Friday, August 7, 2009

மகாராஜாவின் ரயில் வண்டி - அ.முத்துலிங்கம்

வெளியீடு: காலச்சுவடு பதிப்பகம்
விலை: 75 ரூபாய்

பொதுவாக தாயகத்தை விட்டு வேலை நிமித்தமாகவோ அகதியாகவோ வெளிநாடு சென்று வாழ்பவர்கள் வெளியில் சொல்ல முடியாத சோகத்தையே வாழ்க்கையாக வாழ்கின்றனர். அதுவும் அகதியாக செல்பர்களின் உளவியல் போராட்டங்கள் வார்த்தைகளால் விவரிக்க முடியாத ஒன்று. அ.முத்துலிங்கம் இந்த உளவியல் போராட்டங்களை ஜீரணித்து ஹாஷ்ய சிறுகதைகளாகவும், கட்டுரைகளாகவும் அளிப்பதில் வல்லவர்.

அவர் சுவைபட எழுதிய முக்கியமான 20 சிறுகதைகள் அடங்கியப் புத்தகம் 'மகாராஜாவின் ரயில் வண்டி' காலச்சுவடின் வெளியீடாக வந்துள்ளது. இந்தச் சிறுகதைகள் யாவும் காலச்சுவடு, உயிர்மை, இந்தியாடுடே, ஆனந்த விகடன், தீராநதி போன்ற முக்கியமான இலக்கிய இதழ்களில் வெளிவந்தவை. தனது சொந்த அனுபவங்களை கொஞ்சம் கற்பனை சேர்த்து புனைவுகளாக அளித்துள்ளார்.

மகாராஜாவின் ரயில் வண்டி:
பதின்ம வயதிலுள்ள விடலைப் பையன் யாழ்ப்பாண பள்ளியில் சேர்வதர்க்காக சந்தர்ப்பம் காரணமாக தெரிந்தவர் வீட்டில் தாங்கும் போது சந்திக்க நேர்ந்த பெண்ணின் நினைவுகளை அசை போடுவதாக இந்தக் கதை இருக்கிறது. அருமையான சித்தரிப்புகளுடன் கூடிய கதை. இந்தக்கதை அ. முத்துலிங்கத்தின் சிறந்த கதையாக முக்கியமான எழுத்தாளர்களால் கொண்டாடப் படுகிறது.

எஸ். ராவின் சிறந்த 100 தமிழ்ச் சிறுகதைகளில் காண்க:
http://www.sramakrishnan.com/deep_story.asp?id=276&page=

நாளை:
அகதி முகாம்களில் வழங்கப்படும் சூப்பில்(Soup) உள்ள இறைச்சித் துண்டிற்காகவும் அடுத்த வேலை உணவிற்காகவும் அகதி முகாம்களைத் தேடி அலையும் சகோதர சிறுவர்களின் கதை.

தொடக்கம்:
வானத்தைத் தொட்டு நிற்கும் பன்னாட்டு தொழிற் பூங்காவின் - மேகம் உரசும் மாடிக் கட்டிடத்தில் ஜன்னல் வழியாக ஒரு பறவை அலுவலகத்திற்குள் வருகிறது. தினமும் அந்த பாதை வழியாக வந்து வெளியில் செல்கிறது. ஒரு நாள் ஜன்னலை மூடி விடுகிறார்கள். மூடிய கண்ணாடி ஜன்னலில் அடிபட்டு பறவை இறந்துவிடுகிறது.

பறவையின் சுதந்திர வழி அடைக்கப்படுவதையும், அதனால் அதன் உயிர் பரிபோவதையும் பற்றிப் பேசும் கதை.

விருந்தாளி:
ஆப்ரிக்கக் கிராமம் ஒன்றில் நெடுஞ்சாலைப் பணிக்காக தனித்து விடப்பட்ட தமிழன் ஒருவனுக்கு எதிர்பாராத விதமாக மற்றொரு தமிழன் விருந்தாளியாக வருகிறான். அந்த ஆனந்தத்தில் விருந்தாளிக்கு கொடுக்கும் விருந்தின் மூலம் அகதிகளின் வாழ்வைப் பற்றி இந்தக் கதை பேசுகிறது.

அம்மாவின் பாவாடை:
இந்தத் தலைப்பே கதையைப் படிக்கும் சுவாரஸ்யத்தைக் கூட்டியது. இரண்டு பாவாடை வைத்திருப்பதை பெருமையாக நினைக்கும் அம்மாவின் ஒரு பாவாடையை மாடு மென்றுவிடுவதால் நிகழும் சம்பவத்தை அடிப்படையாகக் கொண்டு இலங்கை தமிழ்ப் பெண்களில் வாழ்வியலைப் பேசும் கதை.

செங்கல்:
வட்ட வடிவில் வீடு கட்டுவதற்கு அதற்கேற்ற வகையிலான வட்ட செங்கல்லைத் தேடும் நிகழ்வினை அடிப்படையாகக் கொண்ட புனைவு கதை.

கடன்:
முதுமையில் வெளி நாட்டில் இருக்கும் தனது மகனுடன் வாழும் முதியவரின் வாழ்வியல் சிக்கல்களைப் பற்றி பேசும் கதை. எப்படியாவது கிரீன் கார்டு வாங்கி மகனை விட்டுப் பிரிந்து நண்பருடன் இறுதி நாளை இஷ்டம் போல் கழிக்க எண்ணிய முதியவர் நேர தாமதத்தால் அந்த வாய்ப்பை இழக்க நேரிடும் கதை.

பட்டம்:
காவாளி ஒருவனை தைரியமாக எதிர்கொள்ளும் பெண் அதனால் தன்னுடைய கல்லூரிப் 'பட்டத்தை' வாங்க இயலாமல் போவது, பெண்ணின் தைரியமான அணுகு முறையால் ஊரைவிட்டு ஓடும் காவாளி ரவுடிப் 'பட்டத்தை' இழப்பதையும் பற்றிய கதை. நல்ல புனைவு.

ஐவேசு:
வழிகாட்டியின் தவறுதலால் செல்ல வேண்டிய பாதையைத் தவறவிட்டு இந்துகுஷ் மலையடிவாரத்தில் விளிம்புகள் உடைந்த குவளையில் ஆட்டுப் பால் அருந்தும் நிகழ்வை பற்றி பேசும் கதை.

ஐந்தாவது கதிரை:
கணவன் மனைவிக்குள் நடைபெரும் பொருளாதாரம் சார்ந்த பிரச்சினைகளைப் பேசுகிறது. தனது கணவனை குற்ற உணர்ச்சியில் நிறுத்த வேண்டி தனது மார்பகங்களுக்கு பச்சைக் குத்திக் கொள்ளும் பெண்ணையும், கலாச்சாரங்களுக்குள் வாழ்ந்து பழக்கப்பட்ட கணவனுக்கும் இடையில் நடக்கும் உணர்வுகளைப் பற்றிய கதை.

மேலும் ஆயுள், மாற்று, கருப்பு அணில், எதிரி, தில்லை அம்பலப் பிள்ளையார் கோவில், கல்லறை, கொம்புளானா, ராகு காலம், ஸ்ட்ராபெரி ஜாம் போத்தலும் அபீசியன் பூனையும் போன்ற கதைகளும் அருமை.

எழுத்தாளர் ஜெய மோகனால் இணையம் மூலம் எடுக்கப்பட்ட 'அ. முத்து லிங்கத்தின்' பேட்டி இந்த பக்கங்களில் படிக்கக் கிடைக்கிறது. கீழே அழுத்திச் செல்லவும்.

அவருடைய வாழ்வியல் அனுபவம் யாருக்கும் சுலபத்தில் கிடைக்காது. இந்த செவ்வியைப் படிப்பதன் மூலம் அவருடைய கதைகளுக்கான மூலம் எங்கிருந்து கிடைக்கிறது என்பது தெரியவரும்...

அ.முத்துலிங்கம் நேர்காணல் – ஜெயமோகன்

Book Details: Maharajavin rail vandi / kalachuvadu / A. Muthulingam

5 comments:

சேரலாதன் பாலசுப்பிரமணியன் said...

சிறுகதைகள் பற்றிய குறிப்புகளை நான் படிக்கவில்லை. புத்தகத்தை வாசித்துவிட்டுப் பின் படிக்கிறேன் :)

-ப்ரியமுடன்
சேரல்

Unknown said...

அவசியம் படியுங்கள் சேரல். நல்ல புத்தகம்.

அமிர்தவர்ஷினி அம்மா said...

வழமை போல விரிவான விமர்சனம்

பகிர்வுக்கு நன்றி,

உமாஷக்தி கூட இந்தப் புத்தகம் பற்றி விமர்சனம் எழுதியிருக்கிறார்கள்.

லேகா said...

பிரபு,உங்க வலைத்தளத்திற்கு இப்போது தான் முதல் முறை வருகின்றேன்.

அருமையான புத்தக விமர்சனங்கள்..பல புத்தக பெயர்களை குறித்து கொண்டேன் வாங்குவதற்கு.

நன்றி.
லேகா

Unknown said...

@ அமிர்தவர்ஷினி அம்மா

முத்துலிங்கத்தின் எழுத்துகள் எல்லாமே அருமையாக இருக்கும். கண்டிப்பாக வங்கிப் படியுங்கள்.

@ லேகா

உங்களுடைய வலைப்பூ எனக்கு நீண்ட நாட்களாகவே தெரியும் லேகா. தவறாமல் வாசிப்பேன். நன்றாக எழுதுகிறீர்கள். தொடருங்கள் லேகா. வருகைக்கும், பின்னூட்டத்திற்கும் நன்றி.