Friday, December 31, 2010

சென்னை புத்தகக் கண்காட்சி - 2011

ஓரூரில் ஓர் அரசன் இருந்தானாம். அவனுக்கு ஒரு வினோதமான எண்ணம் தோன்றியதாம். அரசர்களிலேயே அறிவாளி என்று பெயர் எடுக்க வேண்டும். எல்லாவற்றையும் தெரிந்தவனாக இருக்க வேண்டும் என்று நினைத்தானாம். தனது ஆசையை அமைச்சரவை கூட்டி அதனைத் தெரியப்படுத்தினானாம்.

புத்திசாலி அமைச்சர்கள் ஒன்று சேர்ந்து, கூடிப்பேசி அரசனிடம் சென்றார்கள். "அரசே, நமது நூலகத்தில் உலக காவியங்களும், தர்க்க ரீதியிலான தத்துவ நூல்களும் சொல்லிக் கொள்ளும்படி சேமிப்பில் இல்லை. மேலும் அறிவியல் மற்றும் விஞ்ஞானத்தில் அயல் நாட்டவர் தானே சிறந்து விளங்குகிறார்கள். எல்லாவற்றையும் சேகரிக்க தனிக் குழுவை அமைக்க வேண்டும். அதற்கு பல ஆண்டுகள் ஆகும்" என்று கூறினார்கள்.

"அதனால் என்ன? நூல்களை சேகரிக்க உடனே ஆட்களை அனுப்புங்கள். தாமதம் வேண்டாம். காரியம் முடிந்ததும் என்னை தொடர்பு கொள்ளுங்கள்." என்று சொல்லிவிட்டு அந்தப்புறத்திற்கு விரைந்தானாம் அரசன்.

நாட்கள் உருண்டோடின. பொசுக்கும் கோடை, கொட்டும் மழை, வாட்டும் குளிர், துளிர்க்கும் வசந்தம் என காலம் ஓடியது... பருவ சுழற்சியை பலமுறை கண்டது நாடு. புத்தகம் சேகரிக்க சென்றிருந்தவர்கள் நாடு திரும்பினார்கள். இந்த சேதி அரசனுக்குத் தெரிவிக்கப்பட்டது. நழுவும் ஆடையை சரிசெய்தபடி அந்தப்புறத்திலிருந்து ஓடோடி வந்த அரசன் குவியலைப் பார்த்து மலைத்து நின்றானாம்.

"இதென்ன சோதனை மங்குனி அமைச்சர்களே! இமாலயக் குவியலாக இருக்கிறதே? இவையனைத்தையும் படிக்க ஓர் ஆயுள் போதாதே!. அறிவார்த்த விஷயங்களைத் தெரிந்து கொள்வதில் ஆவல் இருந்ததே தவிர அதற்காக உழைக்கவில்லை. என்னுடைய இளமையெல்லாம் சிற்றின்பத்தில் கழிந்துவிட்டதே. இயற்கை என்னை அழைக்க வரும் நாட்களும் வெகு தூரத்தில் இல்லையே!" என்று வருந்தினானாம்.

மன்னர் மன்னா! நீங்கள் பால்யத்தில் தொடங்கி இருப்பினும், உங்களுடைய எண்ணம் இதுவாகவே இருக்கும். ஏனெனில் கற்றது கையளவு கல்லாதது உலகளவு என்பது ஆன்றோர்கள் வாக்கு.

"நீர் சொல்வதும் உண்மைதான் அமைச்சரே!" என்று ஆற்றாமையை பகிர்ந்துகொள்ள அந்தப்புறத்திற்கு விரைந்தானாம் அரசன்.

ஆங்கில வருடம் துவங்கும் ஒவ்வொரு முறையும் எனக்கு மங்குனி அரசனின் ஞாபகம் தான் வரும். ஏனெனில் புத்தகக் கண்காட்சியும் ஆண்டின் தொடக்கத்தில் தானே வருகிறது. நூற்றுக் கணக்கான பதிப்பகங்களின், ஆயிரக் கணக்கான புத்தகங்கள் ஒவ்வொரு முறையும் மலைப்பையே ஏற்படுத்துகின்றன.

சிற்றின்பங்களும் சோம்பேறித் தனமும் அதிகமானதால் இதுவரை வாங்கிய புத்தகங்களைக் கூட பக்கங்கள் புரட்டப்படாமலே வைத்திருக்கிறேன். அப்படியிருந்தும் 34வது சென்னை புத்தகக் கண்காட்சி 2011-ல் சில புத்தகங்களை வாங்க திட்டமிட்டு இருக்கிறேன். அவற்றின் பட்டியல்...

1. கடவு - திலிப் குமார் (க்ரியா)
2. ராமகிருஷ்ண பரமஹம்சர் முழுக்கதைகள்
3. வள்ளலார் வாழ்க்கை மற்றும் கதைகள்
4. காலச்சுமை - ராஜ்கௌதமன் (தமிழினி)
5. குளச்சல் மு யூசுப் - மொழிபெயர்ப்பு - காலச்சுவடு
6. காஷ்மீர் - பா ராகவன் (கிழக்கு)
7. கிளாசிக் வரிசை - புதிய வெளியீடு (காலச்சுவடு)
8. ஸ்பெக்ட்ரம் சர்ச்சை - பத்ரி (கிழக்கு)
9. திருக்குறள் - மு.வ உரையுடன்
10. எஸ்.சங்கர்நாராயன் கதைகள் - இருவாச்சி பதிப்பகம்
11. ஜெயமோகன் புத்தகங்கள்
12. சாமியாட்டம் - எஸ் பாலபாரதி
12. விமலாதித்த மாமல்லன் கதைகள் - உயிர்மை பதிப்பகம்

கவிதைகள்: உயிர்மை பதிப்பகம்
1. தீக்கடல் - நரசிம்
2. வெயில் தின்ற மழை - நிலாரசிகன்
3. ஞாயிற்றுக்கிழமை மதியப்பூனை - அகநாழிகை பொன்.வாசு

பரிந்துரைக்கும் புத்தகங்கள் - வரலாறு:

1. இந்திய சீன எல்லை தகராறு - மறு ஆய்வும் தீர்வும்
2. காஷ்மீர்: சந்திரன்
3. டிராகன் - புதிய வல்லரசு சீனா

நாட்டு நடப்பு:

1. தண்ணீர் விட்டோ வளர்த்தோம் - அல்லயன்ஸ் பதிப்பகம்
2. ராஜீவ் காந்தி கொலை வழக்கு - கிழக்கு பதிப்பகம்
3. கிரிமினல்கள் ஜாக்கிரதை - கிழக்கு பதிப்பகம்
4. மாலன் கட்டுரைகள் - கிழக்கு பதிப்பகம்

கதை மற்றும் நாவல்கள்:

1. பஷீர் படைப்புகள் - காலச்சுவடு பதிப்பகம்
2. தோழர் - பாரதி புத்தகாலயம்
3. வெட்டுப்புலி - உயிர்மை பதிப்பகம்
4. மௌனத்தின் குரல் - சாகித்ய அகாடமி பதிப்பகம்
5. ஒற்றன் - காலச்சுவடு பதிப்பகம்
6. தரையில் இறங்கும் விமானங்கள் - தாகம் பதிப்பகம்
7. அலகிலா விளையாட்டு - பா ராகவன்
9. ராஜ் கௌதமன் படைப்புகள் - தமிழினி பதிப்பகம்
10. கிளாசிக் வரிசை - காலச்சுவடு பதிப்பகம்
11. அ முத்துலிங்கம் முழுத்தொகுப்பு - தமிழினி பதிப்பகம்
12. காளி நாடகம் - உயிர்மை பதிப்பகம்
13. கனக துர்கா - வம்சி பதிப்பகம்

கட்டுரைகள்:

1. அங்கே இப்போ என்ன நேரம்? - தமிழினி பதிப்பகம்
2. துணையெழுத்து - விகடன் பிரசுரம்
3. பல நேரங்களில் பல மனிதர்கள் - உயிர்மை பதிப்பகம்
4. தமிழ்ச் சிறுகதை பிறக்கிறது - காலச்சுவடு பதிப்பகம்

கவிதைகள்:

1. பரத்தை கூற்று - அகநாழிகை பதிப்பகம்
2. மயிரு - அகநாழிகை பதிப்பகம்

இவையனைத்தும் என்னுடைய தனிப்பட்ட விருப்பத்தின் அடிப்படையில் பரிந்துரைக்கும் புத்தகங்கள். வாங்கும் பொழுது ஒரு சில பக்கங்களை படித்துவிட்டு வாங்கிக் கொள்ளவும்.

நன்றி...

Thursday, December 30, 2010

மயிரு - யாத்ரா

தலையின் இழிந்த மயிரனையர் மாந்தர்
நிலையின் இழிந்தக் கடை

உயர் நிலையிலிருந்து தாழ்ந்த நிலையை அடையும் மக்கள், தலையிலிருந்து விழுந்த மயிரின் நிலையைப் போல கருதப்படுவர் என்பது வள்ளுவன் வாக்கு.

குளிர்ச்சியான எண்ணெய், வேதிக்களிம்பு என பராமரிக்கும் தலைமுடி வாருகோலின் இழுப்பில் உதிரும்போது சுருட்டி எறிந்துவிடுகிறோம். திருப்பதி, பழனி, திருத்தணி போன்ற கோவில்களில் நேர்த்திக் கடனுக்காக கொடுக்கப்படும் முடி மாதத்திற்கு டன் கணக்கில் சேர்க்கிறது. ஆண்களின் முடி பெரும்பாலும் சாக்லேட் (chocolate) தயாரிக்க உப பொருளாகப் பயன்படுகிறது. பெண்களின் கேசம் அதனுடைய நிறம், நீளம், தன்மை போன்றவற்றைக் கருதி நல்ல விலைக்குப் போகிறது. இந்திய கூந்தலுக்கு வெளிநாடுகளில் நல்ல சந்தை இருப்பதால் பெரும்பாலும் ஏற்றுமதியாகிறது.

லட்சக் கணக்கான சிகை அலங்காரக் கலைஞர்கள் சிறுதொழிலாக முடி வெட்டுவதைத் தானே செய்கிறார்கள். மயிர் வியாபாரம் என்பது ஆண்டுக்கு பல கோடி ரூபாய் வருவாயை ஈட்டக் கூடிய தொழில். 'மயிர்' என்பது குபேர சம்பத்து. என்றாலும் பொது இடத்தில் இந்த வார்த்தையைப் பயன்படுத்துவது அவ்வளவு சரியாக இருக்காது.

மயிரு என்ற தலைப்பு முடிவானதுமே சலசலப்புடன் கூடிய கவனத்தைப் பெற்றது யாத்ராவின் கவிதை நூல். இவருடைய "எப்டியிருக்கிங்க" என்ற கவிதையை மட்டுமே இதுநாள் வரை வாசித்திருக்கிறேன். ஏனெனில் கவிதை என்ற நிறுத்தத்தில் என்னுடைய பேருந்து நிற்காது. வாகனம் பழுதாகி நின்றால்தான் உண்டு. நண்பர்கள் கவிஞர்களாக இருக்கும் பொழுது சாதகமான தயக்கங்களுடன் நிற்க வேண்டி இருக்கிறது. அதுவே தற்செயலான சந்தோஷங்களுக்கும் வழிவகுக்கிறது.

தொகுப்பை வெளியிட்டு பேசிய திரு.ராஜசுந்தரராஜன் கவிதைகள் மீதான ஈர்ப்பையே ஏற்படுத்திவிட்டார். நான்கு வரியே கொண்ட கவிதை கூட எவ்வளவு அழகான, ஆழமான விஷயங்களை அடக்கியிருக்கிறது என்று கவித்துவமாக பேசினார். அடுத்து பேசிய திரு. ஜ்யோவ்ராம்சுந்தர் நிறைகுறைகளை குறிப்பிட்டுப் பேசினார்.

தொகுப்பு கைக்குக் கிடைத்தவுடன் ஒவ்வொன்றாக வாசிக்க ஆரம்பித்தேன். பல கவிதைகளும் பிடித்தமாக இருந்தது. குறிப்பாக,

எட்டிப்பிடிக்க முயல
ரொட்டித்துண்டை இன்னும் உயர்த்த
முயல
உயர்த்த
முயல
எவ்வளவு குரூரம்
வீட்டு நாயாயிருக்கவே
சும்மா விட்டது...

செல்லப் பிரணியுடனான விளையாட்டாகவும், வதைக்கும் செயலாகவும் புரிந்துகொள்ளும் அதே நேரத்தில் தேர்தல் கால சலுகைகளையும் அதன் பின்னர் ஏமாளியாகும் மக்களின் யதார்த்த குறியீடாகவும் இந்தக் கவிதையை எடுத்துக் கொள்ளலாம். இது போன்ற பல கவிதைகளைக் குறிப்பிட முடியும்.

கவிதைக்கு விவரிப்புகள் தேவையில்லை. அது நாவலுக்கு உரித்தானது. ஆனால் கவிதையிலும் கல்யாண்ஜி போன்ற சிலர் விவரிப்புகளை பயன்படுத்தியிருக்கிறார்கள். அந்த வரிசையில் யாத்ராவையும் சேர்க்கலாம். இவருடைய பல கவிதைகளில் விவரிப்புகள் அருமையாக இருக்கின்றன. கவிதைக்கு முடிவும் முக்கியம். அதுவும் இவருக்கு கைவந்திருக்கிறது என்று ராஜசுந்தரராஜன் கூறினார். அதற்கு "இருப்பு" என்ற கவிதையை உதாரணமாக சொல்லலாம். ஒரு சமாதியின் பக்கத்தில் முளைத்த காளன் பற்றிய அழகான கவிதை. தொகுப்பிலுள்ள மிகப்பிடித்த கவிதை இது.

"மயிர் என்னை ஏதோ செய்கிறது. எவ்வளவோ விஷயங்களை எனக்கு சொல்கிறது.தத்துவங்களை கூட சொல்வது போல சமயத்தில் தோன்றும். என்ன செய்வது என்று தெரியவில்லை. இந்தக் தொகுப்பில் கூட 20 முறை பயன்படுத்தப்பட்டு இருக்கும்" என்று தனது நன்றியுரையில் யாத்ரா கூறினார். எதுவுமே உறுத்தக் கூடிய இயல்பில் சேர்க்கப்படவில்லை. அதன் பொருள் கருதியே பயன்படுத்தப் பட்டிருக்கிறது.

"எப்டியிருக்கிங்க" கவிதை மனதை ஏதோ செய்யக்கூடிய ஒன்று. ஒவ்வொரு வார்த்தையும் அழுத்தி வைத்த குமுறலின் வெளிப்பாடு. இதில் கூட ஓர் இடத்தில் முடி இருக்கும்.

"விழுந்த புத்தகமெடுக்க குனிய
கட்டிலுக்கடியில் சுவரோரம்
சுருண்டிருக்கும் நீண்ட ஒற்றைமுடி"

இந்தக் கவிதையை வாசித்து முடித்ததும் "பொதுவாகவே கவிதைகள் எனக்கு அவ்வளவு எளிதில் புரிவதில்லை என்று வருந்துபவன். இந்தக் கவிதை புரிந்தது மட்டுமல்லாமல் ஒரு வலியை ஏற்படுத்திவிட்டது" என்று யாத்ராவிற்கு சொல்லியிருந்தேன்.

முதன் முதலில் யாத்ராவை நேரில் பார்த்தது பசுமையாக நினைவில் இருக்கிறது. சென்னை சிறுகதைப் பட்டறையில் கடைசி இருக்கையில் அமர்ந்திருந்தேன். அருகில் வந்தவன் ஒரு நோட்டை நீட்டி பேனாவைக் கையில் கொடுத்தான். உங்களோட "மின்னஞ்சல் முகவரியும், விவரங்களும் எழுதித் தாருங்கள்..." என்றார்.

இறுக்கமாக முகத்தை வைத்துக்கொண்டு "என்னோட விவரங்கள் உங்களுக்கு எதற்கு?" என்று கேட்டேன்.

"தொடர்பில் இருக்கத் தான்..." என்று சிரித்துக் கொண்டே மென்மையாகக் கூறினார்.

அன்று பார்க்க நேர்ந்த குறும்புச் சிரிப்பும், மகிழ்ச்சியும் அவருடைய முதல் புத்தக வெளியீட்டில் மீண்டும் பார்க்க நேர்ந்தது. அவருடைய மகிழ்ச்சியான பயணம் இன்னும் தொடர வேண்டும் என்று நண்பனாகப் பிரியப்படுகிறேன்.

மென்மையான நண்பனின் புத்தகத்தை வாங்கிப் படிக்குமாறு நண்பர்களுக்குப் பரிந்துரைக்கிறேன். யாத்ராவின் புத்தகம் அகநாழிகை பதிப்பகத்தில் கிடைக்கிறது. புத்தக கண்காட்சியில் அரங்கு எண் 274-ல் அகநாழிகை புத்தகங்கள் அனைத்தும் கிடைக்கும்.

யாத்ராவின் வலைப்பூ முகவரி: http://yathrigan-yathra.blogspot.com

Wednesday, December 22, 2010

வெக்கை - பூமணி

ஆசிரியர்: பூமணி
வெளியீடு: பொன்னி பதிப்பகம்
விலை: ரூபாய் 300/-

கரிசல் மக்களின் வாழ்க்கையை நுட்பமாக தனது படைப்புகளில் பதிவு செய்தவர் எழுத்தாளர் பூமணி. யதார்த்த வாழ்வின் நெருக்கடிகளை இயல்பான மொழியில் பேசுபவை இவருடைய எழுத்துக்கள். கரிசல் விவசாயிகளின் வாழ்க்கை - பருவநிலை, மண்ணின் வாகு, கடின உழைப்பு என்று எத்தனையோ காரணிகளை நம்பி இருக்கிறது. இவற்றையெல்லாம் மீறி கிராமத்து பண்ணையார்களின் தலையீட்டையும் ஆதிக்கத்தையும் பொறுத்துக் கொள்ள வேண்டிய சூழல் குறு விவசாயிகளுக்கு இருந்தது. இப்பொழுது கூட தரகர்களிடமும், பன்னாட்டு நிறுவனங்களிடமும் அவர்கள் சிக்கித் தவிப்பதை பார்த்துக் கொண்டுதானே இருக்கிறோம். இந்தக் கதையும் விவசாய நில பிரச்சனையில் நடந்த கொலையின் தொடர்ச்சிதான்.

எதிரியின் கையை வெட்ட நினைத்து, தவறுதலாக மார்பின் விலாவில் குத்தி சாகடித்துவிட்டு ஓடும் 15 வயது சிறுவனாகிய செலம்பரத்தின்(சிதம்பரம்) பிம்பத்துடன் நாவல் தொடங்குகிறது. ஒருவார கால இடைவெளியில் நீதிமன்றத்தில் சரணடைவதற்கு முன்பு தனது தந்தையுடன் தலைமறைவாக எங்கெல்லாம் சென்று பதுங்கி வாழுகிறான் என்பதுதான் கதை. இந்த சின்ன முடிச்சில் என்ன சொல்லிவிட முடியும் என்று நினைத்தால் அதுதான் தவறு. வாசித்து அனுபவிக்க எவ்வளவோ விஷயங்களை நுணுக்கமாக பூமணி இந்நாவலில் சொல்லி இருக்கிறார்.


செலம்பரத்தின் அப்பா ஜின்னிங் ஃபாக்டரியில் வேலை செய்கிறார். ஃபாக்டரி முதலாளியின் நண்பர் வடகூரான் அந்த கிராமத்திலுள்ள எல்லா நிலங்களையும் தன்னுடைய சந்ததிகளுக்கு வளைத்துப் போட பார்க்கிறார். அப்படியே செலம்பரத்தின் குடும்பத்திற்கு சொந்தமான நிலத்தையும் வளைத்துப் போட பார்க்கிறார். அங்குதான் வருகிறது வினையே!. நிலவிவகாரத்தால் உட்புகைச்சல் ஏற்பட்டு செலம்பரத்தின் அண்ணன் கொலையாகிறான். இந்த குடும்பப் பகையை மனதில் வைத்து, இருள் கவிழ்ந்த மாலை நேரத்தில் செலம்பரம் வடகூரானை வெட்டி வீழ்த்துகிறான். தன்னைப் பிடிக்க வருபவர்கள் மீது கையெறிகுண்டை வீசி தப்பிக்கிறான். இதனை அவனுடைய அப்பாவும், மாமாவும் தெரிந்துகொள்கிறார்கள். எனவே விரைவாக செயல்பட்டு செலம்பரத்தின் அம்மா, தங்கை இருவரையும் அவனுடைய சித்தியின் ஊருக்கு அனுப்பிவிடுகிறார்கள். ஆசையாக வளர்த்த நாயையும், ஆடுகளையும் அத்தையின் பராமரிப்பில் விட்டுவிட்டு தலைமறைவாக வாழப் புறப்படுகிறான்.

கிணற்றடி, பனைக்கும்பல் இருக்கும் நீரோடை, நாணல் புதர், மலையடிவாரம், உச்சிமலை இடுக்குப் பாறை, கல்பொந்து, கோவில் மச்சு என்று எங்கெல்லாம் அப்பாவும் மகனும் செல்கிறார்களோ அங்கெல்லாம் நம்மையும் அழைத்துக் கொண்டு போகிறார்கள். ஒளிந்து வாழும் இடத்தில் கிடைத்ததை சமைத்து சாப்பிடுகிறார்கள். இருவரும் தனிமையில் பேசும் சின்னச் சின்ன உரையாடல்களிலும், அளவான வாக்கியத்தாலும் கதை அழகாக நகர்கிறது. "அப்பா, அம்மா, மாமா, அத்தை, அண்ணன், தங்கை, தம்பி, சித்தி, சித்தப்பா, நாய், ஆடு" என்று நாவலே அன்பால் பிணைக்கப்பட்டுள்ளது. மறைந்து வாழ்ந்தது போதும் என்று முடிவெடுத்து இருவரும் நீதிமன்றத்தில் சரணடைய செல்வதுடன் நாவல் முடிகிறது.

யதார்த்த நெருக்கடிகளுக்கு இடையில் வாழ்ந்த வாழ்க்கையை அசைபோட்டவாறே முழு நாவலும் நகர்கிறது. இந்த நாவல் ஹிந்தியில் மொழிமாற்றம் செய்யப்பட்டிருக்கிறது. "கருவேலம் பூக்கள்" என்ற திரைப்படத்தைத் தொடர்ந்து "வெக்கை" நாவலும் பூமணியால் திரைப்படமாக எடுக்கப்படுகிறது என்று நீண்ட நாட்களுக்கு முன்பு நாளேடுகளில் படித்திருக்கிறேன்.


ஜெயமோகன், எஸ்ரா போன்ற எழுத்தாளர்கள் தனக்குப் பிடித்த நாவல்களை பட்டியலிடும் பொழுது பூமணியின் வெக்கை நாவலையும் தவறாமல் குறிப்பிடுகிறார்கள். தீவிர வாசகர்கள் அவசியம் படிக்க வேண்டிய முக்கியமான நாவல். தற்போது பொன்னி பதிப்பகத்தில் பூமணியின் "பிறகு, வெக்கை, நைவேத்யம், வாய்க்கால்கள், வரப்புகள்" ஆகிய ஐந்து நாவல்களும் ஒரே தொகுப்பாகக் கிடைக்கிறது. பூமணியின் சிறுகதைகள் கூட மொத்த தொகுப்பாகக் கிடைக்கிறது. வாங்க நினைப்பவர்கள் வரும் புத்தக சந்தையில் பொன்னி பதிப்பக ஸ்டாலில் சென்று வாங்கிக் கொள்ளலாம்.

பின்குறிப்பு:
1. இந்த நாவலின் பாதிப்பில் கோணங்கி ஒரு சிறுகதை எழுதி இருப்பதாக ஜெயமோகன் எங்கோ எழுதி இருக்கிறார். அந்த சிறுகதையின் தலைப்பு எனக்கு ஞாபகம் இல்லை.
2. இலக்கிய சிந்தனை விருது, அக்னி விருது, தமிழ்ச் சங்க விருது போன்ற முக்கிய விருதுகளை பூமணி பெற்றிருக்கிறார்.
3. "சினிமாவில் விருப்பமே இல்லாதவர் பூமணி. அவர் ஒரு திரைப்படத்தை இயக்கி இருப்பது வினோதமான உண்மை" என்று ஞாநி பேச கேட்டிருக்கிறேன்.

Monday, December 6, 2010

ஒரு புளியமரத்தின் கதை - சுரா

வயோதிகப் பெண்மணியிடம் ஒரு முறை கிராமத்தில் பேசிக் கொண்டிருந்தேன். ஒரு காலை நீட்டியும், மறு காலால் அரிவாள்மனையை அழுத்தி பிடித்துக் கொண்டும் புளிக் கொட்டைகளை நீக்கியவாறு என்னிடம் பேசிக்கொண்டிருந்தாள். அறிந்து போட்ட புளியம்பழம் குன்று போலவும், கொட்டை நீக்கப்பட வேண்டிய புளி மலைபோலவும் அருகில் இருந்தன. புளியங்கொட்டையையும், காம்பையும் அறியும் பொழுதே தனித் தனியாக பிரித்து வைத்துக் கொண்டிருந்தாள் பாட்டி.

"எந்த காலத்தில் வாழ்கிறீர்கள்? காசு கொடுத்து தேவையான பொழுது கடையில் வாங்கிக் கொள்ளலாம் இல்லையா? இந்த வயதில் உங்களுக்கு இது தேவைதானா?" என்று கேட்டேன்.

"நீ ஏங்கண்ணு பேசமாட்ட... நாங்க அங்கபுடி இங்கபுடின்னு சேத்து வச்சதாலதான. ராசாவாட்டம் சுத்தி வரீங்க" என்றாள் பாட்டி.

"சும்மா படம் ஓட்டாதீங்க!" என்றேன்.

நான் முருகன் டாக்கீசு ஒனருல்ல... அதன் படம் ஓட்டுறேன். நீ வேற ஏன்யா!... நல்ல மரமா பாத்து, ஏலத்த எடுக்கறதே கஷ்டமா போச்சு. சரி... சரி... கேட்டுட்ட இல்ல முழுசா தெரிஞ்சுக்கோ.

பழத்தை பிரிக்க சொல்ல கெடைக்கிற மேல் ஓட்டையும், மேல் காம்பையும் மாட்டு சாணத்துல கலந்து உருண்டையா புடிச்சி காய வைப்போம். தண்ணி காயவக்க உதவுமுள்ள. நரம்பு மாதிரி இருக்கற திப்பியையும், பாதி சொத்தையா போன பழத்தையும் பித்தல சாமான் தேக்க வச்சிக்குவோம். சைக்கிள்ள வரவன்கிட்ட புளியங்கொட்டையை போட்டு காசு பண்ணிடுவோம். நல்ல சதையா இருக்குற புளிய சமையலுக்கு வச்சிக்குவோம். அதுல கூட பழைய புளி, புது புளின்னு கொழம்புக்கு ஏத்த மாதிரி சேர்த்துக்குவோம்.

"ஓடு, காம்பு, திப்பி, பழம், கொட்டை" -ன்னு ஒவ்வொன்னையும் வீணாபோகாம பாத்துக்கிறோம். அந்த மாதிரி சேத்து வச்சித்தான் உங்களைக் காப்பாத்தனோம். இன்னும் ஒன்னை மறந்துட்டேனே. புளியந்துளிரை பருப்புக்கூட சேத்து சமச்சா நல்லா இருக்கும். உங்க வீட்டுல சமச்சா "நீ கூட வழிச்சி வழிச்சி சாப்பிடுவே" -ன்னு உங்க அம்மா சொல்லி இருக்கா!.

பாட்டி பேசி முடித்த இடத்தில் என்னுடைய ஆச்சர்யம் தொடங்கியது. அவள் சொல்லியிருந்த எல்லாம் எனக்கு முன்பே தெரிந்த விஷயங்கள் தான். கழிவு மேலாண்மையைக் (Wastage Management) குறைபட்டுக் கொள்ளும் இன்றைய சமூகம், முன்னோர்களின் வாழ்க்கை முறையிலிருந்து கற்க வேண்டியதின் அவசியத்தை இதுபோன்ற தருணங்கள் தான் உணர்த்துகிறது. இயற்கைக்கு பங்கம் விளைவிக்காத முன்னோர்களுடைய வாழ்க்கை முறைதான் எத்தனை அழகு நிறைந்தது.

ஒரு மரம் காற்றையும், சூரிய ஒளியையும், தண்ணீரையும், மண்-சத்தையும் உறிஞ்சி அதனுடைய தன்மைக்கு ஏற்றவாறு காய்கனிகளைத் தந்து ஆகாயத்தை நோக்கி உயர்கிறது. அவற்றைப் பயன்படுத்தித்தான் உயிர்கள் எல்லாம் ஜீவிக்கிறது. சில நேரங்களில் மரம் கடவுளாகவும், கிராமவாசிகள் சந்திக்கும் மைய இடமாகவும் மாறி விடுவதுண்டு. உலகுக்கே ஞானத்தை போதித்த சம்பா சம்புத்தனுக்கு ஞானம் கிடைத்தது போதி மரத்தின் அடியில் தானே!. அந்த வகையில் இந்த நாவலும் ஒரு மரத்தை சுற்றியே கட்டமைக்கப் பட்டுள்ளது.

ஒரு புளியமரத்தின் கதை - சுதந்திர இந்தியாவின் முன்னரும் பின்னரும் மரத்தைச் சுற்றி நகரும் கதை. மரத்தின் தொன்மம் தாமோதர ஆசானின் மூலம் கற்பனை கலந்து முதல் பாதியில் விவரிக்கப்படுகிறது. செல்லத்தாய் உச்சிக் கிளையில் சுருக்கிட்டு இறந்து போவதையும், மன்னரின் விஜயத்தைப் பொருட்டு மரத்தின் அருகிலிருந்த குளம் மூடப்பட்டு சமதளம் ஆவதையும், வெட்ட வரும் மரத்தை கெப்ளாநிடமிருந்து சாதூர்யமாக காப்பாற்றும் விதத்தையை ஆசான் விவரிப்பதும் மரத்தின் ஜோடனைகளை வெளிப்படுத்தும் ஆரம்ப அமர்க்களம். மரநிழல் எப்படி மக்கள் புழங்கும் இடமாக மாறுகிறது என்பதை சுரா அவருடைய நடையில் சொல்லிச் செல்கிறார்.

கதையின் பின்பாதி தாமு-காதர் ஆகியோரின் வியாபாரப் போட்டியாகவும் அரசியல் போட்டியாகவும் மாறி நகர்கிறது. ஒருவரின் வெற்றியைப் பறிக்க அடுத்தவர் மறைமுகமாக செயல்படுகின்றனர். அதற்காக மனிதத்தின் எல்லை வரை செல்கின்றனர். மரத்தின் நிழல்தான் தாமுவின் வியாபாரத்திற்கு ஆதாரம் என்பதால் 'திருவிதாங்கூர் நேசன்' பத்திரிக்கை நிருபர் இசக்கி, முனிசிபாலிட்டி மூலமாக மரத்தினை அடியோடு சாய்க்க ஆட்களை சேர்க்கிறான். அதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டு மரத்தை வெட்ட வரும் நேரத்தில், தாமு ஆட்களை சேர்த்துக் கொண்டு மரத்தினை தெய்வமாக்கி விடுகிறான். இந்த இடத்தில் ஒரு நெருடல் இருந்தது. வேப்ப மரத்தை முனீஸ்வரனாக, காட்டேரியாக வழிபடும் குடும்பம் எங்களுடையது. எனக்குத் தெரிந்து புளிய மரத்தை இது போல யாரும் பூஜை செய்து நான் கேட்டதில்லை.

காட்டை நம்பி வாழும் வனவாசிகள், ஒரு மரத்தை வெட்டுவதற்கு முன், அந்த மரத்தின் காதில் "என்னுடைய வாழ்க்கையைக் காப்பாற்றிக்கொள்ள உன்னை அழிக்கிறேன். மன்னித்துக்கொள்" என்று முறையிட்டு வேண்டிக் கொண்டுதான் மரத்தை வெட்டுவானாம். எவ்வளவோ முன்னேறி இருக்கிறோம். வீடு கட்டுவதற்காகவும் நெடுஞ்சாலை விரிவாக்கத்திற்காகவும் எவ்வளவு மரங்களை வெட்டுகிறோம். ஒரு நிமிடம் யோசிக்கிறோமா? அதற்கும் உயிர் இருக்கிறது. ஒரு கதை இருக்கிறதென்று?. "அசோகர் சாலை ஓரங்களில் மரம் வளர்த்தார்" என்று சிறுவயதில் வரலாறு பாடத்தில் படித்திருக்கிறேன். அடுத்தடுத்த தலை முறையினருக்கு இந்த வரி ஒரு பகடியாகத்தான் இருக்கும் போல. ரோட்டோரங்களில் மரம் இருந்ததற்கான ஆதாரத்தை ஆவணங்களில் தான் தேடவேண்டி இருக்கும் போல.

முனிசிபாலிட்டி செய்வதறியாது முழிக்கிறது. தாமுவின் முன் தோற்கக் கூடாது என்ற கோணத்தில் காதர் யோசிக்கிறான். அந்த நேரத்தில் கூலி ஐயப்பன் காதருக்கு உதவ முன்வருகிறான். விஷம் கலந்த மருந்தை மரத்தில் பள்ளம் தோண்டி வைத்து சாணியிட்டு நிரப்பிவிட்டு கீழிறங்கும் பொழுது தாமுவின் ஆட்கள் பார்த்து விடுகிறார்கள். அங்கு நடந்த கைகலப்பில் கூலி ஐயப்பன் கொல்லப்படுகிறான். அதற்கடுத்த ஒரு வாரத்தில் மரம் செத்துவிடுகிறது. கடலை தாத்தாவின் அமோக வெற்றியால் தேர்தலில் தோற்ற தாமுவும், காதரும் வேறு ஊர்களுக்கு சென்று விடுகிறார்கள். மரம் முழுவதம் அகற்றப்பட்ட பின்னும் அந்த இடம் 'புளியமர ஜங்க்ஷன்' என்றே அழைக்கப்படுகிறது. அதன்பின்னும் சந்தை தனது இயல்பில் செயல்படுகிறது.

இந்த நாவல் இஸ்ரேலியர்கள் பேசும் புராதன ஹீப்ரூ மொழியில் Sipuro shel Ets Hatamarhindi என்று Dr. Ronit Ricci என்பவரால் நேரடியாக மொழிமாற்றம் செய்யப்பட்டு இருக்கிறது. வேறு எந்த தமிழ் நாவலுக்கும் இல்லாத சிறப்பாக இதனை சுஜாதா கூட தனது கற்றதும் பெற்றதும் தொடரில் குறிப்பிட்டு இருக்கிறார். பல்வேறு இந்திய மொழிகளிலும், உலக மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்ட முக்கியமான நாவல் இது. வெளியான நாளிலிருந்து இதுவரை 12 பதிப்புகள் கண்டுள்ளது. காலச்சுவடு கிளாசிக் வரிசையில் தரமான அச்சில் கிடைக்கிறது

தொடர்புடைய இதர பதிவுகள்:

1. ஒரு புளிய மரத்தின் கதை - ஒரு காலங்கடந்த பார்வை
2. இலக்கிய மேட்டிமைத்தனத்தினுள் உறையும் அற்பவாத இதயம்

ஒரு புளியமரத்தின் கதை
ஆசிரியர்: சுந்தர ராமசாமி
வெளியீடு: காலச்சுவடு பதிப்பகம்
விலை: 150/- ரூபாய்

Saturday, December 4, 2010

எனது மதுரை நினைவுகள்

கேணி ஓவியர் சந்திப்பு - மனோகர் தேவதாஸ்

ஒவ்வொரு நாளும் நம்மைச் சுற்றியுள்ள இடமும் மனிதர்களும் மாறிக்கொண்டே இருக்கிறார்கள். சூழ்நிலையை சமாளித்தவாறே நம்முடைய வாழ்க்கையை முன்னெடுத்துச் செல்கிறோம். கலைந்த பாதச்சுவடுகள் பாதைகளெங்கும் ஏராளமாக விரவிக் கிடக்கிறது. ஏற்படுத்திய பாதங்களை நாம் யோசிப்பதே இல்லை. விரையும் பயணத்தில், பதிந்த சுவடுகளை சிதைத்து விட்டுச் செல்கிறோம். காற்றின் கைகள் வருடும் முன் நம்முடைய தடயங்களை அடுத்தடுத்த ஜோடிக்கால்கள் வேகமாகச் சிதைக்கிறது. இதில் நம் பயணத்தின் அடையாளம் தான் என்ன!?,

மனோகர் தேவதாஸின் வாழ்க்கைப் பயணம் - அலையின் கரங்கள் தீண்ட முடியாத, ஈரக்கால்கள் பதிந்த வசீகரத் தடயம் போன்றது. வாழ்க்கையின் இருப்பே கேள்விக்குறியாகும் பொழுது "அடுத்தது என்ன?" என்ற ஐயம் எழும். எதிர்மறையான தருணங்களை சாதகமாக மாற்றும் பொழுதுதான் வாழ்வின் சுவையான பகுதியினை அனுபவிக்க முடிகிறது. இவருடைய வாழ்க்கை ஊகிக்க முடியாத திருப்பங்களை உடையது. திருப்பங்கள் உறைய வைக்கக்கூடிய அதிர்ச்சியை அளித்தாலும் அதிலிருந்து மீண்டு சாதனை படைத்தவர். அந்த சாதனைகளில் இந்தப் புத்தகமும் ஒன்று.

1940-களின் தொடக்கத்திலிருந்து அவர் வாழ்ந்த மதுரையை சுற்றியே நாவல் நகர்கிறது. பச்சை கிணறு, ஸ்பென்சர்ஸ், ரீகல் டாக்கீஸ், ஆர்வி மில்ஸ், யானை மலை, வைகை ஆறு, அமெரிக்கன் கல்லூரி, மதுரை மீனாட்சி அம்மன் கோயில், திருமலை நாயக்கர் மஹால், தெப்பகுளம், ரயில்வே காலனி என்று நண்பர்களுடன் சுற்றிய பல இடங்களின் பசுமையான நினைவுகளை மீட்டெடுத்துள்ளார். ஆங்கிலேயர் ஆண்ட இந்தியாவில் மதுரை மக்களின் மனநிலை மற்றும் வாழ்வியல் நிலை, சுதந்திர இந்தியாவில் அவர்களுடைய மனநிலை மற்றும் வாழ்வியல் நிலையினை எளிய மக்கள் மற்றும் குழந்தைகளின் உரையாடல் மூலம் அழகாக சொல்லிச் செல்கிறார்.

இந்த புத்தகத்தை எழுத நேர்ந்ததின் கட்டாயத்தை கேணி சந்திப்பில் மனோகர் தேவதாஸ் கூறிய பொழுது நெகிழ்ச்சியாக இருந்தது. Green Well Years - என்று ஆங்கிலத்தில் தான் முதலில் எழுதி இருக்கிறார். அவருடைய நண்பர்கள் மற்றும் எழுத்தாளர் அசோகமித்ரனின் முயற்சியினால் தான் தமிழில் மொழி மாற்றம் செய்திருக்கிறார்.

தூங்கா நகரமான மதுரை வீதிகளில் உலாவ வேண்டுமென்பது நீண்ட நாள் விருப்பம். இதுநாள் வரை அந்த வாய்ப்பு கிடைத்ததில்லை. சபரி மலைக்கு சென்றபொழுது அதற்கான வாய்ப்பு கிடைத்தும் கடைசி நேரத்தில் முடியாமல் போனது. நேரில் சென்று பார்த்திருந்தால் கூட மனோகர் தேவதாஸ் காட்சிப்படுத்தும் புராதன மதுரையை என்னால் உள்வாங்கி இருக்க முடியாது என்றே தோன்றுகிறது. இன்று மதுரை எவ்வளவோ மாறி இருக்கலாம். மாற்றம் எல்லாவற்றிற்கும் பொதுவானதுதானே? அந்த விஷயத்தைக் கட்டுடைத்து காலத்தின் முன்னோக்கியோ அல்லது பின்னோக்கியோ எடுத்துச் செல்லும் பக்கும் படைப்பாளிக்கு மட்டும் தானே இருக்கிறது. அந்த வேலையை தான் ஓவியர் மனோகர் தேவதாஸ் இந்த நாவலில் செய்திருக்கிறார். மதுரைவாசிகள் அவசியம் படித்து அனுபவிக்க வேண்டிய புத்தகங்களில் இதுவும் ஒன்று.மற்றவர்களும் வாசித்து மகிழலாம்.


புத்தகம் தொடர்புடைய இதர பதிவுகள்:

1. எனது மதுரை நினைவுகள் - எழுத்தாளர் தமிழ்மகன்
2. எனது மதுரை நினைவுகள் - பதிவர் பிரேம்குமார்

எனது மதுரை நினைவுகள்
ஆசிரியர்: மனோகர் தேவதாஸ்
வெளியீடு: கண்ணதாசன் பதிப்பகம்
விலை: 150/- ரூபாய்

பின் குறிப்பு: மனோகரின் கலைப் படைப்பு எதை நீங்கள் வாங்கினாலும், அந்தப் பணம் ஏழை மக்களின் கண் மருத்துவ செலவிற்குப் பயன்படுகிறது. அவருடைய "வாழ்த்து அட்டைகள், ஓவியங்கள், புத்தகங்கள்" அனைத்தும் விலைக்குக் கிடைக்கிறது.

Tuesday, November 9, 2010

சப்தங்கள் - வைக்கம் முகம்மது பஷீர்

ஆசிரியர்: வைக்கம் முகம்மது பஷீர்
வெளியீடு: காலச்சுவடு பதிப்பகம்
தமிழில்: குளச்சல் மு யூசுப்
விலை: 80 /- ரூபாய்

'சப்தங்கள்' - பஷீரின் இரண்டு குறுநாவல்கள் அடங்கிய மொழிபெயர்ப்பு நூல். இரண்டுமே 50 ஆண்டுகளுக்கு முன்பு வெளிவந்தவை. விளிம்புநிலை மனிதர்களின் வாழ்வியல் நெருக்கடிகளை இணக்கமான மொழியில் பேசுபவை. வெளிவந்த காலத்தில் வாசகர்களின் தீவிர கவனத்தைப் பெற்றவை. முதல் கதை இறுக்கத்தை அதன் போக்கிலும், இரண்டாம் கதை தவிர்க்க முடியாத வாழ்வியல் நிர்பந்தங்களின் ஊடே வெளிப்படும் இயல்பான ஹாஷ்யத்தின் வழியாகவும் வெளிப்படுத்துகிது.

'சப்தங்கள்' கதையில் குடிகாரர்கள், அநாதைகள், பிச்சைக்காரர்கள், காமத்தில் உழல்பவர்கள், விபச்சாரிகள், இருபால் விருப்பமுடையவர்கள் என்று கழிசடையில் வாழ்பவர்கள். இவர்களுடைய வாழ்விலும் அன்பு, இறக்கம், தோழமை எல்லாவற்றிற்கும் மேல் நெருக்கடி இருக்கிறது என்பதை மெல்லிய இழையாகச் சொல்லிச் சொல்லும் குறுநாவல்.

'மூணுசீட்டு விளையாட்டுக்காரன் மகள்' கதையில் வருபவர்கள் அதற்கு சற்றும் குறையில்லாத ஏமாற்றுக்காரங்கள். சீட்டு விளையாட்டில் ஏமாற்றிப் பிழைக்கும் ஒத்தைக் கண்ணன் பார்க்கர், பிக்பாக்கட் முஸ்தபா, பொங்குருசு தோமா, முஸ்தபாவைக் காதலிக்கும் பார்க்கரின் மகளான ஸைனபா (
இவளும் மார்க்கெட்டில் கிடைப்பதை திருடுபவள்) - "ஆங்... தோ... வை ராஜா வை... ஒன்னு வச்சா ரெண்டு. ரெண்டு வச்சா நாலு" என்ற ஏமாற்று விளையாட்டை மையப்படுத்தி நகரும் கதை என்பதால் 'ஒத்தைக் கண்ணன் பார்க்கர்' கதாப்பாத்திரம் பிதாமகனில் வரும் சூர்யாவை ஞாபகப்படுத்தியது. இந்த விளையாட்டில் யாராலும் தோற்கடிக்க முடியாத பார்க்கரை, ஸைனபாவின் காதலுடன் முஸ்தபா முறியடிக்கிறான்.

இரண்டு கதைகளுமே வாழ்வின் சுயதேவைகளைப் பூர்த்தி செய்ய
ப் போராடும் எளிய மனிதர்களின் கதை.
--------------------------------------------------------------------------------------------------------------
பின்னட்டையிலுள்ள வாசகம்:

வைக்கம் முகம்மது பஷீரின் புகழ் பெற்ற இரண்டு குறு நாவல்கள் - 'சப்தங்கள்', 'மூணுசீட்டு விளையாட்டுக்காரன் மகள்' - இந்தத் தொகுப்பில் உள்ளன.

ஒரே உலகத்தின் இருவேறு தோற்றங்கள் இந்தக் குறுநாவல்கள். இது ஒரு விளிம்புநிலை உலகம். 'சப்தங்க'ளில் இந்த உலகம் இருண்டது. அச்சுறுத்துவது. காமத்தின் கவிச்சையில் புரள்வது. அதன் மனிதர்கள் வேசிகள், அநாதைகள், பிச்சைக்காரர்கள், ஓரினைச் சேர்க்கையாளர்கள். 'மூணு சீட்டு விளையாட்டுக்காரன் மக'ளில் அதே போன்ற மனிதர்கள் இடம் பெற்றிருந்தாலும் இந்த உலகம் ஒளிமயமானது. வேடிக்கையானது. நகைச்சுவை ததும்புவது.

சென்ற நூற்றாண்டின் மையப் பகுதியில் பஷீர் எழுதிய இந்த நூற்றாண்டுக் கதைகள் இவை.

கவிஞர் சுகுமாரன்
--------------------------------------------------------------------------------------------------------------

பஷீரின் இதர மொழிபெயர்ப்புகளும் காலச்சுவடில் கிடைக்கிறது.

1.
மதில்கள் - கவிஞர் சுகுமாரன்
2.
உலகப் புகழ் பெற்ற மூக்கு - குளச்சல் மு யூசுப்
3.
பால்யகால சகி - குளச்சல் மு யூசுப்

Monday, October 11, 2010

பரத்தை கூற்று - CSK

காட்டுப் பூக்களால் தொடுத்த மாலையை கழுத்தில் போட்டுக்கொண்டு வாலியுடன் துவந்த யுத்தத்தில் இருக்கிறான் சுக்ரீவன். வாலியின் அடி ஒவ்வொன்றும் பாறையென சுக்ரீவன் மேல் விழுந்து கொண்டிருக்கிறது. எங்கிருந்தோ வந்த கூறிய அம்பு வாலியின் தேகத்தைத் துளைத்து இதயத்தைத் தொட்டுக் கொண்டு நிற்கிறது. அம்பினை எடுத்துப் பார்த்து ராமபாணம் என்று தெரிந்துகொள்கிறான்.

"மறைவில் இருந்து தாக்குகிறாயே சூரியகுலத்தில் உதித்த உனக்கு இது தகுமா? உன்னுடைய குலத்திற்கே களங்கம் ஏற்படுத்திவிட்டாயே? என்று ராமனைப் பார்த்துப் பொருமுகிறான்.

"நீ மட்டும் சுக்ரீவனை துரத்திவிட்டு அவனுடைய மனைவியை அனைத்துக் கொண்டாயே அதுமட்டும் ஞாயமா?" என்று ராமன் கேட்கிறான்.

"ஒரு தார கற்பொழுக்கம் எல்லாம் மனித குலத்திற்குத் தான். வானரர்களுக்கு இல்லை. அதற்காகவா என்னைக் கொன்றாய்..." என்று வாலி கேட்கிறான். (அதன் பிறகு ராமனுக்கும், வாலிக்கும் நடக்கும் உரையாடல் சுவாரஸ்யம் வாய்ந்தது. வாய்ப்பு கிடைக்கும் பொழுது அதைப்பற்றி பேசலாம்...)

"குரங்கிலிருந்து மனிதன் பரிமாண வளர்ச்சி கண்டான்..." என்பது குட்டலினி கபாலத்தைத் தொட்ட விஞ்ஞானிகள் ஏற்றுக் கொண்ட விஷயம். மனிதர்கள், யாரும் யாருடனும் வெளிப்படையாகப் புணரலாம் என்பது கலாச்சார ரீதியாக முகம் சுளிக்கக் கூடிய விஷயம். ஏனெனில் நாகரீகத்தின் நிழலைப் பின் தொடர்ந்து நாம் வெகுதூரத்திற்கு வந்துவிட்டோம். அதில் கூட ஆண்களுக்கு ஒரு விதமாகவும், பெண்களுக்கு ஒரு விதமாகவும், திருநங்கைகளுக்கு ஒரு விதமாகவும் நம் சமூக அமைப்பு செயல்படுவது வேதனைக்குரிய உண்மை.

பெண் விபச்சாரிகளைக் கணக்கெடுத்துப் பார்க்கையில் ஆண் விபச்சாரிகளோ, திருநங்கைகளோ மிகவும் குறைவு. அதிலும் பெண் விபச்சாரிகளில் பலரும் நிர்பந்தத்தினால் தான் பாலியல் தொழிலுக்கு வருகிறார்கள். அவர்களின் மனச் சோர்வும், மன உளைச்சலும் வார்த்தைகளால் விளக்க முடியாத ஒன்று.

என்னுடைய கல்லூரி வாழ்க்கையின் இறுதியாண்டில் இருக்கிறேன். சொற்சித்தர் வலம்புரி ஜான் அவர்கள் ஆண்டுவிழாவில் பேச இருக்கிறார். ஆர்வமுடன் மாணவர் கூட்டத்தில் நின்று கொண்டிருந்தேன். வந்தவர் பேசினார். அது பேச்சல்ல... மாயவெளி... ஆம்... அவரின் பேச்சு என்னை எங்கெங்கோ அழைத்துச் சென்றது. அதில் 'வேசியின் கல்லறையும்' அடக்கம்.

வேசியின் சமாதியைப் படிமமாக வைத்து கவிதை எழுதுமாறு கேட்டிருந்தார்கலாம். அதற்கு ஒரு கவிஞன் கீழ்கண்டவாறு எழுதியிருந்தானாம். எழுதியவன் கல்லூரி மாணவன் என்பதால் அவரைப் பற்றி புகழ்ந்து பேசிக்கொண்டிருந்தார். அந்த வரிகள்...

'இன்றுதான் இவள் -
நிம்மதியாகத் தூங்குகிறாள்.
இனிமேலும் இப்படித்தான்...'
வேசியின் கல்லறை

மேலுள்ள நான்கு வரிகள் வேசிகளின் விழிப்பு நிலை வேதனைகளை, காமத்தின் பற்கள் கொஞ்சம் கொஞ்சமாக கொறித்துத் தின்பதை உணர்த்துவதற்குப் போதுமானதாக இருக்கிறது. ஓய்வின் குளிர்ச்சியை, உறக்கத்தின் வாசனையை, தனிமையின் அழகை, வாழ்வின் நிம்மதியை பரத்தையின் சமாதி மட்டுமே அவளுக்குக் கொடுக்கிறது.

இந்தக் கவிதையை நான் கேட்டுக் கொண்டிருந்த வயதில் நண்பர் CSK வேசிகளின் உணர்வுகளைப் பற்றி சிந்தித்துக் கொண்டு இருந்திருக்கிறார். பரத்தையின் கூற்றாக 500 கவிதைகளை அப்பொழுதே எழுதியிருக்கிறார்.


அவற்றில் சிறந்ததெனத் தோன்றிய 150 கவிதைகளை அச்சில் கொண்டு வந்திருக்கிறார். மொத்தம் ஐந்து பகுதிகளாக பிரித்திருக்கிறார். பாரா-வின் பயிலரங்கில் தான் முதன் முதலில் CSK-வைப் பார்த்தேன். பரஸ்பரம் அறிமுகப்படுத்திக் கொண்டோம். அந்த நட்பில் புத்தகத்தை தபாலில் அனுப்பியிருந்தார். தொகுதியிலுள்ள சில கவிதைகளை அவரின் அனுமதியுடன் இங்கே வாசிக்கக் கொடுக்கிறேன்...

குறிஞ்சி - புணர்தலும் புணர்தல் நிமித்தமும்

0
விரல் தொடுகிறாய்
இதழ் தொடுகிறாய்
இடை தொடுகிறாய்
முலை தொடுகிறாய்
பிருஷ்டம் தொடுகிறாய்
யோனி தொடுகிறாய் -
எவனும் மனசு தொட்டதில்லை

முல்லை - இருத்தலும் இருத்தல் நிமித்தமும்

0
இன்றைய தேதியில் இங்கே
எவளுக்கும் சாத்தியமில்லை
பெய்யெனப் பெய்யும் மழை

0
எம் இனத்தின்
பாரம்பரிய உடை
நிர்வாணம் -
முழு நிர்வாணம்

மருதம் - ஊடலும் ஊடல் நிமித்தமும்

0
காமமடக்கியதால்
ஞானமடைந்தனர்
யோகிசிலர் - யாம்
அது அலுத்ததால்

0
எந்நிறுவனமாவது
எம் யோனிக்குத்
தருமா காப்பீடு?

இதே போல நெய்தல் (இரங்கலும் இரங்கல் நிமித்தமும்) பாலை (பிரிதலும் பிரிதல் நிமித்தமும்) கவிதைகளும் பரத்தைமையின் அங்கதக் குரலை உரத்துச் சொல்பவையாகத்தான் இருக்கிறது.

பாலை - பிரிதலும் பிரிதல் நிமித்தமும்

0
பள்ளிக்கூடம் சேர்க்கையில்
மகனின் குலம் கேட்கின்றனர்
சாதிச்சான்றிதழ் சரிபார்த்துச்
செய்வதில்லை விமச்சாரம்

அடிமைத்தனம், வெட்கம், இயலாமை, பிழைப்பு, மிடுக்கு, போலீசின் கெடுபிடி, இளக்காரம், அவமானம், ஆணாதிக்கம், கீழ்ப்பார்வை, வெறுப்பு, தேவை, நிர்பந்தம், கோவம், நடிப்பு என்று வேசிகளின் உணர்வுகளை கவிதையின் ஒவ்வொரு மூலையிலும் உணர முடிகிறது.

நீண்ட நாட்களுக்கு முன்பு தொலைக்காட்சியின் நேர்முகத்தில் வைரமுத்து பேசிக்கொண்டிருந்தார். அவரிடம் "யாருடன் உரையாடுவது சுவாரஸ்யம் நிறைந்தது?" என்ற கேள்வி கேட்கப்பட்டது. "காதலி, இலக்கிய நண்பர்கள், பால்ய சிநேகிதர்கள்" இதில் எதையாவது ஒன்றை சொல்லுவார் என்று அந்த நொடியில் யோசித்துவிட்டேன்.

அவருடைய பதில் என்னுடைய யூகத்தை பொடிப்பொடியாகச் சிதறச் செய்தது. "வேசி" - என்ற ஒற்றைப் பதிலை உதிர்த்துவிட்டுச் சிரித்தார். ஓர் ஊரிலுள்ள பெரிய மனிதர்களின் ரகசியங்கள் அவளிடம் தான் பொதிந்து கிடக்கும். அதையெல்லாம் அவள் சொல்லக் கேட்டால் நேரம் போவது தெரியாமல் உரையாடிக் கொண்டிருக்கலாம் என்றார். ரகசியத்தைத் தெரிந்து கொள்வதுதானே உலகிலுள்ள சுவாரஸ்யமான விஷயம்.

பரத்தைகளின் உணர்வுகளில் காமத்தை தவிர மற்ற எல்லா உணர்வுகளும் கூட ரகசியம்தான். அதைப் போட்டு உடைக்கும் கவிதைகள் தான் 'பரத்தை கூற்று'.

ஆசிரியர்: சி.சரவணகார்த்திகேயன் (http://www.writercsk.com)
வெளியீடு: அகநாழிகை பதிப்பகம்
விலை - ரூ.50/-

Thursday, October 7, 2010

உப பாண்டவம் - எஸ்ரா

புத்தகம் : உப பாண்டவம்
ஆசிரியர் : எஸ்.ராமகிருஷ்ணன்
வெளியீடு : விஜயா பதிப்பகம்
விலை : 150 ரூ

இதிகாசங்கள் அனைத்தும் புனைவிற்கும் அ-புனைவிற்கும் இடையில் திரிசங்குபோல தொங்கிக் கொண்டிருக்கின்றன. அவற்றில் மகாபாரதம் முக்கியமான ஒன்று. அதிலுள்ள கிளைக் கதைகளின் மீதான மீள் புனைவுதான் எஸ்ரா-வின் உப பாண்டவம்.

நான்கு வருடங்களுக்கு முன்பு இந்தப் புத்தகத்தைத் தேடி அலையாத இடமில்லை. துணையெழுத்தின் வசீகரம் அவருடைய இதர புத்தகங்களின் மீதான வேட்கையை அதிகப்படுத்தியபடியே இருந்த அற்புதமான நாட்கள் அவை. இலக்கிய நண்பர்களின் பரிட்சயமும் இல்லை. ஒரு புத்தகத்தின் உள் அட்டையில் அவருடைய முகவரியும், தொலைபேசி இலக்கங்களும் இருந்தன. கொடுத்திருந்த எங்களில் தொடர்பு கொண்டேன். அவருடைய மனைவிதான் எதிர் முனையில் பேசினார்கள். எஸ் ராவைப் பற்றி விசாரித்தேன். 'அவர் வீட்டில் இல்லை' என்று கூறினார். உபபாண்டவம் எங்கு கிடைக்கும்? என்று விசாரித்தேன். 'திநகர் நியூ புக் லேண்ட்ஸ்' -ல் விசாரித்துப் பார்க்கச் சொன்னார். அங்கும் கிடைக்காமல் வேறெங்கோதான் வாங்கினேன். பல வருடம் கழித்து மீண்டும் உப பாண்டவத்தை படித்த பொழுது, புதுப்புது காட்சிகளை முன்வைத்த படியே பாரதக் கதை என்னை உள்ளிழுத்துக் கொண்டது.

அதோ பாஞ்சஜன்யத்தின் ஒலி என் காதில் துல்லியமாகக் கேட்கிறது.
கௌரவ பாண்டவர்களின் அக்ரோணிப் படைகள் எதிரெதிரே அணிவகுத்து நிற்கின்றன. படைகளின் சிறு அசைவு கூட புழுதியை எழுப்பி மணல் புயலாக காட்சியளிக்கிறது. எதுவுமே தெளிவாகத் தெரியவில்லை. சங்கொலி மட்டுமே நடக்கவிருக்கும் அபாயத்தை உணர்த்திக் கொண்டிருந்தது. அங்கிருந்து அஸ்தினாபுரத்தை நோக்கிப் புறப்பட்டேன். மெதுவாக திருதுராஷ்டனின் சயன அறைக்குச் சென்றேன். அரசனின் கண்களிலிருந்து இருள் இருளாக துக்கம் வழிந்துகொண்டிருந்தது. அவன் முன்னே சஞ்சயன் யோக நிலையில் இருந்தான். சஞ்சயனின் நிழல் என்மீது பட்டு குளிர்ச்சி தருவதாக இருந்தது. மௌனியாக நானும் அமர்ந்துகொண்டேன். நடப்பவை யாவற்றையும் சஞ்சயன் சொல்லிக் கொண்டிருந்தான். திருதுராஷ்டன் அகக் கண்களால் பார்த்துக் கொண்டிருந்தான். நான் ஓசை எழுப்பாமல் கேட்டுக் கொண்டிருந்தேன்.

'சண்டையிடமாட்டேன் என்று அர்ஜுனன் தளர்ந்துவிட்டான். சண்டையிட்டே ஆக வேண்டிய சூழ்நிலையை கிருஷ்ணன் எடுத்துச் சொல்லி அர்ஜுனனை தேற்றிக் கொண்டிருக்கிறான். எடு காண்டிபத்தை என்கிறான்.' என்ற சஞ்சயனின் விவரிப்பைக் கேட்ட அரசன் "அவன் தானே, அந்த சூழ்ச்சிக்காரன் தானே இந்த அழிவுக்குக் காரணம். அவனுடைய குலமே நாசமாகட்டும்..." என்று கிருஷ்ணனை சபிக்கிறான்.

நடக்கவிருக்கும் விபரீதத்தை தெரிந்து கொள்ளும் ஆவலுடன் மௌனத்தில் இருந்தேன்.

"கரண்ட் கட்"... தொலைகாட்சி தனது உயிர்த் துடிப்பை இழந்திருந்தது... திரும்பிப் பார்த்தேன் "யுதிஷ்டிரன் தானே எல்லாத்துக்கும் காரணம்!" என்று என்னுடைய அப்பாவின் உதடுகள் முணு முணுத்துக் கொண்டிருந்தன.

எனக்கும் என் தந்தைக்கும் ஏழாம் பொருத்தம். அவர் யோசிப்பதற்கு நேரெதிராகவே யோசித்துப் பழக்கப்பட்டவன். எனவே "எப்படி?" - என்று அவரிடம் கேட்டேன்.

"பரமபதம் (சூது) விளையாடக் கூப்பிட்ட பொழுது யுதிஷ்டிரன் நெனச்சிக்கினானாம்... கிருஷ்ணன் வரக்கூடாதுன்னு. அவன் வந்தால் விளையாட வேண்டாம் என்று தடுத்து விடுவான். திருதுராஷ்டன் கூப்பிட்டு எப்படி மறுப்பது என்று யோசிச்சானாம். ஒவ்வொரு முறை பகடையை உருட்டும் பொழுதும் கிருஷ்ணன் வரக்கூடாதுன்னு நெனச்சிக்கினானாம். அப்புறம் போனது பாஞ்சாலியோட மானம் தானே. அவ தானே சண்டையை இவ்வளோ தொலைவு எடுத்துட்டு வந்தா. எங்க இருந்தோ துணியக் கொடுத்தவன், பக்கத்துல இருந்திருந்தா சகுநியையே ஏமாத்தி இருப்பான் இல்ல... எல்லாத்துக்கும் காரணம் முட்டாள்பய தர்மன் தான்" என்று சொன்னார். இதுவரை கேட்டிராத விஷயத்தை என்னுடைய அப்பா சாதரணமாக சொல்லிக் கொண்டிருந்தார்.

தற்போதைய நிலையில் பாரதக் கதையின் ஒரே சாட்சி 'அஸ்வத்தாமன்'. எங்கெங்கோ தேடி சாவற்ற அவனுடைய கைகளை காற்றின் துணையுடன் பற்றினேன். அவனுடைய நெற்றி புரையோடிக் கிடந்தது. காயத்தின் காரணம் கூட அவனுக்குத் தெரியவில்லை. எதையோ தேடிக் கொண்டிருந்தான்.மனோ வேகத்தில் அஸ்தினாபுரம் நோக்கிப் புறப்பட்டோம். வாழ்ந்த சுவடின் ஞாபகங்களே அவனிடம் இல்லை. இரவு குருதியின் கரைகளைத் தொலைத்திருந்தது. காலம் அதன் சாட்சியாக மௌனித்திருந்தது. என்னெதிரே அஸ்வத்தாமனை அமரச் செய்தேன். சிரம் தாழ்ந்து அமரும் பொழுது அவனுடைய ஒரு துளி இரத்தம் பூமியில் விழுந்தது. சொந்த மக்களின் ரத்தத்தை ருசி பார்க்க அஸ்தினாபுரத்தின் நாக்கு தனது சுவை மொட்டுக்களை தயாராகவே வைத்திருக்கின்றன. இந்த ஒரு துளி அதன் பழைய ஞாபகங்களை மீட்டிருக்கும். யாரின் இரத்தம் சுவையானதென அதன் ஞாபகம் பீரிட்டிருக்கும். அஸ்வத்தாமனின் கண்கள் சோர்வினை வெளிப்படுத்தியது. அது திருதுராஷ்டனின் இருள் கவிழ்ந்த கண்களை ஒத்திருந்தது. அவனுக்கு எதிரில் என்னை அமர்த்திக் கொண்டேன். சஞ்சயனின் நிழல் என்மேல் படருவதை நான் உணர்ந்தேன். என் கைகள் உப பாண்டவத்தின் பக்கங்களைப் புரட்டுகிறது. உதடுகள் தன்னிச்சையாக அசைகிறது.

"அஸ்வத்தாமா!, நட்சத்திரங்கள் பாண்டவ கௌரவர்களின் ஒற்றர்களைப் போல நம்மைக் கண்டு கொண்டிருக்கின்றன. உன் தேடுதல் நிரந்தரமானது. நீ சபிக்கப்பட்டவன். உன்னுடைய நிரந்த ஓய்வை நீயே கொடுத்துக் கொண்டாய். அதற்குக் காரணம் நீ வதம் செய்த பாரதப் புதல்வர்கள்... உப பாண்டவர்கள்..." என்று சொல்லிவிட்டு பாரதக் கதையின் முன்னுரையிலிருந்து ஆரம்பித்தேன். வால் நட்சத்திரம் எரிந்து விழுவது தூரத்தில் தெரிந்தது. அஸ்வத்தாமனிடம் காட்டினேன். தான் வாழ்ந்த சரித்தரத்தை நிராகரித்தவனாக நட்சத்திரத்தின் மரணத்தை நோக்கி அவன் சென்று கொண்டிருந்தான். இல்லாமல் போவதன் வசீகரம் அவனைச் சுண்டி இழுக்கிறதோ என்னவோ? ஒவ்வொரு மரணத்தையும் அவன் ஏக்கத்துடன் பார்க்கிறானோ என்னவோ? அவனுடைய மரணத்தினை சுவைத்திட அஸ்தினாபுரமும் குருக்ஷேத்ரமும் அவனை பின்தொடர்கிறதோ என்னவோ?. நான் செயலற்று நின்று கொண்டிருந்தேன். என்னுடைய மனம் அஸ்வத்தாமனுக்கு சொல்ல நினைத்த பாரதக் கதையை அசைபோட்ட படியே இருக்கிறது...

பின்னட்டை வாசகம்:

**************************************************************
இந்திய மனதின் தொன்மையான நினைவுகள் மகாபாரதத்தின் வழியே கதைகளாக பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. அந்த நினைவுகளின் ஊடாக மனிதர்களின் தீராத போராட்டமும் ஏக்கங்களும் பீறிடுகின்றன. காலத்தின் உதடுகள் என்றும் முணுமுணுத்துக் கொண்டிருக்கும் அந்த மகாகாவியத்தின் இடைவெளிகளை தனது கதை சொல்லலின் வழியே புத்துருவாக்கம் செய்திருக்கிறார் எஸ் ராமகிருஷ்ணன்.

மகாபாரதத்தின் உப கதாப்பாத்திரங்களின் வழியே அறியாத கதையும் வெளிப்படுத்தப்படாத துக்கமும் புனைவுருவாக்கம் கொண்டிருக்கின்றன. அவ்வகையில் இது நவீன தமிழ் இலக்கியத்திற்கு பெருமை சேர்க்கும் தனித்துவமான நாவலாகும். வங்காளம், மலையாளம், ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகளில் தற்போது மொழிபெயர்க்கப்பட்டு வருகிறது.

வாசகர்களின் பெரும் கவனத்திற்கு தீவிர வாசிப்பிற்கும் உரியதாக இருந்த உப பாண்டவம் இப்போது மூன்றாம் பதிப்பாக வெளிவருகிறது.

**************************************************************

நாவன்மையினால் பாரதக்கதை நாளுக்கு நாள் விசாலமாகிக் கொண்டே இருக்கிறது. காலம் கூட அதன் ஒப்பனையை மாற்றிக் கொண்டே இருக்கிறது. அதன் நளினம் கூடுவது இதுபோன்ற விசாலத்திலும், ஒப்பனையிலும் தான் இருக்கிறது. தெரிந்த இடத்தின் அறியாத பாதைகளை கிளைவிரித்துச் செல்லும் எஸ்ராவின் இந்தப் புனைவும் அதுபோன்ற முயற்சிதான்.

தம்பி சேரலின் வலைப்பூவில் இந்தப் புத்தகத்தைப்பற்றிய சுவாரஸ்யமான இடுகை: http://puththakam.blogspot.com/2009/01/30.html

Friday, September 24, 2010

அரவிந்தன் சிறுகதைகள்

சில மாதங்களுக்கு முன்பு என்னுடைய அக்கா (ஜெயா) கொட்டிவாக்கத்தில் குடியிருந்தாள். அவளுடைய மகள் நான்கு மாதக் குழந்தை(அனைன்யா). நண்பகலில் கூட இருள் கவிழ்திருக்கும் வீடு என்பதால் கொசுத் தொல்லையைக் கேட்கவே வேண்டாம். வியாதிகள் சென்னையை உலுக்கிய காலம் என்பதால் ஹாரிபோட்டேரில் வரும் மாஜிக்கல் ஸ்டிக் மாதிரி mosquito bat-ஐ கையில் வைத்துக் கொண்டு கொசுக்களை நோக்கிப் பறந்து கொண்டிருந்தாள் (அவளுடைய மகளுக்காக). கொசுக்கள் 'ழீங்' என்ற ஒலியுடன் அவளுக்கு முன்னே மிதந்துகொண்டிருந்தன. Bat - ல் கொசுக்கள் பட்டவுடன் 'பட்' என்ற சத்தத்துடன் கீழே விழுந்தன. வேட்டையாடிய களைப்பில் மூச்சு வாங்க அக்கா பக்கத்தில் அமர்ந்தாள். குழந்தை அவளைப் பார்த்து சிரித்தது.

மூச்சை இழுத்துவிட்டபடி 'உனக்கு ஒன்னு தெரியுமாடா?' என்று கேட்டாள்.

'தெரியாது' என்று சொன்னால் என்னுடைய அக்கா திட்டமாட்டாள். 'தெரிஞ்சிக்கோடா தடிப்பயலே' என்று அன்புடன் சொல்லித் தருவாள். ஆகையால் 'தெரியாது' என்று சொன்னேன்.

'உலகத்தில் கொசு மாதிரி பூச்சிகள் பறக்கரதாலதான், அதெல்லாம் ஏற்படுத்தக் கூடிய சப்தத்தில் தான் உலகமே ஒரு சமநிலையில் இருக்குதாம்' என்றாள்.

எனக்கான ஆச்சர்யத்துடன் அவளைப் பார்த்தேன்.

தொடர்ந்து 'ஆசிய கண்டத்தில் சைனாவில் என்று நினைக்கிறேன், பட்டாம்பூச்சிகள் ஒன்று சேர்ந்து கூட்டமாக பறக்குமாம். அதன் பலனாக அமெரிக்கக் கண்டத்தில் ஏதோ ஓர் இடத்தில் மழை பொழிகிறதாம். விஞ்ஞானிகள் கூட ஒத்துக் கொண்டிருக்கிறார்கள்' என்றாள்.

நான் மெளனமாக அவள் சொல்லியதையே யோசித்துக் கொண்டிருந்தேன். அக்கா அவளுடைய வேலையைப் பார்க்கச் சென்றுவிட்டாள். பூச்சிகளின் ஒலிகள் என்னுள் எதிரொலித்துக் கொண்டிருந்தன.

என் அக்கா சொல்லியது உண்மையோ? பொய்யோ? எனக்குத் தெரியாது. உலகையே சமநிலைப் படுத்தும் ஒலிகள் என்னை அலைக்கழித்துக் கொண்டிருந்தன. யோசனைகள் இரைச்சலாகி கற்பனைகளின் இழைகளுக்கு இட்டுச் சென்றன. அரவிந்தனின் சிறுகதைகளும் இதுபோன்ற மௌனங்களாலும், உணர்வுகளாலும் ஒலிகளாலும் உருப்பெற்றவைதான்.

மனம் தனது பெருவெளியில் விந்தைகளை சுரந்தபடியே இருக்கிறது. மௌனம் தனது மாய விரல்களால் உணர்ச்சியின் நரம்புகளை மீட்டியபடியே இம்சை செய்கிறது. உடம்பிலுள்ள நுண்ணிய துளைகள் யாவும் காதுகளாகி அவற்றின் அதிர்வுகளை வாங்கியபடியே இருக்கின்றன. ஒரு மாயச்சுழியில் அதிர்வுகள் சிக்கி பேரிரைச்சலை உண்டு பண்ணும் சூழ்நிலைகளை தான் அரவிந்தன் சிறுகதைகளாக்கி இருக்கிறார்.

