Sunday, June 22, 2014

சினிமா சிறுகதைகள்

1. ஸ்டுடியோ கதை – கு. ப. ரா
2. நடிகை மகள் – பிரமிள்
3. டூப் – விட்டால் ராவ்
4. பாக்ஸ் ஆபீஸ் – பாலு சத்யா
5. கதாநாயகி குளித்த கதை – பிரபஞ்சன்
6. குணச்சித்திர நடிகர் – வண்ணநிலவன்
7. நடிகன் – ஜி. நாகராஜன்
8. ஸோல்டன் ஃபேப்ரியும் தங்கச்சூரியும் – பாஸ்கர் சக்தி
9. அத்துவானக்காட்டு எருமைகளும் அசிஸ்டென்ட் டைரக்டரும் – சந்திரா
10. கதை – செழியன்
11. நீலப்படமும் சுசித்திராவும் – சுப்ரபாரதி மணியன்
12. ஒரு நட்சத்திரத்தின் தோல்வி – நா. பார்த்தசாரதி
13. ஊமைக்காயம் – நா. பார்த்தசாரதி
14. உள்ளூர் ஹீரோ – வல்லிக்கண்ணன்

அசோகமித்ரனின் புலிக்கலைஞன் எல்லோராலும் சிலாகிக்கப்படும் படைப்பு. ஆகவே அந்தச் சிறுகதையை இந்தப் பட்டியலில் சேர்க்கவில்லை. பொது நூலகதிலும், என்னுடைய புத்தக சேகரிப்பிலுமுள்ள சிறுகதைத் தொகுப்புகளின் தலைப்புகளை ஒரு யூகத்தின் அடிப்படையில் மேலோட்டமாக நோட்டம்விட்டு, அவற்றிலிருந்து இந்தக் கதைகளைக் கண்டெடுக்க நேர்ந்தது. இன்னும்கூட மெனக்கெட்டால், கைநிறைய சினிமாச் சிறுகதைகள் கிடைக்குமென்றே தோண்றுகிறது.

நா. பார்த்தசாரதியின் கதைகளுடன் ஒப்பிடுகையில் பிரமிளின் கதை தரமானது. பட்டியலில் இருக்கும் பெரும்பாலான கதைகள் உதவி இயக்குனர்களின் வாழ்வியலைச் சித்தரித்தாலும் – விட்டல்ராவின் “டூப்” ஸ்டான்ட் நடிகன் ஒருவனைப் பற்றிய கதை. துணை நடிகையின் ஒருநாள் நெருக்குதல் வாழ்வைச் சித்தரிப்பது பாலுசத்யாவின் “பாக்ஸ் ஆபீஸ்”. ஆபாச நடிகை, தனது மகளை பள்ளியொன்றில் சேர்க்கச் செல்லும் தருணத்தை அடிப்படையாகக் கொண்டது பிரமிளின் “நடிகையின் மகள்”. குணச்சித்திர நடிகன் இறந்த பிறகு, அந்த நடிகனிடம் உதவியாளராக இருந்த ஒருவனின் சிக்கல்கலைச் சித்தரிக்கிறது வண்ணநிலவனின் சிறுகதை. கு.ப.ரா, பிரபஞ்சன் போன்றோரது கதைகள் சினிமா ஷூட்டிங்கை அடிப்படையாகக் கொண்டவை. தொழில்நுட்பம் சார்ந்து திரைத்துறையில் பெண்களுக்கான இடம் மிகச் சிறியது. சந்திரா பெண் இயக்குனராக அமீரிடம் வேலை செய்தவர். ஆகவே, பெண் உதவி இயக்குனரின் சிக்கலை, ஷூட்டிங் சார்ந்து அவரது சிறுகதையில் பதிவு செய்திருப்பார். முன்னால் முதல்வரும், திமுக பெருந்தலைவருமான, மூதறிஞர் கருணாநிதியின் சிறுகதைகளில் ஒன்று சினிமா பற்றியது. முற்போக்கு திரைப்படத்தையும் சென்சார் போர்டு உறுப்பினர்கள் படத்தின் ரீலை வெட்டி எரிவதையும் பற்றிய நகைச்சுவைக் கதை. சிறுகதையின் தலைப்பு “புரட்சிக் படம்”

நவீன படைப்பிலக்கியத்தில் சினிமா சார்ந்த பதிவுகளைப் பற்றிக் கொஞ்சம் அலசலாமே என்று தோன்றியது. அசோகமித்ரனின் “கரைந்த நிழல்கள்” பலராலும் கொண்டாடப்படக் கூடிய படைப்பு. “மானசரோவர், தண்ணீர், புலிக்கலைஞன்” போன்ற அவரது பிற படைப்புகளிலும் சினிமா உலகம் பதிவாகியிருக்கிறது.

