Thursday, December 11, 2014

புக் லிஸ்ட் 2014 – ஒரு கண்ணோட்டம்


வாசிக்க விருப்பப்பட்டு ஒவ்வொரு வருடமும் புத்தகக் கண்காட்சியில் வாங்கிய புத்தகங்கள் – தூசு படிய அலமாரியில் தூங்கிக் கொண்டிருப்பது - ஒருவிதக் குற்ற உணர்வை தவறாமல் ஏற்படுத்தும். வேறுவழியும் இல்லை, ஆகச் சோம்பேறியாக இருப்பவர்கள் இதனைக் கடந்து தான் ஆக வேண்டும். எனினும், இந்த ஆண்டு வேண்டிய மட்டும் சில புத்தகங்களை நுனிப்புல் மேய்ந்தது மகிழ்ச்சியான விஷயம். நாவல்களும் தன்வரலாற்றுப் புத்தகங்களுமே இவ்வருடம் எனது தேர்வாக இருந்தது. ஒருசில கட்டுரைத் தொகுப்புகளையும் படிக்க வேண்டும் என்று நினைத்திருந்தேன். நல்லதொரு மழைநாளில், இரவு நேரப் பயணத்தில் எதிர்பாராத விதமாக சிறியதொரு விபத்து ஏற்பட்டது. விபத்து என்னவோ மிகச் சிறியது. கண்களுக்குக் கீழுள்ள பகுதியில் பாதிப்பு ஏற்பட்டதால், இரண்டு மாதங்களுக்குப் பூரண ஓய்வில் இருக்கும்படி பரிசோதித்த மருத்துவர் கேட்டுக் கொண்டார். 

இரண்டு மாதங்கள் ஓய்வில் இருப்பதென்பது என்னால் நினைத்துக் கூடப் பார்க்க முடியாத ஒன்று. மருத்துவரிடம் இரண்டு கேள்விகளை முன் வைத்தேன்:

“டாக்டர்... நான் காலையும் மாலையும் ரெண்டு மணிநேரம் வாக்கிங் போகலாமா?”

“ஓ... தாராளமா போங்க...”

“டாக்டர்... ஒரு சின்ன கமிட்மென்ட்ல மாட்டிக்கிட்டேன். நான் புக்ஸ் படிக்கலாமா?”

“கொஞ்சம் போல படிக்கிறதுல பிரச்சனை ஒன்னும் இல்ல... ரொம்ப ஸ்ட்ரெய்ன் பண்ணிக்காதீங்க...” என்றார்.

புத்தகங்களை முகத்திற்கு நேரே வைத்துக் கொண்டு படிக்காமல், தலைக்கு மேலே தூக்கிப்பிடித்தவாறு - ஒரு விநோதக் கோணத்தில் வைத்துக்கொண்டு படிக்குமாறு மருத்துவர் அறிவுறுத்தினார். நானும் முயற்சி செய்து பார்த்தேன். கழுத்து வலி வந்ததுதான் மிச்சம். கருவிழியை மேல்நோக்கி வைத்துப் படித்ததால் கண்ணிலும் வலி ஏற்பட்டது. இப்பொழுது ஓரளவிற்குப் பரவாயில்லை. முகத்திற்கு நேரே புத்தகத்தை வைத்துக்கொண்டு படிப்பதற்குத் தயாராகிவிட்டேன்.

இரண்டு மாத ஓய்வு கற்பித்துச் சென்ற அனுபவ பாடம் அளப்பரியது. நண்பனும், அரசுப் பள்ளி ஆசிரியனுமான சரவணனுடன் காலையும் மாலையும் நடை சென்றது மட்டுமே மனதிற்குப் புத்துணர்ச்சி தரக்கூடியதாக அமைந்த நேரங்கள். கண் பரிசோதனை மேற்கொண்ட இடத்தில் ஒரு சின்ன அனுபவம். என்னருகில் சினிமாக் கதாநாயகன் போல, மூக்கும் முழியுமாக ஒரு வடஇந்திய நண்பர் உட்கார்ந்திருந்தார். நண்பருக்கு முன்னால் மருத்துவரைப் பார்க்க எனக்கு தான் அனுமதி இருந்தது. இருக்கையின் நுனியில் பொறுமையில்லாமல் அவர் உட்கார்ந்திருந்தார். வெளிப்படுத்த முடியாத தவிப்பில் வேறு இருந்தார். அவரிடம் கேட்டேன்:

“Actually what’s your problem?”

நண்பருக்கு ஆங்கிலம் தெரியவில்லை என்றாலும் கேட்ட கேள்வியின் அர்த்தம் அவருக்குப் புரிந்தது. பிரச்சனை இதுதான். நண்பர் நகைகளைச் செய்யக்கூடிய பொற்கொல்லர். மகாராஷ்டிரம் சொந்த மாநிலம். விபத்தொன்றில் அவரது முன் நெற்றியில் அடிபடவும், கண்களுக்குச் செல்லும் முக்கிய நரம்பொன்று பாதிப்படைந்து பார்வைக்குத் தெரியும் காட்சிகள் யாவும் இரண்டிரண்டாகத் தெரிகின்றன. இயல்பான பார்வை தனக்குத் திரும்புமா என்பது தான் அவரது கவலை.

“You don’t worry friend. I also met with an accident and have some vision probs. We have an advanced technology to cure any type of vision problem. நீங்க என்ன நம்பனும்” என்று அவரிடம் கூறியதெல்லாம் ஒன்றும் எடுபடவில்லை, வெற்று வார்த்தைகளாகின. “சரி... நீங்க இவ்வளோ பதட்டத்தோட இருக்கீங்கன்னா... எனக்கு முன்னால நீங்க டாக்டர பாருங்க” என்று முன்னிருக்கையில் நண்பரை அமர வைத்தேன். ஆரம்பத்தில் சங்கடப் பட்டு முன்னே செல்ல மறுத்தவர், வாய்ப்பின் முக்கியத்துவம் கருதி மிகவும் மகிழ்ந்தார். அமர வைத்த சில நிமிடங்களில் நண்பரை உள்ளே அழைத்தார்கள். இருபது நிமிடங்களுக்கு மேலாக நானும் நண்பருக்காகக் காத்திருந்தேன். வெளியில் வந்தவர் புன்னகை சிந்தி, கை குளுக்கிவிட்டு மகிழ்ச்சியுடன் கடந்து சென்றார். மருத்துவர் ஒன்றும் எல்லாம் வல்ல கடவுள் இல்லையே! நண்பருடைய பிரச்னையை முழுதாகத் தீர்த்துவைப்பாரா என்றும் சொல்லுவதற்கில்லையே!. பிரச்னையை சமாளிக்க சிறப்புக் கண்ணாடியை மருத்துவர் வழங்கலாம். எனினும் கண்ணாடியைக் கழட்டினால் நண்பருக்கு உலகமே டபுள் டபுளாகத் தெரியும். ஒரு பொற்கொல்லருக்குப் பார்வை என்பது எவ்வளவு முக்கியம் என்பதை உங்களுக்கு சொல்லித் தெரிய வேண்டிய அவசியம் இல்லையே. தற்காலிகப் பார்வையை பொற்கொல்லருக்கு மருத்துவர் வழங்கி இருக்கிறார். ஒவ்வொரு தனி மனிதருமே இதுபோன்ற சிக்கல்களுக்கு உள்ளாகி நெருக்குதல்களை சமாளித்துத் தான் முன்னேற வேண்டியுள்ளது.

பார்முலா 1 கார் பந்தைய வீரர் ஷூமாக்கரை உலகமே ஈர்ப்புடன் கவனித்து வந்தது. கார் ஓட்டியவர் பனிச் சருக்கில் ஈடுபட வேண்டிய அவசியம் தான் என்ன? பனிச்சருக்கில் ஈடுபட்ட ஷூமாக்கருக்கு விபத்து நேர்ந்து பல நாட்கள் கோமாவில் இருந்தார். பதினாருபேர் அடங்கிய மருத்துவக்குழு அவரை இராத்திரிப் பகலாகக் கண்காணித்து கோமாவில் இருந்து மீட்டனர். இன்றைய தேதியில் கழுத்துக்குக் கீழுள்ள அவரது உடல்பாகங்கள் செயல்படாது. கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். உலகின் அதிவேக மனிதர் இனி ஆமை வேகத்தில் இயங்க வேண்டிய சூழல். ஒருவருடைய உதவியில்லாமல் ஷூமாக்கர் இனி எங்கும் செல்ல இயலாது என்கிறார்கள். ஷூமாக்கரின் இந்தச் செயலிழந்த நிலையையும் உலகமே கவனிக்கிறது. இங்கு பொற்கொல்லனை கவனிப்பார் உளரோ!? பொற்கொல்லனைப் போன்றவர்களை கவனிப்பாரும் உளரோ!?