நாகதோஷம், வலி, சலனங்கள், மழை தீர்ந்த மரம், குளியலறைக்கு வெளியே சத்தம் கேட்டுக்கொண்டிருக்கிறது ஆகிய கதைகள் அவருடைய எழுத்தில் நன்றாக வந்திருக்கிறது. மௌனத்தின் குரல் இதயத்திலும், இதயத்தின் தாளம் மௌனத்திலும் சங்கமிக்கும் வித்யாசமான கதைகள்.

எழுத்தாளர் அரவிந்தன் காலச்சுவடு இதழின் ஆலோசனைக் குழுவில் ஒருவராக இருக்கிறார். 'இந்தியா டுடே' போன்ற இதழ்களில் பத்தாண்டுகளுக்கும் மேலாக நிருபராக வேலை பார்த்தவர். இவருடைய கட்டுரைத்தொகுப்பு கூட காலச்சுவடில் வெளிவந்துள்ளது. தொகுப்பிலுள்ள கதைகள் கூட காலச்சுவடு, இந்தியா டுடே, புதிய வார்த்தை, பன்முகம் போன்ற பல இதழ்களில் வெளிவந்தவைகள் தான்.

புத்தகத்தைப் பற்றி பின்னட்டையிலுள்ள வாசகம்:

*********************************************************
அரவிந்தனின் படைப்பு வெளி இறுக்கத்தைத் தூண்டும் மௌனங்களாலும் கலவரமூட்டும் சப்தங்களாலும் நிரப்பப்பட்டது. மௌனத்திலிருந்து சப்தங்களை உருவாக்கும் கதைமொழி வாழ்வின் மர்மமான அடுக்குகளுக்குள் மேற்கொள்ளும் முடிவற்ற பயணமாக வாசிப்பனுபவத்தை உணர வைக்கும் இச்சிறுகதைகளில் தென்படும் எளிமையின் தீவிரம் உக்கிரமானது. வீடு என்னும் வெளி தரும் பாதுகாப்பு பற்றிய கற்பனைகளைக் குழந்தையின் கரங்களைக் கொண்டு அழிக்க முற்படும் அரவிந்தனின் கதைகள் வாசகரின் பள்ளியறைக்குள் பாம்புகளை நடமாடவிடுகின்றன. கொடுங்கனவுகளால் சூழப்பட்ட யதார்த்தத்தை எதிர்கொள்ளவியலாத திணறலாக வாசிப்பனுபவத்தை மாற்றும் நுட்பமே அரவிந்தனைத் தனித்துவம் மிக்க ஒரு சிறுகதைக் கலைஞராக முன்னிறுத்துகிறது. - தேவிபாரதி
*********************************************************
http://www.ensorkal.blogspot.com - அரவிந்தன் வலைப்பூவைத் தொடங்கி நேரமின்மையால் தொடர்ந்து பதிவிடாமலே இருக்கிறார். அவ்வப்பொழுது உங்களுடைய கதைகளையும், கட்டுரைகளையும் பதிவேற்றலாமே என்று கேட்டு மின்னஞ்சல் செய்திருந்தேன். அவருக்கும் அந்த எண்ணம் இருப்பதாகச் சொல்லி இருந்தார். இந்த சிறுகதைத் தொகுப்பைப் பற்றி அவர் எழுதியுள்ள முன்னுரை மட்டும் அவருடைய வலைப் பக்கத்தில் வாசிக்கக் கிடைக்கிறது.

புத்தகத்தைப் பற்றிய தகவல்கள்:
குளியலறைக்கு வெளியே சத்தம் கேட்டுக்கொண்டிருக்கிறது.
வெளியீடு: காலச்சுவடு பதிப்பகம்
ஆசிரியர்: அரவிந்தன்.
விலை: 60 ரூபாய் /-

Thursday, September 9, 2010

அலகிலா விளையாட்டு - பா ராகவன்

யுகம் யுகமாகத் தொடரும் கேள்வி ஒன்று இருக்கிறது. வாழ்வில் சிறந்தது சிற்றின்பமா? பேரின்பமா?. இரண்டையுமே கண்ணெதிரில் வைத்துவிட்டு எது என்று கேட்டால் பதில் சொல்லலாம். தேர்ந்தெடுப்பதிலும் பிரச்சனை இருக்காது. பரமாத்மாவுடன், மனித ஆத்மாவை சேர்ப்பதுதான் மேலான வாழ்க்கை என்கிறார்கள். ஆத்மாவையே உணர முடியவில்லை. பிறகு பரமாத்மாவை எங்கிருந்து கண்டடைவது.

ஆத்மாவைப் பற்றியும், தத்துவங்கள் பற்றியும் சிந்திப்பது திசைகாட்டியும் மாலுமியும் இல்லாமல் நடுக்கடலில் பயணம் செய்வதைப் போன்றது. பெரும்பாலும் இலக்கில்லா பயணங்கலாகவே அமையக்கூடும். தெளிவற்ற இலக்குகளாகவே அவைகள் இருக்கும். எதிரில் தென்படும் கலங்கரை விளக்கங்களே நம் பயணத்தின் முடிவைத் தீர்மானிக்கும். கரைகொண்டு சேர்ப்பது கூட மாலுமிகளின் சாமர்த்தியம் தான். உண்மை என்னவெனில் கலங்கரை விளக்கங்கள் போன்ற மார்கங்கள் நிறையவே இருக்கின்றன. சரியான வழிகாட்டிகள் தான் நமக்குக் கிடைப்பதில்லை. பலரும் மோசம் செய்பவர்களாகவே இருக்கிறார்கள்.

ஆன்மீகத்தையும், தத்துவத்தையும் அணுகுவது கண்ணுக்குத் தெரியாத கண்ணிகளைக் கொண்ட மாய வட்டத்தில் நுழைவதைப் போன்ற சிக்கலான செயல். அதன் மாயக் கரங்கள் தலையை வருடுமா? கழுத்தை நெறிக்குமா? கால்களை இடறி குப்புறக் கவிழ்க்குமா? என்பது அதில் நாம் எந்த அளவிற்கு சஞ்சரிக்கிறோம் என்பதைப் பொறுத்தது அமைகிறது.

பற்றில்லாத வாழ்க்கையின் சிக்கல்களே கதையின் முக்கியப் பிடிமானம். மாணவர்களுக்கு வேதம் சொல்லிக் கொடுப்பதையையே பிரதானமாக நினைக்கும் வேங்கட சாஸ்த்ரி, பொருலீட்டுவதையே வாழ்க்கையின் குறிக்கோளாக நினைக்கும் கதைநாயகனின் குடும்பம், அகிம்சை மார்கத்தை உறுதியாக பிடித்துக் கொண்டிருக்கும் மகாத்மா காந்தி, இலவச கல்வி நிறுவனத்தை நிறுவுவதற்கு சுழன்று கொண்டிருக்கும் கோபாலகிருஷ்ண ஹெக்டே, கடைசி மூச்சு உத்ரகாசியில் தான் போக வேண்டும் என்று ஆசைப்படும் கதைநாயகனின்
அறைத் தோழர்கள், மனிதர்கள் மேலான நிலையை அடைய வழிகாட்டும் மடாலயத் துறவிகள் என்று எல்லோருமே ஒரு விஷயத்தைத் தீவிரமாக பற்றிக் கொள்கிறார்கள். இவர்களின் மத்தியில் சுழன்ற 73 வயது பிரமச்சாரி தனது சிக்கலான வாழ்வின் தருணங்களைத் திரும்பிப் பார்ப்பதுதான் கதை.

தனக்கு வேதம் சொல்லிக் கொடுத்த வேங்கட சாஸ்திரி கடைசி வரை கஷ்டங்களைத் தானே அனுபவித்தார், "கற்றுக் கொடுக்கும் வேதம் அவரைக் காப்பாற்றும் என்றாரே!" கடைசி வரை நெருக்கடியான வாழ்க்கையைத் தானே வாழ்ந்து முடித்தார் என்கிற எண்ணம் வயோதிகரை வாட்டி எடுக்கிறது. வயது அதிகமாக அதிகமாக குருவின் கடைசி மகள் பூரணியின் மேல் கொண்ட காதலும் வளர்ந்து கொண்டே இருக்கிறது. இந்த நிலையில் தான் அவர் படுத்த படுக்கையாகிறார். கூட்டிலிருந்த பறவை இலகுவாகப் பறந்து ஆகாசத்தை அடைவதைப் போல வயோதிகரின் உயிரும் பிரியப் போகும் கனத்தை எதிர்பார்த்தபடி சுற்றி நின்று மந்திரம் ஓதுகிறார்கள் அவருடைய தோழர்கள். அந்த நேரம் பார்த்து பூரணி வந்து சேர்கிறாள். நங்கூரத்தின் பிடியில் சிக்கிய கப்பலைப் போல அவன் கட்டுண்டிருக்கிறான். அவனுடைய மனம் செல்லும் வேகத்திற்கு உடல் ஒத்துழைக்கவில்லை. மனம் கடந்த காலத்தின் தொடுவானத்தை நோக்கிப் பயணிக்கிறது.

சிறுவயதில் திருவையாறில் வேதம் படித்தது, ஆசிரியரின் இன்னல்களுக்கு சாட்சியாக நின்றது, அவரிடமிருந்து பிரிந்து சென்றது, படித்து முடித்து போஸ்ட் மாஸ்டர் வேலைக்காக திருவையாறுக்கே சென்றது, பூரணியிடம் காதலைச் சொல்லி தோல்விகண்டது, காந்தி சென்னைக்கு வந்தபோது அவரை சந்திக்க நினைத்தது, கோபாலகிருஷ்ண ஹெக்டேவிடம் வேலைக்குச் சேர்ந்தது, கல்கத்தாவில் நூலகராக பணியாற்றியது, புத்தமடாலயத்தில் தத்துவ ஆராய்ச்சி செய்தது, முதன்முதலாக கைலாயம் சென்றது, மரணப் படுக்கையில் விழுந்தது என்று எங்கெங்கோ சென்று திரும்புகிறது மனம்.
பூரணியின் வரவு உற்சாகத்தை ஏற்படுத்த உடல்நலம் தேறுகிறார். ஒரு குழுவாக கைலாயம் செல்கிறார்கள். அதன் பின் நடந்தது என்ன என்பதுதான் முடிவு.

பாராவின் எழுத்து நதி, பனிமலை, குளிர், வேதப்பள்ளி என ஒவ்வொன்றையும் கண்முன் கொண்டுவரும். கதையில் வரும் கங்காதரன் நாயர், பூரணி, வெங்கடராமன், கல்லிடைக்குறிச்சி பாட்டி, வேங்கடராம சாஸ்த்ரி, ராயலசீமா சூரிக் கிழவர், ஜான் ஸ்மித், அவனுடைய காதலி, விடுதி ஒனர் சிந்தி, கோபால கிருஷ்ண ஹெக்டே, மடாலய பிக்குகள், துறவிகள், வாத்தியாரின் அத்தை, மனைவி மற்றும் குழந்தைகள், ஆங்காங்கு வந்து செல்லும் சில நபர்கள் என எல்லோரும் மனத்தைக் கொள்ளை கொள்வார்கள்.


ரங்கநாயகி அம்மாள் நினைவு நாவல் போட்டியின் முதல் பரிசு (அதைப் பற்றி - பத்ரி) பெற்றதால் 2004-ஆம் ஆண்டு இலக்கிய பீடத்தில் இந்த நாவல் தொடராக வந்தது. அந்த வருட ஒவ்வொரு மாதத்தின் முதல் வாரமும் பொன்னேரி நூலகத்திற்கு நடையாய் நடந்தது நினைவிற்கு வருகிறது. இந்த நாவலின் பக்கங்களை இதழிலிருந்து திருடியது நேற்றுதான் செய்தது போல இருக்கிறது. கடந்த பிப்ரவரியில் திருடிய இதழினை புத்தகமாக பைண்டிங் செய்து பா ராகவனை நேரில் சந்தித்த பொழுது கையெழுத்து வாங்கினேன்.

"வெறிபிடித்த வாசகன் கிருஷ்ணபிரபுவுக்கு - நேசமுடன் பாரா" என்று கையொப்பமிட்டார். எப்படி கண்டுபிடித்தாரோ தெரியவில்லை. அலகிலா விளையாட்டைப் பொறுத்தவரை நான் வெறிபிடித்த வாசகனாகத் தான் இருந்தேன். அதனை மீள் வாசிப்பிலும் என்னால் உணர முடிந்தது.

கடந்த ஆண்டு இலக்கிய பீடத்திற்கு சென்று பல பிரதிகளை வாங்கி நண்பர்களுக்குப் பரிசளித்தேன். திருடிய இடத்தை சும்மா விடமுடியுமா? பொன்னேரி நூலகத்திற்கும் சென்றிருந்தேன். நூலகர் பேநிக்கிடம் என்னுடைய திருட்டு விஷயத்தைப் போட்டு உடைத்துவிட்டு கையில் எடுத்து சென்ற புத்தகத்தை பரிசாகக் கொடுத்தேன். நக்கலான சிரிப்புடன் வாங்கிக் கொண்டார்.

நாவலின் சில வரிகள் இணையத்தில் படிக்கக் கிடைக்கிறது:

பாஸ்டன் பாலாவின் பதிவில்...
சிங்கப்பூர் பதிவர் சுரேஷின் வலைப்பூவில்...

பாரா எழுதிய புனைவுகளிலேயே இந்தப் புதினம் மிகச் சிறந்த ஒன்று. என்னுடைய தனிப்பட்ட விருப்பத்தின் அடிப்படையில் இவருடைய மற்ற படைப்புகளை கூட இதன் பின்னால் தான் வைப்பேன். ஏனென்று தெரியவில்லை அவரின் தீவிர வாசகர்கள் கூட இந்த புதினத்தைப் பற்றி அறியாமலே இருக்கிறார்கள் என்பதுதான் வினோதமான உண்மை. வேத தத்துவத்தில் விருப்பமுள்ள நண்பர்கள் தவறவிடாமல் படிக்க வேண்டிய சுவாரஸ்யமான தமிழ் நாவல். இந்த நூல் பாராவின் வேறொரு முகத்தை உங்களுக்கு அறிமுகப்படுத்தும்.

இந்த புத்தகத்தைப் பற்றிய என்னுடைய முதல் பதிவு. நாவலைப் படித்த பல வருடங்கள் கழித்து எழுதியதால் விவரங்கள் தெளிவில்லாமல் இருக்கும்.

