகம். இந்த சர்ச்கள் 13,000 நூலகங்கள் (Libraries) நடத்துகின்றன. மேலும் அந்த சர்ச்கள் 22,000 பத்திரிகைகள் நடத்துகின்றன. மேலும் ஆண்டுக்கு எத்தனை புத்தகங்களையும், துண்டு பிரசுரங்களையும் வெளியிடுகின்றன? 400 கோடிக்கும் மேல். சர்ச்கள் நடத்துகிற டிவி சேனல், ரேடியோ இவற்றின் மொத்த எண்ணிக்கை என்ன தெரியுமா? 1800 -க்கும் மேல். நம்ப முடிகிறதா? எத்தனை பல்கலைக் கழகங்கள்? நினைத்துப் பார்க்க முடியுமா? 1500 பல்கலைக் கழகங்கள். எத்தனை ரிசர்ச் நிறுவனங்கள்? 930 -க்கும் மேல்.

உலகிலுள்ள பல வல்லரசுகளிடம் கூட இத்தனை பிரம்மாண்டமான சாதனங்கள் இல்லை...தவிர, மேற்படி புள்ளி விவரங்களும் பழையவை. இது 1989 -ல் அதாவது 21 ஆண்டுகளுக்கு முன்னால் இருந்த நிலவரம்."

புள்ளிவிவரக் கணக்குகளை உங்களின் யூகத்திற்கே விட்டு விடுகிறேன். அதில் நேரடியாகவும் மறைமுகமாகவும் செயல்படும் துறவிகளின் எண்ணிக்கையும் உங்கள் கற்பனைக்கே. இது ஒரேவொரு கன்னியாஸ்திரியின் கதை அல்ல. அதிகார துஷ்பிரயோகத்தால் வஞ்சிக்கப்படும் ஒரு பகுதி சிஸ்டர்களின் ஒன்று சேர்ந்த குரல்... ஆமென்.

மூன்று மொழிகளின் முகப்பட்டைகளையும் கொடுத்திருக்கிறேன். அவற்றில் காலச்சுவடு வடிவைப்பாளர் சந்தோஷ் மிகச்சிறப்பாக செய்திருப்பதாக எனக்குப் படுகிறது. சீருடைக்குள் ஒன்றுமே இல்லை என்பதை மறைமுகமாக சொல்லியிருக்கிறார். சீருடைகள் மத அமைப்புகளுக்கு மட்டுமில்லை. கல்வி நிறுவனங்களுக்கும் பொருந்தும் என்பதை நினைவில் கொள்க.

ஒரே மாதத்தில் மூன்று பதிப்புகளை மலையாள மொழியில் கண்டது இந்நூல். வெளியான குறுகிய காலத்திலேயே பல பதிப்புகளைக் கண்டது என்பதும் குறிப்பிடத்தக்கது. நேரடியாக மலையாளத்திலிருந்து தமிழில் மொழி பெயர்த்தவர் குளச்சல் மு யூசுப்.

தொடர்புடைய இதர பதிவுகள்:
1. பாதிரியார்களால் வஞ்சிக்கப்பட்ட ஸிஸ்டர் ஜெஸ்மி - உதயம்
2. ஒரு பெண்துறவியின் போராட்ட சரிதம் - எம்.ஏ.சுசீலா

Sunday, January 16, 2011

புத்தகக் கண்காட்சி 2011 - 10ஆம் நாள்

எனக்கு மிகப் பிடித்த எழுத்தாளரான அ முத்துலிங்கத்தின் 'இருளில்' என்ற கட்டுரை பார்வை மாற்றுத் திறநாளிகளின் விசித்திர உலகை மனக் கண்ணில் நிறுத்துபவை. கட்டுரையை முழுவதும் வாசித்துவிட்டு மேலும் தொடரவும்.

இருளில் - அ முத்துலிங்கம்

"வியப்பு தான் மனிதனை வாழ வைக்கிறது.எப்பொழுது ஒருத்தர் வியப்பதை நிறுத்திவிடுகிறாரோ அப்பொழுதே அவர் வாழ்வதை நிறுத்தி விட்டார் என்று தான் நினைக்கின்றேன்" - அ.முத்துலிங்கம் (வியத்தலும் இலமே)

சிலருடைய கடுமையான உழைப்பைப் பார்க்கும் பொழுது வியக்கத்தான் முடிகிறது. இந்தப் புத்தகக் கண்காட்சில் க்ரியா பதிப்பகம் என்னுடைய நிறைய நேரத்தை எடுத்துக் கொண்டது. கவிஞர் ஆசைத்தம்பி நான் எழுப்பிய பல கேள்விகளுக்கும் பொறுமையாக பதில் சொல்லிக் கொண்டிருந்தார். அன்றும் அப்படித்தான் நாங்கள் உரையாடிக் கொண்டிருந்தோம். தூரத்தில் பார்வை மாற்றுத் திறனாளி நடந்து வரவும் பேச்சை நிறுத்தினார். க்ரியா அரங்கினை நெருங்கவும் ஓடிச்சென்று அவரை உள்ளே அழைத்துக் கொண்டு வந்தார். காட்சிக்காக வைக்கப்பட்டிருந்த ப்ரெயில் அகராதியை அவருக்குக் காண்பித்தார். அந்த நண்பர் கைகளால் தடவி அழகாக வாசித்தார். அருகில் இருந்த குழந்தை "உங்களால் வாசிக்க முடிகிறதா அப்பா? என்றாள்.

"பிரெய்ல் வடிவத்தில் 54 மொழிகளை வாசிக்க முடியும் குட்டி" என்று மகளுக்குக் கூறினார். புத்தகத்தைத் தடவிய விரல்கள் குழந்தையின் தலையை வருடிக்கொண்டிருந்தது. "செருப்பு தைக்கும்போது லூயிஸ் ப்ரைல்லே என்பவருக்கு ஊசி கண்ணில் பட்டுடுச்சி. பிறகு அந்த கண்ணு தெரியாம போச்சி. கொஞ்ச கொஞ்சமா அடுத்த கண்ணும் தெரியாம போச்சி. கண்ணு தெரியாதவங்க படிக்க ஒரு வடிவம் வேணும்னு இந்த டெக்னிக் கண்டுபிடிச்சாரு. அது சக்சஸ் ஆயிடுச்சி. அதனால இந்த மொழிக்கு ப்ரைய்ல்ன்னு பேரு வந்துடுச்சி" என்று குழந்தைக்கு சொல்லிக் கொண்டிருந்தார்.

"அவருடைய உறவினர் ஓடிவந்து வாங்கிக்கலாமா?" என்று கேட்டார்.

"இப்போ வேண்டாம். வெல அதிகம். வேணும்னா பிறகு வாங்கிக்கலாம்" என்றவாறு வேறு அரங்கிற்கு நகர்ந்தார். தற்போது இந்த அகராதி மிகக் குறைந்த எண்ணிக்கையிலேயே தயாரிக்கப்பட்டுள்ளது. 53 தொகுதிகளாக இருக்கும் அகராதியின் விலை ரூ.15,000. இதர விவரங்கள் பின்வருமாறு...

பார்வையற்றோருக்கான பிரெய்ல் பதிப்பில் க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி (2008)

1) இந்தப் பதிப்பை மதுரையில் இருக்கும் Indian association for the blind சங்கம் வெளியிட்டிருக்கிறது.
2) இந்தப் பதிப்பின் தயாரிப்புச் செலவுகள் அனைத்தும் மானியமாக பதினோரு லட்சம் ரூபாயை IAB சங்கத்துக்கு காக்னிசென்ட் அறக்கட்டளை அளித்தது.
3) பிரெய்ல் வடிவத்தை உருவாக்குவதற்கு அடிப்படைத் தேவையான எண்வயப் பிரதியையும், காப்புரிமை அனுமதியையும் கட்டணம் ஏதுமின்றி க்ரியா IAB சங்கத்துக்குத் தந்துள்ளது.
4) இந்தப் பிரெய்ல் வடிவப் பிரதிகள் தமிழ்நாட்டில் பார்வையற்றோருக்கான 20 பள்ளிகளுக்கும், பார்வையற்றோர் கணிசமான எண்ணிக்கையில் இருக்கும் 20 நிறுவனகள்/உயர்நிலைக் கல்வி நிலையங்களுக்கும் இலவசமாகத் தரப்படும்.
5) இந்திய மொழி ஒன்றில் பிரெய்ல் வடிவத்தில் அகராதி வெளியாவது இதுவே முதல் முறை.
6) பிரெய்ல் வடிவத்தில் க்ரியா அகராதி 53 தொகுதிகளாக இருக்கும்.

கோவில் மாடு மாதிரி கண்காட்சியைச் சுற்றிய இத்தனை நாட்களில் ஒருநாளும் இந்த வாசகங்களை ஏறெடுத்துப் பார்க்கவில்லை. அப்படியெனில் நான் இன்னும் ஆபாசச் சுவரொட்டியை நோட்டம் விடும் மனநிலையில் தான் இருக்கிறேனா? என்ற கேள்வி மனதிற்குள் எழுந்தது. ரீமாசென் குமுதத்தில் எதனை விரும்பிப் படிக்கிறார். சொக்கனை விரும்பும் 2 பீஸ் வாசகி யார்? போன்ற விளம்பரங்கள் தானே கண்ணில் பட்டது. (திருமதி சொக்கன் இதனைப் படிக்காமல் இருக்க வேண்டும்).

