
வெளியீடு: பாரதி புத்தகாலயம்
விலை: 50/- ரூபாய்
சில புத்தங்கங்களைப் படிக்கும் போது நம்மையறியாமலே சில நபர்களின் முகங்கள் நம் கண்முன் வந்து போகும். 'கணிதத்தின் கதை' புத்தகத்தை வாங்கும்போதே 'சம்பத் சாரின்' முகம்தான் என் கண்களில் நிழலாடியது. பத்தாவது படிக்கும் போது என்னுடைய கணித ஆசிரியர் அவர். எனக்கு கணிதத்தின் மீது ஈர்ப்பு வந்ததே சம்பத் சாரின் மூலமாகத்தான். பின்நாளில் கல்லூரி வாழ்க்கையில் கணிதத்தை நான் முதற் பாடமாக எடுத்து மூக்கை உடைத்துக் கொண்டது வேறு விஷயம்.
எல்லா வருட மாணவர்களுக்கும் "டேய், பசங்களா நீங்க எங்க போனாலும் ஏதாவது ஒரு வடிவத்தில் கணக்கு பாடம் உங்களை விடாம விரட்டிக் கொண்டே வரும். அதுகிட்ட இருந்து நீங்க தப்பவே முடியாது. அதனால கஷ்டம் பார்க்காம படிச்சுடுங்க. வாழ்க்கையில் நல்லா வந்துடலாம்." என்று கூறுவர். அவர் கூறிய வார்த்தைகளின் அர்த்தம் இந்தப் புத்தகத்தை வாசிக்கும் போதுதான் புரிய வந்தது.
பார்க்கப் போனால், சிறுவயது முதல் கணக்கு என்றாலே பலருக்கும் கசப்புதான். அதற்குக் காரணம் எண்கள் எப்படி தோன்றின, அதிலிருந்து படிப்படியாக கூட்டல், கழித்தல், பெருக்கல், வகுத்தல் என்பதெல்லாம் எதற்காக பழக்கத்தில் வந்தன, அதிலிருந்து 'கணக்கு' என்ற பிரம்மாண்ட துறையாக எப்படி அது வளர்ச்சி பெற்றது என்பதெல்லாம் நம்முடைய பள்ளி வாழ்க்கையில் கவனத்திற்குக் கொண்டு வரப்படுவதில்லை. கணிதத்திலுள்ள பல விஷயங்களையும் ஏன் படிக்கிறோம், எதற்கு படிக்கிறோம், எங்கெல்லாம் அது பயன்படும் என்ற அடிப்படை விஷயங்கள் கூட தெரிந்து கொள்ளாமல் கல்லூரி வரை படித்து முடிக்கிறோம்.
அந்தக் குறையை ஓரளவேனும் போக்கும்படி இருக்கிறது இந்தப் புத்தகம். கணிதத்தின் முழு வரலாற்றை கிரேக்கர், ஹிப்ரு, பாபிலோனியா முதல் ஜெர்மன், ஃபிரான்ஸ், இந்தியா வரை இன்றைய கணிதத் துறை வளர்ச்சியின் மொத்த வரலாற்றை சுவைபட தொகுத்திருக்கிறார் இரா.நடராசன்.
அல்ஜீப்ரா, டிபெரன்ஷியல் கால்குலஸ், ட்ரிக்நோமேத்ரி போன்றவைகளின் அன்றாடப் பயன்களையும் பட்டியலிட தவறவில்லை. இந்தப் புத்தகம் தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித்துறையின் முதற் பரிசை பெற்றுள்ளது குறிப்பிடப் படவேண்டிய ஒன்று.
கணித மாணவர்கள் மட்டுமின்றி கணிதத்தைப் பற்றிய ஆர்வமுள்ள அனைவருமே படிக்க வேண்டிய அருமையான நூல். இந்த நூலினைப் பற்றி எழுத்தாளர் தமிழ்மகனின் விமர்சனத்தைப் படிக்க இங்கு செல்லவும்: கணிதம் எனும் உண்மை உலகம்!
புத்தகம் கிடைக்குமிடத்தின் முகவரி:
பாரதி புத்தகாலயம்,
7, இளங்கோ சாலை
தேனாம்பேட்டை
சென்னை - 600018
இந்தியா
தொலைபேசி: (9144) 24332424, 24332924
நூலாசிரியரின் இன்னபிற படைப்புகளையும் பார்வையிட அவருடைய இணையத் தளத்திற்குச் செல்லவும்: www.eranatarasan.com
குறிப்பு: அட்டைப் படம் ஸ்னேகா பதிப்பகத்தின் வெளியீட்டில் உள்ளது. பாரதி புத்தகாலயம் முன் அட்டையை மாற்றியுள்ளார்கள்.
3 comments:
நல்லதொரு புத்தகத்தின் அறிமுக விமர்சனம் கொடுத்ததற்கு நன்றி கிருஷ்ணா :)
பார்க்கப் போனால், சிறுவயது முதல் கணக்கு என்றாலே பலருக்கும் கசப்புதான்
உண்மைதான் :)
புத்தகப்பகிர்வுக்கு நன்றி,
ஏன் படிக்கிறோம், எதற்கு படிக்கிறோம், எங்கெல்லாம் அது பயன்படும் என்ற அடிப்படை விஷயங்கள் கூட தெரிந்து கொள்ளாமல் கல்லூரி வரை படித்து முடிக்கிறோம் //
எனக்குதான் மண்டையில் ஏறாது, அட்லீஸ்ட் அமித்துவுக்காகவது புரியற மாதிரி ஆரம்பிக்கலாமில்ல.
நன்றி ரகு
நன்றி சாரதா
Post a Comment