உலகப் புகழ் பெற்ற மூக்கு: வைக்கம் முஹம்மது பஷீர் விலை: 240 ரூபாய்
வெளியீடு: காலச்சுவடு பதிப்பகம்
நூற்றாண்டுகால பழமை வாய்ந்த சென்னை-மத்திய சிறைச் சாலையை சென்னை மாநகராட்சி இடிக்க இருப்பதால் பொதுமக்கள் பார்வைக்காக இலவசமாக திறந்துவிட்டார்கள்.
மார்ச் 01-2009 அன்று நண்பர் முத்துவை அங்குவந்து சந்திப்பதாகச் சொல்லியிருந்தேன். முத்து அவனுடைய அறைத் தோழர்கள் இரண்டுபேரை உடன் அழைத்து வந்திருந்தான். அதில் வினோத் நிஸ்துல்யா என்றொரு மலையாளி இருந்தான். சிறிது நேரம் பேசியதில் அவனுக்கு பஷீரின் படைப்புகள் மீது தீராத பற்று இருப்பது தெரியவந்தது.
நீங்கள் பஷீரின் கதைகளை படித்திருக்கிறீர்களா என்று என்னிடம் கேட்டான். அவருடைய படைப்புகளின் மொழியாக்கத்தை பல வருடங்களாக தேடிக்கொண்டு இருக்கிறேன் ஆனால் கிடைக்கவில்லை என்று சொன்னேன். "கிடைத்தால் வாங்கிப் படிங்க மாமா அவருடைய எழுத்து நல்லா இருக்கும், தேர்ந்த கதை சொல்லி" என்று பரிந்துரை செய்தான்.
பின்நாளில் அவன் பஷீரின் மொத்த படைப்புகளையும் வாங்கப் போவதாகச் சொன்னான்.
பல வருடங்களுக்கு முன்பு "மதிலுகள்" திரைப்படத்தின் குறிப்புகளைப் படிக்க நேர்ந்தது. அது பஷீரின் சிறுகதைகளில் ஒன்று. அடூராரால் படமாக்கப்பட்டது. (நடிகர் மம்முட்டிக்கு முதல் தேசியவிருது வாங்கித்தந்த படம் இதுதான் என்று நினைக்கிறேன்). அதில் கதாசிரியரான பஷீரை சிலாகித்து எழுதியிருந்தார்கள். அதிலிருந்தே பஷீரின் படைப்புகள் தமிழில் கிடைக்காதா என்று தேடிக் கொண்டிருந்தேன். என்ன தேடியும் பஷீருடைய படைப்புகளின் தமிழாக்கம் கிடைக்கவில்லை.
நீண்ட தேடலுக்குப் பிறகு கிழக்கின் "காலம் முழுதும் கலை - வைக்கம் முகமது பஷீர்" என்ற புத்தகம் கிடைத்தது. அதுகூட அவருடைய வாழ்க்கை மற்றும் படைப்புலகம் பற்றி தெரிந்துகொள்ளத்தான் உதவியது. இருப்பினும் அவருடைய படைப்பின் மீதான வாசிப்பனுபவம் சூன்யமாகவே இருந்தது. பஷீரின் வாழ்க்கையனுபவம் அவருடைய படைப்புகளின் மீதான ஆர்வத்தை மேலும் தூண்டிவிட்டது.
சமீபத்தில் வேறொரு புத்தகத்தைத் தேடிக்கொண்டிருக்கும் போது "உலகப் புகழ்பெற்ற மூக்கு" புத்தகம் கிடைத்தது. காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்டுள்ளார்கள். 1940-களின் மத்தியிலிருந்து 1977 வரைலான காலகட்டங்களில் வெளிவந்த பஷீரின் சிறந்த படைப்புகளைத் தொகுத்து மொழி பெயர்த்திருக்கிறார்கள்.
புத்தகத்தின் முன்னுரையாக "M.T. வாசுதேவன் நாயர்" எழுதிய முன்னுரையே அழகான சிறுகதை போல் உள்ளது.
மேலும் ஜென்மதினம், ஐசுக்குட்டி, அம்மா, புனித ரோமம், நீல வெளிச்சம், சிரித்த மரப்பாச்சி, தங்கம், உலகப் புகழ் பெற்ற மூக்கு, பூமியின் வாரிசுதாரர்கள் போன்ற முக்கியமான சிறுகதைகளின் மொழிபெயர்ப்பை புத்தகத்தில் இணைத்திருக்கிறார்கள்.
பசி, இயலாமை, மூட நம்பிக்கை, ஹாஸ்யம், பயம் என பல தளங்களையும் தொட்டுச் சென்றுள்ளார்.
கல்லூரியில் "world renowned nose"என்ற சிறுகதையைப் படித்ததாக ஞாபகம். அதையே புத்தகத்தின் தலைப்பாகவும் வைத்திருக்கிறார்கள்.
பஷீரின் படைப்புகளில் சில (மொழிபெயர்ப்பு):
1. மதிலுகள்
2. இதயதேவி
3. உலகப் பிரசித்தி பெற்ற மூக்கு (புத்தகத்தில் உள்ளது)
4. தங்கம் (புத்தகத்தில் உள்ளது)
5. தம்பி
பஷீரின் கதைகள் யாவும் அவருடைய வாழ்க்கை அனுபவத்தை அடிப்படையாக வைத்து எழுதியாதால் மிக நெருக்கமாக உணர முடிகிறது. இவருடைய கடிதங்கள், கேள்விபதில்கள் மற்றும் நாவல்கள் தொடர்ந்து மொழியாக்கம் செய்யப்பட்டு வெளிவர இருப்பதாக நூலின் ஆசிரியர் குளிச்சல் மு.யூசப் கூறியுள்ளார்.
குறிப்பு: பஷீரின் மதிலுகள் காலச்சுவடில் கிடைக்கிறது. விலை:50 ரூபாய்
2 comments:
Thanks for the all your book reviews..
கார்த்திகேயன் உங்களுடைய வேடிக்கை வலைப்பக்கத்தில் சில கவிதைகளை படித்திருக்கிறேன். தொடர்ந்து எழுதுங்கள்.
மேலும் பின்னூட்டமிட்டதற்கு நன்றி.
Post a Comment