Friday, October 30, 2009

ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்

ஆசிரியர்: ஜெயகாந்தன்
வெளியீடு: காலச்சுவடு
விலை: ரூபாய் 250

காலச்சுவடின் 'கிளாசிக் வரிசை'யில் வெளிவந்துள்ள புத்தகங்கள் அனைத்தையும் படித்துவிட வேண்டும் என்ற ஆசையின் உந்துதலில் முதலில் படிக்க ஆரம்பித்தது 'ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்'.

"தனது நாவல்களில் தனக்கு மிகவும் பிடித்தமானது என்று ​ஜெயகாந்தனாலும் அவரது நாவல்களில் ஆகச் சிறப்பானது என்று இலக்கிய விமர்சகர்களாலும் குறிப்பிடப்படுவது ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம்" -என்ற புத்தகத்தின் பின்னட்டை வாசகம் ஆர்வத்தை மேலும் தூண்டியது.

நீண்ட நாட்களாக நான் படிக்க நினைத்தப் புத்தகம். ஆனால் தலைப்பில் 'ஓர் உலகம்' என்று தானே இருந்திருக்க வேண்டும். 'ஒரு உலகம்' எழுத்துப் பிழையாக இருக்குமோ என்று குழம்பியதுண்டு. ஜெயகாந்தன் முன்னுரையில் அதற்கு விளக்கம் கொடுத்திருக்கிறார். இருந்தாலும் கொஞ்சம் உறுத்தலாகவே இருக்கிறது.

மலையடிவாரத்தின் இயற்கை சூழலில், ஒரு கிராமத்துப் பாதையில் பயணிக்கும் லாரியில் இருந்து கதை ஆரம்பிக்கிறது. ஓட்டுநர் துரைக்கண்ணு, க்ளீனர் பாண்டு, ஆசிரியர் தேவராஜன் ஆகியோர் லாரியின் இயக்கத்தோடு நமக்கு அறிமுகமாகின்றனர்.

பட்டினத்து ஆசாமியான ஹென்றி அருகிலுள்ள சிற்றூரைத் தேடிக்கொண்டு செல்கிறான். இயற்கையின் அழகை அணு அணுவாக ரசித்தவாறே நடந்து செல்கிறான். லாரி வருவதைப் பார்த்து வண்டிக்கு வழிவிட்டு சாலையோரமாக விலகி நிற்கிறான். ஆனால் 'க்ளீனர் பாண்டு' வண்டியை நிறுத்தச் சொல்லி ஹென்றியை ஏற்றிக்கொள்கிறான். பேச்சினூடே ஹென்றி செல்ல வேண்டிய கிராமம் தேவராஜனின் ஊர் என்பது தெரியவருகிறது. அதிலிருந்தே தேவராஜனுக்கும், ஹென்றிக்கும் நட்பு மலர்கிறது.

ஹென்றியை அழைத்துச்சென்று தன்னுடைய கிராம வீட்டில் தங்க வைக்கிறான் தேவராஜன். பின்னர் ஹென்றியின் வளர்ப்புத் தந்தையும், தாயும் பற்றிய இறந்த காலத்தில் பயணித்து எதற்காக இந்த ஊருக்கு வருகிறான், அவன் வந்ததன் நோக்கம் நிறைவேறியதா என்பதாக நாவல் நிறைவு பெறுகிறது.

திண்ணைக்கென்று ஜெயகாந்தன் பிரத்தியேகமாக அளித்த பேட்டியில் இந்த நாவலைப் பற்றிய அவருடைய பார்வையை பின்வருமாறு தெரிவிக்கிறார்.

