Thursday, November 26, 2009

கரைந்த நிழல்கள்

ஆசிரியர்: அசோகமித்திரன்.
வெளியீடு: கிழக்குப் பதிப்பகம்
விலை: 60 ரூபாய்

இரவு நேரத்தில் எரியக் கூடிய நல்லெண்ணெய் விளக்குகளும், மண்ணெண்ணெய் விளக்குகளும் எங்களுடைய வாழ்க்கையை ஆக்கிரமித்திருந்த காலமது. மாலை ஆரம்பித்தால் பெரியவர்களிடம் கதை கேட்பது, கண்ணா மூச்சு, ராஜா-ராணி ஆட்டம் விளையாடுவது என்று நாட்கள் சந்தோஷமாக நகர்ந்து கொண்டிருக்கும். ரொம்ப சிறிய வட்டத்தில் எங்களுடைய வாழ்க்கை அழகாக, ஆனந்தமாக சென்றுகொண்டிருந்தது. யோசித்துப் பார்த்தால் 'ச்சே' இப்படி ஆயிடுச்சே என்று ஒருமுறையாவது சொல்லி சலித்திருப்போமா என்று தெரியவில்லை.

மெல்ல மின்சாரம் எங்கள் ஊருக்குள் தலை காட்டியது. பிறகு 'ரேடியோ, டேப் ரெக்காடர், டிவி' என்று பொழுது போக்கு அம்சங்கள் எங்களுடைய வாழ்க்கையில் இரண்டரக் கலந்துவிட்டது. ஆரம்ப நாட்களில் வெள்ளிக் கிழமை தோறும் டிவியில் ஒளிபரப்பாகும் 'ஒலியும் ஒளியும்' நிழ்ச்சிக்காக ஆவலுடன் காத்துக் கொண்டிருப்போம். 'மகா பாரதம், தெனாலிராமன் கதைகள், ஜுனூன், கானூன்' போன்ற மெகா தொடர்களுக்காக ஆளாய்ப் பறப்போம். ஒருசில நாட்களில் நிகழ்ச்சி ஆரம்பிக்கும் நேரத்தில் கரண்ட் கட்டாகிவிடும். அப்பொழுது எல்லோரும் ஒன்று சேர்ந்து 'ச்சே இப்படி ஆயிடுச்சேன்னு' ஆயாசப்படுவோம்.

அந்த நாட்களில், ஞாயிற்றுக் கிழமைகளில் மட்டும் தான் டிவியில் சினிமா போடுவார்கள். அதுவும் பழைய படமாக இருக்கும். எனவே ஊரின் அருகிலுள்ள சினிமா அரங்குகளுக்கு (டென்ட் கொட்டா) புதுப்படம் வந்தால் தவறாமல் சென்று பார்ப்பது வாடிக்கை. அப்படிப் பார்த்த படங்களில் 'அதிசயப் பிறவி', 'என்றும் அன்புடன்' போன்ற படங்கள் எங்கோ ஞாபகத்தில் வருகிறது. இதில் சுவாரஸ்யம் என்னவென்றால் 'புளி சாதம்' கட்டிக் கொண்டு போய் ஒரே நாளில் இரண்டு சினிமாக்கள் கூட பார்த்திருக்கிறோம். என்னோட சித்தப்பா மகள் (அக்கா) 'சர்மிளா' தான் எங்களுக்கு வழிகாட்டி.

இவ்வளவு மெனக்கெட்டு வெறித்தனமாக சினிமாவைப் பார்த்தாலும் அதில் என்னென்ன முன்வேலைகள் பின்வேலைகள் இருக்கிறதென்று ஒரு நாளும் யோசித்ததில்லை. கிசு கிசுவைத் தவிர்த்த சினிமா சார்ந்த ஏகப்பட்ட விஷயங்கள் நமக்குத் தெரியாமலே போய்விடுகிறது அல்லது தெரிந்து கொள்ளாமலே விட்டு விடுகிறோம். அவுட்டோர், இண்டோர் ஷூட்டிங் நேரங்களில் ஏற்படும் சிக்கல்கள், படத் தயாரிப்பாளரின் மன அழுத்தம், ஸ்டுடியோ நிர்வாகம், விநியோகம், விளம்பரம், இன்னபிற சினிமா விஷயங்களும் அதற்கான தீர்வு காண போராடும் மனிதர்களின் உழைப்பும் நமக்குத் தெரியாமலே போய்விடுகிறது. இந்த முகம் தெரியாத, ஆனால் சினிமாவின் முக்கிய நபர்கள் வாழும் நாவல் தான் கரைந்த நிழல்கள்.

சினிமா என்னும் அதிசய ஊடகத்தின் மாய வலையினுள் உருக்குலைந்து போன மனிதர்களின் ஏமாற்றம், இழப்பு, வலி, இயலாமை, தோல்வி என்று நம்மால் சிறிதும் கற்பனை செய்ய முடியாத வாழ்க்கையையும், பரிதாபத்தையும் பதிவு செய்திருக்கிற உருக்கமான நாவல். படத் தயாரிப்பாளர் , புரொடக்ஷன் மானேஜர், டைரக்டர், காமிராமேன், நடிகைகள், துணை நடிகைகள், ஸ்டூடியோ கம்பனிக்கு கார் ஓட்டுபவர்கள் என பலரது வாழ்க்கையையும் ஆசிரியர் தனது இயல்பான நடையில் வாழச்செய்கிறார்.

இந்த நாவலைப் படிக்கும் போது, எனக்குத் தெரிந்த பலரும் நினைவில் வந்து சென்றார்கள். அவர்களில் 'கோட்டி மாமா' முக்கியமானவர். திரைக்குப் பின்னால் உள்ளவர்களின் வலியைத் தெரிந்து கொள்ளும் சந்தர்பமும் அவரின் மூலமாகத் தான் வந்தது.

என்னுடைய அப்பாவின் சித்தப்பா மகள் 'பார்வதி', என்னுடைய அம்மாவின் பெரியப்பா மகன் 'ருத்ர கோட்டி'யை காதலித்துக் கல்யாணம் செய்துகொண்டாள். அந்த காலத்தில் எங்களுடைய குடும்பத்தில் சினிமா எடுக்கறேன்னு திரிஞ்ச ஆளு கோட்டி மாமா. அவருக்கு பொண்ணு கொடுக்க கொஞ்சம் யோசிச்சாங்க... "அவரை மனசார காதலிக்கிறேன்... கட்டினா அவரைத் தான் கட்டுவேன்" என்று பிடிவாதமாக இருந்து அவரையே கல்யாணம் கட்டிக்கிட்டாங்க.

சாதாரண டூயட் பாடினாலும் அந்த நடிகர் கையில மைக் இருக்கும். அவரை வைத்துப் படம் எடுக்கறதா சொல்லிக்கிட்டு இருந்தாரு. மற்றபடி இயக்குனர் யாரு? இசையமைப்பாளர் யாரு? -ன்னு கேக்குற பக்குவம் எல்லாம் அந்த காலத்தில் எனக்கு இல்லை. படத்தின் பெயர் மட்டும் 'மூன்றாம் மனிதர்கள்' என்று சொல்லியதாக ஞாபகம். சில நேரங்களில் அவர் கையிலுள்ள ஆல்பத்தைக் கண்பித்து இந்த பொண்ணுதான் எங்க படத்தோட நடிகைன்னு சொல்லுவாரு. பார்வதி அத்தையின் கல்யாணத்துக்கு கொஞ்சம் பணத்தை சீதனமா கொடுத்தாங்க. அதைக் கூட அவர் சினிமாவுலதான் போட்டாரு. இவரைப் பார்ப்பதற்காக அம்பாசடர் காரில் ஜிப்பா போட்ட ஒருத்தர் வருவாரு. அவரு கூட சேர்ந்துதான் சினிமா எடுக்கறதா பேசிக்கிட்டாங்க.

லோகேஷனுக்காக அந்த ஊருக்குப் போறேன், இந்த ஊருக்குப் போறேன்னு சந்தோஷமா சுத்திட்டு இருந்தாரு. இடையில் ஏற்பட்ட பொருளாதார சிக்கலால் படம் நின்னு போச்சு. கொஞ்சம் கொஞ்சமா அவருடைய முகத்துல சந்தோசம் வத்தி போயிடுச்சி. கல்யாண வீட்டிற்கு வந்தாலும் எழவு வீட்டிற்கு வருவது போல் தான் வருவார். இப்பஇப்ப கல்யாண வீட்டிற்குக் கூட அவர் வருவதில்லை. ஊரில் கூட யாரிடமும் சகஜமாகப் பேசுவதில்லை. எனக்குத் தெரிந்த பலரும் இந்த மாதிரி இருக்கிறார்கள்.

சில நேரங்களில் "இந்த உம்மத்தனைக் கட்டிக்கிட்டேனே... இன்னும் எவ்வளவு நாள் நான் போராடனமோ? இத்யாதி இத்யாதி..." என்று என்னுடைய அத்தையின் வார்த்தைகள் காற்றில் பறந்து வந்து என்னுடைய செவிப் பறைகளை நனைத்த நாட்கள் ஞாபகம் வருகிறது.

விரும்பி எடுத்துக் கொண்ட விஷயத்தில் தோற்றுப்போனவர்கள் எல்லாம் சமூகத்தில் மட்டுமல்ல குடும்பத்திலும் மூன்றாம் மனிதர்கள் ஆகிவிடுகிரார்களோ! அவர்களுடைய லட்சியங்கள் எல்லாம் கற்பனையில் கரைந்த நிழல்கள் தானோ?

12 comments:

அ.மு.செய்யது said...

பகிர்வுக்கு நன்றி கிருஷ்ணா !!!

அசோகமித்திரனின் சிறுகதை தொகுப்பு இப்போது தான் வாங்கினேன்.வாய்ப்பு கிடைத்தால் இதையும் வாசிப்போம்.

( பழைய நினைவுகளில் மூழ்கடித்தது உங்கள் பதிவு !!! )

அன்பேசிவம் said...

ஐயா நான் ஏற்கனவே படிச்சிட்டேனே... ஹா ஹா ஹா

அன்பேசிவம் said...

//விரும்பி எடுத்துக் கொண்ட விஷயத்தில் தோற்றுப்போனவர்கள் எல்லாம் சமூகத்தில் மட்டுமல்ல குடும்பத்திலும் மூன்றாம் மனிதர்கள் ஆகிவிடுகிரார்களோ! அவர்களுடைய லட்சியங்கள் எல்லாம் கற்பனையில் கரைந்த நிழல்கள் தானோ? //

இது கிருஷ்ணபிரபு டச், :-)
நாவலை பற்றி எதுவும் சொல்லாமல் சொன்ன விதம், அருமை.

அமிர்தவர்ஷினி அம்மா said...

அனுபவத்தை சேர்த்து அழகாய் பதிவிட்டிருக்கிறீர்கள் கிருஷ்ணா.

கடைசி கேள்வி நச்.

சேரலாதன் பாலசுப்பிரமணியன் said...

கிருஷ்ணா...

அட்டகாசம்.... மிக நேர்த்தியான பதிவு. ஒரு சிறுகதை வாசிப்பதான அனுபவத்தைக் கொடுத்தது. தொடருங்கள் ;)

-ப்ரியமுடன்
சேரல்

Karthik said...

sema pathivu..

அமுதா said...

/*விரும்பி எடுத்துக் கொண்ட விஷயத்தில் தோற்றுப்போனவர்கள் எல்லாம் சமூகத்தில் மட்டுமல்ல குடும்பத்திலும் மூன்றாம் மனிதர்கள் ஆகிவிடுகிரார்களோ! அவர்களுடைய லட்சியங்கள் எல்லாம் கற்பனையில் கரைந்த நிழல்கள் தானோ?*/
அருமை. உங்கள் பதிவுகளால் படிக்க வேண்டிய புத்தகங்களின் லிஸ்ட் எனக்கு கூடிக் கொண்டே போகிறது. படிக்க முடிய வேண்டும் என்று எண்ணிக்கொள்கிறேன்.

கானகம் said...

நல்ல வலைப்பதிவு. நல்ல விஷயங்களை எழுதுகிறீர்கள்.

ஜெயமோகனின் இன்றைய ஒரு பதிவில் (இணைய உலகமும், நானும்)

//எந்த ஒரு தலைப்பிலும் இணையத்தில் தமிழில் தேடினால் ஒன்று அல்லது இரண்டு பதிவுகளே பொருட்படுத்தக்கூடியவையாக இருக்கும். பெரும்பாலானவை அரட்டையோ வசையோ ஆகவே இருக்கும். சந்தேகமிருந்தால் தேடிப்பாருங்கள்//

என எழுதியிருந்தார். அப்படி பொருட்படுத்தக்கூடியதாக இருக்கும் பதிவுகளில் நிச்சயம் உங்களுடையதும் ஒன்றாய் இருக்கும்.

நிறைய எழுதுங்கள்.

வாழ்த்துக்கள்.

ஜெயக்குமார்

SIV said...

பதிவு சிறப்பாக இருக்கிறது

priyamudanprabu said...

நல்ல பகிர்வு

Unknown said...

@ அ.மு.செய்யது
@ முரளிகுமார் பத்மநாபன்
@ அமிர்தவர்ஷினி அம்மா
@ சேரல்
@ கார்த்திக்
@ அமுதா
@ ஜெயக்குமார்
@ SIV
@ பிரியமுடன் பிரபு

பின்னூட்டம் செய்த அனைவருக்கும் நன்றி...

Piraisoodi said...

Hi...

Can u please read the sudesa mithran's cocktail and Hospathiri novel..