Saturday, August 14, 2010

பீக்கதைகள் - பெருமாள் முருகன்

வெளியீடு: அடையாளம் பதிப்பகம்
ஆசிரியர்: பெருமாள் முருகன்
விலை: 60 ரூபாய்

காலச்சுவடு பொறுப்பாசிரியர்களில் ஒருவரான பெருமாள் முருகனின் இந்தப் புத்தகத்தை வாங்கக் கையில் எடுத்தவுடன், சிறுவயதில் டவுசரை கழட்டிவிட்டு மலம் கழிக்க ஓடிய நாட்கள் ஞாபகம் வந்தது. எனக்கு 12 வயது முடியும் வரை என்னுடைய கிராமத்தில் ஒருவர் வீட்டில் கூட கழிப்பறைகள் இல்லை. வெயில் நாட்களில் வயல்வெளிகளை நோக்கியும், மழைக்காலங்களில் கல்கத்தா நெடுஞ்சாலையை நோக்கியும் ஓடிக்கொண்டிருப்போம். அரசாங்கத்தில் மானியம் தந்த பொழுதுதான் எல்லோரும் கழிப்பறை கட்டத் தொடங்கினோம். ன்று எல்லோர் வீட்டிலும் கழிப்பறை இருக்கிறது என்றாலும் வயல்வெளியைத் தேடி ஓடிக் கொண்டிருப்பவர்களைப் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறேன்.

மணிச் சத்தும் வருங்கால விவசாயமும் - என்ற கட்டுரையில் மனிதக் கழிவுகளில் தான் அதிக அளவு மணி சத்து உள்ளது என்று படிக்கும் வரை "ஏன்தான் இப்படி அகண்ட வெளியை அசிங்கம் செய்கிறார்களோ" என்று அங்காளி பங்காளிகளைப் பொருமிக் கொண்டிருந்தேன். இதன் மற்றொரு பக்கம் நகரத்தில் (சென்னை) முதன் முறையாக சிறுநீர் கழிக்க பணம் கொடுத்த பொழுது "இதக் கூடவாடா பணமாக்குவிங்க" என்று வருத்தப் பட்டிருக்கிறேன்.

முன்பிருந்த கிராமங்களில் கழிவு நீரை வீட்டிலுள்ள தோட்டத்திற்கும், இதர திடக் கழிவுகளை வயல்களுக்கு உரமாகவும் சேர்த்து விடுவார்கள். இன்று கிராமமோ நகரமோ கழிவு மேலாண்மை என்பது சவாலான விஷயம் தான். நம்முடைய வசதிக்காக அதனை அருகிலுள்ள நீர் நிலைகளிலோ அல்லது ஆழமாக பள்ளம் வெட்டி அதில் சேர்பித்தோ தற்காலிகமாக தப்பித்திக் கொள்கிறோம். இயற்கை சுழற்சி இங்குதான் தடைபடுகிறது. கருங்கடல் போல் காட்சியளிக்கும் மெரினாவில் கால் நனைப்பவர்கள், மலம் கலந்த சாக்கடையில் தான் நின்று கொண்டிருக்கிறோம் என்பதை என்றுதான் உணர்வார்களோ தெரியவில்லை. சென்னையின் மத்தியத் தர ஹோட்டல்களில் குடிநீர் காலங்களாகவே இருக்கிறது. அந்த நேரங்களிலெல்லாம் 'கிணறு வெட்ட பூதம்' என்ற பதிவு வேறு ஞாபகம் வந்துத் தொலைக்கிறது.

2001 ஆம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின் படி சென்னையில் 42.16 லட்சம் மக்கள் வசிக்கிறார்கள். இப்பொழுது 50 லட்சத்தைத் தாண்டி இருக்கலாம். இது தவிர வேலைக்காகவும், வியாபாரமாகவும், சுற்றுளாவுக்காகவும், இதர காரணங்களுக்காகவும் தினம் தினம் வந்து செல்பவர்கள் வேறு. சராசரியாக 50 லட்சம் லிட்டர் சிறுநீரும், அதற்கேற்ற மலமும், சளியும், எச்சிலும், துப்பாலும், வாந்தியும் என்று மனிதனால் மட்டுமே வெளியேற்றப்படும் கழுவுகள் நம்மைச் சுற்றித் தான் பயணிக்கின்றன. கூவமும், அடையாறும், மெரினாவும், ஆங்கிலேயன் கட்டிய பாதாளக் கால்வாயும் நம்முடைய கழிவுகளைத் தாங்கியே நோயுற்றுள்ளன. இன்று பல பேரூராட்சிகளும் சென்னையைப் போலவே பெருநகரங்களாக மாறிக் கொண்டிருக்கின்றன. அங்கெல்லாம் கூட இதேதான் கதி.