திண்ணை : இந்தப் பேட்டியின் அமைப்பு கேள்வி பதிலாக இருப்பினும், கேள்விக்குப் பதிலாக மட்டுமல்லாமல், நீங்கள் தொடர்ந்து அபிப்பிராயம் சொல்ல வேண்டுமென்றாலும் சொல்லலாம். முதன் முதலில் நான் கேட்கப் போகும் கேள்வி 'ஒரு மனிதன் ஒரு வீடு உலகம் ' பற்றியது. நான் எங்கள் நண்பர்களுடன் பேசிக் கொண்டிருக்கும் பொழுது, கிளாஸிக்குகள் பொதுவாகவே துன்பியல் வடிவில் தான் நிறைய எழுதப் பட்டிருக்கின்றன என்பது பற்றி விவாதித்திருக்கிறோம். உதாரணமாக மாக்பெத், போரும் அமைதியும், அன்னா கரீனினா, குற்றமும் தண்டனையும், கரமஸோவ் சகோதரர்கள் - இப்படி. மகிழ்ச்சியை, சந்தோஷத்தை அடிப்படையாய் வைத்து ஒரு கிளாஸிக் வர முடியுமா என்று எங்களுக்குள் விவாதங்கள் நடந்த படி யிருந்தன. அந்தச் சமயத்தில் 'ஒரு மனிதன் ஒரு வீடு ஒரு உலகம் ' தொடராக வர ஆரம்பித்தது. மகிழ்ச்சி ததும்புவதாகவும், சந்தோஷத்தையும் மிகவும் கொண்டு, சாதாரண மக்களிடம் உள்ள சிறப்பையும் , தாம் சாதாரண மனிதர்களாக இருந்து கொண்டே அவர்கள் உன்னதத்தை அடைய முடியும் என்பதை நிரூபிக்கும் விதமாகவும் ஒரு மிகச் சிறந்த கிளாஸிக்-ஆக இந்தப் படைப்பு வெளிவந்தது. அதை எழுதும் போதும், வெளிவந்த போதும் உங்கள் மன நிலை என்ன ? நீங்கள் அதை எப்படி அணுகினீர்கள் ?

ஜெயகாந்தன் : நீங்கள் சொன்னது போல கிளாசிக்குகள் துன்பியலாய்த் தான் இருக்கும் என்பது முழு உண்மை அல்ல. இந்திய மொழியில் இது அவசியம் இல்லை. இன்னும் சொல்லப் போனால் இந்திய மரபுப்படி எந்த ஒரு கதையும் சோகத்திலே முடிவது கூடாது. தமிழ் மரபிலும், ராமாயணத்திலே கூட இறுதிக் காண்டத்தைத் தவிர்த்து பட்டாபிஷேகத்துடன் நிறுத்தி விடுவார்கள். முதலில் நான் எழுத ஆரம்பித்த போது, ஒரு நல்லவன் எப்படி மூடர்களிடம் சிக்கி அவதியுறுகிறான் என்று எழுதத் தோன்றியது.. ஆனால் , எழுதத் தொடங்கியவுடன், அதைவிடவும் அவன் நல்லவனாக இருப்பதால் எல்லாவற்றையும் எப்படி எல்லாவற்றையும் நல்லவனாகவே பார்க்கிறான், என்பதையும் எழுத எண்ணினேன். Negative aspect- சிறிதும் இல்லாமல் எழுத மனதில் தீர்மானித்துக் கொண்டேன். அவன் ஒரு யுனிவர்சல் மேன். கிராமத்திலே வாழ்கிறான். பரந்து பட்ட உலகத் தன்மை எப்படி ஒவ்வொரு கிராமத்திலும் குடி கொண்டிருக்கிறது என்பதை அவன் வழியாகச் சொல்வது தான் என் நோக்கம். அது ஒரு முடிந்த நாவல் அல்ல. அதன் முடிவு எப்படி இருக்கும் என்று தெரியாமலே அதை எழுதத் தொடங்கினேன். எனக்கு மனதில் மேன்மையான ரொம்ப மேன்மையான உணர்ச்சியும், அந்த உணர்ச்சியினால் நான் தான் ஹென்றி என்று உணர்வுஇ கொண்டேன். என் நண்பர்களிடம் இதைச் சொல்லி , எப்படி எழுதுவது என்று முடிவாக வில்லை என்றேன். நண்பர் குப்புசாமி நான் சொன்ன விதமாகவே எழுதலாமே என்றார். அப்பொழுது நாங்கள் ஒரு லாரியில் பிரயாணம் செய்து கொண்டிருந்தோம். மொத்தம் அந்த லாரியில் ஏழு பேர் இருந்தார்கள் என்ற வரியோடு அந்த நாவல் தொடங்கியது .முடிவற்ற நாவலாக எழுதிக்கொண்டே போவது தான் என் விருப்பம். ஆனால் பத்திரிகைக் காரர்களுக்கு இதை முடிக்க வேண்டும் என்று தோன்றி விட்டது. இது இன்னும் எத்தனை வாரம் வரும் என்று கேட்டார்கள். அடுத்த வாரமே முடித்து விட்டேன். அது முடித்த பிறகு நான் நிறைய எழுத வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருக்கிற விஷயங்கள் கூட மனதின் அடியாழத்துக்குப் போய் விட்டன. நீங்கள் கேட்டது : இந்த நாவல் எழுதும்போது என் மனநிலை பற்றி - மனிதர்களையும், கிராமத்தையும், இயற்கையையும் நேசிக்கிற ஒரு பறவை மாதிரி நான் அந்த காலத்தில் இருந்தேன் இந்தக் கதை என் உடம்பையே லேசாக்கி ,பறவை போல இருந்தது என் மனநிலை. ஆனால் பறந்து கொண்டே இருக்க முடியாதல்லவா ? காலூன்றி ஒரு இடத்தில் நிற்கத்தான் வேண்டியிருக்கிறது. ஆனால் இன்னும் கூட அதை மறுபடியும் தொடங்கணும். எழுத வேண்டும் என்று ஆர்வம் உண்டு. ஒரு காரியம் நிறைவேறுவதற்கு ஆர்வம் மட்டும் போதாது. வேறு சில புறச் சூழ்நிலைகளும் தேவையல்லவா ? அது வரலாம் வராமலும் போகலாம்.

