Saturday, August 28, 2010

கனக துர்கா - பாஸ்கர் சக்தி

வெளியீடு: வம்சி பதிப்பகம்
ஆசிரியர்: பாஸ்கர் ஷக்தி
விலை: 250 ரூபாய்

சென்னையில் முதன் முறையாக நடைபெற்ற
வம்சி பதிப்பகத்தின் புத்தக வெளியீட்டில் தான் 'கனக துர்காவை' வாங்க நேர்ந்தது. விழா நடைபெறுவதற்கு முன்பாக அடுக்கி வைக்கப் பட்டிருந்த புத்தகத்தில் ஒன்றை கையில் எடுத்தேன். மேற்புற அட்டையைத் தலைகீழாக ஒட்டி இருந்தார்கள். புத்தகத்தை நேராக வைத்து உள் அட்டையைப் பார்த்தேன். பாஸ்கர் ஷக்தி தலைகீழாக சிரித்துக் கொண்டிருந்தார். பவாவிடம் கொடுத்தேன். அவர் திருப்பிப் பார்த்துவிட்டு "யாருப்பா அங்க, இத மொதல்ல மறைச்சி வையுங்க... பாஸ்கர் பார்த்தா கொன்னுடுவான்" என்று யாருக்கோ பதில் சொல்லிவிட்டு, "இப்போ புத்தகத்தை எடுக்காதீங்க. வேற நெறைய புக்ஸ் இருக்கு, நல்லதா பார்த்து எடுத்துக்கோங்க..." என்றார்.

விழா முடிந்ததும் நல்ல புத்தகமாக ஒன்றை எடுத்துக்கொண்டு பாஸ்கரிடம் நீட்டினேன். "அவ்வளோ பெரிய ஆளா நான்! ஆட்டோகிராஃப் எல்லாம் கேக்குறீங்க?" என்று சிரித்துக் கொண்டே கையொப்பமிட்டார். அப்படியே, "இலட்சுமண பெருமாள், கா சீ சிவக்குமார் எல்லாம் என்னை விட நன்றாக எழுதுவார்கள். அவர்களுடைய புத்தகங்களையும் வாங்கிக் கொள்ளுங்கள்" என்றார். இந்த மென்மையான, உயர்ந்த குணம் மற்றவர்களிடம் எதிர்பார்க்க முடியாத ஒன்று.

அவருடைய மனிதத் தன்மை அவரைச் சுற்றி இருக்கக் கூடிய எல்லோருமே வியக்கக் கூடிய ஒன்று. அதைப் பற்றிய தமிழ்நதியின் சுவாரஸ்யமான பதிவு:

பாஸ்கர் சக்திக்குப் பாராட்டு விழா:ஒரு சின்னக் கிராமமும் பெரிய மனிதர்களும்…


பாஸ்கரைப் போலவே அவருடைய கதைகளும் மென்மையான வாசிப்புக்கு உகந்தவை. கிராமத்து நினைவுகளை புன்னகையுடன் அசைபோச வைப்பவை. தொகுதியில் மொத்தம் 31 கதைகள் இருக்கிறது. எல்லா கதைகளுமே வாசிப்பவருக்கு நிறைவைத் தரக் கூடிய கதைகள். எள்ளல்களுடனும், நக்கல்களுடனும் கதை நகர்ந்து சென்றாலும் வாசிப்பின் முடிவில் எதோ ஒரு துக்கத்தை நம்மீது கவிழ்த்துவிட்டுச் செல்லக் கூடியவை. வாழ்க்கையில் மாற்றம் ஏற்படும் பொழுது சில அடிப்படை விஷயங்கள் சிதைக்கப்படுகிறது. நாகரீக வாழ்க்கை, உயர்ந்த வாழ்க்கை என்று நாம் நம்பக் கூடிய விஷயத்திற்காக தினம் தினம் சிதைத்துக் கொண்டிருக்கின்ற கிராமம் சார்ந்த வாழ்க்கையையும், மனிதர்களையையும் இந்தக் கதைகளில் பாஸ்கர் ஷக்தி அடையாளப் படுத்தியுள்ளார்.

கார்த்திகா வாசுதேவன் பதிவில் அழகர்சாமியின் குதிரை தொகுதியிலுள்ள பாஸ்கர் சக்தியின் சிறுகதைகள் பற்றி சிறு குறிப்பு படிக்கக் கிடைக்கிறது: http://mrsdoubt.blogspot.com/2009/07/blog-post_28.html

பழுப்பு நிறப் புகைப்படம், தக்ளி, வேலப்பர் மலை, தம்பி லட்சுமணா, காளான், வீராச்சாமி பிகாம், எழுநாள் சூரியன் எழுநாள் சந்திரன், அழகர் சாமியின் குதிரை என்று ஒவ்வொரு கதையைப் பற்றியும் சிலாகித்துப் பேசலாம். இவருடைய அழகர் சாமியின் குதிரை என்ற சிறுகதையை திரைப்படமாக எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். இசைஞானி இளையராஜா படத்திற்கு இசையமைக்கிறார் என்பது உபரித் தகவல்.

தொகுதி முழுவதையும் வாசித்துவிட்டு பைத்தியக்காரனின் உதவியுடன் பாஸ்கரிடம் பேசினேன்.

"உங்களை எனக்கு நன்றாகத் தெரியும் பாஸ்கர். என்னை உங்களுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. நான் கிருஷ்ண பிரபு பேசுகிறேன்" என்றேன்.

"கேணிக்கு வருவிங்களே அவர் தானே. உங்களை எனக்குத் தெரியும். சொலுங்க..." என்றார்.

எனக்கான ஆச்சர்யத்துடன், "உங்களுடைய கனக துர்கா தொகுப்பிலுள்ள சிறுகதைகள் நன்றாக வந்திருக்கின்றன பாஸ்கர். நீங்க இந்த மாதிரி எழுதுவீர்கள் என்று நினைத்துக் கூடப் பார்க்கவில்லை. என்னுடைய பால்யகால வாழ்க்கையின் சிறுவயது அனுபவங்கள் ஞாபகத்திற்கு வந்தன. சந்தோஷமாக இருக்கிறது" என்றேன்.

"ஒ மொத்தத்தையும் படிச்சிட்டிங்களா. நன்றி..."

"உங்களுடைய எழுத்தில் இறுக்கம் இல்லை. ஆனால் எதையோ அசைத்துவிட்டுச் செல்கிறீர்கள்..."

"நம்ம கேரக்டர் அப்படி.... 25 வயசு வரை நடந்ததைத் தானே எழுதி இருக்கேன். இன்னும் எவ்வளவோ இருக்கே..." என்றார்.

"...எல்லாவற்றையும் வடிகட்டி நகர்கிறது காலம். உரித்துப் போட்ட பாம்புச் சாட்டைகளாய் முன்னே எனது கதைகள்..." என்று பழுப்பு நிற புகைப்படம் புத்தகத்தின் முன்னுரையில் எழுதியிருப்பார். டிவி சீரியல், திரைப்படம் என்று இதர பணிகள் அவருடைய காலை இழுத்தாலும், எழுதுவதற்கான அவகாசம் அவருக்குக் கிடைக்க வேண்டும் என்றே வாசகனாக ஆசைப்படுகிறேன். பாம்பு அதனுடைய தோலை உரிக்கும் கால அவகாசமும், வலியும் என்னுடைய புத்திக்குத் தெரிந்தே இருக்கிறது. இருந்தாலும் அவருடைய இன்னுமொரு தொகுதியின் பக்கங்களை புரட்டுவதற்கு ஆவலுடன் இருக்கிறேன்.

பாஸ்கர் சக்தியின் இதர பங்களிப்புகள்:

மெகா சீரியல்: மெட்டி ஒலி, கோலங்கள், நாதஸ்வரம்
திரைப்படம்: எம்டன் மகன், வெண்ணிலா கபடிக் குழு, நான் மகான் அல்ல

9 comments:

Joe said...

ரொம்ப ரசிச்சு எழுதிருக்கீங்க கிருஷ்ணா.

புத்தக அறிமுகத்திற்கு நன்றி.

தமிழ்நதி said...

அருமையான கலைஞன். எல்லாவற்றிலும் மேலாக அருமையான மனிதர்

Raju said...

இப்போதான் படிச்சுட்டேயிருக்கேன்!

முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு திரைப்படத்திலும் இவர் பங்களிப்பு உண்டோ!

"உழவன்" "Uzhavan" said...

சில கதைகளை மட்டுமே படித்தேன். விரைவில் முடிக்க வேண்டும்.

பரிசல்காரன் said...

கிருஷ்ணா-

“தக்ளி” இந்தத் தொகுதில இருக்குதானே?


(அப்பறம் குறிப்பிட்டுள்ள திரைப்படங்களில் எழுத்துப் பிழையை சரிசெய்யவும். அது நான் மகான் அல்ல. நாளையே நீங்கள் எழுதியுள்ள பெயரில் படம் வரலாம். பிறகு பெயர் குழப்பம் வரும்..!)

Unknown said...

@ ராஜு

முனியாண்டி விலங்கியல் மூன்றாமாண்டு - அவருடைய பங்களிப்புதான்.

Unknown said...

@ உழவன்

படியுங்கள் உழவன். உங்களுடைய மகிழ்ச்சியான தருணங்களாக அவை இருக்கும்.

Unknown said...

@ பரிசல்

தவறை சுட்டியமைக்கு நன்றி. பிழை சரிசெய்யப்பட்டு விட்டது.

Unknown said...

@ Joe, தமிழ்நதி

வருகைக்கும், பின்னூட்டத்திற்கும் நன்றி.