Thursday, September 24, 2009

நிழல் - சினிமா இதழ்

ஆசிரியர்: திருநாவுக்கரசு
வெளியீடு: நிழல் பதிப்பகம்
விலை: 30/- ரூபாய்

ஒரு நாள் முத்து ஃபோன் செய்து, "மாமா... நீங்க நிழலில் சினிமாவைப் பற்றி கட்டுரை எழுதுங்களேன். எனக்குத் தெரிந்தவர் தான் இதழின் ஆசிரியர். முயற்சி செய்யுங்களேன்." என்று அன்புடன் கூறினான்.

"அடேய், சினிமா என்ன சாதாரண விஷயமா? கம்ப சூத்திரம்டா, அதில் நிறைய தொழில் நுட்பம் சம்மந்தப்பட்டு இருக்கு. "கேமரா, ஒளிப்பதிவு, பாடல், இசைக் கலப்பு, பின்னணி இசை, எடிட்டிங், கலை இயக்கம், etc..." இன்னும் நிறைய விஷயங்கள் இருக்கு. அதை எல்லாம் முறைப்படி இல்லையென்றாலும் ஓரளவிற்குத் தெரிந்துகொண்டு எழுதுவது தான் நல்லது.

நமக்குத் தெரிந்தது எல்லாம் கதை, இயக்கம், வசனம் மற்றும் திரைக்கதை மட்டுமே. குறைந்த புரிதலை வைத்துக் கொண்டு எழுதினால் கட்டுரை நல்லா இருக்காது. நமக்கு எதுக்குடா வீண்வேலை" என்று கூறிய பதில் அவனை எந்த அளவிற்குக் காயப்படுத்தி இருக்குமோ தெரியவில்லை.

ஐந்து வருடங்களுக்கு முன்பு "சதத் ஹசன் மண்டோ"வின் படைப்புகளை வாங்குவதற்காக (யாரோ படிப்பதற்கு வாங்கி திருப்பித் தரவில்லை) நிழல் பதிப்பகத்திற்குச் சென்றிருக்கிறேன். அப்பொழுது ஒரு இதழையும் கூடவே வாங்கிப் படித்ததாக ஞாபகம். சினிமாவைப் பற்றி இருந்ததால் மீண்டும் அந்த இதழைப் படிக்கும் ஆர்வம் வரவில்லை.

தற்போது நிழல் எப்படி வெளிவருகிறது என்று பார்ப்பதற்காக எழும்பூர் புத்தகக் கடைகளில் தேடினேன். எங்கும் கிடைக்காததால் உடன் வேலை செய்யும் நண்பன் கார்த்திக்கிடம் சொல்லி எனி இந்தியனிலிருந்து வாங்கி வரச் சொன்னேன்.

9-ஆம் ஆண்டு இதழ் என்று முகப்பிலேயே குறிப்பிட்டிருந்தார்கள்.

பல சுவாரஸ்யமான விஷயங்கள் இதழில் படிக்கக் கிடைத்தன. யாழ்ப்பாண குறும்பட ஆர்வலர் ராகவன் தனது குறும்பட பயிற்சி மற்றும் முதல் குறும்படமான "மூக்குப்பேணி"யைப் பற்றி விரிவாக பகிர்ந்திருக்கிறார். கன்னட சினிமாவைப் பற்றி விட்டல் ராவ் கட்டுரை எழுதியிருக்கிறார். ராஜகோபால் எழுதியுள்ள "எக்ஸ்ப்ரஷனிஸமும் ஜெர்மன் சினிமாவும்" கட்டுரை சினிமாவை நுணுக்கமாக தெரிந்துகொள்ள நினைப்பவர்களுக்கு உதவியாக இருக்கும்.

பிரசாத் ஃபிலிம் லேபரட்டரி செயல் இயக்குனர் சிவராமன் "கேமரா நின்ற பிறகு என்ன நடக்கிறது..." Post Production பற்றி விளக்குகிறார்.

ஓவியர் மற்றும் கலை இயக்குனர் மருது, Y.G. மகேந்திரன் போன்றோருடைய நேர்காணல்களும், நகைச்சுவை நடிகர்களின் பங்களிப்பு தொடரில் N.S. கிருஷ்ணன், மதுரம் பற்றியும், நெறியாலும் பெண்கள் கட்டுரையில் பெண் படைப்பாளிகளைப் பற்றியும் விரிவாக எழுதி இருக்கிறார்கள்.

கடைசி பக்கத்தில் DFT மாணவர் கார்த்திக்கின் புகைப்படங்கள் கண்ணைக் கவரும் படி இருக்கிறது. இந்த இதழில் முதல் எட்டுப் பக்கங்களில் ஏராளமான எழுத்துப் பிழை இருந்தது. திருநாவுக்கரசை நேரில் பார்த்து இதைப் பற்றி பேச வேண்டும் என்று நினைத்துக் கொண்டேன். மற்றபடி இதழ் அருமையாக இருந்தது.

சினிமா, குறும்படம், ஆவணப்படம் மற்றும் உலகப் படங்களைப் பற்றி தமிழில் வெளிவரக் கூடிய தமிழிதழ்களில் "நிழல்" முக்கியமான இதழ். ஆசிரியர் திருநாவுக்கரசு மிகுந்த சிரமங்களுக்கு இடையில் கடந்த 9 ஆண்டுகளாக இந்த இதழை நடத்திக் கொண்டு வருகிறார்.

சர்வதேச திரைப்படவிழாக்கள் மற்றும் குறும்பட போட்டிகள், அது தொடர்பான குறிப்புகள், சினிமாத்துறை சார்ந்தோரின் நேர்காணல்கள் போன்றவை நிழலில் வெளியிடப்படுகின்றன. விஷுவல் கம்யூனிகேஷன் பாடத்திட்டங்களைக் கொண்டுள்ள பல கல்லூரிகளும் இந்த இதழின் சந்தாதாரராக இருக்கிறார்கள் என்று கேள்விப்பட்டேன். சினிமாவின் நுணுக்கங்களைத் தெரிந்து கொள்ள விரும்புவோர் இந்த இதழைப் படிக்கலாம்.

*****************
சினிமாவைப் பற்றி எனக்குப் பிடித்த வரிகள்:

"எல்லோரும் இரண்டு வேலை செய்கிறார்கள். ஒன்று அவர்களுடைய சொந்த வேலை மற்றொன்று சினிமாவை விமர்சனம் செய்வது." என்று யாரோ ஒரு கட்டுரையாளரின் வரிகள் எனக்கு மிகவும் பிடித்திருந்தது.

என்னைப் பொறுத்தவரை இந்தியர்கள் மூன்றாவதாக ஒரு வேலையை செய்கிறார்கள் அது கிரிக்கெட்டைப் பற்றி விமர்சனம் செய்வது.

*******************

சினிமா சமந்தப்பட்ட ஏராளமான புத்தகங்களை "நிழல் பதிப்பகம்" தமிழில் வெளியிடுகிறார்கள். தொடர்புக்குக் கீழுள்ள முகவரியை அணுகலாம்.

Address:
Nizhal Pathipagam,
Editor: Thirunavukarasu,
12/28 Rani Anna nagar,
Chennai - 600 078

Mobile: 94444 84868
E-mail: nizhal_2001@yahoo.co.in

3 comments:

கே.பாலமுருகன் said...

போன வாரம் சிங்கப்பூர் சென்றிருந்தபோது இந்த நிழல் இதழ் வாங்க கிடைத்தது கிருஷ்ணா. சினிமா குறித்து ஆழமான தேடல் எனக்குள் எப்பொழுதும் இருக்கிறது. அதற்கான சரியான களம் நிழல் இதழ்.

4 குறும்படம் எடுத்த எனது அனுபவத்தை மேலும் வலுப்படுத்தும் குறும்படம் குறித்த கட்டுரைகள் நிறைவை அளிக்கின்றன. மேலும் பகிருங்கள்.

rvelkannan said...

தொடர்ந்து கிடைப்பதில்லை ஆனால் சென்னை வரும் பொழுதெல்லாம்
நான் வாங்கி விடுவேன்
நல்ல புத்தகம் 'நிழல்' . அருமையான பதிவு நண்பரே தொடருங்கள் .

Unknown said...

பின்னூட்டத்திற்கு

நன்றி பாலு,
நன்றி வேல் கண்ணன்