வெற்றியாளர்கள் போலவே சராசரி மனிதர்களின் வாழ்க்கையும் சாதனைகள் நிரம்பியவை. அதற்கு உதாரணமாகத் தான் மலையாளத்தில் வெளிவரும் தன்வரலாறுகள் யாவும் நம்மைப் புருவம் உயர்த்த வைக்கின்றன. திருடன், பாலியல் தொழிலாளி, கன்னியாஸ்திரி, போலீஸ் கான்ஸ்டபிள், பெண் காவலர் தொடங்கி – பல்லான படத்தில் நடித்த ஷகிலா வரையும், ஷகிலாவிற்கு டூப் போட்ட துணை நடிகை வரையும் மலையாளத்தில் வெளிவரும் தன்வரலாறுகள் சக்கைபோடு போடுகின்றன. சராசரி மக்களின் வாழ்க்கை அனுபவங்கள் யாவும் புத்தகமாக அச்சாகின்றன. அதில் சில புத்தகங்கள் ஜனரஞ்சக இதழ்களில் தொடராக வெளிவந்த பதிவுகள். உலகின் உன்னதமான உச்சப் புனைவுகளையும் தூக்கிச் சாப்பிடக் கூடிய நிஜக் கதைகள் தாம் இவை.

நம்மூரில் இன்னும் கூட ஆரூர் தாஸ், இளையராஜா, பாகவதர் கொலைவழக்கு போன்றவற்றையே கட்டிக்கொண்டு அழுகிறோம். (பார்க்க தினத்தந்தி) இதெல்லாம் கூட தெரிந்துகொள்ள வேண்டிய விஷயங்கள் தாம் என்பதை மறுப்பதற்கில்லை. வெற்றியாளர்களின் சாகசப் பிரகடனங்களை விட, பிரபலங்களின் வாழ்வியல் வீழ்ச்சியை விட, சக எளிய மனிதர்களின் வாழ்வியல் நெருக்குதல்களைத் தாங்கிச் செல்லும் சராசரி அனுபவங்கள் நம்மைச் சில்லிட வைக்கின்றன. அந்த வகையில் கீழ்கண்ட புத்தகங்கள் யாவும், அதனதன் தன்மையில் தனித்துவம் வாய்ந்தவை. “நாவல், கவிதை, சிறுகதை” சார்ந்து நிறைய வாசகக் கூட்டங்கள் ஏற்பாடாகிறது. தன்வரலாறு படிப்பவர்கள் எண்ணிக்கையில் அதிகம். அது போன்றவர்கள் கூடிக் குலாவும் வாசகக் கூட்டங்கள் நடப்பதில்லை என்பது வருத்தமே. நான் படித்த சுவாரஸ்யமான தன்வரலாறுகளில் சில:

1. அப்பாவின் துப்பாக்கி – ஹெனர் சலீம் (காலச்சுவடு)
2. பீமாயணம் – ஆனந்த் & குழுவினர் (காலச்சுவடு)
3. பச்சைவிரல் – வில்சன் ஐசக் (காலச்சுவடு)
4. திருடன் மணியன்பிள்ளை – ஜி. ஆர். இந்துகோபன் (காலச்சுவடு)
5. தேவதாசியும் மகானும் – வெங்கடகிருஷ்ணன் ஸ்ரீராம் (காலச்சுவடு)
6. நளினி ஜமீலா – குளச்சல் மு யூசுப் (காலச்சுவடு)
7. தந்தையின் நினைவுக்குறிப்புகள் – குளச்சல் மு யூசுப் (காலச்சுவடு)
8. போரும் அமைதியும் – பத்திநாதன் (காலச்சுவடு)
9. நிழல் வீரர்கள் – ராம் (மதுரை ப்ரஸ், (காலச்சுவடு))
10. தாத்ரிக்குட்டியின் ஸ்மார்த்த விசாரம் – லீலாகிருஷ்ணன் (தமிழினி)
11. எனது நினைவுகள் – போபடி R ஹீரானந்தாணி (சாகித்ய அகாடமி)
12. நினைவலைகள் – பால் தாமஸ் (நெய்தல் வெளியீடு)
13. நான் வாழ்ந்தேன் என்பதற்கான சாட்சி – மக்கள் கண்காணிப்பகம்
14. ஸ்டீவ் ஜாப்ஸ் – அப்பு (மதி நிலையம்)
15. நட்சத்திரக் கணித மேதைகள் – பை கணித மன்றம்
16. சிதம்பர ரகசியம் – பாலச்சந்திரன் சுள்ளிக்காடு (வம்சி)
17. ஆமென் – சிஸ்டர் ஜெஸ்மி (காலச்சுவடு)

