என் ஜன்னலுக்கு வெளியே... : மாலன் (Rs.200) வெளியீடு: கிழக்கு பதிப்பகம்
பத்திரிகையாளர் மாலன் எழுதி கிழக்கு பதிப்பகத்தால் வெளியிடப்பட்டுள்ள "என் ஜன்னலுக்கு வெளியே...", 2005 முதல் 2008 வரையிலான தமிழக அரசியல், தமிழ்ச் சமூகம், தமிழ் இலக்கியம் மற்றும் தமிழக ஆளுமைகளின் இழப்பு என பல்வேறு தளங்களை உள்ளடக்கிய அவரது பார்வையில் அமைந்த கட்டுரைகளின் தொகுப்பு. இவையனைத்தும் தினமணி, புதிய பார்வை, சிங்கப்பூர் தமிழ் முரசு, உயிர்மை, இந்தியா டுடே, அவரது வலைப்பதிவு போன்ற இணைய இதழ்களில் எழுதிய பல்வேறு கால கட்டங்களில் வெளிவந்த தேர்ந்தெடுக்கப்பட்ட கட்டுரைகளின் தொகுப்பு.
நூலின் ஐந்து பெரும் பிரிவாக அரசியல், சமூகம், தமிழ், இலக்கியம் மற்றும் இரங்கல் என பிரிக்கப் பட்டுள்ளது. எனவே கால வரிசை சீராக இல்லாமல் மாறி மாறி வருகிறது. ஆனால் அதை குறை என்றும் சொல்லுவதற்கில்லை.
1). அரசியல்:
ஆரம்ப காலங்களில் சித்தாந்த அரசியல் கொள்கைகளைக் கொண்ட கட்சிகள் தற்போது நீர்த்து; சுயத்தை இழந்து முரண்பட்ட கட்சிகளுடன் கூட்டணி வைத்துக்கொண்டு; தேர்தலின் வெற்றியை மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு செயல்படுவதை தனது நீண்ட கால பத்திரிகை துறை அனுபவம் மூலம் விமர்சித்து கவனம் செலுத்தப் பட வேண்டிய பல விஷயங்களை நம்முடன் பகிர்ந்து கொள்கிறார்.
தமிழகத்தின் அரசியல் சூழலில் வாரிசு அரசியல் ஏற்படுத்திய தாக்கத்தை, கருணாநிதி மற்றும் மாறனின் உறவிலிருந்து ஸ்டாலின், தயாநிதி மாறன், அழகிரி, கனி மொழி ஆகியோரின் அரசியல் பிரவேசம் வரை ஆராய்ந்து எழுதியுள்ளார். அதற்கான போதிய நேரமும் எடுத்துக்கொள்கிறார். ஆரம்பத்தில் வாரிசு அரசியலை எதிர்த்தவர்களே இன்று தனது வாரிசுகளை சட்ட மன்றத்திற்கும், பாராளுமன்றத்திற்கும், நாடாளுமன்றத்திற்கும் அனுப்பும் கேலிக் கூத்தை, முரணான செயலை நயமாக எடுத்துச்சொல்கிறார்.
இதைத் தவிர தமிழகத்தின் முக்கியப் பிரச்சனைகளான நதி நீர்ப் பிரச்சனை, ராமர் பால பிரச்சனை, தமிழீழப் பிரச்சனை என முக்கியமான பிரச்சனைகளை உணர்ச்சி வசப்படாமல் அலசியுள்ளார்.
முக்கியமாக தமிழீழ பிரச்சனையில் (தமிழர்களுக்கான அநீதி என) உணர்ச்சி வசப்படாமல் அண்டை நாட்டின் பிரச்சனையாக, நிதானமாக தன்னுடைய கருத்தைச் சொல்லிச் செல்கிறார்.
ஆட்சியில் நிரந்தரமாக இருக்க தேவையான வியூகங்களை மட்டும் வகுக்கும் ஆட்சியாளர்கள், தொலைநோக்கு பார்வையுடன் நீண்ட காலத்திற்கு பயன் தரக்கூடிய நீர் வளத்தைப் பெருக்குதல், நதிநீர் மீதான உரிமையை நிலை நாட்டுதல், சுற்றுச்சூழலைப் பாதுகாத்தல், கட்டுமானப் பணிகளை அதிகரித்தல், விலைவாசியை கட்டுக்குள் வைத்திருத்தல், சிற்றூர்களில் வேலை வாய்ப்புகளை உருவாக்குதல் போன்ற துறைகளில் கவனம் செலுத்தலாமென மாலன் பரிந்துரைக்கிறார்.
2). சமூகம்
வேட்டை சமூகம் - வேளாண் சமூகம் - நிலவுடமைச் சமூகம் என்ற பரிணாம வளர்ச்சி ஏற்பட்டு, சொத்து என்ற கருத்தாக்கம் வலுப்பட்ட போது அரசியல் தொடங்கியது" என முழங்கும் மாலன் அரசியல் சார்ந்த சமூகத்தின் பிரச்சனைகளை இந்தக் கட்டுரைகளின் மூலம் பகிர்ந்து கொள்கிறார்.
சமீப காலங்களில் இந்தியா எதிர் கொண்ட தீவிரவாதத் தாக்குதல், இயற்கை இடர் பாடுகளான நில நடுக்கம், சுனாமி, மழையின்மை, காலம் தவறிய மழை அதனால் மக்கள் படும் துயரங்கள், அரசு மீட்புப் பணிகளில் காட்டும் உடனடி நடவடிக்கை மற்றும் சுணக்கம் ஆகியவறை கண்டிக்க வேண்டிய இடத்தில் கண்டித்தும், பாராட்ட வேண்டிய இடத்தில் பாராட்டியும் எழுதியுள்ளார்.
சிறுபான்மையினர் மற்றும் தாழ்த்தப் பட்டவர்களுக்கான இட ஒதுக்கீட்டு முறையில் தற்போதுள்ள குறைகளையும் அதை நிவர்த்தி செய்வதற்கான அவருடைய கருத்துக்களையும் சொல்கிறார். அரசு மற்றும் தனியார் கல்லூரிகளுடனான இட ஒதுக்கீட்டு முறையிலுள்ள பிரச்சனைகளையும் மறக்காமல் அசை போடுகிறார்.
இந்தியா சுதந்திரம் பெற்றதிலிருந்து சந்தித்து வரும் முக்கியமான பிரச்சனை பெண் சிசுக் கொலை. கடந்த பத்தாண்டுகளில் ஒரு கோடி பெண் சிசுக்கள் கொல்லப்பட்டிருக்கிறார்கள் என்று இவருடைய கட்டுரையைப் படித்து அதிர்ந்து போனேன். அதுவும் நடுத்தர மற்றும் பணம் படைத்த குடும்பங்களில் தான் இது போன்ற சம்பவங்கள் அதிகம் நடக்கிறது என்பது என்னை மேலும் அதிர வைத்தது.
வெளிநாட்டு வாழ் இந்திய வம்சாவளி யாராவது சாதனை படைத்தால், அதனை இந்தியாவின் சாதனையாக ஊடகங்கள் வர்ணிப்பதை கடுமையாக சாடுகிறார். ஜிண்டால், சுனிதா வில்லியம்ஸ், ஃபிஜியில் மகேந்திர சொளத்ரி, சிங்கப்பூரில் நாதன் ஆகியோர் பெற்ற முக்கியத்துவத்தைக் காரணம் காட்டி இந்தயா வல்லரசாகும் என்றும், இந்தியர்களின் சாதனை என்றும் முழங்குவதை ஊடகங்களின் தவறான பிரச்சாரம் என்று சாடுகிறார்.
கல்பனா சாவ்லா இந்தியர் என்பதால் பெருமை கொள்வதில் ஞாயம் இருக்கிறது. மற்றவர்களின் சாதனைகளும் பாராட்டப் பட வேண்டியவைதான். ஆனால் அவர்களை இந்தியர்கள் என்று சொல்லி குதூகலிப்பதைத் தவிர்க்க வேண்டும் என்கிறார்.
கிழக்கிந்தியக் கம்பெனியை நிர்வகிக்க வந்த பிரான்சிஸ் டே வணிக துறைமுகத்திற்கு உகந்த இடமாக பழவேர்காட்டைத்(Pulicat) தான் தேர்ந்தெடுத்தாராம். சாந்தோமிலிருந்த ஒரு பெண்ணின் சகவாசத்தினால் தனது முடிவை மாற்றி சாந்தோம் பக்கத்திலுள்ள சிறிய இடத்தைத் தேர்ந்தெடுத்தாராம். ஆகஸ்ட் 22 1639-ல் அவரது ஆலோசனைப் படி நகரம் தோற்றுவிக்கப் பட்டது. அது ஆரம்பத்தில் தண்ணியில்லாக்காடாக இருந்துள்ளது. அதனாலேயே அவர் வேலையிலிருந்து நீங்கப் பட்டாரம். அவர் அன்று தேர்ந்தெடுத்த இடம் தான் நாம் இன்று வசிக்கும் சென்னை மாநகரம்.
இவருடைய கட்டுரைகளை படிப்பதற்கு முன்பு வரை இங்கிலாந்து, அமெரிக்க போன்ற மேற்கத்திய நாடுகள் தான் உலகின் மகிழ்ச்சியான நாடுகள் என்று நினைத்துக் கொண்டு இருந்தேன். ஆனால் மகிழ்ச்சி நிறைந்த தேசம் என்று vanuatu island -ஐ அறிமுகம் செய்கிறார். எனக்கு நினைவு தெரிந்து இது போல் ஒரு தேசத்தை நான் கேள்விபட்டதில்லை. vanuatu தீவினைப் பற்றி தெரிந்து கொள்ள www.vanuatutourism.com- இணைய தளத்திற்கு செல்லவும்.
3). இலக்கியம்
ஜீன் அரசநாயகம் (அடையாளங்களுக்கு அப்பால்...), அ. முத்துலிங்கம் (அங்கே இப்போ என்ன நேரம்?), கி.ரா வின் படைப்புகள்(கி.ரா 85 காலத்தை வென்ற கதை சொல்லி), முனைவர்.எம். எஸ். ஸ்ரீலக்ஷ்மி (சிங்கப்பூர் தமிழ் இலக்கியம் ஆழமும் அகலமும்), உ.வே.சா (காலச்சுவடிற்கு ஒரு கேள்வி), மணா(வரலாற்றின் வழித்தடங்கள்), நகைச்சுவை நடிகர் நாகேஷின் வாழ்க்கைப் புத்தகம்(வெற்றியின் முகம் அத்தனை அழகானதல்ல!) என அவருக்குப் பிடித்த முக்கியமான படைப்புகளையும், ஆளுமைகளையும் குறித்து எழுதியுள்ளார்.
குறிப்பு: அடைப்பிற்குள் இருக்கும் சுட்டிகளை அழுத்தி மாலனுடைய வலைப் பக்கத்தில் கட்டுரைகளைப் படிக்கவும்.
4). தமிழ்
தமிழ் மொழியின் அச்சுறு குறித்தும், அதனுடைய இணைய வளர்ச்சி குறித்தும் இங்கு அசை போடுகிறார். மேலும் வலைப்பூவின் மூலம் பெருகி வரும் தமிழ் பதிவர்களின் அதிகமான எண்ணிக்கையைக் கண்டு மகிழ்ச்சியடையும் இவர், அதனுடைய அடுத்த கட்ட வளர்ச்சியை அடைய மாணவர்களிடம் இது போன்ற தொழில் நுட்பத்தை எடுத்துச் செல்ல வேண்டும் என்று அறிவுறுத்துகிறார். அதற்கு அரசு ஆவன செய்ய வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கை வைக்கிறார்.
