Tuesday, September 7, 2010

மௌனத்தின் குரல் - வாஸந்தி

சாப்பிட அடம்பிடிக்கும் குழந்தைக்கு அன்னையானவள் உணவைத் திணிப்பது போல வாழ்க்கை நமக்கான அனுபவங்களை வலுக்கட்டாயமாக திணித்துவிட்டு மின்னலென மறைகிறது. ஊட்டிவிடும் எல்லா உணவுகளையும் குழந்தை உண்டு ஜீரணிப்பதில்லை. அழுது ஆர்பாட்டம் செய்கிறது, பிஞ்சுக் கைகளால் தட்டி விடுகிறது, வாயிலிருந்து துப்புகிறது, இன்னும் பல வகையில் சிதறச் செய்கிறது. சாப்பிட மறுக்கும் அதே குழந்தை எறும்புகளைக் காட்டிலும் சிறிய துரும்பினை எப்படித்தான் அடையாளம் காணுமோ தெரியவில்லை. இறைந்து கிடக்கும் துணுக்குகளில் ஒன்றை எடுத்து ஏமாந்தால் வாயில் வைத்துக் கொண்டு கவனம் தவறினால் விழுங்கிவிடும்.

இயந்திர கதியில் ஓடும் நாமும் அதுபோலவே வாழ்க்கையின் அனுபவங்களைச் சிதறச் செய்கிறோம். யாருமற்ற தனிமையில் இருக்கும் பொழுது சிதறிக் கிடக்கும் அனுபவக் குப்பைகளைக் கிளறிப் பார்த்தால், காலமாற்றத்தால் தூக்கிப் போட்ட கனவுகளும், இழந்துவிட்ட உண்மையான நம்முடைய முகங்களும், இழந்துவிட்ட வாய்ப்புகளும், வலிகளும், வேதனைகளும், காதலும், தோல்வியும், சந்தோஷங்களும் இருக்கும்.

நேர்கோட்டில் செல்லும் வாழ்க்கை யாருக்குமே சாத்தியமில்லை. கல்யாணத்திற்கு முன், கல்யாணத்திற்குப் பின் என்று உலகத்திலுள்ள 97 சதவிகித மனிதர்களுக்கு இரட்டை வாழ்க்கைதான் நிரந்தரம். அதிலும் கல்யாணத்திற்குப் பிறகான வாழ்க்கையில் ஆண்களை விட பெண்களுக்கே யதார்த்த சங்கடங்கள் அதிகம். பிறந்த வீட்டில் பூ மாதிரி வளர்க்கப்பட்டு புகுந்த வீட்டிற்கு அனுப்பப்படும் பொழுது, உறவின் முறை பெரியவர்களால் மணப் பெண்ணிற்குக் கொடுக்கப்படும் ஆலோசனைகளில் முக்கியமான ஒன்று இருக்கிறது. "போற இடத்துல எல்லோரையும் அனுசரிச்சி பக்குவமா நடந்துக்கோ" என்பதுதான் அது. எந்த ஓர் ஆணுக்கும் இதுபோல சொல்லப்படுவதில்லை. போலவே பெண்களுக்கு மட்டுமே சொல்லப்படுகிறது. அவர்களும் மெளனமாக ஏற்றுக் கொள்கிறார்கள்.விதைக்கப்பட்டு, செழிப்பாக வளர்க்கப்பட்ட இடத்தின் வேரறுத்துக் கொண்டு ஒரு புதிய இடத்தில் தன்னை பதியம் செய்துகொள்ளும் பெண்களின் மனநிலை ஓர் ஆணாக என்னால் புரிந்து கொள்ள முடியாத ஒன்று.

எப்பொழுதாவது பெப்சி உங்கள் ச்சாயிஸ், நீங்கள் கேட்டவை, மற்றும் சில ரியாலிட்டி நிகழ்ச்சிகளை பார்க்கும் பொழுது மனைவியாக வரும் சிலரிடம் "நீங்கள் என்ன செய்கிறீர்கள்?" என்று கேள்வி கேட்பார்கள். அவளைச் சுற்றித் தான் அந்தக் குடும்பமே இருக்கிறது என்ற பெருமிதமாகக் கூட இருக்கலாம். நான் 'house wife'-ஆக இருக்கிறேன் என்று துடிப்புடன் பதில் வரும். அந்தப் பெருமிதம் அவளுக்கு எதுவரை துணை நிற்கும் என்று தெரியவில்லை. என்றாவது ஒருநாள் தன்னுடைய வாழ்க்கையை அவள் திரும்பிப் பார்க்கக் கூடும். தான் யார் என்ற கேள்வியை மனசாட்சி எழுப்பக் கூடும். 'நல்ல மனைவியாக, மருமகளாக, குழந்தைகளுக்குத் தாயாக' என்று குடும்பத்திற்காக அணிந்துகொண்ட முகமூடியை அவள் கழட்டித் தானே ஆகவேண்டும். இந்தக் கதையில் வரும் ஜெயா-வும் அப்படிப்பட்டவள் தான். அவளை மையமாக வைத்து நகரும் நாவலில், அவளே நம் விரல் பிடித்து பெண்களின் அக உலகிற்கு அழைத்துச் செல்கிறாள்.
சாகித்ய அகாடமி விருது பெற்ற 'That long silence' என்ற சசி தேஷ்பாண்டே எழுதிய ஆங்கில நாவலின் தமிழாக்கம். மொழி பெயர்ப்பு என்றே சொல்ல முடியாத அளவிற்கு நேர்த்தியாக தமிழாக்கம் செய்திருக்கிறார் எழுத்தாளர் வாஸந்தி. நடுத்தர பிராமண குடும்பத்தில் நடக்கக் கூடிய கதைக்களம். எல்லா தந்தைப் போலவே ஜெயாவை பாசமுடன் வளர்க்கிறார் அவளுடைய தந்தை. எதிர்பாராத விதமாக அவர் சிவலோகப் பதவியை அடையவும் ஜெயாவின் குடும்பம் உறவினர்களின் வீட்டில் வாழ வேண்டிய சூழல் ஏற்படுகிறது. கூட்டுக் குடும்பத்தில் வளர்ந்து மோகன் என்பவனுக்கு வாழ்க்கைத் துணையாகிறாள். ராகுல், ரதி என்று இரண்டு குழந்தைகள் பிறக்கிறது. கணவனுக்காகவும், குழந்தைகளுக்காகவும் மட்டுமே வாழ்கிறாள். நேரம் கிடைக்கும் பொழுது பத்திரிகைகளுக்கு எழுதுகிறாள். ஒரு நிகழ்விற்குப் பிறகு எழுதுவதையும் நிறுத்தி விடுகிறாள். மகிழ்ச்சியுடன் சென்று கொண்டிருந்த அவர்களுடைய வாழ்க்கையில் ஒரு சிக்கல் ஏற்படுகிறது. மோகன் அவனுடைய வேலையில் தவறு செய்துவிடுகிறான். பிரச்னையை சரி செய்யவில்லை என்றால் சிறைக்குச் செல்ல வேண்டிய சூழல். குழந்தைகளை சுற்றுலாவிற்கு அனுப்பிவிட்டு, குழப்பத்துடன் அவர்களுக்கு சொந்தமான வேறொரு இடத்தில் தனிமையாக வசிக்கிறார்கள். மோகனின் அருகாமை அவளுடைய அகம் சார்ந்த சிக்கல்களையும், சிடுக்குகளையும் ஏற்படுத்துகிறது.

"ஒரு குடும்பத் தலைவனாக உங்களுக்காகத்தான் நான் எல்லாம் செய்தேன்" என்பது மோகனின் வாதம். இந்த இடத்தில் ஜெயா வாயடைத்து நிற்கிறாள். மோகனிடம் நடத்த முடியாத வாதத்தை அவள் அகம் சார்ந்தும், தனது இழந்து விட்ட உறவுகள் சார்ந்தும், வாழ்க்கை சார்ந்தும் எழுப்புகிறாள்.
பாதுகாப்பில்லாத வாழ்க்கையை உணர்கிறாள்.வாழ்வின் யதார்த்தம் நம்மை அசைத்துப் பார்க்கும் பொழுதும், நிர்மூலமாக்கும் பொழுதும் மனம் பின்னோக்கிச் சென்று இறந்த காலத்தின் சுழியில் சிக்கிக் கொள்கிறது. புதையுண்ட நினைவுகளின் வேர்களை வெறுமையுடன் மனம் தேடிச் செல்கிறது. தற்போதைய நிலைக்குக் காரணமானவர்களின் ஆவியை விரட்டிச் சென்று கேள்வி கேட்கிறது. நம்முடைய சிறுவயது மனசாட்சியும் அந்த ஆவிகளில் ஒன்றே. இறந்தவர்களுடன் இவள் நடத்தக் கூடிய உரையாடலும் அப்படிப்பட்டதே. ஜெயாவின் நோக்கம் அனாவசியமான கேள்விகளோ, உரையாடல்களோ, புலம்பல்களோ அல்ல. அவள் தொலைத்துவிட்ட முகத்தைத் தேடுகிறாள். ஒரு நதியோ அல்லது ஆறோ எங்கு வேண்டுமானாலும் உற்பத்தியாகலாம். கடலுடன் சேர்ந்த பிறகு அந்த நீர் தன்னுடைய முகத்தை இழக்கிறது. சுவையையும் தன்மையையும் மாற்றிக் கொள்கிறது. ஓடும் நீரின் 'சல சல' ஒலிகளை கடற்கரையில் நின்று ஒருபோதும் கேட்கமுடிவதில்லை. அலைகளின் ஓசை அவற்றை விழுங்கி மௌனமே அவற்றின் குறியீடாகிறது. பெண்களின் வாழ்க்கையும் அப்படித்தானோ என்னவோ!.