தொடர்ந்து படிக்க இங்கு செல்லவும்: ஜெயகாந்தனின் நேர்முகம்...

அக்கம்மா, கிளியாம்பாள், மணியக்காரர், முதலியார், போஸ்ட் ஐயர், மண்ணாங்கட்டி, துரைக்கண்ணுவின் குழந்தைகள், மாமியார் மற்றும் மனைவி நவநீதம், டீக்கடை ஆசாமி, பைத்தியக்காரி என்று அனைவரின் கதாப்பாத்திரமும் கிராமிய மாந்தர்களைக் கண்முன் நிறுத்துகிறது.

இந்தப் புத்தகமெங்கும் வியாபித்திருப்பது வெகுளியான கிராமத்து மனிதர்களின் எளிமையான வாழ்க்கை. கிராமத்து வாழ்க்கையில் நாட்டமுள்ளவர்கள் அனுபவித்து ரசிக்கக் கூடிய கதை. புத்தகம் எல்லாக் கடைகளிலும் கிடைக்கிறது.

Book Details:
Oru manithan oru veedu oru ulagam,
jayaganthan published by Kalachuvadu Pathipagam.

11 comments:

சேரலாதன் பாலசுப்பிரமணியன் said...

அற்புதமான புதினம் கிருஷ்ணா. நான் மிக ரசித்துப்படித்த, எப்போதும் நினைவில் நடந்து போகிற வாழ்வியல் களம் இது. ஜெயகாந்தனின் பதில் என்னை மிகவும் சந்தோஷப்படுத்துகிறது. அதை இங்கே பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி. மிகச் சிறந்த இலக்கியம், எப்போதுமே வாழ்க்கையின் துயரத்தை மட்டுமே சொல்ல வேண்டுமென்பதில்லை; நெகிழ்ச்சியூட்டுகிற, அன்புமிகுந்த, நேர்மறை உணர்வுகள் நிறைந்த கணங்களையும், மனிதர்களையும் பதிவு செய்வதாகவும் இருக்கலாம். இப்புதினம் அவ்வகையைச் சேர்ந்தது.

-ப்ரியமுடன்
சேரல்

வேல் கண்ணன் said...

என்னை பொறுத்தவரை
இதுதான் ஜெயகாந்தன்
'மாஸ்டர் பீஸ்' என்பேன்.
இதை நான் படித்த முடித்த ஆண்டு
1989. இன்றளவில் பெரும் தாக்கத்தை
ஏற்படுத்திய நாவல் இது .
ஏறக்குறைய 3 முறையாவது மறுவாசிப்பு
செய்திருப்பேன். ஹென்ரி என்னில் ஒருவனாக
ஆனான். நாவலின் முதலில் ஹென்ரி பயணம்
செய்த லாரியில் நம்மை ஏற்றும் ஆசிரியர் பின்பு
நாவல் முழுவதையும் பயணம் செய்யவைக்கிறார்.
ஆனால் , நாவல் முடித்த பின்பும் வெளியில் வர முடியாது.
நல்ல பதிவு கிருஷ்ணா, ஜெயகாந்தனின் நேர்முகத்தை
அளித்தற்கு நன்றி.

அ.மு.செய்யது said...

அழ‌கான‌ பார்வை கிருஷ்ணா..நானும் இந்நாவ‌லை ப‌ற்றி கேள்விப்ப‌ட்டிருக்கிறேன்.அவ‌சிய‌ம் ப‌டிக்க‌ வேண்டும்.

ப‌கிர்வுக்கு ந‌ன்றி.

அன்பேசிவம் said...

கிருஷ்ணா? பதிவு இருக்கட்டும். எங்க போனீங்க இத்தனை நாளா?... ம்ம்...
மெயில் கிடைச்சுதா? தோழர் பதிவை படிச்சிங்களா?

அமுதா said...

pahirvukku nanri. adutha murai noolahathil irundhu eduthu vandhu padikkiren.

அமிர்தவர்ஷினி அம்மா said...

திரு.ஜெயகாந்தனின் பிற புத்தகங்கள் படித்துள்ளேன், இந்த புதினம் இதுவரை அறிந்ததில்லை.

பகிர்வுக்கு நன்றி கிருஷ்ணா. வாங்கிப்படிக்கிறேன்.

மேலும், திட்டிவாசல் வலைப்பூவில் என்னால் கமெண்ட் இடமுடியவில்லை
பதிவிட்டதற்கு நன்றி. அன்பைப் பகிர்ந்தமைக்கும். :)

subramani periyannan said...

I am 62,till now i am awaiting the continuation of the novel.The expectation may not die till i breath my last.MY SOUL TOO WILL NOT FORGIVE JAYAKANTHAN FOR HAVING CHEATED ME BY ABRUPTLY ENDING THE STORY.THE SHOCK I HAVE FELT THAT TIME STILL CONTINUES.HIS ACT IS A CRIME AGAINST HUMANITY,UNFORGIVABLE,UNPARDONABLE,I CURSE HIM TO GO TO HELL,I CAN NEVER FORGIVE HIM.ITS TRUE

J S Gnanasekar said...

படித்திருக்கிறேன். மிகவும் நல்லதொரு புத்தகம்.

விக்னேஷ்வரி said...

அவசியம் வாசிக்க நினைக்கும் புத்தகம்.

கே.சிவராஜ் said...

சிறந்த நாவல்களை படிக்க ஆரம்பித்திருக்கும் எனக்கு உங்களின் BLOG ஒரு வரப்பிரசாதம். புதுச்சேரியில் நடைபெற்ற புத்தககண்காட்சியில் நான் வாங்கிய புத்தகங்களில் இதுவும் ஒன்று. படிக்க ஆரம்பித்துவிட்டேன். வாங்கிய ஏனைய நூல்கள்:-
புயலில் ஓர் தோணி - ப.சிங்காரம
ஒரு புளியமரத்தின் கதை,
பதினெட்டாவது அட்சக் கோடு
வானம் வசப்படும் – பிரபஞ்சன்
கடல்புரத்தில் - வண்ணநிலவன் இரும்பு குதிரைகள் & மெர்க்குரிப் பூக்கள் — பாலகுமாரன்
தலைமுறைகள் – நீலபத்மநாபன். என் பெயர் ராமசேஷன் – ஆதவன்.
குறிஞ்சி மலர் — நா. பார்த்தசாரதி
தலைகீழ் விகிதங்கள் —நாஞ்சில்நாடன்.
தண்ணீர் —- அசோகமித்திரனின்


கே.சிவராஜ் said...

சிறந்த நாவல்களை படிக்க ஆரம்பித்திருக்கும் எனக்கு உங்களின் BLOG ஒரு வரப்பிரசாதம். புதுச்சேரியில் நடைபெற்ற புத்தககண்காட்சியில் நான் வாங்கிய புத்தகங்களில் இதுவும் ஒன்று. படிக்க ஆரம்பித்துவிட்டேன். வாங்கிய ஏனைய நூல்கள்:-
புயலில் ஓர் தோணி - ப.சிங்காரம
ஒரு புளியமரத்தின் கதை,
பதினெட்டாவது அட்சக் கோடு
வானம் வசப்படும் – பிரபஞ்சன்
கடல்புரத்தில் - வண்ணநிலவன் இரும்பு குதிரைகள் & மெர்க்குரிப் பூக்கள் — பாலகுமாரன்
தலைமுறைகள் – நீலபத்மநாபன். என் பெயர் ராமசேஷன் – ஆதவன்.
குறிஞ்சி மலர் — நா. பார்த்தசாரதி
தலைகீழ் விகிதங்கள் —நாஞ்சில்நாடன்.
தண்ணீர் —- அசோகமித்திரனின்