Monday, March 23, 2009

Thunai Ezhuthu - S. Rama Krishnan

துணையெழுத்து: எஸ். ராம கிருஷ்ணன் (Rs. 110)
வெளியீடு: விகடன் பிரசுரம்

துணையெழுத்து கட்டுரைகளை வாசித்ததின் மூலமாகத்தான் எனக்கு எழுத்தாளர் எஸ். ராம கிருஷ்ணன் அறிமுகமானார். அதன் பிறகுதான் அவருடைய பிற நூல்களின் வாசிப்பனுபவம் கிடைத்தது. எத்தனையோ வித்தியாசமான மனிதர்கள், பண்டைய காலத்து கல்வெட்டுகள், நீருக்கு அடியில் ஈரமேரியிருக்கும் கூழாங்கற்கள், பால்ய கால குறும்புகள், சக மனிதனின் புறக்கணிப்பு, இமைய மலை பனிச்சாரல் என்று இவருடைய எழுத்துக்கள் நமக்கு அறிமுகப்படுத்தும் விஷயங்கள் ஏராளம்.

பயணங்களிலும் இதர பல இடங்களிலும் தான் சந்திக்க நேர்ந்த பலவிதமான மனிதர்களைப் பற்றியும், அவர்களுடனான மறக்க முடியாத நிகழ்வுகளைப் பற்றியும் அவரே அசைபோடுவதாக இந்த புத்தகத்திலுள்ள கட்டுரைகள் அமைந்துள்ளன.

வாழ்வின் சில சொற்ப நேரங்களைத் தவிர மற்ற எல்லா நேரங்களிலும் சிறு சிறு கனவுகளும், ஆதங்கங்களுமே மனிதனை ஆட்கொள்கின்றது. நம்மையும் அறியாமல் நம் மீது படரும் அதுபோன்ற சம்பவங்களையும், உணர்வுகளையுமே எஸ். ரா தனது கட்டுரைகளில் அவருக்கே உரிய கூர்ந்த பார்வையுடன் முதன்மைப்படுத்தியுள்ளார்.

உடல் பருத்த யானை ஒரு துருவத்திலிருந்து மற்றொரு துருவத்திற்கு செல்வதுதான் பயணமா என்ன! சிறிய கால்களைக்கொண்டு இயங்கும் நத்தை மேற்கொள்வதும் பயணம் தானே என உணரவைத்துள்ளார். பிரம்மாண்டமான விஷயங்கள் நம் கண்ணை மறைத்து விடுகிறது. அதுவே நாம் சின்ன சின்ன அழகிய விஷயங்களை இழப்பதற்கு காரணமாகிறது.

நாம் கணினி யுகத்தில், தொழில் மற்றும் இதர துறைகளில் முன்னோக்கிச் சென்றாலும் வாழ்வானுபவத்தில் பின்னோக்கித்தான் சென்று கொண்டிருக்கிறோம்.

பால்ய வயதில் மரங்களைச் சுற்றியும், வைக்கோல் புதரில் ஒளிந்தும் தாவிக்குதித்து விளையாடியதும் ஒரு கனவைப்போலவே வந்து கலைகிறது. இன்றைய குழந்தைகள் விளையாட்டிற்குக் கூட கணினியைத்தான் பெரும்பாலும் பயன்படுத்துகின்றனர். அவர்களின் உலகம் வீடியோ கேம்ஸ், கம்ப்யூட்டர் கேம்ஸ் என்றானவுடன் கிராமிய விளையாட்டுக்களும், கிராமிய வாழ்வும் அர்த்தமற்றுப் போனது உண்மையே.

அனைத்திற்கும் மேலாக அறுவடை செய்த பிறகு நிலத்திலுள்ள வைக்கோலுக்கு தீவைத்து பொசுக்குவதைப் பார்க்கும் போது பால்யத்தின் நினைவுகளையும் சுடுவதுபோல் உள்ளது.

கடற்கரையில் ஒதுங்கிக்கிடக்கும் கிளிஞ்சல்கலைப் போல, அவசர வாழ்வில் நாம் ஒதுக்கி வைக்கும் விஷயங்களும் ஏராளம். தேசாந்திரியில் எஸ்.ரா குறிப்பிட்ட கவிதையைப் போல்

சமுத்திரக் கரையில்
ஒதுங்கும் கிளிஞ்சல்கள்
குழந்தைக்கு வைரங்கள்
காட்சி தானே நிஜ வைரம்
காண்பவன் குழந்தையானால்
கிளிஞ்சல்கள் போதுமே.... (நா. விச்வநாதன்)

வாழ்க்கை என்பது அன்பு, குரோதம், அரவணைப்பு, புறக்கணிப்பு என ஆயிரம் உணர்வுகள் பிண்ணிப் பிணைந்த இடியாப்ப சிக்கல் போன்றது. சிக்கல்கள் சந்தித்துக் கொள்ளும் ஏதோ ஒரு புள்ளியில்தான் வாழ்வின் உண்மையான அர்த்தங்கள் வெளிப்படுகின்றது. அந்த அர்த்தங்களும், உணர்வுகளும் கடற்கரையில் ஒதுங்கிக்கிடக்கும் கிளிஞ்சல்களைப் போல சீண்டுவாரில்லாமல் சிதறிக்கிடக்கிறது.

சிதறிய முத்துக்களை இதிகாசத் தோழனைப்போல் "எடுக்கவோ? தொடுக்கவோ?" என கேட்பதுபோல் கேட்டு, கையிலெடுத்துக் கொடுத்து விளையாடும் குழந்தையாக நம்மை மாற்றிவிடுகிறார்.

ஒவ்வொரு கட்டுரையும் வித்தியாசமான வாழ்வனுபவத்தை படிப்பவர்களுக்குத் தருவதுடன், நெஞ்சத்தை தொட்டுச்செல்வதால் நான் நேசிக்கும் நண்பர்களுக்கு காதலுடன் வாங்கித்தரும் புத்தகங்களுள் இதுவும் ஒன்று.

3 comments:

KR Muthukumar said...

இக்காலத்தில் விமர்சனம் என்பதே குறைகளை கூறுவது என்றாகிவிட்டது . நீங்கள் பாரட்டி எழுதி இருப்பது விமர்சனங்களுக்கு ஒரு உதாரணம். நான் உங்களின் வலைப்பூவில் பார்த்து பல புஸ்தகங்களை வங்கி உள்ளேன். உங்கள் சேவை தொடர எனது வாழ்த்துக்கள்............. :)

Unknown said...

பின்னூட்டத்திற்கு நன்றி முத்து... வாங்கிய புத்தகங்களை படித்துவிடுங்கள். படித்து உங்களுடைய கருத்துக்களையும் சொல்லுங்கள்.

ஆவலுடன்,
கிருஷ்ணப் பிரபு,
சென்னை.

J S Gnanasekar said...

எனது எழுத்து ரசனையையே மாற்றியமைத்த புத்தகம் இது!

-ஞானசேகர்