குறைந்தது 20,000 பார்வை மாற்றுத் திறநாளிகள் நம்முடன் கல்வி கற்கிறார்கள். அவர்கள் அனைவருக்கும் பயனுள்ள வகையில் அரசே சிறு அகராதியை வடிவமைத்து விநியோகிக்கலாம். லட்சம் குடும்பங்களுக்கு வண்ணத் தொலைக்காட்சிக் கொடுத்து மக்களை மகிழ்விக்கும் ஸ்திரமான அரசு இயந்திரம் இதுபோன்ற விஷயங்களிலும் கவனம் செலுத்தலாம்.

இந்த அகராதியைக் கொண்டுவர உழைத்த அனைவரையும் எவ்வளவு பாராட்டினாலும் தகும்.

Thursday, January 13, 2011

புத்தகக் கண்காட்சி 2011 - 9ஆம் நாள்

க்ரியா பதிப்பகத்திற்குச் சென்று ஆசைத்தம்பியுடன் நேரத்தைச் செலவிட நினைத்திருந்தேன். இரண்டாம் நாள் சந்தித்த ஜெகந் மற்றும் கோயம்புத்தூர் ஆங்கிலப் பதிவரும் மாணவருமான உமேஷ் என்னுடன் இணைந்து கொண்டார்கள். க்ரியாவின் அரங்கை நெருங்கும் பொழுது கவிஞர் ஆசைத்தம்பி ஒரு முதியவருடன் வந்து சேர்ந்தார். அவருக்கு 85 வயது இருக்கும்.

"இவரிடம் தற்போது பதிப்பில் இல்லாத பல அறிய புத்தகங்கள் இருக்கிறது. இந்த வயதிலும் வேலை செய்ய அண்ணா நகரிலிருந்து எழும்பூருக்கு தினமும் பேருந்தில் செல்கிறார்" என்று ஆசைத்தம்பி அறிமுகம் செய்து வைத்தார். நான் திகைப்புடன் முதியவரைப் பார்த்தேன். நாற்காலியில் உட்கார்ந்திருந்தாலும் அவருடைய கையும், உடலும் ஓயாமல் ஆடிக் கொண்டிருந்தது. காகிதக் கோப்பையிலுள்ள தேநீரைப் பருகியவாறே தலையை உயர்த்தி நிமிர்ந்து பார்த்தார்.

அகராதியில் உள்ள வார்த்தைகளுக்காக எந்த மாதிரியான உழைப்பு தேவைப்படுகிறது என்பதைத் தெரிந்து கொள்ளத்தான் ஆசைத்தம்பியை சந்திக்க நினைத்தேன். அவர் முதியவருடன் பேசிக் கொண்டிருந்ததால் அங்கிருந்து கிளம்பினேன். வழியில் என்னுடைய கல்லூரித் தோழன் பிரபாவை சந்திக்க நேர்ந்தது. சென்னை பல்கலைக் கழகத்தில் தமிழ் எழுத்துரு பாடத்தில் டாக்டர் பட்டம் வாங்கியவன். அவசரமாக சென்னை சங்கமத்திற்கு செல்வதாகக் கூறினான். அவனுக்கு விடை கொடுத்து ஆழி பதிப்பகம் சென்றேன்.

ஆழி செந்தில்நாதனை இந்த புத்தகக் கண்காட்சியில் அவசியம் சந்திக்க நினைத்திருந்தேன். இரண்டு நாட்களாகவே அவரைத் தேடிச்சென்று பார்க்கக் கிடைக்காமல் திரும்பியிருந்தேன். "சீன எழுத்துக்களைக் கற்றுக்கொடுக்க முடியுமா?" என்று மா சிவக்குமாரிடம் நீண்ட நாட்களுக்கு முன்பு அணுகிய பொழுது இவரை பற்றிக் குறிப்பிட்டார். அதுமட்டுமல்ல காரணம். இவருடைய 'டிராகன் - சீன வரலாறு' என்ற புத்தகத்தைப் பற்றியும் பேச நினைத்திருந்தேன். தமிழில் வந்திருக்கும் சீன வரலாறு சமந்தமான மிக முக்கியமான புத்தகம். "காஷ்மீர்" என்று சந்திரன் எழுதிய வரலாறு புத்தகமும் இவர்களுடைய முக்கியமான ஆக்கம். வரலாறு படிப்பதில் விருப்பமுள்ளவர்களுக்கு இந்த இரண்டு புத்தகங்களையும் கண்களை மூடிக்கொண்டு பரிந்துரைக்கிறேன்.

நல்ல வேலையாக செந்தில் நாதன் ஆழி அரங்கில் காணக் கிடைத்தார். அவரிடம் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தேன். மொழி பெயர்ப்பு குறித்த ஒரு சில விஷயங்களைப் பகிர்ந்து கொண்டார். "சீன மொழி சம்மந்தமாக உங்களை சந்தித்துப் பேச வேண்டும்? அலுவலகத்திற்கு வந்தால் நேரம் கொடுப்பீர்களா?" என்று கேட்டுக் கொண்டேன்.

"தாராளமாக வாருங்கள்" என்று அவருடைய விசிட்டிங் காரட்டைக் கொடுத்தார்.

அங்கிருந்து கிளம்பும் பொழுது எழுத்தாளர் திலீப்குமார் எதிரில் வந்தார். பேசுவதற்கு வாயைத் திறக்கும் முன், "சொன்னாங்க... சொன்னாங்க... அப்பவே கண்டுபுடிச்சிட்டேன், நீங்களாகத் தான் இருக்கணும்னு..." என்றார்.

"யார் சொன்னாங்க? என்ன சொன்னாங்க திலீப்ஜி?"

"முதல் புத்தகம் வாங்கினவருடைய அடையாளத்தைச் சொன்னாங்க. அப்பவே கண்டுபிடிச்சிட்டேன்" என்று சிரித்துக் கொண்டே தனது விசிட்டிங் கார்டைக் கொடுத்தார்.

"...."

"நேரம் இருக்கும் பொழுது இந்த முகவரிக்கு ஃபோன் பண்ணிட்டு வாங்க பேசலாம். ஆனால் இப்போ வேண்டாம். உடம்பு சரியில்லை. கொஞ்சம் டைம் எடுத்துட்டு வாங்க" என்றார்.

தனியாக வந்து சந்திக்குமாறு அழைப்பு விடுப்பார் என்று நான் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. எவ்வளவு பெரிய எழுத்தாளர். எவ்வித டாம்பீகமும் இல்லாமல் ஒரு எளிய வாசகனுக்கு எவ்வளவு பெரிய மரியாதையைக் கொடுக்கிறார் என்று நினைத்துக் கொண்டேன்.

"நிச்சயம் திலீப்ஜி. அது எனக்கான மகிழ்ச்சி. சிறுகதைத் தொகுதி கிடைக்கலன்னு பார்க்கும் இடத்திலெல்லாம் எத்தனை முறை உங்களை சிரமப்படுத்தி இருக்கிறேன்." என்று அவரிடம் சொல்லிவிட்டுச் சிரித்தேன். எழுத்தாளர் பிரபஞ்சனுடைய புத்தகம் காலச்சுவடில் வெளியிடுவதால் திலிப்ஜியிடம் விடை பெற்றுக்கொண்டு அங்கு சென்றேன். தென்னாப்பரிக்க பெண் கவிஞர்களின் கவிதையையும் சேர்த்து அங்கு வெளியிட்டார்கள். தேவி பாரதி, ரவி, பிரபஞ்சன், காலச்சுவடு கண்ணன், தமிழ்நதி போன்ற பலர் இருந்தார்கள். யாரும் எனக்கு அறிமுகம் இல்லாததால் நிகழ்ச்சி முடியும் வரை அங்கிருந்துவிட்டுக் கிளம்பினேன்.

Wednesday, January 12, 2011

புத்தகக் கண்காட்சி 2011 - 8வது நாள்

2003-ஆம் வருடம் பச்சையப்பன் கல்லூரியில், மாலை நேர வகுப்பில் முதுநிலை கணிதம் பயின்றபோது பிரகாசம் அங்கிள் கீழ்பாக்கத்தில் உள்ள அவரது வீட்டிற்கு வந்து சந்திக்கும்படி கேட்டிருந்தார். இதுபோன்ற அழைப்பு எனக்கு பலமுறை வந்ததுண்டு. இந்த முறை சற்றே வித்யாசமானது. நான் சென்றபொழுது சாய்வு நாற்காலியில் நினைவுகளை அசைபோட்டவாறு அரைமயக்கத்தில் இருந்தார். என்னைப் பார்த்ததும் விழிப்புத்தட்டி, "உன்கிட்ட ஒன்னு சொல்லனும்னு ரொம்ப நாளா நெனச்சிட்டு இருந்தேன். இப்போ சொல்லலாம்னு தோணுது." என்றார்.

என்னுடைய அங்கிளுக்கு அப்பொழுதே 70 வயது. "எது வேணும்னாலும் எங்கிட்ட சொல்லலாம் அங்கிள். தாராளமா சொல்லுங்க." என்றேன்.

"Business Standard பத்திரிகையில் economics பத்தி சிவா editorial column எழுதறான். அத படிச்சி பாரேன்" என்று பத்திரிகையை நீட்டினார். எனக்கு சப்த நாடியும் ஒடுங்கியது. தினமணி தலையங்கத்தையே எழுத்தைக் கூட்டிப் படிப்பவன் நான். பொருளாதாரக் கட்டுரையை அதுவும் ஆங்கிலத்தில் என்றதும் பீதி கிளம்பியது. பத்திரிகையில் பொம்மை பார்த்துவிட்டும் ஏமாற்ற முடியாது. பிரகாசம் அங்கிள் MA (Economics) படித்தவர். உயர்நிலைப் பள்ளியில் பொருளாதார வகுப்பெடுத்து ஓய்வு பெற்றவர். நிபந்தனைகள் இன்றி சரண்டர் ஆனேன்.