மானசரோவர் – முழுக்க முழுக்க ஒரு உச்ச நடிகனையும், அவனுடைய திரையுலக வீழ்ச்சியையும் ஒட்டியதொரு வாழ்க்கைச் சித்திரம். சுஜாதாவின் “கனவுத் தொழிற்சாலை”, ஜெயமோகனின் “கன்னியாகுமரி”, ஜெயகாந்தனின் “சினிமாவுக்குப் போன சித்தாளு”, தமிழ்மகனின் “ஏவிஎம் ஸ்டுடியோ – ஏழாவது தளம்” போன்ற படைப்புகளும் முழுக்க முழுக்க சினிமா சார்ந்த வாழ்வைத் தான் முன்வைக்கின்றன. அரந்தை நாராயணன் கூட இரண்டு குறுநாவல்கள் எழுதியிருக்கிறாராம். பத்திரிகையாளர் ஞாநி, அந்தக் குறுநாவல்களை தொலைக்காட்சிக்காகத் தொடராக எடுத்திருப்பதாக கேணி வாசகர் சந்திப்பில் பகிர்ந்துகொண்டார்.

தமிழ்மகனின் ‘வெட்டுப்புலி’ நாவலில் சினிமா எடுக்க ஆசைப்பட்டு, பொருளாதார ரீதியாக வீழ்ச்சியைச் சந்திக்கும் ஒரு சினிமா தயாரிப்பாளரின் வாழ்க்கை பதிவாகியிருக்கும். சமீபத்தில் வெளியீடு கண்ட வெல்லிங்டன் நாவலின் பிற்பகுதியில் சினிமா கம்பெனியில் ஆர்ட் டைரக்ஷன் (கலை இயக்கம்) துறையில் வேலை செய்யும் ஒருவன் - சினிமா தயாரிப்புக் கம்பெனியை இழுத்து மூடப்படுவதால் – வேறு வேலைக்குச் சென்று பிழைக்கும் ஒரு சிறுபகுதி பதிவாகியிருக்கும். குடைந்துகொண்டே சென்றால் இன்னும் கூட சில நாவல்களை இதுபோலக் கண்டடையலாம். மேல்தட்டு மக்களின் காஸ்மோபோலிடன் வாழ்வைச் சித்தரிக்கும் “என் பெயர் ராமசேஷன்” நாவலிலும் ஒரு நடிகையைப் பற்றிய பதிவுகள் கொஞ்சம் போல பதிவாகியிருக்கும். இப்படிச் சொல்லிக் கொண்டே போகலாம். “ரணம் சுகம்” என்ற மியூசிக்கல் நாவலை இலக்கிய அளவீடுகளில் கறாராக ஒப்பிட்டுப் பேச இயலாது. இந்நாவலில் சினிமா ஒலிச்சேர்ப்பு தொழில்நுட்பக் கலைஞன் ஒருவனது வாழ்க்கை டயரிக் குறிப்பு போலப் பதிவாகியிருக்கும்.

நாவலில் சினிமா சார்ந்த பதிவுகள் எனில் இத்தனை படைப்பாக்க முயற்சிகளைப் பற்றி நம்மால் பேச முடிகிறது. சிறுகதையில் சினிமா சார்ந்த பதிவுகள் என்று வரும்பொழுது அசோகமித்ரனின் “புலிக் கலைஞன்” மட்டுமே சிலாகித்துப் பேசப்படுகிறது. நடிகர், இயக்குனர் ரோகினி – “அசோகமித்ரனின் சினிமா சார்ந்த படைப்புகளில் - நடிகைகள் பற்றிய சித்தரிப்புகளைப் பற்றிக் குறைபட்டுக் கொண்டார். “சினிமா துறையில் நல்ல நடிகைகளே இல்லையா?” என்ற நுட்பமான கேள்வியை ரோஹிணி முன் வைத்தார். எல்லாத் துறைகளிலும் “நல்ல X கெட்ட” என்ற பாகுபாடு இருக்கும்பொழுது, “சினிமா நடிகைகளில் – பல சிக்கல்களுக்கு இடையிலும் வாழ்க்கையை நேர்மறையாக எதிர்கொள்ளும் நடிகைகள் இல்லையா?” என்ற ஆதங்கத்தைப் பதிவு செய்தார்.

ரோஹினியின் இந்த வருத்தத்தை நம்முடைய மரபுடன் இணைத்துப் பார்க்க வேண்டிய அவசியம் இருக்கிறது. ஆடல் பாடல் போன்ற விஷயங்களில் தாசிகள் தான் துவக்கத்தில் ஈடுபட்டார்கள். குடும்பத்துப் பெண்கள் நடனம், இசை போன்ற துறைகளிலிருந்து சற்று விலகியே இருந்தனர். கோவில் திருவிழாக்களே ஆதிகாலத்தில் கொண்டாட்டங்களின் களமாக இருந்தது. அங்கெல்லாம் தாசிகள் தான் பங்கெடுத்தனர். நடனத்தில் வரும் காம அசைவுகளைச் “சிருங்காரம்” என்று தானே குறிப்பிடுகிறார்கள். இந்த மரபின் கண்கொண்டு நவயுக டிஜிட்டல் சினிமா நடிகைகளைப் பார்ப்பதால் தான் பிரச்சனை எழுகிறது. அதனால்தான் நடிகரையோ! நடிகையையோ! – ஊருக்கு நேந்து விட்டவர்களைப் போல நாம் பார்க்கிறோம். தாசிகள் பட்ட அவலம் சொல்லி மாளாதது. தாசிகள் முறையை ஒழிக்க, முதல் சட்டசபை பெண் உறுப்பினர் முத்துலக்ஷ்மி ரெட்டி கடுமையாகப் போராடியாது இன்றுவரையிலும் – நன்றியுடன் நினைவில் கொள்ள வேண்டிய ஒன்று. பாடகிகளையும், நடனக் கலைஞர்களையும் – தேவதாசிகளைப் போலப் பார்க்கும் பார்வையிலிருந்து கொஞ்சம் கொஞ்சமாக வெளியில் வந்துவிட்டோம். ஆனால், நடிகைகளைச் சமூகம் பார்க்கக் கூடிய கண்ணோட்டம் மிகக் கேவலமான ஒன்று. ஜனரஞ்சக இதழ்களும், புலனாய்வு வாரப் பத்திரிகைகளும் “நடிகையின் கதை”, “சினிமாக் கூத்து” போன்ற தலைப்புகளில் நிறையவே எழுதுகிறார்கள். கிசுகிசு பாணியில், ஆழ்மான இச்சைகளைச் சுரண்டி விடும் போலியான எழுத்துகள் இவையாவும்.

எழுத்தாளர் பிரபஞ்சன் ஒரு புத்தக வெளியீட்டில் பேசும்பொழுது “நடிகை” என்ற சிறுகதையைப் பற்றிப் பகிர்ந்துகொண்டார். ஒருவனது இரண்டு மனைவியர்களின் குணநலன்களைப் பற்றிய கதை. அதில், இரண்டாவது மனைவி திரைப்பட நடிகை. மறுபடியும் படத்தில் வரும் ரோஹினியின் அடாவடித் தனமான குணாம்சங்களை முதல் மனைவிக்கும், ரேவதியின் பெருந்தன்மையான குணாம்சங்களை நடிகையின் பாத்திரத்திற்கும் பொருத்தியது போன்ற கதை.

நடிகையை ஒருவன் அணைத்துக்கொண்டு வாழ்கிறான். அவனுடைய முதல் மனைவிக்கு இது தெரிந்து சண்டை போடுகிறாள். “சம்பாறிக்கறது எல்லாத்தையும் கொண்டுட்டு போயி அந்த நடிகை கிட்ட கொட்டுறையே? உங்கிட்ட வாழ்ந்து நான் என்னத்த கண்டேன். ஒரு சொத்து உண்டா? சொகம் உண்டா?” என்று கட்டிய கணவனை டார்ச்சர் செய்கிறாள். அவன் அப்படியொன்றும் பிரம்மாதமாக சம்பாதித்து விடவில்லை என்பது முதல் மனைவிக்கு நன்றாகவே தெரியும். நடிகையின் வீட்டிற்கு நேரில் சென்று சண்டையிடுகிறாள். “என் புருஷன மயக்கிட்டையே! நீ நல்லா இருப்பியா? நாசமாப் போக” என்பது போல தரக்குறைவான வார்த்தைகளைப் பேசுகிறாள். எல்லாவற்றையும் அமைதியாகக் கேட்டுக்கொண்டு அழுகிறாள் அந்த நடிகை.

