Thursday, October 7, 2010

உப பாண்டவம் - எஸ்ரா

புத்தகம் : உப பாண்டவம்
ஆசிரியர் : எஸ்.ராமகிருஷ்ணன்
வெளியீடு : விஜயா பதிப்பகம்
விலை : 150 ரூ

இதிகாசங்கள் அனைத்தும் புனைவிற்கும் அ-புனைவிற்கும் இடையில் திரிசங்குபோல தொங்கிக் கொண்டிருக்கின்றன. அவற்றில் மகாபாரதம் முக்கியமான ஒன்று. அதிலுள்ள கிளைக் கதைகளின் மீதான மீள் புனைவுதான் எஸ்ரா-வின் உப பாண்டவம்.

நான்கு வருடங்களுக்கு முன்பு இந்தப் புத்தகத்தைத் தேடி அலையாத இடமில்லை. துணையெழுத்தின் வசீகரம் அவருடைய இதர புத்தகங்களின் மீதான வேட்கையை அதிகப்படுத்தியபடியே இருந்த அற்புதமான நாட்கள் அவை. இலக்கிய நண்பர்களின் பரிட்சயமும் இல்லை. ஒரு புத்தகத்தின் உள் அட்டையில் அவருடைய முகவரியும், தொலைபேசி இலக்கங்களும் இருந்தன. கொடுத்திருந்த எங்களில் தொடர்பு கொண்டேன். அவருடைய மனைவிதான் எதிர் முனையில் பேசினார்கள். எஸ் ராவைப் பற்றி விசாரித்தேன். 'அவர் வீட்டில் இல்லை' என்று கூறினார். உபபாண்டவம் எங்கு கிடைக்கும்? என்று விசாரித்தேன். 'திநகர் நியூ புக் லேண்ட்ஸ்' -ல் விசாரித்துப் பார்க்கச் சொன்னார். அங்கும் கிடைக்காமல் வேறெங்கோதான் வாங்கினேன். பல வருடம் கழித்து மீண்டும் உப பாண்டவத்தை படித்த பொழுது, புதுப்புது காட்சிகளை முன்வைத்த படியே பாரதக் கதை என்னை உள்ளிழுத்துக் கொண்டது.

அதோ பாஞ்சஜன்யத்தின் ஒலி என் காதில் துல்லியமாகக் கேட்கிறது.
கௌரவ பாண்டவர்களின் அக்ரோணிப் படைகள் எதிரெதிரே அணிவகுத்து நிற்கின்றன. படைகளின் சிறு அசைவு கூட புழுதியை எழுப்பி மணல் புயலாக காட்சியளிக்கிறது. எதுவுமே தெளிவாகத் தெரியவில்லை. சங்கொலி மட்டுமே நடக்கவிருக்கும் அபாயத்தை உணர்த்திக் கொண்டிருந்தது. அங்கிருந்து அஸ்தினாபுரத்தை நோக்கிப் புறப்பட்டேன். மெதுவாக திருதுராஷ்டனின் சயன அறைக்குச் சென்றேன். அரசனின் கண்களிலிருந்து இருள் இருளாக துக்கம் வழிந்துகொண்டிருந்தது. அவன் முன்னே சஞ்சயன் யோக நிலையில் இருந்தான். சஞ்சயனின் நிழல் என்மீது பட்டு குளிர்ச்சி தருவதாக இருந்தது. மௌனியாக நானும் அமர்ந்துகொண்டேன். நடப்பவை யாவற்றையும் சஞ்சயன் சொல்லிக் கொண்டிருந்தான். திருதுராஷ்டன் அகக் கண்களால் பார்த்துக் கொண்டிருந்தான். நான் ஓசை எழுப்பாமல் கேட்டுக் கொண்டிருந்தேன்.

'சண்டையிடமாட்டேன் என்று அர்ஜுனன் தளர்ந்துவிட்டான். சண்டையிட்டே ஆக வேண்டிய சூழ்நிலையை கிருஷ்ணன் எடுத்துச் சொல்லி அர்ஜுனனை தேற்றிக் கொண்டிருக்கிறான். எடு காண்டிபத்தை என்கிறான்.' என்ற சஞ்சயனின் விவரிப்பைக் கேட்ட அரசன் "அவன் தானே, அந்த சூழ்ச்சிக்காரன் தானே இந்த அழிவுக்குக் காரணம். அவனுடைய குலமே நாசமாகட்டும்..." என்று கிருஷ்ணனை சபிக்கிறான்.