"அங்கிள், எனக்கு பொருளாதாரம் பற்றி எதுவுமே தெரியாதே" என்று தயங்கித் தயங்கி தெரியப் படுத்தினேன்.

"அது எனக்கும் தெரியுமே. அதனால தான் இதுவரை சொல்லனும்னு தோணல."

"சரி கொடுங்க அங்கிள்" என்று இதழை கையுடன் எடுத்துச் சென்று, பல முறை வாசித்து மறுநாள் அவரைச் சந்திக்கும் பொழுது சிவா அண்ணன் எழுதி இருந்ததைப் பற்றி எனக்குத் தெரிந்ததைப் பேசினேன். நான் தவறாகப் பேசிய இடத்தில், என்னைத் திருத்தி கட்டுரையின் சாரத்தைப் பகிர்ந்துகொண்டார். சங்கதி இதனுடன் முடியவில்லை.

இரண்டு வருடம் தொடர்ந்து எழுதிய கட்டுரைகளின் சாரத்தைத் தொகுத்து 2009 ஆம் ஆண்டு இன்வெஸ்டிங் இன் இந்தியா'ஸ் எமெர்ஜிங் ரெசிலியான்ஸ் என்ற புத்தகமாக சிவா அண்ணன் எழுதி இருக்கிறார். புத்தக வெளியீடு மத்திய அமைச்சர்கள் புடைசூழ டெல்லியில் நடந்தது. மெக்மில்லன் பதிப்பகம் வெளியிட்டார்கள். பதிவு செய்யப்பட்ட புத்தக வெளியீட்டு வீடியோ காட்சியை நேரம் கிடைக்கும் பொழுது அங்கிள் போட்டுக் காண்பிப்பார். அப்பொழுதெல்லாம் அவர் மிகுந்த மகிழ்ச்சியுடன் இருப்பார். நான் சொல்ல வரும் சங்கதி இதுவும் அல்ல.

புத்தகக் கடைகளில் விற்பனைக்காக வைக்கப்பட்டிருக்கும் இந்த புத்தகத்தின் ஒரு பிரதியையாவது பார்க்க வேண்டும் என்பது அவருடைய ஆசை. அதற்காக இந்த இரண்டு வருடங்களில் லேண்ட்மார்க், ஒடிசி, ஹிக்கின்போதம், புக் பாயின்ட் என்று எந்த கடைக்குச் சென்றாலும் இந்தப் புத்தகத்தைத் தேடுவதை வழக்கமாகக் கொண்டிருந்தார். கடந்த மாதம் கூட Skywalk-ல் இருக்கும் லேண்ட்மார்க்கிற்கு அழைத்துச் சென்றேன். அதே தேடுதல் அதே ஏமாற்றம். புத்தகக் கண்காட்சிக்கான தேதி தெரிய வந்ததும் "சிவா எழுதின புக் மெக்மில்லன்ல இருக்கான்னு பார்த்துட்டு வந்துடலாம்பா..." என்றார்.

இடது பக்க ஆரம்பத்தில் தினத்தந்தி புத்தக அரங்கின் வரிசையில் மெக்மில்லன் இருக்கிறது. முந்திய நாட்களிலேயே சென்று புத்தகம் இருக்கிறதா என்பதைப் பார்த்துவிட்டேன். 'இருக்காது!' என்பதை தெரிந்துகொண்டே அவருடன் சென்று ஏமாறுவது சங்கடமான விஷயம். எனவே வலது பக்கக் கோடியில் இருந்து ஆரம்பித்தேன். நாங்கள் எந்தப் புத்தகத்தையும் வாங்கவில்லை. செல்லும் வழியை விட்டு விலகினாலும், ஆசிரியரின் குரலைக் கேட்டு வரிசையைப் பிடிக்கும் குழந்தைகளையும், புத்தகங்களையும் வேடிக்கைப் பார்த்துக் கொண்டு நிதானமாக நடந்தோம். மிதமான கூட்டத்தில் நாங்களும் நடந்து சென்றோம். எங்களுக்கான இலக்கு ஒரே ஓர் அரங்கு மட்டும் தான். அதுவும் எங்களுடைய பயண இறுதியில் இருக்கிறது.

கிழக்கின் வாசலைக் கடக்கும் பொழுது 'ரஜினியின் பஞ்ச்தந்த்ரா' என்ற புத்தகத்தை மாயா ஆண்டிக்காக வாங்கிக் கொண்டோம். ரஜினியின் ஒவ்வொரு விஷயத்தையும் தெரிந்து கொள்ள ஆசைப்படுபவர். புத்தகத்தின் ஒரு பக்கத்தைக் கூட ஆண்டி நிச்சயமாகப் படிக்கமாட்டார். என்றாவது அவர்களுடைய வீட்டிற்குச் சென்றால் என்னிடம் வாசித்துக் காண்பிக்கச் சொல்வார். இல்லையேல் அங்கிள் தான் படித்துச் சொல்ல வேண்டும். புத்தகத்திற்கான பணத்தைச் செலுத்தும் பொழுது பாரா இருந்தார். அவருக்கு அறிமுகம் செய்து வைத்தேன். மீண்டும் எங்களுடைய இலக்கை நோக்கி பயணப்பட்டு கடைசியாக மெக்மில்லன் அரங்கை அடைந்தோம்.

சிறு அரங்கின் சுவர் முழுவதும் பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கான புத்தகங்கள் இருந்தது. நின்றவாறு மூன்று பக்க சுவரையும் பார்வையிட்டார்.

"இங்கயும் இல்லையேப்பா?"

"உங்களுக்குத் தெரியாதது இல்ல. பொருளாதாரம் படிக்கறவங்க ரொம்ப கம்மி. தேவைப்பட்டா பதிப்பகத்தையே தொடர்பு கொண்டு வாங்கிடுவாங்க அங்கிள்."

"இல்லப்பா, இத எழுதறதுக்கு ரொம்ப கஷ்டப்பட்டு இருக்காம்பா. இந்த மாதிரி விழாக்களில் அவனோட புக்கும் இருந்தா சந்தோஷமா இருக்கும் இல்ல."

"புரியிதுங்க அங்கிள். நான் முன்னமே பார்த்துட்டேன். அந்தப் புத்தகம் இங்க காட்சிக்கு இல்ல. பெரும்பாலும் Study materials தான் இருக்கு. இதுபோன்ற விழாக்களின் முக்கிய இலக்கே குழந்தைகள் மற்றும் மாணவர்கள் தான். அவர்களுக்கான புத்தகங்கள் தான் பெரும்பாலும் இருக்கு."

"சரிப்பா. நாம கொஞ்ச நேரம் வெளிய உட்கார்ந்து ஓய்வெடுத்துட்டு கெளம்பிடலாம்" என்று வெளியில் வந்தார். எவ்வளவு புத்திசாலியாக இருந்தாலும் பெற்ற பிள்ளைகள் என்று வரும் பொழுது தாய்தந்தையர் வெகுளிகளாக நிற்கத் தயங்குவதே இல்லை. போதிய ஓய்விற்குப் பிறகு அவரை மெதுவாக அழைத்துக் கொண்டு வீட்டிற்கு வந்து சேர்ந்தேன். என்றாவது ஒரு நாள் மீண்டும் அங்கிள் என்னை அழைப்பார். அவருடன் புத்தகத்தைத் தேட வெளியில் செல்ல வேண்டும்.

Tuesday, January 11, 2011

புத்தகக் கண்காட்சி 2011 - ஏழாம் நாள்

எதிரில் வந்த அறிமுகமில்லாத நபர் வழிமறித்துக் கைகுலுக்கினார்.

"மன்னிக்க வேண்டும் நண்பரே. நீங்கள் யாரென்று எனக்குத் தெரியவில்லையே?" என்றேன்.

உங்களை எனக்கு நன்றாக ஞாபகம் இருக்கிறது. புத்தகக் கண்காட்சியில் 'கடவு' முதல் பிரதியை வாங்கியவர் நீங்கள் தான். நான் க்ரியாவில் இருக்கிறேன். பெயர் ஆசைத்தம்பி என்றார். இவரிடம் நேரடி பரிட்சயம் இல்லை. ஆனால் இவரைப் பற்றி ஏற்கனவே படித்திருக்கிறேன். அதை இங்கு சொல்லியே ஆகவேண்டும்.

இவர் 'க்ரியாவின் தற்காலத் தமிழ் அகராதி'யின் ஆசிரியரான எஸ்.ராமகிருஷ்ணனுடன் இணைந்து வேலை செய்பவர். அகராதியில் அறிவியல் தொடர்புடைய சொற்களுக்கும், பறவைகள் விலங்குகள் தொடர்பான சொற்களுக்கும் பொருள் எழுதும் பொறுப்பு இவருடையது. ‘சித்து’, ‘கொண்டலாத்தி’ என்ற இரண்டு கவிதைத் தொகுப்புகளும் க்ரியா வெளியீடாக‌ வ‌ந்திருக்கின்றன. வளர்ந்து வரும் கவிஞரும் கூட. இந்த வருடம் 'ஓமர் கய்யாம் ருபாயியத்' என்ற இவருடைய மொழிபெயர்ப்பு வந்திருக்கிறது என்று நினைக்கிறேன். அவரை மீண்டும் சந்திக்க இருக்கிறேன். அப்பொழுது விரிவாகப் பேசலாம். இப்பொழுது கிழக்கு நோக்கிச் செல்வோம்.

பாஸ்கர் சக்தியின் கல்லூரித் தோழரான பாலு சத்யாவிடம் நீண்ட நாட்களாக பேச வேண்டும் என்றிருந்தேன். பா ராகவன் மூலம் கல்கியில் பணியைத் தொடங்கியவர். தற்பொழுது கிழக்கில் பணிபுரிகிறார். இவர் பாலு மகேந்திராவிடம் அசோசியேட் டைரக்டராக "ஜூலி கணபதி" என்ற படத்தில் பணியாற்றியவர். பாஸ்கர் சக்தியின் 'தக்ளி' சிறுகதையை இவர் தான் இந்தியா டுடேவிற்கு அனுப்பியவர். அந்த வருடத்தின் சிறந்த சிறுகதையாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட தக்ளியின் மூலம் "விகடன், TV மெகா சீரியல், திரைப்படம்" என்று பாஸ்கர் சக்தி எங்கெங்கோ பயணித்துக் கொண்டிருக்கிறார். இதனை பாஸ்கர் சக்தி பல முறை, பல மேடைகளில் பகிர்ந்து கொண்டிருக்கிறார். நான் பேசச் சென்றதின் விஷயம் இதுவல்ல. அவருடைய "கண்பூக்கும் தெரு(வம்சி பதிப்பகம்)" என்ற சிறுகதை தொகுப்பைப் பற்றி பேசுவதற்காகத் தேடிக் கொண்டிருந்தேன். மடக்கிப் பிடித்து பேசியபோது அவருடைய மேலும் இரண்டு சிறுகதைத் தொகுப்புகளான "காலம் வரைந்த முகம் (அம்ருதா), பழைய காலண்டரில் இரு தினங்கள் (அட்சரா)" பற்றிக் குறிப்பிட்டார். மொத்தக் கதைகளையும் படித்துவிட்டு உங்களிடம் வருகிறேன் என்று விடைபெற்று உயிர்மை சென்றேன்.

எஸ்ரா வந்திருப்பதாக தனசேகர் தெரிவித்தார். ஆனால் ஆளைக் காணவில்லை. நானும் ஒரு சுற்றுசுற்ற வெளியில் கிளம்பினேன். பூம்புகார் பதிப்பகத்தில் எஸ்ரா காணக் கிடைத்தார். நெருங்கிச் சென்று "வணக்கம் எஸ்ரா. நான் கிருஷ்ண பிரபு. உங்களுடன் பேசிக்கொண்டு வருவதில் பிரச்சனை இல்லையே?" என்றேன்.

"ஞாபகம் இருக்கிறது... துயில் புத்தக வெளியீட்டில் பார்த்தோமே. தாராளமா வாங்க" என்று சிரித்தார். அவர் பயன்படுத்தியிருந்த வாசனைத் திரவியம் காற்றைப் புணர்ந்து பரவிக்கொண்டிருந்தது. அவருக்கான சில கேள்விகள் என்னிடமிருந்தன. எனினும் எஸ்ரா புத்தகம் தேடும்பொழுது பேசக்கூடாது என்பதில் கவனமாக இருந்தேன்.

1. இந்த வருடம் எந்த மாதிரி புத்தகங்கள் படிக்க இருக்கிறீர்கள்?

எஸ்ரா: அதிகம் பிரபலமாகாத முக்கியமான ஆளுமைகளின் சுயசரிதம் படிக்க இருக்கிறேன். அதுவும் ஆங்கிலப் புத்தகங்கள்.

2. எந்த மாதிரியான ஆளுமைகள்?

எஸ்ரா: பல துறைகளில் பங்களிப்பு செய்தவர்கள். உதாரணத்திற்கு ஒரு புத்தகத்தை எடுத்துக் காண்பித்தார்.

3. தீவிர இலக்கியத்தில் ஆர்வமிருந்தும் நீங்கள் ஆரம்பித்து நடத்திய சிற்றிதழை ஏன் நிறுத்திவிட்டீர்கள்?

எஸ்ரா: ஊரில் இருந்தபொழுது எழுத்தில் ஆர்வமுள்ள நண்பர்களுடன் சேர்ந்து நடத்தியது. சென்னைக்கு வந்ததும் சில காரணங்களால் நின்று போனது. சிற்றிதழை இணையத்தில் கொண்டுவந்தேன். ஆனால் தொடர முடியவில்லை. எனினும் அந்த முயற்சியால் தான் எனக்கான இணையத்தளம் தொடங்க முடிந்தது.

4. நீங்கள் எழுத்தாளரை சந்திக்க நேர்ந்த அனுபவக் கட்டுரைகள் அனைத்தும் மாய யதார்த்தத்தைப் போல இருக்கிறதே? நீங்கள் எழுதிய அனுபவங்களும், உணர்வுகளும் உண்மையிலேயே உங்களுக்குக் கிடைத்ததா?

எஸ்ரா: இப்பொழுது எழுத்தாளர்களுக்கும், வாசகர்களுக்குமான இடைவெளி மிகவும் குறைந்துவிட்டது. எங்களுடைய காலத்தில் அப்படி இல்லை. அவர்களை சந்திப்பதே கடினம். வாய்ப்பு கிடைக்கும் பொழுது சங்கடப்படும்படி வேறு பேசி இருக்கிறோம். அடுத்த முறை சந்திக்கும் பொழுதும் முகம் கொடுத்துப் பேச மாட்டார்கள். இருந்தும் வலிய சென்று பேசுவோம்.

5. உங்களுடைய மொழி ஒரே மாதிரி இருக்கிறதே?

எஸ்ரா: எனக்கான மொழியைத்தான் நான் தொடர்ந்து பயன்படுத்துவேன். இதில் என்ன இருக்கிறது. அடுத்தவர்களின் மொழியைப் பயன்படுத்தினால் அது என்னுடையதாக இருக்காதே.

6. நான் சொல்ல வருவது... துணையெழுத்தின் பாதிப்பு உங்களுடைய எல்லாக் கட்டுரைகளிலும் இருக்கிறதே? ஒரு கட்டுரையிலோ கதையிலோ கிளி இருந்தால், அடுத்த கட்டுரையில் மரம் இருக்கிறது. அதற்கடுத்தக் கட்டுரையில் செடி இருக்கிறது அல்லது மலை இருக்கிறது. படித்ததையே படித்தது போன்ற உணர்வு எழுகிறதே.

எஸ்ரா: பாதிப்பு என்பதை விட, என்னுடைய மொழியை நான் தொடர்ந்து பயன்படுத்தி வருகிறேன். வேறொருத்தருடைய மொழியை பயன்படுத்தினால் அது என்னுடைய எழுத்தாக இருக்காதே. நீங்கள் துணையெழுத்தை மீண்டும் படித்தால் உங்களுக்கு சலிப்பாக இருக்கலாம்.

7. நிச்சயமாக இல்லை. ஆனால் அதனுடைய தொனி அடுத்தடுத்த படைப்புகளில் ஏற்படும்பொழுது சலிக்கிறது.

எஸ்ரா: தேசாந்திரி படித்துவிட்டு துணையெழுத்து படிப்பவர்கள், தேசாந்திரிதான் சிறந்த கட்டுரைகள் என்பார்கள். இந்த மொழி என்னுடையது என்றிருப்பததை வெற்றியாகக் கருதுகிறேன்.

8. உங்களுடைய சமீபத்திய படைப்புகளை நான் படிக்கவில்லை. எனவே உப பாண்டவத்தை எடுத்துக் கொள்வோம். உங்களுடைய படைப்பில் மிகவும் பிடித்த நாவல். அதிலுள்ள எல்லா கதாப்பாத்திரங்களின் குரலும் ஒரே மாதிரி இருக்கின்றதே? படகோட்டி முதல் விதுரன் வரை ஒரே மாதிரி உலகத்தைக் காண்கிறார்களே. அவர்களுக்கான மொழியோ, குரலோ தனித்துத் தெரியவில்லையே?

எஸ்ரா: 60 வயலின் கலைஞர்கள் ஒன்றாக இசைக்கிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். இது என்ன பைத்தியக்காரத் தனம் என்று நினைப்போமா? மொத்தக் கலைஞர்களும் வாசிக்கும் பொழுது கிடைக்கும் சேர்ந்திசை வடிவம் கொடுக்கும் சிலிர்ப்பு வித்யாசமானது தானே. சிறு கீற்றாக புல்லாங்குழலின் இசைபோல ஒவ்வொரு கதாப்பாத்திரத்திலும் வேறுபாடு இருக்கும். அதை நான் நுட்பமாக செய்திருப்பேன்.

ஒரு வாசகனாக நீங்கள் சொல்லும் மொழிசார்ந்த, குரல் சார்ந்த விஷயம் எனக்கும் தெரியும். ஒவ்வொரு முறை மறுபதிப்பு வரும் பொழுதும் படித்துவிட்டுத் தான் வெளியிடுகிறேன். எழுத்தாளனாக சில விஷயங்களைத் தெரிந்தே தான் என்னுடைய படைப்புகளில் அனுமதிக்கிறேன்.