“இதுவும் கூட ஆக்டிங்” என்பதாகத் தான் நாம் நினைப்போம். ஏனெனில் அவள் நடிகையாயிற்றே. இப்படியே சண்டையிட்டு, முடிந்தமட்டும் பணத்தைப் பிடுங்குகிறாள் முதல் மனைவி. தனது கணவனால் தம்பிடிக்கு லாபல் இல்லை. நடிகையால் தான் எல்லாம் கிடைக்கிறது என்பதைத் தெரிந்தே இதையெல்லாம் செய்கிறாள் முதல் மனைவி.

சிறுகதையின் தலைப்பு “நடிகை”. வாசகர்கள் தான் அனுமானிக்க வேண்டும் இரண்டு பேரில் யார் “நடிகை” என்று? தனது கணவனை முன்னிறுத்தி, இன்னொருத்தியை ஏமாற்றுபவள் நடிகையா? அல்லது திரையில் தோன்றி ஆக்டிங் கொடுப்பவள் நடிகையா?

திரைத்துறையைச் சார்ந்த, அல்லது நட்சத்திரங்களுடன் தொடர்புடைய மாந்தர்களைப் பற்றிய உளபூர்வமான நிகழ்வுகளை அணுகும் சில நல்ல கதைகளும் தமிழில் இருக்கத்தான் செய்கின்றன. அதற்கு, மேலுள்ள பட்டியலிலிருந்தே சில உதாரணக் கதைகளை நம்மால் காட்ட இயலும்.

‘ஸ்டுடியோ கதை’ - கு. ப. ரா: கதையின் மையப்பாத்திரமான ஸீதா - எம்.ஏ பாஸ் செய்தவள். படித்தவர்களும் பண்பானவர்களும் திரைத்துரைக்கு வந்தால் தான், அதிலுள்ள புரையோடிப்போயுள்ள பெண் அடக்குமுறைகள் ஒழியும் என்பதில் நம்பிக்கை கொண்டவள். அப்படி நடந்தால் பிற நடிகைகளுக்கும் மதிப்பு கிடைக்கும் என்று நினைக்கிறாள். டைரக்டர் கிருஷ்ணன் – பெயருக்கு ஏற்றார்போல லீலை செய்பவன். போலவே, “பார்வதி பரிணயம்” என்ற படத்தை உஷா தியேட்டர்ஸ் தயாரிக்க, கிருஷ்ணன் இயக்குகிறான். படத்திற்கான புதுமுக நடிகையைத் தேடும் பொழுது ஸீதா அகப்படுகிறாள். ஆதிகாலத்தில் ரவிக்கை ஏது? ஆகவே, “பார்வதி பரிணயம்” என்ற படத்தில் ஜாக்கட் இல்லாமல் மேலாக்கில் புடவையைச் சுற்றி ஒட்டியாணம் போட்ட மேக்கப் அவளுக்கு.

“பொடவைய மாராக்குல ரொம்ப டைட்டா சுத்திட்டு இருக்க நீ! அதக் கொஞ்சம் லூஸ் பண்ணிக்கோ!” என்று அங்கேஇங்கே கையை வைக்க முயல்கிறான் டைரக்டர்.

“எதுன்னாலும் எங்கிட்டே சொல்லுங்க. நான் கரெக்ட் பண்ணிக்கிறேன். டச் பண்ணாதிங்க. மேலும், இது பார்வதி கதாப்பாத்திரம். அதுக்கு இந்த மாதிரி இருக்கறது தான் சரியாக இருக்கும்.” என்பதுபோல சீறுகிறாள் நடிகை ஸீதா.

“எனக்கு நீ டைரக்ஷன் சொல்லிக் கொடுக்குறியா?” என்று சொல்லி, ஒட்டியானத்தை லூஸ் செய்து மாராக்கைத் தளரவிடச் சொல்கிறான் டைரக்டர். ஓரளவிற்கு மேல் பொருக்க முடியாமல், ஒட்டியானத்தை முழுவதுமாகக் கழட்டி கையில் வைத்துக் கொண்டிருக்கிறாள் நடிகை. டைரக்டர் அவளிடம் சென்று பேச முயல்கிறான். அப்பொழுது ஒட்டியானத்தை டைரக்டரின் முகத்தில் வீசி எறிகிறாள் புதுமுக நடிகை. டைரக்டர் கிருஷ்ணனின் முகத்தில் காயம் ஏற்படுகிறது. அங்கிருந்து திரும்பிப் பார்க்காமல் சென்றுவிடுகிறாள் அவள். ஸ்டுடியோவின் வாசலை நோக்கி அவள் செல்கையில்:

“ஸ்டுடியோவிற்கு எதற்கு வருகிறாள் இந்தப் பதிவிரதை? கூழுக்கும் ஆசை, மீசைக்கும் ஆசை” என்று டைரக்டரின் முகத்தைத் தடவிக்கொண்டு உதவி இயக்குனர் கேள்வி எழுப்புவதாகக் கதை முடியும்.

‘டூப்’ - விட்டல்ராவ் – கிருஷ்ணராஜ் என்ற உச்ச நடிகனுடைய சண்டைக் காட்சிகளில் டூப் போடுகிறான் காசி. ஓர் அபாயகரமான காட்சியில் நடித்தபோது காசிக்கு விபத்து நேர்கிறது. மயங்கிய நிலையில் அவனை ஆஸ்பிட்டலில் சேர்ப்பிக்கிறார்கள். அவனது இடதுகால் நீக்கப்படுகிறது. மருத்துவச் செலவு முழுவதையும் உச்ச நடிகன் கிருஷ்ணராஜே ஏற்கிறான்.

கிருஷ்ணராஜ் தெலுங்கு நடிகை திவ்யாவை திருமணம் செய்து கொண்டவன். நீண்டகாலம் கழித்துதான் இந்த விஷயமே காசிக்குத் தெரியும். திருமணத்திற்குப் பிறகு அவள் நடிப்புக்கு முழுக்குப் போட்டுவிட்டுக் குடும்பத்தைப் பார்த்துக் கொள்கிறாள். கிருஷ்ணராஜூக்கு வேறொரு குடும்பமும் இருக்கிறது. ஷூட்டிங் இல்லாத நாட்களில் காசி, கிருஷ்ணராஜின் வீட்டிலேயே தங்கிவிடுகிறான். டூப் போடவேண்டிய அவசியமில்லாத, வெளியூர் ஷூட்டிங்கிற்கு கிருஷ்ணராஜ் செல்லும்பொழுதும் நடிகையின் வீட்டிலேயே காசி இருக்கிறான். நடிகைக்கும் காசிக்கும் நட்பு ஏற்படுகிறது. இந்த விஷயம் கிருஷ்ணராஜூக்குத் தெரிந்து சந்தேகப்படுகிறான். அதன் பிறகுதான் டூப் போடும் காசிக்கு ஷூட்டிங்கின் போது விபத்து நேர்கிறது.

திவ்யாவின் தனிமைக்குக் காசி வடிகாலாக இருப்பதும், ஷூட்டிங்கில் காசிக்கு விபத்து நேர்வதையும் இழையாகக் கொண்ட ஐந்து பக்கச் சிறுகதை. கொஞ்சம் அசந்திருந்தாலும் கிளுகிளுபுக் கதையாக மாறியிருக்கக் கூடிய வாய்ப்பிருக்கும் கதை. ஆனால், விட்டல்ராவ் மனித மனங்களின் முரண்களை அருமையாக இந்தக் கதையில் வெளிப்படுத்தி இருப்பார்.