நடக்கவிருக்கும் விபரீதத்தை தெரிந்து கொள்ளும் ஆவலுடன் மௌனத்தில் இருந்தேன்.

"கரண்ட் கட்"... தொலைகாட்சி தனது உயிர்த் துடிப்பை இழந்திருந்தது... திரும்பிப் பார்த்தேன் "யுதிஷ்டிரன் தானே எல்லாத்துக்கும் காரணம்!" என்று என்னுடைய அப்பாவின் உதடுகள் முணு முணுத்துக் கொண்டிருந்தன.

எனக்கும் என் தந்தைக்கும் ஏழாம் பொருத்தம். அவர் யோசிப்பதற்கு நேரெதிராகவே யோசித்துப் பழக்கப்பட்டவன். எனவே "எப்படி?" - என்று அவரிடம் கேட்டேன்.

"பரமபதம் (சூது) விளையாடக் கூப்பிட்ட பொழுது யுதிஷ்டிரன் நெனச்சிக்கினானாம்... கிருஷ்ணன் வரக்கூடாதுன்னு. அவன் வந்தால் விளையாட வேண்டாம் என்று தடுத்து விடுவான். திருதுராஷ்டன் கூப்பிட்டு எப்படி மறுப்பது என்று யோசிச்சானாம். ஒவ்வொரு முறை பகடையை உருட்டும் பொழுதும் கிருஷ்ணன் வரக்கூடாதுன்னு நெனச்சிக்கினானாம். அப்புறம் போனது பாஞ்சாலியோட மானம் தானே. அவ தானே சண்டையை இவ்வளோ தொலைவு எடுத்துட்டு வந்தா. எங்க இருந்தோ துணியக் கொடுத்தவன், பக்கத்துல இருந்திருந்தா சகுநியையே ஏமாத்தி இருப்பான் இல்ல... எல்லாத்துக்கும் காரணம் முட்டாள்பய தர்மன் தான்" என்று சொன்னார். இதுவரை கேட்டிராத விஷயத்தை என்னுடைய அப்பா சாதரணமாக சொல்லிக் கொண்டிருந்தார்.

தற்போதைய நிலையில் பாரதக் கதையின் ஒரே சாட்சி 'அஸ்வத்தாமன்'. எங்கெங்கோ தேடி சாவற்ற அவனுடைய கைகளை காற்றின் துணையுடன் பற்றினேன். அவனுடைய நெற்றி புரையோடிக் கிடந்தது. காயத்தின் காரணம் கூட அவனுக்குத் தெரியவில்லை. எதையோ தேடிக் கொண்டிருந்தான்.மனோ வேகத்தில் அஸ்தினாபுரம் நோக்கிப் புறப்பட்டோம். வாழ்ந்த சுவடின் ஞாபகங்களே அவனிடம் இல்லை. இரவு குருதியின் கரைகளைத் தொலைத்திருந்தது. காலம் அதன் சாட்சியாக மௌனித்திருந்தது. என்னெதிரே அஸ்வத்தாமனை அமரச் செய்தேன். சிரம் தாழ்ந்து அமரும் பொழுது அவனுடைய ஒரு துளி இரத்தம் பூமியில் விழுந்தது. சொந்த மக்களின் ரத்தத்தை ருசி பார்க்க அஸ்தினாபுரத்தின் நாக்கு தனது சுவை மொட்டுக்களை தயாராகவே வைத்திருக்கின்றன. இந்த ஒரு துளி அதன் பழைய ஞாபகங்களை மீட்டிருக்கும். யாரின் இரத்தம் சுவையானதென அதன் ஞாபகம் பீரிட்டிருக்கும். அஸ்வத்தாமனின் கண்கள் சோர்வினை வெளிப்படுத்தியது. அது திருதுராஷ்டனின் இருள் கவிழ்ந்த கண்களை ஒத்திருந்தது. அவனுக்கு எதிரில் என்னை அமர்த்திக் கொண்டேன். சஞ்சயனின் நிழல் என்மேல் படருவதை நான் உணர்ந்தேன். என் கைகள் உப பாண்டவத்தின் பக்கங்களைப் புரட்டுகிறது. உதடுகள் தன்னிச்சையாக அசைகிறது.

"அஸ்வத்தாமா!, நட்சத்திரங்கள் பாண்டவ கௌரவர்களின் ஒற்றர்களைப் போல நம்மைக் கண்டு கொண்டிருக்கின்றன. உன் தேடுதல் நிரந்தரமானது. நீ சபிக்கப்பட்டவன். உன்னுடைய நிரந்த ஓய்வை நீயே கொடுத்துக் கொண்டாய். அதற்குக் காரணம் நீ வதம் செய்த பாரதப் புதல்வர்கள்... உப பாண்டவர்கள்..." என்று சொல்லிவிட்டு பாரதக் கதையின் முன்னுரையிலிருந்து ஆரம்பித்தேன். வால் நட்சத்திரம் எரிந்து விழுவது தூரத்தில் தெரிந்தது. அஸ்வத்தாமனிடம் காட்டினேன். தான் வாழ்ந்த சரித்தரத்தை நிராகரித்தவனாக நட்சத்திரத்தின் மரணத்தை நோக்கி அவன் சென்று கொண்டிருந்தான். இல்லாமல் போவதன் வசீகரம் அவனைச் சுண்டி இழுக்கிறதோ என்னவோ? ஒவ்வொரு மரணத்தையும் அவன் ஏக்கத்துடன் பார்க்கிறானோ என்னவோ? அவனுடைய மரணத்தினை சுவைத்திட அஸ்தினாபுரமும் குருக்ஷேத்ரமும் அவனை பின்தொடர்கிறதோ என்னவோ?. நான் செயலற்று நின்று கொண்டிருந்தேன். என்னுடைய மனம் அஸ்வத்தாமனுக்கு சொல்ல நினைத்த பாரதக் கதையை அசைபோட்ட படியே இருக்கிறது...

பின்னட்டை வாசகம்:

**************************************************************
இந்திய மனதின் தொன்மையான நினைவுகள் மகாபாரதத்தின் வழியே கதைகளாக பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. அந்த நினைவுகளின் ஊடாக மனிதர்களின் தீராத போராட்டமும் ஏக்கங்களும் பீறிடுகின்றன. காலத்தின் உதடுகள் என்றும் முணுமுணுத்துக் கொண்டிருக்கும் அந்த மகாகாவியத்தின் இடைவெளிகளை தனது கதை சொல்லலின் வழியே புத்துருவாக்கம் செய்திருக்கிறார் எஸ் ராமகிருஷ்ணன்.

மகாபாரதத்தின் உப கதாப்பாத்திரங்களின் வழியே அறியாத கதையும் வெளிப்படுத்தப்படாத துக்கமும் புனைவுருவாக்கம் கொண்டிருக்கின்றன. அவ்வகையில் இது நவீன தமிழ் இலக்கியத்திற்கு பெருமை சேர்க்கும் தனித்துவமான நாவலாகும். வங்காளம், மலையாளம், ஆங்கிலம் உள்ளிட்ட மொழிகளில் தற்போது மொழிபெயர்க்கப்பட்டு வருகிறது.

வாசகர்களின் பெரும் கவனத்திற்கு தீவிர வாசிப்பிற்கும் உரியதாக இருந்த உப பாண்டவம் இப்போது மூன்றாம் பதிப்பாக வெளிவருகிறது.

**************************************************************

நாவன்மையினால் பாரதக்கதை நாளுக்கு நாள் விசாலமாகிக் கொண்டே இருக்கிறது. காலம் கூட அதன் ஒப்பனையை மாற்றிக் கொண்டே இருக்கிறது. அதன் நளினம் கூடுவது இதுபோன்ற விசாலத்திலும், ஒப்பனையிலும் தான் இருக்கிறது. தெரிந்த இடத்தின் அறியாத பாதைகளை கிளைவிரித்துச் செல்லும் எஸ்ராவின் இந்தப் புனைவும் அதுபோன்ற முயற்சிதான்.

தம்பி சேரலின் வலைப்பூவில் இந்தப் புத்தகத்தைப்பற்றிய சுவாரஸ்யமான இடுகை: http://puththakam.blogspot.com/2009/01/30.html

2 comments:

Harish Ragunathan said...

I have been wanting to read this book for a long time..couldn't get it. Thanks for the review.

Unknown said...

Its available in the market. contact uyirmai pathippagam or vijayaa pathippagam or else you can buy it in New Book House at Tnagar.