சிறுநீர் கழிக்கப்படாத கரண்ட் கம்பன்களைக் கூட விரல் விட்டு எண்ணி விடலாம். மலம் கழிக்கப்படாத நடை மேடைகளே சென்னையில் இல்லை. நான் ஒவொரு அடியையும் ஜாக்கிரதையாகவே எடுத்து வைக்கிறேன். அதைக் கழித்தவர்களுடைய அவஸ்தை எனக்குப் புரிந்தே இருக்கிறது. நான் மூச்சைக் கூட தயங்கித் தயங்கியே உள்ளிழுக்கிறேன். ஒவ்வொரு மூச்சிலும் சிறுநீரின் ஈரமும், மலத்தின் துர்நாற்றமும் சேர்ந்தே இருக்கிறது என்ற உண்மை என்னை பாடாய்ப்படுத்துகிறது. ஐம்பூதங்களில் வானையும், நெருப்பையும் தான் மனிதக் கழிவுகளை இட்டு நிரப்பாமல் மிச்சம் வைத்திருக்கிறோம்.

மனிதன் வெளியேற்றும் கழிவுகள் இயற்கையை நாசப்படுத்துகிறது. இயற்கை உபாதையோ மனிதனை சங்கடப்படுத்துகிறது. சில நேரங்களில் அவமானப்படுத்துகிறது.பயணத்திலோ, புதிய இடத்திலோ, தமக்குப் பழக்கமில்லாத முறையிலோ, மரணப் படுக்கையிலோ அவசரம் அழைக்கும் பொழுது செய்வதற்கு எதுவும் இல்லை. இங்குமங்கும் ஓடி, நெளிந்து சுருங்கி அடுத்தவர்களால் பரிகாசமாகப் பார்க்கப்படுகிறோம். ஒரு மனிதன் அவசரத்தில் ஒதுங்கி வைப்பது மட்டுமே மலம் அல்ல. அவசர வாழ்க்கையில் சக மனிதனை ஒதுக்கினால் அவனும் மலமே. சூழ்நிலைகளும் சங்கடங்களும் தான் அதனை நிர்ணயிக்கின்றன. அவைகளே இங்கு கதைகளுக்குக் கருவாகின்றன. 'மலத்தை' மையமாக வைத்த சங்கடங்களைத் தான் பெருமாள் முருகன் கதைகலாக்கியுள்ளார். ஒவ்வொரு கதையும் நமக்கு அன்றாட வாழ்க்கையில் நடக்கும் அனுபவத்தை ஏற்படுத்திச் செல்கிறது. இங்கும் சில கதைகள் ஏதோ ஓர் இறுக்கத்தை இறக்கிவிட்டுச் சென்றன. அவையெல்லாம் மலச்சிக்களுக்கான உணர்வை ஏற்படுத்திச் சென்றன. சில கதைகள் என்னை இளகச் செய்தன. அவையெல்லாம் மலம் கழித்த உணர்வை ஏற்படுத்திச் சென்றன.

இந்தப் புத்தகத்திலுள்ள கதைகளின் சிறு குறிப்பினை நண்பர் ஜெயகுமாரின் வலைப்பூவில் படிக்கக் கிடைக்கிறது.


நூலாசிரியரைப் பற்றிய நண்பர் சுரேஷ் கண்ணனின் பதிவு:



6 comments:

priyamudanprabu said...

பகிர்ர்வுக்கு நன்றி

ஆதவா said...

சமூக அக்கறையும் ஆழ்ந்த அனுபவமும் இக்கட்டுரைக்கு உங்களுக்கு உதவியிருக்கு..

சிறுவயதில் நான் காட்டிற்குத்தான் அதிகம் செல்லுவேன். அது அனுபவ மூட்டைகள்...

அப்பறம்.... உங்கள் அறிவுரைப்படி,, நானும் அவ்வப்ப்பொது புத்தகம் படிக்கிறேன்!!!

நன்றிங்க.

Harish Ragunathan said...

All your posts are interesting and makes one want those books..Continue to enlighten us, friend.

லேகா said...

பகிர்தலுக்கு நன்றி கிருஷ்ணபிரபு. வாசிக்க தூண்டும் பதிவு.

பெருமாள் முருகனின் "கூள மாதாரி' மற்றும் "ஏறு வெயில்" தமிழின் மிக முக்கியமான தலித் நாவல்கள். காலச்சுவடு வெளியீடு. வாசித்திருக்காவிட்டால் படிங்க.

"உழவன்" "Uzhavan" said...

வித்தியாசமா இருக்கே :-)

Unknown said...

பின்னூட்டமிட்ட அனைவருக்கும் நன்றி...