Friday, November 20, 2009

தோழர் நாவல்: தனுஷ்கோடி ராமசாமி

ஆசிரியர்: தனுஷ்கோடி ராமசாமி
வெளியீடு: பாரதி புத்தகாலயம்
விலை: 130 ரூபாய்

'உரையாடல் சமூக கலை இலக்கிய அமைப்பின்' சார்பில் நடைபெற்ற சென்னை சிறுகதைப் பட்டறையில் முரளிகுமாரை (அன்பே சிவம்) சந்தித்த போது இந்தப் புத்தகத்தை எனக்கு அன்புடன் கொடுத்தான். அவன் மீது அன்பு செலுத்தும் ஒருவர் அவனுக்குக் கொடுத்த புத்தகத்தை எனக்குக் கொடுத்திருக்கிறான் என்று பின்னர் தெரிய வந்த போது நெகிழ்ச்சியாக இருந்தது.

பள்ளி ஆசிரியர் மற்றும் எழுத்தாளரான தனுஷ்கோடி ராமசாமி விருதுநகர் மாவட்டம் சாத்தூருக்கு அருகேயுள்ள கலிங்கல் மேட்டுப்பட்டி என்ற கிராமத்தில் பிறந்திருக்கிறார். தனது அயராத உழைப்பால் ஆசிரியராகவும், எழுத்தாளராகவும் சிறந்து விளங்கியிருக்கிறார்.

அன்னாரின் மறைவிற்குப் பிறகு 'எழுத்தாளர் தனுஷ்கோடி ராமசாமி டிரஸ்ட்' என்னும் பெயரில் அறக்கட்டளை தொடங்கப்பட்டு சிறப்புடன் செயல்படுகிறது. அவரின் மகன் 'டாக்டர் அறம்' நிர்வாக அறங்காவலராக பொறுப்பேற்று சிறந்த சிறுகதை படைப்போருக்கு பரிசு கொடுத்து ஊக்கப்படுத்தி வருகிறார். மாணவ மாணவியருக்கு படைப்பிலக்கியத்தை பயிற்றுவித்தளையும் இவர்கள் மேற்கொண்டுள்ளனர்.

இந்த நாவலில் பிரதானப் பாத்திரமாக வரும் பழநிமுருகன் ஆசிரியராக நென்மேனிக்கு அருகில் வேலை செய்கிறவன். ஆரம்பத்தில் காந்தியத்திலும் பிறகு கம்யுனிசத்திலும் நம்பிக்கைக் கொண்டவன். நேரம் கிடைக்கும் போது எந்த விதத்திலும் முன்னேறாத தனது உறவினர்கள் வாழும் கலிங்கல் மேட்டுப்பட்டிக்கு சென்று வருவது வழக்கம். ஊரின் மீதுள்ள பற்றுதலால் பழநி முருகன் என்ற தனது பெயரை கலிங்கன் என்று மாற்றிக் கொள்கிறான்.

ஒரு முறை
தனது சொந்த ஊருக்குச் செல்லும் போது பிரான்ஸ் நாட்டிலுருந்து இந்திய மக்களுக்கு சேவை செய்வதற்காக வந்திருக்கும் ஷபின்னாவைச் சந்திக்கிறான். மாலை மங்கி இருட்டும் வேளையில் தனது ஊரைச் சுற்றிக் காட்டி பாதுகாப்பாக அவளிடைய இருப்பிடத்தில் சேர்ப்பிக்கிறான். இருவருக்கும் நட்பு மலர்ந்து தொடர்ந்து சந்தித்துக் கொள்கிறார்கள்.

ஷபின்னாவின் மூலம் அவளுடைய குழுவினருக்கும் அறிமுகமாகிறான் பழநி முருகன். அவர்களுடன் பிரியமுடன் பழகுகிறான். குழுவினருக்கு சாத்தூரையும், நென்மேனிக்கு அருகிலுள்ள கிராமங்களையும் சுற்றிப் பார்க்க இவன் பேருதவியாக இருக்கிறான். மேலும் இந்தியாவைப் பற்றியும் அவர்களுடன் கம்யூனிச சித்தாந்தத்தில் விவாதம் செய்கிறான். அவனுடைய நேர்மையான விவாதம் காயப்படுத்தும் படியாக இருந்தாலும் வெளிநாட்டு நண்பர்களைக் கவருகிறது.

எல்லோருக்கும் பழநி முருகனைப் பிடித்திருந்தாலும் ஷபீனாவுக்கு கொஞ்சம் அதிகமாகவே பிடித்துவிடுகிறது. பழநி முருகனுக்கும் பீனாவின் மீது ஈர்ப்பு அதிகரிக்கிறது. சேவை செய்ய வந்தவர்கள் அனைவரும் நாடு திரும்ப வேண்டிய நேரம் வருகிறது. அப்பொழுது பீனாவை இவன் எப்படி வழியனுப்புகிறான் என்பதாக நாவல் நிறைவு பெறுகிறது.

'தோழர்' நாவல் 1980-களில் வெளிவந்து பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது. புத்தகத்தின் முகவுரையில் தமிழ் செல்வன் எழுதியுள்ள முன்னுறையிலிருந்து பார்க்கும் போது நீண்ட கால இடைவெளிக்குப் பிறகு இரண்டாம் பதிப்புக் காண எழுத்தாளர் மாதவராஜின் பங்கு முக்கியமானதாக இருந்திருக்கிறது. மாதவராஜ் தனது பதிவில் தனுஷ்கோடி ஐயாவைப் பற்றி எழுத அவரிடம் இன்னும் நிறைய இருந்தன என்ற தலைப்பில் எழுதி இருக்கிறார்.

மதுமிதா அவர்களின் இந்தப் பதிவும் எழுத்தாளர் தனுஷ்கோடி ராமசாமி மறைவு பதிவும் ஐயாவைப் பற்றிய நெகிழ்ச்சியான பதிவு.

Book Name: Thozhar
Author: Dhanushkodi Ramasamy
Book price: Rs. 130
Publishers: Bharathi Puthakalayam

Friday, October 30, 2009

ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்

ஆசிரியர்: ஜெயகாந்தன்
வெளியீடு: காலச்சுவடு
விலை: ரூபாய் 250

காலச்சுவடின் 'கிளாசிக் வரிசை'யில் வெளிவந்துள்ள புத்தகங்கள் அனைத்தையும் படித்துவிட வேண்டும் என்ற ஆசையின் உந்துதலில் முதலில் படிக்க ஆரம்பித்தது 'ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்'.

"தனது நாவல்களில் தனக்கு மிகவும் பிடித்தமானது என்று ​ஜெயகாந்தனாலும் அவரது நாவல்களில் ஆகச் சிறப்பானது என்று இலக்கிய விமர்சகர்களாலும் குறிப்பிடப்படுவது ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்" -என்ற புத்தகத்தின் பின்னட்டை வாசகம் ஆர்வத்தை மேலும் தூண்டியது.

நீண்ட நாட்களாக நான் படிக்க நினைத்தப் புத்தகம். ஆனால் தலைப்பில் 'ஓர் உலகம்' என்று தானே இருந்திருக்க வேண்டும். 'ஒரு உலகம்' எழுத்துப் பிழையாக இருக்குமோ என்று குழம்பியதுண்டு. ஜெயகாந்தன் முன்னுரையில் அதற்கு விளக்கம் கொடுத்திருக்கிறார். இருந்தாலும் கொஞ்சம் உறுத்தலாகவே இருக்கிறது.

மலையடிவாரத்தின் இயற்கை சூழலில், ஒரு கிராமத்துப் பாதையில் பயணிக்கும் லாரியில் இருந்து கதை ஆரம்பிக்கிறது. ஓட்டுநர் துரைக்கண்ணு, க்ளீனர் பாண்டு, ஆசிரியர் தேவராஜன் ஆகியோர் லாரியின் இயக்கத்தோடு நமக்கு அறிமுகமாகின்றனர்.

பட்டினத்து ஆசாமியான ஹென்றி அருகிலுள்ள சிற்றூரைத் தேடிக்கொண்டு செல்கிறான். இயற்கையின் அழகை அணு அணுவாக ரசித்தவாறே நடந்து செல்கிறான். லாரி வருவதைப் பார்த்து வண்டிக்கு வழிவிட்டு சாலையோரமாக விலகி நிற்கிறான். ஆனால் 'க்ளீனர் பாண்டு' வண்டியை நிறுத்தச் சொல்லி ஹென்றியை ஏற்றிக்கொள்கிறான். பேச்சினூடே ஹென்றி செல்ல வேண்டிய கிராமம் தேவராஜனின் ஊர் என்பது தெரியவருகிறது. அதிலிருந்தே தேவராஜனுக்கும், ஹென்றிக்கும் நட்பு மலர்கிறது.

ஹென்றியை அழைத்துச்சென்று தன்னுடைய கிராம வீட்டில் தங்க வைக்கிறான் தேவராஜன். பின்னர் ஹென்றியின் வளர்ப்புத் தந்தையும், தாயும் பற்றிய இறந்த காலத்தில் பயணித்து எதற்காக இந்த ஊருக்கு வருகிறான், அவன் வந்ததன் நோக்கம் நிறைவேறியதா என்பதாக நாவல் நிறைவு பெறுகிறது.

திண்ணைக்கென்று ஜெயகாந்தன் பிரத்தியேகமாக அளித்த பேட்டியில் இந்த நாவலைப் பற்றிய அவருடைய பார்வையை பின்வருமாறு தெரிவிக்கிறார்.

திண்ணை : இந்தப் பேட்டியின் அமைப்பு கேள்வி பதிலாக இருப்பினும், கேள்விக்குப் பதிலாக மட்டுமல்லாமல், நீங்கள் தொடர்ந்து அபிப்பிராயம் சொல்ல வேண்டுமென்றாலும் சொல்லலாம். முதன் முதலில் நான் கேட்கப் போகும் கேள்வி 'ஒரு மனிதன் ஒரு வீடு உலகம் ' பற்றியது. நான் எங்கள் நண்பர்களுடன் பேசிக் கொண்டிருக்கும் பொழுது, கிளாஸிக்குகள் பொதுவாகவே துன்பியல் வடிவில் தான் நிறைய எழுதப் பட்டிருக்கின்றன என்பது பற்றி விவாதித்திருக்கிறோம். உதாரணமாக மாக்பெத், போரும் அமைதியும், அன்னா கரீனினா, குற்றமும் தண்டனையும், கரமஸோவ் சகோதரர்கள் - இப்படி. மகிழ்ச்சியை, சந்தோஷத்தை அடிப்படையாய் வைத்து ஒரு கிளாஸிக் வர முடியுமா என்று எங்களுக்குள் விவாதங்கள் நடந்த படி யிருந்தன. அந்தச் சமயத்தில் 'ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் ' தொடராக வர ஆரம்பித்தது. மகிழ்ச்சி ததும்புவதாகவும், சந்தோஷத்தையும் மிகவும் கொண்டு, சாதாரண மக்களிடம் உள்ள சிறப்பையும் , தாம் சாதாரண மனிதர்களாக இருந்து கொண்டே அவர்கள் உன்னதத்தை அடைய முடியும் என்பதை நிரூபிக்கும் விதமாகவும் ஒரு மிகச் சிறந்த கிளாஸிக்-ஆக இந்தப் படைப்பு வெளிவந்தது. அதை எழுதும் போதும், வெளிவந்த போதும் உங்கள் மன நிலை என்ன ? நீங்கள் அதை எப்படி அணுகினீர்கள் ?

ஜெயகாந்தன் : நீங்கள் சொன்னது போல கிளாசிக்குகள் துன்பியலாய்த் தான் இருக்கும் என்பது முழு உண்மை அல்ல. இந்திய மொழியில் இது அவசியம் இல்லை. இன்னும் சொல்லப் போனால் இந்திய மரபுப்படி எந்த ஒரு கதையும் சோகத்திலே முடிவது கூடாது. தமிழ் மரபிலும், ராமாயணத்திலே கூட இறுதிக் காண்டத்தைத் தவிர்த்து பட்டாபிஷேகத்துடன் நிறுத்தி விடுவார்கள். முதலில் நான் எழுத ஆரம்பித்த போது, ஒரு நல்லவன் எப்படி மூடர்களிடம் சிக்கி அவதியுறுகிறான் என்று எழுதத் தோன்றியது.. ஆனால் , எழுதத் தொடங்கியவுடன், அதைவிடவும் அவன் நல்லவனாக இருப்பதால் எல்லாவற்றையும் எப்படி எல்லாவற்றையும் நல்லவனாகவே பார்க்கிறான், என்பதையும் எழுத எண்ணினேன். Negative aspect- சிறிதும் இல்லாமல் எழுத மனதில் தீர்மானித்துக் கொண்டேன். அவன் ஒரு யுனிவர்சல் மேன். கிராமத்திலே வாழ்கிறான். பரந்து பட்ட உலகத் தன்மை எப்படி ஒவ்வொரு கிராமத்திலும் குடி கொண்டிருக்கிறது என்பதை அவன் வழியாகச் சொல்வது தான் என் நோக்கம். அது ஒரு முடிந்த நாவல் அல்ல. அதன் முடிவு எப்படி இருக்கும் என்று தெரியாமலே அதை எழுதத் தொடங்கினேன். எனக்கு மனதில் மேன்மையான ரொம்ப மேன்மையான உணர்ச்சியும், அந்த உணர்ச்சியினால் நான் தான் ஹென்றி என்று உணர்வுஇ கொண்டேன். என் நண்பர்களிடம் இதைச் சொல்லி , எப்படி எழுதுவது என்று முடிவாக வில்லை என்றேன். நண்பர் குப்புசாமி நான் சொன்ன விதமாகவே எழுதலாமே என்றார். அப்பொழுது நாங்கள் ஒரு லாரியில் பிரயாணம் செய்து கொண்டிருந்தோம். மொத்தம் அந்த லாரியில் ஏழு பேர் இருந்தார்கள் என்ற வரியோடு அந்த நாவல் தொடங்கியது .முடிவற்ற நாவலாக எழுதிக்கொண்டே போவது தான் என் விருப்பம். ஆனால் பத்திரிகைக் காரர்களுக்கு இதை முடிக்க வேண்டும் என்று தோன்றி விட்டது. இது இன்னும் எத்தனை வாரம் வரும் என்று கேட்டார்கள். அடுத்த வாரமே முடித்து விட்டேன். அது முடித்த பிறகு நான் நிறைய எழுத வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருக்கிற விஷயங்கள் கூட மனதின் அடியாழத்துக்குப் போய் விட்டன. நீங்கள் கேட்டது : இந்த நாவல் எழுதும்போது என் மனநிலை பற்றி - மனிதர்களையும், கிராமத்தையும், இயற்கையையும் நேசிக்கிற ஒரு பறவை மாதிரி நான் அந்த காலத்தில் இருந்தேன் இந்தக் கதை என் உடம்பையே லேசாக்கி ,பறவை போல இருந்தது என் மனநிலை. ஆனால் பறந்து கொண்டே இருக்க முடியாதல்லவா ? காலூன்றி ஒரு இடத்தில் நிற்கத்தான் வேண்டியிருக்கிறது. ஆனால் இன்னும் கூட அதை மறுபடியும் தொடங்கணும். எழுத வேண்டும் என்று ஆர்வம் உண்டு. ஒரு காரியம் நிறைவேறுவதற்கு ஆர்வம் மட்டும் போதாது. வேறு சில புறச் சூழ்நிலைகளும் தேவையல்லவா ? அது வரலாம் வராமலும் போகலாம்.

தொடர்ந்து படிக்க இங்கு செல்லவும்: ஜெயகாந்தனின் நேர்முகம்...

அக்கம்மா, கிளியாம்பாள், மணியக்காரர், முதலியார், போஸ்ட் ஐயர், மண்ணாங்கட்டி, துரைக்கண்ணுவின் குழந்தைகள், மாமியார் மற்றும் மனைவி நவநீதம், டீக்கடை ஆசாமி, பைத்தியக்காரி என்று அனைவரின் கதாப்பாத்திரமும் கிராமிய மாந்தர்களைக் கண்முன் நிறுத்துகிறது.

இந்தப் புத்தகமெங்கும் வியாபித்திருப்பது வெகுளியான கிராமத்து மனிதர்களின் எளிமையான வாழ்க்கை. கிராமத்து வாழ்க்கையில் நாட்டமுள்ளவர்கள் அனுபவித்து ரசிக்கக் கூடிய கதை. புத்தகம் எல்லாக் கடைகளிலும் கிடைக்கிறது.

Book Details:
Oru manithan oru veedu oru ulagam,
jayaganthan published by Kalachuvadu Pathipagam.

Wednesday, October 14, 2009

கணிதத்தின் கதை

ஆசிரியர்: இரா.நடராசன்
வெளியீடு: பாரதி புத்தகாலயம்
விலை: 50/- ரூபாய்

சில புத்தங்கங்களைப் படிக்கும் போது நம்மையறியாமலே சில நபர்களின் முகங்கள் நம் கண்முன் வந்து போகும். 'கணிதத்தின் கதை' புத்தகத்தை வாங்கும்போதே 'சம்பத் சாரின்' முகம்தான் என் கண்களில் நிழலாடியது. பத்தாவது படிக்கும் போது என்னுடைய கணித ஆசிரியர் அவர். எனக்கு கணிதத்தின் மீது ஈர்ப்பு வந்ததே சம்பத் சாரின் மூலமாகத்தான். பின்நாளில் கல்லூரி வாழ்க்கையில் கணிதத்தை நான் முதற் பாடமாக எடுத்து மூக்கை உடைத்துக் கொண்டது வேறு விஷயம்.

எல்லா வருட மாணவர்களுக்கும் "டேய், பசங்களா நீங்க எங்க போனாலும் ஏதாவது ஒரு வடிவத்தில் கணக்கு பாடம் உங்களை விடாம விரட்டிக் கொண்டே வரும். அதுகிட்ட இருந்து நீங்க தப்பவே முடியாது. அதனால கஷ்டம் பார்க்காம படிச்சுடுங்க. வாழ்க்கையில் நல்லா வந்துடலாம்." என்று கூறுவர். அவர் கூறிய வார்த்தைகளின் அர்த்தம் இந்தப் புத்தகத்தை வாசிக்கும் போதுதான் புரிய வந்தது.

பார்க்கப் போனால், சிறுவயது முதல் கணக்கு என்றாலே பலருக்கும் கசப்புதான். அதற்குக் காரணம் எண்கள் எப்படி தோன்றின, அதிலிருந்து படிப்படியாக கூட்டல், கழித்தல், பெருக்கல், வகுத்தல் என்பதெல்லாம் எதற்காக பழக்கத்தில் வந்தன, அதிலிருந்து 'கணக்கு' என்ற பிரம்மாண்ட துறையாக எப்படி அது வளர்ச்சி பெற்றது என்பதெல்லாம் நம்முடைய பள்ளி வாழ்க்கையில் கவனத்திற்குக் கொண்டு வரப்படுவதில்லை. கணிதத்திலுள்ள பல விஷயங்களையும் ஏன் படிக்கிறோம், எதற்கு படிக்கிறோம், எங்கெல்லாம் அது பயன்படும் என்ற அடிப்படை விஷயங்கள் கூட தெரிந்து கொள்ளாமல் கல்லூரி வரை படித்து முடிக்கிறோம்.

அந்தக் குறையை ஓரளவேனும் போக்கும்படி இருக்கிறது இந்தப் புத்தகம். கணிதத்தின் முழு வரலாற்றை கிரேக்கர், ஹிப்ரு, பாபிலோனியா முதல் ஜெர்மன், ஃபிரான்ஸ், இந்தியா வரை இன்றைய கணிதத் துறை வளர்ச்சியின் மொத்த வரலாற்றை சுவைபட தொகுத்திருக்கிறார் இரா.நடராசன்.

அல்ஜீப்ரா, டிபெரன்ஷியல் கால்குலஸ், ட்ரிக்நோமேத்ரி போன்றவைகளின் அன்றாடப் பயன்களையும் பட்டியலிட தவறவில்லை. இந்தப் புத்தகம் தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித்துறையின் முதற் பரிசை பெற்றுள்ளது குறிப்பிடப் படவேண்டிய ஒன்று.

கணித மாணவர்கள் மட்டுமின்றி கணிதத்தைப் பற்றிய ஆர்வமுள்ள அனைவருமே படிக்க வேண்டிய அருமையான நூல். இந்த நூலினைப் பற்றி எழுத்தாளர் தமிழ்மகனின் விமர்சனத்தைப் படிக்க இங்கு செல்லவும்: கணிதம் எனும் உண்மை உலகம்!

புத்தகம் கிடைக்குமிடத்தின் முகவரி:
பாரதி புத்தகாலயம்,
7, இளங்கோ சாலை
தேனாம்பேட்டை
சென்னை - 600018
இந்தியா

தொலைபேசி: (9144) 24332424, 24332924

நூலாசிரியரின் இன்னபிற படைப்புகளையும் பார்வையிட அவருடைய இணையத் தளத்திற்குச் செல்லவும்: www.eranatarasan.com

குறிப்பு: அட்டைப் படம் ஸ்னேகா பதிப்பகத்தின் வெளியீட்டில் உள்ளது. பாரதி புத்தகாலயம் முன் அட்டையை மாற்றியுள்ளார்கள்.

Saturday, October 3, 2009

தமிழ்ச் சிறுகதை பிறக்கிறது

ஆசிரியர்: சி.சு.செல்லப்பா
வெளியீடு: காலச்சுவடு பதிப்பகம்
விலை: 125 ரூபாய்

"செப்டம்பர் 13ம் தேதியன்று நடைபெற்ற 'சென்னைச் சிறுகதைப் பட்டறை'யில் கலந்து கொள்வதற்கு முன் சிறுகதைகள் பற்றிய தெளிவு ஏற்பட ஏதாவது புத்தகம் கிடைக்காதா என்று தேடிக் கொண்டிருந்தேன். அப்பொழுது பார்த்து காலச்சுவடு வெளியீட்டில் சி.சு.செல்லப்பா எழுதிய இந்தப் புத்தகம் கண்ணில்பட்டது.

1956-ல் சுதேசமித்திரன் தீபாவளி மலரில் சிறுகதை இலக்கியம் பற்றி சி.சு.செல்லப்பா ஒரு கட்டுரை எழுதியிருக்கிறார். அவருக்கு சாதகமாகவும், பாதகமாகவும் அந்தக் கட்டுரை சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது. அதிலிருந்து சிறுகதை ஆசிரியர்களைப் பற்றியும், அவர்களுடைய படைப்புகளைப் பற்றியும் விமர்சனம் எழுதும் ஆவலை இந்த விவாதம் தூண்டிவிட்டிருக்கிறது.

அதன்படி, பின்னாளில் "எழுத்து" இலக்கிய இதழை சி.சு.செல்லப்பா சொந்தமாகத் தொடங்கிய போது - 1964 முதல் 1969 வரையிலான காலகட்டங்களில் போதிய இடைவெளியில் "தமிழ்ச் சிறுகதை" என்ற தலைப்பில் கட்டுரைகள் எழுதியிருக்கிறார். அதன் பிறகும் சிறுகதைகளைப் பற்றி எழுதிய பிரசுரமாகாத கட்டுரைகளையும் சேர்த்து ‘தமிழ்ச்சிறுகதை பிறக்கிறது’ என்ற புத்தகமாகக் கொண்டுவந்திருக்கிறார்.

"வ.வே.சு ஐயர், அ. மாதவையா, றாலி, பி. எஸ். ராமையா, கல்கி, எம்.எஸ். கல்யாணசுந்தரம், ந.பிச்சமூர்த்தி, கு.ப.ராஜகோபாலன், சி.சு.செல்லப்பா, சங்கு சுப்ரமண்யன், புதுமைப்பித்தன், பே.கோ. சுந்தரராஜன், ந.சிதம்பர சுப்ரமண்யன், தி.ஜ.ர, மௌனி, லா.ச.ரா" போன்ற தமிழின் முக்கியமான மூத்த படைப்பாளிகள் எழுதி 1920 முதல் 1939 வரையில் வெளிவந்த முத்திரைச் சிறுகதைகளை எடுத்துக் கொண்டு அவற்றின் உருவம், உள்ளடக்கம், கதை நுட்பம், வடிவ நேர்த்தி ஆகியவற்றை விவாதித்து, அவை பிற்கால சிறுகதை இலக்கியத்திற்கு அளித்த பங்களிப்பை இந்த விமர்சன நூலின் மூலம் முன் வைக்கிறார்.

இதன் முதற்பதிப்பு 1974-ல் வெளிவந்துள்ளது. நீண்ட இடைவெளிக்குப் பிறகு சில திருத்தங்களுடனும், பிற் சேர்க்கைகளுடனும் காலச்சுவடு பதிப்பகத்தார் 2007 ஆண்டு மீள் பிரசுரம் செய்துள்ளார்கள்.

சிறுகதை எழுத ஆசைப்படுபவர்களுக்கும், சிறுகதை இலக்கியத்தைப் புரிந்து கொள்ள நினைப்பவர்களுக்கும் இந்த விமர்சனப் புத்தகம் பயனுள்ள நூலாக இருக்கும். இந்நூல் காலச்சுவடு பதிப்பகத்தில் வங்கக் கிடைக்கிறது.

இந்த நூலினைப் பற்றி எழுத்தாளர் ஜெயமோகன் எழுதிய கட்டுரை அவருடைய தளத்தில் படிக்கக் கிடைக்கிறது: முன்னோடியின் கண்கள்

Book Details: Tamil sirukathai pirakkirathu, C.S.Chellappa, Rs:125
Book Available @ Kalachuvadu pathipagam, Old no: 130, New no: 257, Triplicane high road, Chennai - 600 005. Ph:- 91-44-2844 1672, 4215 5972

Thursday, September 24, 2009

நிழல் - சினிமா இதழ்

ஆசிரியர்: திருநாவுக்கரசு
வெளியீடு: நிழல் பதிப்பகம்
விலை: 30/- ரூபாய்

ஒரு நாள் முத்து ஃபோன் செய்து, "மாமா... நீங்க நிழலில் சினிமாவைப் பற்றி கட்டுரை எழுதுங்களேன். எனக்குத் தெரிந்தவர் தான் இதழின் ஆசிரியர். முயற்சி செய்யுங்களேன்." என்று அன்புடன் கூறினான்.

"அடேய், சினிமா என்ன சாதாரண விஷயமா? கம்ப சூத்திரம்டா, அதில் நிறைய தொழில் நுட்பம் சம்மந்தப்பட்டு இருக்கு. "கேமரா, ஒளிப்பதிவு, பாடல், இசைக் கலப்பு, பின்னணி இசை, எடிட்டிங், கலை இயக்கம், etc..." இன்னும் நிறைய விஷயங்கள் இருக்கு. அதை எல்லாம் முறைப்படி இல்லையென்றாலும் ஓரளவிற்குத் தெரிந்துகொண்டு எழுதுவது தான் நல்லது.

நமக்குத் தெரிந்தது எல்லாம் கதை, இயக்கம், வசனம் மற்றும் திரைக்கதை மட்டுமே. குறைந்த புரிதலை வைத்துக் கொண்டு எழுதினால் கட்டுரை நல்லா இருக்காது. நமக்கு எதுக்குடா வீண்வேலை" என்று கூறிய பதில் அவனை எந்த அளவிற்குக் காயப்படுத்தி இருக்குமோ தெரியவில்லை.

ஐந்து வருடங்களுக்கு முன்பு "சதத் ஹசன் மண்டோ"வின் படைப்புகளை வாங்குவதற்காக (யாரோ படிப்பதற்கு வாங்கி திருப்பித் தரவில்லை) நிழல் பதிப்பகத்திற்குச் சென்றிருக்கிறேன். அப்பொழுது ஒரு இதழையும் கூடவே வாங்கிப் படித்ததாக ஞாபகம். சினிமாவைப் பற்றி இருந்ததால் மீண்டும் அந்த இதழைப் படிக்கும் ஆர்வம் வரவில்லை.

தற்போது நிழல் எப்படி வெளிவருகிறது என்று பார்ப்பதற்காக எழும்பூர் புத்தகக் கடைகளில் தேடினேன். எங்கும் கிடைக்காததால் உடன் வேலை செய்யும் நண்பன் கார்த்திக்கிடம் சொல்லி எனி இந்தியனிலிருந்து வாங்கி வரச் சொன்னேன்.

9-ஆம் ஆண்டு இதழ் என்று முகப்பிலேயே குறிப்பிட்டிருந்தார்கள்.

பல சுவாரஸ்யமான விஷயங்கள் இதழில் படிக்கக் கிடைத்தன. யாழ்ப்பாண குறும்பட ஆர்வலர் ராகவன் தனது குறும்பட பயிற்சி மற்றும் முதல் குறும்படமான "மூக்குப்பேணி"யைப் பற்றி விரிவாக பகிர்ந்திருக்கிறார். கன்னட சினிமாவைப் பற்றி விட்டல் ராவ் கட்டுரை எழுதியிருக்கிறார். ராஜகோபால் எழுதியுள்ள "எக்ஸ்ப்ரஷனிஸமும் ஜெர்மன் சினிமாவும்" கட்டுரை சினிமாவை நுணுக்கமாக தெரிந்துகொள்ள நினைப்பவர்களுக்கு உதவியாக இருக்கும்.

பிரசாத் ஃபிலிம் லேபரட்டரி செயல் இயக்குனர் சிவராமன் "கேமரா நின்ற பிறகு என்ன நடக்கிறது..." Post Production பற்றி விளக்குகிறார்.

ஓவியர் மற்றும் கலை இயக்குனர் மருது, Y.G. மகேந்திரன் போன்றோருடைய நேர்காணல்களும், நகைச்சுவை நடிகர்களின் பங்களிப்பு தொடரில் N.S. கிருஷ்ணன், மதுரம் பற்றியும், நெறியாலும் பெண்கள் கட்டுரையில் பெண் படைப்பாளிகளைப் பற்றியும் விரிவாக எழுதி இருக்கிறார்கள்.

கடைசி பக்கத்தில் DFT மாணவர் கார்த்திக்கின் புகைப்படங்கள் கண்ணைக் கவரும் படி இருக்கிறது. இந்த இதழில் முதல் எட்டுப் பக்கங்களில் ஏராளமான எழுத்துப் பிழை இருந்தது. திருநாவுக்கரசை நேரில் பார்த்து இதைப் பற்றி பேச வேண்டும் என்று நினைத்துக் கொண்டேன். மற்றபடி இதழ் அருமையாக இருந்தது.

சினிமா, குறும்படம், ஆவணப்படம் மற்றும் உலகப் படங்களைப் பற்றி தமிழில் வெளிவரக் கூடிய தமிழிதழ்களில் "நிழல்" முக்கியமான இதழ். ஆசிரியர் திருநாவுக்கரசு மிகுந்த சிரமங்களுக்கு இடையில் கடந்த 9 ஆண்டுகளாக இந்த இதழை நடத்திக் கொண்டு வருகிறார்.

சர்வதேச திரைப்படவிழாக்கள் மற்றும் குறும்பட போட்டிகள், அது தொடர்பான குறிப்புகள், சினிமாத்துறை சார்ந்தோரின் நேர்காணல்கள் போன்றவை நிழலில் வெளியிடப்படுகின்றன. விஷுவல் கம்யூனிகேஷன் பாடத்திட்டங்களைக் கொண்டுள்ள பல கல்லூரிகளும் இந்த இதழின் சந்தாதாரராக இருக்கிறார்கள் என்று கேள்விப்பட்டேன். சினிமாவின் நுணுக்கங்களைத் தெரிந்து கொள்ள விரும்புவோர் இந்த இதழைப் படிக்கலாம்.

*****************
சினிமாவைப் பற்றி எனக்குப் பிடித்த வரிகள்:

"எல்லோரும் இரண்டு வேலை செய்கிறார்கள். ஒன்று அவர்களுடைய சொந்த வேலை மற்றொன்று சினிமாவை விமர்சனம் செய்வது." என்று யாரோ ஒரு கட்டுரையாளரின் வரிகள் எனக்கு மிகவும் பிடித்திருந்தது.

என்னைப் பொறுத்தவரை இந்தியர்கள் மூன்றாவதாக ஒரு வேலையை செய்கிறார்கள் அது கிரிக்கெட்டைப் பற்றி விமர்சனம் செய்வது.

*******************

சினிமா சமந்தப்பட்ட ஏராளமான புத்தகங்களை "நிழல் பதிப்பகம்" தமிழில் வெளியிடுகிறார்கள். தொடர்புக்குக் கீழுள்ள முகவரியை அணுகலாம்.

Address:
Nizhal Pathipagam,
Editor: Thirunavukarasu,
12/28 Rani Anna nagar,
Chennai - 600 078

Mobile: 94444 84868
E-mail: nizhal_2001@yahoo.co.in

Wednesday, September 2, 2009

புதிய தலைமுறை - புதிய இதழ்

புதிய இதழ், விற்பனைக்கு அல்ல தனிச்சுற்றுக்கு மட்டும் என்ற குறிப்போடு தபாலில் வந்திருந்தது.வார இதழா? மாத இதழா? என்ற எந்தக் குறிப்பும் இல்லை. விமர்சனத்தையும் வரவேற்பையும் பொறுத்து விலை மற்றும் கால இடைவெளி நிர்ணயிக்கப்படும் என்று நினைக்கிறேன்.

முதல் கட்டுரையே வெற்றி மீது வெற்றி வந்து நம்மைச்சேரும்! என்று அசத்தலாக இருந்தது. சாய்னா நெஹ்வால் (மேட்மின்ட்டன்), இளவழகி (கேரம்), மித்தாலி ராஜ் (கிரிக்கெட்), தீபிகா & ஜோஷ்னா சின்னப்பா (ஸ்குவாஷ்), ஷாமினி (டேபிள் டென்னிஸ்) போன்ற விளையாட்டில் சாதனைப் படைத்த பெண்களைப்பற்றிய கவர் ஸ்டோரி. ஜி. கோமளா என்பவர் இதனை எழுதியுள்ளார்.

”உதவி காத்திருக்கு” என்ற பகுதியில் ஏழை மற்றும் உடல் ஊனமுற்ற ஆனால் கல்வி கற்பதில் ஆர்வமிருந்தும் பொருளாதார ரீதியாக சிரமப்படும் மாணவர்களுக்கு அரசும் சில தனியார் நிறுவனங்களும் இணைந்து உதவிகள் செய்ய முன்வந்திருப்பதைப் பற்றி எழுதி இருக்கிறார்கள்.

இந்த ஆண்டிற்கான விண்ணப்பம் அளிக்க கடைசி தேதி : ஆகஸ்ட் 31. மேலதிக விவரங்களுக்கு www.socialjustice.in என்ற இணையதளத்தை பார்க்கவும். தொலைபேசி இலக்கங்கள் : 9900906338.

"எஞ்சினியரிங் கவுன்சலிங்" - கவுன்சலிங் என்றால் என்ன? அதை கிராமப்புற மாணவர்கள் எப்படி அணுகுகிறார்கள், தொலை தூரங்களிலிருந்து வருபவர்களுக்கு எந்த மாதிரியான வசதிகள் செய்து தரப்படுகின்றது என்று பதிவர் ஆதிஷா மற்றும் யுவன்கிருஷ்ணா எழுதி இருக்கிறார்கள்.

அடுத்து "வாமணன் திரைப்படம் பற்றிய விமர்சனம்" என்பதால் அடுத்த பக்கங்களுக்குத் தாவினேன்.

"கேள்வி நேரம்" என்ற பகுதியில் இயக்குனர் சீமானுடன் சென்னை லயோலாக் கல்லூரி ஊடகக் கலை மாணவர்களும், அண்ணா பல்கலைக்கழக ஊடக மற்றும் மார்க்கெட்டிங் துறை மாணவர்களும் சந்தித்து கேட்ட கேள்விகளுக்கு அவர் சலிக்காமல் பதிலளித்துள்ளார்.கவின் மலர் இதனைத் தொகுத்துள்ளார்.

அடுத்து "கடவுள் எங்கே இருக்கிறார் - மின்னஞ்சலில் வந்த சிந்தனை" என்ற பகுதி சுவாரஸ்யமாக இருந்தது. அப்துல் கலாம் - அவருடைய கல்லூரி நாட்களில் வகுப்பு பேராசிரியருடன் நடத்திய உரையாடல். ரிஷிகுமார் மூலம் இந்த ஆன்மீக உரையாடல் நமக்குக் கிடைத்திருக்கிறது.

"எச்சரிக்கை ஆபத்து நெருங்குகிறது" என்ற பகுதியில் இந்திய இளைஞர்களின் சக்கரைக் குறைபாடு விகித அதிகரிப்பும், அதனைக் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டிய துணுக்குகளையும் கொடுத்திருக்கிறார்கள்.

"பைக் வாங்குவது எப்படி?" - இருசக்கர வாகனகளை வாங்கும் போது கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டிய முக்கியமான விஷயங்கள் குறித்து இந்தப் பகுதியில் இருக்கிறது.

அடுத்துள்ள கவிதைப் பகுதியில் பதிவர் மற்றும் பகுதி நேர நிரூபர் உமாஷக்தி அவர்களின் "புத்தரும் நானும்" கவிதை ரசிக்கும்படியாக இருக்கிறது.

பொதுவாக வார, மாத இதழ்களின் நடுப்பக்கங்கள் சினிமா நடிகைகளின் கவர்ச்சிப் படங்களால் அலங்கரிக்கப்படும். இந்த இதழில் வாரிசுகளின் அரசியல் பிரவேசத்தை காஷ்மீரின் ஷேக் அப்துல்லா - ஃபரூக் மற்றும் உமர் அப்துல்லாவிலிருந்து, தமிழ்நாட்டில் கலைஞர் - ஸ்டாலின் -அழகிரி - கனி மொழி வரை இந்திய அரசியல் தலைவர்களின் ஜனநாயக விரோத செயலை விளக்குமாறு படத்துடன் சுட்டிக் காட்டியுள்ளனர்.

"பைக்கில் ஒரு பயணம்" - நீலாங்கரை அடுத்துள்ள ஆலம்பறா கோட்டை பற்றிய கட்டுரை.

"கோடம்பாக்கத்தில் சுனாமி" - தமிழ்சினிமாவில் கிராமத்து இளைஞர்களின் பாய்ச்சல் என்ற கட்டுரை கிராமத்திலிருந்து வந்து தற்போது நல்ல படங்களைக் கொடுத்துக் கொண்டிருக்கும் இயக்குனர்கள் பாண்டியராஜன், சுசீந்திரன், சமுத்திரக்கனி, மற்றும் நாடோடிகள் சசிகுமார் பற்றிய சினிமா கட்டுரை. அழகாக எழுதி இருக்கிறார்கள்.

"அச்சத்தை வென்றது எப்படி?" - கவிஞர் வைரமுத்துவின் முதல் மேடைப் பேச்சையும், அதில் அவர் பட்ட கஷ்டங்களையும் பிறகு அதிலிருந்து மீண்டு நல்ல பேச்சாளர் ஆனதையும் குறித்த அருமையான கட்டுரை.ஒவ்வொரு இதழிலும் சிறந்த ஆளுமைகளின் அனுபவங்கள் படிக்கக் கிடைத்தால் நன்றாக இருக்கும்.

அடுத்து அருணா ஸ்ரீனிவாசின் "நிறைவு" சிறுகதை இடம்பெற்றிருக்கிறது.

"தவறு செய்தவர் ஆசிரியர் - தண்டனை அனுபவிப்பது மாணவன்!" பகுதியில் மாநிலத்திலேயே அதிக மதிப்பெண்கள் பெற்றும் ஆசிரியர்களின் கவனக் குறைவால் எந்த சலுகைகளையும் பெற முடியாமல், அங்கீகாரமும் கிடைக்காமல் இருக்கும் மாணவரைப் பற்றிய கட்டுரை.

எல்லாமே ஓசி - இ-கலப்பை மென்பொருள் பற்றிய விளக்கக் கட்டுரை.

புத்தக அறிமுகம் (தமிழ் மொழி) - "எங்கே எனது அல்வாத் துண்டு?" கே.ர மணி மொழிபெயர்த்த பிரசித்தி பெற்ற Who moved mycheese? புத்தகத்தைப் பற்றிய பரிந்துரை என அசத்தியுள்ளார்கள்.

முழுநேரமாகவோ பகுதி நேரமாகவோ பத்திரிகைத் துறையில் செயல்பட விரும்புவோர் புதிய தலைமுறை இதழினை அணுகலாம். திரு மாலன் அவர்களின் பத்திரிகைப் பணி அழைக்கிறது என்ற பதிவில் அதற்கான அறிவிப்பு இருக்கிறது.

புதிய தலைமுறை வெற்றியின் உச்சியைத் தழுவ வாழ்த்துக்கள்.

-கிருஷ்ண பிரபு

Monday, August 24, 2009

அசோகமித்திரன் சிறுகதைகள்

முத்துக்கள் பத்து: அசோக மித்திரன்
விலை: 40-/ ரூபாய்
தொகுப்பு: திலகவதி
வெளியீடு: அம்ருதா பதிப்பகம்

"நீ யார்" என்ற சு.ரா-வின் ஆவணப்படத்தை நண்பர் மற்றும் பதிவர் விஷ்ணு குமாருடன் (முதல் சுவடு) சென்ற வாரம் அண்ணா சாலையிலுள்ள ஃபிலிம் சேம்பரில் பார்க்க நேர்ந்தது. எழுத்தாளர் அசோகமித்திரனின் பேட்டி அதில் வருமென்று கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. இறந்தவர்களுக்கான காரியங்கள் செய்வதைப் பற்றிய பேச்சு அது. அவர் பேசிய ஒவ்வொரு வார்த்தையையும், முகபாவங்களையும் கவனமாகக் கேட்டுக் கொண்டு இருந்தேன். பல இடங்களில் அவருடைய பேச்சு மனம்விட்டு சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்தது. எவ்வளவு பெரிய மேதை. ஆனாலும் எவ்வளவு எளிமையான மனிதராக இருக்கிறார் என்று பிரம்மிப்பாக இருந்தது. ஆனந்தவிகடன் பத்திரிகையின் பொறுப்பாசிரியர் திரு: ரவி பிரகாஷ் அவர்களின் (அசோக)மித்திரனின் மித்திரன் நான்! பதிவினைப் படித்தால் அவருடைய எளிமை நமக்கு பூரணமாகத் தெரியவரும்.

அசோகமித்திரன் கேணி இலக்கிய சந்திப்புக்கு வருகிறார் என்பது தெரிந்தவுடன் அவருடைய நல்ல படைப்புகளை மீள்வாசிப்பு செய்தால் அலாதியாக இருக்குமென்றும் கேள்வி நேரத்தின்போது உரையாட வசதியாக இருக்குமென்றும் நினைத்தேன். அதன்படி கடந்த வாரத்தில் "அசோகமித்ரனின்-முத்துக்கள் பத்து" சிறுகதைத் தொகுப்பைப் படிக்க நேர்ந்தது. அதிலுள்ள கதைகள் யாவும் நிஜ முத்துக்களே.

ஃபோட்டோ: நண்பனின் திருமணத்திற்குச் செல்லும் தோழர்கள் எல்லோரும் சேர்ந்து புகைப்படம் எடுத்துக்கொள்ள விரும்புகிறார்கள். இந்தச் சம்பவத்தை மையமாக வைத்து எழுதப்பட்ட சிறுகதை.

சங்கமம்: அடுக்குமாடி குடியிருப்பில் மேலுள்ள வீட்டிலிருந்து நீர்க்கசிவு ஏற்படுவதால் கீழுள்ளவர்களுக்கு ஏற்படும் சிரமத்தைப் பற்றிய கதை.

எலி: ஓர் எலியைக் கொல்வதற்காக நடுத்தர குடும்பத் தலைவர்படும் அவஸ்தையை அருமையாகக் கையாண்டிருக்கிறார். எலிப்பொறியில் வைக்க வீட்டில் எதுவும் இல்லாததால் கடைக்குச்சென்று மசால் வடையை வாங்கி வருகிறான். இரண்டு வடை வாங்கி ஒன்றைப் பொறியில் வைத்துவிட்டு மற்றொன்றைத் தின்று விடுகிறான். மறுநாள் காலை பொறியில் எலி அகப்படிருக்கும் . ஆனால் வடை துளியும் தின்னப்படாமல் அப்படியே முழுசாக இருப்பது கண்டு அவன் மனம் கலங்கும். அதே மனக்கலக்கத்தை நமக்கும் உண்டாக்கிவிடுவார்.

பவள மாலை: பணி நிமித்தமாக வெளியூர் செல்லும் கணவன் தனது மனைவிக்கு பவள மாலையை வாங்குகிறான். தான் ஏமாந்துவிட்டோமோ, மனைவி கண்டுபிடித்து அசிங்கப் படுத்திவிடுவாலோ என்று நினைக்கும் கணவனின் பார்வையிலமைந்த கதை.

முனீரின் ஸ்பானர்கள்: Secunderabad -லுள்ள ஒருவன் தனது தந்தையின் இழப்பு காரணமாக சென்னைக்குக் குடிபெயர நேர்கிறது. வீட்டிலுள்ள பொருட்களை எடுத்துச் சென்று ரயிலில் ஏற்ற தனது நண்பனின் உதவியை நாடுகிறான். நண்பனும் அவனுடைய முதலாளியும் உதவி செய்ய வருகிறார்கள். அனுப்பப்படும் பொருட்களுடன் முதலாளியின் இரண்டு ஸ்பானர்கள் தவறுதலாக கலந்துவிடுகின்றன. சென்னைக்குச் சென்றதும் தான் அவனுக்கு இந்த விஷயம் தெரியவருகிறது. அதற்கு முன்பே முதலாளியின் சந்தேகம் காரணமாக நண்பனின் வேலை பறிபோகிறது.

மீரா - தான்சேன் சந்திப்பு: பக்தை மீராவும், அக்பரின் ஆஸ்தான பாடகர் தான்சேனும் சந்தித்ததாகக் கூறப்படும் வாய்வழிச் செய்தியை மையமாக வைத்து எழுதப்பட்டக் கதை.

"ராஜாவுக்கு ஆபத்து, பாலா மணி குழந்தை மண்ணைத் தின்கிறது, பங்கஜ் மல்லிக், இன்று நிம்மதியாகத் தூங்க வேண்டும்" ஆகிய கதைகளும் படிக்க ஸ்வாரஸ்யமாக இருக்கிறது.

எனது கதைகளில் 'உத்தி' என்று எதுவும் இல்லை. உத்தியில்லாத உத்தியைத்தான் பயன்படுத்துகிறேன் என்று சொல்லும் இவருடைய கதைகளின் எளிமையும், வாசிப்பனுபவமும் படித்து ஆனந்தப் படவேண்டிய ஒன்று. கன்னிமரா நிரந்தர புத்தகக் கண்காட்சியில் இந்தப் புத்தகம் வாங்கக் கிடைக்கிறது.

Book Details: Muththukkal Pathu (Rs. 40), ashokamitran short stories