Wednesday, February 25, 2009

Ireland political history

அயர்லாந்து - அரசியல் வரலாறு: என். ராம கிருஷ்ணன் (Rs.70)
பதிப்பகம்: கிழக்கு

புத்தகத்தை வாங்க இங்கு செல்லவும்: political history of Ireland - Tamil

இங்கிலாந்தின் காலனியாதிக்கத்தில் சிக்கித் தவித்த பல்வேறு நாடுகளில் இயற்க்கை வளம் மிக்க, வளந்த ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான அயர்லாந்தும் ஒன்று.

ஆடு, மாடு மற்றும் பன்றி ஆகியவற்றின் இறைச்சிக்காக அயர்லாந்து ஏழை விவசாயிகளை அடிமைகளாக இங்கிலாந்து நடத்தியுள்ளது. அதன் மூலம் தனது பொருளாதாரத்தை வெகுவாக உயர்த்திக்கொண்டுள்ளது.

மேலும் அவர்களை ஒடுக்கி வைக்க மொழி, இனம், கலாசார அடையாளம் ஆகிய அனைத்திற்கும் தடை விதித்திருக்கிறது. அதுவே இங்கிலாந்திற்கு பாதகமாக புரட்சி வெடித்து அயர்லாந்து ஆட்சியைக் கைப்பற்ற காரணமாக அமைந்திருக்கிறது. சுமார் 800 ஆண்டு கால தொடர் போராட்டத்தின் மூலம் அயர்லாந்து பெற்ற சுதந்தரம் அசாத்தியமானது.

அயர்லாந்தின் உருளைகிழங்கு பஞ்சமும் அதன் தொடர்பாக நடந்த அரசியல் சம்பவங்களும் உலகை உலுக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்று.

கத்தோலிக்க கிறித்துவர்களாகவும், பிரோடஸ்டந்ட் கிறித்துவர்களாகவும் இரு பிரிவுகளாக சிதறிக்கிடந்த அயர்லாந்து மக்கள், பல பிரச்சனைகளை சந்தித்த அயர்லாந்து மக்கள் தமது 800 வருட போராட்டத்தை விளக்குவதாக இந்நூல் அமைந்துள்ளது.

இங்கிலாந்தின் காலனியாதிக்கத்தில் சிக்கித் தவித்த பல்வேறு நாடுகள், அயர்லாந்து போராட்டத்தின் மூலம் பெற்ற சுதந்திரத்தால் உத்வேகம் கண்டு தமது போராட்டத்தை தீவிரப் படுத்தி சுதந்திரம் பெற்றுள்ளன. அவற்றுள் இந்தியாவும் ஒன்று. இந்தியா போன்ற ஆசிய நாடுகளுக்கு ஆதர்ஷமாக விளங்கிய அயர்லாந்தின் அரசியல் வரலாற்றை சற்றே விரிவாக இந்நூல் விவரிக்கிறது.

Tuesday, February 24, 2009

Maha Vamsam

மகாவம்சம்: R.P. சாரதி (Rs. 130)
பதிப்பகம்: கிழக்கு

புத்தகத்தை வாங்க இங்கு செல்லவும்: Mahavamsam, Ancient History of Sri lanka

இந்தப் புத்தகம் மிகப் பழைமையான புத்தகமாகக் கருதப்படுகிறது. ஏனெனில் பல்வேறு பிக்குகளால் தொகுக்கப் பட்ட ஸ்ரீ லங்கா சம்மந்தப் பட்ட புத்த மத விவரங்களை கி.பி. 5-ம் நூற்றாண்டில் மஹாநாம மஹாதேராவால் (பிக்குவால்) சிதறிக் கிடந்த குறிப்புகளை எல்லாம் ஒன்றாக சேர்க்கப்பட்டது தான் இந்நூல். பாலி மொழியிலிருந்து ஆங்கிலத்திலும், ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கும் மொழிபெயர்க்கப் பட்டுள்ளதால் தொடர்ந்து படிப்பதற்கு சிரமமாகத் தான் இருந்தது.

அசோகரின் வாரிசுகள் புத்தமதத்தை பரப்புவதற்கு ஸ்ரீ லங்கா சென்றது முதல், போதி மரக் கிளையை கொண்டு சென்றது வரை பல குறிப்புகளும் இதில் கிடைக்கிறது.

தமிழகத்தை ஆண்ட பாண்டிய மன்னன் சிங்கள அரசனுக்கு பெண் கொடுத்து சீரும் செய்திருக்கிறான். ஆனால் அவளுக்கு வாரிசுகள் இல்லாமல் போய்விட்டது. பிறகு பல தமிழக அரசர்களும் சிங்களர்கள் மீது போர்தொடுத்து சென்றுள்ளனர். அவர்களில் முக்கியமானவன் எலரா என்ற சோழன். பசுவின் கன்றினைக் கொன்றதற்காக தனது மகனை தேர் சக்கரத்திலிட்டு கொன்றானென இவனைப் பற்றி ஒரு குறிப்பு வருகிறது.

அவனுக்குப் பிறகும் சில தமிழக அரசர்களும், தளபதிகளும் இலங்கையை ஆட்சி செய்து இருக்கிறார்கள் என்றாலும் அது நீடித்ததாக தெரியவில்லை.

இலங்கையின் ஆதிகால வரலாற்றை மட்டுமில்லாமல் புத்த மதத்தின் தோற்றம், வளர்ச்சி குறித்த கருத்துக்களையே முக்கியமாக இந்நூல் முன்வைக்கிறது. எனவே மகா வம்சம் சிங்களர்களின் புனித நூலாகவும் கொண்டாடப்படுகிறது.

இந்த புத்தகத்தின் ஆங்கில மூலத்தைக் காண இங்கு சுட்டியுள்ள வலை தளத்திற்கு செல்லவும்: www.mahavamsa.org

Mullai periyar dam - Anayaa... Neruppaa?

முல்லை பெரியாறு - அணையா? நெருப்பா?: ஊரோடி வீரகுமார் (Rs:70)
பதிப்பகம்: கிழக்கு

புத்தகத்தை வாங்க இங்கு செல்லவும்: Mullai Periyaru

நீர் மட்டத்தை உயர்த்தக் கோரி தமிழகமும், உயர்த்தக் கூடாது என கேரளமும் பிடிவாதம் பிடிக்கும் முல்லை பெரியாறு அணை உண்மையில் தமிழகத்திற்கு சொந்தமானது என புத்தகத்தில் படிக்கும் போது ஆச்சர்யமாக இருந்தது.

பிறகு எப்படி கேரளாவின் கட்டுப்பாட்டில் சென்றது? உச்ச நீதிமன்றம் தலையிட்டும் கேரளா ஏன் பணிய மறுக்கிறது? என்பது போன்ற பல கேள்விகளுக்கு பதில் சொல்லும் விதமாக பிரச்சனை ஆராய்ந்து முன்வைக்கப் பட்டுள்ளது.

18 -ஆம் நூற்றாண்டின் இறுதியில் அணையைக் கட்ட முடிவெடுத்த ஆங்கில அரசாங்கம் திருவாங்கூர் மகாராஜாவிற்கு தேவையில்லாமல் ஒரு கடிதத்தை அனுப்பி இருக்கிறது. இது போல் உங்கள் சமஸ்தானத்திற்கு பக்கத்தில் ஒரு அணையைக் கட்ட முடிவெடுத்துள்ளோம். அதுவும் 999 வருடங்களுக்கான குத்தகைக்கு ஆங்கில அரசு அணையை எடுத்துக் கொண்டு பராமரிப்பதாகவும் வருடத்திற்கு இவ்வளவு தொகை என திருவாங்கூர் சமஸ்தானத்திற்கு தருவதாகவும் மேலும் மீன் பிடித்துக் கொள்ளவும் அவர்களுக்கே அனுமதி தருவதாகவும் இங்கிலாந்து ராணியிடமிருந்து நேரடியாக கடிதம் வந்திருக்கிறது.

நமக்கு சம்மந்தமில்லாத விசயத்திற்கு நம்மிடம் எதற்கு அனுமதி என பல முறை யோசித்த மகாராஜா தேடி வரும் லட்சுமியை உதைப்பானேன் என்று சம்மதத்தை தெரிவித்துள்ளார்.

உடனே அணை கட்டுவதற்கான ஏற்பாடுகளை நிர்வாகம் எடுத்துள்ளது. பல பேர் முயன்று கடைசியில் பென்னி குக்கால் அணை நிறைவு பெற்றுள்ளது.

ஆங்கிலேயரான பென்னி குக் ஓரளவிற்கு மேல் அணையைக் கட்ட பணம் இல்லாததால் தனது சொத்துக்களை விற்று சொந்த பணத்தைப் போட்டு அணையை கட்டி முடித்துள்ளார். எனவே அவரது பெயரை இன்று வரை கிராம மக்கள் தனது குழந்தைகளுக்கு பெயராக வைத்து நன்றியை தெரிவிக்கிறார்களாம்.

ஏழை விவசாயிகள் நன்மை பெற வேண்டுமென்று கட்டப்பட்ட இந்த அணை அரசியலில் முக்கியப் பங்கு வகிப்பதால் மாநிலங்களுக்கு இடையிலான சச்சரவாக மாறியுள்ளது. இந்த புத்தகத்தைப் படித்தால் முல்லை பெரியாரின் வரலாறுடன் அதன் பிரச்சனைகளையும் ஒருவாறு தெரிந்து கொள்ளலாம்.

Tharaiyil Irangum Vimanangal - Indhumathi

தரையில் இறங்கும் விமானங்கள்: இந்துமதி
விலை: 45 ரூபாய்

ரெண்டு வாரம் முன்பு என் அக்கா ஜெயாவோட வீட்டுக்கு போயிருந்தேன். 2009 புத்தகக் கண்காட்சியில் சில புத்தகங்களை அவள் வாங்கிக் கொண்டு வந்திருந்தாள். அதில் கி.ராவோட பிஞ்சுகள் என்ற புத்தகத்தை தேடிக்கொண்டு இருந்தேன். அவள் அந்த புத்தகத்தை வாங்கியதாக ஞாபகம்.

எங்கே ஜெயா பிஞ்சுகள் புத்தகத்த காணோம். யாருக்காவது கொடுத்து இருக்கையா என்ன? -ன்னு கேட்டேன். அப்படி எதுவுமே நான் வாங்கலயேடா... பொன்னியின் செல்வனும், கால் முளைத்த கதைகளும் தான் வாங்கினேன்னு சொன்னாள்.

அடடா ரொம்ப நாள் கழிச்சி கி. ராவோட எழுத்துக்களை படிக்கலாம்னா இப்படி ஆயிடுச்சேன்னு புலம்பும் போது இந்துமதியோட தரையில் இறங்கும் விமானங்கள் என்ற புத்தகம் கிடைத்தது.

இந்த புத்தகம் நீ வாங்கி இருக்கயா ஜெயா நான் எடுத்துட்டு போறேன்னு சொன்னேன். ஒ அதுவா? என் பிரண்டோடதுடான்னு சொன்னாள்.

என் அக்கா வீட்டிலிருந்து எங்க ஊருக்கு 2.30 மணி நேர பஸ் பயணம் என்பதால் Bus Travel -ல படிக்க ஆரம்பித்தேன். இந்த நாவலின் முதற்பதிப்பு 1977 -ல் வந்திருக்கிறது. இன்றும் சந்தையில் கிடைக்கிறது.

ஏழை பிராமண குடும்பத்தை மையமாக வைத்து எழுதப்பட்ட நாவல். கல்லுரிப் படிப்பு முடித்து விரும்பிய வேலையை தேடுவதற்கும், தனக்கு கிடைத்த எதோ ஒரு வேலைக்கு செல்வதற்கும் இடைப் பட்ட காலத்தில் ஒருவன் சந்திக்கும் உளவியல் சார்ந்த நிகழ்ச்சிகளின் கோர்வை இந்த நாவல்.

பிகாம் படித்து முடித்த ஒருவன் தனது தந்தையின் சிபாரிசில் நேர்முகத் தேர்வுக்கான அறையில் காத்திருப்பதிலிருந்து நாவல் தொடங்குகிறது. படித்தது பிகாம் என்றாலும், அவனுடைய கனவுகள் இலக்கியத் தரமான ஒரு இதழை ஆரம்பித்து தொடர்ந்து நடத்தவேண்டும் என்பது தான்.

இந்தப் புதினத்தில் Maximum 10 -லிருந்து 15 கதாப் பாத்திரங்கள் தான் வரும் ஆனால் ஒவ்வொரு கதாப் பாத்திரத்தையும் அதற்கே உரிய அழுத்தத்துடன் இந்துமதி கையாண்டுள்ளார். குறிப்பாக விச்சுவின் அண்ணியாக வரும் கதாப் பாத்திரத்தை அருமையாக கையாண்டுள்ளார்.

ஒரு பெண்ணிற்கும், அவளுடைய கணவனின் தம்பிக்கும் இடையிலான உறவை தாய்க்கும் மகனுக்குமான, தோழிக்கும் தோழனுக்குமான, படைப்பாளிக்கும் வாசகிக்குமான உறவாக மேலும் சொல்லுவதென்றால் விமர்சகருக்கான உறவாக பன்முகத்தன்மையில் சித்தரித்திருப்பது அருமை.

குடும்பப் பொருப்பைச் சுமக்கும் விச்சுவின் அண்ணன் மாற்றலாகி வட இந்தியா செல்வதால் குடும்பப் பொறுப்புகள் அனைத்தையும் கவனிக்க வேண்டிய சூழ்நிலை விச்சுவிற்கு. எனவே தனது கனவுகளுடன் எந்தக் கவலையுமின்றி வானில் வட்டமிட்ட விச்சு தனது லட்சியங்களையும், கனவுகளையும் விட்டு விட்டு தரையிறங்க வேண்டிய கட்டாயம்.

விச்சுவின் சூழ்நிலையையும், அவனுடைய உறவுகளையும் உறுத்தலில்லாத முறையில் இந்துமதி கொண்டு சென்றுள்ளார். உறவுகளை கொச்சையாகவே சித்தரிக்கும் மெகா சீரியல் தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும் அவசியம் படிக்க வேண்டிய நாவல் இது.

Saturday, February 21, 2009

kashmir

காஷ்மீர்: சந்திரன்
பதிப்பகம்: ஆழி, 2007 -ஆம் ஆண்டு வெளியீடு

எப்ப பாரு காஷ்மீரில் சண்டை, பாகிஸ்தான் சதி, தீவிரவாதிகள் சுட்டுக் கொலை இத்யாதி, இத்யாதி.... அப்படி என்ன தான் இங்க பிரச்சனை இருக்கும், எதுக்காக இப்படி சண்டை போட்டுக்கணும்... இது சம்மந்தமா ஏதாவது புத்தகம் கெடச்சா நல்லா இருக்குமேன்னு பல நாள் யோசிச்சி இருக்கேன்.

அப்படி தேடிக்கொண்டு இருக்கும்போது காஷ்மீர் என்ற தலைப்பில் ஒரு புத்தகம் என் கண்ணில் பட்டது. சரி காஷ்மீரைப் பற்றிய நாவலையாவது படிக்கலாமென்றுதான் புத்தகத்தைக் கையில் எடுத்தேன்.

ஒரு சில பக்கங்களைப் புரட்டினேன்... ஆஹா இதத்தான இத்தனைநாள் தேடிக்கிட்டு இருந்தோமுன்னு சந்தோஷம் ஆயிடுச்சு போதாக் குறைக்கு சுஜாதா வேறு புத்தகத்தைப் பாராட்டி ஒரு சில வார்த்தைகள் சொல்லி இருந்தார். அது போதும் என்று வாங்கிவிட்டேன்.

இந்தியாவின் sorry sorry, காஷ்மீரின் இவ்வளவு சிக்கலுக்கு என்ன காரணம்? இதன் மூதாதையர்கள் யார்? சிக்கலை சரி செய்ய முடியுமா? என்ற பல கேள்விகளுக்கு விடை சொல்லும் விதமாக சிக்கலின் அடி ஆழத்திலிருந்து, ஆரம்ப நிலையிலிருந்து சந்திரன் காஷ்மீரின் வரலாறை கொண்டு செல்கிறார்.

கனிஷ்கர் போன்ற புகழ் பெற்ற அரசர்கள் ஆண்ட காஷ்மீரத்தை கிழக்கிந்திய கம்பெனி நடத்த வந்த ஆங்கிலேயர்கள் கைப்பற்றி ரூபாய் 75 லட்சத்திற்கு தளபதியான குலாப் சிங்கிற்கு சிலபல நிபந்தனைகளுடன் கொடுத்தார்கள்.

அதிலிருந்து குலாப் சிங்கின் வம்சம் காஷ்மீரை ஆண்டு வந்துள்ளது. சுதந்திரம் பெற்ற இந்தியாவை இரும்பு மனிதர் வல்லபாய் படேல் ஒன்றிணைக்கும் போது காஷ்மீர் மகா ராஜா மறுத்து விடவே சிறிது காலம் அது தனி சமஸ்தானமாக இருந்துள்ளது.

இப்படி இருக்கும் போது பாகிஸ்தானத்திலிருந்து அரேபிய பழங்குடியினர் காஷ்மீரில் ஆக்கிரமிப்பு நடத்தி சில இடங்களை அபகரிக்க மகாராஜா இந்தியாவின் உதவியை நாடியுள்ளார். அப்பொழுது இந்தியப் பிரதமராக இருந்த நேரு சில நிபந்தனைகளுடன் உதவ ஒத்துக் கொண்டார். அதில் காஷ்மீரில் ஓட்டெடுப்பு நடத்தி காஷ்மீர் மக்களின் அனுமதியுடன் இரு நாடுகளில் யாருடன் சேர்வது என்பது குறித்த நிபந்தனையும் ஒன்று.

எனினும் பாக்கிஸ்தான் காஷ்மீரின் சில பகுதிகளை ஆக்ரமித்துக் கொண்டது. மேலும் தான் ஆக்ரமித்த இந்திய பனிமலை பகுதியை சீனாவிற்கு தானமாகக் கொடுத்தது. இப்பொழுது காஷ்மீரில் ஓட்டெடுப்பு நடத்த வேண்டுமெனில் பாகிஸ்தான் சீனாவிற்கு கொடுத்த தானத்தை திரும்பப் பெற வேண்டும். இது முடியாத காரியம். இது போலவே பல அரசியல் காரணங்களும் உள்ளது.

இந்தியாவுடன் சேர விரும்புவோர், பாகிஸ்தானுடன் சேர விரும்புவோர், தனி காஷ்மீரம் வேண்டி போராடுவோர் என அனைவரின் பார்வையிலும் ஆராய்ந்து நடுநிலையோடு சந்திரன் காஷ்மீரின் வரலாறை எழுதியுள்ளார். இந்தியா மற்றும் பாகிஸ்தான் அரசியலின் இரத்த ஓட்டமாக காஷ்மீர் ஆனதன் காரணம் முழுமையும் இந்தப் புத்தகத்தில் படிக்கக் கிடைக்கிறது.

Friday, February 20, 2009

Hitler and first world war, enathu poorattam

அடால்ப் ஹிட்லரைப் பற்றி அவருடைய எனது போராட்டம் மூலம் பூரணமாக தெரிந்து கொள்வது இயலாத காரியம். ஏனெனில் அவருடைய இளமைக்காலங்களைப் பற்றியோ அல்லது அவருடைய கஷ்ட காலங்களைப் பற்றியோ அந்தப் புத்தகத்தில் ஒரு வார்த்தையைக் கூட மறந்தும் அவர் சொல்லவில்லை.

அவருடைய நாசிசக் கொள்கை மற்றும் ஜெர்மன் விடுதலையைப் பற்றி மட்டுமே எனது போராட்டத்தில் கூறியுள்ளார். எனவே அவரைப் பற்றி வேறு சில வரலாற்று ஆசிரியர்களின் எழுத்து மூலமே தெரிந்துகொள்ள வேண்டி இருக்கிறது.

ஹிட்லர் - முதல் உலகப் போர்: சாமி நாத சர்மா (Rs. 160)
பதிப்பகம்: சாந்தி, சென்னை.

என்னுடைய நண்பன் தேவக்கோட்டை முத்துக்குமார் ஒரு வித்யாசமான பையன். என்னை தூரத்துல பார்த்துட்டாலே போதும் கிச்சா மாமான்னு ஓடி வந்துடுவான்.

அவன்கிட்ட இருக்க ஒரு specialty என்னன்னா உள்ளங்கை ஐஸ் கட்டி மாதிரி எப்பவும் சில்லுனு இருக்கும். மாமா ஒருவாட்டி கையக் கொடுங்க மாமான்னு ஒரு நாளைக்கு 4 முறை கையை கொடுக்க சொல்லி மனுசனையே ஐஸ் கட்டியில கைய வச்சா மாதிரி செஞ்சிடுவான்.

இப்படியே என்னை குளிர்ச்சி படுத்தினவன் ஒரு நாள் ஹிட்லர் - முதல் உலகப் போர் என்ற சாமி நாத சர்மா 1935 -ல் எழுதி வெளிவந்த புத்தகத்தை என் கையில் திணித்து மேலும் சிலிர்க்கச் செய்தான். "ஹிட்லர எல்லாரும் குறை சொல்லுறாங்க மாமா படிச்சி பாருங்க அவன் ஜெர்மனியின் விடுதலைக்காக தான் போராடி இருக்காருன்னு தெரியும்" -ன்னு சொன்னான். சரி மருமகன் சொல்லிட்டானேன்னு புத்தகத்தைக் கையில் எடுத்தேன்.

ஆஸ்த்திரிய இளவரசனை செர்பிய மாணவன் சுட்டுக் கொன்றதன் காரணமாக எழுந்த பிரச்சனையில் நாடுகளுக்கு இடையிலான போர் மூண்டது. 1914-ல் தொடங்கிய இந்த போரில் ஹிட்லரும் பங்கு கொள்கிறான். ஒற்றனாக, படை வீரனாக, வீரர்களுக்கு தனது பேச்சின் மூலம் ஆற்றல் கொடுப்பவாக பல வகைகளில் ஜெர்மனியின் வெற்றிக்காக உழைக்கிறான். 1918 ஆம் ஆண்டு வரை நடந்த இப்போரில் எதிர்பாராத விதமாக ஜெர்மனி படு தோல்வி அடைகிறது.

ஜெர்மனியின் விடுதலைக்காக நாஜிக் கட்சியைத் தொடங்கி, ஆட்சியைக் கைப்பற்றி ஜெர்மனியின் சர்வாதிகாரி ஆகும் வரை தேசத்தின் மீதுள்ள பற்றால் அவன் சந்தித்த கஷ்டங்களை இந்த நூல் விளக்குகிறது.

இரண்டாம் உலகப் போருக்கு முந்தய பதிப்பு என்பதால் விஷவாயுக் கிடங்கு, யூதர் கொலை போன்ற எந்தக் குறிப்பும் இந்த பதிப்பில் இல்லை.

எனது போராட்டம்: ஹிட்லர் (main kampf)
பதிப்பகம்: சாந்தி, சென்னை.

ஒரு நாள் என்னுடைய ஊர் தோழன் சார்லசுடன் ஹிட்லர் சம்மந்தமாக பேசிக்கொண்டு இருந்தேன். "Main Kampf படிச்சேன் கிச்சா தமிழ்ல படிச்சா நல்லா இருக்கும்னு" சொன்னான். சரி நண்பன் ஆச பட்டுட்டானேன்னு எப்பவும் போல kannimara library பக்கத்துல இருக்க permanent book fair-க்குப் போனேன். எவ்வளவு தேடியும் கிடைக்கவில்லை.

புத்தகத்தை தேடிக்கொண்டு இருக்கும் போது சினிமா டைரக்டர் பிரதாப் போத்தன் மாதிரி ஒருத்தர் வந்தாரு. என்னையும் அறியாமல் "Excuse me, you are much similar to cinema Director Prathap Bothan" -ன்னு ஒரு பிட்ட போட்டேன். மாதிரி தான் தெரியுறேனா? சரி என்ன book வாங்க வந்தீங்கன்னு கேட்டார். ஹிட்லரோட எனது போராட்டம்னு சொன்னேன்.

ஒ.... அதுவா chennai shanthi theater பக்கத்துல இருக்க shanthi book shop-ல கிடைக்கும் அங்க try பண்ணுங்கன்னு சொல்லிட்டு போனாரு. உடனே அந்த கடைக்கு படையெடுத்து புத்தகத்தை வாங்கினேன். அவனுக்காக வாங்கியதால் எதுக்கும் படிச்சுட்டே கொடுத்துடலாம்னு புத்தகத்தை புரட்டினேன்.

புரச்சியின் மூலமாக ஆட்சியைப் பிடிக்க திட்டமிட்ட ஹிட்லர் அரசாங்கத்தால் சிறைபடுத்தப் படுகிறார். நீதிமன்றம் அவருக்கு தண்டனை விதிக்கிறது. சிறை வாசத்தில் நேரங்கள் வீணாவதால் தான் சந்தித்த போராட்டங்களையும், நாஜிக் கட்சியின் கொள்கைகளையும் பிரதிபலிக்குமாறு ஒரு புத்தகத்தை எழுத உத்தேசிக்கிறான். இவன் யோசித்து சொல்ல சொல்ல ஹெஸ் என்பவன் தட்டச்சு செய்தான். ஒரு ஜெர்மனியனாக, தேச பக்தனாக விளங்கிய இவன் தனது கடும் முயற்சியால் ஆட்சியையும் கைப்பற்றி தனது புத்தகம் அனைவருக்கும் கிடைக்குமாறு செய்தான். ஜெர்மானியர்கள் அனைவருக்கும் புதிய ரத்தத்தைப் பாய்ச்ச இந்த புத்தகம் ஒரு துருப்பாக இருந்தது.

ஜெர்மனியை புத்துயிர் கொடுக்க தான் வகுத்த திட்டங்களை, செயல் படுத்த வேண்டிய திட்டங்களை தீவிரமான முறையில் தன் சுய சரிதையில் சொல்லுகிறான். ஹிட்லரின் உண்மையான நோக்கங்களை பிரதிபலிக்கும் புத்தகம் இது. படிக்கவேண்டிய புத்தகமும் கூட.

ஹிட்லர் - பா. ராகவன் (Rs.100)
பதிப்பகம்: கிழக்கு, சென்னை.

மேலே சொன்ன இரண்டு புத்தகங்களும் ஹிட்லரின் சமகால அரசியலையும், அவருடைய கொள்கைகளையும் விளக்குவதால் யுத்த எதிர்ப்பு மற்றும் இரண்டாம் உலகப் போருக்கான யுத்திகளைப் பற்றியும் தெரிந்துகொள்ள பா.ராகவனுடைய இந்தப் புத்தகம் உதவியாக இருக்கும்.

இரண்டாம் உலகப் போருக்கான சூத்ரதாரியாக இருந்தது ஹிட்லர்தான். அதற்கு காரணம் அவருடைய கண்மூடித்தனமான ஜெர்மானிய விடுதலைதான்.

நாஜிப்படைகள் பதினொரு மில்லியன் மக்களை விதவிதமான முறைகளில் சாகடித்தன. சாக அடிப்பதற்கு வித விதமான மரண சாலைகளை உற்பத்தி செய்திருந்தன. கொல்லப்பட்டவர்களில் யூதர்கள் மட்டும் ஆறு மில்லியன் பேர்.

உலகப் போரில் வெற்றி பெற்று ஜெர்மனியை உலக வல்லரசாக்குவேம் என்று நினைத்தவர் எப்படி தோற்றார், எதற்காக தற்கொலை செய்து கொண்டார் என்ற காரணங்களை விறுவிறுப்பான நடையில் பா. ராகவன் இந்நூலில் பதிவு செய்துள்ளார்.


புத்தகத்தை வாங்க இங்கு செல்லவும்: Hitler - Tamil