Thursday, January 13, 2011

புத்தகக் கண்காட்சி 2011 - 9ஆம் நாள்

க்ரியா பதிப்பகத்திற்குச் சென்று ஆசைத்தம்பியுடன் நேரத்தைச் செலவிட நினைத்திருந்தேன். இரண்டாம் நாள் சந்தித்த ஜெகந் மற்றும் கோயம்புத்தூர் ஆங்கிலப் பதிவரும் மாணவருமான உமேஷ் என்னுடன் இணைந்து கொண்டார்கள். க்ரியாவின் அரங்கை நெருங்கும் பொழுது கவிஞர் ஆசைத்தம்பி ஒரு முதியவருடன் வந்து சேர்ந்தார். அவருக்கு 85 வயது இருக்கும்.

"இவரிடம் தற்போது பதிப்பில் இல்லாத பல அறிய புத்தகங்கள் இருக்கிறது. இந்த வயதிலும் வேலை செய்ய அண்ணா நகரிலிருந்து எழும்பூருக்கு தினமும் பேருந்தில் செல்கிறார்" என்று ஆசைத்தம்பி அறிமுகம் செய்து வைத்தார். நான் திகைப்புடன் முதியவரைப் பார்த்தேன். நாற்காலியில் உட்கார்ந்திருந்தாலும் அவருடைய கையும், உடலும் ஓயாமல் ஆடிக் கொண்டிருந்தது. காகிதக் கோப்பையிலுள்ள தேநீரைப் பருகியவாறே தலையை உயர்த்தி நிமிர்ந்து பார்த்தார்.

அகராதியில் உள்ள வார்த்தைகளுக்காக எந்த மாதிரியான உழைப்பு தேவைப்படுகிறது என்பதைத் தெரிந்து கொள்ளத்தான் ஆசைத்தம்பியை சந்திக்க நினைத்தேன். அவர் முதியவருடன் பேசிக் கொண்டிருந்ததால் அங்கிருந்து கிளம்பினேன். வழியில் என்னுடைய கல்லூரித் தோழன் பிரபாவை சந்திக்க நேர்ந்தது. சென்னை பல்கலைக் கழகத்தில் தமிழ் எழுத்துரு பாடத்தில் டாக்டர் பட்டம் வாங்கியவன். அவசரமாக சென்னை சங்கமத்திற்கு செல்வதாகக் கூறினான். அவனுக்கு விடை கொடுத்து ஆழி பதிப்பகம் சென்றேன்.

ஆழி செந்தில்நாதனை இந்த புத்தகக் கண்காட்சியில் அவசியம் சந்திக்க நினைத்திருந்தேன். இரண்டு நாட்களாகவே அவரைத் தேடிச்சென்று பார்க்கக் கிடைக்காமல் திரும்பியிருந்தேன். "சீன எழுத்துக்களைக் கற்றுக்கொடுக்க முடியுமா?" என்று மா சிவக்குமாரிடம் நீண்ட நாட்களுக்கு முன்பு அணுகிய பொழுது இவரை பற்றிக் குறிப்பிட்டார். அதுமட்டுமல்ல காரணம். இவருடைய 'டிராகன் - சீன வரலாறு' என்ற புத்தகத்தைப் பற்றியும் பேச நினைத்திருந்தேன். தமிழில் வந்திருக்கும் சீன வரலாறு சமந்தமான மிக முக்கியமான புத்தகம். "காஷ்மீர்" என்று சந்திரன் எழுதிய வரலாறு புத்தகமும் இவர்களுடைய முக்கியமான ஆக்கம். வரலாறு படிப்பதில் விருப்பமுள்ளவர்களுக்கு இந்த இரண்டு புத்தகங்களையும் கண்களை மூடிக்கொண்டு பரிந்துரைக்கிறேன்.

நல்ல வேலையாக செந்தில் நாதன் ஆழி அரங்கில் காணக் கிடைத்தார். அவரிடம் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தேன். மொழி பெயர்ப்பு குறித்த ஒரு சில விஷயங்களைப் பகிர்ந்து கொண்டார். "சீன மொழி சம்மந்தமாக உங்களை சந்தித்துப் பேச வேண்டும்? அலுவலகத்திற்கு வந்தால் நேரம் கொடுப்பீர்களா?" என்று கேட்டுக் கொண்டேன்.

"தாராளமாக வாருங்கள்" என்று அவருடைய விசிட்டிங் காரட்டைக் கொடுத்தார்.

அங்கிருந்து கிளம்பும் பொழுது எழுத்தாளர் திலீப்குமார் எதிரில் வந்தார். பேசுவதற்கு வாயைத் திறக்கும் முன், "சொன்னாங்க... சொன்னாங்க... அப்பவே கண்டுபுடிச்சிட்டேன், நீங்களாகத் தான் இருக்கணும்னு..." என்றார்.

"யார் சொன்னாங்க? என்ன சொன்னாங்க திலீப்ஜி?"

"முதல் புத்தகம் வாங்கினவருடைய அடையாளத்தைச் சொன்னாங்க. அப்பவே கண்டுபிடிச்சிட்டேன்" என்று சிரித்துக் கொண்டே தனது விசிட்டிங் கார்டைக் கொடுத்தார்.

"...."

"நேரம் இருக்கும் பொழுது இந்த முகவரிக்கு ஃபோன் பண்ணிட்டு வாங்க பேசலாம். ஆனால் இப்போ வேண்டாம். உடம்பு சரியில்லை. கொஞ்சம் டைம் எடுத்துட்டு வாங்க" என்றார்.

தனியாக வந்து சந்திக்குமாறு அழைப்பு விடுப்பார் என்று நான் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. எவ்வளவு பெரிய எழுத்தாளர். எவ்வித டாம்பீகமும் இல்லாமல் ஒரு எளிய வாசகனுக்கு எவ்வளவு பெரிய மரியாதையைக் கொடுக்கிறார் என்று நினைத்துக் கொண்டேன்.

"நிச்சயம் திலீப்ஜி. அது எனக்கான மகிழ்ச்சி. சிறுகதைத் தொகுதி கிடைக்கலன்னு பார்க்கும் இடத்திலெல்லாம் எத்தனை முறை உங்களை சிரமப்படுத்தி இருக்கிறேன்." என்று அவரிடம் சொல்லிவிட்டுச் சிரித்தேன். எழுத்தாளர் பிரபஞ்சனுடைய புத்தகம் காலச்சுவடில் வெளியிடுவதால் திலிப்ஜியிடம் விடை பெற்றுக்கொண்டு அங்கு சென்றேன். தென்னாப்பரிக்க பெண் கவிஞர்களின் கவிதையையும் சேர்த்து அங்கு வெளியிட்டார்கள். தேவி பாரதி, ரவி, பிரபஞ்சன், காலச்சுவடு கண்ணன், தமிழ்நதி போன்ற பலர் இருந்தார்கள். யாரும் எனக்கு அறிமுகம் இல்லாததால் நிகழ்ச்சி முடியும் வரை அங்கிருந்துவிட்டுக் கிளம்பினேன்.