அலகிலா விளையாட்டு - பா ராகவன் -1

வெளியீடு: இலக்கிய பீடம்
ஆசிரியர்: பா ராகவன்
விலை: 70 ரூபாய்
******************************************************************
கிடைக்குமிடம்:
முகவரி:
3,3, ஜயசங்கர் தெரு
மேற்கு மாம்பலம்
சென்னை - 600033
இந்தியா
ஆசிரியர் : விக்ரமன்
தொலைபேசி :914423712485

Tuesday, September 7, 2010

மௌனத்தின் குரல் - வாஸந்தி

சாப்பிட அடம்பிடிக்கும் குழந்தைக்கு அன்னையானவள் உணவைத் திணிப்பது போல வாழ்க்கை நமக்கான அனுபவங்களை வலுக்கட்டாயமாக திணித்துவிட்டு மின்னலென மறைகிறது. ஊட்டிவிடும் எல்லா உணவுகளையும் குழந்தை உண்டு ஜீரணிப்பதில்லை. அழுது ஆர்பாட்டம் செய்கிறது, பிஞ்சுக் கைகளால் தட்டி விடுகிறது, வாயிலிருந்து துப்புகிறது, இன்னும் பல வகையில் சிதறச் செய்கிறது. சாப்பிட மறுக்கும் அதே குழந்தை எறும்புகளைக் காட்டிலும் சிறிய துரும்பினை எப்படித்தான் அடையாளம் காணுமோ தெரியவில்லை. இறைந்து கிடக்கும் துணுக்குகளில் ஒன்றை எடுத்து ஏமாந்தால் வாயில் வைத்துக் கொண்டு கவனம் தவறினால் விழுங்கிவிடும்.

இயந்திர கதியில் ஓடும் நாமும் அதுபோலவே வாழ்க்கையின் அனுபவங்களைச் சிதறச் செய்கிறோம். யாருமற்ற தனிமையில் இருக்கும் பொழுது சிதறிக் கிடக்கும் அனுபவக் குப்பைகளைக் கிளறிப் பார்த்தால், காலமாற்றத்தால் தூக்கிப் போட்ட கனவுகளும், இழந்துவிட்ட உண்மையான நம்முடைய முகங்களும், இழந்துவிட்ட வாய்ப்புகளும், வலிகளும், வேதனைகளும், காதலும், தோல்வியும், சந்தோஷங்களும் இருக்கும்.

நேர்கோட்டில் செல்லும் வாழ்க்கை யாருக்குமே சாத்தியமில்லை. கல்யாணத்திற்கு முன், கல்யாணத்திற்குப் பின் என்று உலகத்திலுள்ள 97 சதவிகித மனிதர்களுக்கு இரட்டை வாழ்க்கைதான் நிரந்தரம். அதிலும் கல்யாணத்திற்குப் பிறகான வாழ்க்கையில் ஆண்களை விட பெண்களுக்கே யதார்த்த சங்கடங்கள் அதிகம். பிறந்த வீட்டில் பூ மாதிரி வளர்க்கப்பட்டு புகுந்த வீட்டிற்கு அனுப்பப்படும் பொழுது, உறவின் முறை பெரியவர்களால் மணப் பெண்ணிற்குக் கொடுக்கப்படும் ஆலோசனைகளில் முக்கியமான ஒன்று இருக்கிறது. "போற இடத்துல எல்லோரையும் அனுசரிச்சி பக்குவமா நடந்துக்கோ" என்பதுதான் அது. எந்த ஓர் ஆணுக்கும் இதுபோல சொல்லப்படுவதில்லை. போலவே பெண்களுக்கு மட்டுமே சொல்லப்படுகிறது. அவர்களும் மெளனமாக ஏற்றுக் கொள்கிறார்கள்.விதைக்கப்பட்டு, செழிப்பாக வளர்க்கப்பட்ட இடத்தின் வேரறுத்துக் கொண்டு ஒரு புதிய இடத்தில் தன்னை பதியம் செய்துகொள்ளும் பெண்களின் மனநிலை ஓர் ஆணாக என்னால் புரிந்து கொள்ள முடியாத ஒன்று.

எப்பொழுதாவது பெப்சி உங்கள் ச்சாயிஸ், நீங்கள் கேட்டவை, மற்றும் சில ரியாலிட்டி நிகழ்ச்சிகளை பார்க்கும் பொழுது மனைவியாக வரும் சிலரிடம் "நீங்கள் என்ன செய்கிறீர்கள்?" என்று கேள்வி கேட்பார்கள். அவளைச் சுற்றித் தான் அந்தக் குடும்பமே இருக்கிறது என்ற பெருமிதமாகக் கூட இருக்கலாம். நான் 'house wife'-ஆக இருக்கிறேன் என்று துடிப்புடன் பதில் வரும். அந்தப் பெருமிதம் அவளுக்கு எதுவரை துணை நிற்கும் என்று தெரியவில்லை. என்றாவது ஒருநாள் தன்னுடைய வாழ்க்கையை அவள் திரும்பிப் பார்க்கக் கூடும். தான் யார் என்ற கேள்வியை மனசாட்சி எழுப்பக் கூடும். 'நல்ல மனைவியாக, மருமகளாக, குழந்தைகளுக்குத் தாயாக' என்று குடும்பத்திற்காக அணிந்துகொண்ட முகமூடியை அவள் கழட்டித் தானே ஆகவேண்டும். இந்தக் கதையில் வரும் ஜெயா-வும் அப்படிப்பட்டவள் தான். அவளை மையமாக வைத்து நகரும் நாவலில், அவளே நம் விரல் பிடித்து பெண்களின் அக உலகிற்கு அழைத்துச் செல்கிறாள்.
சாகித்ய அகாடமி விருது பெற்ற 'That long silence' என்ற சசி தேஷ்பாண்டே எழுதிய ஆங்கில நாவலின் தமிழாக்கம். மொழி பெயர்ப்பு என்றே சொல்ல முடியாத அளவிற்கு நேர்த்தியாக தமிழாக்கம் செய்திருக்கிறார் எழுத்தாளர் வாஸந்தி. நடுத்தர பிராமண குடும்பத்தில் நடக்கக் கூடிய கதைக்களம். எல்லா தந்தைப் போலவே ஜெயாவை பாசமுடன் வளர்க்கிறார் அவளுடைய தந்தை. எதிர்பாராத விதமாக அவர் சிவலோகப் பதவியை அடையவும் ஜெயாவின் குடும்பம் உறவினர்களின் வீட்டில் வாழ வேண்டிய சூழல் ஏற்படுகிறது. கூட்டுக் குடும்பத்தில் வளர்ந்து மோகன் என்பவனுக்கு வாழ்க்கைத் துணையாகிறாள். ராகுல், ரதி என்று இரண்டு குழந்தைகள் பிறக்கிறது. கணவனுக்காகவும், குழந்தைகளுக்காகவும் மட்டுமே வாழ்கிறாள். நேரம் கிடைக்கும் பொழுது பத்திரிகைகளுக்கு எழுதுகிறாள். ஒரு நிகழ்விற்குப் பிறகு எழுதுவதையும் நிறுத்தி விடுகிறாள். மகிழ்ச்சியுடன் சென்று கொண்டிருந்த அவர்களுடைய வாழ்க்கையில் ஒரு சிக்கல் ஏற்படுகிறது. மோகன் அவனுடைய வேலையில் தவறு செய்துவிடுகிறான். பிரச்னையை சரி செய்யவில்லை என்றால் சிறைக்குச் செல்ல வேண்டிய சூழல். குழந்தைகளை சுற்றுலாவிற்கு அனுப்பிவிட்டு, குழப்பத்துடன் அவர்களுக்கு சொந்தமான வேறொரு இடத்தில் தனிமையாக வசிக்கிறார்கள். மோகனின் அருகாமை அவளுடைய அகம் சார்ந்த சிக்கல்களையும், சிடுக்குகளையும் ஏற்படுத்துகிறது.

"ஒரு குடும்பத் தலைவனாக உங்களுக்காகத்தான் நான் எல்லாம் செய்தேன்" என்பது மோகனின் வாதம். இந்த இடத்தில் ஜெயா வாயடைத்து நிற்கிறாள். மோகனிடம் நடத்த முடியாத வாதத்தை அவள் அகம் சார்ந்தும், தனது இழந்து விட்ட உறவுகள் சார்ந்தும், வாழ்க்கை சார்ந்தும் எழுப்புகிறாள்.
பாதுகாப்பில்லாத வாழ்க்கையை உணர்கிறாள்.வாழ்வின் யதார்த்தம் நம்மை அசைத்துப் பார்க்கும் பொழுதும், நிர்மூலமாக்கும் பொழுதும் மனம் பின்னோக்கிச் சென்று இறந்த காலத்தின் சுழியில் சிக்கிக் கொள்கிறது. புதையுண்ட நினைவுகளின் வேர்களை வெறுமையுடன் மனம் தேடிச் செல்கிறது. தற்போதைய நிலைக்குக் காரணமானவர்களின் ஆவியை விரட்டிச் சென்று கேள்வி கேட்கிறது. நம்முடைய சிறுவயது மனசாட்சியும் அந்த ஆவிகளில் ஒன்றே. இறந்தவர்களுடன் இவள் நடத்தக் கூடிய உரையாடலும் அப்படிப்பட்டதே. ஜெயாவின் நோக்கம் அனாவசியமான கேள்விகளோ, உரையாடல்களோ, புலம்பல்களோ அல்ல. அவள் தொலைத்துவிட்ட முகத்தைத் தேடுகிறாள். ஒரு நதியோ அல்லது ஆறோ எங்கு வேண்டுமானாலும் உற்பத்தியாகலாம். கடலுடன் சேர்ந்த பிறகு அந்த நீர் தன்னுடைய முகத்தை இழக்கிறது. சுவையையும் தன்மையையும் மாற்றிக் கொள்கிறது. ஓடும் நீரின் 'சல சல' ஒலிகளை கடற்கரையில் நின்று ஒருபோதும் கேட்கமுடிவதில்லை. அலைகளின் ஓசை அவற்றை விழுங்கி மௌனமே அவற்றின் குறியீடாகிறது. பெண்களின் வாழ்க்கையும் அப்படித்தானோ என்னவோ!.

நீரின்றி, ஆகாரமின்றி பெரிய பாறைகளுக்கு இடையில் வாழும் தேரையைப் போல தன்னுடைய ஆளுமையையும், விருப்பங்களையும் துறந்துவிட்டு கணவனுக்காகவும், குழந்தைகளுக்காகவும் வாழும் பெண்ணின் உளவியல் சமந்தமான அற்புதமான நாவல். நடுத்தர குடும்பத்தில் அடைபட்ட தலைவிகளின் குறியீடாக இருக்கிறது 'மௌனத்தின் குரல்'.

முதிர்ச்சி பெறாத வயதில், பொன்னேரி நூலகத்திலிருந்து பத்து வருடங்களுக்கு முன்பு இந்த புத்தகத்தைப் படித்த பொழுது நான் கேட்ட ஜெயாவின் குரல் வேறு மாதிரியாக இருந்தது. அப்பொழுது ஜெயாவை எனக்கு யாரென்றே தெரியாது. அவள் சொல்ல வந்த விஷயம் எனக்கு அன்னியமாக இருந்தது. பல ஆண்டுகள் கழித்து சமீபத்தில் மீள் வாசிப்பு செய்த பொழுது ஜெயா எனது தோழியாகிவிட்டாள். அவளின் குரல் என்னை ஏதோ செய்தது. அடுத்த பத்து வருடத்தில் அவள் எனக்கு சொந்தமாகி குற்ற உணர்வையும் ஏற்படுத்தலாம். அப்பொழுது அவளின் குரலை நான் எப்படி எடுத்துக் கொள்ளப் போகிறோனோ தெரியவில்லை.

இந்திய ஆங்கில நாவல் இலக்கியத்தில் இந்த படைப்பு தனி அடையாளத்துடன் பார்க்கப்படுகிறது. தீவிர இலக்கிய வாசகர்கள் தவறவிடாமல் படிக்க வேண்டிய
அரிய படைப்பு. எழுத்தில் ஆர்வமுள்ள பெண்களுக்கு நான் தனிப்பட்ட முறையில் பரிந்துரைக்கும் புத்தகம். அவசியம் படித்துப் பாருங்கள்.

வெளியீடு: சாகித்ய அகாடமி பதிப்பகம்
ஆசிரியர்: சசி தேஷ்பாண்டே
தமிழில்: வாஸந்தி
விலை: 85 ரூபாய்

Sunday, September 5, 2010

ஆசிரியர் தினம்

எனக்கான முக்கிய பொழுதுபோக்கு புத்தகம் வாசிப்பது. இதை வைத்துக் கொண்டு படிப்பில் நான் படுசுட்டி என்று நினைத்துக் கொள்ளாதீர்கள். சராசரி மாணவர்களிலேயே கடைந்தெடுத்த சராசரி மாணவன் நான். பல நேரங்களில் யோசித்ததுண்டு. எழுத்தை அடையாளப் படுத்திக்கொண்டு வாசிக்க முடியாமல் இருக்குமெனில் என் கதி என்னவாகும்!?. நல்ல வேலை அப்படி எதுவும் நடக்கவில்லை. பள்ளி செல்வதற்க்கான சூழ்நிலையை ஏற்படுத்திக் கொடுத்த குடும்பத்தாருக்கும், எந்த விதத்தில் சொல்லிக் கொடுத்தால் என் மூளைக்கு எட்டுமோ அந்த விதத்தில் சொல்லிக் கொடுத்த ஆசிரியர்களுக்கும் என்னுடைய நன்றியை சொல்லி மாளாது.

நான் முதன் முதலில் சென்றது அரசாங்க மழலையர் பள்ளிக்கு (பால்வாடி). காலையில் இரண்டு மணி நேரம் இருக்கும். மரத்தடியில் சந்தோஷமாக விளையாட விடுவார்கள். ஒன்றிரண்டு குழந்தைப் பாடல்களையும் சொல்லிக் கொடுப்பார்கள். பாடல்களை பாடிக்கொண்டே மரங்களை
சுற்றிச் சுற்றி ஓடிக் கொண்டிருப்போம். சோர்வானவுடன் பால்வாடி டீச்சரிடம் செல்வோம். எங்களுக்காக தயார்படுத்தி வைத்திருந்த சத்துணவு உருண்டையை கொடுப்பார்கள். அதை வாங்கி சாப்பிட்ட படியே வீடு நோக்கி ஓடுவோம். ஒரு வருடம் கழித்துதான் ஆரம்பப் பள்ளிக்குச் சென்றோம்.

எனக்கு நன்றாக ஞாபகம் இருக்கிறது 8-வது வரை உள்ள பள்ளியில் நான்கு வகுப்பறைகள் மட்டுமே இருந்தது.
தலைமை ஆசிரியருக்கு மட்டும் ஒரு தனியறை இருக்கும். மற்றபடி ஆசிரியர்களுக்கான ஓய்வறை, கழிவறைகள் கூட இல்லை. ஆசிரியைகள் ஓய்வெடுக்க எங்கள் வீட்டிற்குத்தான் வருவார்கள். எங்கள் வீட்டில் பசுமாடு இருந்தது. காலையும் மாலையும் அவர்களுக்கு பால் கொடுத்து அம்மா உபசரிப்பாள். அந்த வகுப்பறைகளுக்கு முன்பு இரண்டு பெரிய வேப்பமரம் கம்பீரமாக நின்று கொண்டிருக்கும். முதல் நான்கு வகுப்புகளுக்கு அந்த இரண்டு மரம் தான் நிழல் தந்து உதவியது. சில நேரங்களில் வெயில் சுளீரென்று மண்டையில் அடிக்கும். காகம் தன்னுடைய பங்கிற்கு அசிங்கம் செய்துவிட்டுப் போகும். கல்கத்தா நெடுஞ்சாலையில் மாட்டு வண்டிகளும், சைக்கிள்களும், லாரிகளும் எப்பொழுதாவது பேருந்துகளும் செல்லும். தூரத்தில் வேகமாக நகர்ந்து செல்லும் வாகனங்கள் எங்களுக்கு விளையாட்டு காட்டுவது போல இருக்கும். இதற்கிடையில் 'அ... ஆ... இ... ஈ...' என்று ஆசிரியர் சொல்லச் சொல்ல நாங்கள் அனைவரும் அதைக் கேட்டு பிரதிபலிப்போம். பிறகு ஓரெழுத்து வார்த்தைகள், ஈரெழுத்து வார்த்தைகள், மூன்றெழுத்து வார்த்தைகள், வாக்கியங்கள் என்று தமிழை படித்தோம். மற்ற பாடங்களையும் தமிழிலேயே படித்தோம். மரத்தடியில் இருந்து கூரை வேய்ந்த கட்டிடத்திற்குள் சென்றது செயற்கையாக இருந்தது. ஆறாம் வகுப்பில் தான் 'A B C D...' என்று ஆங்கிலம் படிக்க ஆரம்பித்தோம். ஏழாம் வகுப்பு வரை எங்களுக்கு வீட்டுப் பாடமே கிடையாது. தமிழ் ஐயா, பிரேமா டீச்சர், சத்யா டீச்சர், தையல் டீச்சர், ரெஜினா டீச்சர், பவானி டீச்சர், சரவணன் சார், செல்லப்பன் சார்... எல்லோரும் எங்களை அவர்களுடைய பிள்ளைகளைப் போல பார்த்துக் கொள்வார்கள். நெடுஞ்சாலை விரிவாக்கத்தில் இரண்டு பெரிய மரங்களையும் வெட்டிவிட்டார்கள். பள்ளியை கூட இடம் மாற்றி வேறு இடத்தில் அமைத்துவிட்டார்கள். நான் படித்த இடத்தின் சுவடே இன்று இல்லை. ஆசிரியர்களில் கூட ஒரு சிலரைத் தவிர எல்லோரும் மாற்றலாகி சென்றுவிட்டார்கள். சென்ற வாரம் பவானி டீச்சர் ஷேர் ஆட்டோவின் பயணத்தில் எனக்கு கையசைத்தார். அவருக்கு எதிர் திசையில் என்னுடைய வண்டி சென்று கொண்டிருந்தது. நான் இரண்டு கைகளையும் கூப்பி வணக்கம் செலுத்தினேன். "நல்லா இருக்கியான்னு?" சைகையிலேயே கேட்டார்கள். மண்டையை வாகாக ஆட்டினேன். "நல்லா இருன்னு" தூரத்திலிருந்து ஆசிர்வாதம் செய்தார்கள். சில நொடி சம்பாஷனை முடிவுக்கு வந்தது.

என்னுடைய கிராமத்தில் எட்டாவது முடித்து அருகிலுள்ள ஊரில் ஒன்பதாவது சேர்ந்தேன். ஒரே பள்ளியில் ஆயிரத்திற்கும் அதிகமான மாணவர்களைப் பார்த்தது
உள்ளுக்குள் நடுக்கத்தை ஏற்படுத்தியது. ஆரம்பத்தில் விருப்பமே இல்லாமல் பள்ளிக்கு சென்று கொண்டிருந்தேன். சம்பத் சாரின் கணித வகுப்பு எனக்கான புது வாசலைத் திறந்தது. அவரிடமே மாலை நேர டியூஷன் சேர்ந்தேன். எல்லா பாடங்களையும் அருமையாக எடுக்கும் அவர் பள்ளியில் கணிதத்திற்கான ஆசிரியர் மட்டுமே. மற்ற ஆசிரியர்கள் அவருக்கு முன் முட்டாள்களாகவே தெரிந்தார்கள். தமிழ் ஐயா மட்டும் விதிவிலக்கு. ஒரு நாள் கூட வீட்டில் படித்ததில்லை, இருந்தும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் கௌரவமான மதிப்பெண்கள் எடுத்து தேறினேன் என்றால் அதற்குக் காரணம் அவர் மட்டுமே. ஒரு வருடத்திற்கு முன்பு பேருந்தின் ஜன்னல் ஓரத்தில் அவரைப் பார்க்க நேர்ந்தது. அவரும் என்னைப் பார்த்தார். பேருந்து நகர்ந்து செல்கிறது. தேசிய கீதம் கேட்டது போல நான் உடம்பை விரைப்பாக்கி, நேராக நின்று கண்களில் பதட்டத்துடன் அவரைப் பார்க்கிறேன். அவர் சிறு குழந்தைக்கு விடை கொடுப்பது போல எனக்குக் கையசைத்தார். என்றாவது ஒருநாள் அவருடைய வீட்டிற்க்குச் சென்று பார்க்க வேண்டும் என்று பத்தாவது முடித்ததிலிருந்தே நினைத்துக் கொண்டிருக்கிறேன். நேரில் பார்த்தாலும் வார்த்தைகள் வெளியில் வருமா என்று தெரியவில்லை.

உயர்நிலைப் படிப்பிற்காக பென்னேரி சென்றேன். என்னுடைய பாட்டி வீட்டில் தங்கிப் படித்த காலம். விளையாட்டு, படிப்பைத் தவிர வாழ்க்கையில் வேறு விஷயங்கள் இருக்கிறது என்பதை அங்குதான் தெரிந்து கொண்டேன். படைப்பிலக்கியத்தின் மீது ஆர்வம் சென்றது. உயர்நிலைப் பள்ளி ஆசிரியர்கள் இயந்திரத் தனமாகத் தெரிந்தார்கள். மதிப்பெண்களை மட்டுமே அவர்களுக்கான இலக்குகளாக வகுத்துக் கொண்டு பாடம் நடத்தினார்கள். படிப்பில் எனது ஆர்வம் சராசரிக்கும் குறைவாக அமைந்தது. இயற்பியல், வேதியியல், உயிரியல் எல்லாம் என்னைப் பாடாய் படுத்தியது. ஆசிரியர்கள் என்னிடம் மல்லுக்கு நிற்காத குறை. மலர் அக்காவிடம் காலை நேரத்தில் மேத்ஸ் டியூஷன் சென்றேன். கல்லூரி முடிக்கும் வரை அவர்தான் கணிதத்திற்கான வழிகாட்டியாக அமைந்தார். ஒரு வழியாக இறுதியாண்டில் தேறி பொன்னேரி அரசு கல்லூரியில் சேர்ந்தேன். முதலில் வரலாற்றுப் பிரிவில் சேர்ந்து, பிறகு கணிதத்திற்கு மாறினேன். முதலாமாண்டு படிக்கும் பொழுது தவறாமல் வகுப்புகளுக்கு சென்றிருக்கிறேன். அடுத்தடுத்த இரண்டாண்டுகளில் வகுப்பிற்குச் செல்வது வெகுவாகக் குறைந்தது. என்னுடைய துறை ஆசிரியர்களுக்குக் கூட என்னைச் சரியாக அடையாளம் தெரியாது. முட்டி மோதி இளங்கலை கணித பட்டயத்தைப் பெற்றேன்.

அதன் பிறகு சிறிது காலம் வேலை செய்து, அது பிடிக்காமல் போக காஞ்சிபுரத்திற்குச் சென்று ஒரு வருட கூட்டுறவு பட்டயப் படிப்பை முடித்தேன். தொழின் முறைப் படிப்பு என்பதால் அதற்கேற்ற கட்டுக் கோப்புடன் இருக்கும். கூட்டுறவு சட்டம், கூட்டுறவு வரலாறு, கூட்டுறவு கணக்கில் என்று எல்லா பாடங்களும் குமட்டிக் கொண்டு வரும். பிடிக்காத பாடம் என்பதால் ஆசிரியர்களிடம் இடைவெளி ஏற்பட்டுவிட்டது. குரங்கு மரத்திலிருந்து தாவுவது போல இலக்கில்லாமல் தாவிக்கொண்டிருந்தேன். அந்தத் தாவலில் நான் கடைசியாக அமர்ந்தது பச்சையப்பன் கல்லூரியில். மாலை நேர வகுப்பில் முதுநிலை கணிதம் படிக்க அங்கு சேர்ந்தேன்.
எதற்காகப் படிக்கிறோம்? ஏன் படிக்கிறோம்? என்ற எந்தவித முடிவிற்கும் வர இயலாத பாடமாக முதுநிலைக் கணிதம் எனக்குத் தண்ணி காட்டியது. எனக்கு மட்டும் அல்ல என்னுடன் படித்த எல்லோருக்கும் தான். ஒவ்வொரு நாளும் இழவு வீட்டிற்கு வருவது போல சோக முகத்துடனே நண்பர்கள் கல்லூரிக்கு வந்து கொண்டிருந்தார்கள். 35 பேர் படித்ததில் ஒருவர் கூட இறுதியாண்டில் தேறவில்லை. இன்று வரை மூன்று நபர்கள் மட்டுமே தேறியிருப்பதாக நண்பன் கூறினான்.

அதன் பிறகு என்னுடைய அக்கா ஜெயாவின் வழிகாட்டுதலில் நல்ல வேலை கிடைத்து கை நிறைய சம்பாதிக்கும் பொழுதுதான் எனக்குப் பிடித்த வகுப்புகளை நாடிப் போக ஆரம்பித்தேன்.
முதல் மாத சம்பளத்தை எடுத்துக் கொண்டு ஓடியது கிபோர்ட் வகுப்பிற்கு. கோவிந்த ராஜ் சாரை மறக்கவே முடியாது. வேறு கம்பனிக்கு மாறியதால் கீபோர்ட் வகுப்பை நிறுத்திவிட்டு, அருகில் இருந்த இசைப்பள்ளியில் 8 மாதம் கிடார் கற்றுக் கொண்டேன். கிடார் மாஸ்டர் அருண் மாதிரி ஓர் ஆளை பார்ப்பதே கடினம். "இளையராஜாவின் பாடல்களை வாசிக்கக் கற்றுக் கொடுங்கள்" என்று அவரிடம் கூறினேன். "இசையைக் கற்றுக் கொள். உனக்குப் பிடித்த பாடல்களை நீயே வாசிக்கலாம். என்னுடைய உதவி தேவை இருக்காது" என்று ஆரம்பம் முதல் கற்றுக் கொடுத்தார். எதிர்பாராத குடும்பச் சுமையால் வகுப்பு எடுப்பதை நிறுத்தி விட்டார். சிறிது காலம் கழித்துத் தொடரலாம் என்றார். கிடார் வகுப்பு அங்கேயே நின்றுவிட்டது. பல மாதங்கள் கழித்து அவரிடம் இருந்து அழைப்பு வந்தது. மீண்டும் தொடர்வதற்க்கான நேரம் அமையவில்லை. அதற்குள் நேரத்தை விரயமாக்குவானேன் என்று ஜப்பானிய மொழி வகுப்பில் சேர்ந்துவிட்டேன். இரண்டு வருடமாக முயற்சி செய்து கொண்டிருக்கிறேன் என்றாலும் தேறியபாடில்லை. வெற்றியா முக்கியம் அனுபவம் தானே. ஜப்பானிய மொழி ஆசிரியர்களான தகாஷி சென்சேய், தாய்ச்சி சென்சேய், ஹயகவா சென்சேய் என்று பலருடன் பழகும் வாய்ப்பு கிடைத்தது. இந்திய ஜப்பானிய மொழி ஆசிரியர்களான உமா சென்சேய், பாலா சென்சேய் போன்றவர்களின் வழிகாட்டுதல் மறக்க முடியாத ஒன்று. சிவராமன் ஏற்பாடு செய்துத் தந்த சிறுகதைப் பட்டறை, பா ராகவன் ஏற்பாடு செய்துத் தந்த கிழக்கு மாடிப் பட்டறைகளில் பங்குபெற்ற அனுபவமும், கிர்தன்யா கிருஷ்ண மூர்த்தியின் Mind Training Course அனுபவமும் எனக்கு சொல்ல முடியாத ஆனந்தத்தைத் தந்தது. இன்னும் எனக்குப் பிடித்த எவ்வளவோ விஷயங்கள் இருக்கிறது. அவற்றை எல்லாம் அனுபவங்களாக உணர ஆவலுடன் இருக்கிறேன்.

ஆரம்பப் பள்ளியைத் தவிர்த்து,
முதுநிலை கல்லூரிப் படிப்பை முடிக்கும் வரை சம்பத் சாரைத் தவிர வேறு யாரும் என்னை சொல்லிக் கொள்ளும்படியாகக் கவரவில்லை. மற்றவர்களையெல்லாம் நான் வெறுக்கவில்லை. ஏனோ தெரியவில்லை அவர்களுடைய உலகில் என்னால் இருக்க முடியவில்லை. நாலு சுவற்றுக்குள் அடைபடும் மனநிலையை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. என்றாலும் இதுவரை எந்த ஆசிரியரும் என்னை தண்டித்ததில்லை. தரக் குறைவாகத் திட்டியதில்லை. அப்படியெனில் என்னுடைய தன்மையிலான கற்றலை அவர்கள் ஆமோதித்து இருக்கிறார்கள் என்று தானே அர்த்தம். என்னுடைய வாழ்க்கைக்கு மதிப்பு கொடுத்திருக்கிறார்கள் என்று தானே அர்த்தம். என்னுடைய சுதந்திரத்தில் குறுக்கிடாமல் என்னை வழி நடத்திய எல்லா ஆசான்களையும் இந்த நாளில் நினைத்துக் கொள்கிறேன்.

'வாழ்க்கைக் கரையில் அதைக் கற்பவர் நாள் சில'. கற்றுக் கொடுப்பவர்களின் சிரமத்தை இதுநாள் வரை அறிந்ததில்லை.
என்னைப் போல ஆயிரமாயிரம் மாணவ மணிகளை அவர்கள் கடந்திருக்கலாம். ஆயிரத்தில் ஒருவனாக இந்த சிறப்பான தினத்தில் அவர்களை நினைத்துக் கொள்வதில் மகிழ்ச்சியே.