காலச்சுவடில் வெளிவந்த கட்டுரைகள் & ஆய்வுக் கட்டுரைத் தொகுப்புகளை வாசிக்க வேண்டிய சூழல் அமைந்தது. பனுவல் புத்தக அங்காடி ஏற்பாடு செய்திருந்த “சமூக நீதி” நிகழ்வுக்காக வேண்டியும் சில கட்டுரைத் தொகுப்புகளைப் படிக்க நேர்ந்தது. வேறுசில பணிகள் இருந்ததால் பனுவலின் “சமூகநீதி” நிகழ்வில் முழுதாகப் பங்கேற்க முடியவில்லை என்பது வருத்தமே. கம்ப்யூட்டர் சார்ந்த புத்தகங்கள் பரிதிக்காக வாங்கியவை. ஆகவே அவற்றையும் ஒருமுறை படித்துவிட்டு பரிதிக்கு அனுப்பினேன். அந்த வகையில் சில புத்தகங்கள்:

1. வியத்தலும் இலமே – அ. முத்துலிங்கம் (காலச்சுவடு)
2. தமிழ்ச் சிறுகதைகள் பிறக்கிறது – சி. சு. செல்லப்பா (காலச்சுவடு)
3. பதிப்புகள் மறுபதிபுகள் – பெருமாள்முருகன் (காலச்சுவடு)
4. கெட்ட வார்த்தை பேசுவோம் – பெருமாள் முருகன் (காலச்சுவடு)
5. சாதியும் நானும் - பெருமாள் முருகன் (காலச்சுவடு)
6. பண்பாட்டு அசைவுகள் – தொ. பரமசிவம் (காலச்சுவடு)
7. தமிழர் உணவு – பக்தவத்சல பாரதி (காலச்சுவடு)
8. சேரன்மாதேவி குருகுலப் போராட்டம் – பழ. அதியமான் (காலச்சுவடு)
9. பசுமைப் புரட்சியின் கதை – சங்கீதா ஸ்ரீராம் (காலச்சுவடு)
10. சகாயம் செய்த சகாயம் – மலைகள் பதிப்பகம்
11. வாளோர் ஆடும் அமலை – தடாகம்
12. தமிழகத்தின் இரவாடிகள் – தடாகம்
13. நறுமணப் பொருட்கள் – கு. சிவராமன் (பூவுலகின் நண்பர்கள்)
14. ஜாதியற்றவளின் குரல் – ஜெயராணி (கறுப்புப் பிரதிகள்)
15. நீங்கள் கண்காணிக்கப்படுகிறீர்கள் – விகடன் பிரசுரம்
16. கூகுள் தேடு – கிழக்கு பதிப்பகம்
17. ஃபேஸ் புக் – கிழக்கு பதிப்பகம்
18. கூகுள் – கிழக்கு பதிப்பகம்
19. ஒப்பன் சோர்ஸ் – கிழக்கு பதிப்பகம்
20. விழுந்த கம்பெனி எழுந்த வரலாறு – கலைஞன் பதிப்பகம்
21. ட்விட்டார் – கிழக்கு பதிப்பகம்

நாவல்கள் வாசிப்பதைப் பெரிதும் விரும்புவேன். சில நாவல்களை மறுபடியும் மறுபடியும் கூட வாசிப்பேன். முன்பெல்லாம், “உலக இலக்கிய வரிசை, குழந்தைகள் இலக்கிய வரிசை” என்று சில புத்தகங்களைக் கொண்டு வருவார்கள். தற்கால தமிழ்ப் பதிப்பக சூழலில், இந்த “கிளாசிக் வரிசை” என்ற வார்த்தை படுகிற பாடு இருகிறதே...! அதைச் சொல்லி மாளவில்லை. நண்பர் காலச்சுவடு கண்ணனிடம் ஒருமுறை எரிச்சலுடன் கேட்டேன்:

