ஆசிரியர்: பாரதி மணி
வெளியீடு: உயிர்மை பதிப்பகம்
விலை: ரூபாய் 100/-
மேடை நடிகராகவும், திரைப்படக் கலைஞராகவும் நமக்கு நன்கு அறிமுகமான பாரதி மணி, நட்சத்திரப் பிரமுகர்களுடனான தனது அனுபவங்களைக் கட்டுரைகளாக எழுதி உயிர்மை, அமுதசுரபி, தீராநதி போன்ற இதழ்களில் வெளிவந்து வாசகர்களிடையே பரவலான கவனத்தைப் பெற்றது இலக்கிய நண்பர்கள் அறிந்ததே.
பல இதழ்களிலும் வெளிவந்த கட்டுரைகள் யாவும் தொகுக்கப்பட்டு 'பல நேரங்களில் பல மனிதர்கள்' என்ற புத்தகமாக வெளிவந்துள்ளது. சில நாட்களுக்கு முன்பு அந்தப் புத்தகத்தை மணியிடமே பரிசாக வாங்கும் சந்தர்ப்பம் நேர்ந்தது. புத்தகத்தைக் கையில் எடுத்தால் வாசித்து முடிக்காமல் கீழே வைக்க முடியாது. அந்த அளவிற்கு சுவாரஸ்யமான விஷயங்கள் அவருடைய கட்டுரைகளில் இருக்கிறது.
எனக்கு மிகவும் பிடித்தக் கட்டுரை 'நிகம்போத் காட்' பற்றியது. நான் இதுவரை வாசித்த அனுபவக் கட்டுரைகளில் என்னை மிகவும் வசீகரித்தக் கட்டுரைகளில் இதுவும் ஒன்று.
'செம்மீனும் தேசீய விருதுகளும்!' - இந்திய அரசால் வழங்கப்படும் சினிமாவிற்கான தேசிய விருது மலையாளப் படமான செம்மீனுக்கு எப்படி வழங்கப்பட்டது என்பதை விளக்கும் கட்டுரை. நீண்ட நாட்களுக்கு முன்பு இரண்டுக்கும் மேற்பட்ட தேசிய விருதுகளை வாங்கிய மலையாள இயக்குனர் TV சந்திரனின் நேர்முகத்தை குமுதம் தீராநதியில் படிக்க நேர்ந்தது. அதில் "சினிமா என்றால் என்னவென்றே தெரியாத ஒரு நாட்டில், சினிமாவைப் பற்றி ஒன்றுமே தெரியாத நடுவர்களால், சிறந்த படத்திற்கான தேசிய விருது பெறுவது ஒன்றும் பெரிய விஷயமே அல்ல..." என்று குறிப்பிட்டிருப்பார். இந்தக் கட்டுரையைப் படித்த பின்பு அது எவ்வளவு நிஜம் என்று புரிந்தது. (கட்டுரையின் முடிவில் அதற்க்கான தொடுப்பை படிப்பதற்குக் கொடுத்திருக்கிறேன்.)
'சிரிப்புத்தான் வருகுதையா' என்ற கட்டுரையில் பாராளுமன்ற உறுப்பினர்கள் பலருடனான தொடர்புகளையும் அரசாங்கம் அவர்களுக்குக் கொடுக்கும் சலுகைகளை அவர்கள் தவறாக பயன்படுத்தும் விதத்தை ஒளிவு மறைவில்லாமல் கூறியிருப்பது நம்மை யோசிக்கவைக்கிறது.
'நாதஸ்வரம் - என்னை மயக்கும் மகுடி' - கட்டுரையில் நாதஸ்வர வித்வான்கள் திருவாவடுதுறை ராஜரத்தினம் பிள்ளை, காருகுறிச்சி அருணாசலம் பற்றி எழுதிய ரசமான தகவல்கள் எங்கும் படிக்கக் கிடைக்காதது.
'சுப்புடு சில நினைவுகள்' - இசைவிமர்சகராக மட்டுமே பரிச்சயமான சுப்புடுவை அரசாங்க குமாஸ்தாவாக, ஓய்வுபெற்ற பிறகு மணியின் சிபாரிசில் வேலைக்கு சேர்ந்து அலுவலுக்கே வராமல் சம்பளத்தை வாங்கிக் கொண்டு சங்கடத்தில் ஆழ்த்தியது, அவரது வேலைகளில் நாணயமற்று நடந்து கொண்டது என சுப்புடுவின் வேறுபட்ட முகங்களை நம்முடன் பகிர்ந்துகொள்கிறார். கர்னாடக சங்கீத கச்சேரிக்கு சென்னை வரும் போது சுப்புடுவுடன் ஒரே அறையை பகிர்ந்துகொண்ட சுவாரஸ்யமான தகவல்களையும் இந்தக் கட்டுரையில் பகிந்துகொள்கிறார்.
'நான் பார்த்த ரோஜாவின் ராஜா' என்ற கட்டுரையில் பிரதமர் நேருவுடனான நிகழ்வுகளையும், 'அன்னை தெரஸா' - கட்டுரையில் ஒரே விமானத்தில் பக்கத்து இருக்கையில் அன்னை தெரசாவுடன் பயணம் செய்ததையும் அவரிடமிருந்து பைபிள் புத்தகம் மற்றும் ஜெபமாலையை அன்புப் பரிசாகப் பெற்றதை இன்று வரை பொக்கிஷமாக வைத்துப் பாதுகாப்பதை எழுதியிருப்பார்.
()
நீல. பத்மநாபன், அசோகமித்திரன், இந்திரா பார்த்தசாரதி, அ. முத்துலிங்கம், எஸ். ராமகிருஷ்ணன், பாவண்ணன், வாஸந்தி, ஜெய மோகன், அம்ஷன் குமார், லால்குடி G ஜெயராமன், நடிகர் சத்யராஜ், எடிட்டர் லெனின், டெல்லி கணேஷ், தியோடார் பாஸ்கர், சுகா போன்ற அவரது நெருங்கிய நண்பர்கள் அவரைப் பற்றி எழுதியதும் புத்தகத்தில் இருக்கிறது.
அவருடன் நேரில் உரையாடியபோது நண்பர்கள் எல்லோரும் பொய் சொல்லியிருக்கிறார்கள் என்றும், தனக்கு வந்த இரங்கல் கடிதங்களை உயிருடன் இருக்கும் போதே படித்து மகிழ்வது போல இருப்பதாகவும் நகைச்சுவையாகக் கூறினார். நம்முடன் பகிர்ந்து கொள்ள இன்னும் நிறைய விஷயங்கள் அவரிடம் இருக்கிறது.
அவற்றையெல்லாம் சொன்னால் டெல்லியில் அவருக்குக் கொஞ்சமும் பிடிக்காத இடமான திகார் ஜெயிலில் நிரந்தர இடம் கிடைக்கும் என்று நகைச்சுவையாகக் கூறுகிறார். அதனால் நேரம் கிடைக்கும் போது எழுதுங்கள் என்று கேட்கும் அவருடைய வாசகர்களில் நானும் ஒருவன்.
மணியின் தில்லி வாழ்க்கை, அதில் கிடைத்த பரந்துபட்ட அனுபவங்கள் என கட்டுரைகள் யாவும் தனிப்பட்ட மனிதரின் அனுபவமாக இல்லாமல் வரலாறையும், நாம் இழந்துவிட்ட விஷயங்களையும ஞாபகப்படுத்துவதே நூலின் சிறப்பாகப்படுகிறது.
புத்தகத்தில் மொத்தம் 18 கட்டுரைகள் இருக்கின்றது. அவற்றில் சில உயிர்மையில் படிக்கக் கிடைக்கிறது.
1. பங்களாதேஷ் நினைவுகள்: டி.ஆர்.ராஜகுமாரி இப்போது நடிக்கிறாரா?
2. அம்மா பரதேவதே! சுஜாதா எங்கே இருக்கார்?
3. செம்மீனும் தேசீய விருதுகளும்!
4. காந்திபாய் தேசாய்: தலைவர்களும் தனயர்களும்
5. ஒரு நீண்ட பயணம்
6. சிங் இஸ் கிங்
எல்லாவற்றிற்கும் மேல் பழகுவதற்கு இனிமையான நண்பர். எந்த வித பந்தாவும் இல்லாமல் அனைவரிடமும் இயல்பாகப் பழகக்கூடியவர். அவருடைய கட்டுரைகள் பிடித்திருந்தால் 94440 03332- என்ற இலக்கங்களுக்கு தொடர்பு கொண்டால் மேலும் பல சுவாரஸ்யமான தகவல்களைக் கூறுவார். அவருடனான எனது நேரடி அனுபவத்தை திட்டிவாசலில் (மணியுடன் சில மணித்துளிகள்) எழுதியிருக்கிறேன்.
அவருடைய புத்தக வாசிப்பு எனக்கு நல்ல அனுபவத்தைத் தந்திருந்தாலும், அவருடனான உரையாடல் மேலும் பல ரசமான அனுபவங்களைத் தந்தது. நீங்கள் நெருங்கினால் உங்களுக்கும் அந்த அனுபவம் கிடைக்கும் என்று நம்புகிறேன்.
6 comments:
ஒரு புத்தகம் படிக்க இத்தனை நாள் எடுக்கிறீர்களா கிருஷ்ணா? போன மாசம் உங்கள் பதிவுக்கு வந்தது. (Just kidding)
நல்ல பகிர்வு. நான் இதில் ரசித்தது நாதஸ்வர மகுடியைத்தான். அறிய தகவல்கள் இல்லையா. பாரதி மணி தன்னுடைய தந்தையைப் பற்றி எழுதியுள்ள ஒரு குறிப்பில் வீட்டுப்பாடம் எழுதுகிற பையனை கூப்பிட்டு, ரேடியோவில் கச்சேரியைக் கேட்கவைத்த அனுபவம் நமக்கெல்லாம் பாடம் இல்லையா.
பாட்டு வாத்தியார் வைத்து கத்துக் கொடுக்கிரத்துக்கும், இதோ இந்தப் பாட்டைக் கேளேன் நன்றாக இருக்குன்னு சொல்றதுக்கும் எவ்வளோ வித்தியாசம்ங்க. அருமையான தந்தை. இந்தக் கட்டுரை அமுதசுரபில வந்துதோ??
-வித்யா
கொஞ்சம் வேலையாக இருந்ததால் பதிவிட இயலவில்லை. மற்றபடி வாசிப்பு ஒரு பக்கம் சென்று கொண்டேதான் இருக்கிறது.
/--இந்தக் கட்டுரை அமுதசுரபில வந்துதோ??--/
அப்பா...! என்ன ஒரு ஞாபக சக்தி வித்யா. 2007 அமுதசுரபியில் தான் வந்திருக்கிறது.
பகிர்வுக்கு நன்றி நான் இன்னும் வாங்கவில்லை.
உங்களின் பதிவை படித்த பின் வாங்க வேண்டும் என்ற ஆவல் அதிகரித்து உள்ளது கிருஷ்ணா
நல்ல பதிவு. அருமையான பகிர்வு நண்பரே. கொஞ்ச நாட்களாக வாசிப்பதை நிறுத்தி வைத்திருந்தேன். நீலகிரி முழுவதும் நிலச்சரிவு.. என் பள்ளதாக்குளை துயரம் நிறைத்திருக்கிறது..
பகிர்வுக்கு மிகவும் நன்றி கிருஷ்ணா.
இந்த கமெண்ட் பாக்ஸ் போலவே உங்கள் திட்டிவாசல் ப்லாக் கமெண்ட் பாக்ஸையும் மாற்றுங்களேன்.
அங்கே படிக்க முடிகிறது ஆனால் கமெண்ட் இட முடிவதில்லை.
அருமையான பகிர்விற்கு நன்றி கிருஷ்ணா.
ஏற்கனவே உங்கள் பதிவில் உள்ள சில புத்தகங்களை புத்தக கண்காட்சியில் வாங்க வேண்டும் என்று குறித்து வைத்துள்ளேன்.
ஒரு விண்ணப்பம்: நேரம் கிடைத்தால் புத்தக கண்காட்சியில் நீங்கள் பரிந்துரைக்கும் புத்தகங்களின் பட்டியல் இட்டால் மிகவும் உதவியாய் இருக்கும். I hope you will..
Post a Comment