மதில்கள்: வைக்கம் முகம்மது பஷீர்
விலை: 50 ரூபாய்
வெளியீடு: காலச்சுவடு பதிப்பகம்
எனது வாழ்க்கையில் மிகவும் சிறந்த காலம் எதுவென்றால் எனது பாட்டியின் வீட்டில் வளந்ததுதான்.
அங்கு இருக்கும் போதுதான் புத்தக வாசிப்பும், வேற்று மொழி படங்களைப் பார்க்கும் பழக்கமும் ஏற்பட்டது. முக்கியமாக தரமான மலையாள படங்களைப் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது.
அப்படி நான் பார்த்து வியந்த திரைப்படங்கள் ஏராளம். 'சர்கம், ஹிசைனஸ் அப்துல்லா, மணிச்சித்திரத்தாள்' என்று சொல்லிக்கொண்டே போகலாம். அந்த அனுபவமே குறிப்பிட்ட சில மலையாள திரைப்படங்களின் விமர்சனங்களை படிக்கத் தூண்டியது. அவற்றில் 'மதில்களும்' ஒன்று.
'மதில்கள்' திரை விமரிசனத்தைப் படித்ததிலிருந்தே அதன் மொழிபெயர்ப்பு புத்தகமாக கிடைக்குமா என்று தேடிக்கொண்டு இருந்தேன். அதன்படி சென்ற வாரம் காலச்சுவடு பதிப்பகத்திலிருந்து அந்தப் புத்தகத்தை வாங்கினேன். சுகுமாரன் மொழிபெயர்த்துள்ளார்.
1964 -ஆம் ஆண்டு 'கௌமுதி' வாரப் பத்திரிகையின் ஓணச்சிறப்பிதழில் தான் மதில்கள் முதன் முறையாக வெளிவந்துள்ளது. வார இதழின் ஆசிரியர் பஷீரின் கதையைத் தழுவி எடுக்கப்பட்ட 'பார்கவி நிலையம்' திரைப்படத்தின் வசனத்தைத்தான் வெளியிடுவதாக இருந்தாராம். அதை இதழிலும் வெளியிட்டிருக்கிறார்.
பஷீரின் கதை என்பதால் வாசகர்கள் ஆவலுடன் இருந்துள்ளனர். அந்த திரைப்பட வசனத்தை வெளியிடுவதில் பஷீருக்கு சில சிக்கல்கள். எனவே வேறு கதை எழுத வேண்டிய சூழ்நிலை. அப்படிப்பட்ட அவசர நிலையில் எழுதியதுதான் மதில்கள் கதை. அந்த அவசர சூழ்நிலையில் பஷீருடன் இருந்த 'பழவிள ரமேசன்' மதில்கள் கதை உருவாகிய விதத்தை 'மதில்கள் பணிமனை' என எழுதிய கட்டுரை புத்தகத்தில் இணைக்கப்பட்டுள்ளது.
ஆடூர் கோபாலகிருஷ்ணன் இயக்கிய 'மதில்கள்' திரைப்படம் தேசிய அளவில் விருது பெற்ற முக்கியமான படைப்பு. இதை திரைப்படமாக நான் பார்த்ததில்லை. விமர்சனமாக மட்டுமே படித்திருக்கிறேன். மதிலுகள் கதையை திரைப்படமாக எடுப்பதிலுள்ள சிக்கல்கலை அடூரார் தனது கட்டுரையில் விளக்கியுள்ளார். அந்தக் கட்டுரையும் இப்புத்தகத்தில் இணைக்கப்பட்டுள்ளது.
புரச்சிகரமாக பத்திரிகையில் எழுதியதால் சிறை செல்லும் ஒருவன் மதில்களுக்கு அப்பாலுள்ள பெண் கைதியின் மீது காதல் கொள்கிறான். அவளும் இவனைப் பார்க்காமலே காதல் கொள்கிறாள். இருவருக்கும் இடையிலிருக்கும் மதில் அவர்களுடைய காதலுக்கு சாட்சியாக இருக்கிறது. ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்ள மதிலே தடையாகவும் இருக்கிறது.
காதல் வளர்ந்து இருவரும் ஒருவரை ஒருவர் பார்க்க ஆவலுடன் இருக்கிறார்கள். குறிப்பிட்ட நாளில் சிறை மருத்துவமனையில் இருவரும் சந்திப்பதாக பேசிக்கொள்கிறார்கள். அந்த நாளுக்கு முன்பே காதலன் விடுதலை பெற்று கனத்த இதயத்துடன் சிறையை விட்டு வெளியில் செல்கிறான்.
ஒரே நேர்கோட்டில் செல்லும் கதையாக இருந்தாலும் பஷீரின் தேர்ந்த படைப்பாற்றலால் சுவாரஸ்யம் கூடுகிறது.
பிரவீன்குமார் எழுதிய மதில்கள் கட்டுரையைப் படிக்க கீழே அழுத்தவும்.
மதிலுகள் - வைக்கம் முகமது பஷீர்
இந்தக் கதையை சிறு கதையிலும் சேர்க்க முடியாமல், குறுநாவலிலும் சேர்க்க முடியாமல் திரிசங்கு சொர்க்கம் போல் தொங்கிக்கொண்டு இருந்தாலும், மலையாள இலக்கியத்தில் முக்கியமான படைப்பாக வைத்து இன்று வரை கொண்டாடப்படுகிறது.
4 comments:
கிருஷ்ணா படம் பாத்தே ஆகனும்போல இருக்கே! நல்லா இருக்கு உங்க விமர்சனம் புத்தகம் கிடைத்தால் படிக்கிறேன். படம் பற்றிய தகவல் கிடைத்தால் அனுப்பவும். சமீபத்தில் ஆதவன் தீட்ச்சன்யாவின் புத்தகம் படித்தேன் "இரவு வருவதால் சூரியன் இல்லாமல் போய் விடுவதில்லை" முடிந்தால் படியுங்கள்.
கண்டிப்பாக நீங்கள் குறிப்பிட்ட புத்தகத்தை வாங்கிப் படிக்கிறேன் முரளி.
புத்தகம் கிடைத்தால் படிக்கிறேன்
நவீன மலையாள இலக்கியத்தில் பஷீர் ஒரு ஜாம்பவான்.அவருடைய படைப்புகளின் வாசிப்பனுபவம் அலாதியானது. அவருடைய மொழிபெயர்ப்பு காலச்சுவடு பதிப்பகத்தில் கிடைக்கிறது. சில படைப்புகள் அச்சில் உள்ளதாக கேள்விப்பட்டேன்.
Post a Comment