“ஏங்கே... புத்தகத்தை வெளியிடுறீங்க சரி? அதென்னங்க கிளாசிக் சிறுகதை, கிளாசிக் நாவல், கிளாசிக் உலக வரிசை, கிளாசிக் கவிதைன்னு ஒரு டேக் வேண்டிக் கெடக்குது?”

“நீங்க என்ன சும்மா போகிற போக்குல விளையாட்டா சொல்லிட்டிங்க! படைப்பிலகியத்தில் ஆளுமை செலுத்தும் பத்து பேருக்கு அழைப்பு விடுத்து, அவர்களை ஓரிடத்தில் ஒருவார காலம் தங்க வைத்து, நல்ல சில புத்தகங்களைத் தேர்வு செய்யச் சொல்லி, அதில் கிளாசிக்கான நாவல்களை மட்டுமே தேர்ந்தெடுத்து காலச்சுவடு பதிப்பகம் ‘கிளாசிக் வரிசை’யைக் கொண்டு வருகிறது. எல்லா புத்தகங்களுக்கும் காலச்சுவடு அப்படி ‘கிளாசிக் டேக்’ கொடுக்கறது இல்லியே...! நண்பர்கள் குழுவாக உட்கார்ந்து விவாதிக்கிறாங்க. அறிமுக வாசகர்களின் புத்தகத் தெரிவுக்காக இந்த மெனக்கெடல் தேவைப்படுது.” என்று பதில் கூறினார்.

“ஓஹோ... சிறுகதையாகட்டும், நவலாகட்டும், கவிதையாகட்டும், மொழிபெயர்ப்பாகட்டும் - இந்த கிளாசிக் என்ற வார்த்தைக்குப் பின்னால் இவ்வளோ மெனக்கெடல்கள் இருக்கிறதா?” என்று நினைத்துக் கொண்டேன். ஆகவே, தமிழின் கிளாசிக் நாவல்களாகக் கருதப்படும் சில நாவல்களை இந்த வருடத்தில் ஒரு ஓட்டு ஓட்டினேன். அந்த வகையில் கிளாசிக் லேபிள் ஓட்டப்பட்ட மற்றும் ஓட்டப்படாத நாவல்களில் ஒருசில கீழே...

1. மாதொருபாகன் – பெருமாள்முருகன் (காலச்சுவடு)
2. பூக்குழி – பெருமாள்முருகன் (காலச்சுவடு)
3. சாய்வு நாற்காலி – தோப்பில் முகமது மீரான் (காலச்சுவடு)
4. தலைகீழ் விகிதங்கள் – நாஞ்சில் நாடன் (காலச்சுவடு)
5. தலைமுறைகள் – நீல. பத்மநாபன் (காலச்சுவடு)
6. கோபல்ல கிராமம் – கி.ரா (காலச்சுவடு)
7. பனி – ஓரான் பாமுக் (காலச்சுவடு)
8. நெடுஞ்சாலை – கண்மணி குணசேகரன் (தமிழினி பதிப்பகம்)
9. ரத்த உறவு – யூமா வாசுகி (தமிழினி)
10. மீஸான் கற்கள் – புனத்தில் குஞ்சப்துல்லா (காலச்சுவடு)
11. நிழல் முற்றம் – பெருமாள்முருகன் (காலச்சுவடு)
12. அஞ்சலை – கண்மணி குணசேகரன் (அருள் புத்தக நிலையம்)
13. ஆளண்ட பட்சி – பெருமாள்முருகன் (காலச்சுவடு)
14. வெல்லிங்டன் – கவிஞர் சுகுமாரன் (காலச்சுவடு)
15. அம்மா வந்தாள் – தி. ஜானகிராமன் (காலச்சுவடு)
16. பசித்த மானுடம் – கரிச்சான் குஞ்சு (காலச்சுவடு)
17. வாடிவாசல் – சி. சு. செல்லப்பா (காலச்சுவடு)
18. மானசரோவர் – அசோகமித்திரன் (கிழக்கு பதிப்பகம்)
19. ஆகாயத் தாமரை – அசோகமித்திரன் (கிழக்கு பதிப்பகம்)
20. உம்மத் – ஸர்மிளா சையத் (காலச்சுவடு)
21. மஸ்ஷர் பெருவெளி – புனத்தில் குஞ்சப்துல்லா (காலச்சுவடு)
22. நிழலின் தனிமை – தேவிபாரதி (காலச்சுவடு)
23. 18-வது அச்சக்கோடு – அசோகமித்திரன் (காலச்சுவடு)
24. அவஸ்தை – யு. ஆர். ஆனந்த மூர்த்தி (காலச்சுவடு)
25. சிவப்புத் தகரக் கூரை – நிர்மல் வர்மா (காலச்சுவடு)
26. கீதாரி – சு. தமிழ்ச்செல்வி (NCBH)
27. மீன்குகைவாசிகள் – கீரனூர் ஜகீர்ராஜா (ஆழி பதிப்பகம்)
28. தனிமையின் நூறுஆண்டுகள் – காப்ரியேல் கார்சியா மார்க்கோஸ்
29. அஜ்னபி – மீரான் மைதீன் (காலச்சுவடு)
30. ஆத்துக்குப் போகணும் – காவேரி (காலச்சுவடு)
31. தேவதாஸ் – சரத் சந்திர சட்டோபாத்யாயா (காலச்சுவடு)
32. குற்றவிசாரணை – லெ – கிளேஸியோ (காலச்சுவடு)
33. பாதையில் பதிந்த அடிகள் – ராஜம் கிருஷ்ணன் (காலச்சுவடு)
34. குதிரை வேட்டை – பெர் பெதர்சன் (காலச்சுவடு)
35. செம்பருத்தி – தி. ஜானகிராமன் (காலச்சுவடு)
36. ஓதி எறியப்பட்ட முட்டை – மீரான் மைதீன் (காலச்சுவடு)
37. என் பெயர் ராமசேஷன் – ஆதவன் (உயிர்மை)
38. காகிதமலர்கள் – ஆதவன் (உயிர்மை)
39. மஞ்சள் வெயில் – யூமா வாசுகி
40. விஷ்ணுபுரம் – ஜெயமோகன் (கவிதா பதிப்பகம்)
41. கள்ளிக்காட்டு இதிகாசம் – வைரமுத்து (திருமகள் நிலையம்)
42. கனக துர்கா – பாஸ்கர் சக்தி (வம்சி பதிப்பகம்)
43. வீட்டின் மிக அருகில் மிகப்பெரும் நீர்ப்பரப்பு - ரேமன்ட் கார்வார்
44. நினைவுதிர் காலம் – யுவன் சந்திரசேகர் (காலச்சுவடு)
45. பயணக் கதை – யுவன் சந்திரசேகர்
46. பெரியார் ரசிகன் – குகன் (உதயக்கண்ணன் பதிப்பகம்)

நாடகம்:

1. சீதை ஜோசியம் – சாகித்ய அகாடமி
“இந்தப் புத்தகங்களை எல்லாம், இந்த ஒரு வருட காலத்தில் நுனிப் புல் மேய்ந்திருக்கிறேன்” என்பதில் மட்டற்ற மகிழ்ச்சி. இவற்றிலுள்ள பல புத்தகங்கள் வாசகப் பிரியர்கள் அவசியம் படித்து மகிழவேண்டிய புத்தகங்கள் கூட.

கவிஞர் சுகுமாரனைச் சந்தித்தபோது பஷீரின் புத்தகமொன்றை மொழிபெயர்த்துக் கொண்டிருப்பதாகக் கூறினார். ஜி. குப்புசாமி ஓரான் பாமுக்கின் இஸ்தான்புலை மொழியாக்கம் செய்துகொண்டிருக்கிறார். பாஸ்கர் சக்தியின் சிறுகதைகளும் மறுவெளியீடு காண இருக்கின்றன. நான்கு வருடங்களாக - ஒரு தமிழ் கிளாசிக் எழுத்தாளரின் சாகித்ய அகாடமி விருதுபெற்ற நாவலொன்று மறுவெளியீட்டில் அச்சாகாதா? என்று காத்துக் கொண்டிருக்கிறேன். ஜனவரி புத்தக சந்தைக்கு அந்த நாவலும் மறுவெளியீடு காண இருக்கிறது. போதாக் குறைக்கு பெருமாள்முருகன் சில நாட்களுக்கு முன்னர் செல்பேசியில் அழைத்திருந்தார்.

