Saturday, February 21, 2009

kashmir

காஷ்மீர்: சந்திரன்
பதிப்பகம்: ஆழி, 2007 -ஆம் ஆண்டு வெளியீடு

எப்ப பாரு காஷ்மீரில் சண்டை, பாகிஸ்தான் சதி, தீவிரவாதிகள் சுட்டுக் கொலை இத்யாதி, இத்யாதி.... அப்படி என்ன தான் இங்க பிரச்சனை இருக்கும், எதுக்காக இப்படி சண்டை போட்டுக்கணும்... இது சம்மந்தமா ஏதாவது புத்தகம் கெடச்சா நல்லா இருக்குமேன்னு பல நாள் யோசிச்சி இருக்கேன்.

அப்படி தேடிக்கொண்டு இருக்கும்போது காஷ்மீர் என்ற தலைப்பில் ஒரு புத்தகம் என் கண்ணில் பட்டது. சரி காஷ்மீரைப் பற்றிய நாவலையாவது படிக்கலாமென்றுதான் புத்தகத்தைக் கையில் எடுத்தேன்.

ஒரு சில பக்கங்களைப் புரட்டினேன்... ஆஹா இதத்தான இத்தனைநாள் தேடிக்கிட்டு இருந்தோமுன்னு சந்தோஷம் ஆயிடுச்சு போதாக் குறைக்கு சுஜாதா வேறு புத்தகத்தைப் பாராட்டி ஒரு சில வார்த்தைகள் சொல்லி இருந்தார். அது போதும் என்று வாங்கிவிட்டேன்.

இந்தியாவின் sorry sorry, காஷ்மீரின் இவ்வளவு சிக்கலுக்கு என்ன காரணம்? இதன் மூதாதையர்கள் யார்? சிக்கலை சரி செய்ய முடியுமா? என்ற பல கேள்விகளுக்கு விடை சொல்லும் விதமாக சிக்கலின் அடி ஆழத்திலிருந்து, ஆரம்ப நிலையிலிருந்து சந்திரன் காஷ்மீரின் வரலாறை கொண்டு செல்கிறார்.

கனிஷ்கர் போன்ற புகழ் பெற்ற அரசர்கள் ஆண்ட காஷ்மீரத்தை கிழக்கிந்திய கம்பெனி நடத்த வந்த ஆங்கிலேயர்கள் கைப்பற்றி ரூபாய் 75 லட்சத்திற்கு தளபதியான குலாப் சிங்கிற்கு சிலபல நிபந்தனைகளுடன் கொடுத்தார்கள்.

அதிலிருந்து குலாப் சிங்கின் வம்சம் காஷ்மீரை ஆண்டு வந்துள்ளது. சுதந்திரம் பெற்ற இந்தியாவை இரும்பு மனிதர் வல்லபாய் படேல் ஒன்றிணைக்கும் போது காஷ்மீர் மகா ராஜா மறுத்து விடவே சிறிது காலம் அது தனி சமஸ்தானமாக இருந்துள்ளது.

இப்படி இருக்கும் போது பாகிஸ்தானத்திலிருந்து அரேபிய பழங்குடியினர் காஷ்மீரில் ஆக்கிரமிப்பு நடத்தி சில இடங்களை அபகரிக்க மகாராஜா இந்தியாவின் உதவியை நாடியுள்ளார். அப்பொழுது இந்தியப் பிரதமராக இருந்த நேரு சில நிபந்தனைகளுடன் உதவ ஒத்துக் கொண்டார். அதில் காஷ்மீரில் ஓட்டெடுப்பு நடத்தி காஷ்மீர் மக்களின் அனுமதியுடன் இரு நாடுகளில் யாருடன் சேர்வது என்பது குறித்த நிபந்தனையும் ஒன்று.

எனினும் பாக்கிஸ்தான் காஷ்மீரின் சில பகுதிகளை ஆக்ரமித்துக் கொண்டது. மேலும் தான் ஆக்ரமித்த இந்திய பனிமலை பகுதியை சீனாவிற்கு தானமாகக் கொடுத்தது. இப்பொழுது காஷ்மீரில் ஓட்டெடுப்பு நடத்த வேண்டுமெனில் பாகிஸ்தான் சீனாவிற்கு கொடுத்த தானத்தை திரும்பப் பெற வேண்டும். இது முடியாத காரியம். இது போலவே பல அரசியல் காரணங்களும் உள்ளது.

இந்தியாவுடன் சேர விரும்புவோர், பாகிஸ்தானுடன் சேர விரும்புவோர், தனி காஷ்மீரம் வேண்டி போராடுவோர் என அனைவரின் பார்வையிலும் ஆராய்ந்து நடுநிலையோடு சந்திரன் காஷ்மீரின் வரலாறை எழுதியுள்ளார். இந்தியா மற்றும் பாகிஸ்தான் அரசியலின் இரத்த ஓட்டமாக காஷ்மீர் ஆனதன் காரணம் முழுமையும் இந்தப் புத்தகத்தில் படிக்கக் கிடைக்கிறது.

No comments: