Saturday, January 2, 2010

புத்தகக் கண்காட்சி - 2 மற்றும் 3 ஆம் நாள்

எழும்பூர் கன்னிமரா நூலகத்தின் அருகில் எனது அலுவலகம் இருப்பதால் வாரத்தில் நான்கு நாட்கள் நிரந்தர புத்தகக் கண்காட்சிக்கு செல்லுவது வழக்கம். இதனால் மாதத்திற்கு 10 முதல் 20 புத்தகங்கள் வாங்க நேர்ந்துவிடும். எனவே சென்னை புத்தகக் கண்காட்சிக்கு செல்லும் போது கூடுமான வரையில் குறைவாகவே புத்தகங்களை வாங்க வேண்டுமென்று நினைத்துக் கொண்டேன். "வீட்டில் புத்தகம் வைக்க இடமில்லையே ஒரு பீரோ வாங்க வேண்டியதுதான" என்ற அம்மாவின் புலம்பல் வேறு இன்னொரு காரணம்.

மகிழ்ச்சிமிக்க ஆங்கில வருடத்தின் கடைசி நாளும் வந்தது, அக்காவின் மகன் அகிலுடன் விளையாடிவிட்டு 'அன்டன் செகவ்' எழுதிய சிறுகதைகளின் தமிழ் மொழிபெயர்ப்பை தெரிந்த பதிவரிடமிருந்து வாங்க அவருடைய அலுவலகத்திற்குச் சென்றிருந்தேன். அவரிடமிருந்து புத்தகத்தை வாங்கிய பிறகு சென்னையில் நடக்கும் புத்தக கண்காட்சிக்குச் செல்வது தான் என்னுடைய திட்டம்.

உடன் வருவதாக
ச் சொல்லியிருந்த "வானவில் வீதி" கார்த்திக் அடுத்த வாரம் இணைந்து கொள்வதாகக் கூறினான். அடலேருக்கு அழைப்பு விடுத்தால் 'சாரு'வுடன் வெளியூரில் இருப்பதாகக் கூறினான். சரியென்று துவந்த யுத்தத்திற்குத் தயாரானேன்.

பேருந்தில் முகம் தெரியாத வட இந்திய நண்பர் அறிமுகமானார். அவரும் புத்தக கண்காட்சிக்குச் சென்று கொண்டிருப்பதாகக் கூறினார். சென்னை பல்கலைக் கழகத்தில் ஆராய்ச்சி மாணவராம். அவரை அழைத்துக்கொண்டு அரங்கிற்கு அருகில் வந்ததும் நுழைவுச் சீட்டு வாங்குமிடத்தை காண்பித்துவிட்டு விடை பெறுவதாகக் கூறினேன். என்னுடைய மின்னஞ்சல் முகவரியை கேட்டு வாங்கிக் கொண்டார். கிழக்கு பதிப்பகத்தில் பல நல்ல ஆங்கிலப் புத்தகங்கள் கிடைக்கும் என்று கூறி அவரை அனுப்பி வைத்தேன்.

இரண்டாவது நாள் என்பதால் அதற்குத் தகுந்த மாதிரி மிதமான கூட்டம் தான் இருந்தது. நுழைவுச் சீட்டு வாங்கிக்கொண்டு நேராக 'சாகித்ய அகாடமி' அரங்கிற்குச் சென்று 5 மொழி பெயர்ப்புப் புத்தகங்களை (மலையாள, ஹிந்தி மற்றும் தெலுங்கு) வாங்கிக் கொண்டேன். பொன்-வாசுதேவன் எதிரில் தென்பட்டார். அவரிடம் 'அகநாழிகை' புத்தகங்கள் கிடைக்குமிடம் பற்றி விசாரித்துவிட்டு 'காலச்சுவடு' அரங்கை நோக்கிச் சென்றுகொண்டிருந்தேன். உள்ளிருந்து பா. ராகவன் - மருதனுடன் வந்து கொண்டிருந்தார். அருகில் சென்று 'வணக்கம் ராகவன்' என்றேன். கண்களைச் சுருக்கி என்னைப் பார்த்தார்.

உங்களுடைய வாசகன் நான். உங்களோட "அலகிலா விளையாட்டு"... எவ்வளோ நல்ல நாவல்...(யாரோ எழுதியது போல அப்பாவித்தனமா சிரிக்கிறாரு) நீங்க நேரம் எடுத்து சிறுகதை மற்றும் நாவல் எழுதணும் என்ற கோரிக்கையை வைத்தேன்.

"கதையா..." என்று அருகிலிருந்த மருதனைப் பார்த்து சிரித்தார். "நீங்க என்ன பண்றீங்க? எங்க இருக்கீங்க?" என்று கேட்டார்.

இணையம் தொடர்பான வேலை செய்கிறேன். கும்மிடிப் பூண்டி செல்லும் வழியிலுள்ள சிறிய கிராமத்தில் இருந்து தினமும் வேலைக்கு சென்னை வருகிறேன். உங்களை சிறுகதைப் பட்டறையில் ஒரு முறை சந்தித்திருக்கிறேன். என் பெயர் கிருஷ்ண பிரபு.

"ஓ... உங்களுடைய மின்னஞ்சல் மற்றும் பின்னூட்டம் பார்த்தேன்." என்று கூறிய பொழுது வேறொருவர் வந்து அவரிடம் கைகுலுக்கினார். கொஞ்ச நேரம் பேசிவிட்டு "இது என்னுடைய தினம்..." என்று எங்களிருவரையும் பார்த்து சிரித்துவிட்டுக் கிளம்பினார்.

காலச்சுவடு 15-வது ஆண்டு விழாவை முன்வைத்து இரண்டு புத்தகம் வாங்கினால் ஒரு புத்தகம் இலவசம், மூன்று புத்தகங்கள் வாங்கினால் ஒரு புத்தகம் இலவசம் என்ற சலுகையை வழங்கிக் கொண்டிருந்தார்கள். முத்துவிற்கும் எனக்கும் சேர்த்து கிளாசிக் வரிசை மற்றும் சிறுகதை புத்தகங்கள் (10) எடுத்துக் கொண்டேன். அங்கிருந்து உயிர்மைக்கு சென்று தமிழ்மகன், சாரு, எஸ் ரா, விஜய் மகேந்திரன் ஆகியோரது கதைகள் மற்றும் கட்டுரைகள் வாங்கிக் கொண்டேன். அங்கிருந்து கவிதா பதிப்பகத்திற்குச் சென்று அசோகமித்ரனின் 'ஒரு பார்வையில்-சென்னை நகரம்' வாங்கிக் கொண்டேன். நீண்ட நாட்களாகத் தேடிக்கொண்டிருந்த இந்தப் புத்தகம் கிடைத்ததில் மிகவும் சந்தோஷப்பட்டேன்.

முத்துவிற்காக அகிலனின் 'சித்திரப்பாவை' என்ற நூலினை வாங்குவதற்காக தமிழ் புத்தகாலயம் சென்றேன். உள்ளே நுழையும் போது ஒருவரைப் பார்க்க நேர்ந்தது. அவரை எங்கோ பார்த்த ஞாபகம்.

"நீங்கள் எழுத்தாளரா?" என்று கேட்டேன்.

சிரித்துவிட்டு நீங்கள் கேட்ட புத்தகம் அங்கே இருக்கிறது பாருங்கள் என்று கை காட்டினார்.
புத்தகத்திற்கான பணத்தைக் கொடுத்துவிட்டு திரும்பும் போது "நான் தான் எழுத்தாளர் அகிலனின் மகன்" என்றார். சில புத்தகங்களை வாங்குவதற்காக வள்ளுவர் கோட்டம் அருகிலுள்ள அவருடைய வீட்டிற்கு நீண்ட நாட்களுக்கு முன்பு சென்ற ஞாபகம் வந்தது. அவருடைய பரிந்துரையின்படி அகிலனின் வேறுசில புத்தகங்களையும் வாங்கிக்கொண்டு 'அகரம்' பதிப்பகத்திற்குச் சென்றேன். அரங்கு முழுவதும் கி ரா-வின் புத்தகங்கள் ஜொலித்துக் கொண்டிருந்தன. அங்கிருந்து 'அந்தமான் நாயக்கர், தங்கர் பச்சனின் சிறுகதைகள், பிஞ்சுகள்' ஆகிய புத்தகங்களை வாங்கிக் கொண்டு சுமையைத் தூக்க முடியாமல் வீட்டிற்குத் திரும்பினேன். நான் சென்றிருந்த போது வண்ணத்துப் பூச்சியார், அமித்துவின் அம்மா, துளசி ஆகியோரும் கண்காட்சிக்கு வந்திருக்கிறார்கள். ஒருவரையொருவர் பார்க்க முடியாமல் போனதில் வருத்தமே.

ஆங்கிலப் புத்தாண்டிற்கு அலுவலகம் விடுமுறை என்பதால் உறங்குவதற்கு முன் அடுத்தநாள் வாங்க வேண்டிய புத்தகங்களின் பட்டியலை தயார் செய்தேன். 'காதுகள்' என்ற எம்.வி வெங்கட் ராமன் எழுதிய நாவல் பற்றி பா. ராகவன் நீண்ட நாட்களுக்கு முன்பு கல்கியில் எழுதியிருக்கிறார். "அந்தப் புத்தகம் இப்பொழுது எந்தப் பதிப்பகத்தில் கிடைக்கிறது?" என்று அவருக்கு மின்னஞ்சல் அனுப்பிவிட்டு உறங்கச் சென்றேன்.

நாளை மற்றொரு நாளே என்பது போல் 2010-ம் தொடங்கியது. நெருங்கிய நண்பர்களின் அழைப்புகளுக்கும், குறுஞ்செய்திகளுக்கும் பதிலளித்துவிட்டு சென்னையை நோக்கிக் கிளம்பினேன். அக்காவின் மகளுக்கு மரத்தினாலான தொட்டில் கிடைக்கிறதா என்று பார்த்துவிட்டு மதிய நேரத்தில் கண்காட்சிக்குச் சென்றேன். விடுமுறை தினம் என்பதால் நல்ல கூட்டம்.

தமிழினி பதிப்பகத்தில் ஜெய மோகனின் 'காடு' (நீண்ட நாட்களுக்கு முன்பு சிவராமன் பரிந்துரை செய்தது) வாங்கினேன். அருகில் சா. முத்துவேல் (அகநாழிகை ஆசிரியர் குழு உறுப்பினர்) ஜெயமோகனின் 'ஏழாம் உலகம்' புத்தகத்துடன் நின்று கொண்டிருந்தார். பரஸ்பர விசாரிப்புக்குப் பின் நாஞ்சில் நாடனின் சில புத்தகங்களை எடுத்துக் கொண்டு கவிதா பதிப்பகத்திற்குச் சென்று நேற்று வாங்கத் தவறிய சில புத்தகங்களை வாங்கிக் கொண்டேன். அங்கிருந்து கிழக்கு பதிப்பகத்தைக் கடந்து செல்லும் போது பா. ராகவன், சோம. வல்லியப்பனுடன் பேசிக்கொண்டிருந்தார். அருகில் யுவகிருஷ்ணா நின்றுகொண்டிருந்தார்.

Excuse me Ragavan... நீண்ட நாட்களுக்கு முன்பு 'காதுகள்' நாவல் பற்றி
கட்டுரை எழுதி இருக்கீங்க... இப்போ அந்தப் புத்தகம் எந்த பதிப்பகத்தில் கிடைக்கிறது என்று சொல்ல முடியுமா?

குமிடிப் பூண்டி இல்ல நீங்க... உங்களோட ஈமெயிலை இரவு 1 மணிக்குப் பார்த்தேன். அதனால தான் Reply பண்ண முடியலை. "இப்போ எங்க கிடைக்கும்...?" என்று
யோசித்துக் கொண்டே விக்கு விநாயகராம் மாதிரி அவரோட உச்சி மண்டைல ஒரு தட்டுத்தட்டி நெத்திய தடவிக்கிட்டாரு. ஒரு யோசனையும் வராததால பக்கத்தில் நின்ற யுவ கிருஷ்ணாவிடம் "நீ ஏன்யா சும்மா நிக்கிற ஏதாவது பதில் சொல்லேன்...!" என்று கூறினார். அவருக்கும் தெரியாததால் "என்னிடம் ஒரு Copy இருக்கு... எங்கயும் கிடைக்கலன்னா வந்து வாங்கிக்கோங்க..." என்ற சலுகையை வழங்கினார்.

"ஐயோ ராகவன் நீங்க தப்பு பண்றீங்க. உங்களோட பரிசு பெற்ற நாவல் (அலகிலா விளையாட்டு) இலக்கிய பீடத்தில் வெளிவந்த போது நூலகருக்குத் தெரியாமல் திருடியவன் நான். என்ன நம்பி உங்களோட புத்தகத்தைக் கொடுக்கறதா சொல்றீங்களேன்னு" மனதிற்குள் நினைத்துக் கொண்டேன். நிறைய பேர் 'பா. ரா' அவர்களை அரசியல் பற்றி மட்டுமே எழுதுபவர் என்று நினைத்துக் கொண்டிருக்கின்றனர். அவருடைய நாவலை வாசித்தால் உங்களுடைய எண்ணங்கள் சுக்கு நூறாக உடைந்துவிடும். கிழக்கில் அவருடைய "ரெண்டு, குதிரைகளின் கதை, மெல்லினம்" போன்ற புத்தகங்கள் கிடைக்கின்றன.

மேலதிக விவரங்களுக்கு விக்கிபீடியாவில் பார்க்கவும்: பா ராகவன்

அவருடைய எழுத்தில் அவருக்கு மிகவும் பிடித்த படைப்பு 'அலை உறங்கும் கடல்' என்று எங்கோ படித்ததாக ஞாபகம்.
தமிழினி பதிப்பகத்தில் அந்தப் புத்தகம் கிடைக்குமென்று நினைக்கிறேன்.

நானும் 'டாலர் தேசம், நிலமெல்லாம் ரத்தம்' போன்ற புத்தகங்களைப் படித்திருக்கிறேன். இருந்தாலும் ஒரு கதாசிரியராகத் தான் பா.ரா என்னை வெகுவாகக் கவர்கிறார். அதனாலேயே அவரைப் பார்க்கும் போதெல்லாம் "நீங்க நேரம் எடுத்து கதையோ, நாவலோ எழுதலாமே?" என்ற கோரிக்கையை வைத்துக்கொண்டிருக்கிறேன்.

எங்கு பார்த்தாலும்
இந்த நச்சரிப்பு தொடர்வதால் என்றாவது ஒரு நாள் அவரோட பீச்சாங்கையால ஓங்கி ஒரு போடு போடப் போறாரு. அதுவரைக்கும் நானும் அடங்கப் போறதில்லை. இதற்கு மேல் அவரிடம் அடிவாங்கிவிட்டு அதைப் பற்றி எழுதுகிறேன்.

பரிசல் பதிப்பகத்தில் பதிவர் நர்சிம் எழுதிய 'அய்யனார் கம்மா' வாங்குவதற்காகச் சென்றிருந்தேன். "எதற்காக எல்லோரும் அகநாழிகை பதிப்பகத்திலிருந்து இந்தப் புத்தகத்தையே கேட்கிறீர்கள்?" என்ற தொனியில் கேள்வி கேட்டார். "மற்றவர்களைப் பற்றி எனக்குத் தெரியாது, என்னுடைய அளவில் கவிதை வாசிப்பது சிரமம். ஆகவே சிறுகதைத் தொகுப்பை வாங்குகிறேன்" என்றவாறு பதில் கூறினேன். கேள்வி கேட்டவரைக் காட்டிலும் அவருக்குப் பக்கத்தில் இருந்தவருக்கு குரோதம் வந்துவிட்டது. கோவப்பட்டவர் கவிஞர் என்பது எனக்கு எப்படித் தெரியும். ஒருவழியாக வழிந்து சமாளித்துவிட்டு அங்கிருந்து கிளம்பினேன்.

வம்சி பதிப்பகத்திற்குச் சென்று எழுத்தாளர் மாதவராஜ் தொகுத்த பதிவர்களின் புத்தகங்களை காணச் சென்றேன். எனக்குத் தெரிந்த பதிவர்களான முரளி, சேரல், சாரதா, சையது, பாலமுருகன், கார்த்திகைப் பாண்டியன், நிலா ரசிகன், உழவன், ரிஷான், யாத்ரா, பொன்.வாசுதேவன்... இன்னும் பலரது பெயர்கள் அந்தப் புத்தகத்தில் இருப்பது கண்டு மகிழ்ச்சியாக இருந்தது. தெரிந்தவர்களின் வரிசை நீண்டுகொண்டே போகிறது. வம்சியிலிருந்து பாவா செல்லதுரையின் புத்தகமும், குழந்தைகள் சம்மந்தமான சினிமா புத்தகங்களையும் எனக்காக வாங்கிக்கொண்டு அன்றைய பொழுதை கழித்துவிட்டு வீடு திரும்பினேன்.

பின் குறிப்பு: பா.ராகவனின் இந்தப் (கலைஞர், கண்காட்சி, கிழக்கு – ஆரம்பம், அமர்க்களம்!) பதிவை படித்துவிட்டு மொழி தெரியாதவருக்கு தப்பான வழியைக் காட்டிவிட்டோமே என்று குற்ற உணர்வாகப் போய்விட்டது. தப்பான வழியைக் காட்டுகிறவர்களுக்கு கருடபுராணத்தில் என்ன தண்டனையோ தெரியலையே!

9 comments:

butterfly Surya said...

அருமையான விவரிப்பு..

பார்க்க இயலாமல் போனது வருத்தமே.

மீண்டும் இந்த வாரத்தில் ஒரு நாள் விசிட் அடிப்பேன்.

வாசுகி said...

நீங்கள் தான் அடிக்கடி நிரந்தர கண்காட்சி சென்று புத்தகம் வாங்குபவராச்சே.
வாங்கிய புத்தகங்களை வாசித்துவிட்டு எழுதுங்கள்.


அ.முவின் புத்தகம் எதுவும் புதிதாக வரவில்லை என்பதில் எனக்கு கவலை.

Karthik said...

நல்ல பதிவு.. நெக்ஸ்ட் வீக் என்ட் கண்டிப்பா வரேன்.. :)

rvelkannan said...

நான் சொல்லவேண்டியதை அப்படியே சொல்லியிருக்கிறார் நண்பர் சூர்யா
அவருக்கும் உங்களின் பகிர்விர்க்கும் நன்றி

RAGUNATHAN said...

ஒரு கதை போல விவரித்துள்ளீர்கள் பிரபு. மிக அருமை. கதையும் எழுதுங்கள்..

ஆதவா said...

ஒரு மனிதர் இத்தனை புத்தகம் வாங்குவாரா?? என்னை நான் காண வெட்கப்படுகிறேன். புத்தகக் கண்காட்சியினை, இதுவரையிலும் கண்காட்சியாகவே நினைத்து வந்திருக்கிறேன். ஓரிரு புத்தகங்கள் வாங்குவதோடு சரி.. உங்களுக்காகவே எங்கள் ஊரில் கண்காட்சி நிகழ்ந்தால் குறைந்தது பத்து புத்தகங்களேனும் வாங்கவேண்டும்.. உங்கள் பதிவைப் படித்ததில் மகிழ்ச்சி.

அன்புடன்
ஆதவா

Unknown said...

@ பட்டர்ஃபிளை சூர்யா
நிச்சயமா சந்திக்கலாம்... உங்களுடைய புத்தகம் இந்த கண்காட்சியில் வந்துவிடும் என்று நினைத்தேன். அடுத்த முறை என்னுடைய லிஸ்ட்டில் உங்களுடைய புத்தகமும் இருக்கும்...

@ வாசுகி
வருத்தமே தேவையில்லை... அ.முவின் அமெரிக்கக்காரி என்ற புத்தகம் காலச்சுவடில் வந்துள்ளது... சிறுகதைத் தொகுப்பு.

@ கார்த்திக்
கண்டிப்பாக மீட் பண்ணலாம்..

@ வேல்கண்ணன்
பின்னூட்டத்திற்கு நன்றி.

@ ரகுநாதன்
என்னுடைய ஆசையும் சிறுகதைதான்... கண்டிப்பாக முயற்சி செய்யலாம்.

@ ஆதவா
வருத்தமே தேவையில்லை... எப்பொழுது வேண்டுமானாலும் படித்துக் கொள்ளலாம். உங்களுக்கு நிறைய ஆண்டுகள் இருக்கிறது ஆதவா. நீங்கள் இப்பொழுதெல்லாம் பதிவில் எழுதுவதில்லையே...! எழுத்து உங்களுக்கு நன்றாக வருகிறது. விட்டுவிடாதீர்கள்...
உங்களுடைய வேலையெல்லாம் எப்படி போகிறது?

priyamudanprabu said...

நானும் 'டாலர் தேசம், நிலமெல்லாம் ரத்தம்' போன்ற புத்தகங்களைப் படித்திருக்கிறேன். இருந்தாலும் ஒரு கதாசிரியராகத் தான் பா.ரா என்னை வெகுவாகக் கவர்கிறார்.
////

ஆமாங்க எனக்கு அப்படித்தான் தோனுச்சு

அவர் அரசியல் பற்றி எழுதினாலும் ஏதோ பட புத்தகம் போல இல்லமல் சுவாரஸ்யமாக எழுதுவதில் கில்லாடி

priyamudanprabu said...

எதோ குறைவான புத்தகம் வாங்குவதாக சொன்னீர்கள்

இம்புட்டு வாங்கிருக்கீங்அ??

இதுதான் கம்மியா??????
ம்ம்ம் நானெல்லாம் 10 புத்தகம் வாங்கீட்டு மாசகணக்கா படிச்சுகிட்டு இருக்கேன்