“பிரபு... எங்கிட்டு இருக்கீங்க?” என்றார் முருகன்.

“ஆங்... எங்க மாமியார் ஊட்டுல கறி சோறு திங்கறேன்... அதுவா முக்கியம்... எதுக்கு என்ன டிஸ்டர்ப் பண்றீங்க... நான் ரொம்ப பிசி... இன்னா விஷயங்க ஜீனியஸ்... மேட்டருக்கு வாங்க...!” என்றேன்.

“கறி சோறு நல்லா இருக்குதா...?” என்று கேட்டுவிட்டு “நான் இங்குட்டு ரெண்டு நாவல் எழுதி இருக்கேன்... ரெண்டும் ஒரே நாவல்...” என்றார்.

ஒரு முறை என்னை நானே கிள்ளிப் பார்த்துக் கொண்டேன். கிள்ளிய இடம் வலித்தது. அப்படியெனில், நான் பிரக்ஞையுடன் தான் இருக்கிறேன். எதிர் முனையில் பேசியவர் மூளைச் சூட்டில் இருக்கிறாரோ? பரிசோதித்து விட வேண்டியதுதான். முருகனிடம் கேட்டேன்:

“உங்களுக்கு மூள கீள கலங்கிடலையே...! நீங்க நெலமையில தான் இருக்கீங்களா ஜீனியஸ்...!” என்றேன்.

“ஏன்யா... கறி சோறு நல்லா இருக்குதான்னு கேட்டது ஒரு குத்தமாயா?” என்றார்.

“விளையாடாதீங்க ஜீனியஸ்... ரெண்டு நாவல் எழுதுறீங்க சரி...! அதெப்படி ரெண்டு நாவல்களும் ஒரே நாவலாக இருக்க முடியும்? It’s impossible.” என்றேன்.

“அங்கிட்டு தான் இருக்குது ட்விஸ்ட் & சஸ்பென்ஸ்... ரெண்டு வேறவேற முன்னட்டை, ரெண்டு வேறவேற தலைப்பு... ரெண்டு வேறவேற பின்னட்டை, ரெண்டு பின்னட்டையிலும் கெத்து காமிக்கிற மாதிரி என்னோட அச்சு அசலான புகைப்படம். ஆனா, ஒரே நாவல்... அதத் தெரிஞ்சிக்க ஜனவரி மாசம் வரைக்கும் நீங்க பொறுமையா இருக்கணும்...” என்றார் பெருமாள்முருகன்.

மிசஸ் பெருமாள்முருகனுக்கு செல்பேசியில் அழைப்பு விடுத்தேன். “ஏம்மா டீச்சரம்மா... உங்க வீட்டுக்காரரு ரெண்டு நாவல் எழுதி இருக்கராராமா... ரெண்டு நாவலும் ஒரே நாவலாமா! ஊர் உலகம் நம்புமா? எனக்கு ஃபோன் போட்ட மாதிரி காலச்சுவடு கண்ணனுக்கு ஃபோன் போட்டுடப் போறாரு! கத வேற மாதிரி போயிடும்... உங்க ஊட்டுக்காரற கொஞ்சம் கண்ட்ரோல் பண்ணுங்க... ஒண்ணு சொல்றேன் பொறுமையா கேக்குறீங்களா?” என்றேன்.

“ஹூம்... சொல்லுங்க...” என்றார் குயுக்தியுடன் மிசஸ் பெருமாள்முருகன்.

“முடிஞ்சா நெல்லிக்கா சைஸ்ல ஒரு பழுத்த எலுமிச்சம் பழத்த எடுத்து, முருகனோட உச்சந் தலையில வச்சி, ஓங்கி ஒரு அடி அடிச்சி, போர்டில் டஸ்டர வச்சி பூமாதிரி எழுதுனத அழிப்பீங்களே... அந்த மாதிரி எலுமிச்சைய தேய்ச்சி உட்டு தலைக்கு ஊத்துங்கோ...” என்றேன்.