5). இரங்கல்
சுந்தர ராமசாமி, பாரதி(மனிதனுக்கு மரணமில்லை), ஆண்டான் பாலசிங்கம், EROS இரத்தின சபாபதி, விமரிசகர் ஏ.ஜே என்று அழைக்கப்படும் அலோசியஸ் ஜெயராஜ் கனகரட்னா, கவிஞர் சு. வில்வரத்தினம், பல அரசியல் புத்தகங்கள் தமிழில் வெளிவர காரணமாக இருந்த மூத்த படைப்பாளி, மொழி பெயர்ப்பாளர் சாமி நாத சர்மா, கதாசிரியர் தி.ஜா.ரா, சுஜாதா, சதாம், ஆதிமூலம், சிங்கப்பூர் தமிழ் முரசின் ஆசிரியராகப் பணியாற்றிய திருநாவுக்கரசு, லா.சா.ராமாமிருதம் ஆகியோரின் மறைவிற்கு மரியாதை செலுத்தும் விதமாக அவர்களைப் பற்றிய குறிப்புகளை நம்முடன் பகிர்ந்து கொள்கிறார்.
புத்தகத்தில் பொதிந்துள்ள செறிவான கருத்துக்கள் ஏராளம். அவை முழுவதையும் இங்கு பதிவிட இயலாது என்பதால் முழு புத்தகத்தையும் பற்றிய சிறு குறிப்பை முன்வைக்கிறேன்.
மாலனின் எளிமையான நடையில் சமீப கால அரசியலின் முக்கிய நிகழ்வுகளின் குறிப்புகளை அன்றாட இதழ்களில் படிக்கத் தவறவிட்டவர்களுக்கு இந்தப் புத்தகம் நல்லதொரு வாய்ப்பை மறுபடியும் அளிக்கிறது.
1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13
இந்தப் புத்தகத்திலுள்ள சில கட்டுரைகளைப் படிக்க மேலே கொடுக்கப்பட்டுள்ள எண்களை அழுத்தி மாலனின் வலைப் பக்கத்திற்குச் செல்லவும்.
6 comments:
ரொம்ப உபயகோமான பதிவுங்க..
இப்ப எல்லாம் படிக்கிறதே இல்ல..டைம் கிடைக்குது ஆனா வேற உதவாத வழியில் செலவு ஆகுது..
உங்க பதிவ பாக்குறப்ப நிறைய படிக்கனும்னு தோனுது..
கொடுத்து இருக்குற லிங்க்ஸ் எல்லாமே உங்களின் ஆர்வத்தை காட்டுகின்றன..
எனக்கு இன்னமோ நம்ம கையுல அந்த புத்தகத்த எடுத்து படிக்கிற திருப்தி வேற எந்த வாசிபிலையும் கிடைக்கிறது இல்ல..
மாறன் எப்பொழுதும் உணர்ச்சி வசப்படாம அழகான விஷயங்களை முன் நிறுத்துவார்..
உண்மைதான் வினோத். அவருடைய எளிய நடை எனக்கு மிகவும் பிடித்தது. ஆழ்ந்த படிப்பாளி என்பதால் சொல்ல வந்த விஷயத்தைப் பற்றிய அபாரத் தெளிவு அவரிடம் இருக்கிறது. எந்த ஒரு விஷயத்தையும் சுற்றி வளைக்காமல் நேரடியாக எடுத்துச் சொல்கிறார்.
அற்புதமான அறிமுகம்...
word verificationனை நீக்குங்கள். பின்னூட்டமிட வசதியாக இருக்கும்.
word verification -ஐ நீக்கிவிட்டேன். பின்னூட்டத்திற்கு நன்றி விக்னேஷ்.
மாலன் அரசியல் சார்பில்லாமல் எழுதிய நல்ல கட்டுரைகள்.
நல்ல பதிவு. சுட்டிகள் கொடுத்து நிறைய படிக்க உதவி விட்டீர்கள். தொடருங்கள்
ஊக்கத்திற்கு நன்றி அமுதா.
Post a Comment