நீரின்றி, ஆகாரமின்றி பெரிய பாறைகளுக்கு இடையில் வாழும் தேரையைப் போல தன்னுடைய ஆளுமையையும், விருப்பங்களையும் துறந்துவிட்டு கணவனுக்காகவும், குழந்தைகளுக்காகவும் வாழும் பெண்ணின் உளவியல் சமந்தமான அற்புதமான நாவல். நடுத்தர குடும்பத்தில் அடைபட்ட தலைவிகளின் குறியீடாக இருக்கிறது 'மௌனத்தின் குரல்'.

முதிர்ச்சி பெறாத வயதில், பொன்னேரி நூலகத்திலிருந்து பத்து வருடங்களுக்கு முன்பு இந்த புத்தகத்தைப் படித்த பொழுது நான் கேட்ட ஜெயாவின் குரல் வேறு மாதிரியாக இருந்தது. அப்பொழுது ஜெயாவை எனக்கு யாரென்றே தெரியாது. அவள் சொல்ல வந்த விஷயம் எனக்கு அன்னியமாக இருந்தது. பல ஆண்டுகள் கழித்து சமீபத்தில் மீள் வாசிப்பு செய்த பொழுது ஜெயா எனது தோழியாகிவிட்டாள். அவளின் குரல் என்னை ஏதோ செய்தது. அடுத்த பத்து வருடத்தில் அவள் எனக்கு சொந்தமாகி குற்ற உணர்வையும் ஏற்படுத்தலாம். அப்பொழுது அவளின் குரலை நான் எப்படி எடுத்துக் கொள்ளப் போகிறோனோ தெரியவில்லை.

இந்திய ஆங்கில நாவல் இலக்கியத்தில் இந்த படைப்பு தனி அடையாளத்துடன் பார்க்கப்படுகிறது. தீவிர இலக்கிய வாசகர்கள் தவறவிடாமல் படிக்க வேண்டிய
அரிய படைப்பு. எழுத்தில் ஆர்வமுள்ள பெண்களுக்கு நான் தனிப்பட்ட முறையில் பரிந்துரைக்கும் புத்தகம். அவசியம் படித்துப் பாருங்கள்.

வெளியீடு: சாகித்ய அகாடமி பதிப்பகம்
ஆசிரியர்: சசி தேஷ்பாண்டே
தமிழில்: வாஸந்தி
விலை: 85 ரூபாய்

4 comments:

விக்னேஷ்வரி said...

வாங்கி அனுப்பிடுங்க கிருஷ்ணா. :)

thamizhparavai said...

சுவாரஸ்யமான புத்தக அறிமுகம், சிற்சில கருத்துக்களில் உடன்பாடில்லை எனினும் கூட. நன்றி நண்பரே...

Joe said...

அருமையான இடுகை, கிருஷ்ணா!

Anonymous said...

\\நீரின்றி, ஆகாரமின்றி பெரிய பாறைகளுக்கு இடையில் வாழும் தேரையைப் போல தன்னுடைய ஆளுமையையும், விருப்பங்களையும் துறந்துவிட்டு கணவனுக்காகவும், குழந்தைகளுக்காகவும் வாழும் பெண்ணின் உளவியல் சமந்தமான அற்புதமான நாவல். நடுத்தர குடும்பத்தில் அடைபட்ட தலைவிகளின் குறியீடாக இருக்கிறது 'மௌனத்தின் குரல்'.//
வாஸந்தியின் பெண் மாந்தர்கள் ஆளுமை நிறைந்தவர்களாகவும் ,அவர் கதைகள் முழுவதிலும் மனதோடு பேசுபவர்களாகவுமே படைக்கப்பட்டு இருப்பார்கள்.அவருடைய மூங்கில் பூக்கள் ,"கூடேவ்விட".என்று மலையாளத்தில் படமானது.