Tuesday, December 29, 2009

யாரோ ஒருத்தியின் டைரிக்குறிப்புகள்

ஆசிரியர்: நிலாரசிகன்
வெளியீடு: திரிசக்தி
விலை: ரூ.70

நிலாரசிகனைப் பற்றி தமிழில் பதிவெழுதும் நண்பர்களுக்கும், தமிழ் இணையப் பயனாளர்களுக்கும் அறிமுகம் தேவையில்லை. 2004ல் இருந்து தனது கற்பனைகளுக்கு கவிதை வடிவில் வலைப்பூக்களில் வடிவம் கொடுத்துக் கொண்டிருப்பவர். அவையாவும் இணைய இதழ்களிலும், சிற்றிதழ்களிலும் வெளிவந்து அவருக்கான கவனத்தை ஏற்படுத்திக் கொடுத்தவை.

கல்லூரி நாட்களில் வெளிவந்தது இவருடைய முதல்
கவிதைத் தொகுப்பு. அதைத் தொடர்ந்து மேலும் இரண்டு கவிதைத் தொகுப்புகளும் வெளிவந்துள்ளன. சிறுகதை என்று வரும்பொழுது 17 சிறுகதைகள் கொண்ட "யாரோ ஒருத்தியின் டைரிக்குறிப்புகள்" தான் இவரது முதல் தொகுதி.

இதிலுள்ள கதைகள் யாவும் கடந்த இரண்டாண்டுகளில் எழுதப்பட்டு இணைய இதழ்களிலும், சிற்றிதழ்களிலும் பிரசுரம் கண்டவை. இவரது சிறுகதைகள் யாவும் குழந்தைகளின் வெகுளித் தனமான உலகத்தையும், வெள்ளந்தியான கிராம மக்களையும், பெண்களின் அக எண்ணங்களையும் அதனால் உண்டாகும் புறச்சிக்கல்களையும் சித்தரிப்பவையாக இருக்கின்றன.

கீழுள்ள கதைகள் யாவும் அதற்கு உதாரணம்...

1. யாரோ ஒருத்தியின் டைரிக்குறிப்புகள்
2.
வேட்கையின் நிறங்கள்
3.
அப்பா சொன்ன நரிக்கதை
4. வால் பாண்டி சரித்திரம்

புத்தகத்திலுள்ள மேலும் சில கதைகளைப் படிக்க அவருடைய இணையைப் பக்கங்களுக்குச் செல்லவும்: www.nilaraseeganonline.com

கதையைக் கச்சிதமாக ஆரம்பித்து கச்சிதமாக முடிக்கிறார். இடையில் வர்ணிப்பிலும், கொண்டு செல்லும் விதத்திலும் தான் சில கதைகளில் தொய்வு காணப்படுகிறது. வார்த்தைப் பிரயோகத்திலும், வர்ணிப்பிலும் கூடுதல் கவனம் செலுத்தி கதைகளைக் கொண்டு சென்றால் இன்னும் நல்ல படைப்புகளை இவரிடமிருந்து எதிர்பார்க்கலாம்.

கவிதை மற்றும் சிறுகதை எழுதுவதில் தீவிரமாக இயங்கி வரும் இளம் படைப்பாளியான இவர் தனது பக்குவமான உழைப்பின் மூலம் அவருக்கான இடத்தை படைப்பிலக்கியத்தில் எட்டிப்பிடிப்பார் என்று நம்புகிறேன்.

பின் குறிப்பு:
1. புத்தகத்தில் இவர் எழுதிய
என்னுரையில் அவருடைய சகோதரிக்கும், கதைகளை பிரசுரித்த ஒவ்வொரு இதழின் பெயரையும் குறிப்பிட்டு நன்றி தெரிவித்திருக்கிறார். புத்தகத்தில் அவைகள் விடுபட்டு இருக்கின்றன. அதற்காக மிகவும் வருத்தப்பட்டார்.
2.
பதிவர் அல்லாதவர்கள் தான் நிறையப் புத்தகங்கள் வாங்கியதாகத் தெரிவித்தார். அந்த வகையில் இவர் பரவலான கவனத்தைப் பெறுவது மகிழ்ச்சியே.

9 comments:

கிருஷ்ண மூர்த்தி S said...

/பதிவர் அல்லாதவர்கள் தான் நிறையப் புத்தகங்கள் வாங்கியதாகத் தெரிவித்தார்./

இதில் ஆச்சரியப்படுவதற்கு எதுவுமே இல்லை! தாங்கள் எழுதிய பின்னூட்டக் கும்மிகளைப் படிப்பதற்கே நேரம் போதாமல் தவிப்பவர்கள், புத்தகங்களைப் படிப்பதற்கெல்லாம் நேரமேது:-))

Unknown said...

பின்னூட்டத்திற்கு நன்றி மூர்த்தி. உங்களுடைய புதிய பதிவைப் பார்த்தேன் (என் சுவாசக் காற்றே......!)...புத்தகம் குறித்து நிறைய எழுதுங்கள். உங்களுடைய அடுத்தடுத்த பதிவுகளுக்கு ஆர்வமுடன் இருக்கிறேன். அதில் பின்னூட்டம் இடுவதற்கு முடியவில்லை சரிசெய்துவிடுங்கள்.

அ.மு.செய்யது said...

பகிர்வுக்கு நன்றி கிருஷ்ணா !!!

2006 ல் மென்பொருள் நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்த போது,ஃபார்வர்ட் மெயில்களில் காதல் நட்பு கவிதைகள் நிறைந்த வண்ண வண்ண‌ அட்டைகள் நிறைய நிலாரசிகன் என்ற பெயரோடு நிறைய வரும்.

அப்போதிலிருந்து நிலாவுடைய ரசிகன் நான்.

அவருடைய சிறுகதைகளையும் விரும்பி வாசித்திருக்கிறேன்.இம்மாதம் அகநாழிகையில்
வெளிவந்த "சங்கமித்திரை" சிறுகதை உட்பட.

ஆரம்பத்தில் அவர் எழுதிய எளிமையான கவிதைகள் மனதிற்கு நெருக்கமாக பட்டது.
அந்த பழைய ஃபார்மையும் விடாமல் அவர் இருப்பதையே நாங்கள் விரும்புகிறோம்.

அமிர்தவர்ஷினி அம்மா said...

அ.மு.செய்யது said...
பகிர்வுக்கு நன்றி கிருஷ்ணா !!!

2006 ல் மென்பொருள் நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்த போது,ஃபார்வர்ட் மெயில்களில் காதல் நட்பு கவிதைகள் நிறைந்த வண்ண வண்ண‌ அட்டைகள் நிறைய நிலாரசிகன் என்ற பெயரோடு நிறைய வரும். //

எனக்கும் இது போன்ற தருணங்களில் தான் நிலாவின் கவிதை அறிமுகமானது. அப்போதிருந்தே அந்தப்பெயரோடு ஒரு ஈர்ப்புத்தன்மை எனக்கிருந்தது.

வாழ்த்துக்கள் நிலா, பகிர்வுக்கு நன்றி கிருஷ்ணா ;)

rvelkannan said...

பகிர்வுக்கு நன்றி நண்பரே ,
நெகிழ்வான அவரின் கவிதைகள் எனக்கு மிகவும் பிடிக்கும்.
அகநாழிகையில் வந்த கதை தான் நான் படித்த முதல் அவருடைய சிறுகதை. இதோ உங்களின் பதிவின் மூலம் இன்னும் சிலவற்றையும் படித்து விட்டேன்.
உங்களின் பதிவுகளில் இருந்து பார்க்கும் போது அவரும் நெகிழ்வான மனிதர் தான் போலிருக்கிறது.

கிருஷ்ண மூர்த்தி S said...

நிறையப் புத்தகங்கள், நிறைவான அனுபவங்கள் என்று சிறுவயதில் இருந்தே கிடைத்திருக்கும் வரம்! இப்போதிருக்கும் வலைப்பூ, வெவ்வேறு விஷயங்களைத் தொட்டு செல்லுமிடமாக மாறிவிட்டதால், புத்தக வாசிப்புக்கு மட்டும் ஒரு தனிப் பக்கம் ஆரம்பித்தால் என்ன என்று தோன்றியது!

இன்னும் இந்தப் பதிவில் செய்ய வேண்டிய, குறைந்தபட்சமாக எதையெல்லாம் செய்யக் கூடாது என்பதை யோசித்துக் கொண்டிருக்கிறேன். பின்னூட்டமிடுவதில் அனானி, அதர் ஆப்ஷன் இல்லை என்பதைத் தவிர வேறு தடை இப்போதிருக்காது.

priyamudanprabu said...

பகிர்வுக்கு நன்றி

நிலாரசிகன் said...

நன்றி பிரபு..

பின்னூட்ட வாழ்த்தளித்த அனைவருக்கும் நன்றியும் புத்தாண்டு வாழ்த்துகளும் :)

"உழவன்" "Uzhavan" said...

இத்தொகுப்பிலுள்ள அத்தனை கதைகளையும் ஒரே மூச்சில் படித்துமுடித்தேன். மிக எளிமையாகவும் எதார்த்தமாகவும் அருமையாகக் கதைககளன்களை அமைத்திருக்கிறார்.
அன்பின் நிலா.. உங்களது பல கதைகளில் மாட்டுக்காடி என்ற வார்த்தையைப் பல முறை பயன்படுத்தியமை கண்டேன். ஏன் அப்படி? இன்னும் நிறைய இருக்கின்றன கிராமத்தில்.
இத்தொகுப்பை எனக்குப் பரிசாக அளித்தமைக்கு நன்றியும், அடுத்த தொகுப்பை விரைவில் வெளியிட வாழ்த்துக்களும் :-)
 
அன்புடன்
உழவன்