Wednesday, March 11, 2009

Oru trillianukku ethanai zero

புத்தகத்தின் முகப்பில் குற்றவாளிக் கூண்டில் IMF மற்றும் உலக வங்கி என்ற தலைப்பைப் பார்த்தவுடன் வாங்கிவிட வேண்டியது என்று முடிவு செய்தேன். இது ஏழை நாடுகள் பட்ட கடன், வளர்ச்சி மற்றும் கடனின் தாக்கம் பற்றி பேசுகிறது. சூசன் ஜார்ஜ் ஆங்கிலத்தில் எழுதிய இப்புத்தகத்தை பல நண்பர்கள் ஒன்று சேர்ந்து மொழிபெயர்த்துள்ளனர்.1987 வரையிலான காலகட்டங்களில் ஏழை நாடுகளின் நடந்த பொருளாதார சுரண்டல்களை ஆய்வு செய்து எழுதியுள்ளார்கள்.

ஒரு டிரில்லியனுக்கு எதனை ஜீரோ: சூசன் ஜார்ஜ் (Rs:130) பதிப்பகம்: பாரதி புத்தக நிலையம்.

நாள்தோறும் அரசியல்வாதிகளின் அறிக்கையின் மூலம் அறிவிக்கப் படும் தொகுதி மேம்பாட்டிற்கான உலக வங்கிக் கடன், பன்னாட்டு நிதி நிறுவனக் கடன் போன்றவற்றால் ஒரு நாடு தன்னிறைவு பெற்றாலும், அதனுடைய எதிர் விளைவுகள் என்ன? அதனால் பாதிக்கப்படுவது யார்? பயனடைவது யார்? போன்ற பல கேள்விகளுக்கான பதில் இந்த புத்தகத்தில் கிடைக்கிறது.

புத்தகம் மூன்று பகுதிகளாக பிரிக்கப் பட்டுள்ளது. முதல் பகுதி பன்னாட்டு நிதி நிறுவனக்கள் ஒரு நாட்டிற்கு கடன் கொடுக்கும் போது எப்படி அணுகுகிறது எனவும், கொடுத்த கடனுக்கான சுமை எப்படி ஏழைகளின் தலையில் விழுகிறது என்பதைப் பற்றியும் விவரிக்கிறது.

இரண்டாம் பகுதி நிதி நிறுவனங்களிடம் கடன் பெற்று கடனாளி நாடுகளான ஆப்பிரிக்க மற்றும் லத்தீன் அமெரிக்க நாடுகளின் இன்றைய நிலையையும், கடனை அடைக்க அது மேலும் மேலும் கடன் பெற்று எப்படி முதுகெலும்பின்றி அதல பாதாளத்திற்கு செல்கிறது என்பதையும் விரிவாக அலசுகிறது. மேலும் அந்நாடுகளின் கடன் சுமையால் அதன் இயற்க்கை வளங்கள் வளர்ந்த நாடுகளின் மூலமாக எப்படி சுரண்டப்படுகிறது என்பதையும் விவரிக்கிறது.

மூன்றாம் பகுதி கடனாளி நாடுகள் கடனை அடைக்க எடுக்க வேண்டிய தீர்வுகள் பற்றி விவரிக்கிறது.

கடன் பட்ட ஒவ்வொரு நாடும் கடனை அடைக்க அந்நிய செலாவணியை ஈட்ட வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. ஆகவே ஏற்றுமதியை பெருக்கி இறக்குமதியை கட்டுப்படுத்த வேண்டிய நிர்பந்தம் ஏழை நாடுகளுக்கு ஏற்படுகிறது. ஏற்றுமதி அவசியம் என்ற பச்சத்தில் ஏற்றுமதிக்கான விலையை வல்லரசு நாடுகள் முடிவு செய்கின்றன. அதனால் ஏற்றுமதி செய்யும் நாடுகள் பெருத்த நட்டத்தை அடைகின்றன. நட்டத்தை சரிக்கட்ட சாதாரண மக்களின் மேல் வரிச்சுமை ஏற்றப்படுகிறது. இதனால் ஏழை மக்கள் வாங்கும் சக்தி குறைந்து நாட்டில் பஞ்சம் ஏற்படுகிறது. இறக்குமதி செய்ய வேண்டிய பொருட்களுக்கும் இதே கதைதான்.

எனவே கடனானது நாட்டு மக்களை இருதலைக் கொல்லியைப் போல் இரு புறமும் சுரண்டப்படுவதை சூசன் ராஜ் அழகாக எடுத்துரைக்கிறார்.

வளரும் நாடுகளில் கடன் என்பது தவிர்க்க முடியாத ஒன்று. அப்படி கடன் வாங்கினால் தான் வளர்ச்சி என்பது சாத்தியம். சாதகமான விடயங்களை தெரிந்துகொள்ளும் நாம் அதன் பாதகங்களையும் தெரிந்து கொள்வது அவசியம். இந்த புத்தகத்தை வாசிப்பதன் மூலம் சில சாதகங்களையும், பல பாதகங்களையும் தெரிந்து கொள்ளலாம்.

No comments: