Sunday, September 5, 2010

ஆசிரியர் தினம்

எனக்கான முக்கிய பொழுதுபோக்கு புத்தகம் வாசிப்பது. இதை வைத்துக் கொண்டு படிப்பில் நான் படுசுட்டி என்று நினைத்துக் கொள்ளாதீர்கள். சராசரி மாணவர்களிலேயே கடைந்தெடுத்த சராசரி மாணவன் நான். பல நேரங்களில் யோசித்ததுண்டு. எழுத்தை அடையாளப் படுத்திக்கொண்டு வாசிக்க முடியாமல் இருக்குமெனில் என் கதி என்னவாகும்!?. நல்ல வேலை அப்படி எதுவும் நடக்கவில்லை. பள்ளி செல்வதற்க்கான சூழ்நிலையை ஏற்படுத்திக் கொடுத்த குடும்பத்தாருக்கும், எந்த விதத்தில் சொல்லிக் கொடுத்தால் என் மூளைக்கு எட்டுமோ அந்த விதத்தில் சொல்லிக் கொடுத்த ஆசிரியர்களுக்கும் என்னுடைய நன்றியை சொல்லி மாளாது.

நான் முதன் முதலில் சென்றது அரசாங்க மழலையர் பள்ளிக்கு (பால்வாடி). காலையில் இரண்டு மணி நேரம் இருக்கும். மரத்தடியில் சந்தோஷமாக விளையாட விடுவார்கள். ஒன்றிரண்டு குழந்தைப் பாடல்களையும் சொல்லிக் கொடுப்பார்கள். பாடல்களை பாடிக்கொண்டே மரங்களை
சுற்றிச் சுற்றி ஓடிக் கொண்டிருப்போம். சோர்வானவுடன் பால்வாடி டீச்சரிடம் செல்வோம். எங்களுக்காக தயார்படுத்தி வைத்திருந்த சத்துணவு உருண்டையை கொடுப்பார்கள். அதை வாங்கி சாப்பிட்ட படியே வீடு நோக்கி ஓடுவோம். ஒரு வருடம் கழித்துதான் ஆரம்பப் பள்ளிக்குச் சென்றோம்.

எனக்கு நன்றாக ஞாபகம் இருக்கிறது 8-வது வரை உள்ள பள்ளியில் நான்கு வகுப்பறைகள் மட்டுமே இருந்தது.
தலைமை ஆசிரியருக்கு மட்டும் ஒரு தனியறை இருக்கும். மற்றபடி ஆசிரியர்களுக்கான ஓய்வறை, கழிவறைகள் கூட இல்லை. ஆசிரியைகள் ஓய்வெடுக்க எங்கள் வீட்டிற்குத்தான் வருவார்கள். எங்கள் வீட்டில் பசுமாடு இருந்தது. காலையும் மாலையும் அவர்களுக்கு பால் கொடுத்து அம்மா உபசரிப்பாள். அந்த வகுப்பறைகளுக்கு முன்பு இரண்டு பெரிய வேப்பமரம் கம்பீரமாக நின்று கொண்டிருக்கும். முதல் நான்கு வகுப்புகளுக்கு அந்த இரண்டு மரம் தான் நிழல் தந்து உதவியது. சில நேரங்களில் வெயில் சுளீரென்று மண்டையில் அடிக்கும். காகம் தன்னுடைய பங்கிற்கு அசிங்கம் செய்துவிட்டுப் போகும். கல்கத்தா நெடுஞ்சாலையில் மாட்டு வண்டிகளும், சைக்கிள்களும், லாரிகளும் எப்பொழுதாவது பேருந்துகளும் செல்லும். தூரத்தில் வேகமாக நகர்ந்து செல்லும் வாகனங்கள் எங்களுக்கு விளையாட்டு காட்டுவது போல இருக்கும். இதற்கிடையில் 'அ... ஆ... இ... ஈ...' என்று ஆசிரியர் சொல்லச் சொல்ல நாங்கள் அனைவரும் அதைக் கேட்டு பிரதிபலிப்போம். பிறகு ஓரெழுத்து வார்த்தைகள், ஈரெழுத்து வார்த்தைகள், மூன்றெழுத்து வார்த்தைகள், வாக்கியங்கள் என்று தமிழை படித்தோம். மற்ற பாடங்களையும் தமிழிலேயே படித்தோம். மரத்தடியில் இருந்து கூரை வேய்ந்த கட்டிடத்திற்குள் சென்றது செயற்கையாக இருந்தது. ஆறாம் வகுப்பில் தான் 'A B C D...' என்று ஆங்கிலம் படிக்க ஆரம்பித்தோம். ஏழாம் வகுப்பு வரை எங்களுக்கு வீட்டுப் பாடமே கிடையாது. தமிழ் ஐயா, பிரேமா டீச்சர், சத்யா டீச்சர், தையல் டீச்சர், ரெஜினா டீச்சர், பவானி டீச்சர், சரவணன் சார், செல்லப்பன் சார்... எல்லோரும் எங்களை அவர்களுடைய பிள்ளைகளைப் போல பார்த்துக் கொள்வார்கள். நெடுஞ்சாலை விரிவாக்கத்தில் இரண்டு பெரிய மரங்களையும் வெட்டிவிட்டார்கள். பள்ளியை கூட இடம் மாற்றி வேறு இடத்தில் அமைத்துவிட்டார்கள். நான் படித்த இடத்தின் சுவடே இன்று இல்லை. ஆசிரியர்களில் கூட ஒரு சிலரைத் தவிர எல்லோரும் மாற்றலாகி சென்றுவிட்டார்கள். சென்ற வாரம் பவானி டீச்சர் ஷேர் ஆட்டோவின் பயணத்தில் எனக்கு கையசைத்தார். அவருக்கு எதிர் திசையில் என்னுடைய வண்டி சென்று கொண்டிருந்தது. நான் இரண்டு கைகளையும் கூப்பி வணக்கம் செலுத்தினேன். "நல்லா இருக்கியான்னு?" சைகையிலேயே கேட்டார்கள். மண்டையை வாகாக ஆட்டினேன். "நல்லா இருன்னு" தூரத்திலிருந்து ஆசிர்வாதம் செய்தார்கள். சில நொடி சம்பாஷனை முடிவுக்கு வந்தது.

என்னுடைய கிராமத்தில் எட்டாவது முடித்து அருகிலுள்ள ஊரில் ஒன்பதாவது சேர்ந்தேன். ஒரே பள்ளியில் ஆயிரத்திற்கும் அதிகமான மாணவர்களைப் பார்த்தது
உள்ளுக்குள் நடுக்கத்தை ஏற்படுத்தியது. ஆரம்பத்தில் விருப்பமே இல்லாமல் பள்ளிக்கு சென்று கொண்டிருந்தேன். சம்பத் சாரின் கணித வகுப்பு எனக்கான புது வாசலைத் திறந்தது. அவரிடமே மாலை நேர டியூஷன் சேர்ந்தேன். எல்லா பாடங்களையும் அருமையாக எடுக்கும் அவர் பள்ளியில் கணிதத்திற்கான ஆசிரியர் மட்டுமே. மற்ற ஆசிரியர்கள் அவருக்கு முன் முட்டாள்களாகவே தெரிந்தார்கள். தமிழ் ஐயா மட்டும் விதிவிலக்கு. ஒரு நாள் கூட வீட்டில் படித்ததில்லை, இருந்தும் பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வில் கௌரவமான மதிப்பெண்கள் எடுத்து தேறினேன் என்றால் அதற்குக் காரணம் அவர் மட்டுமே. ஒரு வருடத்திற்கு முன்பு பேருந்தின் ஜன்னல் ஓரத்தில் அவரைப் பார்க்க நேர்ந்தது. அவரும் என்னைப் பார்த்தார். பேருந்து நகர்ந்து செல்கிறது. தேசிய கீதம் கேட்டது போல நான் உடம்பை விரைப்பாக்கி, நேராக நின்று கண்களில் பதட்டத்துடன் அவரைப் பார்க்கிறேன். அவர் சிறு குழந்தைக்கு விடை கொடுப்பது போல எனக்குக் கையசைத்தார். என்றாவது ஒருநாள் அவருடைய வீட்டிற்க்குச் சென்று பார்க்க வேண்டும் என்று பத்தாவது முடித்ததிலிருந்தே நினைத்துக் கொண்டிருக்கிறேன். நேரில் பார்த்தாலும் வார்த்தைகள் வெளியில் வருமா என்று தெரியவில்லை.

உயர்நிலைப் படிப்பிற்காக பென்னேரி சென்றேன். என்னுடைய பாட்டி வீட்டில் தங்கிப் படித்த காலம். விளையாட்டு, படிப்பைத் தவிர வாழ்க்கையில் வேறு விஷயங்கள் இருக்கிறது என்பதை அங்குதான் தெரிந்து கொண்டேன். படைப்பிலக்கியத்தின் மீது ஆர்வம் சென்றது. உயர்நிலைப் பள்ளி ஆசிரியர்கள் இயந்திரத் தனமாகத் தெரிந்தார்கள். மதிப்பெண்களை மட்டுமே அவர்களுக்கான இலக்குகளாக வகுத்துக் கொண்டு பாடம் நடத்தினார்கள். படிப்பில் எனது ஆர்வம் சராசரிக்கும் குறைவாக அமைந்தது. இயற்பியல், வேதியியல், உயிரியல் எல்லாம் என்னைப் பாடாய் படுத்தியது. ஆசிரியர்கள் என்னிடம் மல்லுக்கு நிற்காத குறை. மலர் அக்காவிடம் காலை நேரத்தில் மேத்ஸ் டியூஷன் சென்றேன். கல்லூரி முடிக்கும் வரை அவர்தான் கணிதத்திற்கான வழிகாட்டியாக அமைந்தார். ஒரு வழியாக இறுதியாண்டில் தேறி பொன்னேரி அரசு கல்லூரியில் சேர்ந்தேன். முதலில் வரலாற்றுப் பிரிவில் சேர்ந்து, பிறகு கணிதத்திற்கு மாறினேன். முதலாமாண்டு படிக்கும் பொழுது தவறாமல் வகுப்புகளுக்கு சென்றிருக்கிறேன். அடுத்தடுத்த இரண்டாண்டுகளில் வகுப்பிற்குச் செல்வது வெகுவாகக் குறைந்தது. என்னுடைய துறை ஆசிரியர்களுக்குக் கூட என்னைச் சரியாக அடையாளம் தெரியாது. முட்டி மோதி இளங்கலை கணித பட்டயத்தைப் பெற்றேன்.

அதன் பிறகு சிறிது காலம் வேலை செய்து, அது பிடிக்காமல் போக காஞ்சிபுரத்திற்குச் சென்று ஒரு வருட கூட்டுறவு பட்டயப் படிப்பை முடித்தேன். தொழின் முறைப் படிப்பு என்பதால் அதற்கேற்ற கட்டுக் கோப்புடன் இருக்கும். கூட்டுறவு சட்டம், கூட்டுறவு வரலாறு, கூட்டுறவு கணக்கில் என்று எல்லா பாடங்களும் குமட்டிக் கொண்டு வரும். பிடிக்காத பாடம் என்பதால் ஆசிரியர்களிடம் இடைவெளி ஏற்பட்டுவிட்டது. குரங்கு மரத்திலிருந்து தாவுவது போல இலக்கில்லாமல் தாவிக்கொண்டிருந்தேன். அந்தத் தாவலில் நான் கடைசியாக அமர்ந்தது பச்சையப்பன் கல்லூரியில். மாலை நேர வகுப்பில் முதுநிலை கணிதம் படிக்க அங்கு சேர்ந்தேன்.
எதற்காகப் படிக்கிறோம்? ஏன் படிக்கிறோம்? என்ற எந்தவித முடிவிற்கும் வர இயலாத பாடமாக முதுநிலைக் கணிதம் எனக்குத் தண்ணி காட்டியது. எனக்கு மட்டும் அல்ல என்னுடன் படித்த எல்லோருக்கும் தான். ஒவ்வொரு நாளும் இழவு வீட்டிற்கு வருவது போல சோக முகத்துடனே நண்பர்கள் கல்லூரிக்கு வந்து கொண்டிருந்தார்கள். 35 பேர் படித்ததில் ஒருவர் கூட இறுதியாண்டில் தேறவில்லை. இன்று வரை மூன்று நபர்கள் மட்டுமே தேறியிருப்பதாக நண்பன் கூறினான்.

அதன் பிறகு என்னுடைய அக்கா ஜெயாவின் வழிகாட்டுதலில் நல்ல வேலை கிடைத்து கை நிறைய சம்பாதிக்கும் பொழுதுதான் எனக்குப் பிடித்த வகுப்புகளை நாடிப் போக ஆரம்பித்தேன்.
முதல் மாத சம்பளத்தை எடுத்துக் கொண்டு ஓடியது கிபோர்ட் வகுப்பிற்கு. கோவிந்த ராஜ் சாரை மறக்கவே முடியாது. வேறு கம்பனிக்கு மாறியதால் கீபோர்ட் வகுப்பை நிறுத்திவிட்டு, அருகில் இருந்த இசைப்பள்ளியில் 8 மாதம் கிடார் கற்றுக் கொண்டேன். கிடார் மாஸ்டர் அருண் மாதிரி ஓர் ஆளை பார்ப்பதே கடினம். "இளையராஜாவின் பாடல்களை வாசிக்கக் கற்றுக் கொடுங்கள்" என்று அவரிடம் கூறினேன். "இசையைக் கற்றுக் கொள். உனக்குப் பிடித்த பாடல்களை நீயே வாசிக்கலாம். என்னுடைய உதவி தேவை இருக்காது" என்று ஆரம்பம் முதல் கற்றுக் கொடுத்தார். எதிர்பாராத குடும்பச் சுமையால் வகுப்பு எடுப்பதை நிறுத்தி விட்டார். சிறிது காலம் கழித்துத் தொடரலாம் என்றார். கிடார் வகுப்பு அங்கேயே நின்றுவிட்டது. பல மாதங்கள் கழித்து அவரிடம் இருந்து அழைப்பு வந்தது. மீண்டும் தொடர்வதற்க்கான நேரம் அமையவில்லை. அதற்குள் நேரத்தை விரயமாக்குவானேன் என்று ஜப்பானிய மொழி வகுப்பில் சேர்ந்துவிட்டேன். இரண்டு வருடமாக முயற்சி செய்து கொண்டிருக்கிறேன் என்றாலும் தேறியபாடில்லை. வெற்றியா முக்கியம் அனுபவம் தானே. ஜப்பானிய மொழி ஆசிரியர்களான தகாஷி சென்சேய், தாய்ச்சி சென்சேய், ஹயகவா சென்சேய் என்று பலருடன் பழகும் வாய்ப்பு கிடைத்தது. இந்திய ஜப்பானிய மொழி ஆசிரியர்களான உமா சென்சேய், பாலா சென்சேய் போன்றவர்களின் வழிகாட்டுதல் மறக்க முடியாத ஒன்று. சிவராமன் ஏற்பாடு செய்துத் தந்த சிறுகதைப் பட்டறை, பா ராகவன் ஏற்பாடு செய்துத் தந்த கிழக்கு மாடிப் பட்டறைகளில் பங்குபெற்ற அனுபவமும், கிர்தன்யா கிருஷ்ண மூர்த்தியின் Mind Training Course அனுபவமும் எனக்கு சொல்ல முடியாத ஆனந்தத்தைத் தந்தது. இன்னும் எனக்குப் பிடித்த எவ்வளவோ விஷயங்கள் இருக்கிறது. அவற்றை எல்லாம் அனுபவங்களாக உணர ஆவலுடன் இருக்கிறேன்.

ஆரம்பப் பள்ளியைத் தவிர்த்து,
முதுநிலை கல்லூரிப் படிப்பை முடிக்கும் வரை சம்பத் சாரைத் தவிர வேறு யாரும் என்னை சொல்லிக் கொள்ளும்படியாகக் கவரவில்லை. மற்றவர்களையெல்லாம் நான் வெறுக்கவில்லை. ஏனோ தெரியவில்லை அவர்களுடைய உலகில் என்னால் இருக்க முடியவில்லை. நாலு சுவற்றுக்குள் அடைபடும் மனநிலையை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. என்றாலும் இதுவரை எந்த ஆசிரியரும் என்னை தண்டித்ததில்லை. தரக் குறைவாகத் திட்டியதில்லை. அப்படியெனில் என்னுடைய தன்மையிலான கற்றலை அவர்கள் ஆமோதித்து இருக்கிறார்கள் என்று தானே அர்த்தம். என்னுடைய வாழ்க்கைக்கு மதிப்பு கொடுத்திருக்கிறார்கள் என்று தானே அர்த்தம். என்னுடைய சுதந்திரத்தில் குறுக்கிடாமல் என்னை வழி நடத்திய எல்லா ஆசான்களையும் இந்த நாளில் நினைத்துக் கொள்கிறேன்.

'வாழ்க்கைக் கரையில் அதைக் கற்பவர் நாள் சில'. கற்றுக் கொடுப்பவர்களின் சிரமத்தை இதுநாள் வரை அறிந்ததில்லை.
என்னைப் போல ஆயிரமாயிரம் மாணவ மணிகளை அவர்கள் கடந்திருக்கலாம். ஆயிரத்தில் ஒருவனாக இந்த சிறப்பான தினத்தில் அவர்களை நினைத்துக் கொள்வதில் மகிழ்ச்சியே.

9 comments:

கிருஷ்ண மூர்த்தி S said...

அது என்னவோ தெரியவில்லை கிருஷ்ணா, இந்த மாதிரி ஆசிரியர் தினம், மாணவர் தினம் மாங்காய் தினம் என்று ஏதோ ஒரு தினத்தை எவனோ கைகாட்டி விட்டுப் போனால் தான் நமக்கெல்லாம் அப்படி, ஆசிரியர்களை, அன்னையை, தந்தையை, நண்பர்களை நினைக்கத் தெரிகிறதென்றால் என்ன சொல்வது?

மாதா, பிதா, குரு, தெய்வம் என்று கால காலமாகச் சொல்லி வந்திருக்கிறார்கள். அன்னை, தந்தையருக்குப் பிறகு, இந்த உலகத்தை, வாழ்க்கையைப் புரிந்துகொள்ளப் பள்ளிப் படிப்பும், ஆசிரியர்களும் தான் உதவியிருக்கிறார்கள். மறுக்க முடியாத சத்தியம்! ஆனால் ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது என்ற மாதிரி, நம்முடைய கல்வி முறையும், ஆசிரியர்களும் வாழ்க்கைக்கு உதவுகிற மாதிரி கல்வி கற்கும் அனுபவத்தை உண்டாக்கித் தருவதில்லை.ஏதோ ஒரு தருணத்தில், கொஞ்சம் பரிவுடன் , உற்சாகப் படுத்தும், தன்னம்பிக்கையை விதைக்கும் ஆசிரியன் அந்த ஒன்றினாலேயே நம்முடைய வாழ்க்கையில் மறக்க முடியாதவனாகிப் போகிறான். எத்தனை பேரை அந்த மாதிரி நினைத்துப் பார்க்க முடியும்?

இவ்வளவு எழுதிய பிறகு கூட உங்களால் சம்பத் சார் ஒருவரைத் தானே குறிப்பிட்டு நினைக்க முடிகிறது! அது எதனால் என்பதைக் கொஞ்சம் யோசித்துப் பார்த்தீர்களா?

Unknown said...

அவருடைய மென்மையான குணமாக இருக்கலாம். பத்தாவது படிக்கும் பொழுது எங்களுக்கு தமிழ், ஆங்கிலம், கணக்கு, அறிவியல், வரலாறு என்று 5 பாடங்கள் இருந்தன. எதையுமே புத்தகத்தைப் பார்த்து நடத்த மாட்டார். அவர் பாடம் எடுக்கும் பொழுது 'சாக் பீஸ்' மட்டும் தான் இருக்கும். கணிதக் கேள்விகள் கூட அவருக்கு மனப்பாடம். அந்த அளவிற்கு சரக்கு.

சமீபத்தில் ஒரு மாணவருடன் பேசிக்கொண்டிருந்தேன். பச்சையப்பனில் BCom இரண்டாமாண்டு படிக்கிறார். அவரும் சம்பத் சாரின் மாணவர் என்று தெரிய வந்தது.

அவன் சொல்லியவை கீழே....

அண்ணா, பத்தாவது படிக்கும் பொழுது Mathsல மட்டும் போயிடும்னு பயந்துட்டே இருந்தேன். சம்பத் சார் தான் எப்படி படிக்கணும்னு சொல்லிக் கொடுத்தாரு. பத்தாவதுல மட்டும் தவறி இருந்தேன்னா வாழ்க்கை எப்படியோ போயிருக்கும். அவரோட உதவி இல்லன்னா இங்க வரைக்கும் வந்திருக்க முடியாதுண்ணா. என்ன மாதிரி நிறைய பேருக்கு அவருதாண்ணா கடவுள் மாதிரி.

எனக்கு மட்டுமல்ல கிருஷ்ணாஜி, நிறைய பேருக்கு அவர் ஆதர்ஷம்.

நன்றாக படிக்கும் மாணவனுக்கு சொல்லிக் கொடுத்து அவனை மாநில அளவில் முதலிடத்தைப் பிடிக்க வைப்பதில் ஒன்றுமே இல்லை. சராசரி மாணவனை தேர்ச்சி பெற வைப்பதுதான் சவாலான பணி. அங்குதான் ஆசிரியரின் ஆளுமையே அடங்கி இருக்கிறது. சம்பத் சார் போன்றவர்கள் தான் ஏணியுடன் ஒப்பிடத் தகுந்தவர்கள். மற்றவர்கள் எல்லாம் உளுத்துப் போன கட்டைகள். அவரைப் பற்றி தனியாக ஒரு பதிவே எழுதலாம். அவ்வளவு இருக்கிறது.

கிருஷ்ண மூர்த்தி S said...

இன்னும் கொஞ்சம் கூர்ந்து கவனியுங்கள் கிருஷ்ணா!

பாடத்தின் மீது இருக்கும் பயமல்ல உண்மையான விஷயம்! உன்னால் முடியும் என்று தன்னம்பிக்கையை விதைத்தது தான் உண்மையான விஷயம்!

அதைப் பள்ளி ஆசிரியர்கள் தான் என்றில்லை, நீங்கள் வாழ்க்கையில் சந்தித்த பல மனிதர்களிடத்தில் இருந்தும் பெற்றிருக்கலாம்! அவர்களும் ஆசிரியர்களே!

Unknown said...

நிச்சயமாக கிருஷ்ணாஜி,

நான் நிறைய தன்னம்பிக்கையை பள்ளிச் சுவர்களுக்கு வெளியில் நிறைய பேரிடம் பெற்றிருக்கிறேன். குழந்தைகளிடமிருந்து கூட பெற்றிருக்கிறேன். பெற்ற குழந்தையிடம் கையைக் கொடுத்தால் இறுக்கமாகப் பிடிக்கும். அந்த பிடி கூட வாழ்க்கையின் பிடிப்பை எனக்குக் கற்றுத் தந்திருக்கிறது.

புரட்சித்தலைவன் said...

gud post and you change the suitable template (back ground with books) for your blog.
congrats... keep it up.

Balakumar Vijayaraman said...

எளிமையான, அழகான இடுகை. வாழ்த்துகள் கிருஷ்ணா.

பிரபாகரன் said...

superb post krishna...

rajasundararajan said...

இந்தக் கரடுமுரட்டுப் பாதையில் இசைக் கல்விக்கு வாய்ப்புக் கிட்டியதென்பது திட்டங்களுக்கு அப்பற்பட்ட ஒன்று. அதை நீங்கள் விட்டிருக்கக் கூடாது. இசைமென்மையின் அணுகலை உணர்ந்து கைக்கொள்ளும் நுண்ணுணர்வை அதே கரடுமுரட்டுப் பாதை அடித்துவிட்டது, இல்லையா?

Unknown said...

முற்றிலும் உண்மை ராஜு அண்ணே...