பாக்ஸ் ஆபீஸ் - பாலு சத்யா: நல்லதொரு மழைநாளில் துணை நடிகை மீனா ஷூட்டிங்கில் பங்கேற்கப் பழவந்தாங்கல் ரயில் நிலையத்திலிருந்து கோடம்பாக்கம் சென்று, அங்கிருந்து போரூருக்குச் செல்லப் பேருந்தைப் பிடித்து, ஷூட்டிங் நடக்கும் வீட்டிற்குக் கொஞ்சம் தாமதமாகப் போய்ச் சேருகிறாள். (கிண்டியில் இறங்கி போரூருக்குச் சென்றிருக்கலாமே! எதற்காகக் கோடம்பாக்கம் செல்லவேண்டும் என்ற சந்தேகம் சிறுகதையை வாசித்தபோது எழுந்தது. எனினும் நல்ல சிறுகதை.)

“வாம்மா மகாராணி... ஆச்சர்யமா இருக்குதே! ஹீரோயின் வரதுக்கு முன்னாடியே நீ வந்துட்ட போல இருக்குதே?” என்று தாமதமாக வந்த அவளை நோக்கி ஏளனக் கேள்விகள் பறக்கிறது. சிலர் அவளை உரசப் பார்கிறார்கள். தெரிந்த பெண்மணி உடல்நலம் விசாரிக்கிறாள். அன்றைய தினம் ஒரு பிணத்தைச் சுற்றி உட்கார்ந்து அழக் கூடியவர்களில் இந்தத் துணை நடிகையும் ஒருத்தி. ஹீரோயின் கதறியழ வேண்டிய சூட்டுக்குப் பல டேக்குகள் வாங்குகிறாள். மறுபடியும், மறுபடியும் காட்சியைப் படமாக்குகிறார்கள். இடையில் மீனாவுக்கு ஒரு தொலைபேசி அழைப்பு வருகிறது. ஓடிச் சென்று தொலைபேசியில் அழைத்தவர்களிடம் பேசுகிறாள். நைட் ஷிப்டிற்குச் சென்றிருந்த அவளுடைய புருஷன் ஐயப்பனுக்கு ஆக்சிடென்ட் ஆகியிருக்கிறது.

“உன் புருஷனுக்கு ஆக்ஸிடன்ட் ஆயிடுச்சி. ரொம்ப சீரியஸ். உடனே வா...” என்கிறார்கள்.

“இங்க பாதியில விட்டுட்டு வர முடியாது. சாயந்திரம் வந்திறேன்” என்று தொலைபேசியைத் துண்டிக்கிறாள் என்பதாகக் கதை முடியும். துணை நடிகையின் சிக்கல் மிகுந்த பணிச்சூழலை, தன்மையான முறையில் முன்வைக்கும் கதை. ரசிக்கும் படியாக பாலுசத்யா எழுதியிருப்பார்.

நடிகை மகள் – பிரமிள்: “ஏ” படங்களில் நடிக்கக் கூடிய புகழ்பெற்ற நடிகை, தனது மகளை நான்காம் வகுப்பில் சேர்க்க ஒரு பள்ளிக்கு அழைத்து வருகிறாள். போஸ்டர்களில் மட்டுமே இதுவரை அந்த நடிகையைப் பார்த்த ஆசிரியையின் மனவோட்டத்தைப் பிரமிள் இக்கதையில் சொல்லியிருப்பார். பிரமிளின் மொத்தத் தொகுப்பில் ஜனரஞ்சகக் கதையாகத் தன் “நடிகையின் மகள்” சிறுகதையை வைத்திருக்கிறார்கள். ஆபாச நடிகையை மோசமாகவெல்லாம் இக்கதையில் சித்தரிக்கவில்லை. எல்லோரைப் போலவும் ஆபாச நடிகையும் சமூகத்தில் ஓர் உறுப்பினர்தான். அவளது மகளை – குழந்தையின் விருப்பப்படி நல்ல பள்ளியில் படிக்க வைக்கும் உரிமை அந்த நடிகைக்கு இருக்கிறது. நடிகையோ, ஆபாச நடிகையோ – திரைத்துறையைச் சார்ந்தவர்களைப் பற்றிய சமூகத்தின் பார்வைக்கு இக்கதையும் ஓர் உதாரணம்.

ஒவ்வொரு கதையைப் பற்றியும் இப்படி நிறையவே சொல்லிக்கொண்டு போகலாம். எனினும் அவரவர் வாசகத் தளத்தில், அவரவர் தன்மையில் இக்கதைகளை அணுகி, அது சார்ந்த கருத்துக்களை முன்னெடுத்தால் இன்னும் சிறப்பாக இருக்கும். ஏனெனில் அசோகமித்ரனின் “புலிக்கலைஞன்” போலவே நம்மிடம் நிறைய ஆக்கங்கள் இருக்கின்றன. அக்கதைகளைப் பற்றிப் பேசவும் நாம் முன் வர வேண்டும். உதிரிக் கதைகளாக இருக்கும் வரை அதற்கான சாத்தியங்கள் பற்றிய சந்தேகமும் உடனே எழுகிறது.

“சினிமா சார்ந்த தரமான சிறுகதைகளைத் தொகுத்துப் புத்தகமாக வெளிக்கொண்டு வந்தால் என்ன?” என்ற யோசனையும் அடிமனதில் எழுகிறது. (வேறு யாரேனும் செய்வதற்கு முன் வந்தாலும் மகிழ்ச்சிதான்.) அடிப்படையில் நானொரு சோம்பேறி. அதனையும் மீறி இந்த யோசனை சாத்தியமானால் நன்றாகத் தான் இருக்கும். பார்க்கலாம் நடக்கிறதா என்று!.

“சினிமா நடிகைகளைப் பற்றி, நல்ல விதமாகச் சித்தரித்த ஒன்றிரண்டு படைப்புகளை இன்றைய கேணி சந்திப்பில் யாரேனும் பகிர்ந்துகொண்டால் மகிழ்ச்சியுடன் வீட்டிற்குச் செல்வேன்...” என்று ரோஹிணி ஆதங்கத்துடன் பேச்சினை நிறைவு செய்தபோது, “அரந்தை நாராயணன்” எழுதிய குறுநாவல்களை உடனே ஞாநி பகிர்ந்துகொண்டார்.

குங்குமம் தோழி இதழுக்காக நண்பரும், எழுத்தாளருமான பாலுசத்யா – நடிகை ரோஹினியின் பேச்சைப் பதிவு செய்ய - எனக்குப் பின்னிருக்கையில் அமர்ந்து நிகழ்வினை கவனித்துக் கொண்டிருந்தார். பாலுசத்யாவின் எல்லா சிறுகதைத் தொகுப்பையும் படித்துவிட்டு அதிலுள்ள ஒருசில கதைகளைப் பற்றி பாலுவுடன் நிறையவே பேசியதுண்டு. எனினும், எனினும் அன்றைய தினம் பாலுவின் “பாக்ஸ் ஆபீஸ்” எனக்கு ஞாபகம் வராமல் போனதேன்?

“ரசிகர்களின் (பார்வையாளர்களின்) மறதி கலைஞர்களின் சாபம்” என்ற வாசகம் தான் நினைவிற்கு வருகிறது. அந்த வகையில் நம்மால் சபிக்கப்பட்ட ஏராளமான படைப்பாளிகள் நம்மிடையே உண்டு. எளிய மனிதர்களால் இலக்கிய சங்கம விழாவையா எடுக்க முடியும்.! மீள் வாசிப்பின் மூலம், கடலின் மடியில் கேட்பாரற்றுக் கிடக்கும் முத்துக்களை எடுப்பதுபோல – மீள் வாசிப்பில் கவனமற்றுக் கிடக்கும் இதுபோன்ற கதைகளுக்கு கவனம் கொடுப்போமே. முயற்சி செய்யுங்கள்...! உங்களால் நிச்சயம் முடியும்.

குறிப்பு: நண்பர்களுக்குத் தெரிந்து, வேறு ஏதேனும் சினிமா சார்ந்த சிறுகதை ஆக்கங்கள் இருப்பின் கமென்ட் செய்யுங்கள். அவற்றையும் பதிவின் பட்டியலில் இணைத்து விடுகிறேன். நாவல்களாக இருப்பினும் தெரியப்படுத்துங்கள்.

பட்டுக்கோட்டை பிரபாகரன் எழுதிய “சிவா – சினிமா – விசு – ஃபோட்டோ”, புரட்சிக் கலைஞர் மூதறிஞர் கருணாநிதியின் “புரட்சிப் படம்” போன்ற க்ளிஷியே கதைகளாக இருப்பினும் தெரியப்படுத்தலாம். அவற்றையெல்லாம் வாசித்துவிட்டுத் தனியாக ஒரு பதிவினைக் கூட எழுதலாம்.

நன்றி.

No comments: