Saturday, March 3, 2012

புத்தகம் பேசுது – விடுபட்டவை

கடந்த ஜனவரி புத்தகக் கண்காட்சியை (புத்தகக் கண்காட்சி 2012) ஒட்டி வெளிவந்த புதிய புத்தகங்களையும், அதிகம் விற்பனையாகும் ஒரு சில நல்ல புத்தகங்களையும் பரிந்துரை செய்யுமாறு ஒவ்வொரு பதிப்பகத்தையும் நேரில் சென்று சந்தித்து அவர்களிடம் கருத்து கேட்டு ஒரு பட்டியலை தயார் செய்திருந்தேன். ஏறக்குறைய எழுபது புத்தகங்களை பதிப்பக நண்பர்கள் பரிந்துரை செய்திருந்தார்கள். அதனை புத்தகம் பேசுது இதழில் பிரசுரம் செய்ய முன்வந்தார்கள். தகவல்கள் நான்கு பக்கங்களுக்கு மேல் நீண்டு விட்டதால் சில புத்தகங்களை பற்றிய தகவல்களை நீக்க வேண்டி வந்தது. நண்பர்களின் கவனத்திற்கு அதனை இங்கு பகிர்கிறேன். நன்றி...

1. எனது ஊர் – நூல் வரிசை (ஆழி பதிப்பகம்)

ஒவ்வொரு நகரமும் தனித்தன்மையானது. பல சிறப்புகளை உடையது. தமிழகத்திலுள்ள சுமார் 200 நகரங்களின் சிறப்புகளையும் வரிசையாக அறிமுகம் ஆழி பதிப்பகம் முற்பட்டிருக்கிறார்கள். அதன் துவக்கமாக வேலூர் மற்றும் திருவண்ணாமலை மாவட்டத்தில் சேர்ந்த 8 நகரங்களை தனித் தனி நூலாக அறிமுகம் செய்திருக்கிறார்கள். ஊரின் வரலாறு, முக்கிய நபர்கள், சிற்றுளா தளம், அரசியல், பொருளாதாரம், புகைப்படங்கள் என போதுமான தகவல்கள் அதில் இருக்கிறது.

2. ஏன் இந்த உலைவெறி? – விமர்சகர் ஞாநி (ஞானபானு பதிப்பகம்)

தொடர்ந்து 25 வருடங்களாக அணு உலைக்கு எதிராகக் குரல் கொடுத்துவரும் ஞாநி, அணு உலை குறித்த அபாயங்களையும், விபரீதத்தையும் “அணு உலைகள் வரமா? சாபமா?” என்ற கேள்வி பதில் தொகுப்பாக இந்நூலை கொடுத்திருக்கிறார். தமிழக மக்களுக்கு ஞாநியின் பிறந்தநாள் பரிசு இந்நூல் வெளிவந்திருக்கிறது.

3. முல்லைப் பெரியாறு – சிக்கலும் தீர்வுகளும் (நம்ம சென்னை)

முல்லைப் பெரியாறு அணையினால் தமிழக கேரள மாநில அரசுகளின் சிக்கலையும், அணையின் கட்டுமானத்தைப் பற்றியும், அதற்கான தீர்வுகளையும் முன்வைக்கும் நூல்.
ஆசிரியர்: டி. ஐ. ரவீந்திரன்

4. அழிக்கப் பிறந்தவன் – யுவ கிருஷ்ணா (“உ” பதிப்பகம்)

எல்லோருக்கும் தெரிந்த நபரை எடுத்துக்கொண்டு அவரைச் சுற்றிச்சுழலும் நிஜ உலகின் நெருக்கடிகளை புனைவின் தன்மையில் முன்வைக்கும் நூல். படம் வெளிவந்த உடனே கள்ள மார்க்கெட்டில் விற்கப்படும் திருட்டு விசிடி-யை மைய இழையாக வைத்து புனையப்பட்ட வித்யாசமான நாவல். பத்திரிகையாளர் யுவ கிருஷ்ணானின் முதல் புதினம் என்பது குறிப்பிடத்தக்கது.

5. வாளோர் ஆடும் மலை – டிராஸ்கி மருது (தடாகம்)

டிராஸ்கி மருதுவின் வண்ண ஓவியங்களை தூரிகையால் எழுதிய புத்தகம். இந்திய மன்னர்களை தோற்றத்தினால் மயக்காமல் தேர்ந்த ஆய்வுக்கு உட்படுத்தி எப்படி இருந்திருப்பார்கள் என்பதை ஆராய்ந்து வரைந்த வண்ண ஓவியப் புத்தகம்.

6. ராமாவும் உமாவும் – திலீப் குமார் (சந்தியா பதிப்பகம்)

பெங்களூருவில் உள்ள “சங்கம் ஹவுஸ்” அறக்கட்டளையின் சார்பில், ஆகஸ்ட் 2011-ல் தரங்கம்பட்டியில் நடத்தப்பட்ட எழுத்தாளர் முகாமில் (Tranquebar Project) பங்கேற்றபோது எழுதப்பட்ட குறுநாவல் ‘ராமாவும் உமாவும்’. அதனுடன் 2002-ஆம் ஆண்டுகளுக்குப் பிறகு எழுதி வெளிவந்த மூன்று சிறுகதைகளையும் சேர்த்த தொகுப்பு. திலீப்குமார் முப்பத்தைந்து ஆண்டுகளாக எழுதி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

7. மகா பெரியவர் – பகுதி 1 & 2 – பீ. சுவாமிநாதன் (திரிசக்தி)

நெகிழ வைக்கும் காஞ்சிப் பெரியவரின் பக்தி அனுபவங்களை, அவருடைய அரிய புகைப்படங்களுடன் வியக்க வைக்கும் நடையில் எழுதப்பட்ட புத்தகம்.

8. திராவிட மாயை – சுப்பு (திரிசக்தி)

தமிழ் ஹிந்து இணைய இதழில் “போகப் போகத் தெரியும்” என்ற தலைப்பில் சுப்பு எழுதிய கட்டுரைகளின் தொகுப்பு நூல்.

9. அண்ணா ஹசாரே: ஊழலுக்கு எதிரான காந்தியப் போராட்டம் (கிழக்கு பதிப்பகம்)

“சட்டம் இயற்றும் பிரதிநிதிகள் முதல் ஆட்சியை நடத்தும் அதிகாரிகள் வரை ஊழல் புரையோடிப் போயிருக்கிறது. இந்தியா உயிர்த்திருக்க வேண்டுமானால் ஊழல் அழித்தொழிக்கப் படவேண்டும். அதற்கு அண்ணா ஹசாரே தேர்ந்தெடுத்த ஆயுதம், உண்ணாவிரதம். பிரிட்டனின் ஆதிக்கத்தை நொறுக்க காந்தி தேர்ந்தெடுத்த அதே ஆயுதம்.அப்போது உதவியது, இப்போது சாத்தியமா?” என்ற விவாதத்தை முன்வைக்கும் ஜெய மோகனின் நூல்.

10. ராஜராஜ சோழன் – ச ந கண்ணன் (கிழக்கு பதிப்பகம்)

ராஜராஜ சோழனின் ஆட்சி, பொற்காலம் என்று அழைக்கப்படுகிறது. வலுவான சோழ சாம்ராஜ்ஜியத்தைக் கட்டமைத்தவராக கொண்டாடப்படும் அதே சமயம், மக்கள் நலன் மீது அக்கறை செலுத்திய பேரரசராகவும் ராஜராஜன் நினைவுகூரப்படுகிறார். கேரளப் போரில் ஆரம்பித்து இலங்கை, மாலத்தீவு வரை ராஜராஜனின் படைகள் முன்னேறி வெற்றிகொண்டன. சுவாரஸ்யமான நாவல் தன்மையில் அமைந்த ச.ந. கண்ணனின் முக்கியமான நூல்.

11. எக்ஸைல் – சாரு நிவேதிதா (கிழக்கு பதிப்பகம்)

விறுவிறு தன்மையில் அமைந்த எழுத்தாளர் சாரு நிவேதிதாவின் சமீபத்திய நாவல். வெளியீடு நடந்த அன்று முதல் இரண்டு பிரதிகள் பல ஆயிரம் ரூபாய் கொடுத்து வாங்கப்பட்டது. கிழக்கு அரங்கில் இந்த ஆண்டு அதிகம் விற்ற புத்தகங்களில் ஒன்று.

12. பொன்னியின் செல்வன் (விகடன் பிரசுரம்)

பல பதிப்பகங்கள் இதே வரலாற்றுப் புதினத்தை வெளியிட்டிருக்கிறது. என்றாலும் படங்களுடன் கூடிய ஐந்து பாகங்களாக விகடன் வெளியிட்டிருக்கிறார்கள்.

13. ஆனந்த விகடன் பொக்கிஷம் (விகடன் பிரசுரம்)

பல்வேறு காலகட்டங்களில் விகடன் இதழில் வெளியான அரிய தகவல்களை, படங்களுடன் சமீபத்திய வெளியிடப் பட்டத்தின் தொகுப்புப் புத்தகம்.

14. வரலாற்று நாணயங்கள் – இரா கிருஷ்ண மூர்த்தி (தினமலர்)

கொங்கு, மலையமான், பெருவழுதி, வட்டெழுத்து மற்றும் சோழர் காலத்து நாணயங்கள் பற்றிய புகைப்படங்களுடன் கூடிய ஆராய்ச்சிக் கட்டுரைகள். தினமலர் ஆசிரியர் இரா. கிருஷ்ண மூர்த்தி எழுதிய சங்ககால நாணயங்கள் பற்றிய நூல்.

15. விதியின் கதை – த. செ. ஞானவேல் (தோழி வெளியீடு)

விகடனில் பணிபுரிந்த ஞானவேல் சக்திமசாலா நிறுவனத்தின் உரிமையாளர்களான துரைசாமி – சாந்தி துரைசாமி பற்றியும், வியாபாரத் துறையில் அவர்கள் சாதித்த தருணங்களையும் பதிவு செய்துள்ள வரலாற்று நூல்.

16. அயல் மகரந்தச் சேர்க்கை – ஜி குப்புசாமி (வம்சி பதிப்பகம்)

நோபல் விருது பெற்ற முக்கியமான பத்து இலக்கிய ஆளுமைகளின் நேர்காணல்களுடன், தேர்ந்தெடுக்கப்பட்ட அவர்களுடைய முக்கிய படைப்பும் அடங்கிய மொழிபெயர்ப்பு நூல். ஜி குப்புசாமி தமிழில் இதனை மொழிமாற்றம் செய்திருக்கிறார்.

17. பிரமிள் விமர்சனக் கட்டுரைகள் - வம்சி பதிப்பகம்

கவிஞர், எழுத்தாளர் மற்றும் விமர்சகர் பிரமிள் எழுதிய “வெயிலும் நிழலும், வரலாற்றுச் சலனங்கள்” ஆகிய இரண்டு விமர்சனக் கட்டுரை நூல்கள்.

18. நிழல் வலைக் கண்ணிகள் – குட்டி ரேவதி (வம்சி பதிப்பகம்)

பெண்ணின் உடல் மொழி, சமூகம் மற்றும் சங்ககால பெண் படைப்புகளின் உடல் பற்றிய கருத்தாக்கத்தை முன்வைக்கும் கட்டுரை நூல்.

19. வேல ராமமூர்த்தி கதைகள் (வம்சி பதிப்பகம்)

வேல ராமமூர்த்தியின் மொத்தக் கதைகள் அடங்கிய தொகுப்பு.

20. என் தாத்தாவுக்கொரு தூண்டில் கழி – சீனச் சிறுகதைகள் (காலச்சுவடு பதிப்பகம்)

கம்யூனிச யுத்தத்திலும், அதற்குப் பிறகும் சீன இலக்கியத்தில் நேர்ந்திருக்கும் திசை மாற்றத்தை அடையாளம் காட்டுகின்றான இந்த நூலிலுள்ள சிறுகதைகள். 13 எழுத்தாளர்களின் கதைகள் அடங்கிய தொகுப்பு நூல்.

தமிழில்: ஜெயந்தி சங்கர்

21. ராணியுடன் ஒரு தேநீர் விருந்து – வெல்ஷ் மொழிச் சிறுகதைகள் (காலச்சுவடு பதிப்பகம்)

மொழிவழிச் சிறுபான்மை இனமான வெல்ஷ் மொழி பேசும் மக்கள் தங்கள் மொழி, பண்பாடு ஆகியவற்றில் தனி அடையாளமும் பெருமிதமும் உடையவர்கள். அவர்களுடைய தனித்தன்மை வாய்ந்த சிறுகதைகள் இவைகள்.

தமிழில்: அரவிந்தன்

22. தமிழர் உணவு – பக்தவத்சல பாரதி (காலச்சுவடு பதிப்பகம்)

2005-ஆம் ஆண்டு வெளிவந்த தமிழர் உணவு சிறப்பிதழின் கட்டுரைகளை மேலும் விரிவுபடுத்தி செழுமையாக வெளிவந்துள்ள கட்டுரை தன்மையிலான நூல்.

23. சோஃபியின் உலகம் – கிளாசிக் வரிசை (காலச்சுவடு பதிப்பகம்)

இதுவரை 50 மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டு மூன்று கோடிப் பிரதிகளுக்கு மேல் விற்பனையாகியுள்ளது. தொடர்ந்து உலகில் அதிக வாசகர்களைக் கொண்டுள்ள நூலகக் கருதப்படும் பொஸ்டைன் கார்டெர் எழுதிய புத்தகத்தின் தமிழாக்கம். ஆர் சிவக்குமார் இதனை காலச்சுவடு பதிப்பகத்திற்காக மொழி பெயர்த்திருக்கிறார்.

24. விகடன் ஆல்பம் - விகடன் பிரசுரம்

முதலமைச்சர் ஜெயலலிதா மற்றும் முன்னாள் முதல்வர் கருணாநிதி ஆகியோரின் சிறு வயது முதல் தொகுக்கப்பட்ட முக்கியமான புகைப்படங்களின் ஆல்பம்.

25. மரங்கொத்திச் சிரிப்பு – ச. முத்துவேல் (உயிர் எழுத்து பதிப்பகம்)

இடைவிடாத வாசிப்புப் பயிற்சியாலும் எழுத்துப் பயிற்சியாலும் நல்ல கவிதை மொழி முத்துவேலுக்கு வசப்பட்டிருக்கிறது. வாழ்வின் இருப்பைப் பற்றிய கேள்வியும் தேடலும் இயல்பான வகையில் அவர் கவிதைகளில் வெளிப்படுவதைப் பார்க்க மகிழ்ச்சியாக உள்ளது. -(முன்னுரையில் பாவண்ணன்)

26. அழகம்மா – சந்திரா (உயிர் எழுத்து பதிப்பகம்)

எளிய மனிதர்களின் நம்பிக்கைகள், சூழ்நிலைகள் அவர்களைப் படுத்தும் பாடு, வாழ்வின் சுழலில் முரண்களை எதிர்கொள்ளும் விதத்தை சந்திரா தனது கதைகளில் தொடர்ந்து பதிவு செய்து வருகிறார். வளர்ந்து வரும் பெண் படைப்பாளிகளில் நம்பிக்கை தரும் படைப்பாளிகளில் ஒருவர்.

5 comments:

Anonymous said...

Thanks for the info. :)

ஸ்ரீ.... said...

அருமையான அறிமுகங்கள். நன்றி.

ஸ்ரீ....

Piraisoodi said...

தேவதேவன் கதைகள் படித்தீர்களா?

Piraisoodi said...

தேவதேவன் கதைகள் படித்தீர்களா?

Piraisoodi said...

தேவதேவன் கதைகள் படித்தீர்களா?