“அடக் கூறு கெட்ட கிறுக்குப் பயலே...! அவர் சொல்றது நூத்துக்கு நூறு நெஜம் தான். நீதான் கொழம்பி இருக்குற... உன் தலையில திருஷ்டி பூசணிக்காயை உடைக்க” என்றார் மிசஸ் பெருமாள்முருகன்.

“அதெப்படிங்க அக்கா... ரெண்டு நாவல் எழுதி இருக்காராம்... ஆனா ஒரே நாவல்’னும் சொல்றாரு. நம்ப முடியலையே...” என்றேன்.

“நீ ரொம்ப யோசிக்கிற பிரபு. சிம்பிள் லாஜிக்ல யோசிச்சிப் பாரு. நீ ஈசியா கண்டு புடிச்சிடலாம்.” என்றார் மிசஸ் பெருமாள்முருகன்.

“க்கும்... அந்த அளவுக்கு லாஜிக்கலா யோசிக்கிற மூளை இருந்தா கம்ப்யூட்டர் கம்பெனியில என்ஜினியரா இல்ல இருந்திருப்பேன். நீங்களே சொல்லிடுங்களேன் அக்கா...” என்றேன்.

“வாய்ப்பே இல்ல... ஜனவரி மாசம் ரெண்டு புக்கையும் வெளியிடுவாங்க... அது வரைக்கும் நீ வெயிட் பண்ணு” என்றார்கள்.

யாருகிட்ட வேலையக் காமிக்கிறாங்க இவங்க ரெண்டு பேரும். கண்டு புடிச்சோமுள்ள... ‘மாதொருபாகன்’ படித்த வாசகர்களுக்குக் “காளி என்ன ஆனான்?” என்பது மில்லியன் டாலர் கேள்வி.

காளி தற்கொலை செய்துகொண்டு இறந்தானா? உயிருடன் இருக்கிறானா?

“காளி இறந்தால் என்ன ஆகும்?” என்பது ஒரு நாவலாகவும், “காளி உயிருடன் இருந்தால் என்ன ஆகும்?” என்பது இன்னொரு நாவலாகவும் இரண்டு பகுதிகளாக விரிகிறது. ஆக, மாதொருபாகனின் முதல் பாகத்தை ஒட்டிய இரண்டு முடிவுகளை நோக்கி - இரண்டு வெவ்வேறு நாவல்கள் விரிகின்றன. ஜனவரியை ஒட்டி இந்த இரண்டு நாவல்களும் வெளியாக இருக்கின்றன. (இந்த மாத இந்தியா டுடேவில் (தமிழ்) நாவலின் ஒரு அத்தியாயம் வெளியாகியுள்ளது. படித்துப் பார்க்கவும்.) இதுபோன்ற படைப்பிலக்கிய முயற்சிகள் “மாதொருபாகன்” நாவலுக்கு முன்பு நிகழ்ந்துள்ளதா? என்று தெரியவில்லை. அப்படி ஏதேனும் ஒரு முயற்சி உலக இலக்கியங்களில் நடந்திருந்தால் சொல்லுங்கள் பார்ப்போம். நாம் மேலதிகமாக உரையாடலாம். அது சினிமாவாகக் கூட இருக்கலாம். இருந்தால் சொல்லுங்கள் நாம் பேசி உரையாடலாம்.

இப்போதைக்கு எனக்குக் கொஞ்சம் போல வேலை இருக்கிறது. இந்த (டிசம்பர்) மாதத்தின் இறுதிக்குள் படிக்கவேண்டிய புத்தகங்கள் சில பாக்கி இருக்கின்றன. அவற்றினை நான் படித்து முடிக்க வேண்டும். அவற்றில் சில:

1. புலியின் நிழலில் – நாம்தேவ் நிம்கடே
2. ஆடு ஜீவிதம் – பென்யாமின்
3. பன்கர்வாடி - வெங்கடேஷ் மாட்கூல்கர்
4. ஒரு சூத்திரனின் கதை – ஏ. என். சட்டநாதன்
5. விடியலை நோக்கி – பேபி ஹால்தார்
6. லதிஃபே ஹனிம் – இபெக் சாலிஷ்லர்
7. நடந்தாய் வாழி காவேரி – சிட்டி – தி. ஜானகிராமன்
8. என் இளமைக் காலம் – தஸ்லீமா நஸ் ரீன்