9. பார்க்க வந்த இலை - இந்தக் கட்டுரைக்கு இணையத்தில் எழுந்த சலசலப்பு உங்களுக்குத் தெரியும் என்றே நினைக்கிறேன்?

எஸ்ரா: மேகம் எப்பொழுதுமே மேகம் தான். சாதாரணமாகக் காணக் கிடைக்கும். அதை எப்படியெல்லாம் வர்ணிக்கிறோம். அங்கு எழாத கேள்வி இங்குமட்டும் ஏன் எழுகிறது. நான் லத்தின் அமெரிக்க எழுத்தாளரைப் பற்றி எழுதினால் யாரும் கண்டு கொள்வதில்லையே. அதையும் நீங்கள் கவனிக்க வேண்டும். ஒரு விஷயத்தை பல முறை யோசித்துவிட்டுத் தான் பொதுவில் வைக்கிறேன் என்றவாறு சிரித்தார்.

10. உங்களுடைய படைப்புகளில் உங்களுக்கே மிகவும் பிடித்த படைப்பு என்று எதையாவது சொல்ல முடியுமா?

அப்படியெல்லாம் சொல்ல முடியாது. எனக்கு மிகவும் பிடித்த விஷயத்தை சில சமயம் எழுத்தில் கொண்டுவர முடியாமல் போனதுண்டு. சுமாரான விஷயம் எதிர்பாராத விதமாக அற்புதமாக வந்த அனுபவங்களும் இருக்கிறது.

11. இளம் படைப்பாளிகள் எப்படி எழுதுகிறார்கள்? அவர்களைப் படிப்பதுண்டா?

எஸ்ரா: கண்டிப்பாக... நன்றாக எழுதுகிறார்கள். சில நேரங்களில் அவர்கள் எழுத நினைக்கும் விஷயத்தை முழுமையாக எழுத்தில் கொண்டுவர முடியாமல் போகிறது என்பதை எழுத்தாளனாக கண்டுபிடிக்க முடிகிறது என்று சமீபத்தில் படித்ததை பகிர்ந்துகொண்டார்.

இருபது வயதில் எல்லோருக்குள்ளும் ஒரு கழுகு பறக்கும். கழுகு பறக்க பெரிய இடம் வேண்டும். அதுவுமில்லாமல் உயரத்தில் பறக்கக் கூடியது. உயரத்தில் பறந்துவிட்டு களைப்புடன் மரக் கிளையில் அமர்வதைப் பார்க்கும் பொழுது பரிதாபமாக இருக்கும். அப்பொழுது மீண்டும் ஒரு கழுகு பறக்கும்.

சிறு வயதிலேயே உச்சத்தை அடையவேண்டும் என்று ஆசைப்படுகிறோம். ஆனால் அதற்குத் தேவையான அனுபவமும், முதிர்ச்சியும் சேரும்பொழுது சிறப்பாக எழுத்தில் வெளிவரும். சிலர் ஆரம்பத்தில் எழுதியது சிறப்பாகவும் போகப் போக சொதப்பியும் இருக்கிறார்கள். சிலர் சொதப்பலாக ஆரம்பித்து போகப்போக கைவரப்பெற்று அசத்தி இருக்கிறார்கள்.

மேலும் பல கேள்விகள் என்னிடம் இருந்தாலும், அவருடைய நேரத்தைத் திருட விரும்பாததால் புறப்பட வேண்டியிருந்தது. விகடன் சென்று ஒரு புத்தகம் வாங்கிவிட்டு வீட்டிற்குக் கிளம்ப முடிவு செய்தேன். அங்கு எழுத்தாளர் முகில் அவருடைய நண்பர்களுடன் இருந்தார். எப்பொழுதும் போல "நான் கிருஷ்ண பிரபு. என்னை உங்களுக்குத் தெரிந்திருக்க ஞாயம் இல்லை..." என்று ஆரம்பித்தேன்.

"தெரியும் சொல்லுங்க..."

"உங்களுடைய அபுனைவு எதுவும் நான் வாசித்ததில்லை. எங்கிருந்து எழுத ஆரம்பித்தீர்கள்?".

"எல்லாரையும் போல கவிதையில் இருந்துதான்..."

"கிழக்கு மொட்டை மாடியில் எனக்காகக் கவிதை வாசிக்க முடியுமா?" என்றேன்.

"என்னோட கவிதை இளையராஜாவோட சிம்பொனி மாதிரி. வெளியில் எங்கும் கிடைக்காது. காப்புரிமையில் இருக்கு. நானும் அதை வெளியில் விடக்கூடாது என்றிருக்கிறேன். கிழக்கு வாங்க விரிவா பேசலாம்" என்றார்.

"கவிதை பாடு குயிலே குயிலே இது வசந்தமே..." என்று வரும் கோடையில் முகிலுடன் மொட்டைமாடியில் வசன நடையில் கவிதையைப் பற்றி பேச வேண்டும். அந்த நாள் தூரத்தில் இல்லை...


Sunday, January 9, 2011

புத்தகக் கண்காட்சி 2011 - ஐந்தாம் நாள்

"தம்பீ, சென்னையில புத்தகக் கண்காட்சி போட்டிருக்கானாமுள்ள... ஒரு நாளு ரெண்டு பேரும் போகலாம். முடிஞ்சா ஏதாச்சும் வாங்கிட்டு வரலாம்" என்று சித்தப்பா சொல்லியிருந்தார்.

"இதோ பாருங்க உங்களுக்கு 64 வயசாகுது. லீவ் டேஸ்ல கூட்டம் வேற அதிகமா இருக்கும். அதனால காலம்பர போயிட்டு வந்துடலாம். அதுதான் உங்களுக்கு சௌகர்யமாகவும் இருக்கும்" என்று பலமுறை அவருடன் பேசி பயணக் குறிப்பு தயார் செய்திருந்தேன்.

அதன்படி சனிக்கிழமையன்று செல்வதாகவும், காலை 11 மணிக்கு அரங்கம் திறந்ததும் உள்ளே நிழைந்து விடலாம் என்றும் முடிவு செய்தோம். மண்டையை மண்டையை ஆட்டியவர் வீட்டிலிருந்து புறப்பட்டதே காலை 11.30 மணி, ஏறக்குறைய மதியம். பள்ளிக் குழந்தைகள் எவ்வளவோ தேவலாம்.

பாரிமுனை நோக்கிப் புறப்பட்டோம். பேருந்தை விட்டுக் கீழிறங்கியதும் குறளகம் செல்ல வேண்டுமென்று பிடிவாதம் பிடித்தார். காரணத்தைக் கேட்டபோது, "பொங்க நாள் வருது. வேல செய்யறவங்களுக்கு எனாம் கொடுக்கணும்ல. கதர் வேட்டி என்ன வெலன்னு பாத்துட்டுப் போகலாம்" என்றார்.

"அதுக்கெல்லாம் இப்போ நேரம் இல்லையே!"

"ஆமா, நீயும் நானும் ஆபீஸ் போயி வெறகு முறிக்கப் போறோம். அதனால நேரம் இல்லாமப் போகுது. கெடப்பா!" என்றார்.

ஒருவனின் மர்மஸ்தானத்தை குறிவைத்துத் தாக்குபவர்களை என்ன செய்வது? மௌனமாகப் பின்னால் சென்றேன். சித்தப்பா வாடிக்கையாகச் செல்லும் கடை மூடியிருந்தது. அங்கிருந்து சென்று வெண்ணை வாங்க வேண்டுமென அழிச்சாட்டியம் செய்தார். இரண்டு கிலோமீட்டர் நடக்க வைத்து, பாரீசின் வீதிகளில் அலையவைத்து ஒரு வெண்ணைக் கடையைக் கண்டுபிடித்தார்.

"தம்பீ... இங்க வெண்ணை ரொம்ப நல்லா இருக்கும்பா. வேற எடத்துல வாங்கினா எமாத்திருவானுங்க. உனக்கு என்ன தெரியும். நான் 80-ல் இருந்து சென்னைக்கு வரவன்" என்று 30 வருடங்களுக்கு முந்தைய சென்னையின் தரத்தைப் பற்றி பேசிக்கொண்டு வந்தார். ரொட்டி, ரஸ்க், அகர்வால் ஸ்வீட் என பிடித்த பண்டங்களை வாங்கி பைகளில் திணித்துக் கொண்டார். அவருக்குப் பிடித்த ஹோட்டலில் மதிய உணவை முடித்து கண்காட்சி செல்வதற்கு 2.30 ஆனது. உரிய நேரத்திற்கு வந்திருந்தாள் சேரலை சந்தித்திருக்கலாம். அது முடியாமல் போனது.

திருவண்ணாமலையில் நித்யானந்தாவின் சொற்பொழிவிற்கு கூடிய கூட்டத்திலும் பார்க்க சற்றே குறைவான கூட்டமென்றாலும் புத்தகக் கண்காட்சி என்று பார்க்கும்பொழுது இதனை மாபெரும் கூட்டம் என்றுதான் சொல்ல வேண்டும். முதல்நாள் எந்திரன் படத்திற்கான டிக்கெட் வாங்குவதுபோல முன்டியடித்துக் கொண்டு வரிசையில் நின்றேன். "என்ன தம்பி இவளோ கூட்டமா இருக்கு?" என்று சித்தப்பா கேட்டார்.

"அதுக்குதான் காலைலேயே வந்துடலாம்னு சொன்னேன்."

"இப்போமட்டும் என்ன கொறஞ்சி போயிடுச்சி. கோயில்மாடு மாதிரி ஒரு சுத்து சுத்திட்டு வந்துடலாம். சூப்பரா டைம் பாஸ் ஆயிடும்." என்றார்.

உள்ளே நுழைந்ததும், ஜோல்னா பையை மாட்டிய நண்பர் கண்ணில் பட்டார். ஓடிச்சென்று பையை எட்டிப் பார்த்தேன். திருடுவதற்கு ஏற்றார்போல எதுவும் இல்லை. அவரும் நம்மை கவனிப்பதாக இல்லை. அழுத்தமாக முதுகைக் கிள்ளினேன். பெருங்குரலெடுத்து "ஆத்தாடி..." என்று கத்தினார். பக்கத்தில் நின்றிருந்த பெண் என்னை முறைத்துப் பார்த்தார். நான் நண்பரைக் கைகாட்டினேன்.

இந்த முகத்தை வேறெங்கோ பார்த்த ஞாபகம். Oh yes... எனக்கும் மூளை வேலை செய்கிறதே!. சென்ற வருடம் நடந்த பாராவின் பயிலரங்கத்தில் இவர் என்னுடைய வகுப்புத் தோழி. கேணியில் கேள்வி கேட்கும் பொழுது பார்த்திருக்கிறேன். சில புத்தக வெளியீடுகளிலும் பார்த்திருக்கிறேன்.

நிலைமையை சமாளிக்க "பாலபாரதி, இவங்க என்னோட வகுப்புத் தோழி" என்று அறிமுகப்படுத்தினேன்.

"நான் அவரோட வைஃப்" என்ற தோழி ஒரு பெரிய பல்பாக தேர்ந்தெடுத்து என்னிடம் கொடுத்தார். எழுத்தாளர் பாலபாரதி தம்பதியரிடம் அசடு வழிந்து கொண்டே அங்கிருந்து விடைபெற்றேன். தொங்கிய முகத்துடன் சுற்றிக்கொண்டிருந்த என் தோள்களில் உள்ளங்கை சூடேறியது. திரும்பிப் பார்த்தால் "வெங்கட் மாமா". அக்கா தூரத்தில் விரட்டிக்கொண்டு வந்தாள்.

"டேய்... World Book Library shop-ல நான் பலப் வாங்குனேண்டா".

"நீங்களுமா வெங்கட்".

"ஆமாண்டா... ஜெயா நம்மள நெருங்கிட்டா, அத அப்புறம் சொல்றேன். அடுத்த வருஷம் நம்மளும் ஒரு கடை போட்டுறலாம்டா" என்று சொல்லவும் அக்கா அருகில் வரவும் சரியாக இருந்தது. சித்தப்பா அருகில் இருக்கவும் ஜெயா சமத்தாக இருந்தாள். நாங்கள் தப்பித்தோம்.

பல இடங்கள் சுற்றிவிட்டு உயிர்மைக்குச் சென்றோம். வெள்ளைச் சீருடை அணிந்த உயரமான மனிதரின் பாக்கட்டில் VIP பாஸ் இருந்தது. அருகில் சென்று "நீங்கள் தானே சினிமா இயக்குனர் SP முத்துராமன்?" என்றேன். பலமான யோசனையுடன் தலையாட்டினார்.

"உங்கள் வீட்டில் நூலகம் இருக்கிறதாமே? விரும்புபவர்கள் வந்து படித்துவிட்டுச் செல்லலாம் என்ற சலுகையை வேறு வழங்குகிரீர்கலாமே?" என்று இதழ்களில் படித்த விஷயத்தைப் பகிர்ந்து கொண்டேன்.

"அப்படியெல்லாம் நான் ஒன்னும் செய்யலையே!" என்று தலையை இடவலமாக நான்கு முறை ஆட்டினார். தவறான தகவல்களுடன் பேசியதற்கு அவரிடம் மன்னிப்பு கேட்டுக் கொண்டு விடைபெற்றேன். என்னுடைய உடலின் சக்தி இழந்து கையிலுள்ள புத்தகங்களை சுற்றிலும் சிதறச் செய்தேன். குனிந்து எடுப்பதற்குக் கூட யோசனை போகவில்லை. அப்பொழுது பார்த்து வானவில்வீதி கார்த்திக் வந்து சேர்ந்தான்.

"வயசானா இதெல்லாம் சகஜம் கிருஷ்ணா. Take it easy" என்று கைகுலுக்கினான்.

அவனிடம் சிறிதுநேரம் பேசிவிட்டு வெளியில் வந்தேன். பால்ய நண்பர்கள் ராஜேஷ், ஸ்ரீனி, ரகு ஆகியோரைப் பார்க்க நேர்ந்தது. அவர்களுடன் பேசிக்கொண்டிருக்கும் பொழுது ஒரு கவிஞர் பெரிய பையைத் தூக்கிக்கொண்டு ஓடினார். அவர் பின்னால் நான்கு பேர் பாதுகாப்பிற்கு. அவரை வழிமறித்து "பையில் என்ன மயிரா?" என்று கேட்டேன்.

மயிரு யாத்ரா - அவருடைய நண்பர்களை அறிமுகம் செய்தார். ஒருவர் பின் ஒருவராக சங்கர், மயில்ராவணன் போன்ற நண்பர்களையும் பார்க்க நேர்ந்தது. சித்தப்பாவிற்கு சுவாரஸ்யம் குறைந்ததால் கண்காட்சியிலிருந்து கிளம்பினோம். பேருந்தின் ஜன்னலோர இருக்கையை அவருக்கு பிடித்துக் கொடுத்தேன். தன்னுடைய பையை மடியில் வைத்துக் கொண்டு தடவிப் பார்த்தார். அதில் இரண்டு புத்தகங்களும் இருந்தன.

Friday, January 7, 2011

புத்தகக் கண்காட்சி 2011 - இரண்டாம் நாள்

முதல் நாளிருந்த குளறுபடிகள் ஓரளவிற்கு சரிசெய்யப்பட்டு இருந்தது. உள்ளே நுழைவதற்கு ரூபாய் 5 செலுத்தினேன். உயிர்மை பதிப்பகத்தில் சில புத்தகங்களை பார்வையிடச் சென்றேன். உயிர்மையின் புத்தக விநியோகஸ்தர் தானசேகர் அங்குமிங்கும் ஓடி புத்தகங்களை அடுக்கிக் கொண்டிருந்தார். மூஞ்செலி கருவாடை நுகர்வது போல (சைவமாக இருந்தால் மசால்வடை) ஒரு பையன் எஸ்ரா மற்றும் சுஜாதாவின் புத்தகங்களை பார்த்துக் கொண்டிருந்தான். இருவரும் கொஞ்சமாகவா எழுதி இருக்கிறார்கள்!. சிறுவனின் ஆராய்ச்சியை உங்களின் கற்பனைக்கே விட்டு விடுகிறேன்.

உயிர்மையைக் கடந்து தமிழினி சென்றேன். "காலச்சுமை" - Sold Out என்பதில் மிக்க வருத்தம். இனி அடுத்த பதிப்பு வந்தால் தான் உண்டு. கிழக்கில் கூட அதே பையனை மீண்டும் சந்திக்க நேர்ந்தது. அவனை கடந்து பல அரங்கினுள் நுழைந்து கடைசியாக சந்தியா பதிப்பகம் சென்றேன். சிறிது நேரத்தில் அதே பையன் வந்து சேர்ந்தான். இம்முறை அவனிடம் ஏதாவது பேசியே ஆக வேண்டும் என்று தோன்றியது.

"அந்த கனமான புத்தகம் என்னது?"

அடுத்த நொடி பையிலிருந்த புத்தகத்தை எடுத்து என் கையில் கொடுத்தான். தினத்தந்தி வரலாற்றுச் சுவடுகள்.

"ஒ... உங்களுக்கு வரலாறு பிடிக்குமா?"

"இல்லன்னா எனக்குப் பறவைகள், விலங்குகள் பற்றி படிக்கப் பிடிக்கும். அதைப் பற்றி புத்தகங்கள் கிடைக்கல. வரலாறும் பிடிக்கும். கிழக்கு பதிப்பகம் வெளியிடும் புத்தகங்கள் பிடிக்கும்" என்று மருதன், முத்துகுமார், பாரா எழுதிய புத்தகங்களை குறிப்பிட்டுப் பேசினான். மேலும் ஞாநியின் ஓ பக்கங்களுக்கும் ரசிகனாம். 'தேர்தலில் ஏன் ஓட்டுப் போடவேண்டும்?' என்ற ஞாநியின் கட்டுரையைப் படித்துவிட்டு, அதனை துண்டுச்சீட்டில் அச்சிட்டு தனது நண்பர்களுடன் சேர்ந்து கல்லூரியில் விநியோகம் செய்தானாம். எழுத வேண்டும் என்ற ஆர்வம் வேறு இருப்பதாகக் கூறினான்.

"பிறகு எழுத வேண்டியது தானே?"

"இல்லண்ணா... யார பாக்குறது, எப்படி பேசறதுன்னு தெயயலண்ணா..." என்று அப்பாவித் தனமாகக் கூறினான்.

பறவைகள் பற்றி மா கிருஷ்ணன் எழுதிய புத்தகம்(காலச்சுவடு), பிஞ்சுகள் - கிரா(அன்னம்) ஆகிய புத்தகங்களை வாங்கிக் கொடுத்தேன். இவனை என்ன செய்வது என்று மூளைக்குள் குடைச்சல் ஏற்பட்டது. ஒன்று பாராசூட்டில் கட்டி கிழக்கின் மொட்டை மாடியிலிருந்து தள்ளி விட வேண்டும் அல்லது கல்லைக் கட்டி கேணியில் தூக்கிப் போட வேண்டும். இரண்டில் எதைச் செய்வது என்று யோசித்துக் கொண்டிருந்தேன். பாலு சத்யாவும், பா ராகவனும் கடற்கரைக் காதலர்கள் போல கைவீசி ஜோடியாக நடந்தபடி எதிரில் வந்தனர்.

"கும்பிடப் போன தெய்வம் ... என் குறுக்கே வந்ததையா..." என்றவாறு ஒரு காலைத் தூக்கி, கையைக் கூட நடராஜர் சிலை மாதிரி தூக்கிய பாதத்தை தொட்டும் தொடாமலும் இருக்குமாறு உள்ளங்கையை முறம் மாதிரி வைக்காத குறையாக நின்றேன். இந்த கோலத்தை ராகவன் எப்படி கண்டு பிடித்தாரோ தெரியவில்லை. எங்களைப் பார்த்ததும் சிரித்தார். வேகமாக பேன்ட் பாக்கட்டில் கையை விட்டார். விரல்களுக்கிடையில் சற்றே மினுமினுப்பாகத் தெரிந்தது. பேனா கத்தியாக இருக்குமோ? என்று பாதுகாப்பிற்காக "கனகவேல் காக்க" என முணுமுணுத்தவாறு பின்னால் நகர்ந்தேன். பாலித்தீன் பையில் இருந்த சிகப்பான பொருளை உள்ளங்கையில் கொட்டி வாயில் போட்டுக்கொண்டார். அதன் நெடி தவழ்ந்து வந்து என் மூக்கில் ஏறியது. வந்த தும்மலை கட்டுப்படுத்திக்கொண்டு சிறுவனை அறிமுகப் படுத்தினேன்.

"தம்பி, இவருதாம்பா பாரா. பக்கத்துல இருக்கறது பாலுசத்யா. ரெண்டு பேருமே கிழக்கில் எழுதறாங்க."

"தெரியும்ணா... உங்களுடைய புத்தகம் படிச்சிருக்கேன் சார்" என்றவாறு பாராவிடம் திரும்பினான். அதன் பின் ராகவன் ஒரு கேள்வி கேட்டார். அதுவரை நான் கூட அந்தக் கேள்வியைப் பற்றி யோசிக்கவில்லை. அது எப்படி என்னை விட பாரா புத்திசாலியாக இருக்கலாம். அவர் கேட்ட கேள்வி...

"உன் பேர் என்ன?"

"ஜகன். வேலூர் மாவட்டம்..." என்று அவன் சொல்லியபோது நான் குறுக்கிட்டேன். "எப்படியும் இவனோட பேர மறந்துடுவிங்க. பிறகு எதுக்கு கேக்குறீங்க?" என்றேன். பாராவை மடக்கிய மெதப்பில் சிரித்தேன்.

வாயில் போட்ட சிகப்புப் பொருளை ஒரு பக்கமாக ஒதுக்கியவாறு "இது என் சொந்த தம்பியோட பேரு கண்டிப்பா ஞாபகம் இருக்கும்" என்றார். தொடர்ந்து என்னைப் பார்த்து...

"இந்த மாதிரி ஆளுங்கள நீ எங்கடா புடிக்கிற?" என்றார்.

"மிஸ்டர் ராகோவன், இதெல்லாம் பாசத்தால சேத்தே கூட்டோம்..." என்றேன்.

ஞாயமாக அவருடைய காதிலிருந்து வழிந்திருக்க வேண்டிய தாம்பூல செங்குருதி, இதழ்களை மீறி வெளியில் வந்து மின்னியது. அது என் முகத்திற்கு இடம்பெயரும் முன் அங்கிருந்து கிளம்பினேன்.

ஞானபானுவின் கடைவாசல் திறந்து ஞாநி அமர்ந்திருந்தார். குழந்தைப் பருவம் அழகெனில், இரண்டாம் குழந்தைப் பருவம் அதைவிட அழகு. ஞாநி கண்ணைக் கவரும் குர்தா அணிந்திருந்தார். அருகில் சென்று "உங்களுடைய இளம் வாசகர்" என்று அறிமுகப் படுத்தினேன். நெஞ்சில் கைவைத்து அவருடைய காதருகே தட்டுத் தடுமாறி பையன் ஏதோ சொல்லிக் கொண்டிருந்தான்.

ஞாநி, தேர்தல் குறித்த உங்களுடைய கட்டுரையின் முக்கியமான குறிப்புகளை, "ஏன் ஓட்டுப் போட வேண்டும்?" என்று கையடக்க துண்டுச் சீட்டில் அச்சிட்டு அவனுடைய கல்லூரியில் விநியோகித்து இருக்கிறான் என்றேன். நெருக்கமான புன்னகையுடன் அவனைப் பார்த்தார். "அவசியம் கேணிக்கு அழைத்து வாருங்கள் சந்திக்கலாம்" என்றார். சிறிய ஓட்டெடுப்பில் பங்கெடுத்துவிட்டு அங்கிருந்து கிளம்பினோம்.

மருதன் கிடைத்தால் அறிமுகப்படுத்தலாம் என்று கிழக்கு நோக்கி சென்றேன். முத்துக்குமாரின் தோலில் கைபோட்டபடி நின்று கொண்டிருந்தார். முதுகைச் சொறிந்தேன். இருவரும் திரும்பினர். ஒரே சொறியில் இரண்டு முகங்கள்.

"இவர் உங்களோட வாசகர்" என்று அறிமுகப்படுத்தினேன். இருவரும் நேசமுடன் கைகுலுக்கினர். பையனுக்கு அளவில்லாத மகிழ்ச்சி. "ஹே... இவங்களோட எந்த புத்தகத்தை படிச்சிருக்க சொல்லு? என்று மிரட்டினேன்.

"அதெல்லாம் கேட்கக் கூடாதுங்க..." என்று முத்துக்குமார் கண் சிமிட்டினார்.

சிறிது நேர உரையாடல் முடித்து அங்கிருந்து புறப்பட்டோம். உயிர்மையில் எஸ்ரா இருக்கிறாரா என்று பார்க்கச் சென்றோம். 6 மணிக்கு மேல் வருவார் என்று தனசேகர் தெரிவித்தார். அதுவரை பொறுமை இல்லாததால் வீட்டிற்குப் புறப்பட்டோம்.

"அண்ணா... உங்களைப் பார்த்ததில் ரொம்ப சந்தோசம்ணா... இதெல்லாம் நடக்கும்னு நெனைக்கவே இல்லண்ணா..."

"எனக்கும் உன்னைப் பார்த்ததில் ரொம்பரொம்ப சந்தோசம்."

"மருதன் நல்லா எழுதராருண்ணா. ஒவ்வொரு புத்தகத்தின் பின்னாடியும் 50 புத்தகம் Reference கொடுக்கராருண்ணா" என்றான்.

"மருதன் மாதிரியே நெறைய பேரு எழுதறாங்க தம்பி. நேரம் இருந்தால் அவங்களைக் கூட படிங்க... ஆமா, அது எப்படி கிழக்கு புத்தகங்கள் உங்களுக்குத் தெரிய வந்தது?"

"ரேடியோவுல விளம்பரம் வருமே..."

20 வயது மட்டுமே பூர்த்தியான பையனின் பதில் இது. சரியான முறையில் விளம்பரம் செய்தால் புத்தகங்கள் அனைத்தும் விலைபோகும் என்பதற்கு உதாரணம் இந்த பதில். இதர பதிப்பகங்களும் முழித்துக் கொண்டால் சரி.

Thursday, January 6, 2011

புத்தகக் கண்காட்சி 2011 - முதல் நாள்

நுழைவுச்சீட்டு வாங்கிக் கொண்டுதான் உள்ளே செல்ல நினைத்தேன். டிக்கெட் கௌண்டரில் யாருமே இல்லை. போலீஸ் மாமாவிடம் விசாரித்ததில் "அதெல்லாம் இன்னைக்குக் கிடையாது உள்ள போங்க" என்றார். புதுப்பெண்ணை அலங்கரிப்பதைப் போல முதல்நாள் அரசு விழாவுக்கான மேடை தயாராகிக் கொண்டிருந்தது. ஒரு சுற்று சுற்ற உள்ளே சென்றேன். அங்கிங்கெனாதபடி எங்கும் புத்தகங்கள். ஆனால் எந்தப் பதிப்பகம்? எத்தனையாவது அரங்கு? என்பதெல்லாம் தெளிவில்லாமல் இருந்தது. கால் போன போக்கில் சென்ற பொழுது கிழக்கின் அரங்கு தென்பட்டது.

ஹரன்பிரசன்னாவின் விரல்கள் காற்றில் எதையோ தேடிக்கொண்டிருக்க, விட்டத்தைப் பார்த்து மந்திரம் ஓதுவது போல முணுமுணுத்துக் கொண்டிருந்தார். கவிஞர்களின் செயல்களை ஆராய்வதற்கில்லை. பாராவின் "காஷ்மீர்" கிடைத்துவிட்டது. பத்ரியின் "ஸ்பெக்ட்ரம் சர்ச்சை" கிடைக்கவில்லை. இரண்டு நாட்களுக்கு முன்பு விமலாதித்த மாமல்லன் புத்தக வெளியீட்டில் பாராவை சந்திக்க நேர்ந்தது. அலகிலா விளையாட்டு புத்தக சந்தையில் கிடைப்பது சந்தேகம் தான் என்றார். அதையும் மீறி நாவலை அச்சில் பார்த்தது மகிழ்வாய் இருந்தது. புத்தகத்திற்கான பணத்தைக் கொடுக்க பிரசன்னாவிடம் நெருங்கினேன்.

"வாங்க Sir..." என்றார்.

"நான் Sir இல்ல... கிருஷ்ணபிரபு..."

அவருடைய வேலையில் குறியாக பணத்தை வாங்கி பெட்டியில் போட்டுக் கொண்டார். தோளை யாரோ தொடுவதை உணர்ந்தேன். திரும்பிப் பார்த்தால் பத்ரி. உடன் மருதனும் நின்றுகொண்டிருந்தார். அவர்களிடம் பேசிவிட்டு அங்கிருந்து புறப்படும் பொழுது மருமகனிடமிருந்து அழைப்பு வந்தது.

வெளியில் வந்தால், இந்திரா பார்த்தசாரதியின் படைப்புகளை ஆராய்ச்சி செய்து டாக்டர் பட்டம் வாங்கிய, அமுதசுரபியின் ஆசிரியர் திருப்பூர் கிருஷ்ணன் நின்று கொண்டிருந்தார். குண்டு வெடித்துவிடுமோ என்று அரசியல் மேடைக்கு அருகில் செல்ல பயப்படுபவன் நான். இருந்தாலும் அவரிடம் சென்று பேசினேன்.

"உங்களை டேஃக் சென்டரில் பார்த்திருக்கிறேன். அருமையாக கதை சொல்கிறீர்கள்."

"ஒ சரி சரி... நீங்க என்ன பண்றீங்க..."

"சும்மா தான் இருக்கேன்."

தனது பையிலிருந்த அமுதசுரபி இதழின் பிரதியைக் கொடுத்து, "அலுவலகத்துக்கு வாங்க நிறைய பேசலாம்" என்று கிளம்பினார். புராண கதைகளில் வரும் உளவுபார்ப்பவர்கள் ராஜாவிடமிருந்து முத்திரை மோதிரத்தை வாங்குவது போல வாங்கிக்கொண்டேன். மருமகனை அழைத்துக்கொண்டு மீண்டும் உள்ளே சென்றேன். அவனுடைய நண்பருக்கும் சேர்த்து சில புத்தகங்கள் வாங்க வேண்டியிருந்தது.

காலச்சுவடை நெருங்கும் பொழுது கவிஞர் சுகுமாரன் நின்று கொண்டிருந்தார். "இவர் தாண்டா மதிலுகள் மொழிபெயர்ப்பாளர்" என்று மருமகனுக்கு அறிமுகப்படுத்தினேன். கூச்சம் அவனுடைய முகத்தில் நிழலாடியது. "பாத்துமாவின் ஆடு, ஆமென், பூக்கள் உறங்கும் நேரம், தாய்ப்பால், மீஸான் கற்கள், பால்யகால சகி, மதிலுகள், சப்தங்கள்" போன்ற புத்தகங்களை வாங்கிக் கொண்டு க்ரியா சென்றோம். திலீப் குமாரின் "கடவு" வாங்கிக்கொண்டு மீண்டும் கிழக்கு அரங்கிற்கு வந்தோம்.

குழந்தை வளர்ப்பு புத்தகங்களைத் தேடிக்கொண்டிருக்கும் பொழுது எங்கேயோ கேட்ட குரல். நிமிர்ந்து பார்த்தால் பா ராகவன். மருமகனைக் கூப்பிட்டு அறிமுகம் செய்தேன்.

"பாரா கூட ஏதாவது பேசப் போறயாடா?" என்றேன்.

கூச்சத்தில் வெளிறி தலை கவிழ்ந்தான். பாரா எங்களிடமிருந்து நகர்ந்த பொழுது, "அவர் எல்லா எடத்துக்கும் போயிட்டு வந்து அலகிலா விளையாட்டு எழுதினாரா மாமா?" என்றான்.

"அவரிடமே கேட்க வேண்டியதுதானே?" என்று மீண்டும் பாராவை அழைத்து அவனிடம் நிறுத்தினேன். அதைப்பற்றி அவர்கள் ஏதோ பேசிக் கொண்டிருக்க நண்பர் சலீமுக்காக நிலமெல்லாம் ரத்தம், மாயவலை ஆகிய புத்தகங்களை வாங்கிக்கொண்டு வீட்டிற்குச் செல்ல வெளியில் வந்தோம். இறுதியாக புறப்படும் பொழுது வெங்கட் செல்பேசியில் அழைத்தார்.

"டேய்... புத்தக கண்காட்சிக்கு ஜெயாவோட வந்திருக்கேன்... நீ எங்க இருக்க?"

மாமாவா என்னுடன் பேசியது!? விடுமுறை நாட்களில் நானோ? அக்காவோ? புத்தகம் படிக்க நேர்ந்தால், வலது காலால் என்னையும் இடது காலாம் அக்காவையும் விசைகொண்டு உதைப்பவர். அவரே தொடர்ந்து பேசினார்.

"Entrance-ல இருக்கேன் வந்து பாரு."

"என்ன வெங்கட் ஆச்சர்ய படுத்துறீங்க? வேலைக்குப் போகலையா?" என்றேன்.

"ஆபீஸ்ல இருந்து சீக்கிரமா கிளம்பிட்டோம்டா? ஏதாவது புக்ஸ் இருக்கான்னு பாக்க வந்திருக்கோம்."

எனக்கான ஆச்சர்யம் பல மடங்கானது. என்னுடைய அக்காவிற்கு எழுத்தாளர் ரமணி சந்திரன் மிகவும் பிடிக்கும். அதன் பிறகு அ முத்துலிங்கம் அதிகம் வாசிப்பாள். சமீபமாக பா.ராகவன் இணையத்தில் எழுதுவதை விரும்பிப் படிக்கிறாள்.

"பா ராகவன் இருக்காரு ஜெயா. அவரோட பேசறயா?"

"Oh Yes நிச்சயமா..."

பா ராகவனை நெருங்கும் பொழுது விமலாதித்த மாமல்லனுடன் பேசிக்கொண்டிருந்தார். ஒருவேளை இலக்கிய குஸ்தியாக இருக்குமோ? என்று தயங்கினேன். நீண்ட தவத்தைக் களைத்த பாராவை இலக்கியக் கூட்டங்களில் வேறு பார்க்க முடிகிறது. எனினும் இடையில் குறுக்கிட்டு அக்காவிற்கு அறிமுகப் படுத்தினேன்.

பரவச தயக்கம் நீங்கி இயல்பான பேச்சு வெளிப்பட்ட பொழுது அவருடைய எழுத்தில் தனக்குத் தெரிந்த குறையைத் தெரிவித்தாள்.

அடடா... ராகவன் எப்படி எடுத்துக்கொள்ளப் போகிறாரோ என்று நினைத்த நேரத்தில் ஆராய்ச்சி மாணவனின் தீவிர கவனிப்போடு அக்காவின் வார்த்தைக்கு செவி கொடுத்தார்.

"நீங்க சொல்ற குணம் எழுத்ததாளனுக்கு இருக்கலாம், ஆனால் எழுத்தில் தெரியக் கூடாது. அப்படி இருந்தால் அதை சரி செஞ்சிடனும்." என்று விருப்பத்துடன் மென்மையாகப் பேசினார். மாமல்லன் அருகில் இருந்ததால் நிறைய நேரம் பேச இயலவில்லை. வேறொரு நாள் அவரிடம் பேசலாம் என கிளம்பினோம்.

நானும் அக்காவும் காலச்சுவடை நோக்கிச் செல்ல. வெங்கட் ஜே.கிருஷ்ண மூர்த்தி, புத்தா என தத்துவங்களை தேடிக்கொண்டிருந்தார். கிடைக்கும் புத்தகத்தை பிரித்து வைத்துக்கொண்டு தவம் செய்வது போல நின்றுவிடுகிறார். சமயத்தில் நாலு கால் பாய்ச்சலில் ஓடிவிடுகிறார்.

"என்ன ஜெயா இது? மனுஷன், நம்மள விட மோசம் ஆயிட்டாரு!"

"எனக்கே தெரியலடா. இப்பல்லாம் புத்தகம் கையுமா தாண்டா அலையறாரு..." என்று மாமாவைப் பின்தொடர்ந்து அக்கா ஓடினாள். அவர்களுக்கு நான் கையசைத்ததை இருவருமே பார்க்கவில்லை. அசைத்த கையை அசைத்தவாறே திரும்பினேன். மீண்டும் கவிஞர் சுகுமாரன். நாளைக்குப் பார்க்கலாம் சுகுமார்ஜி.

"இன்னைக்கே திருவனந்தபுரம் போறேன்."

"அப்போ, எனக்கு ஓர் உதவி செய்ய முடியுமா?" என்று கேட்டேன்.

"சொல்லுங்க..." என்றார்.

காதோடு காதாக, என்னுடைய விருப்பத்தைத் தெரியப்படுத்தினேன். என்னிலிருந்து விலகி கண்ணிமைகளை மெதுவாக மூடி, தலையை ஒருபுறம் சாய்த்து, சப்தம் எழாமல் உதடுகளை வெட்டிச் சிரித்தார். அதற்கான அர்த்தம் எனக்குத் தெரியும். மின்னஞ்சலை சரிபார்க்கக் கிளம்பினேன்.